அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

ஒளியூரில் ஓமகுண்டம்
2

சீன யாத்ரீகனான யுவான்சுவாங் கூட, இந்த நலந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பௌத்த மார்க்கம் பற்றிய பாடம் கேட்டுப் பெற்றான் என்றால், ஆத்திரம் எப்படியிருக்கும், ஆரியக் குருமார்களுக்கு?

எவ்வளவு அற்புத அற்புதமான லீலா விநோதங்கள் - பிரபாவங்கள் கொண்டதாக உள்ளன, நமது புராண இதிகாசங்கள்!

எத்துணை வாதத் திறமையுடன் கோர்க்கப்பட்டுள்ளன நமது சாஸ்திரங்கள்!

எத்தனை எத்தனை உட்பொருள்களை உள்ளடக்கியதாக நமது வேதங்கள் உள்ளன!

எவ்வளவு காலமாக இந்தப் பாரத்வர்ஷத்தில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் இந்து மார்க்கத்துக்கு ரட்சகர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆரியதாசராக இருப்பதைப் பெரும்பேறு என்று கருதும் சிரோன்மணிகளாக அல்லவா இருந்து வந்தனர்!

இவ்வளவு ‘மகிமை’ வாய்ந்த இந்து மார்க்கத்தைக் கற்றறிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு சீனனும் ஆவலைக் காட்டவில்லை; ‘பாடம்’ கற்றறிய சீனத்து யுவான்சுவாங் வருகிறானே! எவ்வளவு வேதனை தரும் செய்தி இது?

ஏதோ ஒரு மனக்குழப்பத்தால் மன்னன் மகனொருவன், தன் பொறுப்பை மறந்து, கடமையைத் துறந்து அரசபதவியில் இருந்து ‘சேவை’ செய்ய மனமின்றி, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, கண்டேன் பேருண்மையை! காணீர் பேரொளியை! கேண்மின் பெருநெறியை! என்று கூறுகிறானாம். இந்த மக்கள் நேற்றுவரை, கைகட்டி வாய்பொத்தி நம் எதிரே நின்று, காணிக்கை செலுத்தி அனுமதி பெற்று, நமது காலைக் கழுவி, நீரைப் பருகி, கதிமோட்சம் கிடைத்தது என்று கிடந்து வந்தனர். கண்ணா மணிவண்ணா! என்று கைத்தாளமிட்டுக் கூத்தாடி நின்றனர்; வேள்விக்கு உதவினர்; வேத பாடசாலைகள் கட்டினர். சமாராதனைக்குச் சம்பிரமமாக ஏற்பாடு செய்தனர், சர்வம் பிரம்மமயம் ஜெகத் என்ற சாஸ்திரத்தை ஏற்றுக் கொண்டு, சரணம்! சரணம்! என்று கூறிக் கிடந்தனர். அப்படிப்பட்டவர்கள், வேதம் வேண்டாம், பேதம் கூடாது, ஜாதி ஆகாது, ஆசையை அகற்று’ என்று கூறிடும் புத்தனிடம் தங்கள் புத்தியைப் பறி கொடுத்துவிட்டுக் கிடக்கின்றனரே! இவர்களுக்கு வந்துற்ற கெடுமதிக்கு என்ன காரணம்?

வைதீக மார்க்கத்தினர் இதுபோலெல்லாம் கேட்டனர்; கலகமூட்டினர்.

மாடங்களும், சிற்ப வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்டு அழகுற விளங்கின. அல்லியும் பிறவும் பூத்து அழகினைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்த அலங்காரக் குளங்கள் அணியாக அமைந்திருந்தன. ஒவ்வோர் துறைக்கும் தனித் தனிக் கட்டிடம் - ஒன்பது அடுக்கு மாடி ஒன்று ஓங்கி நின்று கொண்டிருந்தது, வளரும் புத்தமார்க்கத்தின் எழிலை விளக்குவதுபோல. இவ்வளவு சிறப்புடன் விளங்கிய நலந்தாவின் வளர்ச்சிக்காக மகத நாட்டு மாமன்னன் மானியமாக 200 கிராமங்கள் தந்திருந்தான். வங்கநாட்டு வேந்தனும் அது போன்ற மானியம்வழங்கினான்.

