அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

குமரிக்கோட்டம்
3

“செட்டியார் மேலே பழி போடாதே. அந்த ஆசாமி ரொம்ப வைதீகப் பிடுங்கல். அவ, கைப்பட்டதண்ணீரைக் கூடத் தொடமாட்டார். ஒரே மகன் அவருக்கு. ஜாதியை விட்டு ஜாதியிலே சம்பந்தம் செய்கிறானென்ற உடனே, போடா வெளியே என்று கூறிவிட்டவர்.”

“மவனுக்குச் சொன்னாரு, அப்பாவா இருந்ததாலே! இவருக்கு எந்த அப்பன் இருக்காரு, போ வெளியேன்னு சொல்ல?”

மேஸ்திரி, மீனாவிடமிருந்து தெரிந்து கொண்ட இரகசியத்தைச் சமயம் வரும்போது தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மேற்கொண்டு தகவல்களைக் கேட்டறிய விரும்பினான். மீனா, மேஸ்திரியின் ஆவலைத் தெரிந்துகொண்டு சிரித்தபடி, ‘செச்சே! நீ அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சு போச்சின்னு நினைக்காதே. செட்டியாருக்கு அவகிட்ட கொள்ளை ஆசை இருக்கு. ஆனா பயமோ மலையத்தனை இருக்குது. மேலும், குமரி வேடிக்கையாகப் பேசுவாளே தவிர, ரொம்ப ரோஷக்காரி. அதனாலே, செட்டியார் ஏதாவது இளிச்சா, அவ அண்ணனிடம் சொல்லிவிடுவா. சும்மா பார்க்கறதும்; சிரிச்சிப் பேசறதுருமா இருக்க வேண்டியதுதான்” என்று கூறினாள். உண்மையும் அதுதான். செட்டியார் குமரியின் பார்வையையே விருந்தாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஜாதி குல பேதங்கள் அர்த்தமற்றவை என்று பழனி எவ்வளவோ ஆதாரத்தோடு கூறியும், கேட்க மறுத்த செட்டியாரின் மனத்திலே, அந்தப் பெண்ணின் ஒரு புன்னகை எவ்வளவோ புத்தம் புதுக் கருத்துக்களைத் தூவிவிட்டது. ஜாதியாம், மகாஜாதி! இந்தப் பெண்ணுடைய இலட்சணத்துக்கும் குணத்துக்கும் ஒருவன் இலயிப்பானே தவிர, இவள் ஜாதியைக் கண்டு பயப்படுவானா என்ன என்றுகூட நினைத்தார். ஒரு கணம் அவ்விதம் நினைப்பார். மறுகணமே மாறிவிடும். இதுதான் சோதனை! மாயை என்னை மயக்க வந்திருக்கிறது – இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் என்று தீர்மானித்து, தேவார திருவாசகத்தையும், அடியார்கள் கதைகளையும், முன்பு படித்ததைவிட மேலும் சற்று அதிக ஊக்கமாகப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பாவையை மறந்துவிட வேண்டும் என்ற திட்டம் அவருடையது. பாவம். அவருக்கு (அதுவரை)த் தெரியாது, காதல் பிறந்தால், அதன் கனலின் முன்பு எந்தத் திட்டமும் தீய்ந்து போய்விடும் என்ற உண்மை.

