அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தோழர் அண்ணாதுரை
தலைவர் அவர்களே, தாய்மார்களே தோழர்களே
பல தமிழ்ப் பேரறிஞர்கள், பெரும் தலைவர்கள், கலைஞர்கள் கவிவாணர்கள் – தாய்மார்கள் – மாணவர்கள் – மாணவிகள் உள்பட நாம் பல ஆயிரக்கண்கில் இன்று இங்கு கூடியுள்ளோம். இந்த இடத்தில் கட்டாய இந்தி நுழைவைக் கண்டிப்பதாக ஒரு தீர்மானம் இயற்றி விட்டுச் சென்று விடுவதாலோ அல்லது தமிழின் தொன்மை குறித்தோ – அதன் இனிமை குறித்தோ பேசிவிட்டுப் போய் விடுவதாலோ யாதொரு நன்மையும் ஏற்பட்டு விடாது.

அரசுக்குத் தாலிகள் தந்த மனைவியர்
சற்றேறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே சூழ்நிலைதான் இன்றும் நம் கண்முன் காணப்படுகிறது. அக்காலத்தில் நாம் தமிழின் இனிமை குறித்தும், தொன்மை குறித்தும் பலவாறு பேசியும் எழுதியும் இருக்கிறோம். அவை இன்று தமிழ்நாடு எங்கணும் கிராமந்தோறும் கூடப் பரவி நிற்கிறது. ஆகவே, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இனி இல்லை. தமிழ் மணம் எங்கணும் கமழ்கின்றது. தமிழ் மக்கள் யாவரும் ஆர்வத்தோடு திகழ்கிறார்கள். அவர்கள் வேண்டி நிற்பது புதியதோர் புரட்சிதான். சென்ற இந்தி எதிர்ப்பில் ஆண்களும், பெண்களும் ஆடும் குழந்தைகளோடும். அடைகாக்கப்படும் மனைவியாரும், நடராஜனின் மனைவியாரும், தமது தாலிகளையே அரசாங்கத்தினருக்கு அறுத்துக் கொடுத்திருக்கின்றனர். ஆகவே, அரசாங்கத்தினருக்கு இந்திக்கு இந்நாட்டிலுள்ள எதிர்ப்பு தெரிந்தே இருக்கிறது. தமிழின் தனிச்சிறப்பும், இந்தியின் தனி இழுக்கும் கூட ஆட்சி புரியும் அவினாசியாருக்குத் தெரிந்துதான் இருக்கும். இதுவரை அவர் தெரிந்து கொள்ளவில்லையானால் இனிமட்டும் எப்படி தெரிந்து கொள்ளப் போகிறார். ஆகவே, இவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் இம்மாநாடு ஒரு பயனற்ற மாநாடகவே முடிந்து போகும்.

வந்த சண்டையை விட மாட்டோம்

தமிழர்கள் வம்புச் சண்டையில் ஈடுபடுவர்கள் அல்லர். ஆனால், வந்த சண்டையை விடாதவர்கள். ஆட்சியாளரின் ஆணவத்திற்கு அடி பணிவதும். அருமைத் தமிழினத்தவரின் பண்பல்ல. எனவே, அறப்போர் தொடுக்கத் தீர்மானிப்போம். அப்போரில் வெற்றி காண இங்குக் கூடியயுள்ள நமது பெரும் பெரும் தலைவரக்ளின் ஆசியை முதலில் பெறுவோம்.

ஆட்சியாளர்கள் தமிழின் இனிமையைக் குறைப்பதற்காகவோ, அல்லது அதன் தொன்மையை மறைப்பதற்காகவோ, அல்லது அதைப் பழிப்பதற்காகவோ இன்று இந்தியை இந்நாட்டில் நுழைக்கவில்லை. அப்படி இருந்தால், இனிமைத் தமிழ் நிறைந்த கம்பராமாயணத்தையே, தொன்மை மிகுந்த தொல்காப்பியம் – போன்ற நூல்களையே அழிக்கத் துணிந்திருப்பார்கள்.

தமிழனுடைய பண்பை அழிக்க, அவனது கலாச்சாரத்தை அழிக்க, தமிழ் மக்களிடத்து இன்று ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியை ஒழிக்க, இவற்றிற்காகத்தான் இந்தியை நுழைக்கிறார்கள். எனவேதான் ஆட்சியாளரின் குறி ‘இராவண காவியத்தின் மீது சென்றிருக்கிறது. ஆகவே, நமது காலச்சாரத்தி்ல் கைவைக்கத் துணிந்த இந்த அரசாங்கத்தினரின் போக்கை எதிர்த்து அறப்போர் தொடுப்பதுதான் முறை.

