அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பவழ பஸ்பம்
3

“வேத நிந்தகர்கள்! சண்டாளர்கள்! பாஷாண்டி மத ஸ்தாபகர்கள்! ஆச்சார அனுஷ்டான விரோதிகள் என்றெல்லாம் கூறினோம்...”

“சர்வநாசம் சம்பவிக்கும்! சர்வேஸ்வரனின் கோபத்துக்கு ஆளாவீர்! என்றுகூடத்தான் சொன்னோம்...”

“வெள்ளத்தை, வைக்கோற் போர்களைப் போட்டுத் தடுக்க முயற்சித்தோம்... பலன்...?”

“பூஜ்யம்தான்! ஏன் மக்கள் மனத்திலே பயம் தோன்ற வில்லை... கீறின கோட்டைத் தாண்டினால் ரௌரவாதி நரகம் சம்பவிக்கும் என்று நம்பி, நடு நடுங்கிக்கொள்டிருந்த மக்கள், இப்போது நிமிர்ந்து நிற்கிறார்கள் - நாம் அதிகமாக அதட்டினால், புருவத்தை நெறிக்கிறார்கள் - இப்படி ஆகிவிட்டதே நிலைமை... முன்பெல்லாம், ஸ்ரீமன் நாராயணமூர்த்தியுடைய லீலா விநோதங்களைப் பற்றிய திருக்கதைகளைக் கூறினால், எவ்வளவு பக்தி சிரத்தையோடு கேட்பார்கள் - எவ்வளவு உருகுவார்கள் - கோபாலகிருஷ்ணன் குழலை எடுத்தார், அதரத்தில் வைத்தார், மதுரகீதம் பொழிந்தார், கீதம் கேட்டதும், கொல்லவந்த புலியும் சாக இருந்த பசுவும், அம்பு எய்திடச் சென்ற வேடனும், அவனால் இறந்திட இருந்த புறாவும், சகல ஜீவராசிகளும் பிரம்மானந்தமடைந்தன என்று கூறினபோது, எவ்வளவு குதூகலமடைந்தார்கள் - கோவிந்த நாமத்தைப் பூஜித்தார்கள்...”

“கோபிகைகளுடன் கண்ணன் பிருந்தவானத்திலே ஆடிப்பாடி இருந்த ஆனந்தக் காட்சியை வர்ணித்த போது, மக்களின் முகமெலாம், செந்தாமரையாகிவிடும்...”

“காணிக்கை குவியும் - பூஜைகளோ அமோகம் - பூதேவர் என்ற பெயருக்கு ஏற்றபடியான நிலைமை நமக்கு... அந்தப் பொற்காலம் போயே, விட்டதே!”

“வேள்வி என்றால், வீண் என்கிறார்கள்! யாகப்பசு என்று கேட்டால், ஜீவஇம்சை என்கிறார்கள் - தானம் என்று கேட்டால், அதிகாரப் பிச்சையா என்று மிரட்டுகிறார்கள், தவசிகள் என்று சொன்னால், எதைத் துறந்தீர்கள் என்று கேட்டுக் கேலி செய்கிறார்கள்.... சகிக்கமுடியவில்லை, அவர்களுடைய போக்கை! புரியவில்லை, ஏன் இப்படிப் போக்கு மாறிவிட்டது என்று! இதை நீக்கும் மார்க்கமோ துளியும் தெரியவில்லை...”

“எல்லாம் புத்தன் கிளப்பிய புயலின் விளைவு தான்.”

“அண்டசராசரங்களைப் படைத்த ஐயனின் மார்க்கத்தை, புத்தப்புயல் அழித்துவிடுவதா...”

“புத்தன்மட்டும் யார்? ஐயன்படைப்புதானே!”

“ஐயனேதான், என்றுகூடத்தான் சொல்கிறார்கள்.”

“ஒரு காரணம், எனக்குத் தெரிந்த அளவிலே கூறுகிறேன்...”

“எதற்கு...?”

