அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வசதிகள் அதிகரிக்க விஞ்ஞானத்தினை நாடுக!

சென்னை 99 வது வட்டம் கோட்டூரில் நடைபெற்ற கலைமன்ற ஆண்டு விழாவில் அண்ணா அவர்கள் உரையின் சுருக்கம் வருமாறு:

கோட்டூர் என்ற இந்த இடம் சென்னை நகரத்தில் ஒரு பகுதியாகவும் தோற்றத்தில் ஒரு கிராமமாகவும் காணப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் நம்முடைய நண்பர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக்களை நல்ல முறையில் பரப்பிக்கொண்டு வருவதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் எடுத்துக் கொள்கிற நல்ல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பொது மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆறுமாதம் தவணை கொடுங்கள்!
இந்த வட்டாரத்திலுள்ள மக்களுடைய பிரதிநிதியாக மாநகராட்சி மன்றத்திற்கு என்னுடைய நண்பர் கோபால் அவர்கள் அனுப்பி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நல்லதொரு பெருமையையும் தருகின்ற காரியமாகும். பல ஆண்டுகளாக அவர் சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்ட நாள் முதற்கொண்டு குறிப்பாக ஏழை மக்களிடத்தில் தொடர்பு கொண்டு வருகின்றவர் ஆவார். அப்படிப்பட்ட உண்மை ஊழியர் ஏழை எளியவர்களின் குறைகளை அறிந்த ஒருவர் உங்களுக்குக் கிடைத்ததால்தான், இந்த மன்றத்தின் சார்பில் நம்முடைய நண்பர்கள் 13 ஆண்டுகளாக இந்த வட்டாரத்தில் இருக்கின்ற குறைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்று கோபால் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டதோடு பல தீர்மானங்களையும் படித்துக் காட்டினார்கள். அவரும் இதுவரையில் செய்திருப்பதைச் சொல்லி இனிச் செய்யவேண்டியவைகளைப் பற்றித் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு ஆறு மாதம் தவணை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நீங்கள் இந்த வட்டாரத்தில் வேறு ஒரு சீமானை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்களிடத்தில் இப்படிக் குறைகளைப் படித்துக் காட்டவும் முடியாது. அவரும் அவைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கமாட்டார்.

ஆனால், இன்றைய தினம் உழைப்பாளிகள் மத்தியில் இருக்கக் கூடியவரான கோபால் அவர்கள், இவ்வட்ட உறுப்பினராக இருக்கின்ற காரணத்தால் இப்பொழுது நீங்கள் உரிமையோடு கோரிக்கைகளை எழுப்பினீர்கள். அவரும் உள்ளன்போடு என்னால் முடிந்த வரையில் செய்கிறேன் என்று சொன்னார்.

கையைத் தட்டிக் காரியத்தைச் சாதிக்கலாம்!
ஏழை எளியவர்களான தி.மு.கழக மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் உங்களுடைய கோரிக்கைகளைக் கேட்கலாம் அவர்களும் தாராளமாகப் பதில் சொல்லுவார்கள். ஆனால் மாளிகையில் வசிக்கும் ஒரு பெரிய சீமானை வட்டிக் கணக்கையும் இம்மாத இலாபம் என்ன? என்பதையும் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் இவ்வளவு சுலபமான வாய்ப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்க முடியாது. அவரை நீங்கள் காண வேண்டுமானால் வாயிற்படியிலுள்ள கூர்காவையும் வேகமாகப் பாய்ந்து வரும் அல்சேஷன் நாயையும் தாண்டிச் செல்ல வேண்டிவரும். இத்தனையும் தாண்டிப் போவதற்குள் அந்தச் சீமான் அந்த மாளிகையில் இருக்கும் வேறுவழியாக அவருடைய வேலையைக் கவனிக்க வெளியே போய்விடுவார். நம்முடைய நண்பர் கோபால் அப்படிப்பட்டவரல்ல. தெருக்கோடியில் வருகிறார் என்றால் நீங்கள் கையைத் தட்டி ஐயா இப்படி வாருங்கள் என்று கூப்பிடலாம். விஷயங்களைச் சொல்லலாம், முடிந்தால் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட வகையில் ஏழை எளியவர்களின் நண்பர்கள் அவர்கள், உள்ளத்தையும், குறைகளையும் அறிந்தவர்களாக 45 தோழர்கள் மாநகராட்சி மன்றத்திலே திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களாக இருந்து நல்ல பல பணிகளைச் செயலாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் செய்கின்ற காரியங்களையெல்லாம் ஒரு கூட்டத்தில் ஒரு மணி நேரத்தில் எடுத்து விளக்கக்கூடியன அல்ல, இருந்தாலும் ஓரிரண்டையாவது நான் சொல்லுவேன்.

