அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பவழ பஸ்பம்
2

மார்க்கத்தைக் கெடுப்பவர்களை விசாரித்துத்தண்டனை அளிப்பதற்காக நிறுவப்பட்ட தனி விசாரணைக் கூடத் தலைவன் தானப்பனின், படுக்கை அறைப்பதிகம் மேலே இருப்பது. வெண்ணிலாவுக்காக, தானப்பன் பதிகம் பொழிந்தான், அவள் அதற்கேற்ப அபிநய விருந்தளித்தாள். நவகோடியார் தப்புவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ஒளி நிரம்பிற்று, அறையிலும் வெண்ணிலாவின் மனத்திலும்.
* * *

நவகோடியாரைக் காப்பாற்றுவது மட்டுமா, சிறையிலே உள்ளவர்கள் அனைவரையும் விடுவிக்கவும் செய்யலாம், வெண்ணிலாவுக்காக, என்றுதான் தானப்பன் எண்ணினான், அவள் மகிழ்வளித்தபோது. கதிரவன் கிளம்பினான், அவன் மனத்திலேயும் புது எண்ணம் உண்டாயிற்று. பொருளும் தட்டிப் பறித்தாக வேண்டும் என்று திட்டமிட்டான். நவகோடி வருவான் என்பது தெரியும், வெண்ணிலா, உருத்திராட்ச மாலையை அறுத்தபடி, அதைத்தானே அவனிடம், முன்னாள் இரவு சொன்னாள். மறந்துவிடவா முடியும்!

“புத்தமதத்தைப் புகுத்த அல்லவா சதி செய்கிறார்கள். இரக்கம் காட்டலாகாது இந்தத் தீயவர்களிடம் - திருநெறியை ஒழிக்கத் திட்டமிடுகிறார்கள்.”

“ஏழை எளியவர்களை எப்படியோ மயக்கிவிட்டார்கள்”

“இல்லாதவனிடம் ஆத்திர மூட்டினால் எதையும் செய்வானல்லவா!”

“ஒரு பிரபல வியாபாரியின் மனைவியும் இதிலே சேர்ந்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது”

“மன்னன் சீற்றத்துடன் இருக்கிறான்.”

தானப்பன், அடுத்த தானப்பனுடன் உரையாடல் நடத்துகிறான், வெண்ணிலாவின் ஏற்பாட்டின்படி, நவகோடியார் வருகிறார் காலடி வீழ்கிறார்.

“ஐயனே! என்னைக் காப்பாற்றக் கோருகிறேன். என் மனைவி... மகாபாபி...”

“பதறாதே அப்பா பதறாதே! என்ன செய்யலாம். உன் தீவினை அவள் உருவில்!”

“எப்படியாவது அவளை மீட்டாக வேண்டும். அவளுக்காக அல்ல. என் மனைவி இப்படிப்பட்டவள் என்று தெரிந்தால் என் மானம் போகும், வியாபாரம் நாசமாகும்.”

“உண்மைதான். சொத்தும் பறிமுதலாகக்கூடும்”

“ஆமாம் அரசன் கடுங்கோபத்துடன் இருக்கிறார் அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தால் கோபம் வராமலிருக்குமா”

“மன்னன் கோபிப்பது மணிமுடி பறிபோகுமோ என்பதற்காக அல்ல. மதம் - நமது மதம் - புராதன மார்க்கம் - வேதநெறி - இதை நாசம் செய்ய ஒருகூட்டம் கிளம்பி இருக்கிறதே என்ற கோபம்தான்”

“தாங்கள்தான் நல்வழி காட்டவேண்டும்”

“நேற்றிரவு வெண்ணிலா ஒளியுடன் இருந்த நேரம், நான் இதுகுறித்து யோசித்தவண்ணமிருந்தேன். நவகோடியாரே! சதிபுரியும் ஒரு பெண்ணை ஏனய்யா துணைவியாகக் கொண்டீர். உமது கண்களை மறைக்கும் அழகியோ அவள்! எவ்வளவு அழகு இருந்தாலும், என்னய்யா! மதத்தை நாசமாக்குபவளிடம் மையல் கொள்ளலாமா!”

“அவளைக் கண்டால், யாரும், சதிகாரி என்று கூறமுடியாது ஐயனே!”

