அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

ஒளியூரில் ஓமகுண்டம்
3

உத்தமனே! எல்லாச் செம்மரத் தூண்களிலும் நான் கொடுத்த ‘பொடி’ சேர்த்து விட்டாயல்லவா, தவறாமல்?”

“ஒவ்வொன்றிலும் - தாங்கள் சொன்ன அளவு! ஒவ்வொரு நாளும் அடிமடி நிறையக் கட்டிக்கொண்டு போயல்லவா, தூண்களின் துவாரத்தில் தூவிவிட்டு வந்தேன்.”

“அவனுக்குத் துளியும் சந்தேகம் எழவில்லையே...?”

“ஏமாளிதானே! என் மகன், வாசமல்லிகாவுடன் காதல் நாடகமாடினானே, அதைக் கண்டே நம்பி விட்டான்.”

“ராமப்பிரசாதன் அறிவானோ?”

“இல்லை, ஸ்வாமிகளே! சிறுவன், மேலும் இளகிய மனம்! இந்தக் காரியத்தை அவன் சதி, சண்டாளத்தனம், கொலை பாதகம் என்று எண்ணிக் கொள்வான். என் சொல்லையும் மீறுவான். நமது இரகசிய ஏற்பாடு அவனுக்குத் துளியும் தெரியாது... அப்படி நடந்து கொண்டேன்.”

“ஒரு மண்டலாதிபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பம் உனக்கு இருக்கிறது ரங்கராஜா. உம்! இருக்கட்டும். நீயே ஒரு மண்டலாதிபதியாக முடியாதா என்ன? ஐயன், நீ செய்துள்ள சேவைக்கு அருள் பாலித்தாகவேண்டும்...”

“ஸ்வாமி! யாகக் குண்டத்து நெருப்பு, செம்மரத் தூண் களிலே பாய்ந்து, செம்மரத் தூண்களிலே உள்ள ‘அரக்குப் பொடி’யினால் நாசம், வெள்ளம் போலப் பாயும்... அதிலே ஏதும் தங்கு தடையிராதே...?”

“ஒரு துளியும் இல்லை. நிச்சயமாக, நாளைய தினம் நலந்தா சர்வ நாசத்தில் சிக்கப் போகிறது. அதனாலேயே நானும், மற்றும் சில ஆரியோத்தமர்களும் வெளியேறி விட்டோம்.”
“பாவிகளா!” என்று தன்னையும் மீறிக் கூச்சலிட்டு விட்டான், ராமப்பிரசாதன்.
‘மல்லிகா! மல்லிகா!’ என்று அலறினான் - ஓடினான் நிசப்தமாய் இருந்த வீதிகளில் வழியே அவன்.

நலந்தாவுக்குத் தீ வைக்கிறார்கள்!
நலந்தாவுக்கு நாசம் விளைவிக்கிறார்கள்!
நாளைய தினம் நலந்தாவின் படுகொலை!
வாசமல்லிகா!
நலந்தா!
நலந்தா!

கதறுகிறான் ராமப்பிரசாதன். மக்கள் நடுநிசிக் கூச்சல் கேட்டு பதைத்தெழுந்து வந்தனர்.
வாசமல்லிகா, மாளிகையில் இல்லை! தந்தையுடன், நலந்தா புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள் என்று காவலாளி சொன்னான். ஐயோ! என்று பயங்கரமாகக் கூச்சலுடன் ஓடினான். அவர்கள் சென்ற திக்குநோக்கி.

விரட்டிக்கொண்டோடினர். பண்டிதரும் ஸ்வாமிகளும்!

“விடாதே, பிடி! விடாதே, பிடி!” என்று கூவினர்.

சிலர் பிடிக்க முற்சித்தபோது, ராமப்பிரசாதன், பாதையில் கிடந்த பெருங்கற்களை அவர்கள் மீது வீசினான் - பற்களை நறநறவெனக் கடித்தான் “தொட்டால் பிணமாவீர்கள்! பாவிகளே! அங்கே அறிவாளர்கள், அறநெறி அறிந்தோர், புத்தனின் பொன்மொழியை உலகுக்கு அளிக்கும் உத்தமர்கள் படுகொலை செய்யப்படச் சதி நடந்துவிட்டது; நலந்தாவுக்குத் தீ மூட்டப் போகிறார்கள். உடனே தடுத்தாக வேண்டும் - தொடாதே - கிட்டே வராதே.” என்று கூவியபடி ஓடினான். தடுக்க வந்தான் ஒரு குதிரை வீரன் - அவனைக் குப்புறக் கீழே தள்ளி விட்டான் - குதிரை மீதமர்ந்தான் - சிட்டாகப்பறந்தது பரி.

நலந்தாவுக்குப் போகும் பாதை.

அந்த அறிவாலயம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார், பூபதியார், மகளுடன்; நாலு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில்.

அதோ, தெரிகிறது - தொலைவில் குதிரையின் குடல் அறுந்துவிடும் வேகத்தில் செலுத்துகிறான்.
மல்லிகா!

மல்லிகா!

வண்டியில், பாதித் தூக்கத்தில் இருந்த மல்லிகாவுக்கு, இன்பம் கனவு போலிருக்கிறது, அந்தக் குரலொலி.

பூபதியார் வண்டியை நிறுத்தச் சொன்னார்; கீழே இறங்கி நின்றார்; வாச மல்லிகா விழித்துக் கொண்டு கொள்ளைக்காரனோ என்ற பயத்துடன் பார்த்தாள்.

குதிரை நின்றது; கடிவாளம் அறுந்தது.