குடி நீர்த்திட்டம் தந்தார்கள்!
இந்த மாநிலச் சர்க்கார் நினைத்துப் பார்க்காத ஒரு திட்டத்தை நமது தோழர்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். சென்னை நகரத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுவருகிறது. ஆண்டுதோறும் மூன்று இலட்சம், ஐந்து இலட்சம் அதிகமாக வளரும் என்று கணக்கு போட்டார்கள். ஆனால், கணக்காளர்களின் வேகத்தைத் தாண்டி மக்கள் தொகை அதிக வேகமாக வளர்ந்துவிட்டது. அவர்களின் குடிநீர் வசதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இந்த மாநிலச் சர்க்கார் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்ற மாநிலச் சர்க்கார் திண்டாடியது. அவர்கள் இதுவரையில் சொல்லிக்கொண்டு வந்ததெல்லாம் ஆந்திர நாட்டில் ஓடுகிற கோதாவரி தண்ணீரைச் சென்னை நகருக்குக் கொண்டு வந்தால் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்பது. இதனை அவர்கள் ஏட்டிலே எழுதி நாட்டு மக்களுக்குப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பின் அது சுலபத்தில் ஆகாது என்று கண்டுணர்ந்த நம்முடைய ஆட்சியாளர்களிடம் இப்பொழுது நமது கழக மாநகராட்சி உறுப்பினர்கள் ஆராய்ந்து சிந்தித்துத் திட்டத்தை தந்திருக்கிறார்கள். அந்தத் திட்டம் என்னவென்றால் சென்னை நகரத்திலிருந்து 126 மைல் தொலைவிலுள்ள “சேத்தியா தோப்பு” என்ற இடத்தில் நல்ல தண்ணீர் பெருகி ஓடக்கூடிய வாய்க்கால் ஒன்று இருக்கிறது. மழைக்காலத்தில் அதில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அந்தத் தண்ணீரை வாய்க்காலிலிருந்து திருப்பிச் சென்னை நகரத்திற்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை நண்பர் வி.முனுசாமி அவர்களும், மேயரும் உறுப்பினர்களும் அதிகாரிகளோடு கலந்து பேசித் தயாரித்தார்கள். மாநகராட்சி மன்றக் கூட்டத்திலும் சொன்னார்கள். இதற்கு முன்னால் இதைப்போன்ற திட்டங்களைச் சொன்னபோது கேலி செய்தார்கள். இது என்ன பகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததைப் போல என்றார்கள். ஆனால், இப்பொழுது அப்படி அலட்சியப்படுத்த முடியாமல் மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி அந்தத் திட்டத்தை மாநிலச் சர்க்காரே எடுத்துக் கொண்டு அதுபற்றி ஆராய்ந்து இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள்ளாக நிறைவேற்ற முடியுமென்று சொல்லுகிறார்கள்.

ஆகவே, நம்முடைய கழகத் தோழர்கள் மாநகராட்சியில் இடம் பெற்ற பிறகு சென்னை மாநகராட்சி பொலிவோடு நல்ல முறையில் இயங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்திலெல்லாம் நிச்சயமாக நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

கசாப்புக்கடை வைக்கச் சொன்னோம்!
நாம் சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட திட்டங்களைச் சொல்லுகின்ற நேரத்தில் அவர்கள் கேலி செய்தார்கள். அதற்குக் காரணம் நாங்கள் 15 பேர்களாக இருப்பதும், அவர்கள் 150 பேர்களாக இருப்பதுதான்.