நலந்தாவில் புனித ஏடுகளைக் குருட்டுப் பாடமாகக் கொண்டு, பாமரரை மிரட்டுவதற்காக அவைகளை உரத்த குரலிலே உச்சரிக்கும் புரோகிதர்கள் தயாரிக்கப்படவில்லை - ஆய்வுரையாளர்கள் - அறநெறி பரப்புவோர் - அன்பு போதனை புரிவோர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர். ஜாதி பேதம் அறவே நீக்கப்பட்டது; பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்கேற்ற பக்குவம் உளதா என்று மட்டுமே பரிட்சை நடத்தினர் - குலம் என்ன, கோத்திரம் யாது? சிற்றரசனா, சீமான் மகனா? பேழையுடையானா, ஏழையா என்பதல்ல, அஙகு எடைபோட உதவிய படிக்கற்கள்! கற்றறிவாளனா, பற்றினை நீக்கிக் கொள்ளும் உளத்திண்மை உடையவனா, நற்பண்புகளின் கருப்பொருள் அவனிடம் உளதா - இவைகளைக் கண்டறிந்தே துவார பண்டிதர்கள், மாணவர்களைச் சேர்த்துக் கொண்டனர்.

இந்த மாபாவிகளின் கோட்டம், மண்மேடாகாதா! மகேசா! திரிபுரங்களையும் ஒரு நொடியில், ஒரு சிறு பொறியினால் சாம்பலாக்கிய சதாசிவமல்லவா, நீர்! திரிசூலி, நீ நினைததால் போதாதா இந்தத் தீயர்களைத் தீக்கிரையாக்க! மராமரம் துளைத்தவனே! ஜானகிராமா! அம்பொன்று எய்தால் போதுமே, இந்த அசுரக் கூட்டத்தினை அடியோடு அழித்திட! என்று திருவுள்ளம் இரங்குமோ? திருவருள் பாலிப்பது எந்நாளோ? என்று மனம் புழுங்கிய மறையவர் கூட்டம், மாரடித்து அழுதவண்ணம்மிருந்தது! நலந்தாவின் புகழோ ஆந்தையின் அலறலுக்கும், கோட்டானின் கதறலுக்கும் சட்டை செய்யாது, தண்ணொளி வீசிடும் வெண்ணிலவாகத் திகழ்ந்தது.

ரங்கராஜ பண்டிதரிடம், அவருடைய ‘பால்ய’ சினேகிதர் பராசரதாசர் வந்தார் - பார்த்து நீண்ட காலமாகி விட்டிருந்தது மட்டுமல்ல - பராசரதாசர், பராசரஸ்வாமிகளாகி விட்டிருந்தார் - ரிஷிக் கோலத்தில்! நாட்டின் நிலைமைகளை எல்லாம் எடுத்துப் பேசிக்கொண்டு வந்தனர், இருவரும். பராசரஸ்வாமிகள் சொன்னார். ‘பைத்தியக்காரா! முன்புபோல நலந்தாவில் அந்த நாசகாரர்கள் மட்டுமே அங்கு கொட்டமடித்துக் கொண்டில்லை. ஆரிய மார்க்கத்தினரும் மெத்தச் சிரமப்பட்டு இடம் பெற்றாகி விட்டது. இப்போது, மாற்றானின் கோட்டைக்குள்ளேயே நமது படை இருக்கிறது. ரங்கராஜா! எந்த நேரத்தில் எந்த முறையில் இதைச் சாதிப்பது என்பதைக் கண்டறிவதே என் வேலை. நலந்தாவில் வேத வகுப்புகள் நடத்தும் பொறுப்பு எனக்கு. அடிக்கடி விவாதங்கள், சச்சரவு, அமளி - ஆமாம் - இப்போது புத்தசாதுக்கள்பாடுதிண்டாட்டம்தான்! கைகலப்பு என்று வந்துவிட்டால், நம்முடைய ஆசாமிகளுடைய திறமைதான் மேலோங்கி நிற்கிறது.”

“அதெப்படி ஸ்வாமிகளே?”

