அவன் ஓர் ஏழை! எண்ணற்ற ஏழைகளுக்கிடையில்
அவன் ஒருவன்! ஆனால், ஏழைகளில் பலருக்கு ஏற்படாத எண்ணம்
அவன் மனத்திலே கொந்தளித்தபடி இருந்து வந்தது.
அவன் ஓர் ஏழை! ஆனால் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த
எண்ணம், எப்படித் தனது ஏழ்மையைப் போக்கிக் கொள்வது என்பது
அல்ல; எப்படி நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவது என்பது
அல்ல; அதைப்பற்றி எண்ணிப் பார்த்திட அவனுக்கு நேரமே இல்லை.
எந்த நேரமும் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த
எண்ணம் அக்கிரமம், அநீதி இவற்றைத் தொலைத்தாக வேண்டும்
என்பதுதான்!
அவன் ஓர் ஏழை! ஆனால் நல்ல உடற்கட்டு, துணிவு; தனக்கென்று
எதையும் தேடிப் பெற்றாகவேண்டும் என்ற நினைப்பற்ற நெஞ்சம்,
வாழ்க்கை நடத்த எதையாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணம்கூட
அல்ல; வாழ்க்கையிலே ஏன் இத்தனை வஞ்சகமும் அநீதியும் நெளிகின்றன
என்ற கேள்வியே அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது.
அவன் ஏழை! ஆனால் மற்ற ஏழைகள் மனத்திலே மூண்டிடாத கேள்வி
குடையும் மனத்தினன்; மற்ற ஏழைகளுக்கு இந்தக் கேள்வி தோன்றியிருந்திருக்கலாம்
– பல சந்தர்ப்பங்களில். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்கான
விடை கண்டிடத் தம்மால் ஆகாது என்று விட்டு விட்டனர்; தமது
வாழ்வுக்கு வழிதேடிக்கொள்ள முனைந்தனர்; மும்முரமாயினர்.
பிறகு அவர்களுக்கு வேறு எண்ணம் எழவில்லை. இயல்பு அதற்கு
இடம் கொடுக்கவில்லை.
அவன் ஓர் ஏழை – மற்ற பல ஏழைகளைப் போலவே உழைத்து உண்டு,
உலவி உறங்கியும் வந்தான். ஆனால் அதுதான் வாழ்க்கை என்று
திருப்தி பெறவில்லை. அவன் உலகிலேயே காணக்கிடக்கும் கேடுகளை
ஒழித்தாக வேண்டுமே, என்னவழி அதற்கு, என்று எண்ணி எண்ணி
மனத்தை எரிமலையாக்கிக் கொண்டான்.
அவன் ஓர் ஏழை – ஆனால் மற்ற ஏழைகள் சிரித்துக் கொண்டிருப்பதைக்
காணும்போது சீற்றம் பீறிட்டுக் கொண்டு வந்தது – இத்தனை
கொடுமைகள் இழைக்கப்படுகின்றன; ஏன் என்று கேட்கக்கூடத்
திராணியற்றுக் கிடக்கிறார்களே! ஏன்? ஏன்? ஏன்? எப்படி
முடிகிறது அவர்களால்? என்னால் முடியவில்லையே! – என்று
கேட்டபடி இருந்தான் – ஊராரைப் பார்த்து அல்ல – தன் உள்ளத்தை.
‘அண்ணன் மகா முரடு! அண்ணன் காலை யாராவது மிதித்தால், அவர்கள்
தலையை மிதிக்கும் – அவ்வளவு ரோஷம்! எவனாக இருந்தாலும்
கூழைக்கும்பிடு போடாது! எதைக்காட்டினாலும், ஆசைப்பட்டு
பல்லை இளிக்காது’ என்று சொல்லுகிறார்கள் மற்ற ஏழைகள்
– காதிலே விழுகிறது; ஆனால் காரணம் புரியவில்லை, அவர்களின்
போக்குக்கு!
முருங்கையை எளிதாக ஒடித்துவிட முடிகிறது. தேக்கு? எளிதாக
முடியாதல்லவா! அதுபோலவே தன் இயல்பும் மற்ற ஏழைகளின் இயல்பும்
– இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசமும்!! புரியவில்லை!
புரியாததால், கோபம் அதிகமாக வளர்ந்தது; குறையவில்லை.
