அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஏழ்மையால் எழில் கெட்டு. . .!
3

ஆனால், சாக்ரடீஸ் உயிரோடு இருந்தபோது இருந்த சிறுபான்மை, அவர் மறைந்ததும் வேகவேகமாக வளர்ந்தது, பெரும்பான்மையாகிவிட்டது! பெரும்பான்மையா! கிரேக்கம் முழுவதும் அவர் சார்பில்! கிரேக்கத்தோடும் நின்றுவிடவில்லை, அறிவுலகம் அவ்வளவும் அவருக்கே!!

இவை குறித்தெல்லாம் எண்ணவும், இவைகளில் சிலவற்றைக் குறித்துப் பேசவும் இம்முறை டில்லியில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

இந்தி எதிர்ப்பு உணர்ச்சியே சிறுபான்மையினரின் உணர்ச்சி என்பதுதானே டில்லிப் பேரரசின் கணக்கு. அந்த முறையில், "சிறுபான்மை'யினரில் ஒருவன் என்ற நோக்கத்துடனேயே என்னை அங்குக் கவனிக்கிறார்கள்.

அந்நிலையில் சிறுபான்மையினர் பிரச்சினைபற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது, மகிழ்ச்சி தந்தது. டில்லிப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவர் மன்றத்தில் பேசும் வாய்ப்புப் பெற்றேன். ஜனநாயகத்தில் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது குறித்துப் பேசினேன். கல்லூரித்தலைவர் சர்க்கார் என்பவரும், ஆசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பேசச் சென்ற என்னுடன் நமது மனோகரன், ராஜாராம், செழியன், முத்து, ராமபத்திரன் ஆகியோரும் வந்திருந்தனர்.

டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி முதல்வர், சென்னை கிருத்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவைபற்றிப் பெருமிதத்துடன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இங்கு நான் கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது, கல்லூரி முதல்வர்கள் என்னிடம் தனியாக, அரசியல் பேசாதிருக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் - ஒருவிதமான அச்சத்துடன், அன்று செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் அதுபோல ஏதும் கூறவில்லை. உற்சாகமாக வரவேற்று, நண்பர்போல் பழகினார்.

மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருப் பவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். துளியும் எதிர்பாராத நிலையில் இந்த வாய்ப்புக் கிடைத்தது, காரணம் என்ன இதற்கு என்று அறிந்துகொள்ள இயலவில்லை - துவக்கத்தில்.

அந்தக் கல்லூரி மாணவர் இருவர் ஒருநாள் மாலை என்னைக் கண்டு தங்கள் கல்லூரியில் சொற்பொழிவாற்ற வரவேண்டும் என்று அழைத்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது. வருவதற்கு இசைவு தெரிவித்துவிட்டு, எதற்கும் முறைப்படி, உங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு அழைப்புக் கடிதம் பெற்று அனுப்புங்கள் என்றேன்.

"தேவைகூட இல்லை. எவரெவரை அழைத்துப் பேசச் சொல்வது என்பது மாணவர் மன்றம் பெற்றிருக்கும் உரிமை. முதல்வர் அதற்குக் குந்தகம் விளைவிப்பதில்லை. நாங்கள் ஆண்டுதோறும் ஆண்டுரூஸ் சொற்பொழிவுகள் எனும் தொடர் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அதிலே, முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஹிரேன்முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்களாகவே ஒரு ஆங்கில மாத இதழ்கூட வெளியிட்டு வருகிறோம்; ஆன்செட் என்பது இதழின் பெயர்; இதழ்கள் நாளை அனுப்பிவைக்கிறோம்; நீங்கள் விரும்புகிறபடியே கல்லூரி முதல்வரின் அழைப்புக் கடிதமும் பெற்று அனுப்புகிறோம்'' என்று கூறினர் சொன்னபடியே செய்தனர். ஆன்செட் இதழ் கிடைத்தது; அதைக் கண்ட பிறகுதான், ஏன் என்னை அழைக்க விரும்பினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அந்த இதழில், தி. மு. கழகத்தைத் தாக்கி ஒரு கட்டுரையும், விளக்கமளித்து ஒரு கட்டுரையும், அந்த விளக்கத்துக்கு மறுப்பு அளித்து ஒரு கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தன. முன்னதாகவே, கழகம் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்குச் சென்றுவிட்டிருக்கிறது! பிறகு, நானும் செல்லவேண்டியது முறைதான் என்று எண்ணிக் கொண்டேன்.

