அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திருக்குறள்

இது ஒரு பெருமை வாய்ந்த மாநாடு. இலக்கிய வளர்ச்சி மாநாட்டில் மறுமலர்ச்சியின் ஒரு சிறந்த அறிகுறி; சிறந்த கட்டம்; தமிழிற் பேரறிவு படைத்தவர்களும், பிறரும் நம்மை இலக்கியத்தைப் பழிப்போம்-கலையைப் பழிப்போம் என்று கூறும் குறையைப் போக்கும்படி அமைந்த ஒரு சிறந்த மாநாடு. எல்லாவற்றிற்கும் சிறந்த வழிகாட்டுவதாயிற்று குறள். இராமாயணம், பாரதம், கீதை முதலியவற்றைக் குறை கூறும் சுயமரியாதைக்காரர் குறளை ஆதரிக்கின்றனரென்றால் அதற்குக் காரணம் யாது?

குறள் ஒன்றுதான் மக்கள் நலனை நிலைநாட்ட ஒழுங்காக வகுக்கப்பட்ட நேர்மையான நூல்; அதனாலே தான் பாராட்டுகிறோம். ஆனால் இந்த மாநாடு விருதுநகரில் கூடுவது சிறப்பு என்கின்றேன். இந்நகரில் அறிஞர் வே.வ.இராமசாமி அவர்கள் தமிழுலக வானத்தில் அழகிய தென்றலை வீசுகிறார்கள். தோழர் காமராசர் அரசியற் புயலை வீசுகிறார்கள்-புயலின் வெம“மையை கடுமையைத் தணிக்கத் தென்றல் வீசுகின்ற இந்நகரில் குறல் மாநாடு கூடுவது மிகவும் சிறப்புடையது. தென்றலை நடத்தும் தலைவரும் அரசியல் புயலை வீசும் தலைவரும் ஒருங்கே வீற்றிருந்து நடத்த வேண்டிய மாநாடு. அத்தகைய நாளை திருக்குறள் கூட்டிவைக்கும் ஒரே கொட்டகையிற் கூடும்படியான வாய்ப்பும் ஏற்படும். இந்த நாட்டுக்கு உடையவனும், ஆக்கிப் படைப்போனும் பிற நாட்டான் என்கின்ற இழிதகைமை போய் உரிமை கிடைத்திருக்கும் இந்த காலத்தில் நீதி எது? வாழ்க்கை நூல் எது? என்று ஆராயும் பொறுப்பான கட்டம் இது. வழிகாட்டியான நூல் தேவை; வாய்ப்புத்தேவை; திருக்குறள் வாய்ப்பான நூலாகக் கிடைத்தது. அதனைப் போற்றி ஒழுகும் வாய்ப்புங் கிடைத்தது. குறளைப் பற்றிப் பேச திட்டம் வகுக்க இம்மாநாடு அமைக்கப்பட்டது.