“அது எப்படியா? அசடன் கேட்க வேண்டிய கேள்வியை இராமாயணம், மகாபாரதம் அனைத்தும் அறிந்த நீ கேட்கிறாயே! அங்கு ஆரியமதம் பயிலும் மாணவர்களெல்லாம், உண்மையிலேயே மாணவர்கள்தானா? ஐம்பது ஆட்களை எதிர்த்தடிக்கும் வல்லமைசாலிகள் இருக்கிறார்கள் - கையில் ஓலைச்சுவடி இருக்கும் பகலில்; இரவு நேரங்களில் கட்டாரி! ஆமாம்; கூரிய கட்டாரி! ஆரிய போதனைக்குச் செவி சாய்க்க மறுக்கும் சண்டாளர்களின் மார்பிலே கட்டாரி பாயும் - பிறகு முதலைகள்!! ரங்கராஜா! நிர்மூலமாக்குவதற்கான சகல யுத்த சன்னத்தமும் செய்தாகிவிட்டது.

இருவரின் பேச்சைக் குறுக்கே தடுக்கும் நிலையில் அங்குப் பூபதியார் வந்தார். “ஆரிய சிரேஷ்டரே! இவர் பாஞ்சசன்ய பூபதியார், என் நண்பர்; என் மகள் வாசமல்லிகாவை, இவர் திருக் குமரன் ராமப்பிரசாதனுக்கு ‘பாணிக்கிரகணம்’ செய்ய ஏற்பாடாகி இருக்கிறது” என்று பண்டிதர் சொன்னார்; ஒரு கணம் முகம் கருத்தது பராசர ஸ்வாமிகளுக்கு. மறுகணம் ஓர் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, மெத்தச் சந்தோஷம்! வணிகரே?” என்று கேட்டார். ஆமாம்! மண்டலம் பலவற்றிலே தொடர்பு... நலந்தாவுக்குக்கூட, பண்டகசாலைக்குத் தேவையான பொருள்
களை இவர்மூலம்தான் பெறுகிறார்கள்...” என்றார் பண்டிதர்.

“அதுதான் ஆர்ய தர்மம். நலந்தாவில் உள்ள நீசர்கள், நமது மதத்தை அழித்தொழிப்பவராக இருந்தாலும், அவர்கட்கு உதவி செய்வதுதான் ஆரியதர்மம்...” என்றார் பராசர ஸ்வாமிகள்.

“உண்மைதான்! மேலும், நலந்தாவில் உள்ளவர்கள், நீசர்களுமல்ல, இது விஷயமாகவே பண்டிதருடன் பேசவந்தேன். என் மனம் நலந்தாவில் இலயித்து விட்டது. ‘சொத்தில் பெரும் பகுதியை நலந்தாவுக்கே மானியமாக்கிவிட்டு குழந்தை வாசமல்லிகாவின் திருமணத்தையும் விரைவிலே முடித்துவிட்டு நலந்தாவுக்கே சென்று தங்கி ஊழியம் செய்து வாழ விரும்புகிறேன். குழந்தை என்னைப் பிரிய மனமின்றிச் சங்கடப்படுகிறது. என்றாலும், பெரியவர் பண்டிதர் இருக்கிறார் என்று தைரியம் கூறினேன்...” என்றார். பண்டிதரின் முகம் பயங்கரமாக மாறிவிடலாயிற்று. சிரமப்பட்டுச் சமாளித்துக் கொண்டார்.

பூபதியாரே! சொத்து முழுவதையும் நீர் தானமாகக் கொடுத்துவிட்டு, வாசமல்லிகாவை வெறுங்கையோடு என் இல்லம் அனுப்பினாலும், நான் கவலை கொள்ளமாட்டேன். ஆனால், தாங்கள் நலந்தா சென்று தங்குவது என்றால், அது நாங்கள் பாஷாண்டி மதத்தில் வீழ்ந்துவிட்டது போலத் தோன்றும் - அந்தக் களங்கம், எனக்குள்ள புகழ், என் குடும்பத்தின் கீர்த்தி இவற்றை கெடுத்துவிடும்...” என்றார்.

ரங்கராஜா! என்ன அவசரமான முடிவுக்கு வருகிறாய்? பூபதியார் நலந்தா சென்று ஊழியம் செய்வதாகச் சொன்னாரே தவிர, புத்த மார்க்கம் புகுந்துவிடுவதாகவா கூறினார்? அங்குதான் இப்போது ஆரிய மார்க்கமும் இருக்கிறதே - சேவை செய்வது என்றால், சகலமும் உணர்ந்த பூபதியார், ஆரிய சேவை செய்கிறார் என்பதுதானே பொருள். இப்போது, யாகம்கூட அங்கு நடத்தப்பட்டு வருகிறது. பூபதியார் போன்றவர்கள், ஆரியரின் புனித கைங்கரியத்துக்குத் தம்மாலான பேருதவி புரிந்துதான் வருகிறார்கள்” என்று பராசரஸ்வாமிகள், சாகசமாகப் பேசினார். பூபதியாரோ, “மன்னிக்க வேண்டும். நான் புத்த மார்க்கத்திடம் பற்றுக் கொண்டுவிட்டேன்” என்றார்.
“அப்படியானால் திருமணம்?” என்று ஆத்திரமாகக் கேட்டார் பண்டிதர்.