“தோடுடைய செவியன்” என்ற பதிகத்தை அவர், அதற்கு முன்பு எத்தனையோ நூறு முறை படித்ததுண்டு. அப்போதெல்லாம், ரிஷபம் ஏறிக்கொண்டு, ஜாடையில் பிறையுடன் சிவனார் வருவதுபோலவே, அவருடைய அகக்கண் முன் சித்திரம் தோன்றும். பரமனுக்குப் பக்கத்திலே. பார்வதி நிற்பதும் தெரியும். ஆனால், அப்போதெல்லாம், ஐயனுடைய அருள் விசேஷத்தைப் பற்றியே செட்டியார் கவனிப்பார். குமரியின் மீது ‘ஆசை உண்டான பிறகோ, பதிகம் படியானதும், பார்வதி பரமசிவனும் அவர் மனக்கண்முன் தோன்றுவதும், பார்வதி பரமசிவனை அன்புடன் நோக்குவதும், அந்த அன்புப் பார்வையால் ஐயனுடைய அகமகிழந்து முகம் மலர்வதும் ஆகிய காதல் காட்சியே அவருக்குத் தெரியலாயிற்று. பதிகம்பாடி, பிரேமையை மாய்க்க முடியவில்லை – வளர்ந்தது. ஏகாந்தமாக இருந்து பார்த்தார், தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கிற்று. அவரையும் அறியாமல் அவர் மனத்திலே ஒருவகை அச்சம் குடிபுகுந்து விட்டது. எப்படி நான் தப்ப முடியும்? என்ற அச்சம் அவரைப் பிடித்துக்கொண்டது. துறைமுகத்தருகே நின்றுகொண்டு, தன் கப்பலின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வணிகர்போல, அவர் மனம் பாடுபட்டது. குமரியின் கள்ளங்கபடமற்ற உள்ளம் அவருக்குத் தெரியும். பணிவுள்ளவளாக அவள் தன்னிடம் நடந்து கொள்கிறாள். பசப்பு அல்ல என்பதையும் அறிவார். தன் மனத்திலே மூண்டுவிட்ட தீயை அவள் அறியாள். அறிந்தால் திகைப்பாள் என்பதும் தெரியும்.

கொடியிலே கூத்தாடும் முல்லையைப் பறிக்கும் நேரத்தில், வேலிப் பக்கமிருந்து தோட்டக்காரன், “ஏ! யாரது? கொடியிலிருந்து கையை எடு” என்று கூவினால், எவ்வளவு பயம் பிறக்கும்? தோட்டக்காரன் கூவாமல், முல்லையே “நில்! பறிக்காதே! உனக்காக அல்ல, நான் பூத்திருப்பது” என்று கூறினால், பயம் எவ்வளவு இருக்கும். அவ்விதமான அச்சம் செட்டியாருக்கு. அடக்கமுடியவில்லை. அவளோ அணுவளவும் சந்தேகிக்கவில்லை. செட்டியாரின் உண்மை நிலை தெரிந்தால் அவள் உள்ளம் எவ்வளவு வாடும், எவ்வளவு பயப்படு வாள், மதிப்பு துளியாவது இருக்குமா? கொடியிலிருந்து முல்லை பேசுவது போல, அந்தக் குமரி; “ஏனய்யா? இதற்குத்தானா கோவில் கட்டுகிறேன். குளம் வெட்டுகிறேன் என்று ஊரை ஏய்த்தாய்? கட்டுக் கட்டாக விபூதி, காலை மாலை குளியல் – கழுத்திலே உருத்திராட்சம் – கந்தா, முருகா என்று பூஜை! கல் உடைக்க வருபவளைக் கண்டால், கைபிடித்து, இழுப்பது, இதுதான் யோக்கியதையா? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே, உன்னுடைய வெளிவேஷத்தை நானும் நம்பினேனே! ஏதோ, வயிற்றுக்கில்லாத கொடுமையால் கூலி வேலை செய்ய வந்தேன். என்ன தைரியம் உனக்கு. வேலை செய்ய வந்தவளை வாடி என்று அழைக்க!” என்று கேட்டுவிட்டால்? செ! பிறகு இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டும் இருப்பதா? குளம் குட்டை தேட வேண்டியதுதான். ஆண்டவனே என் சபலம் போக ஒரு வழியும் இல்லையா?” என்று செட்டியார் சிந்திப்பார். சிவனாரைத் துதிப்பார். நாளாகவாக, காதல் தன்னைப் பித்தனாக்கிக் கொண்டு வருவதைத் தெரிந்து பயந்தார்.

ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள்.

“என்னாங்க உடம்புக்கு? ஒரு மாதிரி இருக்கறீங்க?”

“ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே!”

“ரொம்ப களைச்சாப்போலே இக்கறீங்க.”

“எனக்கென்ன களைப்பு! நான் என்ன, உன்போல வெயிலிலே வேலை செய்கிறேனா?”

“உங்களுக்கு ஏனுங்க. தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராஜா.”

“உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம்பிராயத்திலே சேற்றிலேயும், மண்ணிலேயும் இருக்க? குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்து விட்டா, கூலி வேலை ஏன் செய்யப் போறே? பிறகு.”

“வேடிக்கையாகப் பேசறீங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு.”

இப்படி ஏதாவது பேசுவாள் குமரி. மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால் வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும்போதும், ஒவ்வொரு வாசகமாகத் தன் நிலையை உணர்த்துவிக்கக் கூறி வந்தார். குமரி, செட்டியாரிடம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர்பார்த்தவளல்ல. ஆகவே, அவர் பேசினதன் உட்கருத்தை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லை.

ஒருமுறை செட்டியார், தன் சோக நிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்து பேச விரும்பிய குமரி.

“ஆமாங்க, எனக்குகூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை. யாரோ ஒரு துஷ்டமுண்டே. அவரைக் கெடுத்து விட்டாளாம்.”’ என்றாள்.

“குமரி! அந்தப் பெண்ணைத் திட்டாதே, பெண்கள் என்ன செய்வார்கள். அவன் அவள்மீது ஆசை கொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்?” என்று செட்டியார் தன் மருமகள் சார்பிலே ஆஜரானார்! மற்றோர் நாள் “உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க ஜாதியிலே பிறந்திருந்தா உன் தலையிலே மணல் வடையா இருக்கும்?” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஒருநாள், மார்வலிக்குத் தைலம் தடவும்படிச் சொன்னார். கொஞ்சம் கூச்சம்! இருந்தாலும் ‘கல்மிஷம்’ அற்ற மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ்சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்திருந்ததுபோலத் தன் அருகே உட்கார்ந்ததே இல்லை. அவள் கை, செட்டியாரின் மார்பிலே பட்டபோது, புளகாங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார். அவளுடைய ‘மூச்சு’ அவருக்குத் தென்றல் வீசுவது போலிருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு மார்வலி, மட்டுமில்லை, செட்டியாருக்குக் குளிர் ஜூரம் என்று குமரி எண்ணிக் கொண்டாள், அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. ஜூரம், ஆம்–ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை. ஆபத்து வேளை, ஆனால் தப்பித்துக் கொண்டார் செட்டியார். மீனா அங்கு வந்ததால், “மார்வலி தைலம் தடவினேன். ஜூரம் வரும் போலிருக்கு” என்றாள் குமரி. “பார்த்தாலே தெரியுதே” என்று பச்சைச் சிரிப்புடன் கூறிக்கொண்டே போய்விட்டாள் மீனா.

தைலம் பூசிக்கெண்ட பிறகு, செட்டியாரின் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந்தால், எந்த நேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ, வெறிமீறி என்ன விபரீதமான செயல் புரிந்துவிடும்படி நேரிட்டுவிடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங்கிருக்கக் கூடாது. இரண்டோர் நாட்கள், வெளியூர் போய் வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும் அவள் பின்தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடைவீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய் சில்க் சேலையின் நேர்த்தியை அருணாசலச் செட்டியார் வாடிக்கைக்காரருக்குக் கூறுகிறார். குழந்தைவேலச் செட்டியாரோ அந்தச் சேலையைக் கண்ட உடனே, அதைக் குமரிக்குக் கட்டி அழகு பார்க்கிறார்! அதாவது, அந்தச் சேலையைக் கட்டிக் கொண்டு குமரி, தன் எதிரில் நின்று காட்சி தருவது போலத் தோன்றுகிறது. செட்டியாருக்கு. எங்கே போனாலும் எதைக் கண்டாலும், விநாடிக்கு விநாடி அவள் வருகிறாள்; ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு படி அதிகரிக்கிறது அவருடைய ஆசை. பித்தம் பிடித்தவர் போல மீண்டும் மறையூர் வந்து சேர்ந்தார்.

செட்டியாரின் நிலையை மீனா நன்றாக உணர்ந்து கொண்டாள். சமயமறிந்து, செட்டியாரைத் தனியாகச் சந்தித்து, வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள். அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். பிறகு இல்லை என்று கூறிப் பார்த்தார். கடைசியில் கண்களில் மிரட்சியுடன், “ஆமாம்! எனக்கு அந்தப்பெண் மீது அமோகமான ஆசைதான். ஆனால்...” என்று பிச்சை கேட்பது போலப் பேசினார்.

