அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


வீர மரபினரே விரைந்து வாரீர்

நாகர்கோயிலில் கூடிய நமது பொதுக்குழு பண்டித நேரு பண்பிழந்து, தமிழ்நாட்டுத் தலைவர்களை மிகக் கேவலமாகத் தாக்கி வருவதைக் கண்டிக்கும் முறையில், சென்னையில், சனவரி 6ஆம் நாள் பண்டித நேரு வருகிறபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று தீர்மானித்திருக்கிறது.

கறுப்புக் கொடி காட்ட வாரீர்!

இந்தக் ‘கறுப்புக் கொடி‘ காட்டும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் வாய்ப்பை, நமது கழக எம்.எல்.ஏ.க்களுக்கும், எம்.பி.க்களுக்கும் பொதுச் செயலாளர் அளித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு பெறுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நிகழ்ச்சி, மிகச் சீரிய முறையில், வெற்றிகரமாக நடைபெற எல்லோருடைய ஆர்வமிக்க ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

கழகத் தோழரக்ளைக் கலந்து பேச, நான், சென்னையில் தங்கி இருக்கிறேன்.

தி.மு.க. – அவசரப்பட்டு பொருளற்ற முறையில், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்பதை நாடு அறியும்.

நிகழ்ச்சியில் கண்ணியம் தேவை!

தி.மு.க. – ஈடுபடும் எந்த நடவடிக்கையிலும், மக்கள் கண்டு அருவருக்கத்தக்க முறையிலே, இருப்பது இல்லை என்பதை, நல்லோர் அறிவர்.

தி.மு.க. – ஈடுபட்டு நடத்தும் எந்த நிகழ்ச்சியும், மிகச் சிறந்த முறையில் அமையும் என்பதும், அதற்கான ஆற்றலை வழங்கும் ஆர்வமிக்கக் கழகத்தவர் எண்ணற்றவர்கள் உள்ளனர் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்தனவே.

எனவே, கறுப்புக்கொடி காட்டும் நிகழ்ச்சி, மிகப் பெரிய – மிகச் சீரிய – மிக்க கண்ணியமான முறையில் அமைதல் வேண்டும்.

இந்த நோக்கத்தை மறவாமல், தோழர்களும், தோழியர்களும் கறுப்புக் கொடி காட்ட முன்வரக்கேட்டுக்கொள்கிறேன்.

நேரு பண்டிதர், தமிழகத்தில் வருகிறபொழுதெல்லாம் தலைவர்களைத் தாறுமாறான முறையில் காட்டுமிராண்டிகள், பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் !நான்சென்ஸ்) படுகிழங்கள் என்றெல்லாம் தமிழரின் உள்ளம் புண்படும்படிப் பேசுகிறார்க – ஏசுகிறார்.

அரசியல் ஆணவம் அவருக்கு!

அதிகாரத்தில் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொண்டு, பணப்பெட்டிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிற காரணத்தால், அவருக்கு அரசியல் ஆணவம் தலைக்கு ஏறி இருக்கிறது. நாராச நடையில், நாட்டினரின் நன்மதிப்பைப் பெற்ற எவரையும், ‘எடுத்தேன் – கவிழ்த்தேன்‘ என்று ஏசிடும் போக்கைக் கக்கி வருகிறார்.

அவரிடம் ஏசல் கேளாதவர்கள், அவர் அடிபணிந்து இட்ட கட்டளையை நிறைவேற்றும் மந்திரிகள் மட்டும்தான். மற்ற எவரும், அவர்கள் எத்துணைப் பெரிய அறிவாளர்கள் – அனுபவமிக்கவர்கள் – தொண்டாற்றியவர்கள் – ஆக இருப்பினும், துச்சமென்று எண்ணித் தூற்றித் திரிகிறார்.

நேரு பண்டிதரின் இந்தப் பண்பற்ற போக்கை, முன்பொருமுறை, இரயில் நிறுத்தக் கிளர்ச்சி மூலம் நாம் கண்டித்திருக்கிறோம்.

இம்முறை, இதுவரை நாம் நடத்தியிராத அளவில், ஆனால் கண்ணியம் – கடமை – கட்டுப்பாடு குலையாத முறையில் பண்டித நேருவுக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்.

கறுப்புக்கொடி காட்டிவிட்டால் நேரு பண்டிதர், தமது துடுக்குத்தனமான பேச்சை மாற்றிக்கொள்வாரா? என்று கேட்பதோ, எண்ணுவதோ தேவையற்றது.

அவருடைய போக்கைக் கண்டிக்கும் தமிழர்கள் இலட்ச இலட்சமாக உள்ளனர் என்பதை, உலகறியச் செய்வது நமது கடமை.