“விரைவில் நடத்திவிட்டுத்தான் நான் நலந்தா செல்வதாக உத்தேசம்.”

“திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டான், என் மகன் அவன் மகா உத்தமன் - நமது பூர்விக மதத்தில் நிரம்பப் பற்று கொண்டவன்...”

“வாசமல்லிகாவை அல்லவா அவன் திருமணம் செய்து கொள்ளப்போவது - என் நிலை பற்றிக் கவலை என்ன?”

பண்டிதரை, ஸவாமிகள் அதிகம் பேச இடமளிக்க வில்லை.

“தீர்க்காலோசனைக்குக் காலம் கொடு, பூபதியாரே! திடீரென்று தாக்காதீர்” என்று கூறி அனுப்பிவிட்டார்.

நலந்தா பிரச்சினை நந்தவனத்திலே, புயலையும், புனலையும், கனலையும் கிளப்பி விட்டது.

செல்வம் போய் விடுகிறதே என்பதுதான், தங்கள் தகப்பனாரின் கோபம், வருத்தம், வேறென்ன? என் அப்பா புத்த மதத்தில் சேர்ந்தால் இவருக்கு என்னவாம்! இவரையும் தங்களையுமா சேரச் சொல்கிறார் என் தகப்பனார்? அவருடைய மனச்சாந்திக்கான மார்கக்கத்தை அவர் தேடிக் கொள்கிறார் என்று வாசமல்லிகா வாதாட, “செல்வச் செருக்கு, உன்னைவிட்டு எப்படிப் போகும், மல்லிகா! கேவலம் சொத்துப் போய்விடுகிறதே என்று என் தகப்பனார் பதைப்பதாகக் கருதுகிறாய் - செல்வச் செருக்கல்லவா அதற்குக் காரணம்? அனாதி காலந்தொட்டு இருந்துவரும். மத மார்க்கத்தை இழித்தும் பழித்தும் பேசுபவருடன் எப்படி நாங்கள் உறவு கொள்ள முடியும்” என்று பேசுவான் பிரசாதன் கொதிப்பான பேச்சு - கோபமான பிரிவுகள் - இப்படி ஆகிவிட்டது நிலைமை.

கண்டதும் ஏற்படும் கனிவு - காதற்பேச்சிலே இருக்கும் கவர்ச்சி - இவை, குறையத் தலைப்பட்டன; மகிழ்ச்சி மங்கலாயிற்று.

“நேற்று முளைத்த ஒரு காளானுக்காக, நமது புர்வீக பாரி ஜாதத்தைக் காலால் மிதித்துக் துவைப்பவரை, அவர் யாராக இருப்பினும், நான் துச்சமாகத்தான் மதிப்பேன்.”

“அவரவரின் மனச்சாட்சிக்குத் தக்கபடி மார்க்க விஷயம் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்காதவர்களை நான் தூசுக்குச் சமமாகக்கூடக் கொள்ளமாட்டேன்.”

“நாவை அடக்கிப் பேசு! தந்தையைக் கேவலமாகப் பேசுவதைக் கேட்டுச் சகித்துக் கொள்ளம் மண்டூகமல்ல நான்.”

“மாவீரராகத்தான் இருங்களேன்... அதனால் உன்முன் மண்டியிட வேண்டுமா என்ன! உமக்கு உம்முடைய மதம், எவ்வளவு ஆபாசம் நிரம்பியதாக இருப்பினும் மேலானது; என் தந்தையும் அதே மதத்தில் நம்பிக்கை வைத்திருந்தவர்தானே! நவராத்திரி உற்சவ கைங்கரியமும் யாருடையதாம்! நாலுகால் மண்டபம் யார் கட்டியது? எத்தனை கோவில்களுக்குக் காணிக்கை கொடுத்திருக்கிறார். இப்போது அவர் மனத்தில், இந்த மதம் மோசமான கொள்கைகள் கொண்டது என்று தோன்றுகிறது. உடனே அவரைத் தொலைத்துவிடுவதுதான், உங்கள் தர்மமோ? என்னைக் காதலித்து வந்தீரா அல்லது என் தந்தையின் பேழையைக் காதலித்து வந்தீரா என்றுகூடத்தான், எனக்கே இப்போ சந்தேகம் ஏற்படுகிறது.”