சிறுபான்மையோர் பிரச்சினை என்றவுடன், அநேகமாக, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த விஷயம் பேசுவேன் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்; நான் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த பிரச்சினையாக மட்டும் சிறுபான்மையோர் பிரச்சினையைக் கருதவில்லை; கொள்கை கருத்து இவற்றிலேகூட சிறுபான்மையினராக உள்ளவர்கள் பற்றிய பொதுப் பிரச்சினையாகவே அதனைக் கருதினேன்; அந்த முறையிலேதான் பேசினேன்.

வாடிக்கையாக, கூட்டத் தலைவர் பேச்சாளர்பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி அறிமுகப்படுத்துவார் அல்லவா; அதுபோல மாணவர் தலைவர் என்னைக் குறித்துப் பேசினார் - இவர் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர்; பிரமுகர்; தி. மு. கழகத்தவர் என்றெல்லாம். நான் துவக்கத்திலேயே சொன்னேன். "என்னை இங்கு அனைவரும் மிக நன்றாக அறிந்திருப்பதாக நண்பர் கூறினார்; நன்றி; ஆனால், உண்மை என்னவென்றால், என்னைப்பற்றிய தவறான கருத்துக்களைத்தான் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள், நல்லனவற்றை அல்ல; என்றாலும், எனக்கொரு மகிழ்ச்சி, நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ, ஏதோ ஒரு வகையில், என்னை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்; அந்த மட்டில் மகிழ்ச்சிதான். இனி நான் பேசியான பிறகு, என்னை ஓரளவு நீங்கள் சரியாகவும் அறிந்துகொள்ளலாம், அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்; சரியாக அறிந்துகொள்ளும் இயல்பு உள்ளவர்கள்!'' என்று கூறினேன். ஏன் அவ்விதம் கூறத் தோன்றிற்று என்றால், பல நூறு முறை என் பேச்சைக் கேட்ட பிறகும், இங்கே இல்லையா சிலர், என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்; புரிந்துகொள்ள மறுப்பவர்கள். சுளையை விட்டுவிட்டுத் தோலை எடுத்துக்கொள்பவர்கள்! அதுபோல, எங்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்; அதனால் அவ்விதம் கூறினேன்.

"ஆனால் மாணவர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள் அவ்விதமானவர்கள் அல்ல என்பது, அவர்கள் பல முறை, நான் கூறிய கருத்தினுக்கு ஒப்பம் அளிக்கும் முறையில், மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. துளியும் தொடர்பற்ற ஒருவனுடைய பேச்சை, அக்கறையற்று, ஒரு காதில் வாங்கி மறு காது வழியாக விடுபவர்களாக இருந்துவிடுவார்களோ, பேச்சு பயனற்றுப் போய்விடுமோ என்று நான் அச்சப்பட்டுக் கொண்டேன். அச்சம் பொருளற்றது என்பதனை மாணவர் போக்கு விளக்கிக் காட்டிற்று.'

"சிக்கலும், மாறுபட்ட கருத்துகள் மிகுந்ததுமான ஒரு பிரச்சினை பற்றி என்னை ஏன் பேச அழைத்தார்கள் என்று நான் யோசித்தேன்; என்னைப்பற்றியே பல மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், நான்தான் சிறுபான்மையோர் பிரச்சினை குறித்துப் பேசப் பொருத்தமானவன் என்று மாணவர்கள் தீர்மானித்தார்கள்போல் தெரிகிறது. சிறுபான்மை யோர் பிரச்சினை மட்டுமல்ல, நானே விவாதத்துக்கு உரிய ஆசாமிதான்!'' என்று கூறினேன். பிறகு, சிறுபான்மையோர் என்பதற்கு என்னென்ன பொருள் கொள்ளப்படுகின்றன, எங்கெங்கு இந்தச் சிறுபான்மையோர் உள்ளனர் என்பது குறித்து விவரம் அளித்தேன்.