“முகம் நிலவு என்றே வைத்துக்கொள்ளுமய்யா, பொற்கொடி, பூங்கொடி! என்றுகூடப் புகழ்ந்து கூறத்தக்கவள் என்றே வைத்துக்கொள் - அதற்காக - ஒரு பெண்ணின் பிரேமைக்காக, மார்க்கத்தை இழப்பதா”

“நான் அவளை இழக்கச் சம்மதித்தேனே... முன்னால் இருந்த தொடர்பல்லவா, இன்று ஆபத்தாக உருவெடுக்கிறது.”

“ஏதாகிலும் செய்ய இயலுமா என்று யோசிக்கிறேன். இவ்வளவு ஆபத்தும் வந்திராது. உன் போன்றவர்கள் சரியாக நடந்துகொண்டிருந்தால். மடம்கட்ட, மகேஸ்வர பூஜைசெய்ய, பணம் கேட்கும்போது கையை விரித்து விடுகிறீர்கள்.”

“காணிக்கை தரச் சித்தமாக இருக்கிறேன்... மருதவல்லியைக் குற்றமற்றவள் என்று கூறிவிட்டால் போதும்.”

“பெயர் மருதவல்லியா! அழகான பெயர். வணிகரே! உமக்கு என்ன வயதாகிறது, அறுபது இராது?”
“ஐம்பது முடிந்தது - கவலையால் முதுமை தெரிகிறது.”

“இந்த மருதம் இருபதாண்டுப் பெண்ணாமே...”

“ஏறக்குறைய முப்பது இருக்கும்...”

“சரி! மருதம், சித்தசுவாதீனமற்றவள் என்று கூறிவிடுகிறேன் - மருத்துவருடைய வாக்குமூலமும் கிடைக்கச் செய்கிறேன்- விடுதலை கிடைத்துவிடும் - விவரமாக நான் ஏதும் கூறத்தேவையில்லை என்று கருதுகிறேன் - வில்வ பூசைக்காக, ஒரு சிறு கிராமத்தைத் தானமாகத் தந்தால் போதும்”

“கட்டளைப்படி நடந்து கொள்கிறேன்”
* * *

வெண்ணிலாவின் விருந்தும் சீமானின் காணிக்கையும் பலனளித்தது; சிறைக்கூட அதிகாரியிடம், நவகோடியார், தானப்பன் தந்த தாக்கீதையும் மருத்துவர் தந்த ஓலையையும் எடுத்துக்கொண்டு சென்றார்.

“ஒஹோ! அப்படியா? நானே சந்தேகப்பட்டேன்” என்றான் சிறைக்கூடத்தலைவன்.

“வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தேன் வெகு காலமாக” என்றான் வணிகன்.

விடுதலைக்கு உத்தரவிட்டான் - விழுந்து விழுந்து சிரித்தாள் மருதவல்லி.

“பைத்தியமா! எனக்கா! யார், என் கணவரா கூறினார்? உண்மைதானய்யா, உண்மைதான்! பலமுறை, பைத்தியக்காரி நமக்கு என்ன குறை, மாளிகை இருக்கிறது மனோராமாக, செல்வம் இருக்கிறது ஏராளமாக, ஆனந்தமாக அனுபவிப்பதைவிட்டு, ஊர்த்தொல்லையை உன்மேல் போட்டுக்கொண்டு அவதிப்படுகிறாயே, இதுஎன்ன பைத்யக்காரத்தனம் என்று அவர் கூறியிருக்கிறார். பைத்தியமய்யா, எனக்கு, பைத்தியம்! உல்லாச ஓடம் கொந்தளிக்கும் கடலிலே செல்லக் காண்கிறேன். ஓடத்திலே, பார்வை பழுதான பணந்தேடிகள் கூத்தாடக் காண்கிறேன், குழப்பம், பீதி, ஏற்படத்தானே செய்யும்!” என்று மருதவல்லி கூறக்கேட்ட, சிறைக்கூடத்தின் தலைவன், பரிதாபப் பட்டான், பித்தம் முற்றிவிட்டது என்று எண்ணிக்கொண்டு மாளிகைக்கு அழைத்துச் சென்றான் நவகோடி. வெண்ணிலாவின் விழி, மருதத்தை ஓராயிரம் கேள்வி கேட்டது. மருதவல்லியின் சிரிப்பின் பொருள் அவளுக்கு விளங்கவில்லை!

