அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஏழ்மையால் எழில் கெட்டு. . .!
2

எந்த அரசு எனினும், எம்முறையில் நடாத்தப்படும் அரசு எனினும் அந்த அரசு அந்நாட்டு நல்லறிவாளர்களின் நட்புறவு பெற்றிட வேண்டும் - நாற்படையினும் மேலானதோர் நற்படையாகிடும் அந்த நட்புறவு. சொல்லேர் உழவர் என்பது கவிதை புனைவோரை மட்டும் குறித்திடுவதாகாது. . . அறிவுக் கழனியில் பணியாற்றிடும் படைப்பாளர்கள் அனைவரையும் குறிப்பதாகும். அத்தகைய அறிவாளர்களைப் புறக்கணிக்கும் அரசு, புறக்கணிக்கப்படவேண்டிய அரசாகிவிடும் - ஓர் நாள். இவை, ஆன்றோர் மொழிந்தவை. இன்றுள்ள ஆளவந்தார்களோ, ஏன் அடிக்கடி, எதற்கெடுத்தாலும் ஆன்றோர், சான்றோர் என்றெல்லாம் அழைக்கின்றீர்கள்; நாங்கள் இருக்கின்றோமே, போதாதோ என்கிறார்கள்! சொல்வது மட்டுமல்ல, அறிவாளர்கள் கூறுவதை மருந்துக்கும் கொள்ளமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர் - கற்பாறை போல!!

நான் குறிப்பிட்டேனே ஒரு பட்டியல் - விஞ்ஞான வித்தகர்களின் பெயர் வரிசை - இது மேலும் நீண்டதாகிடும். வேறு பற்பல கல்லூரிகளில் உள்ளவர்களின் பெயர்களையும் சேர்த்தால் நான் தந்துள்ள பட்டியல், தயாரித்தால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய பட்டியலில் ஒரு சிறு துண்டு.

இவர்கள், மொழி, வெறி, வகுப்புவாதம், ஜாதிப் பித்து, கட்சி மாச்சரியம், பதவி மோகம், வன்முறையில் நாட்டம், குழப்ப வாதம், பிளவு மனப்பான்மை போன்ற எவற்றினுக்கும் பலியாகிவிடக் கூடியவர்கள் அல்லர் அறிவாலயத்தில் உள்ளவர்கள். எதற்கும், தாமாக முன்னாலே வந்து நிற்கும் இயல்பினருமல்லர். சந்தடி, சச்சரவு, விவாதம் ஆகியவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு, மனநிம்மதியுடன் நுண்ணறிவு பெற்று வருபவர்கள். உனக்கா எனக்கா! பார்த்துவிடலாம் வா! என்ற வம்புக்கும் போட்டிக்கும் வருபவர்களல்லர், தமக்கென்று அமைந்துள்ள கோட்டத்தில் இருந்துகொண்டு, அறிவாற்றலைப் பெற்றுக்கொண்டு வருபவர்கள் - பிறகு அதனை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த.

அத்தகைய அறிவாளர்கள், கூடிப் பேசி, பிரச்சினையின் பல கோணங்களையும் கண்டறிந்து, ஒரு கருத்தைக் கொண்டு, அதனை அரசு நடாத்திடும் லால்பகதூர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர் - நல்ல விளக்கத்தையும் இணைத்து.

இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கக்கூடாது என்பதும், ஆங்கிலத்தை அகற்றிவிடக்கூடாது என்பதும் அவர்கள் லால்பகதூருக்குத் தெரிவித்திருக்கும் கருத்தின் சுருக்கம்.

அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியைக் குறை கூற, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள, மொழிப் பிரச்சினையைக் கிளப்பி விட்டு விடுகிறார்கள் என்று ஆளவந்தார்கள் அடித்துப் பேசுகிறார்கள் - தாமே அரசியல்வாதிகள் என்பதை மறந்து; அண்ணல் காந்தியாரின் பெயர் கூறி - அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டவர்கள் என்பதனையும் மறந்து.