பெரும்பான்மையோர் என்று ஒரு பகுதி சமூகத்தில் இருப்பதனால், இயற்கையாகவே சிறுபான்மையோர் என்ற பகுதி இருந்து தீரவேண்டி இருக்கிறது. இது இன்று நேற்று முளைத்ததுமல்ல; இட்டுக் கட்டப்பட்டதுமல்ல; பொருளற்றது மல்ல; வெறும் பொழுதுபோக்குப் பிரச்சினையுமல்ல; மிக முக்கியமானது; நெடுங்காலமாக இருந்து வருவது; சிக்கலைப் போக்கும் வழி இதுதான் என்று திட்டவட்டமாக எவரும் எளிதிலே கூறிவிட முடியாத விதமான கடினமான பிரச்சினை இது. மாணவர் மன்றம் இத்தகைய பிரச்சினை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், மிகப் பெரியவர்கள் சிலர், சிறுபான்மையோர் பிரச்சினை, வகுப்புவாதப் பிரச்சினை, ஜாதிப் பிரச்சினை என்பவைகள் சில்லறைப் பிரச்சினைகள்; அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், கல்வி அறிவு பெருகிவிட்டால், தொழிற் புரட்சி ஏற்பட்டுவிட்டால், இந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமாக மடிந்தொழியும் என்று கூறிவருகிறார்கள்; பொருளாதார வளர்ச்சி, தொழிற் புரட்சி, கல்வி வளர்ச்சி எல்லாம் வியந்து பாராட்டத்தக்க அளவு உள்ள இன்றைய அமெரிக்காவில், சிறுபான்மையோர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. உரிமை கேட்டு நீக்ரோ மக்கள் கிளர்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆகவே, சிறுபான்மையோர் பிரச்சினை என்பது, யாரோ சில சிறுமதியாளர்கள் வேண்டுமென்றே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்ற முறையில் இருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள்; எங்கெங்கு, எந்தெந்தச் சமயத்தில், என்ன காரணம் காட்டி, சமூகத்தில் ஒரு பகுதியினர் மற்றோர் பகுதியினரைக் கொடுமையாக நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும், உரிமையைப் பறித்தாலும், வளர்ச்சியைத் தடுத்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட பகுதி, எதிர்த்துக் கிளம்பியே தீரும், எதிர்ப்பின் முறைகள் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால், ஆதிக்கம் செய்பவர்களை எதிர்த்து நிற்கும் இயல்பு எங்கும் உண்டு, எப்போதும் உண்டு; ஆதிக்கக்காரர் மிகப்பெரும்பாலோராக இருப்பினும் கொடுமை செய்திட அவர்களுக்கு உரிமை கிடையாது, வலிவு இருக்கலாம்! கொடுமைக்கு ஆளானவர்கள் சிறிய அளவினராக இருப்பினும், எதிர்த்து நிற்கும் உரிமையும் இயல்பும் அந்தச் சிறுபான்மையினருக்கு உண்டு; சிறுபான்மையினர் என்பதற்காக அவர்கள் உரிமை இழந்துவிட வேண்டும் என்பதில்லை, கொடுமையில் உழல வேண்டும் என்பதில்லை. இந்த உணர்ச்சிதான், சிறுபான்மையோர் பிரச்சினை என்பதன் அடிப்படையாக அமைந்திருக்கிறது'' என்று விளக்கம் தந்தேன்.