உலகத்தில் பல நாடுகளில் தொழில்களைச் சர்க்காரே நடத்திட அதனால் நல்ல இலாபம் பெற்று வாழ்கின்றனவே. ஏன் நீங்களும் அதைப்போலத் தொழில் நடத்தக்கூடாது? என்று நான் கேட்ட நேரத்தில் நீங்கள்தான் ஒரு தொழிலைச் சொல்லுங்களேன் என்று நிதியமைச்சர் என்னைக் கேட்டார். ஆட்டு மந்தைகளை வளர்த்து அவைகளின் இறைச்சியைப் பக்குவப்படுத்தி உலக நாடுகளுக்கு அனுப்பி அதனால் நல்ல இலாபம் அடைந்து வாழ்கிறதே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், நீங்கள் அப்படிச் செய்தால் என்ன என்று நான் சொன்னேன். இதைக்கேட்ட நிதிமந்திரிக்குக் கோபம் வந்து ஊர் ஊராகப் போய், “பார், பார் இந்த அண்ணாதுரை கசாப்பு கடை வைக்கச் சொல்லுகிறார்” என்று கேலிப் பேசினார்.

துரைத்தனத்திற்கு அழகல்ல!
ஆனால், மாநகராட்சியில் நண்பர் வி.முனுசாமி அவர்கள் கொடுத்த திட்டங்களைக் கேலி பேசி அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் அந்த இடத்தில் நம்முடைய தோழர்கள் 45 பேர், காங்கிரசுக்காரர்கள் அதைவிடக் குறைவாக இருப்பதுதான். அதனால்தான் நம்முடைய தோழர்கள் சொல்லுகிற திட்டங்கள் நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டு வருகிறார்கள்.

பல நாடுகளில் இயற்கை வசதிகள் கிடைக்காவிட்டால் மக்கள் இயற்கையை மீறிப் பல வசதிகளைச் செய்து கொள்ள விஞ்ஞான முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒரு நாட்டில் நிலவும் சில வசதிக் குறைவுகளை நீக்குவதற்கு விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி வசதி செய்யும் துரைத்தனம்தான் மக்களுக்கான துரைத்தனமாகவும் இருக்கும். அப்படிச் செய்யாமல் இருப்பது துரைத்தனத்திற்கு அழகல்ல.

பைத்தியக்காரத் திட்டம் என்ற கேலியா?
மாம்பழம் மரத்தில் இருக்கிறது என்றால் அதைப் பார்க்கும் சிறுவனுக்கு அதைப் பறித்துத் தின்ன வேண்டும் என்ற ஆசைவரும். அது அவன் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது. அந்தச் சிறுவன் உடனே இன்னொருவனைக் குனியச் செய்து அவன் முதுகின் மேலேறி மாம்பழத்தைப் பறிக்க முயற்சிப்பான். யாரும் உடன் இல்லையென்றால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு கல்லை எடுத்து அதன்மீது எறிவான். மாம்பழம் எட்டாத உயரத்தில் இருந்தாலும் அது அவனுக்குத் தேவையென்றால் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டே தீருவேன்.

அப்படிப்பட்ட முயற்சிகளையெல்லாம் வாழ்க்கை வசதிகளுக்காகச் சர்க்கார் மேற்கொள்ள முன்வர வேண்டும். நான் சட்ட மன்றத்திலும் வெளியிலும் சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கடல் நீரை விஞ்ஞான இயந்திரத்திநால் சுத்தப்படுத்திப் பயன்படுத்தலாம் என்றேன். அப்பொழுது அவர்கள் கேலி மொழியில் “கடல்நீரை குடிக்கச் சொல்லுகிறார் இந்த அண்ணாதுரை” என்று சொல்லிவிட்டுப் போனார்கள். கடல்நீர் உப்புகரிக்கும் அது அனைவருக்கும் தெரியும். இதற்குப் பல்கலைக் கழகத்தில் போய்ப் படிக்க வேண்டியதில்லை. உப்பு கரிக்கிற தன்மையை விஞ்ஞான முறைப்படி நீக்கிவிட்டுக் குடிநீராகப் பயன்படுத்த விஞ்ஞானத்தில் வழியிருக்கிறது. அதை ஏன் செய்யக்கூடாது? என்று கேட்டால் அதற்கு அவர்கள் “இப்படி ஒரு பைத்தியக்காரத் திட்டமா” என்று கேலி செய்தார்கள்.