பஞ்சசீலம் பேசுபவரை பார் அறிய வேண்டும்!

அவருடைய ஆணவப்போக்கு, தமிழரின் உள்ளங்களில் எத்துணை வேதனைப் புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பதை உலகு அறியச் செய்வது நமது நோக்கம்.

பாரெல்லாம் சென்று பஞ்சசீலம் பேசும் பண்டிதர், இங்கு எவ்வளவு கேவலமான முறையில் – கேட்போர் மனம் புண்படும் வகையில், எதேச்சாதிகாரமாகப் பேசி வருகிறார் என்பதை உலகுக்கு விளக்க வேண்டும்.

எதேச்சாதிகாரத்துக்கு – அரசியல் ஆணவத்துக்கு அடிபணிய மறுப்போரின் அணி வகுப்பு தமிழகத்தில் இருக்கிறது, அதனைத் தி.மு.க. தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதைத் தரணி அறியச் செய்திட வேண்டும்.

தன்மானத்தைத் தமிழர் மதிப்பவர்!

தன்மானத்தை மதிப்போர் தமிழகத்தில் நிரம்ப உளர், அனைவருமே பட்டம் பதவிக்கும் பல்லிளிக்கும் தாசர்களாகிவிட வில்லை என்பதை நேரு பண்டிதர் அறிந்துவிடவேண்டும்.

வீர மரபினரே! வேலேந்திக் கோலேந்தி, வாகைசூடி வாழ்ந்த தமிழ் இனத்தவரே! உங்கள் இனம் பழிக்கப்படுகிறது – உங்கள் தலைவர்கள் இழிமொழியால் தாக்கப்படுகின்றனர் – தமிழகத்து வீரமணிகள் சிறையில் தள்ளப்படுகின்றனர் – தமிழரின் மொழியும் கலையும் ஒழிக்கப்பட்டு வருகின்றன – தமிழரின் மானம் பறிக்கப்படுகிறது – தலைநிமிர்ந்து நின்றால் தண்டனை! ஏனென்று கேட்டால் சிறைவாசம்! எதிர்த்தாலோ, நாட்டை விட்டே ஓட்டிடுவேன் என்று மிரட்டல்!

ஒன்றல்ல, இரண்டல்ல, உள்ளம் தாங்கிக்கொள்ள முடியாத அளவில், அடுக்கடுக்காக, தொடர்ந்து தமிழர்கள் மீது அம்புகள் பாய்ச்சப்படுகின்றன.

அடிமையே அடிபணிந்து கிட! இல்லையேல், உன் தலை அறுபடும் என்று மிரட்டித்தர்பார் நடத்திய காட்டுமிராண்டி மன்னர்கள் காலத்திலும் தமிழர்களை ஏசினோர் இல்லை, தமிழகத் தலைவர்களைத் தூற்றினோர் இல்லை.

ஜனவரி 6-ல் கறுப்புக்கொடி!

இன்று நடப்பது ஜனநாயகமாம்! எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாம்! மக்களாட்சி நடக்கிறதாம்.

இதிலே இத்துணை இழிமொழி, பழிச்சொற்கள், தூற்றல் தமிழருக்கு.

என்ன செய்வோம்? எங்ஙனம் தமிழரின் தன்மானத்தைக் காப்பது? தமிழரின் வழிவழி வந்த பண்பினை எங்ஙனம் உலகறியச் செய்வது?

ஜனவரி 6 – நீங்கள் கரத்தில் ஏந்தும் கறுப்புக்கொடி ஒவ்வொன்றும், தமிழரின் உள்ளக் கொதிப்பைக் காட்டிடும் சின்னமாக விளங்கும்.

ஜனவரி 6இல் கரத்தில் ஏந்தும் கறுப்புக் கொடி ‘தென்னகத்தை அடிமைப்படுத்திய வடநாட்டுத் தலைவனே! திரும்பிப் போ!‘, ‘அறிவை – ஆற்றலை – தன்மானத்தை இழித்துப் பேசும் பண்டிதரே! திரும்பிப்போ!‘

நேரு பண்டிதரே! திரும்பிப் போ!

‘தமிழகத் தலைவர்களைத் தாறுமாறாக ஏசும் பண்டிதரே! திரும்பிப் போ‘ என்று தமிழகமே முழக்கமிடுகிறது என்று பொருள்.

கடமையைச் செய்ய வாரீர்! கண்ணியத்தை மறவாதவர்கள் தமிழர் என்பதைக் காட்டிட வாரீர்.