பொதுவாக ஒரு கருத்து இங்குப் பரப்பப்பட்டிருக்கிறது - இங்கு மட்டுந்தான் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டிருப்பதாக, உண்மை முற்றிலும் வேறு. நீண்ட பல ஆண்டுகளாகக் குடியாட்சி முறையை மேற்கொண்டுள்ள பல நாடுகளில் - ஐரோப்பிய பூபாகத்து நாடுகளில் - இன்றும்கூட சிறுபான்மையோர் பிரச்சினை இருந்து வருகிறது. காரணம்? ஆதிக்கம் செலுத்திடும் இயல்பு, அரசு நடத்தும் வாய்ப்புப் பெற்றதனாலோ, ஜாதி காரணமாகவோ, மொழி காரணமாகவோ, மத அடிப்படையிலோ, பொருளாதார வலிவின் துணைகொண்டோ ஏற்பட்டுவிடுகிறது; ஆதிக்கம் செலுத்திச் செலுத்தி அதிலே ஒரு தனிச் சுவை கண்டுவிட்டவர்கள், எளிதிலே அந்த இயல்பினை விட்டுவிடுவதில்லை; வெற்றி வீரர்கள், ஆளப் பிறந்தவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள் என்று காரணம் காட்டி, பண்டைய கிரேக்கத்தில், சமூகத்தில் ஒரு பகுதியினரை அடிமைகளாக, எந்தவிதமான உரிமையுமற்றவர்களாக, மனித மிருகங்களாக வைத்துக் கொண்டிருந்தனர். அறநூற்களும், அறிவு நூற்களும், காவியமும் ஓவியமும், அரசு முறை பற்றிய ஏடுகளும் ஆத்மீகம் பற்றிய ஏடுகளும், எந்தக் கிரேக்கத்திலிருந்து மலர்ந்தனவோ அதே கிரேக்கத்திலே அடிமைகளாக சமூகத்தில் ஒரு பகுதியினரை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமம் நெளிந்துகொண்டிருந்தது. பிறகு வடிவமெடுத்த ரோமப் பேரரசு, எகிப்திய எழிலரசு போன்ற பலவற்றிலும், ஒவ்வோர் முறையிலும் வடிவிலும், இந்த அக்கிரமம் இருக்கத்தான் செய்தது. இவைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டத்தான் முடிந்தது - நேரம் கிடைக்க முடியாதல்லவா.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பது வெறும் எண்ணிக்கை பிரச்சினை அல்ல - மிகப் பெரும்பான்மையினரிட மிருந்து சிறுபான்மையினர் - அதாவது சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் பிரச்சினை என்று மட்டுமே இதனைக் கருதிவிடக்கூடாது. சில சமயங்களில், சில இடங்களில் மிகப்பெரிய அளவில் உள்ள மக்களை, மிகக் குறைந்த அளவில் உள்ள மக்கள், அடக்கி ஆள்வது காணலாம், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தின்படி; ஆதிக்கம் செலுத்தும் சிறு கூட்டம், தனது நிலையைக் கெட்டிப் படுத்திக்கொள்ள நியாயம் தேடிக்கொள்ளலாமா! அது அநியாயம்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் இங்கு இருந்த போது, பல கோடி மக்களை ஒரு சில ஆயிரவர் - வெள்ளையர் - சிறுபான்மையினர் அடக்கி ஆண்டு வந்தனர், நாங்கள் சிறுபான்மையினர், ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று வெள்ளையர் வாதாடி இருப்பின், எப்படி இருந்திருக்கும்? அதனை அநீதி என்றுதான் எவரும் கூறி இருப்பர்! சிறுபான்மையினராக இருக்கிற ஒரே காரணத்துக்காக இனம், மதம், மொழி, வாழ்க்கை முறை போன்ற துறைகளில் பெரும்பான்மையினரிடம் அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்போதுதான், சிறுபான்மையினரின் உரிமைக் கிளர்ச்சிக்கு நியாயம் இருக்க முடியும்.

பண்டைய கிரேக்கத்தில் குடியாட்சி முறை நடைபெற்ற விதத்திற்கும் இப்போதுள்ள குடியாட்சி முறைக்கும் நிரம்ப மாறுபாடு - இயற்கையான காரணத்தால் விளைந்த மாறுபாடு - ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கிரேக்கத்தில், ஏதன்ஸ் நகர மக்கள் ஐம்பது ஆயிரம்பேர் - எந்த அரசியல் பிரச்சினையையும் கவனிக்க, கருத்தளிக்க, முடிவெடுக்க எல்லா மக்களும் ஒருசேரச் சந்தைச் சதுக்கத்தில் கூடுவர். இப்போது, குடியாட்சி முறை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளுவது என்ற கொள்கை அடிப்படையில் இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மூலமாகத்தான் ஆட்சி நடத்தப் படுகிறது - நேரடியாக அல்ல - மக்கட் சமுகம் முழுவதனாலும் அல்ல. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்கும், தேர்ந்தெடுக்கும் மக்களைவிட எண்ணிக்கையில் சிறிய அளவினராகத்தான் இருக்க முடியும் - சிறுபான்மையினர்! நாங்கள் சிறுபான்மையினர் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஆளவந்தார்கள் வாதாடினால் எப்படி இருக்கும்; விந்தையாக மட்டுமல்ல, விபரீதமாகவும் இருக்கும்.