கடல் நீரைக்குடி நீராக்குக!
ஆனால், நான்கு நாள்களுக்கு முன்னால் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சென்னைத் துறைமுகத்தில் கடல்நீரின் உப்புச் சக்தியை நீக்கிவிட்டுக் குடிநீராக அதனை மாற்றுவதற்கான இயந்திரங்களை அமைப்பது குறித்துத் துறைமுக நிறுவன அதிகாரிகள் யோசித்து வருவதாகத் தெரிய வருகிறது. துறைமுகத் தொழிலாளர்களுக்கு மட்டும் என்றால் திட்டம் சில இலட்சம் ரூபாயில் முடியும். சென்னை நகரத்திற்கே இப்படிப்பயன்படுத்த வேண்டுமென்றால் சில கோடி ரூபாய் செலவாகும். அந்த நீரின் சுழற்சியைக் கொண்டு கிடைக்கக் கூடிய மின்சாரமும் நகரத்திற்குப் பயன்படும் இத்தனைக்கும் விஞ்ஞானம் வழி செய்கிறது.

ஆனால், இவைகளை ஆராய்ந்து பார்த்து வழி செய்வதற்கான அதிகாரம் இம்மாநில அரசின் கையில் இல்லை. இதை நாம் சொன்னால் அவர்கட்கு அடக்க உணர்ச்சி இல்லாத காரணத்தால் “இவர்களுக்கு என்ன தெரியும்” என்று நம்மைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகக்கூடும்.

இந்த அமைச்சர்கள் ஒன்றும் அசகாய சூரர்களல்ல. இவர்களுக்கு என்ன தெரியும் என்பதை இரண்டு முழ நீளத்திற்கு எதிரில் இரண்டு ஆண்டுகளாக இவர்களை நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்.

மாநகராட்சி எதையாவது செய்ய வேண்டுமென்றால் எப்படி மாநில அரசைக் கேட்க வேண்டியிருக்கிறதோ, அதைப்போல மாநில அரசு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் டெல்லிக்கு அவர்கள் ஓட வேண்டியிருக்கிறது.

குடும்பக் காலட்சேபம் இப்படித்தான் நடக்கிறது
சாதாரணமாக வீட்டில் வயதான பெரியவர் ஒருவர் இருப்பார். அவருக்குப் பொடி தேவையாக இருக்கும். அவராலே எழுந்து நடக்கமுடியாது. கையில் காசும் இல்லை. உடனே அவர் பம்பரம் ஆடிக்கொண்டிருக்கும் தன்னுடைய பேரனை அழைத்து “கண்ணா, அப்பாவிடம் போய் ஒரு அரையணா காசு வாங்கி, பொடி வாங்கிக் கொண்டு வா” என்றார். பையனுக்கு நேரடியாக அப்பாவைக் கேட்பதற்குப் பயம். உடனே அவன் தன்னுடைய அம்மாவிடம் போய் “அம்மா தாத்தாவிற்குப் பொடி வேண்டுமாம். ஓர் அணா அப்பாவிடம் வாங்கிக்கொடு” என்பான். அவர்களும் கணவனிடம் கனிவாகப் பேசி, ஓரணா கேட்டால் அவர் அரையணா தருவார். அந்த வகையில்தான் அந்த அம்மா நிலையில்தான் காமராசர் இருக்கிறார். இவரிடம் ஏதாவது கேட்டால் அதுபற்றி அவர் சுப்பிரமணியத்திடம் சொல்ல, ஏனென்றால் அவருக்குத்தான் ஆங்கிலம் தெரியும். அவரும் டெல்லிக்குப் போய் முடிந்தால் நேருவைப் பார்த்து ஓராணா கேட்டால் அவர் அரையணா கொடுப்பார். அதை வாங்கிக் கொண்டுதான் அவர் இங்கே வருவார். இப்படித்தான் நம்முடைய குடும்பக் காலட்சேபம் நடக்கிறது.

இப்படிப்பட்ட குடும்பம் நல்லபடி இருக்காது என்கிற காரணத்தால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாட்டுப் பிரிவினையை வற்புறுத்தி வருகிறது. அதெல்லாம் இவர்கள் பேரில் எங்களுக்குக் கோபமும் இல்லை. அவர்கள் இருக்கின்ற இடத்தைப் பார்த்துப் பொறாமையும் இல்லை. அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இல்லை.