அவன் ஏழை! ஆனால் ஏழைக்கும் பெயர் உண்டே –இவன் பெயர், குப்பம்
முழுவதும் கூப்பிடுவது ‘அண்ணே’ என்ற செல்லப் பெயர். பெற்றோர்
இட்ட பெயர் மாகாளி!
‘அப்பவே தெரியும் போலிருக்குடோய்! அண்ணனோட குணம், எப்படி
இருக்கும் என்று, பெத்தவங்களுக்கு. பேர் பார்த்தயேல்லோ!
வெறும் காளிகூட இல்லா, மாகாளி!’ என்று அந்தக் குப்பத்திலே
உள்ள மற்ற ஏழைகள் பேசிக் கொள்கின்றனர்.
‘மாகாளி – அந்தக் குப்பத்திலே பிறந்தவனல்லன்! ஏதோ ஒரு
குப்பை மேடு! அது என்ன இடமா இருந்தாத்தான் என்னவாம்!!’
என்று பதில் வரும், குப்பத்தார் பக்குவமாக விவரம் கேட்கும்போது.
ஊர் பெயரே கூறாதபோது அவன் பெயரையா மாகாளியிடம் கேட்டுத்
தெரிந்துகொள்ள முடியும்? அப்பனா! எங்க அப்பனைத்தானே கேட்கறே?
ஏன், போய் கூட்டிக்கிட்டு வரப்போறியா? அவன் செத்துச்
சிவலோகம் போயி பல வருஷமாகுதுன்னு சொல்லிச்சி எங்க அம்மா,
அது சாகறப்ப... எனக்கு வயது எட்டு, அப்போ...”
“ஐயோ பாவம்!” என்பார்கள் சிலர்.
“உருகாதடா, உருகாதே! ஏன், இப்ப அவங்களும் இருந்து, நம்மைப்
போல நாய் படாதபாடு படவேணுமா.... போய் விட்டாங்களே, அதைச்
சொல்லு, நிம்மதியா...”
மாகாளிக்கு என்ன வேலை? எந்த வேலையாவது கிடைக்கும் – உடல்
உழைப்பு வேலை! பாரமூட்டை சுமப்பதோ – கட்டை வெட்டுவதோ
– கிணறு தோண்டுவதோ – வண்டி ஓட்டுவதோ – ஏதாவது ஒன்று.
இன்னின்னாருக்கு இன்னின்ன வேலை என்று ஒரு திட்டமா இருக்கிறது.
விருப்பம் அறிந்து வேலை கொடுக்கும் இடமா இந்த உலகம்!!
பசுவைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். எருமையைச்
சேற்றிலே புரளவிடுகிறார்கள்; இரண்டும் பால் கொடுக்கிறது!
இந்த உலகத்தில் ஏதாவது ஓர் ஒழுங்குமுறை இருக்கிறதா என்ன!
மாகாளி கேட்பான் இதுபோல – ‘ஏண்ணேன், உனக்கு ஏத்ததா ஓர்
ஒழுங்கான வேலையைத் தேடிக் கொள்ளமாட்டேன்கிறே’ என்று சொந்தத்துடன்
கேட்பவர்களும் உண்டு.
அவன் ஏழை – ஆனால் ஏழைக்காக இந்த உலகம் இல்லை என்ற எண்ணம்
அவனுக்கு. ஏழையை இந்த உலகம், ஏழ்மையில் இல்லாதவர்களின்
முன்பு நடமாட விட்டு வேடிக்கை காட்டுகிறது என்ற எண்ணம்!!
‘ஐயோ பாவம்!’ என்று உருக்கமாகப் பேசவேண்டுமே ஏழை இல்லாவிட்டால்
எப்படிப் பேச முடியும், அதுபோல் அதற்காகத்தான் இந்த உலகம்
நம்மை வைத்துக் கொண்டிக்கிறது; இல்லையென்றால் இவ்வளவு
கொடுமை செய்யும் இந்த உலகம் ஒரே விழுங்காக நம்மை விழுங்கிவிட்டு,
வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிடாதா என்ன!!” என்று
கேட்பான் மாகாளி. மற்றவர்கள், “அண்ணன் வேதாந்தம் பேசுது!
ஒரு சமயம் அதனோட அப்பாரு பெரிய சாமியாரா இருப்பாரோ?”
என்று பேசிக் கொள்வார்கள்.