“ச்சீ! துஷ்டை! துராத்மா! விலகிச் செல்!”

இவ்விதம் ஊடல், மோதுதலாகவே மாறலாயிற்று.

பூபதியார், நாளுக்கு நாள் அமைதியை அதிகமாக மேற் கொண்டவரானார், புத்தமத ஏடுகளைப் படிப்பதும் - ரசிப்பதும் - பொருள் விளங்காத போதெல்லாம் நலந்தா சென்று பாடம் பெறுவதுமாகவே காலங்கழித்து வந்தார் - வாணிபம் அறவே நின்றுவிட்டது.

“நேற்றுவரை இவரிடம் கணக்கு எழுதி வந்தவன், இன்னும் சில ஆண்டுகளிலே கோடீஸ்வரனாகப்போகிறான்” என்று கூறி வருந்தினான் பிரசாதனன்.

“தந்தையின் செல்வம் போய்விட்டால், என் இளமையும், அழகும் கூடவே போய்விடாது” என்றாள் மல்லிகா.

“அது ஏன் போகும்! என்னை மயக்க அது இருந்து கொண்டுதான் இருக்கும்” என்றான் பிரசாதன்.

“நான் மயக்குபவளா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படிப்பட்டவளிடம் உமக்கு ஏன் பாசம் - நேசம்?”

“பாழும் மனம் கேட்காததால்...”

“படுகுழி என்று தெரிந்து ஏன் விழவேண்டுமோ?”

“காதலுக்குக் கண் ஏது?”

“காதகனைக் கண்டறிய எனக்குக் கண் இருக்கிறது. இனி என்னைச் சந்திக்க, இந்தப் பொழிலுக்கு வரவேண்டாம்.”

“சந்திக்க வேண்டாம் என்று சொல்லு - பொழிலுக்கு வர வேண்டாமென்று சொல்ல நீ யார்?”

பொழிலுக்குப் போவதை வாசமல்லிகா நிறுத்திக் கொண்டாள்.

பராசர ஸ்வாமிகள் அடிக்கடி வந்துபோன வண்ணமிருந்தார்; ரங்கராஜ பண்டிதர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை; ஏதோ தீவிரமான சிந்தனையில் மூழ்கிக் கிடந்தார். மாதங்கள் உருண்டோடின.காதல் முறிந்தே விட்டதென்று ஊரார்பேசிக் கொண்டனர். உகுத்திடும் கண்ணீர், வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வாசமல்லிகா வெகு பாடுபட்டு வந்தாள். ஆனால், அதற்குள் இவற்றைக் கவனிக்கும் நிலையைக்கூடப் பூபதியார் தாண்டிவிட்டார். நலந்தாவுக்கு நாள் தவறாமல் எதையாவது ‘நன்கொடை’யாகத் தருவார்; வாசமல்லிகா முகம்கூடக் கோணுவதில்லை.

“மல்லிகா! நமது தொழுவத்தில் இருக்கிற பசுக்கள் - அதிகம் - அல்லவா?”
“ஆமாப்பா...”

“நலந்தாவுக்கு...?”

“அனுப்புங்களேன்... அங்கு உள்ளவர்களுக்கும் பயன் படும்...”

“அம்மா, மல்லிகா! மகர கண்டிகை விற்றுப் பணமாக்கி விட்டேன், நீதான் அதை இப்போதெல்லாம் அணிந்து கொள்வதில்லையே...”
“ஆமப்பா, எனக்கு அம்மாதிரி நகைகள் பிடிக்கவில்லை.”

“நலந்தாவுக்கு அனுப்பி விடுங்களப்பா...”

“அனுப்பிவிட்டதைச் சொல்லத்தான் வந்தேன், கண்ணே!”

“அப்பா, குளிர் காலத்தில் காஷ்மீர் கம்பளம், நல்ல தல்லவா?”

“ஆமாம், மகளே! உன்னிடம் ஓர் உயர்தரமான கம்பளம் உண்டே?”