“பெயர், வெண்ணிலாவா! அழகான பெயர். அவருக்கு உன்னிடம் நிரம்ப ஆசையா? இருக்கும், இருக்கும். ஆவலைக் கிளறும் விழிதான் உனக்கு. வெண்ணிலா! நான் அவருக்கு ஏற்றவளாக முடியாமற் போய்விட்டது. உன்னால் அவருக்கு அந்தக் குறை தீரட்டும்” என்று மருதவல்லி சொல்ல, வெண்ணிலாவுக்கு இலேசாகப்பயமே உண்டாயிற்று. மன்னனின் கோபத்தைத் தடுக்கத் தந்திரமாக, மருதவல்லிக்குப் பைத்தியம் என்று கூறச்செய்தோம், பார்க்கப்போனால், இவளுக்கு உண்மையாகவே பைத்தியம் போல அல்லவா இருக்கிறது என்று எண்ணித் திகிலடைந்தாள்.
* * *

நீண்ட நாட்கள் மருதவல்லியை மாளிகையில் அடைத்துவைக்க முடியவில்லை. வெண்ணிலாவுக்கு வேறோர் பயமும் புகுந்துவிட்டது. மருதவல்லியை மீண்டும் நவகோடி விரும்ப ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம், எனவே, மருதவல்லியை விரட்டத் திட்டமிட்டாள். இதற்குள் கவிராயர் வந்து சேர்ந்தார், சேதியைக் கேள்விப்பட்டு. தந்தையும் மகளும் மீண்டும் மாளிகையை விட்டுக்கிளம்பினர்.

“மேனி வாடி வதங்கிவிட்டது மகளே!”

“மனம் வளமாகிவிட்டதப்பா”

“கறுத்துப்போய்விட்டிருக்கிறாய் கண்ணே!”

“உடல்தானே! உள்ளத்திலே புதிய ஒளி இருக்கிறதப்பா இப்போது”

தந்தையும் மகளும், கவலையற்றுப் பேசுகிறார்கள் - மாளிகையை இழந்தோம், இன்ப வாழ்வு இழந்தோம் என்பது பற்றிய கவலையற்று.
* * *

“என்னங்க! புரட்சி எப்ப வருதுங்க. இந்த ஆடியிலேயா வது வரும்ங்களா?” என்று கேலி பேசுகிறார்கள் பேதைகள்.
“டேய்! அதோ, கிழவன் கைத்தடியைப் பார்த்திங்களா! மந்திரக் கோலடா அது, மந்திரக்கோல்” என்று ஏளனம் செய்கிறான் ஒரு காலி.

மருதவல்லி சிரிக்கிறாள். “அப்பா! இவ்வளவு பேர்களையும் குணப்படுத்தவேண்டும். வேலை நிரம்ப இருக்கிறது, ஓயாமல் உழைத்தாக வேண்டும்” என்று கூறுகிறாள்.
* * *

ஓயாமல் உழைக்கிறார்கள் இருவரும், திக்கற்றோருக்கு உதவி புரிகிறார்கள், கலனான ஒரு கோவிலில் குடிஏறி, அங்கு கூன், குருடு, செவிடு, ஊமை, கைகால் இழந்தவர் ஆகியோரைத் தங்கவைத்து, பிச்சை எடுத்தும், சிறு உதவித் தொகைகள் திரட்டியும், அன்னமிடுகிறார்கள். திக்கற்றவர்கள் இருப்பதுபற்றி அதுவரை துளியும் கவலைப்படாத அரசு, ஆலயத்தை அவர்கள் தமது இருப்பிடமாக்கிக் கொண்ட செய்தி தெரிந்ததும், வேகமாகக் கிளம்பிற்று, அவர்களைக் காப்பாற்ற அல்ல, ஆலயத்தைக் காப்பாற்ற!

“ஏ! கிழம்! இதென்ன தண்டச் சோற்று மடமாக்கிவிட்டிங்க, தண்டாயுதபாணி கோவிலை” அரசனுடைய படையினர், முதியவரைக் கேட்கிறார்கள், மருதவல்லி பதில் கூறுகிறாள்.

“கோவில் கலனாகிவிட்டது, யாரும் இப்போது இங்கே வருவதில்லை”

“அதனாலே, இதுகளுக்கு வீடு ஆக்கிவிட்டாயா, கோவிலை.”