“ஐயனே! என்னை மன்னித்தருளும்” என்று பூபதி யார் பாதத்தில் வீழ்ந்தான் ராமப்பிரசாதன்.
“என்ன இது? மகனே எழுந்திரு...”

“ஐயோ! நலந்தாவுக்குத் தீமூட்ட, சதி நடந்திருக்கிறது. சதிகாரன் என்னைப் பெற்ற மாபாவி! சடைமுடி தரித்த சண்டாளனுக்குத் துணை - உடந்தை.”

“நலந்தாவுக்குத் தீ! என்ன ராமப்பிரசாத்! மன்மருட்சியில் பேசுகிறாயா?”

“இல்லை ஐயனே, இல்லை! ஆரிய வஞ்சகர்கள், அந்த அறிவாலயத்தை அழித்துவிடவும், அதிலுள்ள புத்த சாதுக்களைச் சாகடிக்கவும், நாளையதினம், நலந்தாவைக் கொளுத்திவிடச் சதி செய்துவிட்டார்கள். நீங்கள் அனுப்பியிருக்கிற செம்மரத் தூண்களிலே இந்த அழிவுக்கான அரக்குப்பொடி அடைக்கப்பட்டிருக்கிறது.
பூபதியார் பதைத்தார் - தலை தலை என்று அடித்துக் கொண்டார்.

வண்டி கிளம்பிற்று. நலந்தாவைக் நோக்கி. மாடுகளுக்குத் தெரியுமா, நடைபெறப் போகும் ‘நீசத்தனம்’ இப்படிப்பட்டது என்று!

குதிரை வீரர்கள் பத்துப்பேர் ‘ஸ்வாமிகளின்’ ஆட்கள் வந்து கொண்டிருந்தனர் ராமப்பிரசாதனைப் பிடித்திட.

மாட்டு வண்டிக்கும் குதிரைகளுக்கும் போட்டி. முடிவு என்னவாகியிருக்க முடியும்?

வண்டியைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

“ராமப்பிரசாத்! நான் இவர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறேன் - வண்டிக்காரனும் துணை இருக்கிறான் - நீ, மல்லிகாவுடன்...” என்றார் பூபதியார்.

“இந்தக் கொலைபாதகர்களிடம் தாங்கள் சிக்கிக் கொள்வதைப் பார்த்த பிறகா...” என்றான் பிரசாத்.
“அங்கே, நலந்தாவில் ஆயிரக்கணக்கானவர்கள், தம்பி அவர்கள் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு ஆற்ற வேண்டிய தொண்டு, மிகத் தேவையானது... எனக்கென்ன இன்னும் வாழ்வு...”

“ஐயனே, ஐயனே.”
* * *

“கீழே இறங்குங்கள் மரியாதையாக... உயிர் தப்ப வேண்டுமானால்” என்று கொக்கரித்தனர் முரடர்கள்.

கை கலப்பு மூண்டுவிட்டது - வாட்கள் சுழன்றன - தடிகள் நொறுங்கின - மாடுகள் மிரண்டன - வண்டி உருண்டது - சக்கரத்தில் சிக்குண்ட மல்லிகா, கதறக்கூட இல்லை.

எதிர்ப்புறமிருந்து, பெரிய நெருப்பு ஜ்வாலை பார்த்தார், பூபதியார் - ‘ஐயோ, என்னாலே என் ஏமாளித்தனத்தாலே ஏற்பட்டதே பெரும் ‘அழிவு’ என்று கதறினார்.

காதுகøப் பிய்த்துக் கொண்டு போகும் சத்தம் - ஜ்வாலை மேலே, மேலே எழும்பிற்று. நலந்தா நாசமாகிக் கொண்டிருக் கிறது - இங்கே மூவரும், குற்றுயிராகக் கிடக்கின்றனர்.
“பஸ்பமாகிவிட்டதா! ஒழிந்தார்கள். நலந்தா அழிந்த பிறகு இதுகளுக்கு நாதி ஏது” என்று கோரச் சிரிப்புடன் கூவினார் ஸ்வாமிகள்.

“தங்கள் மகன்...” என்று கூறிக் கண்ணீர் சிந்தினான், யரோ ஒருவன்.

“ஆரிய மார்க்கம் பிழைத்தது; பண்டிதரே, உம்மாலே நலந்தா அழிந்தது. மலைமலையாகக் குவித்து வைத்திருந்த ஏடுகள் பிடி சாம்பலாகி இருக்கும். எந்த மன்றத்தில் அமர்ந்து அவர்கள் தமது மார்க்கத்தைப் போதித்து வந்தனரோ, அங்கேயே, பிணம் - பிணமா - வெந்து கருகிச் சாம்பலாயினர்’ என்று பேய்ச்சிரிப்புடன் கூவினார் ஸ்வாமிகள்.

“என் மகன் இறந்துவிட்டானாம், சுவாமி” என்று கதறினார் பண்டிதர்.

“பகவத் சங்கற்பம், பண்டிதரே! பதினாயிரம் வராகன் உமக்கு முதல் தவணையாகத் தருகிறேன்” என்றான் கல்னெஞ்சக்காரன்.

“பாவி” என்று பண்டிதர் பதைத்துக் கதறிக் கொண்டே, ஸ்வாமிகளைத் தாக்கினார்.

“மகன் இறந்தானாம் - இவனுக்கு அதனால் மனக் குழப்பம் - பிடித்துக் கட்டிப் போடுங்கள்” என்று கட்டளை பிறப்பித்தான் காதகன்.

(திராவிட நாடு - 1956)