“புத்தி உனக்கு உலக்கைக் கொழுந்துடா டோய் சாமியாரா இருந்தாபிள்ளை
எப்படிடா பெத்துக்க முடியும்?” என்று கேட்பான் ஒருவன்.
“பிள்ளை பொறந்த பிறகு சாமியாராகியிருக்கக் கூடாதா” என்பான்
இன்னொருவன். “ஏம்பா! சாமியாரா வேஷம் போட்டுக்கிட்டே
நம்ம சடையன் மகளோட சினேகிதம் வைத்துக்கொள்ளலியா, அந்தப்
புதுசாமி... அதுபோல இருக்கப்படாதோ” என்பான் மற்றொருவன்.
எல்லாம் மாகாளி, இல்லாதபோது.
மாகாளி! தன்னுடைய பிறப்பு வளர்ப்பு பற்றிய கேள்விகளுக்குத்
தான் பதில் சொல்லுவதில்லை; ஆனால், அவன் உடலிலே காணப்பட்ட
தழும்புகளைப் பற்றிக் கேட்டால் போதும், மளமளவென்று விவரம்
கூறுவான். ‘இந்தத் தழும்புகள்தாம் என் வாழ்க்கைக்கான குறிப்புகள்’
என்பான், சிரித்தபடி, என்ன சிரிப்பு அது! இந்த உலகத்தைக்
கேலி செய்யும் முறையிலே அமைந்த சிரிப்பு அது!
“அதைக்கேள் சொல்கிறேன்” என்று ஆர்வத்துடன் ஆரம்பித்தான்.
அவனுடைய வாழ்க்கையிலே நடைபெற்ற ஏதாவதொரு நிகழ்ச்சியைக்
கூறுவான் – கூறும்போது போர்க்களத்திலே ஒரு வீரன் பெற்ற
‘காயம்’ குறித்துப் பேசும்போது எவ்வளவு பெருமிதம் கொள்வானோ,
அந்த விதமான பெருமிதம் ஏற்படும்.
“நான் எங்கே பிறந்தேன் – என் பெற்றோர் யார் – அவர்களின்
நிலைமை என்ன – என்ற விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதாலே
எள்ளத்தனை பயனும் உனக்கோ, மற்றவர்களுக்கோ ஏற்படாது;
இதோ இந்தத் தழும்பின் விவரம் கேட்கிறாயே, இது கேட்க வேண்டிய
கேள்வி. இதுபற்றி விவரம் உனக்குத் தெரிவது நல்லது; அதாவது,
நீ ஏழை என்பதை மறந்து, மனிதன், ஆகவே நீதி நியாயத்துக்காகப்
பாடுபட வேண்டியவன், அக்கிரமத்துக்கு அடிபணியாமலிருக்க
வேண்டியவன் என்ற உணர்வு இருந்தால்” என்ற முன்னுரையுடன்
மாகாளி பேச ஆரம்பிப்பான்.
மாகாளியின் உடலிலே இருந்த தழும்புகள் – முகத்திலே கூடத்தான்
– அவனை அவலட்சணமாக்கிவிடவில்லை; அவனுடைய வயதுக்கு மீறிய
ஒரு முதுமைக் கோலத்தை மட்டுமே அந்த வடுக்கள் ஏற்படுத்திவிட்டிருந்தன.
அந்தத் தழும்புகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டு பேசுவதில்
மாகாளிக்கு ஒரு தனி ஆர்வம்.
“இது விறகுக் கட்டையாலே பலமாக அடித்ததாலே ஏற்பட்டது. இரத்தம்
எப்படிக் கொட்டிற்று தெரியுமா... பனியன் முழுவதும் இரத்தக்கறை..
நாலு மாதம் பிடித்தது மண் உலர.. பிறகு பலமாதம் அந்த இடத்திலே
ஒருவிதமான வலி மட்டும் இருக்கும், அடிக்கடி... ஒரு வருஷத்துக்குப்
பிறகு வலியும் நின்றுவிட்டது. வடு மட்டும் பதிந்துவிட்டது...
ஏன்! ஏண்டா! அப்படிப் பார்க்கிறாய்... எப்படித்தான் தாங்கிக்
கொண்டானோ என்ற யோசனையா... பைத்தியக்காரா! அப்போது
நான் போட்ட கூச்சல் இப்போதுகூடக் காதிலே விழுவது போலிருக்கிறது...