எனக்குத் தெரிந்த அளவிலே ஏன் இவ்வளவு அருமையான திருக்குறள் கையிலே இருந்தும் அது தமிழகத்து மக்களுக்கு இதுநாள் வரை பயன்படவில்லை. இதற்கொரு உதாரணம் என்னால் காட்டக் கூடுமானால் சொல்வேன். நான் காட்டுகிற உதாரணம் முற்றிலும் பொருத்தமானதென்று அர்த்தமுமல்ல. நான் சொல்வதுதான் முழு உண்மை என்றும் அர்த்தமல்ல; என்னுடைய அறிவுக்குப் பட்டதிலே திருக்குறளைப் போற்றுகின்ற நாம், அந்தக்குறள் நெறியின்படி நடக்க வேண்டுமென்று விரும்புகின்ற நாம், குறள் நெறியின்படி நடப்பதற்கு முடியாத அளவிலே நம்மைத் தடுத்து நிறுத்துகின்ற வேறு பல சூழ்நிலைகளை, வேறு பல சிற்றறிவுகளை, வேறு பல சூழ்ச்சி நிலைகளைத் தகர்த்தெறியாத காரணத்தினாலே தான் திருக்குறள் கையிலேயிருந்தும், உண்மையிலே நம்மாலே நல்ல நிலையிலே வாழ முடியாமல் போய் விட்டது. உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். கையிலே கத்தி வைத்துக்கொண்டால், வருகிற எதிரியை வெட்டி வீழ்த்தலாம் என்பது; என்னைப் போன்ற ஒரு பலவீனன் கையிலே கத்தியைக் கொடுத்தால், நான் அவனைக் கத்தியால் குத்திக் கொல்ல இயலாது என்பது மட்டுமல்லாமல், என்னுடைய கரத்திலேயுள்ள வாளை அவனே பறித்துக்கொண்டு வாளில்லாதிருந்தால் கையாலாவது தாக்கியிருப்பான்; என்னுடைய கரத்திலேயிருக்கிற வாளை அவனே பறித்துக்கொண்டு என்னையே திருப்பித் தாக்கியிருக்கக்கூடும். ஆகையினாலே வாளை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பதால் பயனில்லை; உள்ளத்திலே வலிவு இருக்க வேண்டும். நல்ல உறுதியிருக்க வேண்டும். அதைப் பயன்படுத்துகிற தன்மையும் தெரியவேண்டும் என்பதற்கேற்ப நான் சொல்லுகிற எந்தக் கருத்துக்கும், நிகழ்கால அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லையென்று மாற்றார்களுக்கும், உற்றார்களுக்கும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திருக்குறள் வாழ்வியல் தத்துவம்:
வாள் ஒன்று மட்டுமல்ல வலிவுக்கு காரணம் உள்ளத் திண்மையும் மிகமிகத் தேவை என்பது போல வள்ளுவருடைய குறள் ஒன்று மட்டும் போதாது, வள்ளுவருடைய குறளை எந்தவிதத்தில் பயன்படுத்த வேண்டுமோ, வள்ளுவர் எந்த இன்பக் கனவுகளைக் கண்டாரோ, எத்தகைய வாழ்க்கை நெறி தேவையென விரும்பினாரோ, அவைகளை நாம் பெற வேண்டுமென்ற ஆர்வமிருக்க வேண்டும். வள்ளுவரின் குறளை வைத்துக்கொண்டு அதனால் பெறப்படும் பயனைப் பெறுவதற்கு முன்னாலே தடுக்கின்ற சூழ்நிலைகளை தகர்த்தெறிவதற்கு நம்முடைய உள்ளத்திலே திண்மையிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்பதைப்போல், தேவாரம் உண்டு, திருவாசகம் உண்டு, திருப்புகழ் உண்டு, காவடிச்சிந்து உண்டு, நாலடியார் உண்டு மற்றும் பல உண்டு அதைப்போல திருவள்ளுவரின் திருக்குறளும் உண்டு என்று சொன்னால், இப்படித்தான் ஆண்டுக்கொரு முறை நாம் கூட வேண்டும், அழகான தமிழிலே அருமையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கேட்போர்கள் வாய்பிளக்கக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு திருக்குறளும் நல்ல நூல்தானாம் என்று சொல்ல வேண்டும், மறுநாள் அவர்கள் கேட்கின்ற திருவாசகம், பிறகு நான்கு நாட்களில் கேட்கின்ற தேவாரம் இவைகளோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பார்த்த அவர் சொன்னதும் நன்றாகத்தான் இருந்தது. இவர் சொன்னதும் அருமையாகத்தான் இருக்கிறது. எல்லார் சொல்வதும் நன்றாகத்தானிருக்கிறது. ஏதும் அறியாமலிருப்பது மிக நன்றாகத்தானிருக்கிறது என்று மக்கள் அமைதியடைந்து விடுகிறார்கள்.

திருக்குறளை சுயமரியாதைக்காரன் பரப்புவது ஏன்?

திருக்குறளைப்பரப்பும் பணியில் நாம் பங்கெடுப்பதில் லாபம் ஒன்றும் உண்டு. நட்டம் ஒன்றும் உண்டு. திருக்குறளை புராணமாக்க நினைத்தது நட்டம், நமக்கு ஒரு நூல் கிடைத்தது லாபம்; நம் நாட்டில் அரிய உண்மைகள் இல்லையா? அரிய பெரியார்கள் தோன்ற வில்லையா? இவற்றிற்கெல்லாம் விடையளிப்பது திருக்குறள். வள்ளுவர் அத்தகைய நூலை நமக்கு அருளியிருக்கிறார். அறிவுக்குப் புறம்பான நூல்களை எதிர்கக் அஞ்சாத சுயமரியாதைக்காரர் குறளை எடுத்து பாராட்டுகின்றனர். நெஞ்சார வாழ்த்தி விளங்குகின்றனர்; பிறரும் குறளைப் போற்றத்தான் செய்கின்றனவ்; மடாதிபதிகள் மற்றும் பிறர் குறளை வெளியிடுகின்றனர். ஏன்-அவர்களும் குறளைப் போற்றுவோம் என்பர்; அவர்களைப் பற்றி என்ன சொல்வது? குறளை அவர்கள் படித்தால் அதன்படி நடந்தால்-நாட்டுக்கு மடாதிபதிகள் தேவையில்லையே; சிலப்பதிகாரத்தைத் தருவதற்கு துறவு பூண்டார் ஒருவர். அவரைப் பாராட்டுகின்றோம்; திருக்குறளைப் போன்ற நூல் தரத் துறவு பூண்டாரெனின் ஒப்புக்கொள்கிறோம். மடாதிபதிகளுக்கு பாதக குறடுகள் ஏன்? இவர்கள் குறளின்படி ஒழுவார்களா? புறக்கோலம் எதற்கு? மடாதிபதிகளே! காலம் மாறிவிட்டது. சமரசம் உண்டாக்குங்கள். மக்கள் மனத்தில் சாந்தம், ஒழுக்கம் நிலைபெற நன்னெறி காட்டுங்கள். வள்ளுவன் புகழைப் பரப்புங்கள். இராமாயணம், பாரதம், பாதவதம், கீதை இவற்றை வெறுத்தவன் திருக்குறளைப் பாராட்டுகிறான்; நீங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பாராட்டுவது பொருளற்ற செயல். மற்ற நூல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியல்ல. ஒன்றிலொன்று பார்த்தால் பயனில்லை; இரயில்வே கைடில் பார்க்க வேண்டுவனவற்றைப் பஞ்சாங்கத்தில் காண முடியாது. அட்லாசில் பார்க்க வேண்டியவற்றிற் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது பொருந்துமா? மற்ற நூல்களில் சிலருக்கு ரசிகத் தன்மை இருக்கலாம்; ஆனால் அவை வாழ்க்கைக்கு பயன்தராது; மடமையை நீக்காது; வாழ்க்கைக்கு அவை உதவா; மறு உலகத்தைப் பற்றிக் கேட்கலாம்; இங்கே உழைப்பு வாழ்வு. அங்கே தேவர் வாழ“வு. உழைப்புக்கும் ஓய்வுக்கும் வேற்றுமை தெரியாத அவ்வுலகப் புரளியால் யாது பயன்? அங்கே நாட்டியம் ஊடல் நாரதர் தூது-கோபம்-பதவியிழப்பு இவை நடைபெறுமாம். அவற்றால் யாருக்கு பயன்? இவற்றைச் சுயமரியாதை உள்ளவன் கண்டிக்கிறான். என்ன காரணம்?

