அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமரிக்கோட்டம்
2

“உன் தகப்பனார் பெரிய வைதீகப்பிச்சு அல்லவா? அவரைத் திருத்த முடியாத நீ, ஊரைத் திருத்த வந்துவிட்டாயே, அது சரியா?”

“தகப்பனார் பேச்சைக் கேட்காதவனுக்குத் தறுதலை என்று பெயர் உண்டல்லவா? நீ ஏன் பழனி என்று பெயர் வைத்துக் கொண்டாய்? தறுதலை என்ற பெயர்தானே பொருத்தம்?”

இப்படிப்பட்ட கேள்விகள், அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும் கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்று வந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதி, தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூர் சென்று சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான். ஒரு வேலைக்கும் போகாமல்! அவனுக்கு ‘மகாஜனங்கள்’ தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர மறுத்து, கலியாணம் என்பது, கட்டளையாக இருக்கக் கூடாது. நிர்ப்பந்தமாக இருத்தலாகாது. பரஸ்பர அன்பும், சம்மதமும் இருக்க வேண்டும், காதலர் கருத்து ஒருமித்து வாழ்வதே இன்பம் என்பன போன்ற கொள்கைகளை ஏற்க மறுத்து, ஜாதீப்பீடையை ஆண்டவன் ஏற்பாடு என்று விடாப்
பிடியாகக் கொண்டு, ஒரே மகனை உலகில் பராரியாக்கிவிட்டு, பகவத் கைங்கரியம் என்ற பெயரால், சொத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருந்த குழந்தைவேல் செட்டியார், “தர் மிஸ்டர், சனாதன சீலர். பக்திமான்” என்று கொண்டாடப்பட்டார். கோவில் மாலை அவருடைய மார்பில்! ஊர்க்கோடியில் உலவும் உலுத்தர்கள் வீசும் கற்கள், பழனியின் மண்டையில்! பழனி மனம் உடையவில்லை. நாகவல்லியின் அன்பு அவனுக்கு. எந்தக் கஷ்டத்தையும் விநாடியிலே போக்கிவிடும் அபூர்வ மருந்தாக இருந்தது.

“இன்று எத்தனை கற்கள்?” என்றுதான் வேடிக்கையாகக் கேட்பாள் நாகவல்லி.

“பெரிய கூட்டம். வாலிபர்கள் ஏராளம். நாகு! பெண்கள் கூட வந்திருப்பார்கள்!” என்று கூட்டத்தின் சிறப்பைக் கூறுவான் பழனி. இவ்விதமாக வாழ்க்கை ஒரே ஊரில் அல்ல! நாகவல்லி ஆறு மாதத்துக்குள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு மாற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. அவள் மேல் குற்றம் கண்டு பிடித்தால், கஷ்ட ஜீவனந்தான். ஆனால், மற்றக் குடும்பங்கள், வீடு வாங்கினோம், நிலம் வாங்கினோம், இரட்டை பேட்டைச் செயின் செய்தோம். இரண்டுபடி கறக்கும் நெல்லூர்ப்பசு வாங்கினோம் என்று பெருமை பேசினரே தவிர, வாங்கின வீட்டுக்கு மாடி இல்லையே, நிலம் ஆற்றுக்கால் பாய்ச்சல் இல்லையே. செயின் எட்டுச் சவரன் தானே – பசு வயதானதாயிற்றே என்ற கவலையுடனேயே இருந்தன. நாகவல்லி பழனி குடும்பத்துக்கு அத்தகைய பெருமையும், கவலையும் கிடையாது.

“நாகு! தெரியுமா விசேஷம்?”

“என்ன, எந்தக் கோட்டையைப் பிடித்துவிட்டீர்கள்?”

“இடித்துவிட்டேன் கண்ணே!”

“எதை?”

“மருங்கூர் மிராசுதாரரின் மனக்கோட்டையை! அவர் தன்னுடைய கிராமத்தின் எவனாவது சீர்திருத்தம். சுயமரியாதை என்று பேசினால் மண்டையைப் பிளந்து விடுவேன் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தாரல்லவா, நேற்று, அந்த மனக்கோட்டையை இடித்துத் தூள்தூளாக்கி விட்டேன். பெரிய கூட்டம்! பிரமித்துப் போய்விட்டார்.