“எனக்கல்லப்பா? எனக்கென்ன - வாலிபம்தானே! சதா சிந்தனையில் மூழ்கியிருக்கும் நலந்தா நல்லவர்களுக்குக் குளிரால், பாபம், எவ்வளவு கஷ்டமோ...”

“என்னம்மா செய்வது? கொடியவனெல்லாம் கோட்டையிலும், அரண்மனையிலும் தங்கி, கோடையிலே பூங் காற்றும், குளிர் காலத்தில் வெப்ப வசதியும் தேடிக் கொள்ள முடிகிறது. அவர்கள் என்ன செய்வார்கள் பாபம். ஆண்டிகள் தானே!”
“அதனால்தான், ஐயாயிரம் காஷ்மீர் சால்வைகளை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.”
“அருமை மகளே, என்ன மேலான எண்ணம் உனக்கு.

இவ்விதம், தந்தையுடன் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்துவிட்டாள் மல்லிகா.

ஆண்டு மூன்றாயிற்று! எந்த ஆரணங்கும், ராமப்பிரசாதன் கண்வழி நுழைந்து நெஞ்சில் பதியவில்லை - அவனுடைய செவியில், எத்தனையோ சீமாட்டிகளைப் பற்றிப் போட்டு வைத்தார், பண்டிதர்; பணம் இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையில் இருந்தான் பிரசாதன்; ஆனால் தன் தகப்பனாரை, மல்லிகாவே துச்சமாக மதிக்கிறாள் என்று எண்ணிக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை. மல்லிகா இல்லாத நேரத்திலெல்லாம், மலர்வனம் செல்வான்; அவளை எண்ணிக் கொள்வான்; அவளுக்காக ஏறிக் கனிபறித்த மரங்களைக் கட்டித் தழுவிக் கொள்வான்; அவள் பொருட்டு பயிரிட்ட மலர்ச் செடிகளுக்குக் கண்ணீரை ஊற்றுவான் - பித்தம் பிடித்தவன் போலானான்.

“பிரசாதா! நாம் இருவருமே பெருந்தவறு செய்து விட்டோம்...” என்கிறார் பண்டிதர் ஒரு நாள்.
ராமப்பிரசாதன் திகைத்துப் போனான்.

“அந்தப் பெண்ணை நேற்று பார்த்தேன் - எலும்பும் தோலுமாக இருக்கிறாள்” என்றார்.

“ஆமாப்பா! அதனால்தான் அவர்கள் ஆறு கிராமத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று தெரிந்ததும், நான் அந்தச் சம்பந்தம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன்.”

‘ஓஹோ! நான் ஒயிலூர் சீமான் மகளைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக் கொண்டாயோ! நான் பாபம், வாச மல்லிகாவைப் பற்றி அல்லவா கூறுகிறேன். உன் நினைவே அவளைச் சித்திரவதை செய்கிறது. நீ மட்டுமென்ன, துரும்பாகி விட்டாய். நான் ஏன் இந்தப் பாபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஸ்வாமிகளும், காதலருக்குத் தடையாக இருப்பது, எல்லாப் பாபத்திலும் கொடியது என்கிறார். ஆகையால்...”

“ஆகையால் என்னப்பா?”

“நாளைக்கே சென்று பூபதியாரிடம் குழந்தைகளின் மனோபீஷ்டம் நிறைவேறட்டும் என்று கூறிவிடப் போகிறேன்.”

“அப்பா...”
“அன்பே!”

ஆரூயிரே!

எனக்குத் தெரியும்,
எத்தனை நாட்கள்?

எங்கே ஒளிந்திருந்தது இந்தக் காதல்?

நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தக் கனிரசம்?

இவை மீண்டும்! மீண்டும் மலர்ச்சோலையில் மணம், நீரோடையில் சிரிப்பொலி, மாலை வேளைகளில் மதுரகீதம், களி நடனம் புரியலாயிற்று. மதகு திறந்ததும் பாய்ந்தோடும் வெள்ளம்போல் காதல் பெருக்கெடுத்தது!

“மகிழ்ச்சி, மகளே! அவரும் அறிவாளி; அவனும் மண்பாளன். ஏதோ இடையில் சிறிது காலம் அவர்களுக்கு ஒரு வகைக் கசப்பு இருந்தது. உன் தூய்மையான காதல் வெற்றி பெற்றுவிட்டது. இனி, எனக்கு நிம்மதிதான்.” என்றார் பூபதியார்.

