அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தழும்புகள்
4

வள்ளி : அவளுடைய அழகு கண்டீர் உமது மனம் அவளை நாடிற்று... அருகே அழைத்தீர்.... ஆயிரம் தடவை, அவள் தடுத்திருப்பாள், ஆகாது... அடுக்காது... முறையல்ல – நெறி அல்ல என்று. என்னென்ன கூறினீரோ... கவிதை பாடி இருப்பீர், கதை சொல்லி இருப்பீர், கைநீட்டி, சத்தியம் என்று சொல்லி இருப்பீர்... நம்பினாள்... அவளை நாசமாக்காதீர்... நான் அவளுடைய தமக்கை என்று வைத்துக் கொள்ளும்... காலில் விழச் சொன்னால்கூட விழுகிறேன்.

சோமு : (விம்மும் நிலையில்) அம்மா! என்னை மன்னித்து விடு... மன்னித்துவிடு... மன்னித்துவிடம்மா, மன்னித்துவிடு.

வள்ளி : அவளை உமது நிரந்தர விருந்தாக்கிக் கொள்ளுமய்யா... அவளிடம் பெற்ற அன்புக்குக் கட்டுப்படுவதுதான் தர்மம். அந்த அன்பு ஒன்றுக்கு ஆயிரமாக ஓங்கி வளரும்... குடும்பம் தழைக்கும்.

(வள்ளி கண்கசக்குகிறாள். அதைக் கண்ட மாகாளி.)

மாகாளி : நீ ஏனம்மா அழுகிறாய்... பாரடா பார்! பேயனே! அந்தப் பெண்ணின் கண்ணீருக்காவது பயப்படு...

வள்ளி : அந்தப் பெண் வீட்டிலே திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்தால்கூட, நான் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதம் பெற்றுத் தருகிறேன்!

(வேறோர் சைக்கிளில் வேறோர் பெண் வருகிறாள். வள்ளியைப் பார்த்துவிட்டு.)

வள்ளி! வள்ளி! எங்கே... இப்படி...

(சோமுவைப் பார்த்தபடி தலைகுனிகிறாள். சோமு கூச்சமடைந்து தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.)

மாகாளியும் வள்ளியும் அதைக் கண்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

மாகாளி, பெண்கள் அறியாமல், சோமுவை இடித்து வந்தவளைக் காட்டி, ‘இவளா?’ என்று ஜாடையால் கேட்கிறான்.

வெட்கமும் புன்னகையும் கொண்ட நிலையில், சோமு ‘ஆமாம்’ என்று தலையை அசைக்கிறான்.)
வள்ளி : நீதானா... நளினா... என்னிடம்கூட இத்தனை நாள் மறைத்து வைத்தாயே...

நளினா : சொல்லிவிட்டாரா...

மாகாளி : உம்! உம்! சொல்லி நாள் பார்க்கச் சொல்லுகிறார்.

வள்ளி : வாருங்கள். நளினா வீட்டுக்குப் போவோம்... பெரியப்பாவிடம் பேசலாம்...

மாகாளி : பெரியப்பாவா...?

வள்ளி : ஆமாம்; நளினாவின் அப்பாவை நான் செல்லமாகப் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவது... நானும் நளினாவும் ஒன்றாகப் படித்தவர்கள்..

மாகாளி : (குறும்புப் புன்னகையுடன்) நான் நம்பமாட்டேன்... இதோ இவரும் நம்பமாட்டார். உனக்குத் தெரிந்தததில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட...அதுக்கு... நளினாவுக்குத் தெரியாது...

வள்ளி : இந்த மாதிரி, சாந்தமாக வருஷத்திலே எத்தனை தடவை... ஒரு மூன்று நாலு தடவையாவது இருப்பது உண்டா...?

மாகாளி : மனத்திலே குமுறல் இருக்கும்போது, சாந்தி எப்படி ஏற்படும்?...

வள்ளி : ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாகாளி : அதற்கு ஒன்று, உணர்ச்சியற்ற மரக்கட்டை ஆகிவிட வேண்டும்... அல்லது செத்துத் தொலைக்க வேண்டும்.

(இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் சோமு, நளினாவின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கிறான்.)

மாகாளி : என் கதை கிடக்கட்டும்... இனி இந்தப் பெண் விஷயம்.

வள்ளி : நான் பொறுப்பு... திருமணம் நடக்கும்...

மாகாளி : மனம் நிம்மதி அடைந்ததம்மா. நான் வருகிறேன்... அபலை அழியாது பார்த்துக் கொள்ள முடிந்தது... என்றும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு...

வள்ளி : கோபம் ஏன் வருகிறது தெரியுமா...

மாகாளி : நமக்குப் பிடிக்காதது நடக்கும்போது கோபம் வரத்தானே செய்யும்?

வள்ளி : நமக்குப் பிடிக்காதது மட்டுமல்ல... நம்மால் தடுக்க முடியாதது நடந்தாலும், கோபம் வரும்...நம்மால் தடுக்க முடியவில்லையே என்பதாலே கோபம், வெட்கம், இரண்டும் சேர்ந்து கொட்டுகிறது.

மாகாளி : உண்மைதான்... எனக்கு, அக்கிரமத்தைக் கண்டால் கட்டோடு பிடிக்காது... கோபம்தான் வரும்...

வள்ளி : அக்கிரமத்தைப் போக்க முடிவதில்லை.

மாகாளி : ஆமாம்... முடிவதில்லை.