“சரியான வெற்றி! எப்படி முடிந்தது.”

“ஒரு சின்ன தந்திரம்! மிராசுதாரர் மருமகன் இருக்கிறானே. அவனுக்கும் மிராசுதாரருக்கும் மனஸ்தாபமாம். யுக்தி செய்தேன். அந்த மருமகனைத் தலைவராகப் போட்டுக் கூட்டத்தை நடத்தினேன். மிராசுதாரர் ‘கப்சிப்’ பெட்டிப் பாம்பாகிவிட்டார்.”
“அவன் நமது இயக்கத்தை ஆதரிக்கிறானா?”

“இயக்கமாவது. அவன் ஆதரிப்பதாவது; அவனுக்கு என்ன தெரியும்? ஒப்புக்கு உட்கார வைத்தேன்.”

“அவனா? நாகா! நீ வரவில்லையே! வந்திருந்தால், வயிறு வெடிக்கச் சிரித்துவிட்டிருப்பாய், அவன் பேச்சைக் கேட்டு.”

“ரொம்ப காமிக் பேர்வழியோ?”

“காமிக்குமில்லை, கத்தரிக்காயுமில்லை! அவன் உலகமறியாதவன். ஆரம்பமே, எப்படித் தெரியுமோ? ‘ஏலே! யார்டா அவன், காத்தானா? உட்காரு கீழே இப்ப, பிரசங்கம் நடக்கப் போவுது. கப்சிப்னு சத்தம் செய்யாமே கேட்கவேணும் எவனாவது ஏதாச்சும் சேஷ்டை செய்தா தோலை உரிச்சுப் போடுவேன். ஆமாம்!’ – இதுதான். நாகு! அவன் பிரசங்கம்.”

“அட இழவே! இந்த மாதிரி ஆட்களைச் சேர்த்தால் இயக்கம் கெட்டுத்தானே போகும்.”

“சேர்க்கறதாவது! நடக்கறதாவது! கூட்டம் நடத்தவே வழி கிடைக்காமே இருந்தது. அதற்காக அந்த ஆளை இழுத்துப் போட்டேன். கூட்டம் முடிந்ததும் பத்துப் பேருக்கு மேலே, மிகத் தீவிரமாகிவிட்டார்கள் இனி யார் தயவும் வேண்டாம்; நாமே கூட்டம் போடலாம் என்று சொன்னார்கள்.”

இப்படிப்பட்ட பேச்சுதான், பழனி – நாகவல்லிக்கு! வேறு என்ன பேச முடியும்? புதிய பங்களாவைப் பற்றியா, பவள மாலையைப் பற்றியா?

“எங்கே நாகு, செயின்?”

“பள்ளிக்கூடத்தில்!”

“என்ன விளையாட்டு இது? கழுத்தே அழகு குன்றி விட்டது. அந்தச் செயின் இல்லாமல், எங்கே செயின்?”

“சேட் லீலாராமிடம் 25க்கு அடகு வைத்திருக்கிறேன்.”

“ஏன்?”

“சும்மா, தமாஷûக்கு! அந்த மிராசுதாரனின் மருமகனைச் சொல்லிவிட்டீர், உலகமறியாதவன் என்று. இன்னும் மூன்று மாதத்திலே தகப்பனாராகப் போகிற விஷயம்கூட உங்களுக்குத் தெரியவில்லை. இருபத்து ஐந்து ரூபாய் வாங்கித்தான், இரண்டு மாத டாக்டர் பில் கொடுத்தேன். மிச்சமிருக்கும் பத்து ரூபாய்க்கு பெர்னாட்ஷா வாங்கினேன்.”