ஆகவே, இந்தப் பிரச்சினையை நாம் பார்க்கவேண்டிய சரியான முறை, ஜாதி, மதம், மொழி, செல்வம், வலிவு எனும் ஏதேனும் ஒன்றைத் துணைகொண்டு சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆதிக்கம் பெற்று, ஆதிக்கக்காரர்களின் மதம், ஜாதி, மொழி, கோட்பாடு என்பதனை ஏற்றுக்கொள்ளாமல், தமக்கென்று மதம், ஜாதி, மொழி, கோட்பாடு ஏதாகிலும் பற்றுடன் கொண்டு, அவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பாதுகாத்துக்கொள்ளும் உரிமை பெறவேண்டுமென உறுதியுடன் மற்றோர் பகுதியினர் இருப்பின், அங்குச் சிறுபான்மையோர் பிரச்சினை எழுகிறது என்பதுதான்.

இன்று நீக்ரோ மக்கள், உலக முழுவதும் உள்ளவர்களைக் கணக்கெடுத்தால், அமெரிக்கர்களைவிட எண்ணிக்கையில் அதிக அளவு என்று கூறலாம். ஆனால், அமெரிக்கா என்ற எல்லைக்குள்ளாக மட்டும் கணக்கெடுத்தால், நீக்ரோக்கள் சிறுபான்மையினர்.

ஆகவே, சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற கணக்கு, அதற்கு நாம் பயன்படுத்தும் அளவுகோல், கணக்கெடுக்கும் இடம், முறை ஆகியவற்றையும் பொறுத்திருக்கிறது.

இந்தியாவை ஒரு எல்லையாகக்கொண்டு கணக்குப் பார்க்கும்போது, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் எனும் இரு பிரிவினருமே சிறுபான்மையினர்! ஆனால், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கணக்குப்போட்டு, இந்துக்களுடன் ஒப்பிட்டால், முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் பெரும்பான்மையினர் என்பது தெரிகிறது.

உலகமெல்லாம் சுற்றுவானேன் தம்பி! அருகாமையிலேயே இருக்கிறதே விளக்கம்; சென்னை சட்டசபையை எடுத்துக் கொண்டு கணக்குப் பார்த்தால், கழகம் சிறுபான்மையாகிறது! சென்னை மாநகராட்சி மன்றத்தில் கணக்கெடுத்தால் காங்கிரஸ் சிறுபான்மையாகிவிடக் காண்கிறோம்.

இந்தி மொழி, பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற வாதம்கூட, அதன் ஆதரவாளர் பயன்படுத்தும் அளவுகோலின் தன்மையைக் கொண்டுதான்.

இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும் ஒரு கணக்கில் சேர்த்து, இந்தியை மட்டும் ஒரு தனிக் கணக்காக்கினால், இந்தி இந்தியாவில் சிறுபான்மையினரின் மொழி என்பது விளங்கும்.

ஆனால் இந்தி ஆதரவாளர்கள், மராட்டிய மொழி பேசுவோரைவிட, தமிழ் பேசுவோரைவிட, தெலுங்கு பேசுவோரைவிட, வங்காள மொழி பேசுவோரைவிட, அதிக எண்ணிக்கையினர் பேசும் மொழி இந்தி, ஆகவே அது பெரும்பான்மையினரின் மொழி என்கிறார்கள்.

உண்மையில் பெரும்பான்மையினரின் மொழியாக இந்தி இருக்கிறது என்று மெய்ப்பிக்கவேண்டுமானால், இந்தியாவில் உள்ள 40 - கோடி மக்களில் 30 - கோடிப் பேர் அல்லது 25 கோடிப் பேர் இந்தி மொழியினர் என்று கணக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லை. ஆயினும் ஆட்சியினரின் அரவணைப்பு இருப்பதால், இந்தி பெரும்பான்மையினரின் மொழி என்று அடித்துப் பேசுகிறார்கள்.