வள்ளி : ஏன்? முயலுவதில்லை... நம்மால் ஆகுமா என்ற பயம்.

மாகாளி : அதுவும் உண்மைதான்.

வள்ளி : ஆனால், கோபத்தால் என்ன பலன்? அக்கிரமம் ஒழிகிறதா? உம்! அதுதான் இல்லை. கோபம் நம்மையே அக்கிரமம் செய்ய வைக்கிறது.

மாகாளி : வலியோர் எளியோரை வாட்டும்போது... எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்.

வள்ளி : முடியாது... கூடாது... ஆனால் அதற்காக நாமே துடுக்குத்தனம் செய்வதா...?

மாகாளி : அப்பொழுதுதான் அக்கிரமக்காரன் அடங்குகிறான்.

வள்ளி : சரியாகச் சொன்னாய்... அக்கிரமக்காரன் அடங்குகிறான்... அக்கிரமம் அழிவதில்லை... அக்கிரமம் கூடாது என்பதுதானே உன் நோக்கம்?

மாகாளி : ஆமாம்... ஆனால் வழி தெரியக் காணோமே...

வள்ளி : அடேயப்பா! அவ்வளவு சுலபத்திலா, வழி கிடைத்துவிடும்.

அவ்வளவு சுலபத்திலே வழி கிடைத்துவிடும் என்று வள்ளி சொன்னது போலத்தான், நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நளினாவைத் திருமணம் செய்துகொள்ள சோமு இணங்கினான். ஆனால் சோமுவின் தந்தை சீறினார். சோமுவின் தாய்மாமன் படை திரட்டினான். வள்ளியின் தூண்டுதலே இதற்குக் காரணம் என்று தூற்றினான். வள்ளிக்கும் மாகாளிக்கும் கள்ளக்காதல் என்று கதை கட்டிவிட்டான். இது வள்ளியை மணந்து கொண்டவன் காதிலே விழுந்தது; விவாக விடுதலைக்கான வழக்குத் தொடுத்துவிட்டான்; சோமுவின் மாமன் சாட்சி.

நளினாவின் திருமணத்தன்று ஒரே கலவரம் – மூட்டி விடப்பட்ட கலவரம். அதிலே மாகாளிக்குத்தான் பலமான தாக்குதல்.

அந்தத் தாக்குதலில் கிடைத்த காயங்களுக்காகத்தான். மாகாளிக்கு உடலெங்கும் கட்டுப் போட்டிருந்தார்கள்.

மாகாளியின் உடல்நிலை தேறுவதற்காக வள்ளி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டாள். அவள் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்ததையேகூடக் காரணமாக்கிக் காட்டினார். வழக்கறிஞர் – விவாக விடுதலைக்காக.

மாகாளியின் மனம் எரிமலையாகக் கொதித்தது. வள்ளியோ அமைதியை இழக்கவில்லை; புன்னகையைக்கூட இழக்கவில்லை.

“தூற்றுகிறார்கள்! அதனால் என்ன? என் உள்ளத்தில் தூய்மை இருக்கிறது! எனக்கு ஓர் அண்ணன் கிடைத்ததாக எண்ணி நான் பெருமைப்படுகிறேன்” என்று வள்ளி சொன்னபோது, எதற்கும் அழுது பழக்கப்படாத மாகாளிகூடக் கசிந்து கண்ணீர் வடித்தான். ‘நான் இத்தகைய பாச உணர்ச்சியை, நேச உணர்ச்சியைக் கண்டதே இல்லையம்மா, கண்டதே இல்லை’ என்று கூறி, வள்ளியின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

மருத்துவர், ‘மாகாளி! உனக்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் உடலில் பல இடங்களிலே தழும்புகள் இருக்கும்; மறைய நெடுங்காலம் பிடிக்கும்’ என்றார்.

“தழும்புகளா! அவை மறையவே வேண்டாம் டாக்டர்! அவை அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். நான் பெற்ற பரிசுகள் அல்லவா அவை! அக்கிரமத்தை எதிர்த்து நிற்கும் என் கடமையை என்னால் முடிந்த மட்டும் செய்தேன் என்பதற்கான அடையாளங்கள்” என்றான்.

டாக்டருக்கு அவன் கூறியதன் முழுப்பொருள் விளங்கவில்லை.

“என் தங்கை மட்டும் எனக்கு அனுமதி கொடுத்தால், இன்னும் ஒரே ஒரு தழும்பு கடைசி தழும்பு பெற முனைவேன்! இந்தக் குணவதியைத் தவிக்கச் செய்து, தூற்றித் திரிபவனைத் தாக்கி தாக்கி...” என்று கூறியபடியே, களைப்பால் மாகாளி மயக்கமுற்றான்.

அவன் விரும்பிய கடைசித் தழும்பை அவன் பெற முடியவில்லை. வள்ளி அதற்கு அனுமதி கொடுக்காததால் அல்ல, வள்ளியை மணந்தவன், சதிசெய்து, மாகாளியின் உணவில் நஞ்சு கலந்து கொடுத்ததால், மாகாளி மாண்டு போனான்.

அவன் மறைந்தாலும், அவன் பெற்ற தழும்புகள் எவர் மனத்தையும் விட்டு மறையக்கூடாது. அவை உணர்த்தும் பாடங்களும் மங்கிவிடக்கூடாது என்பதற்காகவே ‘தழும்புகள்’ பற்றிய இந்தத் தகவலைத் தந்திருக்கிறேன்.

(காஞ்சி - 1965)