இது பொருளற்ற குற்றச்சாட்டு என்றபோதிலும், இதனைக்கூடப் பட்டியலில் காணப்படுவோர்மீது வீசுவது இயலாததாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றுப் பயன் தரும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் - அரசியல் அங்காடியில் நுழைந்திடவேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லர்.

இத்தகைய அறிவாளர்களின் பேச்சைத் தட்டி நடக்கக் கூடாது, இத்தகையவர்களை அலட்சியப்படுத்தக்கூடாது என்று. ஆளவந்தார்கள் மேற்கொண்டாக வேண்டிய நெறி, அதிலும் குடியாட்சி முறை காரணமாக ஆளவந்தார்களாகிவிட்டவர்கள், இந்த நெறியைக் கடைப்பிடிக்கப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆனால், லால்பகதூர் என்ன கருதுகிறார்!! பட்டியலைப் பார்த்து என்ன கூறுகிறார்!! லால்பகதூர் இருக்கட்டும், பெரிய பதவியில் உள்ளவர்; உனக்கு அறிமுகமான மண்டலத்தைக் கேட்டுப் பாரேன்; பட்டியலைக் காட்டிப் பாரேன்! ஒரே வரியில் பதில் வரும், "இவர்கள் கூறிவிட்டால் போதுமா!!'' என்று. திகைத்து நிற்பாய், அவர் தொடருவார், "இவர்களுக்கு என்ன தெரியும்?'' என்பார்! கணைகள் தொடரும், "சில நூறுபேர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். தெரியுமா?'' என்பார். இறுதியாக, "பொதுமக்களுக்கு எது நல்லது என்பதுபற்றி இந்தப் புத்தகம் புரட்டிகளுக்கு என்ன தெரியும்? சதா பொது மக்களோடு பழகிப் பழகி, தொண்டாற்றித் தொண்டாற்றி, அதற்கே எம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட எமக்கன்றி, இந்த B.A. க்களுக்கும், M.A. க்களுக்கும், B. நஸ்ரீ. க்களுக்கும், M. நஸ்ரீ. க்களுக்கும், B.E. க்களுக்கும், M.E. க்களுக்கும், டட்.D. க்களுக்குமா தெரியப்போகிறது?'' என்று கேட்பார். அவருடைய கோபம் அந்த அளவோடு அடங்கிப்போய் விட்டால், தம்பி! நீ தப்பிப் பிழைக்கலாம்; இல்லையோ, ஆரம்பிப்பார் மளமளவென்று; படித்தவனெல்லாம் அறிவாளியா! படிக்காத மேதை இல்லையா, படித்தால் மட்டும் போதுமா! படித்தவன் படும்பாடு தெரியுமா? எத்தனை B.A. வேண்டும் சோறு போட்டால் போதும் விழுந்து கிடப்பார்கள் காட்டிய இடத்தில்! - இப்படிப்பட்ட துந்துபி தொடரும். காரணம் என்ன, அவருடைய ஆர்வத்துக்கு? அவருடைய கண்களுக்கு மிகப் பெரியவராக, மிகப்பெரிய இடத்தில் உள்ளவராக உள்ளவர்களிலே பலர், படிக்காமலேயே பாராளும் பக்குவம் பெற்றவர்களாகிவிட்டது தெரிகிறது. தெரியும்போது, படித்தவன் என்றால் என்ன, அதற்காகத் தனி மதிப்புத் தரவேண்டுமா என்ன? என்று தோன்றுகிறது. பள்ளிக் கூடத்துக்கும் தனக்கும் நடைபெற்ற "ஒத்துழையாமை' இயக்கம் வேறு அவருக்கு நினைவிற்கு வந்துவிடுகிறது. வந்ததும் வாயிலிருந்து வார்த்தைகள் பொறி பொறியாகக் கிளம்புகின்றன.

படித்தவர்கள் சிறுபான்மையினர் - மற்றவர்களே பெரும்பான்மையினர் - பெரும்பான்மையினர் ஆட்சி நடத்தும் உரிமை பெறுவதே ஜனநாயகம் என்று வாதாடியவர்களே உண்டு! அவர்களைக் காணும் நிலை எனக்கு ஏற்பட்டதுண்டு.