“பழனியின் குடும்பக் கணக்கு இவ்விதம் இருந்தது. அதே நேரத்தில், குழந்தைவேலச் செட்டியார் தன் குமஸ்தாவிடம் சொல்லிக் கொண்டிருப்பார், கணக்கு :

ரூ. பை
வட்டி வரவு வடிவேல் பிள்ளை மூலம் 650.00
வாடகை வரவு வில்வசாமி மூலம் 400.00
நெல் விற்ற வகையில் வரவு 2600.00
நேத்திரானந்தர் மடத்துக் கைங்கரியச் செலவு 600.00
பிக்ஷாண்டார்கோவில் வாகன கைங்கரியச் செலவு 1260.00
பிடில் சுந்தரேச ஐயர் மகள் கலியாணச் செலவு 302.00
வாணக் கடைக்கு 46.00
பூப்பல்லக்கு ஜோடிக்க 260.00

என்று இவ்விதம், செட்டியார் வீட்டிலே சூடிக் கொள்வதற்கு ஆளில்லாததால் மூலையில் குவிந்த மலர் மாலைகள், பழனியின் மடியில் மலர்ந்த தாமரை போன்றமுகம், அதிலே ரோஜா போன்ற கன்னம், முத்துப்பற்கள், அவற்றைப் பாதுகாக்கும் பவளஇதழ், பவுன்நிற மேனி... ஏழ்மை. ஆனாலும், கொள்கையின்படி வாழ்வு அமைந்ததால் இன்பம் அங்கே, செல்வம், ஆனால் மனம் பாலைவனம் – செட்டியார் வீட்டில்.

பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா! புத்தியில்லாமல் ஏதோ செய்து விட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்ச வேண்டும். “சீ நீசா! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏசவேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு. அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக் கொள்ளவேண்டும்; இதுவே செட்டியாரின் நித்யப் பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம் மனுச் செய்தும், மகன் வாயிற்படி வரவும் இல்லை; வறுமையால் தாக்கப்பட்டதற்காக, மனம் மாறினதாகவும் தகவலில்லை.

“கைகோர்த்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டே போனார்கள்.”

“பழனி, ராஜா போலத்தான் இருக்கிறான்.”

“ரொம்ப அழகாகப் பேசுகிறான்.”

“நேற்றுக் கூட்டத்திலே கல்விழுந்தபடி இருந்தது. பழனி கொஞ்சம்கூடப் பயப்படாமல் பேசிக்கொண்டே இருந்தான்” என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஒவ்வொரு செய்தியும் செட்டியாருக்குச் செந்தேள்தான்! துடித்தார், அவன் துயரமின்றிச் சந்தோஷமாக வாழ்கிறான் என்று கேட்டு. தகப்பனார் மகன் விஷயமாகக் கொள்ளக்கூடிய உணர்ச்சியால்தான். ஆனால் குழந்தைவேல் செட்டியார், பழனியைத் தன் மகன் என்று எண்ணவில்லை; தன் பணத்தை அலட்சியப்படுத்திய ஆணவக்காரன் என்றே எண்ணினார்.

“இருக்கட்டும், இருக்கட்டும்; அவள் எத்தனை நாளைக்கு இவனிடம் ஆசை காட்டப் போகிறாள்? முதலிலே கோபித்துக் கொண்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடுவார். அப்போது சொத்து பழனிக்குத் தரப்படும். நாம் சொகுசாக வாழலாம் என்று அந்தச் சிறுக்கி எண்ணிக் கொண்டுதான் என் மகனைத் தன் வலையிலே போட்டுக் கொண்டாள். கடைசி வரை ஒரு பைசா கூட நான் தரப் போவதில்லை என்று தெரிந்தால் ‘போய் வாடா’ என்று கூறிவிடுவாள்! பயல், வந்து சேருவான்! பணத்தாசையால் தானே அவள் அவனை மயக்கி வைத்தாள்” என்று எண்ணி, மனத்தைத் தேற்றிக் கொள்வார். அவருக்கென்ன தெரியும். அவர்கள் சிருஷ்டித்துக் கொண்ட இராஜ்யத்திலே. பணத்துக்கு அல்ல மதிப்பு என்பது!