‘பத்ரகாளி’ - ‘பாரத மாதா’!
அந்த இடத்தை நான் பிடிக்க வேண்டுமென்றால் காமராசரைப் பார்த்து, “என்ன சௌக்கியமா” என்று இரண்டு முறை கேட்டுவிட்டு, ஒரு நாளைக்குத் திடீரென்று காமராசரிடம் போனால் “என்ன திடீரென்று வந்துவிட்டாய்” என்று கேட்பார். நானும் உடனே பாருங்கள் இன்று இரவு தூங்கிக்கொண்டிருக் கையில் பத்ரகாளி மாதிரி ஒரு உருவம் என்னெதிரில் வந்து நின்று என்னை எழுப்ப, நானும் எழுந்து ‘நீ யார்?’ என்று கேட்க, நான் தான“ பாரதமாதா. நீ இத்தனை நாளும் எனக்குத் துரோகியாக இருந்தாய்.

இப்பொழுதாவது நல்லவனாக இரு என்று சொல்ல, நானும் அதற்கு என்னவழி என்று கேட்க, “போ காமராசரிடம்” என்று பாரதமாதா சொல்லிற்று என்றெல்லாம் காமராசரிடம் சொன்னால், எனக்கு இந்த மந்திரிப் பதவி கிடைக்காதா? கக்கன் பார்க்கின்ற பைலை நான் பார்த்தால் புரியாதா? காமராசர் ஏற்றிருக்கும் இலாகா பொறுப்பை நான் ஏற்று நடத்தினால் நல்ல முறையில் நடக்காதா?

இந்த வேலைக்கு இப்படி மூலைக்கு மூலை விளக்கம் சொல்ல வேண்டுமென்கிற அவசியமில்லை.
காங்கிரசுக்காரர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி அண்ணாதுரை மந்திரி வேலைக்கு லாயக்குடையவனா என்று கேட்டால் இலாயக்குடையவன்தான்.

ஆனால், அவன் அங்கே அல்லவா இருக்கிறான்? என்று சொல்லுவார்களே தவிர மந்திரி வேலைக்கு இலாயக்கில்லை என்று சொல்லமாட்டார்கள்.

நம்முடைய பணி மக்கள் நன்மைக்காக!
நம்முடைய பணியின் நோக்கமெல்லாம் பட்டம் பதவி பெறுவதற்காக அல்ல. நம“முடைய நாட்டினுடைய தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காக, மாநகராட்சியில் கிடைத்த இடத்தை நம்முடைய தோழர்கள் தங்களுடைய நன்மைக்காக அல்ல, உங்களுடைய நன்மைக்குத்தான் பயன்படுத்துகிறார்கள்.

சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் வடநாட்டு ஏகாதிபத்தியம் செய்யும் கொடுமையை எடுத்துக்காட்டிப் பேசிக்கொண்டு வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மாநகராட்சியில் இடம் பிடித்திருக்கும் கழக உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரியபோது, அவைகளுக்குப் பணத்திற்கு வழி எங்கேயிருக்கிறது என்று அதிகாரிகள் கேட்டார்கள். நம்முடைய கழகத் தோழர்கள் மாடமாளிகைகளை, கூட கோபுரங்களைக் காட்டினார்கள். மாநகராட்சி மன்றத்தில் சீமான்கள், சீமான்களின் செல்லப்பிள்ளைகள் இடம் பெற்றிருந்தபோது தட்டிக் கேட்கப்படாது இருந்த இடங்கள்தான் அவை. நம்முடைய கழகத் தோழர்கள் இடம் பெற்றவுடன் பெரிய பெரிய மாடி வீடுகளைப் பார்த்து இதற்கு என்ன வரி? என்று ஒவ்வொன்றாகக் கேட்டார்கள். கேட்கமாட்டார்களா? இத்தனை வருடங்களாகப் பார்த்துப் பார்த்து இப்படிப்பட்ட பங்களாவில் அல்லவா வசிக்கிறான்? என்று எத்தனை தரம் பெருமூச்சு விட்டிருப்பார்கள். அதனால்தான் மாடி வீடுகள் தென்பட்டன. அவைகளுக்கெல்லாம் மிக்குறைவான வரி வசூலித்துக்கொண்டு இருந்தார்கள். வரியை உயர்த்த வேண்டியவர்களுக்கு உயர்த்தினார்கள். அதே நேரத்தில் 48 ஆயிரம் ஏழை வீடுகளுக்கு வரி குறைப்பு செய்திருக்கிறார்கள்.