வீழ்ந்துபட்ட இனமல்ல தமிழ் இனம், விழித்துக்கொண்ட – எழுச்சி பெற்ற இனம் என்பதை நேரு அறிந்திடச் செய்ய வாரீர்.

வாரீர், வாரீர் தோழர்களே! தமிழர் பண்பினை வடவர் அறிந்திடச் செய்ய வாரீர்.

கோலாகல ஆட்சி புரியும் நேரு பண்டிதரால், மக்களுக்குச் சோறு போட முடியவில்லை. வேலை தர முடியவில்லை, வரிப் பளுவைக் குறைக்க முடியவில்லை! விலைவாசி ஏற்றத்தைத் தடுக்கத் திறன் இல்லை. முதலாளிகள் கொழுப்பை அடக்க முடியவில்லை! சாதியை ஒழிக்கும் திறம் இல்லை! பண்டித நேருவின் ஆட்சிக்குப் பலமான விளம்பரப் பூச்சு தரப்படும், வெளிநாடுகளில் கடன் தரக்கூட மறுக்கிறார்கள்!

யாருடனும் ஒத்துப் போகத் தெரியவில்லை!

சுண்டைக்காய் அளவுள்ள போர்ச்சுகலே, மிரட்டுகிறது! அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒத்துப்போகத் தெரியவில்லை! ஆனால், பண்டித நேருவின் ஆட்சியிலே, தென்னகத் தொழில்கள் தேய்கின்றன! தென்னக அரசுகள் ஆட்டிப் படைக்கப்படுகின்றன! தென்னக மக்கள் தேம்பித் தவிக்கின்றனர்! தென்னகத் தலைவர்கள் தாறுமாறாக ஏசப்படுகின்றனர்! ஏன்? ஏன்? ஏன்?

குட்டக் குட்டக் குனிபவர்கள் தமிழர்கள் என்று, நேரு தீர்மானித்து விட்டார்! இல்லை, இல்லை, இல்லை! தமிழர்கள் தன்மானத்தை மறந்தவர் அல்லர் – இழந்திடச் சம்மதியார் – பண்புடன் வாழ்ந்திட எந்த விலையும் கொடுத்திடத் தயங்கார் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? “ஆம்! ஆம்! ஆம்!“ என்ற முழக்கம் எங்கும் கிளம்பிடக் காண்கிறேன்! அந்தக் குரலில் வீரமும், தமிழகப் பண்பும் குழைந்திருப்பது அறிகிறேன்!

ஆர்வத்துக்கு அரிய வாய்ப்பு!

அந்தக் குரவொலியைக் குவலயமே தெரிந்துகொள்ளச் செய்வதாக அமைய வேண்டும் ஜனவரி 6-இல்!

கறுப்புக் கொடி தி.மு.க. தீர்மானித்துவிட்டது.

ஜனவரி 6-இல் கறுப்புக்கொடி.

எனக்கும், உடன் பணிபுரியும் எம்.எல்.ஏ.க்களுக்கும், எம்.பி.க்களுக்கும் தரப்பட்டிருக்கிறது ஒரு நல்ல வாய்ப்பு – ஜனவரி 6இல் கறுப்புக்கொடி.

‘கறுப்புக்கொடிகள் தயாராகட்டும்‘ அழைப்பு கிடைத்துவிட்டது! ஆர்வத்துக்கு ஒரு அரிய வாய்ப்பு! அஞ்சா நெஞ்சினரே! அறப்போர்ப் பயிற்சி பெற்றோரே! ஆண்ட இனத்தின் வழித் தோன்றல்களே!

அனைவரும் திரண்டு வாரீர்! ‘சென்னை கறுப்புக் கொடி மயம்‘ என்ற செய்தி உலகெங்கும் செல்ல வேண்டும்!

வஞ்சிசூடி வாளெடுத்தனர், வாகை சூடி மகிழ்ந்தனர், நமது முன்னோர்!

ஆளுக்கொரு கறுப்புக் கொடி !

ஜனவரி 6இல் உங்கள் கரத்தில் ஏந்தும் கறுப்பக் கொடி – ‘நாளை நாம் தனி அரசு காண்போம்‘ – என்பதற்காக வீரச்சின்னமாகிறது. அழைக்கிறேன், ஆர்வமிக்க தோழர்களே! அனைவரும் வாரீர்! ஆணவ அரசு நம்மை அறிந்திடச் செய்வோர். வாரீர் நாளை நாளை என்று இருந்து விடாதீர்! இன்றே ஆளுக்கொரு கறுப்புக் கொடி தயாரித்துக் கொள்ளுங்கள் – அழைப்பு கிடைத்துவிட்டது!

ஜனவரி 6-இல் கறுப்புக்கொடி!

(நம்நாடு - 1.1.1958)