தமிழ் காக்கும் பணி

கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் பல முறை சட்டம் மீறிய சிவஞான கிராமணியாரும் பக்கத்தில் இருக்கிறார். நமக்குத் தைரியம் கூற. ஒரே அரசியல் கருத்துக் கொண்ட இரு தலைவர்களை இங்கே காண முடியாது என்றாலும், தமிழ் காக்கும் பணியில் எல்லாரும் ஒரே கருத்துடன்தான் இன்று கூடியுள்ளார்கள். இப்படி நேரிடுவது தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் ஒரு புதுமைதான். அவசியம் ஏற்பட்ட போது திருமயிலையும் திருவல்லிக்கேணியும் ஒன்று கூடிக்கொள்வது ரொம்ப சகஜம். ஆரியத்திற்கு ஆபத்தென்றால் ஆச்சாரியரும், சத்தியமூர்த்தியும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள், அரசாங்க எதிரிகளான அவர்களோடு – அரசாங்கத்தின் கையாட்களான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், சர்.பி. ராமசாமி ஐயரும் கூட ஒன்று கூடிக் கொள்வார்கள். ஆனால், என்னதான் அவசியம் ஏற்பட்ட போதிலும் இரு கட்சிகளில் உள்ள தமிழர்கள் ஒரு பொதுக் காரியத்தில் மனமொப்பிக் கூடி வேலை செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட பரிதாபத்துக்குரிய நிலை, இந்நாட்டில் பார்ப்பனீயம் தங்குதடையின்றி வளர்ந்தோங்க மூலக் காரணமாயிருந்த நிலை, இன்றோடு மாய்த்து போனது. இனி மயிலையும் திருவல்லிக்கேணியும் கூடக் கலகலக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள். இனி இவர்களை ஒடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வார்கள் ஒற்றுமையைக் குலைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அது இனிப் பலிக்காது. இனி அவர்களால் தமிழ் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்க முடியாது.

தமிழர் பேடிகளல்லர்
தமிழ்நாடு பாலைவன நாடல்ல. பிறரை எதிர்பார்த்து வாழ, தமிழர்களும் பேடிகளல்லர், பிறர்க்குப் புறமுதுகு காட்டி ஓட.

தமிழர்கள் மாவீரர்கள் – முடியுடை மூவேந்தரின் சந்ததியார்கள். கடல் கடந்து சென்று பர்மா தேசத்தைக் கைப்பற்றி – ஆண்டவர்கள். பலதூர அயல் நாடுகளோடும் சிறப்பாக வாணிபம் நடத்தியவர்கள். இவையெல்லாம் திருவிளை யாடற்புராணக் கூற்றுகள் இல்லை. சரித்திர உண்மைகள். எங்கள் இருதய கீதமாக இன்றுவரை இருந்து வருபவைகள் இவைகள். எனவே, எங்களை அழிக்க எக்காலும் ஆரியத்தால் முடியாது. எனவே, அதைரியம் வேண்டாம். அறப்போர் தொடுக்க ஆசி கூறுங்கள் தமிழ் காக்கப் போர்தொடுங்கள் என்று தலைவர்களே கட்டளை இடுங்கள். தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்று அன்று கூறியதற்காக, வெலிங்டன் துரையவர்களால் தயாரிக்கப்பட்ட கிருமினல் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் அன்று சிறைபட்டோம். 1000-க்கு மேற்பட்டவரக்ள் சிறை புகுந்தோம். பெல்லாரி சிறையில் உடலுக்கு பெல்லாரி உஷ்ணம் தான் ஏற்றது என்றும், நடராஜன் பிணமானான் என்றும் ஆச்சாரியாரால் கூறப்பட்ட கடுமொழிகள் கேட்டுச் சகித்திருந்தோம்.