எட்டு வயது எனக்கு அப்போது...”
“அண்ணேன்! எட்டு வயதிலோ இந்தக் கொடுமை?”
“ஏன்! ஏண்டா அப்படி ஒரு கேள்வி கிளப்பறே... எண்பது வயதான
பிறகுதான் விழணும், இந்த மாதிரி அடி என்கிறாயா...”
“போண்ணேன்! தழும்பைப் பார்க்கறபோதே எனக்கு வயிறு பகீல்னு
இருக்குது... நீ சும்மா தமாஷ் பேசறியே...”
“டே! தழும்பைப் பார்த்தாலே நீ பதறிப் போறே... இந்த இடத்திலே
இருந்து இரத்தம் குபுகுபுன்னு வந்ததைப் பார்த்தே மனசு
துளிகூடப் பதறலியே, என்னோட எஜமானுக்கு, தெரியுமா....”
“யாரண்ணேன் இந்தக் கொடுமையைச் செய்த பாவி?”
“புண்ணிய கோட்டீஸ்வர அய்யர்னு பேர்டா அவருக்கு. முட்டாப்
பயலே! அவரைப் போயி பாவின்னு பேசறியே.... பாவி என்கிற
பட்டம் இருக்குதே, அது நம்மாட்டம் பஞ்சைப் பராரிகளுக்குன்னேதான்
ஏற்பட்டதுடா... பெரிய இடத்துப் பக்கம்கூட அது தலைகாட்டாது...
எட்டு வயது எனக்கு... குண்டுக் கட்டையன்னுதான் கூப்பிடுவாங்க...கோபமா
இல்லே... செல்லமா... அப்படி இருப்பேன். புண்ணிய கோட்டீஸ்வர
அய்யர் ஓட்டலிலே வேலை... மேஜை துடைக்கறது, எச்சில் எடுக்கறது,
பாத்திரம் துலக்கறது, இதெல்லாம்...”
“அண்ணேன்! கோபம் செய்து கெள்ளாதே.. அம்மா அப்பா உன்னை
எட்டு வயதுக்கேவா உழைக்க விட்டுவிட்டாங்க...”
“அம்மா இருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியாது;
அப்பாதான் அம்மாவை விட்டுவிட்டுப் போயிட்டாரே, முன்னாலேயே,
சிவலோகம்... ஒரு விறகு பிளக்கற ஆளை அப்பா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு
இருந்தேன். என்னை வளர்த்தவரு... அவருக்கு என்ன கூலி கிடைக்கும்?
சொல்லணுமா... அதனாலே ஓட்டல் வேலைக்குப் போனேன்...”
“வேலை செய்கிறபோது எங்காவது உயரமாக ஏறிக் கீழே விழுந்துட்டயா...”
“உயரக்க ஏறி! ஆளைப்பாரு! நாம் குப்பை மேட்டுக்காரரு...
கோபுரமா ஏறிடுவோம்... கீழே விழுந்ததாலே ஏற்பட்டது இல்லா....
செம்மையான அடி விறகுக் கட்டையாலே...”
“ஓட்டல்காரனா அடிச்சான்?”
“அவனுக்கு அதுதான் வேலையா... ஓர் ஆளைக் கூப்பிட்டு அடிடான்னு
உத்தரவு போட்டான். அவன் எடுத்தான் விறகுக் கட்டையை; கொடுத்தான்
பலமா, கொட்டு கொட்டுன்னு இரத்தம் கொட்டிச்சு.”
“ஏன், நீ என்ன தப்பு செய்தே...?”
“பாரேன் உன்னோட புத்தியை. மாறமாட்டேன்குதே அந்தப் புத்தி.
ஏழை தப்பு செய்துதான் இருப்பான். அதனாலேதான் அடி வாங்கி
இருக்கிறான்னு தீர்மானமா எண்ணிக் கொள்றே... உன் பேர்லே
குத்தம் இல்லேடோய்! குப்பத்திலே கிடக்கிறபோது வேறு என்ன
நினைப்பு வரும்... போன ஜென்மத்திலே ஏதோ பெரிசா பாவம்
செய்து விட்டதாலேதான் இப்ப இப்படி இருக்கிறோம்னு சொல்ற
கூட்டந்தானே நாம... மடப்பயலே! தப்பு செய்யததாலே இந்த அடி
கொடுக்கலே... அய்யருக்குப் பிடிக்காத காரியம் செய்தேன்...