“புத்தமார்க்கம் பரவுவதற்கு... காரணம் என்ன என்றால், புத்தனுடைய கதை மக்கள் மனத்தை உருக்குகிறது - ராஜகுமாரன் - போக போக்கியத்தைத் துறந்து அழகு மனைவியையும், குழந்தையையும் பிரிந்து, அடவி எல்லாம் சுற்றி அலைந்து, மக்களுக்குச் சேவை செய்தார், என்று கதை கூறும்போது மக்கள் மனம் பாகாய் உருகத்தான் செய்கிறது. மனிதனுடைய துக்கத்துக்குக் காரணம் என்ன, விமோசனத்துக்கு வழி என்ன, என்பதைக் கண்டுபிடிக்க சித்தார்த்தர் பட்டபாடு, கேட்போர் மனத்தைக் கரையச் செய்கிறது. பொன்னிறமேனி மயங்க, தேகம் துரும்பாக இளைத்துப்போக, அன்ன ஆகாரமின்றி அடவியிலே அலைந்து சிந்தித்துச் சிந்தித்து ஞானத்தைக் கண்டறிந்தார் என்று கூறுகிறார்கள் - கேட்கும்போது, மக்கள் சொக்கிப் போகிறார்கள்.

“போமய்யா, போம்! புத்தி கெட்டுப்போய் உளறுகிறீர்! அரச போகத்தைத் துறந்தாராம், அடவியிலே அலைந்தாராம்... பதினான்கு ஆண்டுகளய்யா, பதினான்கு ஆண்டுகள் - ஒன்றல்ல இரண்டல்ல, பதினான்கு ஆண்டுகள் கானகவாசம் நம் ஐயன் இராமபிரானுக்கு - மரஉரி - கனியும் காயும் உணவு - தரைதான் பஞ்சணை... கல் மனமும் கரையுமே, ராமகாதைகேட்டு...”

“ஆமாம் - முன்பு! இப்போது, மக்கள், ஸ்ரீராமர், அடவிசென்று, அங்கு ஈரேழாண்டு வாசம்செய்தது எல்லாம், அவருடைய தகப்பனாரின் வாக்கைக் காப்பாற்றத்தான் - மக்களுக்காக அலலவே - புத்தர், மக்களுக்காக அல்லவா, அரச போகத்தைத் துறந்தார். என்று கேட்கிறார்கள்.

“கேட்பார்களய்யா, கேட்பார்கள்! அவர்களின் நாக்கை அறுக்கத்தக்க வீரர்கள் இல்லை இப்போது, அதனால் கேட்கிறார்கள்...”

“கானகத்திலே கஷ்டம் அனுபவித்தான் பிறகு, இராமபிரான், நாடு திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகப்பட்டார் - புத்தர், துறவியானவர், துறவியாகவே இருந்துவிட்டார் - இது வேறு மக்கள் மனத்தை மயக்கிவிடுகிறது...”

“மயக்கும், மயக்கும்! எவ்வளவு காலத்துக்கு என்பதைப் பார்த்துவிடுகிறேன்...”

“ஒவ்வொரு மண்டலாகப் பரவுகிறது புதிய மார்க்கம்...”

“இங்குமட்டும் என்னவாம்! நேர்த்தியான யாகம் நடத்தி எவ்வளவு காலமாகிறது - ஏதோ ஆலய பூஜைகள் நடக்கின்றன - வேறு என்ன விசேஷம் நடக்கிறது...”

“மன்னனிடம், கூறினேன் - ஆகட்டும் பார்ப்போம் - என்று இழுத்தாற்போலத்தான் பேசுகிறார்... செலவு அதிகமாகுமோ என்று ஆயாசப்படுகிறார்...”

“காமக் கூத்தாட மட்டும் காசைக் கரியாக்கத் தயங்குவதில்லை - கடவுள் காரியமென்றால், கையை விரிக்கிறார்...”

“நானும், ஒவ்வொரு விநாடியும் யோசித்தபடியே தான் இருக்கிறேன் - என்ன செய்வது, என்ன செய்வது என்று...”

“நாங்களும், மக்கள் முன்போலப் பக்தி சிரத்தையுடன் கேட்டாலும் கேட்காவிட்டாலும், பகவத் கதைகளைக் கூறியபடி தான் இருக்கிறோம்...”

“மாபலி கதையைமட்டும், கூறவேண்டாம், இப்போது...”

“ஏன்?”

“வேண்டாம்! மாபலியிடம் மூன்றடி தானம் வாங்கிய மகாவிஷ்ணு, பிறகு, விஸ்வரூபமெடுத்து இரண்டு அடிகளால், பூலோகத்தையும் வான லோகத்தையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு, மாபலியின் சிரத்தின்மீது வைத்தார்...”