“பயப்படாதீங்க செட்டியாரே! அந்தப் பெண் ஒரு மாதிரி. இந்த மாதிரி காரியத்துக்குத் தலைபோனாலும் ஒப்ப மாட்டாள்” என்றாள் மீனா.

“அது தெரிந்ததுதானே, நான் இப்படிப் பைத்தியம் பிடித்தது போலாகி விட்டேன்” என்று செட்டியார் கூறினார்.

‘அவள்’ சம்மதிக்கவே மாட்டாள். நாம்தான் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும் நாளை இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பி விடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்” என்றாள் மீனா. இஷ்ட தேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை. அனுப்பினார். மீனா ஏற்பாட்டின்படி, செட்டியாரிடம் வந்தாள். கச்சக்காய் அளவுக்கும் குறைவு. ஏதோ லேகியம், அதைக் கொடுத்தாள் செட்டியாரிடம். “குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத்தைத் தின்று விடும்படிச் செய்யுங்கள். பிறகு, அவள் உங்கள் பொருள். விடிஞ்ச பிறகுதானே சொக்கன் வருவான்” என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங்கும் கரத்திலேயே லேகிய உருண்டையை வாங்கிக் கொண்ட செட்டியார். “இது என்ன மருந்து? ஆபத்து கிடையாதே?” என்று கேட்டார். “இது என்ன மருந்து என்று நீங்கள் நளை காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே! நான் போய் குமரியை அனுப்புகிறேன். லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள் நீங்களே” என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள்.

அரை குறையாகக் கட்டப்பட்டிருந்த கோவிலிலேயே ஒரு சிறு அறை செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி, அவசரமாக ஓடி வந்தாள் கோவிலுக்கு. அறையிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ‘என்னாங்க உடம்புக்கு! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது. போய்ப் பாருடி! யாரையும் எழுப்பாதே, யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே” என்று கேட்டாள்.

செட்டியார், மீனாவின் தந்திரத்தைத் தெரிந்து கொண்டார்.

“ஆமாம் குமரி! மயக்கமாக இருந்தது, இப்போது இல்லை. மணி பத்து இருக்குமே! பாவம், நீ தனியாகவா இங்கு வந்தே?” என்று கேட்டார்.

“ஆமாங்க! மீனா சொன்னதும் எனக்கு வந்து பார்த்துவிட்டுப் போகணும்னு தோணவே, ஒரே ஓட்டமாக ஓடிவந்தேன். நான் போகிறேனுங்க” என்றாள் குமரி. செட்டியாருக்கு ஆபத்து என்ற உடனே ஓடிவந்துவிட்டாளே தவிர, அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், தனியாக அந்த நேரத்தில் அவருடன் இருப்பது சரியல்லவே என்று தோன்றிற்று.

“ஏன், இந்த வேளையிலே தனியாக இருக்க...”என்று செட்டியார் கேட்டு முடிப்பதற்குள், குமரி வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க, நாம்ப இங்கே களங்கமற்றுத்தான் இருக்கிறோம். ஆனா மத்ததுங்க அப்படி நினைக்காது பாருங்க” என்றாள். களங்கமற்ற நிலையில்தான் அவள் இருந்தாள். ஆனால் செட்டியாரின் மனநிலை அவளுக்குத் தெரியாது!