அதனாலே அவருக்குக் கோபம்.... ஏன் அந்தக் காரியம் அவருக்குப்
பிடிக்கலேன்னு கேட்பே. ஏன் பிடிக்கலேன்னா நான் செய்த காரியத்தாலே
அய்யருக்கு நஷ்டம். அதனாலே கோபம். புரியலையா இது? புரியாது.
அதோ... மேலே ஆகாசத்திலே ஆயிரமாயிரமா தேவர்கள் இருக்கறாங்கன்னா
போதும், இருக்கும்னு சொல்லுவே புரிந்தவன்போல.... கேள்
– நடந்ததை... வழக்கம்போல மேஜை துடைத்துவிட்டுப் பாத்திரத்தைக்
கழுவ எடுத்துக்கிட்டுப் போனேன், உள் பக்கம்... சமையற்கட்டு
பக்கம். இட்லிக்கு மாவு ஆட்டிக்கிட்டு இருந்தான் வேலைக்காரன்.
எங்கோ பார்த்துக்கிட்டிருக்கிறான் என்ன கவலையோ அவனுக்கு!
தடால்னு மேலே இருந்து ஒரு பல்லி விழுந்தது பாரேன் மாவிலே...
பார்த்ததும் பதறிப் போயிட்டேன். அவன் அதைப் பார்க்காமலே
மாவை அரைக்கிறான். பல்லி கூழாயிட்டிருக்கும்; மாவோடு
சேர்ந்து போச்சு. பல்லி, பல்லின்னு ஒரு கூச்சல் போட்டேன்.
அப்பத்தான் விஷயம் விளங்கிச்சி அவனுக்கு. கூழாயிப் போனதுபோக
மிச்சம் இருந்த பல்லித் துண்டை, துழாவித் துழாவி எடுத்து
வெளியே போடப்போனான். இதற்குள்ளே சமையற்கட்டு ஆளுங்க
கூடிட்டாங்க. பல்லி விழுந்து செத்துத் தொலைந்துவிட்டது.
விஷமாச்சே! அந்த மாவை இட்லிக்கு உபயோகப் படுத்தினா சாப்பிடறவங்க
என்ன கதி ஆவாங்க? எனக்கு அந்த எண்ணம்.... பல்லி! பல்லின்னு!
கூவிக்கிட்டே ஓடியாந்தேன் அய்யரிடம் சொல்ல. பின்னாலேயே
துரத்திக்கிட்டு போயிட்டான் என்னை, ஓட்டல் பின்புறம்.
விடு என்னை விடு! நான் அய்யர்கிட்டே சொல்லப்போறேன்.
மாவிலே பல்லி, பல்லின்னா விஷம்! இட்லி சாப்பிட்டா செத்துப்
போயிடுவாங்க... அப்படி இப்படின்னு ஒரே கூச்சல்... அய்யரே
வந்துவிட்டார். நான் அவரிடம் விஷயத்தைச் சொல்லுகிறதுக்குள்ளே
மாவு அரைக்கிறவனே அவரிடம் இரகசியமாக எதையோ சொன்னான்.
அய்யர் உடனே என் பக்கம் வந்து ‘டேய் குண்டுக்கட்டை! வாயைப்
பொத்திக்கிட்டு இருக்கமாட்டே. ஓட்டல் பெயரையே நாசம் ஆக்கிவிடுவே
போலிருக்கிறதே! விழுந்த பல்லியைத்தான் வெளியே எடுத்துப்
போட்டாச்சே! நீ எதுக்காக வருகிறவனெல்லாம் பயம் கொள்ற
மாதிரி பல்லி, பல்லின்னு கத்திக்கிட்டு இருக்கேன்’னு கேட்டார்.
பதறிப் போயிட்டேன்! பல்லி செத்துக் கூழாயிப் போய்விட்டது.
விஷம்! நான் எல்லோருக்கும் சொல்லத்தான் போறேன்னு சொன்னேன்.
அப்பதான் அய்யரு போட்டாரு. போட்டாரா.. வேலையாள் ஒருத்தன்
அங்கே கிடந்த கட்டையாலே பலமாகப் போட்டான்... குழகுழன்னு...இரத்தம்.