அசைந்து கொடுக்காத காங்கிரசு ஆட்சி
இன்னும் சில திட்டங்கள் நமது தோழர்கள் தந்திருக்கிறார்கள். அதனைத் துரைத்தனத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை.

சென்னை நகரத்தில் பஸ்கள் அரசினர் நிர்வாகத்தில் ஓடுகின்றன. மற்றவர்களின் பஸ்களும் ஓடுகின்றன. அவைகளுக்குரிய வரி சென்னைச் சர்க்காருக்குப் போய்ச் சேருக்கிறது. ஆனால், ரோடுகளைச் சீர்படுத்துவது கார்ப்பரேஷன் இதற்காகச் சென்னை மாநிலத் துரைத்தனம் பிச்சைக் காசு என்று சொல்லத்தக்க அளவில் இரண்டு மூன்று இலட்ச ரூபாய்தான் கொடு“த்து வந்தது. நமது தோழர்கள் இந்த ஆண்டு இந்தக் குறைந்த தொகையில் ரோடுகளைச் சீர்படுத்த முடியாது எங்களுக்கு ரோடுகளைச் சீர்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். இல்லையேல் பஸ்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் நடத்திக் கொள்ளுகிறோம் என்றார்கள். உடனே துரைத்தனம் “என்னடா இவர்கள் பஸ்களையே கேட்கிறார்களே? என்று அஞ்சி, சரி ரோடுகளைச் சீர்படுத்த ரூ.10 இலட்சம் கொடுக்கிறோம் என்று ஒப்புக் கொண்டது. முன்னால் இருந்தவர்கள் இப்படிச் செய்ய முடியாமல் தீர்மானம் போட்டு அனுப்பினார்கள், ஆனால், காங்கிரசு ஆட்சி அசைந்து கொடுக்கவில்லை.

இவைகளையெல்லாம் இப்படிப்பட்ட சமீபக் காலத்தில் பல காரியங்களையெல்லாம் நம்முடைய கழகத் தோழர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

கூவத்தைத் திருத்தவும் அதிகாரம் இல்லை!
எல்லாம் இருக்கிறதே ஆனால் ஊரெல்லாம் நாறுகிறதே என்று அமைச்சர் சுப்பிரமணியம் சொன்னார். காரணம் கூவம் நதி, இந்த கூவம் நதியின் நிர்வாகம் சென்னை மாநிலச் சர்க்காரிடம் இருக்கிறது. மாநகராட்சியில் இல்லை. இப்பொழுது இந்தக்கூவம் நதியை நல்ல படகுகள் செல்லும் அளவுக்கு ஆழப்படுத்தி நீரோட்டம் அதிகமாக ஏற்படுத்து வதற்கான திட்டம் மாநகராட்சியில் தீட்டப்பட்டு, மாநில அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இலண்டன் மாநகரத்து மத்தியில் தேம்ஸ் நதி ஓடுகிறது. அதன் அழகைப் பார்க்க உலகத்தின் பல நாட்டினரும் அங்குப் போகிறார்கள். ஆனால், சென்னையில் நான்கு நாட்கள் தங்கலாம் என்று ஒருவர் வந்தால் இரண்டு நாட்களில் போய்விடுகிறார். இருக்க முடியவில்லை. காரணம் கூவம் நதியின் நாற்றம். இந்த நாற்றத்தைப் போக்க இவர்கள் இத்தனை ஆண்டுகளாக ஏன் முயற்சிகள் எடுத்துக்கொள்ளவில்லை?

இந்தக் கூவம் நதியைத் தேம்ஸ் நதியைப்போல் அழகு படுத்தலாம். இரு கரைகளிலும் நாம் அமர்ந்து, பொழுதினை இனிமையாகக் கழிக்கத்தக்க வகையில் பாதைகள் அமைத்துக் கடைகள் வைத்துச் சிறுவர்கள் விளையாட பல பூங்காக்கள் அமைப்பதற்கு வழிகள் இருக்கின்றன. இதனை நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இதைச் செய்வதற்கான அதிகாரம் பொருளாதார வசதி மாநிலச் சர்காரிடத்தில் இல்லை. எனவே ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.