“வந்தாகிவிட்டது, குமரி! கொஞ்சம் அறையைச் சுத்தம் செய்” என்று கூறினார் செட்டியார். குமரி உடனே அந்தக் காரியத்தைச் செய்தாள். “செட்டியாரே! நெல் மூட்டைகளை ஏன் இங்கேயே போட்டிருக்கிறீர்கள்? எலிகள் அதிகமாகுமே?” என்று கேட்டுக்கொண்டே. மூட்டைகள் இருந்த இடத்தைச் சுத்தம் செய்தாள். எலிகளைக் காண வேண்டும் என்ற அவசரத்திலே செல்பவர் போலச் செட்டியார், மூட்டைகள் இருக்குமிடம் போனார். குமரி மீது உராய்ந்தபடி! அதிலே அவருக்கு ஓர் ஆனந்தம். அவள் கொஞ்சம் அஞ்சினாள். சுத்தமாகிவிட்ட பிறகு, வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டு நின்றாள். செட்டியார், “குமரி! இந்தா, உனக்குப் பரிசு! சாப்பிடு, ருசியாக இருக்கும். உடம்புக்கும் நல்லது” என்று கூறி லேகியத்தைக் கொடுத்தார்.

“என்னதுங்க அது? நாவப்பழமாட்டம்!” என்று கேட்டாள் குமரி, லேகியத்தைப் பணிவுடன் பெற்றுக்கொண்டு.

“அது மீனாட்சி பிரசாதம்” என்றார் அவர்.

“அப்படின்னா?” என்று குமரி கேட்டாள்.

“மீனாட்சி கோவிலில், சாமிக்குப் படைத்தது. சாப்பிடு, நல்லது” என்று கூறிவிட்டு, வேறு ஏதோ வேலையைக் கவனிக்கப் போகிறவர்போல அறைக்கு வெளியே சென்றார். குமரி, லேகியத்தைத் தின்றாள். சுவையாக இருந்தது. எப்போதும் அவள் கண்டதில்லை அதுபோல. லேகியத்தைத் தின்றுவிட்டு, செட்டியார் வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நெல்மூட்டைமீது சாய்ந்தபடி நின்றுகொண்டே அந்த அறையிலே இருந்த படங்களைப் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அந்த அறையிலிருந்து விளக்கு மிகப்பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் ஆச்சரியத்துடன், மறுபடி விளக்கைப் பார்த்தாள். ஒரு விளக்கல்ல, பல விளக்குகள் இருக்கக் கண்டாள்! எலி, மூட்டைகளிடையே ஓடக் கண்டாள். குனிந்து கோல் ஒன்றை எடுத்து விரட்டினாள். எலி ஒரு பக்கமிருந்து மற்றோர் பக்கம் ஓடிற்று. குமரி, “ஓடினா! விடுவேனா! அம்மாடி! எவ்வளவு சாமர்த்தியம்? ஆனா, இந்தக் குமரியிடமா நடக்கும்” என்று கூறிக்கொண்டே எலியை வேட்டையாடினாள். கடைசியில் எலி தப்பித்துக் கொண்டே ஓடிவிட்டது. “ஒரு சுண்டெலிக்கு எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா?” என்று கேட்டாள். யாரும் எதிரிலே இல்லை. ‘சே! யாரும் இல்லை. இங்கே யாரிடம் பேசுகிறோம்’ என்று நினைத்தாள். சிரிப்பு பொங்கிற்று; சிரித்தாள். மேலும் மேலும் சிரித்தாள். உரத்த குரலிலே சிரித்தாள். இடையிடையே பாடவுமானாள். அறை முழுவதும் ஜோதி மயமாக அவளுக்குத் தெரிந்தது. குதூகலம் ததும்பிப் பொங்கி வழிந்தது. ஆடை நெகிழ்வதையும் கூந்தல் சரிவதையும் கவனியாமல், சிரித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தாள். குமரியின் கண்கள், உருள ஆரம்பித்தன! தூக்கம் வருவது போன்ற உணர்ச்சி – கருமணி மேல் இரைப்பைக்குள்ளே போய் புகுந்து கொள்வதுபோல, மேலுக்குப் போகிறபடி இருந்தது. என்றுமில்லாத அசட்டுத்தனமான தைரியம்! லேகியம் அவளை ஆட்டி வைக்க ஆரம்பித்தது. வார்த்தைகள் குழைந்து குழைந்து வெளிவரத் தொடங்கின. செட்டியார், அந்தச் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தார்.
“குமரி!”

“செட்டியாரே!”

“ஏன் இப்படி இருக்கறே?”

“ஏன் செட்டியாரே, ஆடிக்கிட்டே இருக்கறே. ஆமாம், ஏன் இத்தனை விளக்கு?”