“யாருமே கேட்கலியா என்ன இது? ஏன் அடிக்கறிங்கன்னு...”
“நீ ஒரு முட்டா பயதானே! ஏண்டா அவனுக்கு அதுதானா வேலை.
சாம்பார் கொஞ்சம் போடு, அய்யர் சட்னி கொண்டா, வடை சூடா
கொடு... காப்பிக்குச் சக்கரை அப்படி இப்படின்னு அவனவன்
நாக்கு ருசியைக் கவனிச்சிக்கிட்டு இருக்கிறான். அந்த நேரத்திலேயா
எவனை எவன் அடித்தான்! ஏன் அடிச்சான்! என்று கேட்கத் தோணும்.
அடேயப்பா! அப்படிக் கேட்கிற சுபாவம் மட்டும்இருந்துதுன்னா
உலகம் இப்படியா இருக்கும். ஒரு பயலும் ஒன்னும் கேட்கலே.
இரத்தம் அதிகமாகக் கொட்டறதைப் பார்த்து அய்யரேதான் வேறே
ஓர் ஆளைப் பார்த்து அடுப்படிக் கரித்தூளை அரைச்சித் தடவுடான்னு
சொன்னாரு. இந்தச் சின்ன வயசிலே திருட்டுக் கையிருந்தா,
பெரிய பயலானா வழிப்பறி கொள்ளையல்ல நடத்துவான்” என்று
கூறிக்கொண்டே வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
‘அடப் பாவிப்பயலே! இப்படி ஈவு இரக்கம் இல்லாமலா?’
“டேய்! என்னைத்தாண்டா பலபேர் ‘பாவிப்பயலே! எனக்கேண்டா
திருட்டுப் புத்தி! ஓட்டலிலே வயிறு நிறைய காட்டறாங்களே
போதாதா’ என்று கேட்டுப் புத்தி சொன்னாங்க.”
“அய்யர் சொன்னதையே நம்பிவிட்டாங்களா!”
“நம்பாம, நான் சொன்னதையா நம்புவாங்க... யே, அய்யர் சொன்னதைத்தான்
நம்பியிருப்பே... கொஞ்சம் முணுமுணுத்து இருந்தா போடற
இட்லியிலே கொஞ்சம் பெரிசாப் பார்த்துப் போட்டா போதுமே,
பல்லை இளிச்சிக்கிட்டு அவர் பக்கம் சேர்ந்துவிடமாட்டயா!”
இப்படி நடந்தது பற்றிக் கூறுவான் மாகாளி. கேட்கும் குப்பத்து
ஆட்கள் ‘ஐயோ பாவம்! ஐயோ பாவம்’ என்று கூறி பச்சாதாபம்
காட்டுவார்கள். அதிலே மாகாளி என்றும் திருப்தி அடைந்துவிடுவதில்லை.
‘அக்கிரமத்தைக் கண்டால் எனக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.
இது இன்று நேற்று ஏற்பட்ட சுபாவம் அல்ல. கூடவே பிறந்த
சுபாவம்னு நினைக்கிறேன். நமக்கு என்ன என்று இருந்துவிட
மனம் ஒப்புவதில்லை. அக்கிரமத்தைக் கண்டிக்க எல்லோருக்கும்
உரிமை இருக்கிறது. கடமை இருக்கிறது என்று அழுத்தமான நம்பிக்கை
எனக்கு. கடமை என்ற எண்ணம். அந்தக் கடமையைச் செய்யும்போது
எந்தத் தொல்லை வந்தாலும் தாங்கிக் கொண்டாக வேண்டும்
என்று ஓர் உறுதி. இரத்தத் தழும்புகள் அந்த உறுதியின் சின்னங்கள்”
என்று கூறுவான்.
மாகாளி குப்பத்து பாணியில்தான் பேசினான். அவனுடன் பழகியவர்களிலே
பலரும் அதே பாணியிலேதான் பேசினார்கள். நான் அந்தப் பாணியிலேயே
முழுவதும் எழுதிக் கொடுக்கவே எண்ணினேன். ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை.
அதனால் சில பகுதிகளை அவர் விரும்பிய விதமாகவும் எழுதினேன்.
முக்கியமானதைக் கூற மறந்துவிட்டேன் நான் ‘மரபு’ இதழில்
துணையாசிரியன்.