இவர்களால் முடியுமா என்கிறார்கள்!

இதைக் கருதித்தான் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். டெல்லியின் பிடியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்கிற திட்டத்தை நாங்கள் நாட்டிலே பரப்பிக் கொண்டு வருகிறோம்.
இப்படிச் சொல்லும் நம்மைப் பார்த்து, அமைச்சர்கள், அவர்கள் அழகாகப் பேசுவார்கள். அடுக்கு மொழியில் பேசுவார்கள். ஆனால், மருத்துவமனை கட்ட வேண்டுமானால் நாங்கள்தான் கட்டவேண்டும்.

பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமானால் பாலங்கள் கட்ட வேண்டுமானால் நாங்கள்தான் கட்டவேண்டும். அண்ணாதுரையால் இதெல்லாம் முடியுமா? தி.மு.கழகத்தால் முடியுமா? என்கிறார்கள்.

இதை ஒப்புக்கொள்வதில் நான் வெட்கப்படவில்லை. பணம் காங்கிரஸ் ஆட்சிக்குப் போகிறது.
நாம் ரோடு போடுவதென்றால் முடியுமா? இது என்ன மந்திரத்தால் ஆவதா? இந்த ரோடுகளை எல்லாம் பார்த்து இந்த ரோடுகளெல்லாம் சிமெண்டு ரோடுகளாகப் போகக்கடவது என்று சொல்ல நான் என்ன மந்திரவாதியா? அல்லது இது என்ன நந்தனார் காலமா?

இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கிறது!
பணம் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள்தான் அதனைச் செய்யவேண்டும் காரியமற்ற வேண்டியவர்கள். நாங்கள் அதைக் கணக்குப் பார்த்து சரியா, தப்பா? என்று உங்களிடத்தில் வந்து சொல்ல வேண்டியவர்கள். அதுதான் எதிர்க்கட்சியின் வேலை என்று சொல்லவில்லை.
சட்டமன்றத்தில் சனநாயகத்திற்குட்பட்டுத்தான் கணக்கைக் கேட்கிறோம். அதை மக்களிடம் சொல்லுகிறோம்.

நம்முடைய மாநகராட்சி மன்ற நண்பர்கள் இன்னின்ன காரியங்களைச் செய்திருக்கிறோம், என்று எடுத்துச் சொன்னார்கள். காரணம் அவர்கள் ஆளுங்கட்சியினர், அவர்கள் சொல்லுவதை மிக அடக்கத்தோடு அரசாங்கம் கேட்கிறது. இதைப்போல ஒரு வாய்ப்பு எந்தக் கட்சிக்கும் சுலபத்தில் கிடைக்காது. ஒரே நேரத்தில் மாநகராட்சி மன்றத்தில் ஆளும் கட்சியாகவும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது அரிது.

எதற்காகக் கிராமத்துக்குப் போகிறார்கள்?
நாம் ஆளும் கட்சியாக இருக்கின்ற இடத்தில் அதன் முறைப்படியும், எதிர்க்கட்சியாக இருக்கும் இடத்தில் கடமையை அறிந்தும் பணியாற்றுகிறோம். இந்தச் சாதாரண உண்மையைக்கூட உணராத அமைச்சர்கள் ஊர் ஊராகச் சென்று இந்த அண்ணாதுரையை நம்பாதீர்கள்-அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. என்கிறார்கள் அவர்கள் எதற்காக கிராமத்திற்குப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா? ஊருக்கத்தான் தெரியாதா?

கோட்டையில் உல்லாசமாக இருந்தவர்கள், இன்று கோட்டையை விட்டு நாட்டுக்கு வருகிறார்கள், அதுவே எங்களால்தானே தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இப்பொழுதே அவர்கள் கிராமங்களுக்குச் சென்று மிட்டா மிராசுகளைச் சந்தித்துத் தேர்தல் வேலைகளுக்கு வித்திடுகின்றனர்.

இதனையெல்லாம் நமது தோழர்கள் நன்கு உணர்ந்து இந்தப் பகுதியில் நல்ல முறையில் கழகத்தை வளர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 20,21.5.60)