“வௌவால்கள்தானய்யா இங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தன.”

“வாயாடியாச்சே நீ, தெரியுமே தேவாலயத்தை அசுத்தமாக்கினால் என்ன தண்டனை தெரியுமா?”
“அசுத்தமாக்கவில்லையே. இங்கே இருந்த குப்பை கூளத்தை நான்தான் கூட்டி எடுத்து அப்புறப்படுத்தினேன்.”

“வீண்பேச்சுப் பேசாதே. நாளை காலை வருவோம், இடம் காலியாக இருக்கவேணும் - இல்லே... மறுபடியும் கம்பி எண்ணவேண்டியதுதான்!”

மிரட்டிவிட்டு, மேலதிகாரிகளிடம் கூறச் சென்றார்கள் படையினர். பெருமூச்செறிந்தபடி, மருதவல்லி, திகைத்துக் கிடந்த திக்கற்றோரைப் பார்த்து விட்டு, “இந்தக் கன்றாவிக் காட்சியைக் காண மறுக்கிறார்கள் கருணாமூர்த்திகள்” என்று கூற, முதியவர், “நேரம் ஏது மகளே! தேரும் திருவிழாவும் காணவே காலமெல்லாம் செலவாகிவிடுகிறதே! கைகால் போனது களைக் காண நேரம் ஏது! வா, வா, இவர்களை அழைத்துக் கொண்டு, வேறிடம் போகலாம் ” என்றார்.

“வேறு எங்கே அப்பா போவது?” என்று விசாரத்துடன் மருதவல்லி கேட்க, கவிராயர் ஒளி நிரம்பிய கண்களால் அவளைப் பார்த்தபடி, “எங்கே போனார் புத்தபிரான்! காடு, மேடு, எங்கெங்கோ சென்றாரே, அழகான அரண்மனை அவருக்கென்று இருந்தும். அன்னக்காவடிகள் நாம் - எங்கு போனால் என்ன! வா, மகளே! வா! மரத்தடியெல்லாம் நமது மாளிகைதான்” என்று கூறினார். மருதவல்லி, தந்தையின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டு, “என்குருவப்பா, நீ, எனக்கு ஞானகுரு!” என்று கனிவுடன் கூறினாள், பெரியதோர் மரத்தடி புதிய மாளிகையாயிற்று. தொடர்ந்து தொண்டு செய்து வந்தனர்.
* * *

வெண்ணிலாவும் தொடர்ந்து தொண்டு செய்து வரவேண்டியிருந்தது - தானப்பன் விட மறுத்தான். துவக்கத்திலே அவனுக்குக் கோபம்தான், நிலைமையைத் தனக்குச் சாதமாக்கிக் கொண்டு அவன் தன்னைக் கொடுமை செய்கிறானே என்பதால் பிறகோ அவனுக்கு அது பழகியும் விட்டது, பலனும் கிடைக்கலாயிற்று. சந்தேகம் கிளம்பிற்று நவகோடிக்கு, கேட்கும் துணிவு எழவில்லை, காலம் பிடித்தது. ஆனால் அதற்குள் வெண்ணிலா வேங்கையாகி விட்டாள்.

“எல்லாம் உனக்கு ஆபத்து வராமல் தடுக்கத் தான்” என்று நவகோடியிடம் கூறினாள், “என்னால் அந்தக் கிழத்தின் தொல்லையைச் சகித்துக் கொள்ள முடியாது” என்று தானப்பனிடம் கூறினாள். தானப்பன் சீமானாகி விட்டது, வெண்ணிலாவுக்குத் தெரியுமல்லவா!

தானப்பன், அடிக்கடி மிரட்டலானான் சீமானை. சீமானோ வேகமாகச் சாமான்யராகிக் கொண்டு வந்தார்! இந்நிலையில், வெண்ணிலா தானப்பன் அமைத்துக் கொடுத்த புதிய மாளிகைக்கே சென்று விட்டாள். விசாரம் நவகோடிக்கு ஆத்திரமும்தான், ஆனால், என்ன செய்வது?
தானப்பன் புதிய வெடிகுண்டு வீசினான்.