மதம், இனம், மொழி என்பவை காரணமாக, சிறு பான்மையினர் இருப்பது தெரியுமல்லவா! - அந்தப் பட்டியலில் தான் மண்டலம் சேர்த்துவிடுவார், நான் காட்டிய பட்டியலையும்! அதனால்தான், "ஆனால்' என்று பெருமூச்செறிந்தேன்.

இன்று நாடு உள்ள நிலைமையில் பட்டதாரிகள் சிறுபான்மையினர் - எண்ணிக்கைப்படி. அதிலும் நான் காட்டிய விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினர். எனவே அவர்கள், செல்வாக்கற்ற நிலையில் வைக்கப்பட்டுவிடுகின்றனர் - பொதுமக்களால் அல்ல - பொதுமக்கள் பெயரைக் கூறிக்கொண்டு ஆட்சி பீடம் பிடித்துக் கொள்பவர்களால். ஒருநாள் வந்தே தீரும் - படித்தவர்கள் பெரும்பான்மையினர் என்று நாடு பெருமையுடன் கூறிக் கொள்ளக்கூடிய நாள். இப்போது நல்ல வளர்ச்சி உள்ள நாடுகளில் அதுதான் நிலை. அந்த நிலை நோக்கி நம் நாடும் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே, இன்றைய சிறுபான்மையினர் நாளைய பெரும்பான்மையினர் ஆகப்போவது திண்ணம். என் மகன் B.A. என்று கூறிப் பெருமைப்படும் தகப்பனார், ஆத்திச்சூடியோடு தமது படிப்பை முடித்துக்கொண்டவராக இருக்கலாம்; ஆனால், அவருக்குத் தம் மகனை நன்றாகப் படிக்க வைக்கவேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது.

நல்லரசு, சிறுபான்மையினர் எண்ணிக்கையில் என்ற கணக்கு மட்டும் பார்த்து, அவர்களின் பேச்சைத் துச்சமென்று தள்ளிவிடக்கூடாது. சொல்லப்படுவதன் பொருள் பொருத்தம், ஏற்றம் கண்டறிந்து, கொள்வதா தள்ளுவதா என்ற முடிவு செய்ய வேண்டும் - இந்தி கூடாது என்று சொல்பவர்கள் சிறுபான்மையினர் - ஆகவே, அவர்கள் பேச்சிலே எவ்வளவு நியாயம் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது நல்லாட்சி என்ற தனிச் சிறப்பைப் பெற முடியாது.

அதுபோலவே, நாம் மிகச் சிலர் கூறி என்ன பயன்? ஆட்சியிலுள்ளோர் அதனை மதித்து ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் என்ற ஐயப்பாடு கொள்ளாமல், நாம் உணர்ந்ததை உரைப்பது நமது கடமை என்ற பொறுப்புணர்ச்சியுடன் பெங்களூர் விஞ்ஞானத் துறைக் கல்லூரியினர் மொழி பற்றிய தமது கருத்தினை லால்பகதூருக்குத் தெரிவித்தது கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று இவர்கள் கூறிடும் கருத்தினை, "சிறுபான்மையினர்' கருத்து என்று லால்பகதூர் கருதிவிடக்கூடும். ஆனால், இந்தக் கருத்து இதுவரையில் வாளாயிருந்த எத்தனை எத்தனையோ இலட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக்கொண்டுவிடும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஆளவந்தார்களின் கட்சியிலேதான் பலர், அருவருப்பு, அச்சம் காரணமாக, அறிவாளர்களின் கருத்தை மதித்திட மறுக்கின்றனர். பொதுமக்கள் அந்த விதமான போக்கில் இல்லை. அவர்களுக்கு அறிவாளர்கள் பற்றியும் தெரியும், ஆளவந்தார்களின் ஆலவட்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். கேட்கலாமே அவர்களின் பேச்சை, சிற்சில வேளைகளில்.