மறையூர், நால்வரின் பாடல் பெற்ற தலமல்ல. ஆனால் அதற்கு அடுத்த படிக்கட்டிலிருந்த அடியார்கள் பலர் அந்த க்ஷேத்திரத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மண்மேடு; ஒரு காலத்தில் மால்மருகன் கோவிலாக இருந்ததென்று வைதிகர்கள் கூறுவர். குழந்தைவேல் செட்டியாருக்கு, மறையூர் முருகன் கோவிலை அமைக்கும் திருப்பணியின் விசேஷத்தைத் தாழையூர் சனாதனிகளும், மறையூர் வைதிகர்களும் கூறினர். அவரும் வெகுகாலத்துக்கு முன்பு கலனாகிப்போன திருக்கோவிலை மீண்டும் அமைத்துத் தரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததே என்று பூரித்தார். பணத்துக்குக் குறைவில்லை. ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஆள், அம்பு, தளவாடங்கள் வந்து சேர்ந்தன. செட்டியார் மறையூர் முகாம் ஏற்படுத்திக்கொண்டு, கோவில் வேலையை ஆரம்பித்து விட்டார். பல ஊர்களிலிருந்து கட்டட வேலைக்காரர்கள், சிற்பிகள், ஓவியக்காரர், கூலிகள் ஆகியோர் மறையூர் வந்து குவிந்தனர். மறையூர் சேரிக்குப் பக்கத்திலே, நூறு குடிசைகள் புதிதாக அமைக்கப்பட்டு, அவற்றிலே கூலி வேலை செய்பவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை எழுந்திருப்பார். காலைக் கடனை முடித்துக்கொண்டு, திருப்பணியைக் கவனிப்பார். அரைத்த சுண்ணாம்பை எடுத்துப் பார்ப்பார்; செதுக்கிய கம்பளங்களைத் தடவிப் பார்ப்பார்; வேலையாட்களைச் சுறுசுறுப்பாக்குவார்; சோலையிலே புஷ்பங்கள் மலரத் தொடங்கியதும் வண்டுகள் மொய்த்துக் கொள்வதுபோல, மறையூரில் வேலையாட்கள் குழுமி விட்டனர். ஒவ்வோர் மாலையும், அங்கிருந்த பெரிய ஆல மரத்தடியிலே அமர்ந்து அன்றாடக் கூலியைத் தருவார்.

பழனிமேல் ஏற்பட்ட கோபம், செட்டியாரின் சொத்தை மதிலாகவும், பிரகாரமாகவும், திருக்குளமாகவும், மண்டபமாகவும் மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கோவில் கட்டும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையாட்களிலே, பெண்களும் ஏராளம். அவர்களிலே குமரி ஒருத்தி. மாநிறம். ஆனால், உழைப்பால் மெருகேறின உடல். குறுகுறுப்பான பார்வை. இயற்கையான ஒரு புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் மெல்லிய குரலிலே ஏதாவது பாடிக் கொண்டே இருப்பாள். இருபதுக்குள்தான் வயது! பருவ கர்வத்துடன் விளங்கும் அப்பாவையின் பார்வையிலேயே ஒருவித மயக்கும் சக்தி இருந்தது. கொச்சைப் பேச்சோ, வேதாந்திருக்குக்கூட இச்சையைக் கிளறிவிடுவதாக இருக்கும். அவள் கோபமே கொள்வதில்லை.

“எலே! குட்டி! என்ன அங்கே குரங்கு ஆட்டம் ஆடறே!” என்று மேஸ்திரி முத்துசாமி மிரட்டுவான். குமரி பயப்படவுமாட்டாள்; கோபிக்கவும் மாட்டாள். “அண்ணி, காலையிலே சண்டை போட்டுதா?” என்று கேலி பேசுவாள். கடைக்கண்ணால் பார்ப்பது குமரிக்கு வழக்கமாகிவிட்டது. கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே, முகவாய்க்கட்டையில் கைவைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, “அடே அப்பா! காளைமாடு மாதிரி விழிக்கிறான் பாரு. ஏமாறுகிறவ நான் இல்லை. அதுக்கு வேறே ஆளைப் பாருடா, ராசா தேசிங்கு” என்று குறும்பாகப் பேசுவாள். யாராவது அவளிடம் கொஞ்சம் அப்படி இப்படி நடக்க நினைத்தால்.