“அடிக்கடி மன்னர் கேட்கிறார், உம்மைப்பற்றி. நான் பல தடவை சமாதானம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது. எப்படியாவது, மருதத்தைப் பழைய மார்க்கத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும். அதை நீ செய்து முடிக்காத வரையில் உன் மீது சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும். எந்த நேரத்திலும் ஆபத்து வரக்கூடும், என்மீது நொந்து கொள்வதில் பயனில்லை” என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.

வெண்ணிலாவை அபகரித்துக் கொண்டான் - செல்வமோ கரைந்துவிட்டது - மிரட்டுகிறான் முரட்டுத்தனமாக; என் செய்வது, என்று துக்கித்தார் நவகோடி தானப்பன், இந்தப் புதியபோக்கு கொண்டதற்குத் தக்க காரணமும் ஒன்றிருந்தது புதுமார்க்கம் சென்றவர்களை ஆசைகாட்டியும் அச்சமூட்டியும், பழைய மார்க்கத்துக்குத் திரும்பி வந்து சேரும்படி செய்வது, திட்டமிட்டு நடந்துவந்தது. திரும்பிவந்தவர்கள், பழையமார்க்கத்தின் பெருமைகளை எடுத்துக் கூறியதுடன், புதியமார்க்கம் கேவலம் நாத்திகம் என்று கூறிவந்தனர். பழைய மார்க்கத்தார்கள் இந்த வேலையை வெற்றிகரமாக நடத்திவந்தனர்.

மயக்கமொழி கேட்டேன், கெட்டேன்!

மதுக்குடம் போலிருந்தது அவள் விழி, ஏய்க்கப் பட்டனே, நாத்திகனானேன்.

மண்டையிலே ஒரே குடைச்சல். கைகால் இழுத்துக்கொண்டது, கண் அவிந்துபோயிற்று, ஆண்டவன் கனவில் தோன்றி பாபிகளைவிட்டு விலகு! புண்ய மார்க்கத்தில், புராதன மார்க்கத்தில் வந்துசேர் என்று கூறினார். தவறை உணர்ந்தேன், புதிய மார்க்கத்தை விட்டுத்தொலைத்தேன், உடனே தீவினை அகன்றது, தன்யனானேன்.

இங்ஙனம் தப்புப்பிரசாரம் நடைபெற்றது; தெளிவற்ற மக்கள் மனத்திலே, மீண்டும் புராதன மார்க்கத்திடம் பற்று பலமாயிற்று. மூடநம்பிக்கை பலப்படலாயிற்று.

மருதவல்லி, புதிய மார்க்கத்தை விட்டொழித்து புராதன மார்க்கத்தை மீண்டும் வந்தடைந்தால், பெரும்வெற்றி கிட்டும் - விருது தனக்குக் கிடைக்க வேண்டும் என்பது தானப்பனின் எண்ணம். எனவே தேளானான். நவகோடி துடியாய்த் துடித்தார். மரத்தடி மடாலயம் விரிவடைந்தது - பொறுப்பும் பாரமும் வளர்ந்தது; தந்தையும் மகளும் தளராது உழைத்து வந்தனர், தோழர்கள் பலர் துணை நின்றனர். புத்த மதம் பரவியிருந்த மண்டலங்கள் சிலவற்றிலிருந்து உதவி அவ்வப்போது கிடைத்து வந்தது - உதவியைக் கடுகளவினதாக்கும் வகையில், வேறு மண்டிலங்களிலே, புராதன மார்க்கத்தால் கொடுமைப்படுத்தப் பட்டுப் புகலிடம் தேடி வந்தவர்களின் தொகை பெருகிற்று. தொகை பெருகியபோது, கடும் நோயும் படை எடுத்தது; மருத்துவரின் முயற்சி போதுமான பலன் அளிக்கவில்லை. இருமல், காசம், இளைப்பு, ஈளைகட்டி, இழுப்பு இப்படிப் பலப்பல நோய்கள் பவழ பஸ்பம் தயாரித்துத்தந்தால், கடும் நோயைக் களையலாம் என்றார் மருத்துவர், உயர்தரப் பவழமோ விலை அதிகம் - மருதவல்லியைச் சுற்றிலுமோ அன்னக்காவடிகள்.