இனிப் போர் போர் போர்

எனவே, சகித்திருந்தது போதும், போர், போர், போர். போர் தொடுப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைய அரசாங்கத்திற்குப் போர் தவிர வேறு எதுவும் புத்தி கற்பிக்காது. அராசங்கத்தினர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமக்கிருந்த பலத்தைக் காட்டிலும் இப்போது அதிகப் பலம் பெற்றிருப்பதாக நினைத்திருக்கிறார்கள். உண்மைதான், இன்று அரசாங்கத்தினருக்கு கிடைத்திருக்கும் பலம் முன்னைவிட அதிகமே தான், ஆனால், இந்த 10 ஆண்டில் நமது நிலையும் எவ்வளவு வளர்ந்துவிட்டது. எவ்வளவு அதிகப் பலம் பெற்றுவிட்டது என்று அவர்கள் அறிந்தார்களில்லை. இவர்கள் எதைத்தான் உள்ளபடி அறிந்தார்கள்?

அவினாசியார் நமக்கு எம்மாத்திரம்?

சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நம்மிடையே நண்பர் சிவஞானம் இருந்தாரா? இல்லையே. இல்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வாரே? தோழர் நாரண துரைக்கண்ணன் நம்மிடையே அன்ற இருந்தாரா? இல்லை, அது சமயம் ‘தமிழர் யார்? என்று புத்தகம் அவர் வெளியிட்டுள்ளார். அதைப் படித்துப் பாருங்கள். அவர் அன்று நம் இந்தி எதிர்ப்பு இயக்கத்தையும் – தோழர் பன்னீர் செல்வத்தையும் எவ்வளவு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு இது ஒன்றே போதும். இந்த 10 ஆண்டுகளில் நமது இயக்கம் பல நூறு மடங்காக வளர்ந்துவிட்டது. எனவே, போராட்டத்தில் வெற்றி நமக்குத்தான் கிடைக்கும். அன்றிருந்த ஆச்சாரியாராலேயே நம்மை அழிக்க முடியாமற் போய்விட்டதென்றால், நமது எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமற் போய் விட்டதென்றால், இந்த அவினாசியார் நமக்கு முன்போ, அல்லது பாடசாலைகளின் முன்போ, மந்தியாரின் வீட்டின் முன்பு மறியல் செய்வது முடியாத காரியம், ஏனெனில், அவர்கள் தற்போது மக்கள் நடமாடும் இடத்தில் குடியிருக்கவில்லை. அடையாறில் குடியிருப்பு அதுவும் ஆற்றோரத்தில், ஒரு பக்கம் பணத்திமிர் பிடித்த அண்ணாமலைச் செட்டியார் அரண்மனை, மறுபக்கம் அதை எதிர்பார்த்து நிற்கும் சுடுகாடு. நல்ல பொருத்தமான இடத்தில்தான் குடியிருக்கிறார்கள்.

பிரெஞ்சுப்புரட்சி – நினைவிருக்கட்டும்

எனவே, பழையபடி பள்ளி முன்புதான் மறியல் செய்ய வேண்டும். பெரியார் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இம்முறை புதிய புதிய அடக்கு முறைகள் – மிருகத்தனமான அடக்குமுறைகள் கையாளப்படு மென்று, நாமும் புதுப்புது அனுபவம் பெறத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே, நாம் பஞ்சைகள் – அதோடு பஞ்சம் வேறு நம்மை வாட்டி வருகிறது. எனவே, நம்மிடத்தில் நமது எலும்புக் கூடுதான் மிச்சம் இருக்கிறது அதை சர்க்கார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். சர்க்கார் நினைக்கலாம், வெறும் எலும்புக் கூடுகள் தசையிலுள்ள ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி உறிஞ்சி உரம் ஏற்றிக் கொண்ட எலும்புக் கூடுகள், அதுவும் அற்ப எலும்புத் துண்டுக்காக கானவான்களின் நாய்களோடு போராடிய எலும்புக் கூடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் புரட்சி செய்து பிரான்சு தேசத்தில் முடியாட்சியை அழித்துக் குடியாட்சியை ஏற்படுத்தியது என்பதை ஆட்சியாளர்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வந்து பார்க்கட்டும்.

மொழிப்போர் அல்ல – கலாச்சாரப் போர்

அன்று ஒரு சொக்கலிங்கம் எழுதினார். இந்த நகரத்தில் போலீசும் செத்து விட்டதோ, இன்று அதே சொக்கலிஙக்ம் எழுதத் துணிவார அப்படி? அது திராவிட நாடு என்ற நினைப்பே இல்லாத காலம். நம்மை விட்டு மிட்டா மிராசுகள் ஓடாத காலம். இன்று நாம் நமது லட்சியத்தை ஒரு அளவுக்ககேனும் அடைந்திருக்கிறோம். நம்நாடு எது வென்றாவது சொல்லத் தெரிந்து கொண்டுள்ளோம். நமது மக்களிடையே அளவிடற்கரிய மறு உணர்ச்சியையும். காணப் பெறுகிறோம். இப்படிப்பட்ட காலத்திலோ நாம் விட்டுக் கொடுப்போம்? இல்லவே இல்லை.