எங்கள் மரபு இதழில் வியப்பு அளிக்கும் உண்மை நிகழ்ச்சிகள்
ஒரு தனிச்சுவையுள்ள பகுதி. உங்களிடம் உண்மையை ஒப்புக்கொள்வதிலே
என்ன தவறு? பெரிய புள்ளிகள் நடக்காதவற்றைக்கூட உண்மையில்
நடந்ததாகச் சொல்லுவார்கள். எங்களுக்கு அவர்கள் சொல்வது
பொய் என்று தெரியும். தெரிந்ததும், வெளியிடுவோம் வியப்பளிக்கும்
உண்மை நிகழ்ச்சி என்று. எமது மரபு இதழில் இந்தப் பகுதிக்குத்
தலைப்பு, ‘அதிசயம் ஆனால் உண்மை’ என்பதாகும்.
வேட்டையாடுவதில் திறமைமிக்கவர் என்று பெயர் பெற்ற வெட்டியூர்
மிட்டாதாரர் குட்டப்ப பூபதியாரைப் பேட்டி கண்டு, ‘அதிசயம்
ஆனால் உண்மை’ பகுதிக்கான தகவலைப் பெற்றுவரச் சொல்லி ஆசிரியர்
என்னை ஒருநாள் அனுப்பி வைத்தார். வழக்கமாகக் கிடைக்கும்
தகவல்கள் கிடைத்தன. காட்டெருமை அவரைக் கீழே தள்ளி தொடையில்
ஆழமாகக் குத்திவிட்டதாம், ஒரு தடவை; வடு இருந்தது. போட்டோகூட
எடுத்துக்கொண்டேன். எனக்கென்னவோ அந்த வடு அறுவைச் சிகிச்சையின்
விளைவு போலத் தெரிந்தது. ஆனால் மிட்டாதாரர் கூறுகிறாரே,
காட்டெருமை குத்தியதால் ஏற்பட்ட வடு என்று. காட்டெருமைத்
தலையைக்கூடக் காட்டினார். மாளிகைக் கூடத்திலே படம் போட்டுத்
தொங்க விடப்பட்டிருந்தது. வெட்டியூரார் உடம்பில் காணப்பட்ட
தழும்புகளைக் குறித்த விவரத்தை எழுதிக் கொடுத்தேன். எழுத
எழுத எனக்கு ஒரு விதமான கசப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி.
இவர் இந்த வடுக்களைப் பெற்றதனால் உலகுக்கு என்ன பலன்?
உலகிலே ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வதிலே ஈடுபட்டு, அதிலே
காயம் ஏற்பட்டு, அது வடுவாகி இருந்தால் அதுபற்றிப் பெருமைப்
படலாம். உல்லாச புருஷனின் பொழுதுபோக்கு வேட்டையாடுவது.
இதிலே ஏற்பட்ட ‘வடு’ பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது
என்று எண்ணிக்கொண்டேன். வெளியே சொல்லத்தான் முடியுமா!
அவருடைய தயவினால் மரபு இதழுக்கு ஆயுள் சந்தாக்காரர்கள்
மட்டும் அறுபது பேர் கிடைத்தார்கள். ஒரு சந்தா ஆயிரம்
ரூபாய்!
தமிழாசிரியர்கள், பழந்தமிழ் மன்னர்கள் களத்திலே கலங்காது
நின்று போராடிப்பெற்ற விழுப்புண் பற்றிப் பெருமிதத்துடன்
பேசக் கேட்டிருக்கிறேன். புகழின் சின்னம், வீரத்தின் முத்திரை,
வெற்றிக் குறிகள் என்றெல்லாம் பாராட்டுவர். ஓரளவுக்கு
இது பெருமைக்குரியதுதான். ஆனால் இதிலேயும் மன்னர்களுக்கு
மூண்டுவிட்ட போர்தான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.
யாரோ ஒருவருக்கு ஏற்படும் அக்கிரமம் கண்டு கொதித்து
எழுந்து போராடிப் பெற்ற வடு அல்லவா முழுப் பெருமிதம்
தரத்தக்கது என்று எண்ணிக் கொண்டேன்.
அந்த எண்ணம் வளர வளர, சாமான்யர்கள் என்ற வரிசையிலே இருந்தபோதிலும்
பிறருக்காகப் பாடுபட்டு இன்னல் ஏற்றுக் கொண்டவர்கள் இருப்பார்களே.