மருத்துவர், கிடைத்த மூலிகைகளைத் தருவார், பிறகு ஆயாசமடைவார். பவழபஸ்பம் செய்தால் நல்லது என்று பன்னிப்பன்னிக் கூறுவார். மருதவல்லி, நிலைமை கஷ்டமான தாகிவருவது கண்டு வருந்தினாள்! அதேபோது, தானப்பானால் தாக்கப்பட்ட நவகோடியாரின் நிலைமையும் அவளுக்குத் தெரிய வந்தது, பரிதாபப்பட்டாள்.
* * *

“படமெடுத்தாடும் பாம்பாகிவிட்டான் தானப்பன். பழைய மார்க்கத்துக்கு நீ திரும்பியாக வேண்டுமாம், இல்லையானால் என்மீது பழி தீர்த்துக்கொள்வானாம். என்ன செய்வேன் மருதவல்லி! அவனுடைய பேராசைப் பசியைப் போக்கப் பெரும்பணம் தொலைத்தேன். அதே முறையில் நீண்டகாலம் செய்து வரவும் முடியாது. என்னைக் காப்பாற்றும் பொறுப்பு உன்னுடையதுதான். நீ, புதிய மார்க்கத்தவளாக இருக்கு மட்டும் எனக்கு ஆபத்துதான்” என்று புலம்பலானார் நவகோடியார்.
“வேறு நாடு சென்று விடுவோமா?” என்று யோசனை கூறிய மருதவல்லிக்கு அவர் கூறின பதிலெல்லாம், “இங்கே உள்ள என் நிலபுலம் தோட்டம் தோப்பு வியாபாரம் இவை என்ன ஆவது?” என்பதுதான்.

பவழபஸ்பத்துக்கு வழி என்ன என்று கண்டுபிடிப்பதா, இந்தப் பரிதாபத்துக்குரியவரின் ஆபத்தைத் தடுக்க என்ன வழி என்று கண்டறிவதா, என்ன செய்வாள் மருதவல்லி.

நோயாளிகள் மரணப்படுக்கையில் - மருத்துவர்கள் நிலைமையை எடுத்துக் கூறியபடி - நவகோடியோ, தனக்கு வர இருக்கும் ஆபத்தை எடுத்துக்கூறியபடி. மருதவல்லியின் மனத்திலே கடும் போர் மூண்டது. மாரப்பன் நாள் குறித்துவிட்டான்; நவகோடியார் மருதவல்லியின் காலில் வீழ்வதுதான் பாக்கி - மற்ற அளவு தீர்ந்துவிட்டது.
* * *

மருதவல்லி மாளிகை திரும்பினாள் - மரத்தடியினர் திடுக்கிட்டனர் - தானப்பன் கூடத் திகைத்துப் போனான் - நவகோடியார் களிப்புக்கூத்தாடினார். மருதவல்லி புதிய மார்க்கத்தவரைவிட்டுப் பிரிந்துவிட்டாளாம், பழைய மார்க்கத்தில் சேர்ந்து கொண்டாளாம் என்று ஊரார் பேசிக் கொள்ளலாயினர். சிலர் கேட்கவே செய்தனர், மருதவல்லி புன்னகை புரிந்தாள், வேறு பதில் இல்லை, கவிராயர் கண்ணீர் சொரிந்தார் - மகளைப் போய்ப் பார்க்கவும் அவருக்கு மனம் இல்லை.

“பேதைப்பெண்! அவ்வளவுதான் அவளால் முடிந்தது!” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
* * *

புதிய மார்க்கத்தைப் பொசுக்கிட அரசின் கடுமையான முறைகளைக் கையாண்டும், கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள புது மார்க்கத்தினர் முன் வருவதுமுண்டு, பழய மார்க்கத்தைத் தம் பிழைப்புக்கும் ஆதிக்கத்துக்கும் வழியாக்கிக் கொண்டிருந்த பூஜாரிக் கூட்டம், திகைத்தது. ரசமான பாடல்கள், சுவையுள்ள காதைகள், களிப்பூட்டும் கூத்துகள் ஆகியவற்றின் மூலம் புராதன மார்க்கத்தைப் புகுத்தும் பணியிலே, புது உற்சாகம் காட்டி வேலைசெய்து பார்த்தனர். பலன் விரும்பிய அளவு ஏற்படவில்லை. விசாரப்பட்டனர்.
கொடுமைகளுக்கு ஆளான மக்களோ, புத்தர் உண்மையைக் கண்டறிய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை எண்ணினர். என்றும் தோன்றாத அளவுக்கு மனத்திலே அவர்களுக்குத் தைரியம் ஏற்பட்டது.