இது மொழிப் போராட்டமல்ல. கலாச்சாரப் போர். எனவே, அறவே விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றுவதாயிருந்தால் ஒன்று படையெடுப்பின் மூலமோ அல்லது வியாபாரத்தின் மூலமோ, அல்லது கலாச்சாரத்தின் மூலமோ – ஆகிய இம்மூன்று முறைகளின் மூலம் தான் கைப்பற்ற வேண்டும். இவற்றுள் வடநாட்டின் மூன்றாவது முறையாகிய. அதாவது கலாச்சாரத்தின் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றும் முறையை இத் திராவிட நாட்டில் கையாளத் துவங்கியுள்ளார்கள்.

கலாச்சாரப் படையெடுப்பு

இந்தி நுழைப்பு கலாச்சாரப்படையெடுப்புதான். எனவே, இந்த நிலையில் திருக்குறளைப் பாராட்டிப் பேசுவதாலோ, அல்லது இந்தியையும், தமிழையும் ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாலோ பயனில்லை. பொன்னையும் பித்தளையையும் எவனாலும் ஒப்பிட்டுப் பார்ப்பானா? இப்படித் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், எனவே, நமது உயிரைப் பறிக்க வரும் இந்தியைத் தடுக்க முன்வருவதால், இந்தியில் நீதி நூல் இல்லை, கலை இல்லை என்று கூறுவதெல்லாம் சந்தர்ப்பத்திற்கு அவசியமற்றவை. இவை எல்லாம் அவினாசியாரே அடிபணிந்துதான் அதை இந்நாட்டில் புகுத்தியுள்ளார். மந்திரியாக இருக்க விரும்புகிறார்.

எனவே, வடநாட்டுக்கு. மண்டியிட்டுக் கிடக்கிறார். மந்திரியாயிருப்பதை விட மானமுள்ள மனிதனாக, உண்மைத் தமிழனாக இருப்பது அவசியம் என்பதை மறந்தார். எனவே இந்தியைப் புகுத்துகிறார். மானத்தை இழந்த மந்திரியார் பதவியை மட்டுமா இழக்காமல் இருப்பார். அவரிடம் நியாயம் எடுத்துக்கூற, எனவே, திடமாக அறப்போர் தொடுக்க வேண்டியதுதான். அதில் நாம் எல்லாரும் ஈடுபட வேண்டியதுதான்.

போர்க் குரலே இறுதிச் சட்டம்

இந்தி நுழைவால் தமிழ் கெடுமா, கெடாதா என்பதற்குப் பதில், நாம் யாரைக் கேட்போம். மறைமலையடிகளையும், திரு.வி.க.வையும் கேட்பதோ அல்லது கனம் கோபால் ரெட்டியாரையும். காளா. வெங்கட்ராமையும் கேட்பதா? மறைமலையடிகளாரும், திரு.வி.க. அவர்களும் இந்தி நுழைவர்ல் தமிழ் கெடும் – தமிழர் கலாச்சாரம் கெடும் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்ட பிறகு, அவர்கள் சாட்சி நமக்குக் கிடைத்துவிட்ட பிறகு, போர் முழக்கம் செய்வது தவிர நமக்க வேறென்ன வேலையிருக்கிறது? தமிழ் நாட்டு மூவேந்தர் போற்றி வளர்த்துக் காப்பாற்றி வந்த தமிழ்ப்பண்மை, தமிழக கலாச்சாரக் கொலைஞர்களைச் சும்மா விட்டு வைத்திருக்க முடியாது. தமிழனுக்கிருப்பது உயிர் தனிச் தோள்கள். அவை தமிழ் காக்க, வாள் ஏந்தத்தான் இருக்கின்றன. வாள் ஏந்திப் போர் தொடுக்கா விட்டாலும் மன உறுதியெனும் வாளேந்தியேனும் அறப்போர் தொடுப்போம். அதுதான் அவினாசியாருக்கும் புரியும். மற்ற நியாய வாதங்கள் எல்லாம் அவருடைய மூளையில் குழப்பத்தைத்தான் உண்டாக்கும். ஏற்கனவே குழம்பியிருக்கும் மூளை மேலும் ஆற்றுவாரோ, தேற்றுவாரோ கூட அருகில், கிடையாது. ஏனெனில் அவருக்கு மனைவி மக்கள் இல்லை. அவர் ஓர் பிரம்மச்சாரி. அதிலும் மூல வியாதிக்காரர். அப்படிப் பட்டவரிடம் போய்த் தமிழின் இனிமை குறித்து எடுத்துச் சொன்னால், அவருக்குக் கோபம் வராமல் வேறென்ன வரும்?