“குட்டி பார்ப்பதும், சிரிப்பதும், குலுங்கி நடப்பதும், வெடுக்கென்று பேசுவதும் பார்த்தா, தொட்டால் போதும் என்று தோன்றுகிறது; கிட்டே போனாலோ, நெருப்பு, நெருப்பிடம் போவது போலச் சீறி விழுகிறாளே, இப்படி ஒருத்தி இருப்பாளா?” என்று பலபேர் தோல்விக்குப் பிறகு பேசிக் கொள்வார்கள். குமரிக்கு அங்கிருந்தவர்களின் சுபாவம் நன்றாகத் தெரியும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியும் தெரியும். அதற்காக வேண்டி யாருடனும் பழகாமலும் இருக்கமாட்டாள். தாராளமாகப் பழகுவாள். ஆனால், ‘கெட்ட பேச்சு வரும் என்று தெரிந்தால் போதும்; வெட்டி விடுவாள். காற்றிலே அலையும் ஆடையைச் சரிப்படுத்த நிற்பாள், குறும்புக்காரரின் கண்கள் தன்மீது பாய்வதைக் காண்பாள், முகத்தை எட்டுக் கோணலாக்கிக் காட்டுவாள் அண்ட முடியாத நெருப்பு அவள். அவள் அண்ணனோ, மகா கோபக்காரன். குமரியைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாணயமான கருத்தைக் கொண்ட
வர்கள்கூடச் சொக்கனிடம் (குமரியின் அண்ணனிடம்) கேட்கப் பயப்படுவார்கள் தாய் தந்தை இருவரும் இல்லை. தங்கைக்கு அண்ணன் துணை; அண்ணனுக்குத் தங்கை துணை. இருவருக்கும் ரோஷ உணர்ச்சியே பலமான கவசம்.

குமரி, வேலை செய்யுமிடத்திலே இருந்தவர் அனைவரையும் ‘எடை’ போட்டு விட்டாளே தவிர, செட்டியாரை, அவள் சரியாக எடை போடவில்லை. பாவம், பெரிய மனுஷர்! மெத்தாதி, உபகாரி, ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர் என்றுதான் குமரியும் மற்றவர்களைப் போலவே அவரைப் பற்றித் தெரிந்திருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதைவிட, அவரிடம் கொஞ்சம் அடக்கமாகவே பேசுவாள். “யாரங்கே! மணல் ஏன் இப்படிச் சிதறி இருக்கு? பகவானுக்கான காரியம். பாவ புண்ணியம் பார்த்து வேலை செய்யுங்கள். கேவலம், பணத்தை மட்டும் கவனித்தால் சரி இல்லை” என்று செட்டியார் சொல்வார். மற்றவர்கள் முணுமுணுத்தாலும் குமரி மட்டும் குறைகூற மாட்டாள். ஓடிப்போய், மணற்குவியலைச் சரி செய்வாள்.

மீனா, ஒரு குறும்புக்காரி; கொஞ்சம் கைகாரியும்கூட! அதற்காகவே அவளுக்கு, மேஸ்திரி ஒருநாள் தவறாமல் வேலை கொடுப்பான். இடுப்பிலே கூடை இருக்கும்; அது நிறைய மணல் இருக்காது, ஒய்யார நடை நடப்பாள். ‘பாக்கு இருக்கா அண்ணே! ஒரு வெத்திலைச் சருகு கொடுடி முனி!’ என்று யாரையாவது ஏதாவது கேட்டபடி இருப்பாள். கொடுத்தாக வேண்டுமென்பதில்லை; மேஸ்திரியிடம் பேசுவதிலே ரொம்ப குஷி அவளுக்கு. அவனுக்கும்தான்.
“மேஸ்திரியாரே! இருக்குதா?”

“கருக்கு மீசைக்காரனை, இருக்குதான்னு கேக்கறியே!”

“நான் எதைக் கேக்கறேன்? நீ எதைச் சொல்கிறே!”

“கேட்டதற்குப் பதில். நீ என்ன இருக்கான்னு கேட்டே.”

“கொஞ்சம் புகையிலை கேட்டேன்.”

“காரமா இருக்கும்.”