புராணக் கதைகளில் நீதி உண்டா?

பக்தி மறுமையுலகம்-இவை நேர்மை என்று காட்ட முடியுமா? எந்த மதவாதியும் சொல்ல முடியுமா? புராணக் கதை, நீதி போதிக்க எனின் ஒன்றோடொன்று முரணுகிறதே! பக்தியை ஒப்பி ஆத்திகன் எந்தக் கதையை எப்படி நம்புவது? ஒரு ஊருக்கு நாலு பாதையா? வியாசன்-சுக்கிரன்-இரமண முனிவர்-பட்டினத்தார். ஒவ்வொருவர் கூறுவதும் ஒவ்வொரு வழி-ஒன்றுக்கொன்று முரண். இப்படியாக்கினால் என்ன செய்வது? இந்த வழியில் ஆத்திகனும் போக முடியாது; நாக்கிகனும் போக முடியாது, புலிக்குப் பயந்து மரத்திலேறித் தூங்காமல் இலை கிள்ளிப் போட்டவனுக்கு அம்மை சிவகாமியின் கட்டளையால் அப்பன் சிவபிரான் திருவாய் மலர்ந்தருளி வீடு வேறு கொடுத்தானாம். கால் தேய, உடல் தேயப்பின்பு தலை கீழாகவும் நடந்தலைந்த பின் காரைக்காலம்மையாருக்கு என் அப்பன் சிவகாமிநாதன் அருள் செய்தானாம். எதைப் பின்பற்றி எந்த நெறியிற் செல்வீர்கள். பாண்டவர்கள் வரலாற்றை நோக்குங்கள். துரோணர் மற்றவன் கற்றதற்குக் கட்டை விரலைக் கேட்டுத் துண்டிக்கச் செய்தார். குருபத்தினியைக் கற்பழித்த சந்திரன் கதையையறிவீர்கள். இவற்றைப் படித்து மக்கள் வாழ முடியுமா? இராமாயணத்தில் நீதியுண்டென்கிறார்களே! வாலியைக் கொல்ல இராமன் கையாண்ட முறையால் நாம் அறியும் நீதி என்ன? இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் நாம் என்ன கருத முடியும்? திருக்குறளைத் தவிர நமக்கு வேறு வழியில்லை; நம் தலைவர் நாவலர் பாரதியாரவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன்-திருக்குறளைப் பண்படுத்தித் தரவேண்டுமென்று. நீங்கள் பண்படுத்தி நல்லுரை வகுத்து நல்ல வித்தாகக் கடைந்தெடுத்துக் கொடுங்கள். நாங்கள் எல்லா மக்களின் உள்ளத்திலும் விதைத்து விடுவோம்; இன்னும் பத்தாண்டுகளுக்குள் எல்லோர் மனதிலும் எல்லோர் வீட்டிலும் திருக்குறள் நிலைபெற்று இருக்கக் காணலாம். இதனை நான் வேண்டிக் கொள்கிறேன்.

திருக்குறள் மாநாடு
விருதுநகர்