"யாரு! கொளந்தையப்பனா! தெரியுமே! தெரியும்!! கொளத்தங்கரைத் தெரு! அடே அப்பா! அது சின்ன புள்ளையிலே ஊர்லே போட்ட ஆட்டம் கொஞ்சமா! அது அப்பன் பொத்தகம் வாங்கப் பணம் கொடுத்தா, இது பொட்டலம் வாங்கிட்டுப் பொடியன்களோட பொழுதை ஓட்டும்''

என்று ஆரம்பித்து, வாழ்க்கை வரலாற்றை விளக்குவதை.

பொதுமக்கள், கூறப்படும் கருத்தை, கவனிக்க மறுப்பதில்லை. ஆகவே, நமது கருத்து நாடாள்வோரால் தள்ளப்பட்டுவிடினும் நாட்டினரால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையுடன். விவரம் அறிந்தவர்கள், விளக்கம் பெற்றவர்கள், உண்மையை அஞ்சாது உரைத்திட வேண்டும். உரைத்து வருகின்றனர்.

கருத்தளிப்பவர் சிறுபான்மையினரா பெரும்பான்மையினரா என்பதல்ல முக்கியமாகக் கவனிக்கப்படத்தக்கது. அளிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதா அல்லவா என்பதுதான் மிக முக்கியம்.

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற வள்ளுவர் வாக்கு, இதற்கும் சேர்த்துத்தான் என்பதை உணரலாம்.

ஆனால், நமது கருத்தை எடுத்துக் கூறிவிட்டோம், நமது கடமை முடிந்தது என்ற அளவுடன் இருந்துவிட்டால் பயன் இல்லை. அதனைச் சிறுபான்மையினர் கருத்து என்று கூறுபவர் வெட்கித் தலைகுனியும்படி, பெரும்பான்மையினரின் கருத்தாக்கிக் காட்டிட வேண்டும். உண்மையை உணருவது, உண்மையை உரைப்பது என்பதுடன், உண்மையை நிலை நாட்டுவது என்பது இணைய வேண்டும்!

என்ன கூறினார் மண்டலம்? நினைவிற்கு வருகிறதா! பொதுமக்களிடம் தமக்குத்தான் தொடர்பு இருக்கிறது, இந்தப் பட்டதாரிகளுக்கு அல்ல என்றார். தமக்குப் பொதுமக்களிடம் தொடர்பு இருப்பதால், பொதுமக்களின் விருப்பம் எது, அவர்களுக்கு நல்லது எது என்பது தமக்கே தெரியும் என்று மார்தட்டுகிறார். அந்தப் பொதுமக்கள் தொடர்பை, இந்த அறிவாளர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; இயலாததா? மண்டலம் கூறுகிறாரே எனக்குப் பொதுமக்கள் தொடர்பு உண்டு என்று. அந்தப் பொதுமக்கள் விஞ்ஞானத் துறை பயில் அறிவாளர்களை வெறுத்தா ஒதுக்கி விடுவர்? அவர்களுக்கு உள்ள குறையே, இந்த அறிவாளர்கள் பழகமாட்டேன் என்கிறார்களே என்பதுதான்! ஆகவே, பெங்களூர் விஞ்ஞானக் கல்லூரி பயில் வித்தகர்கள், தாம் கொண்டுள்ள கருத்தினைச் சிறுபான்மையினரின் கருத்து என்று ஆளவந்தார்கள் அலட்சியப்படுத்தினால் மனம் தளர்ந்து விடாமல், இக்கருத்தினைப் பெரும்பான்மையினர் கருத்தாக்கிக் காட்டுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு, பொது மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, கருத்தினைப் பரவிடச் செய்திட வேண்டும். முயற்சியில் ஈடுபட்டால், எத்தனை எளிது என்பதும், எத்துணை சுவை உளது என்பதும், என்னென்ன பயன் விளைகின்றன என்பதனையும் அறிந்து கொள்ளலாம். அதிலும் இந்த மொழிப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் செய்ய வேண்டிய பணி நிரம்ப உளது. நெடுநாளைக்கு முன்பே இப்பணி துவக்கப்பட்டிருக்க வேண்டும். முன்பே இப்பணி நடை பெற்றிருக்குமானால் இப்போது சிறுபான்மைக் கருத்து என்ற பேச்சுக்குக்கூட இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தப் பேச்சு ஏற்பட்டுவிட்டதாலேயே. மனச் சோர்வு அடைந்துவிட வேண்டும் என்பது இல்லை; ஆலின் விதை மிகச் சிறிது!!