தமிழர் வரலாற்றில் முத்திரை

இதுவரை ஒன்றுபடாத தமிழர்கள் இன்று இம் மாநாட்டில் ஒன்று கூடியிருப்பதால் இம்மாநாடு தமிழர் சரித்திரத்தில் முத்திரை பொதிந்தது போன்றது. பெரியார் அவர்கள், மறைமலையடிகளார், நாரணதுரைக்கண்ணன், சிவஞான கிராமணியார், திரு.வி.க. அவர்கள் ஆகியவர்கள் முத்திரை மோதிரத்தின் சின்னங்கள், இலக்கினை இட வேண்டியவர்கள். எனவே, இம்முத்திரை பொதித்தப் போர் நகலை இன்றே அனுப்பட்டும். அது அவசியம் அவினாசியார் புரிந்து கொள்ளும் தமிழிலேயே இருக்கட்டும்.

இந்தி நுழைவதால் தமிழர் பண்பு கெட்டுப்போகும் தமிழர் கலாச்சாரம் கெட்டுப்போகும். ஆகையால் அமைச்சர் அவினாசியாரே, அமைச்சர் குழுத் தலைவர் ரெட்டியார் அவர்களே, இவர்களை ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்திய படேல் துரை அவர்களே, ஜவஹர்லால் நேரு அவர்களே, தமிழர்களாகிய நாங்கள் கட்டாய இந்தி நுழைவை எதிர்த்து, அறப்போர் தொடுத்து விட்டோம், தொடுத்து விட்டோம். தொடுத்துவிட்டோம்.
சிறை போலீஸ் தயாரகட்டும்

என்ன மாதிரியில் ஓலை எழுதப்படட்டும் அவினாசியாரும் உடனடியாக ஜெயில்களையும் காலி செய்து வைத்துக் கொள்ளட்டும் போதுமான போலீஸ் படையையும் தயாரித்து வைத்துக் கொள்ளட்டும். பெரியார் அவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள். அடக்குமுறை அப்படி இருக்கும் என்று தடியாலும் அடிப்பார்கள். துப்பாக்கியாலும் சுடுவார்கள். பக்கிங்காம் மில் தொழிலார்கள் மீது அடக்குமுறைப் பாணத்தை வீசியவர்கள்தானே இவர்கள். அந்தத் தொழிலாளர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தானே நாமும்.

அடிக்கட்டும், அஞ்சோம், சுடட்டும் அதற்கும் அஞ்சோம். இவற்றால் ஏற்படும் தழும்புகள் திராவிடத்தின் அரசுக்கு முத்திரையாக அமையும் தலைவருக்கு நமது அஞ்சாமை பற்றிச் சந்தேகமில்லை.

நமது பொறுமையைக் குறித்துத்தான் சந்தேகம். எனவேதான் அவரிடம் கொஞ்சம் தயக்கம் காணப்படுகிறது. தயக்கம் வேண்டாம்.

பொறுமை மிக்க தமிழர்

தமிழர்கள் எந்த அளவுக்கு உரம் படைத்தவர்களோ அந்த அளவுக்கு பொறுமையும் படைத்தவர்கள்தான். சென்ற இந்தி எதிர்ப்பின்போது தாளமுத்துவின் பிணம் ஆஸ்பத்தியிலிருந்து சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது கணக்கில்லாத மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். என்ன நேருமோ என்ற பார்ப்பனக் குடும்பங்கள் அத்தனையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தன. ஆனால் என்ன நேர்ந்தது?