மமதை நிரம்பிய மன்னர்கள், செருக்கு மிகுந்த சீமான்கள், புத்த மார்க்கம் தந்த பொன்னொளியின் காரணமாகச் சீலர்களாகி விட்டனர் என்று செய்திகள் பல பக்கங்களிலுமிருந்து வந்த வண்ணமிருந்தன.

போக போக்கியத்திலே மூழ்கிக்கிடந்தவர்கள், புத்தரின் புத்தொளி கண்டு, ஆசைகளை அகற்றிக் கொண்டனர்; சுயநலத்தை விட்டொழித்தனர், என்று செய்தி கிடைத்தது. அரசனுடைய அக்கிரமத்தால் தாக்கப்பட்ட அரநாட்டு மக்கள், இன்றில்லாவிட்டால் நாளை, புத்தபிரானின் பொன்னொளி, இங்கும் பரவியே தீரும் என்று நம்பினர். கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும்போக்கினரோ அக்கிரம ஆட்சியை எதிர்த் தொழிக்கவேண்டும் என்று துடித்தனர்.

மக்கள் மனத்தை மாற்றிக் கொண்டு வரும் புத்தப் புயல் ஒரு புறம்.

அக்ரம ஆட்சியை அழித்தொழிக்கவேண்டும் என்ற புரட்சிப்பொறி மற்றோர்புறம்.

இருபெரும் சக்திகளும் ஒன்று கூடிவிட்டால்? மன்னன் மார்த்தாண்டன் இதனைத்தான் எண்ணி அஞ்சினான்.

அரசனுடைய தயவு தமக்கு இருந்தும், மக்களுடைய எதிர்ப்பு வளருவதுகண்டு, பூஜாரிக் கூட்டம் கோபமும் வருத்தமும் கொண்டது. மக்களை, ‘ராஜபக்தி - பழைய மார்க்கபக்தி’ கொண்டோராக்குவதற்கான வழியிலே, தளராது உழைத்துவந்தனர்.

பழைய மார்க்கத்திலே ஓரளவு பற்று வைத்துக் கொண்டிருப்போரிலே சிலருங்கூட, மன்னனுடைய ஆட்சி முறையிலே காணக் கிடக்கும் கேடுகளை ஒழித்திட வேண்டு மென்பதிலே ஆர்வம் காட்டினர்.

மன்னராட்சியை ஆதரித்தவர்களிலே சிலர், மக்களுடைய எதிர்ப்புணர்ச்சிக்குக்காரணமே, பழையமார்க்கத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்தும் பூஜாரிக் கூட்டத்தின் புரட்டுதான் என்று எடுத்துரைத்தனர்.

இவர்களிடம் வாதாடுவதே, பூஜாரிக் கூட்டத்தினருக்குக் கடினமானதாக இருந்தது.

“அரசன் ஆண்டவனின் அம்சம்! ராஜனாவது, என்றால், பூர்வபுண்யவசந்தான் காரணம்.”

“அரசன் அக்கிரமம் புரிந்தால்? நாட்டுக்குக் கேடு தான், மக்களுக்கும் கேடுதான்......”

“அப்படிப்பட்ட ஆட்சியை எதிர்த்து ஒழிக்கும் கடமை மக்களுடையதல்லவா...”

“சிவ! சிவ! அரசனை எதிர்ப்பதா? யார்? மக்களா? ஆட்சி முறையைப் மாற்றுவதா! மக்களா? மக்களுக்கு ஏது அந்த உரிமை? எப்படி முடியும் மக்களால்! ஆண்டவனுடைய அம்சத்தை அழிக்கக் கிளம்புவது, ஆண்டவனை அவமதிப்பதாகுமே! ஆண்டவன் சும்மா விடுவாரா?”

“மக்கள் மடிகிறார்கள்! அவர்களுடைய சொத்து சூறையாடப்படுகிறது - சுதந்திரம் நசுக்கப்படுகிறது...”

“துக்ககரமான சம்பவங்கள் தான்!”

“கற்பழிக்கப்படுகிறார்கள் பெண்கள்! கட்டி வைத்துக் கொளுத்தப்படுகிறார்கள் ஆடவர்கள்!”