“பரவாயில்லை. அந்தக் காரத்தைக் காணாதவளா நானு? கொடுங்க இருந்தா” – இப்படிப் பேச்சு நடக்கும். இருவரும் பேசும்போது மற்றப் பெண்கள் இளித்துக்கொண்டு நிற்பார்கள். மீனா விடமாட்டாள்.

“ஏண்டி! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்கறிங்க.”

“ஒண்ணுமில்லையே அக்கா.”

“அக்காவா நானு? இவ கொழந்தை! வயது பதினாறு!”

இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள். மற்றப் பெண்களிடம். சிறுங்கல். தலையில் கட்டிய பாகை, வெத்திலைப் பை இவை அடிக்கடி, மீனா மீதுதான் விழும். மேஸ்திரி இவற்றை அடிக்கடி வீசுவார். அவள் ஏசமாட்டாள். அவளுக்கு அவன் கெடுத்து வந்த எட்டணா கூலி, இந்த விளையாட்டுக்கும் (விபரீதமற்ற) சேர்த்துதான்.

ஒரு கெட்ட வழக்கம் மீனாவுக்கு! முடிபோட்டு விடுவாள்! திடீர் திடீரென்று தன் மனம் போன போக்கிலே ஜோடி சேர்த்து விடுவாள் – கற்பனையாகவே! அவளுடைய ‘ஆருடம்’ பல சமயங்களிலே பலித்ததுண்டு. “உன் பல் ரொம்பப் பொல்லாதது. ஒன்றும் சொல்லிவிடாதேடியம்மா” என்று கெஞ்சுவார்கள் மற்றவர்கள். ‘இல்லாததை நான் சொல்ல மாட்டேன்’ என்று கூறுவாள் மீனா.

மீனாவின் கண்களுக்குத்தான் முதலில் தெரிந்தது, குமரியின் மீது செட்டியாரின் நோக்கம் செல்வது! குமரிக்குத் தெரிவதற்கு முன்பே மீனாவுக்குத் தெரிந்துவிட்டது! குமரி, எந்தப் பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம்தான் செட்டியார் அடிக்கொரு தடவை வருவார். மற்றவர்களை, ‘இதைச் செய். அதைச் செய்’ என்று நேரிலே கூப்பிட்டுச் சொல்வதற்குப் பதில், குமரியைக் கூப்பிட்டனுப்பி அவள் மூலமாகவே சொல்லி அனுப்புவார். அதாவது, குமரியை அடிக்கடி தன் பார்வையில் வைத்துக் கொண்டிருக்கச் செட்டியார் ஆசைப்பட்டார். எத்தனை நாளைக்குச் செடியிலே இருக்கும் மலரைப் பார்த்து மகிழ்வதோடு இருக்க முடியும்? ஒருநாள் பறித்தே விடுவது என்று தீர்மானமாகித் தானே விடும்! உலகமறிந்தவள் மீனா. ஆகவே உருத்திராட்சம் அணிந்தால் என்ன, விபூதி பூசினாலென்ன, நல்ல முகவெட்டுக்காரியிடம், மனம் தானாகச் சென்று தீரும். அதிலும், கள்ளங்கபடமற்ற குமரியிடம் காந்த சக்தி இருக்கிறது என்பதை அவள் அறிவாள். ஆகவே செட்டியார், குமரியைக் கூப்பிட்டு அனுப்புவது போதாதென்று, மீனாவே சில சமயங்களிலே, குமரியை, “செட்டியாரிடம் போய்” சுண்ணாம்பு அறைந்தது சரியா இருக்கா என்று கேட்டுவா, நாளைக்குப் பிள்ளையார் பூஜைக்கு மகிழம்பூ வேண்டுமா என்று கேட்டுவா’ என்று ஏதாவது வேலை வைத்து அனுப்புவாள்.