தமிழர்கள் தாளமுத்துவின் பிணம் சாம்பலாகச் சாம்பலாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டனர்! ஒன்றிரண்டு கண்ணீர்த்துளி விட்டனர். அவ்வளவு மனோ உறுதியும் பொறுமையும் படைத்தவர்கள்தான் தமிழர்கள். எனவே, அதிலும் தலைவர்க்குச் சிறு துளியும் சந்தேகம் வேண்டாம். இந்தப் பஞ்ச காலத்தில் அவர்களும் இரண்டு அடிதான் அடிப்பார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கும் வலுவுண்டு. நாமும் அந்த இரண்டு அடிகளிலேயே கீழே விழுந்து விடுவோம். அவ்வளவுதான் நமக்கும் தாங்கச் சக்தியுண்டு. நம்மிடம் ஆயுதத் தளவாடங்கள் இல்லை. அவர்களை எதிர்ப்பதற்கு.

லட்சியம் பெரிது, வெற்றியல்ல!

எனவே, நமது போர் அறப்போர்தான். அதை அமைச்சர் விரும்பினால் ரத்தப் போராக்கலாம். ஆக்கமாட்டார் என்று நினைக்க ஆதாரமொன்றுமில்லை நம்மிடம், அமைச்சர் ரத்தத்தை விரும்பினால் அதற்கும் நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.

இந்தப்போரில் வெற்றி கிடைக்குமா, தோல்வி கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டியது அவசியமில்லை. நமது லட்சியத்தை இருதயத்தில் தீர்மானமாகக் கொண்ட பிறகு, நமது கொள்கை நியாயத்தை அடிப்படையாகக் கொண்டது தான் என்ற நிச்சயம், நமக்கு ஏற்பட்டுவிட்ட பிறகு, வெற்றி கிடைப்பது பற்றியோ, தோல்வி நேர்வது பற்றியோ நமக்குக் கவலையேன்? நியாயத்தின் அடிப்படையாக நிச்சயம் வெற்றியே கிடைக்கும். எனவே மாஜி, தளகர்த்தன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். அறப்போர் விரைவி்ல் தொடங்கட்டும். பெரியார் விருப்பப்பட்டால் என்னுடைய பெயரை முதல் வரிசையிலேயே சேர்த்துக் கொள்ளட்டும்.

எல்லோரும் வாருங்கள் சிறைச்சாலைக்கு!

சென்ற 10 ஆண்டுகளாக நாங்கள் அடிவயிறு வலிக்கப் பேசி வந்தது உண்மையானால், அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி உண்மையானால், தமிழனுக்குத் தன்மானமிருப்பது உண்மையானால், தமிழ் மகனுக்குத் தன்மானம் காத்துக் கொள்ளும் வீரம் இருப்பது உண்மையானால், சென்ற போரின்போது தாளமுத்துவும், நடராஜனும் உயிர்த்தியாகம் செய்தது உண்மையானால், அச்சமயத்தில் ஆண்களும் பெண்களுமாக ஆயிரத்திற்கு மேற்பட்டுச் சிறைக்கு சென்றது உண்மையானால், இத்தனை உண்மையும் பயனளிக்க வேண்டுமானால், வாருங்கள் எல்லோரும் சிறைச்சாலைக்கு! அதை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைக்கிவிடுவோம்! மயிலினங்காள் வாருங்கள்! குயிலினங்கள் வாருங்கள்! தமிழ்க் காளைகாள் வாருங்கள்! மூவேந்தர் வழிவந்த செம்மல்களே வாருங்கள்! வாருங்கள் யாவரும் சிறைச்சாலை நோக்கி!

இந்தி ஒழிந்துபோம்!

சிறு மதியாளர்கட்கு நன்மதி போதித்திடுவோம். சர்க்கார் அடக்குமுறைக்குச் சரியான புத்தி கற்பித்திடுவோம். கடந்த போராட்டத்திற்கு 10 வருடத்திற்குப் பிறகு இப்போதேனும் முற்றுப்புள்ளி வைத்திடுவோம். தாய்மார்களே பெரியார் உங்களை அழைக்கிறார். சென்ற எதிர்ப்பின்போது அவரை எதிர்ப்பில் மாட்டிவிட்டது தாய்மார்கள்தான். எனவே, தாய்மார்களையே அவர் விரும்பி அழைக்கிறார். எனவே வாருங்கள் விரைந்தோடி! உங்கள் எதிர்ப்பால் சர்க்காரே அழிந்துபோம்! இந்தியும் ஒழிந்துபோம்!

17.7.1948 – சென்னையில் நடைபெற்ற மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் திரட்டு ‘போர்முரசு‘ வி.ஏ. வெளியீடு, சென்னை.