சென்னை சட்டமன்றத்தில் தி. மு. கழகத்தினரின் எண்ணிக்கை 15! இப்போது 50! எனினும், எண்ணிக்கை 15 என்றிருந்தபோதும், நாம் மிகமிகச் சிறுபான்மையினராக இருக்கிறோம் என்ற தயக்கம் காட்டியதில்லை; சரியென்று பட்டதனைச் செப்பினோம். அந்தச் செயலை எள்ளி நகையாடி யோரும் உண்டு; ஆனால், அந்த நிலை இன்றி ஓர் வளர்ச்சி நிலையை, கழகத்துக்குத் தந்திருப்பதனை நாடு அறியும்; நல்லோர் மகிழ்கின்றனர்; மற்றையோர் மனத்தாங்கல் கொண்டுள்ளனர். ஒரே மரத்தில் ஒரு கிளையில் குயிலும் மற்றோர் கிளையில் காகமும் இருக்கின்றன; மரம் என்ன செய்யும்! அதுபோலச் சமூகத்தில் நமது கழக வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களும் இருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அன்றும் இன்றும், கழகம் கூறுவதை மறுப்பதும், மறைப்பதும், திரிப்பதும், குறைப்பதும், குலைப்பதும் தொழிலாக்கிக்கொண்டவர்கள் உண்டு; அன்று மறுத்துக் கொண்டிருந்தவர்களிலே சிலர் இன்று மனம் மாறி நமது கருத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளனர்; அன்று நமது அரணாக நின்றவர் சிலர் நினைப்பு மாறியதால் இன்று நமது மாற்றார் கை அம்புகளாகியுமுள்ளனர்; பூத்தது உதிர்வதும், பெற்றது மடிவதும், சேர்த்தது ஒழிவதும்போல என்று கொள்வோம். மொத்தத்தில் கணக்கெடுத்தால் "சிறுபான்மை' என்றிருந்த கணக்கு நாம் மகிழத்தக்க மாற்றம் பெற்றிருப்பது தெரியும். இப்போதும் "சிறுபான்மை' என்று எண்ணிக்கைதான் சட்டமன்றத்தில். ஆனால், 15-50ஆக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி கண்டு, மாற்றுக்கட்சியினர் தமது முறைகளை மாற்றிக் கொண்டனரா என்றால் இல்லை; வேகமாகி இருக்கிறது. அன்று போலவே இன்றும், இட்டுக்கட்டுவதும், திரித்துக் கூறுவது நடந்தபடி இருக்கிறது அன்று - 1958லில் நான் இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டேன், சட்டசபை கமிட்டிக் கூட்டத்தில் என்று, ஒரே புகார் - வதந்தி - தப்புப் பிரச்சாரம் - பரபரப்பு!

எனக்குத் தம்பி! அதிலே ஒரு மகிழ்ச்சி - என்னைப்பற்றி "விஷமம்' செய்யப்படுகிறதே என்பது குறித்து வரவேண்டிய எரிச்சல்கூட எழவில்லை; இந்திக்கு எத்தனை அளவு எதிர்ப்பு இருக்கிறது, அதனை எவராவது ஆதரிக்க முனைகிறார்கள் என்று கூறப்பட்டால், மக்கள் எத்தனை ஆத்திரம் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன், கட்டிவிடப்பட்டதை உடைத்துப்போடக் கிடைத்தது வாய்ப்பு.