ஒரு சமயம் குமரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ, என்று செட்டியாருக்குத் திகில் உண்டாகிவிட்டது.

“குமரி உட்கார்.”

“எங்கே உட்காரவாம்?”

அங்கே இருந்த நாற்காலியிலே செட்டியார் உட்கார்ந்து கொண்டு “குமரி! இங்கே வா! இப்படி உட்கார்” என்று கொஞ்சினார்.

குமரி, “என்னா அது? ஏனய்யா, செட்டியாரே! விளையாட்டா செய்யறே?” என்று மிரட்டினாள். செட்டியார், லேகியம் குமரியின் புத்தியைக் கெடுத்துவிட்டது. அனால் அந்த நிலையிலும் அவளை இணங்க வைக்கவில்லை என்று நினைத்து மேலும் பயந்தார். மறுவிநாடி, குமரி கலகலவெனச் சிரித்தாள். செட்டியார் அருகே போய், அவருடைய முகவாய்க் கட்டையைப் பிடித்தாட்டி, ‘செட்டியாரே! செட்டியாரே!’ என்று ஏதோ பாடத் தொடங்கினாள். அதற்குமேல் செட்டியாரால் பயத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவும் முடியவில்லை. “கண்ணு! குமரி!” என்று கொஞ்சியபடி, அவளை அணைத்துக்கொண்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தார். இதழையும்...
“சே, கட்டேலே போறவனே?” என்று கூவிக்கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக்கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள இடறிக் கீழே விழுந்தாள். செட்டியார், அவளைத் தூக்கி நிறுத்தினார். அவள் துவண்டாள். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க்கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம் என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள்.

“கண்ணு!”

“ஏன், மூக்கு!”

“இதோ பார்!”

“மாட்டேன். போ.”

“ஒரே ஒரு முத்து.”

“வெவ்வெவ்வே.”

இன்ப விளையாட்டு! செட்டியார் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை விட, மிக ரம்மியமாகிவிட்டது.

செட்டியார் மடிமீது தலைவைத்து அவள் சாய்வாள்; செட்டியார், குனிந்து ஒரு முத்தம் தருவார்; தலையைப் பிடித்து அவள் ஓங்கிக் குட்டுவாள். பிறகு, திமிறிக்கொண்டு எழுந்திருப்பாள். செட்டியாரைப் பிடித்திழுத்துத் தன் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளச் சொல்வாள். செட்டியாருக்கு மூச்சுத் திணறும்படி முத்தங்கள் சொரிந்தாள். ஓர் ஆண்பிள்ளையின் பார்வை சற்று வேகமாகப் பாய்ந்தால் கோபிக்கும் குமரிக்கு, இவ்வளவு “சரசத் தன்மை” இருக்குமென்று செட்டியார் நினைத்ததில்லை! செட்டியாருடைய முழுக்கு, பூச்சு, பக்தி, பாராயணம், ஆச்சாரம், சனாதனம் ஆகியவற்றைக் கண்ட எவர்தான் நள்ளிரவில், அவர் கல் உடைக்க வந்த கன்னியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டும், கூந்தலைக் கோதிக்கொண்டும், காமுகக் குமரன்போல் ஆடிக் கிடக்கக் கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும். காலை முதல் வேலை செய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்க வேண்டியவள், ஓர் இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்க வேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தன்னுடைய வாலிபன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, ‘காதலாம், காதல்! ஜாதியைக் கெடுத்துக் கொள்வதா, குலம் நாசமாவதா, ஆச்சாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சினேகத்துக்காக?’ என்று கனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை, கூலி வேலை செய்ய வந்தவளை, நடுநிசியில் கட்டி முடியாத கோவிலில், ‘கண்ணே! மணியே!’ என்று கொஞ்சிக் கட்டித் தழுவிக் கொள்கிறார்! அதுவும், அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாகச் செய்து. செட்டியாருக்கு இவற்றை எண்ணிப் பார்க்க நேரமில்லை. அவருக்கு அளவில்லாத ஆனந்தம்! எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை, பூர்த்தியாயிற்றே என்ற சந்தோஷம்! இன்ப இரவு அவருக்கு.