பாபம்! ஒவ்வொரு தடவையும் குமரி தபால் எடுத்துக் கொண்டு மட்டும் போகவில்லை. மையலையும் தந்துவிட்டு வந்தாள். அந்தப் பக்தருக்கு தன்னையும் அறியாமல். அவள் சேதியைக் கூறுவாள். அவரோ அவளுடைய சுந்தரத்தைப் பருகுவார். எவ்வளவு இயற்கையான அழகு! கண்களிலே என்ன பிரகாசம்! உடல் எவ்வளவு கட்டு! இவ்வளவுக்கும் ஏழை! அன்றாடம் வேலை! அழுக்கடைந்த புடவை! உப்பிர ஜாதி (ஒட்டர்) மாளிகையிலே உலவவேண்டிய சௌந்திரியவதி என்று எண்ணிப் பரிதாபப்படுவார். ஒருநாள், கையில் சுண்ணாம்புக்கறை படிந்திருந்ததைக் கழுவ எண்ணி, “குமரி! கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லு” என்றார் செட்டியார். வழக்கமாக, மேஸ்திரிதான் தண்ணீர் கொட்டுவார். அவர் முதலியார் வகுப்பு. அன்று மேஸ்திரிக்கும் மீனாவுக்கும் பலமான பேச்சு, ‘ஆண் உசத்தியா, பெண் உசத்தியா’ என்று, ஆகவே குமரிக் கூப்பிட்டும் அவர் வரவில்லை. சரேலெனத் தண்ணீர்ச் செம்பை எடுத்துக்கொண்டு குமரியே போனாள். செட்டியாரும் எங்கேயோ கவனமாக இருந்ததால், தண்ணீர் எடுத்து வந்தது யார் என்றுகூடக் கவனிக்காமல், கையை நீட்டினார். குமரி தண்ணீர் ஊற்றினாள். ‘போதுண்டா’ என்றார் செட்டியார். அவருடைய நினைப்பு தண்ணீர் ஊற்றியது மேஸ்திரிதான் என்பது. குமரி ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். செட்டியாருக்கு அப்போதுதான் விஷயம் விளங்கிற்று. அதுவரை அவர் உப்பிர ஜாதியாள் தொட்ட தண்ணீரைத் தொட்டதில்லை. என்ன செய்வது? அவள் அன்போடு அந்தச் சேவை செய்தாள். எப்படிக் கோபிப்பது? “நீயா?” என்று கேட்டார். “ஆமாங்க! மேஸ்திரிக்குத்தான் வேலை சரியாக இருக்கே, அதனாலேதான் நான் எடுத்து வந்தேன். தப்புங்களா? கையைத்தானே கழுவிக் கொண்டீங்க; உங்களுக்குச் சாப்பிட்டாதானே தோஷம்?” என்று கேட்டாள். தொட்ட நீரைத் தொடுவதுகூடத் தோஷம் என்பதுதான் செட்டியாரின் சித்தாந்தம். ஆனால், அந்தப்பெண், சூதுவாதறியாது சொன்னபோது என்ன செய்வார். செட்டியார் ஒருபடி முன்னேறினார். “உள்ளுக்குச் சாப்பிட்டாத்தான் என்னாவாம். குடலா கருக்கும்!” என்றார். “எல்லாம் மனசுதாங்களே காரணம்!” என்று கொஞ்சும் குரலில் கூறினாள் குமரி. “அதுசரி! ஆமாம்!” என்று கூறிவிட்டு, விரைவாக உள்ளே போய்விட்டார். அவள் விட்டாளா! கூடவே சென்று செட்டியாரின் நெஞ்சிலே புகுந்து கொண்டாள். எல்லாம் மனம்தானே! சிவப்பழமாக இருந்தால் என்ன? மனந்தானே அவருக்கும்.

“யாரை நிறுத்தினாலும் நிறுத்திவிடுவார். குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார்.”
“ஏன்? என்னா விஷயம்?”

“செட்டியாருக்கு அவளைப் பார்க்காவிட்டால் உசிரே போய்விடும்.”

“அம்மா! அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி?”

“பொடியுமில்லை, மந்திரமுமில்லை! அவளைக் கண்டவன் எவன்தான் தேனில் விழுந்த ஈ போலாகாமலிருக்கிறான்? அவகூடக் கிடக்கட்டும், கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப் பார்க்காமே இருக்கிறான்? செட்டியார், என்னமோ கோவில் கட்டலாமென்றுதான் வந்தார். அவர் கண்டாரா, இங்கே இந்த ‘குண்டு மூஞ்சி’ இருப்பாளென்று!