அவர்களைக் கண்டு பேசி, அவர்களின் வாழ்க்கையிலே நடைபெற்ற
வியப்பளிக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் பிறந்தது. ஆசிரியரிடம் கூறினால் பெற்றுக்
கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. ஆகவே, இதழுக்காகத்
தகவல் சேகரித்திடும் நேரம் போக, மிச்ச நேரத்தை என் இருதயம்
விரும்பிய காரியத்துக்காகச் செலவிட்டு வந்தேன். அப்போதுதான்
மாகாளி எனக்குக் கிடைத்தான்.
ஒரு மருத்துவமனையில் மாகாளி கிடத்தப்பட்டிருந்தான், உடலெங்கும்
கட்டுகளுடன். ஆபத்து நீங்கிவிட்டது. ஆள் பிழைத்துக் கொள்வான்,
குறைந்தது மூன்று மாதம் மருத்துவமனையில் இருக்கவேண்டும்
என்று கூறினார்கள். மறந்துவிட்டேனே, நான் மருத்துவமனையில்
சென்றது மாகாளியைப் பார்க்க அல்ல; புதிய மோட்டாரில் ஏறும்போது
கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்ட அனாதை விடுதி தர்மகர்த்தா
அய்யப்பனைக் கண்டு தகவல் சேகரிக்கச் சென்றிருந்தேன்.
நாளிதழ்கள், அய்யப்பன் மோட்டாரில் ஏறப்போகும்போது கால்
வழுக்கிவிட்டது. காரணம் அவர் போட்டிருந்த கால் செருப்பின்
அடிப்பாகம் ரப்பராலானது; வழவழப்பானது என்று எழுதி இருந்தன.
வழவழப்பான ரப்பர் அடிப்பாகம் கொண்ட புதுவிதச் செருப்புத்
தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியாருக்குக் கடுங்கோபம்.
அவர்கள் உடனே மரபு ஆசிரியரைக் கண்டு அய்யப்பன் வழுக்கி
விழுவதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டு அறியும்படிக் கூறி
இருந்தனர். நான் மருத்துவமனை செல்ல நேரிட்டது, இந்தக்
காரணத்தால்.
அய்யப்பன், பலமாக மறுத்தார். கால் வழுக்கிக் கீழே விழவில்லை!
கண் இருண்டது. மயக்கம் ஏற்பட்டது; திடீர் மயக்கம். காரணம்
என்ன தெரியுமா என்று கேட்டு உருக்கமான செய்தி கூறினார்.
அவர் மோட்டாரில் ஏறப்போகும்போது ஒரு சிறுவனைக் கண்டாராம்,
பாதையின் மற்றொரு பக்கத்தில் அவன் கண்களிலே தெரிந்த துயரத்தைக்
கண்டதும், ‘ஆண்டவனே, இப்படிப்பட்ட அனாதைகளை இரட்சிக்கும்
தொண்டினைப் பரிபூரணமாக என்னால் செய்ய முடியவில்லையே!
போதுமான பணமில்லையே. முந்நூறு குழந்தைகளை மட்டுந்தானே
இரட்சிக்க முடிகிறது. இதோ ஒரு மொட்டு கருகிக் கொண்டிருக்கிறதே’
என்று எண்ணினாராம். உடனே ஒரு மயக்கம். கண் இருண்டது; கீழே
சாய்ந்தார். அய்யப்பன் சொன்னது இது. அதிசயம் ஆனால் உண்மை.
தொழில் முடிந்ததும் நான் மருத்துவமனையில் கிடந்த மற்றவர்களைப்
பார்த்தபடி கிடந்தேன். மாகாளி உடலெங்கும் கட்டுகளுடன்
கிடத்தப்பட்டிருந்தான். அவனருகே நின்று கொண்டு பரிவுடன்
பழம் சாப்பிடச் சொல்லி, நின்று கொண்டிருந்த இளமங்கையைக்
கண்டதும், எனக்கு வியப்பாகிவிட்டது. பெண் பெரிய இடத்தில்
வாழ்க்கைப்பட்டு, ஏதோ சச்சரவு காரணமாகக் கணவனைப் பிரிந்து
தனியாகிப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வேலை பார்த்து வருபவள்;
மாஜி பெரிய இடம். பெயர் வள்ளி.