“ஆமாம், அதுதான் மகாத்மீயம்...”

“அதுபோல, அரசர்களை அடுத்து தானம் தருமம் கேட்டுப் பெறும் குருமார்கள், கொஞ்சம் இடம் கிடைத்தாலும், அரசுகளையே அபகரித்துக் கொள்வார்கள் - இதற்கு மாபலி புராணமே போதும் - என்று விதண்டாவாதிகள், மக்களிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள் - அதனால்தான், மாபலிகதை கூறவேண்டாம்...”

“மற்றக் கதைகளை...”

“கூறுங்கள்... ஆனால் எதைச் சொன்னாலும், கொஞ்சம் திரைமறைவுடன் சொல்லவேண்டும்...! எதற்கும் நாம் பொறுமையை இழந்துவிடக்கூடாது! புத்த மார்க்கம் பெரும்புயல்தான், எனினும் அதைச் சமாளிக்கும் வலிமை நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நிரம்பவேண்டும். பாருங்களேன், அதிசயத்தை! சிங்காரமாளிகை வாழ்வை இழந்து, சிறைக்கோட்டம். செல்லத் துணிந்து மருதவல்லி, மீண்டும் சீமாட்டியாகி விடச் சம்மதிக்க வில்லையா! நவகோடியார், எவ்வளவு திறமையாக - வெற்றி பெற்றிருக்கிறார், கவனியுங்கள்! மருதவல்லியின் மனம் மாறினதை, மகத்தான புண்ய கதையாக்கி மக்களிடம் கூறவேண்டும்.”

“காரிருளிலே தோன்றும் மின்னல்போல இருக்கிறது, மருதவல்லியின் மனமாற்றச் சம்பவம். தோன்றி மறைந்திடும் மின்னலாகி விடக்கூடாது மருதவல்லி சம்பவம். அதை ‘திவ்யஜோசி”யாக்கிக் காட்ட வேண்டும். மருதவல்லி, பிக்ஷýக்களின் பொய்யுரைகளைக் கேட்டு மயங்கினாள். கணவனை எதிர்த்தாள், பதியை விட்டுப் பிரிவது மாபாபம் என்ற சாதாரண அறிவையும் இழந்தாள், ஆனால் நவகோடியார் பரமபக்தர், தெய்வநம்பிக்கை உள்ளவர், எனவே அவர் எப்படியும் எம்பெருமான் அந்தப் பேதைப் பெண்ணின் அஞ்ஞானத்தைப் போக்கி ரட்சிப்பார் என்ற திடசித்தத்துடன், பகவானைப் பூஜித்து வந்தார், விசேஷ பூஜைகள் நடத்தினார்; அதன் பலனாக, மருதவல்லியின் அஞ்ஞானம் அழிந்தது, புது மார்க்கம் ஒருபுரட்டு என்பதை உணர்ந்தாள். கசிந்து கண்ணீர் மல்கி, கணவன் பாதத்தில் வீழ்ந்து வணங்கினாள். நவகோடியார், “என் பாதத்தில் வீழ்ந்துவணங்கினாள் என்ன பலன்? பெண்ணே! ஐயன் பொற்பாத கமலத்தை வணங்கு - அவர் உன் பாபத்தைப் போக்குவார், அருள் பாலிப்பார்” என்று உபதேசம் செய்தார். மருதவல்லி இப்போது புதியதோர் முகதேஜசோடு இருக்கிறார்! - இப்படியும் இதைவிட ரசமாகவும், கூறவேண்டும். மருதவல்லியின் மனமாற்றச்சம்பவம், கலம் உடைபட்டபோது கிடைத்த தெப்பக்கட்டை போன்றது! பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும்.”
* * *

மருதவல்லி மாளிகை திரும்பிய சம்பவம், வைதீக வட்டாரத்திலே ஒரு திருவிழாவாகக் கருதப்பட்டது. எங்கும் இதே பேச்சுதான்! ஒவ்வொருவர் ஒவ்வோர் வகையான விளக்கமளித்தனர் இதற்கு. மருதவல்லியோ, யாரிடமும் இது பற்றி ஏதும் பேசுதில்லை - மனத்திலே ஏதோ ஓர் தீர்மானமிருக்கிறது என்பது, முகத்திலே தெளிவாகத் தெரிந்தது. நவகோடியார், ஊரிலே கம்பீரமாக உலவினார்.
* * *