“மனம் பதறத்தான் செய்யும்!”

“கொதித்தெழும் மக்கள், எவ்வளவு வலிவுள்ள படையையும் எதிர்த்து ஒழிக்கும் வல்லமை பெறுவார்கள்! சந்தேகமா? சிறைகளைத் தூள் தூள் ஆக்கிவிட முடியும். சிங்காரக் கொலு மண்டபங்களை மண்மேடுகளாக்கமுடியும்! தீயோனின் அரண்மனையைத் தீக்கிரையாக்க முடியும்!”

“முடியாது! முடியும் என்ற எண்ணம் கொள்ளவும் கூடாது. அவ்விதமான எண்ணம் கொள்வதே மாபாபம்!”

“பாபமா! மக்களைக் காப்பாற்றக் கிளம்புவதா மாபாபம்!”

“மதியில்லையே உனக்கு! உன்னையும் உன்போன்ற ஜீவராசிகளையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுடைய காரியத்தைச் செய்ய, நீ, கிளம்புவதா! அவன் ஆணை கேட்டுத்தானே சூரியன் காய்கிறான், அளவோடு! சூரியனால், உலகையே, பஸ்மீகரமாக்கிவிட முடியுமே, செய்கிறானா! செய்ய அனுமதிக்கிறாரா ஆண்டவன்! கடல்நீர் அவ்வளவையும் கண்மூடிக் கண்திறப்பதற்குள், கதிரவனால் குடித்துவிடமுடியும் - அலைகள் நிரம்பிய கடலை மணற்காற்றடிக்கும் பாலைவனம் ஆக்கிவிடமுடியும்! சூரியன் செய்கிறானா! செய்யவிடமாட்டார் கடவுள்! சர்வசக்திபடைத்தவர், எம்பெருமான். அவர் அறிவார், எதை, எப்படி, எப்போது செய்யவேண்டுமென்று! அவருக்குத் தான் தெரியும்!”

“ஆண்டவனுடைய வல்லமையை, யார் சந்தேகித்தார்கள்! அரசனுடைய அக்கிரமத்தை அல்லவா, எதிர்த்து அழிக்கவேண்டும், என்கிறோம். அந்த அக்கிரமம் ஒழிக்கப்படாவிட்டால், மக்கள் வேதனையிலிருந்து விடுதலை பெறமாட்டார்களே!”

“எப்படி, எப்போது, மக்களின் வேதனையைப் போக்க வேண்டும் என்பது பகவானுக்குத் தெரியும். மழையைப் பொழியச்செய்பவன், நீயா! காற்றை, வீசவைப்பவன், யார் - நீயா? பைத்தியக்காரா! பைத்தியக்காரா! அதுபோலவேதான் இதுவும். அரசனைத் திருத்தவும் ஆட்சி முறையை மாற்றவும் ஆண்டவனால் தான் முடியும். மக்களைச் சோதிக்க மகேசன், எத்தனையோ வழிகளைக் கயைõள்வார் மன்னனைக் கொண்டு, மேலும் மேலும் வரிகளைப் போடச்செய்வார்! காராக்கிரகத்திலே மக்களை - தலைவர்களைக்கூட - தள்ளும்படி, மன்னனை ஏவுவார்! தாங்கமுடியாத அளவுக்குக் கஷ்டங்கள் ஏற்படுகிறபோது, மக்களின் நிலை எப்படி இருக்கிறது, நினைப்பு எப்படி இருக்கிறது, என்பதைக் கண்டுகளிக்கக்கூடச் செய்வார்!”

“கொடுமைகளைச் செய்பவர் மன்னன் - மகேசன் அல்ல என்பதை மக்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டார்கள். அதனால்தான் மக்களிடம் எதிர்ப்புணர்ச்சி வீறிட்டு எழுகிறது.”

“முதலில் எழும் - பிறகு விழும்! தெரியுமா விஷயம், மாளிகை வேண்டாம், கணவனே வேண்டாம் என்று கூறிவிட்டு, புதுமார்க்கத்தாருடன் கூடித்திரிந்துவந்த மருதவல்லி, நமது புராதன மார்க்கத்துக்கே திரும்பிவந்து சேர்ந்து விடப்போவது! சத்தியம் வெல்லும்! பொறுமைதான் வேண்டும்.”
* * *