“இதற்குள் நிம்மதி எப்படி அப்பா ஏற்பட்டுவிடும். பதினாயிரம் தூண்களும் தயாராக வேண்டாமோ?” என்று மல்லிகா கேட்டாள்.

நலந்தாவுக்குப் புதுக்கூடம் அமைக்கும் பணியில், அப்போது பூபதியார் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பதினாயிரம் செம்மரத் தூண்கள் சித்திர வேலைப்பாடுடன் தயாராகிக் கொண்
டிருந்தன. அவற்றைச் செய்வதிலேயே, மகிழ்ச்சி ஊற்றெடுத்தது பூபதியாருக்கு; பண்டிதர் பகையை நீக்கிக் கொண்டது மேலும் மகிழ்ச்சி அளித்தது.
பண்டிதர் அடிக்கடி சென்று, செம்மரத் தூண்களின் அழகினைக் காண்பார்!

நிலவொளியில் பார்க்கும்போது நேத்திரானந்தமாக இருக்கிறது என்பார்.

பூபதியாருக்கு, பண்டிதர் மேலான குணம் கொண்டார் என்பதால், பூரிப்பு; பெருமையுங்கூட.

செம்மரத் தூண்கள் நலந்தா போய்ச் சேர்ந்துவிட்டன! அவற்றை அமைப்பதற்கான, சிற்பிகள் புறப்பட்டனர். தன் ‘சேவை’யின் பூர்த்தியை எண்ணி, பூபதியார் களிப்புற்றிருந்தார்.

“செம்மரச் சிங்காரக்கூடம் அமைந்து, அதிலே ‘சீலம்’ குறித்து, சிறப்புரை நிகழ்ந்தானதும் திருமணம் என்று கூறப்பட்டதால், ஒவ்வொரு தூண் முடிவதும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டிற்று. காதலருக்கு.

“நாளையோடு தீர்ந்தது; நாசகாலர்கள் ஒழிவார்கள்.”

பிரசாதன், இந்தப் பேச்சுக் கேட்டதும், திடுக்கிட்டுப் போனான். ஸ்வாமிகள் அல்லவா பேசுகிறார்! உற்றுக் கேட்டிலானான்.

“ரங்கராஜா! நீ ஆரிய மார்க்கத்துக்குச் செய்துள்ள சேவை, மகத்தானது. மனு மாந்தாதா காலத்திலே ஆரியம் செழித்தது - இப்போது அழிய இருந்த ஆரிய மார்க்கத்தைக் காப்பாற்றும் பெரும்பாக்கியம் உன்னைச் சேர்ந்தது. உத்தமனே! உன்னை நண்பனாக அடையப்பெற்ற நானே பாக்கியசாலி!”

“என்னால் என்ன ஸ்வாமி! எல்லாம் தாங்கள் காட்டிய வழி நடந்தேன்; இட்ட கட்டளையை நிறைவேற்றினேன். என்னால் என்ன சாதிக்க முடியும்?”

“உன்னால் என்ன சாதிக்க முடியும் என்றா கேட்கிறாய்? நலந்தா வெந்து சாம்பலாகப் போகிறதே நாளைக்கு, யாரால்? உன் கைங்கரியமல்லவா இது? தூள் தூளாகப் போகிறது. அவர்கள் கட்டி வைத்துள்ள மாடங்களும், கூடங்களும்! நலந்தாவிலே கிளம்பப் போகும் ‘ஜ்வாலை’ நெடுந்தொலைவு தெரியும் - நெடுந்தொலைவு கற்கள் பிளந்து நாலா பக்கமும் பறக்கும்; கட்டிடங்கள், சடசடனெச் சரியும்...”

“ஸ்வாமி! அந்தப் புத்தகப் பண்டாரங்கள்...”

“அவர்களா? ஆரியத்தை அழித்தொழிக்க முனைந்த அந்த அசுரர்களா? கட்டிடத்தின் அடியிலே சிக்குண்டு சிலர், நெருப்பிலே பலர், இடிபாட்டுக்கடியிலே சிலர் - இப்படிச் செத்துத் தொலைவார்கள். பிணக்குவியல்! நலந்தா, புத்த மதத்தாரின் பாசறை என்றார்களே - சுடுகாடு ஆகப்போகிறது, நாளைக்கு.