வேலுடையான் கோவிலிலே விசேஷ பூஜைக்கு நாள் குறித்துவிட்டார் நவகோடியார். பூஜை நாளன்று மருதவல்லி ஆலயம் சென்று தரிசம் செய்வது என்றும் பிறகு அங்குக் கூடிடும் பக்தர்களிடம் புதிய மார்க்கத்தை விட்டுத்தான் விலகி காரணத்தை எடுத்துரைப்பது பழைய மார்க்கத்தின் மேன்மையை விளக்குவது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னன் வரையில் சேதி சென்றது; மண்டிலமே திடுக்கிட்டது, தானப்பன் அரசகுருவே ஆகிவிடக்கூடும் என்று பேசிக்கொள்ளப்பட்டது.

பழைய மார்க்கத்துக்குத் திரும்பும் புனிதவதியை வாழ்த்தினர் பலர்.

செல்வர்களின் காணிக்கை செலுத்தினர் - மருதவல்லி மூலம், விசேஷ பூஜாநாளன்று வேலுடையான் கோவிலுக்குத்தர.

மருதவல்லியும், நவகோடியாரிடம் காணிக்கை கேட்டாள் - விலையுயர்ந்த பவழமாலைகள்!! ஆபத்து நீங்கும். அந்தஸ்து உயரும் என்ற மகிழ்ச்சியில், நவகோடியார் பவழமாலைகளைக் கொண்டுவந்து குவித்தார். அவற்றை அணிந்துகொண்டு, தன் உருவைத் தானே பார்த்துச் சிரித்தாள் மருதவல்லி.

“இது என்ன பைத்தியம் மருதம்! பவழமாலையிடம் இவ்வளவு பைத்தியமா உனக்கு? வைரம் இருக்கிறது விலையுயர்ந்த வேறு மாலைகள் உள்ளன” என்றார் நவகோடி. எனக்குப் பவழம் என்றால் கொள்ளை ஆசை என்று கூறினாள் மருதவல்லி.

அதிர்வேட்டுகள் முழங்கின! மறுநாள் விசேஷ பூஜைக்கு அறிவிப்புகள். மருதவல்லியின் மாளிகையிலே வேதம் ஓதப்பட்டது. பஜனைக் கோஷ்டிகள் வீதிகளில் வலம் வந்தன. வெண்ணிலாவுக்குப் புதிய வைரமாலையைத் தந்து மகிழ்ந்தான் தானப்பன்.

நள்ளிரவு! கவிராயர் கவலையுடன் படுத்துப் புரண்டுகொண்டிருக்கிறார். காசநோய்க்காரரின் இருமல் இங்கு அதிர்வேட்டென இருக்கிறது. மருதவல்லி இரைக்க இரைக்க ஓடிவந்தாள் - தலைமீது இருந்த மூட்டையைக் கீழே போட்டாள்.

“அப்பா! அப்பா!”

“யாரது? என் மகளா? மருதமா?”

“ஆமப்பா, நான்தான் அப்பா!”

“மகளே! இதென்ன நள்ளிரவில்”

“கடைசி இரவு அப்பா இது... அதோ உங்கள் காலடியில் இருப்பது பவழமாலைகள்... பவழ பஸ்பம் வேண்டுமளவுக்கு தயாரிக்கலாம்... இவ்வளவும் தான் தார்... நாளைக்குக் காட்டிக் கொடுக்கும் விழா!... நான் உயிரோடு இருக்குமட்டும் அவருக்கு ஆபத்துத்தான்... பவழ பஸ்பம் தயாரித்து இவர்களைக் காப்பாற்று. என்னால் இவ்வளவுதான் முடிந்தது... இதற்குமேல் தொண்டாற்ற முடியாதப்பா... புத்தமார்க்கத்துக்கு என் சேவை இந்த அளவு தானப்பா... நல்ல பவழமப்பா, நல்ல பவழம்... விலை உயர்ந்த பவழம் மருத்துவர் கேட்டபடி... பவழ பஸ்பம்... பவழம் பஸ்பம்...!!
* * *

கோவெனக் கதறினார் கவிராயர், உடன் இருந்தோர் அலறி எழுந்தனர், மருதவல்லியின் பிணத்தைக் கண்டனர். விஷம் வென்றுவிட்டது.

(திராவிட நாடு - 1954)