"கூட்டத்திற்குத் தாங்களும் சென்று விட்டு அங்குக் கூறப்பட்ட கருத்துக்களையும் ஒத்துக்கொண்டுவிட்டு, கையெழுத்தும் போட்டுவிட்டு வெளியே வந்து வேறுவிதமாகச் சொல்கிறார்கள்''

என்று பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்;

"அதிலே கையெழுத்துப் போடப்பட்டது என்று சொல்வது தவறு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்''

என்று நான் குறுக்கிட்டுக் கூறினேன்.

"அந்தக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகக் கையெழுத்து வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்''

என்று மேலும் கூறினார் அந்தக் காங்கிரஸ் உறுப்பினர்.

"அவ்விதமும் கையெழுத்து வாங்கவில்லை என்பதை அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்''

என்று நான் கூறினேன்.

1958, பிப்ரவரி 12-ம் நாள் சென்னை சட்டமன்றத்தில் இந்த நிகழ்ச்சி; அதுவரையில், விடாமல் ஒரு திங்கள் மேடைக்கு மேடை, அண்ணாதுரை இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டான் என்றுதான் பேச்சு! பேச்சா! இடிமுழக்கம்! பெரியாரின் பேருரை! கேலிப் படம்! கடாவுதல்! எல்லாம்!! தெரிந்த வித்தை அவ்வளவும்!! மறுநாளும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது சட்டசபையில்.

"நம் நிதி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், நான் கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொன்னதாக நான் பத்திரிகையில் பார்த்தேன்.'' (நான்)

"நான் எந்தக் கூட்டத்திலும் கையெழுத்துப் போட்டதாகச் சொல்லவில்லை''
(அமைச்சர் சுப்பிரமணியம்)

"நிதி அமைச்சர் சொன்னதாகப் பத்திரிகையில் வந்தது. பத்திரிகையிலே வந்தது மட்டுமல்ல; நேற்றைய தினம் பேசிய கனம் அங்கத்தினர் அனந்தநாயகி அவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது இல்லை யென்று சொல்கிறாரே என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கேட்டார்.'' (நான்)

"திருத்திக்கொண்டேன் என்பதைக் கனம் அங்கத்தினர் அவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.'' (கனம் அனந்தநாயகி அம்மையார்)

புகார் கிளப்பிய இதழ்கள், அது பொருளற்றது என்பதை விளக்கிடும் சட்டசபை நிகழ்ச்சியை எடுப்பாக வெளியிட்டனவா? இல்லை! அதற்கா அவை? இட்டுக் கட்டுகளோ இருப்பதை மறைப்பவைகளோ இவைகளுக்கு இடம் கொடுத்தாகிலும் என்னைக் குறைகூற எண்ணுபவர்களுக்கு இடம் நிறைய!

இந்த "இட்டுக்கட்டு'கூட, எனக்கு ஒரு சாதகமாக அமைந்தது. உண்மை விளங்கச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்ல; மொழி விஷயமாக கழகக் கொள்கை எது என்பதனைச் சரியான முறையில் பதிவு செய்துகொள்ளவும் வழி கிடைத்தது.

1958 மார்ச் 11-ம் நாள் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

"This House is of firm opinion that Part 17 of the Constitution of India should be suitably amended so as to retain English as the official language of the Union Government without any time limit."

காலவரையின்றி இந்தியப் பேரரசில், ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீடிக்கச் செய்வதற்கு ஏற்ற முறையில், இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்தவேண்டுமென்று இந்த மன்றம் உறுதியான கருத்து கொண்டிருக்கிறது.

என்ற தீர்மானத்தைக் கழகம் கொடுத்தது. இதற்கு ஆதரவாக 14 வாக்குகள்; எதிர்த்து 121. கழகம் கொடுத்தது தோற்கடிக்கப் பட்டது; ஆனால் நாடு பதிவு செய்துகொண்டது, கழகம் மொழிபற்றிக் கொண்டுள்ள கொள்கை என்ன என்ற உண்மையை.

அதே சட்டமன்றத்தில் 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் நாள்,

"This House recommends to the Government to convey to the Union Government that this House is of opinion that steps should be taken to recognize all the fourteen languages enumerated in the 8th Schedule of the Constitution as the official languages of the Union under Article 343 and till such time English shall be retained for all official purposes of the Indian Union."

இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 14 - தேசிய மொழிகள் எல்லாம் பேரரசின் ஆட்சி மொழிகளாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும், அதுவரையில் 343-ம் விதிமுறையின்படி, இந்தியப் பேரரசின் அதிகாரக் காரியங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நீடிக்கப்பட வேண்டும் என்பதனை மத்திய சர்க்காருக்குத் தெரிவிக்கவேண்டு மென்று. (மாநில) சர்க்காருக்கு இந்த மன்றம் சிபாரிசு செய்கிறது.

என்ற தீர்மானம் கொண்டு வந்தது கழகம். ஆதரவாக 44 - வாக்குகள்; எதிர்த்து 84.

இம்முறையும் வெற்றி இல்லை. ஆனால், கழகக் கருத்துக்கு ஏற்பட்ட வளர்ச்சி தெரிகிறதல்லவா! "சிறுபான்மை' வளருகிறது என்பதற்கு இந்தச் சான்று.

1958லில் மொழிபற்றிய கழக யோசனையை வெளியிட்டவர் தோழர் அன்பழகன்; 1963லில் தோழர் மதியழகன்.

எனவேதான் கூறுகிறேன் சிறுபான்மையினரின் கருத்து என்றால், ஆட்சியினர் அலட்சியப்படுத்திவிடுவதும் தவறு, அந்தக் கருத்து எப்போதுமே சிறுபான்மையினர் கருத்தாகவே இருந்துவிடுமோ என்று அந்தக் கருத்தினர் அச்சப்படுவதும் தவறு. நம்பிக்கையுடனும், நல்ல முறையிலும் பணியாற்றினால், சிறுபான்மையினர் கருத்து என்று கூறப்படுவதையே, நாட்டு மக்களின் கருத்து என்ற அளவுக்கு வளர்ச்சி பெறச் செய்வதில் வெற்றி பெற்றிட முடியும். பெங்களூர் விஞ்ஞானத் துறை பயில்வோர் இதனை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மையினர் என்பது குறித்து மிக அதிகமான அளவு. சிந்தனையைச் செலுத்தவேண்டிய வாய்ப்பு எனக்கு, துவக்கநாள் தொட்டு. சிறுபான்மை என்பதற்கு எண்ணிக்கையை மட்டுமே காரணமாகக் காட்டுகிறார்கள்; அந்த முறையிலே மட்டும் கவனித்தால் அந்தப் பிரச்சினையின் முழு உண்மை துலங்காது.

ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அமைந்துவிடும் சிறுபான்மையினருக்கும், ஜாதி, மதம், மொழி அரசு - முறை, ஆகியவைபற்றிய கருத்தினைக் கண்டறிந்து எத்தகைய கருத்தினை எவரெவர் பெற்றுள்ளனர் என்று கணக்கெடுத்து, அதிலே பெரும்பான்மை - சிறுபான்மை என்று வகைபடுத்திப் பார்ப்பது பிரச்சினையின் உண்மையை உணர்ந்துகொள்ள உதவும்.

மதம், ஜாதி, மொழி என்பனவற்றின் காரணமாக அமைந்துவிடும் "சிறுபான்மை' அதிகமான அளவிலோ, அதிகமான வேகத்திலோ வளர்ந்து "பெரும்பான்மை' ஆகி விடுவது இயலாத காரியம்.

ஆனால், கருத்து அடிப்படையில் காணப்படும் "சிறுபான்மை' என்பது அவ்விதமல்ல, வேகமாக மாறி, வளர்ந்து, பெரும்பான்மை ஆகிவிடக்கூடியது.

பெரும்பான்மையோர், கூடித் தீர்ப்பளித்துத்தான் கிரேக்கப் பெருமகனார் சாக்ரடீசுக்கு நஞ்சளித்துக் கொன்றனர்; அவருக்காக அந்த மன்றத்தில் சிறுபான்மையோர்தான் பரிவு காட்டினர்.