தானே தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கடை வீதி சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்து, தின்னத் தெரியாமல், தின்று சட்டையை அழுக்காக்கிக்கொண்ட சிறு பயல், அரும்பு மீசைக்காரனாகி, முதலாளி என்ற பட்டத்தை, தந்தை செத்ததால் பெற்றுவிட்ட பிறகு, தன்னையே - அறுபதாண்டு நிரம்பிய தன்னையே - பெயரிட்டுக் கூப்பிட்டு மிரட்டுவதை, ஊழியம் செய்து பிழைக்கும் கந்தனும் முருகனும் சகித்துக்கொள்வதைக் காண்கிறோமே! அதுபோல, இப்போதும் கடன் வாங்கிக் காலந்தள்ள நினைக்கும் நிலையிலுள்ள இந்தி மொழி, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இணையற்றது என்ற ஏற்றம் பெற்றுவிட்ட நமது தமிழ் மொழியைவிட உயர் நிலை பெற்று, ஆட்சி மொழி என்று ஆகிறது அல்லவா!

சிறுபான்மை - பெரும்பான்மை என்பது, அதற்குக் கிடைத்திடும் பாதுகாவலனையும் பொருத்து வலிவு பெறுகிறது.

ஆனால், எக்காரணம் கொண்டோ பெரும்பான்மை என்ற நிலையைப் பெற்றுவிட்ட ஒரு பகுதி, அதிகார பலம் கொண்டு, சிறுபான்மையைச் சீரழிவாக நடத்தி வெற்றிகாண நினைப்பது, பேராபத்தில் நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இந்தியே ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் களிலேயே சிலர், ஆதிக்கம் காட்டி இந்தியைப் புகுத்திடப்போய், அதன் காரணமாக நாட்டிலே பிளவு மனப்பான்மை ஏற்பட்டு ஒற்றுமை குலைந்து போகும்போலத் தோன்றினால், இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிடத்தான் வேண்டும் என்று பேசத் தலைப்பட்டுவிட்டுள்ளனர்.

மொழி காரணமாகப் புகுத்தப்படும் ஆதிக்கத்தையும், அதனை நாம் எதிர்த்து நிற்பதையும், நான் கல்லூரிக் கூட்டத்தில் எடுத்து விளக்கும்போதுதான், அவர்களின் இதழில் வெளியிட்டிருந்த கழகம் பற்றிய கருத்துபற்றி எடுத்துக் காட்டினேன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை, இரண்டும் வேறு வேறு அமைப்புகளாகப் பதினேழு ஆண்டுகளாக உள்ளன என்பதனை உணர்ந்துகொள்ளாமலே இதழில் எழுதப்பட்டிருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிவிட்டு, இப்போது திராவிடர் கழகம் இந்தியை எதிர்க்கத் தேவை இல்லை என்று கூறிடும் அமைப்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு நடத்திடும் அமைப்பாக இருப்பதனையும் விளக்கினேன். கூட்டம் முடிந்த பிறகு, பலர், நமது கழகம் பற்றிய விளக்கம் பெற ஆங்கில இதழ் ஒன்று வெளியிடவேண்டுமென்றுகூட என்னிடம் கூறிச் சென்றனர்.

மதம், இனம், மொழி போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுபான்மையினர் - என்ற நிலையை ஆதிக்கத்திற்கும், கொடுமை செய்வதற்கும் வழியாக்கிக்கொள்ளாமல், அனைவரும் சம உரிமை பெற்று வாழ்ந்திடத் தக்க அரசியல் முறையை வகுத்துக் கொண்டு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, நிம்மதியாக வாழ்ந்துவரும் சுவிட்சர்லாந்து நாட்டு அரசியல் பண்பாடு பற்றியும், ஆங்கில மொழியினர், பிரஞ்சு மொழியினர் எனும் இரு பிரிவு மக்களையும் கொண்ட கனடா நாட்டில் இருமொழித் திட்டம் ஒரு சமரச ஏற்பாடாகப் புகுத்தப்பட்டது பற்றியும், அந்த ஏற்பாட்டை நடத்திச் செல்வதில் நாணயக் குறைவு ஏற்பட்டதனால், இப்போது கனடாவில் கொந்தளிப்பு உள்ளது பற்றியும், கனடாவில் க்யூபெக் எனும் மாநிலம் பிரிந்துபோய்விட வேண்டுமென்ற கிளர்ச்சி மூண்டுள்ளதையும், க்யூபெக்கில் உள்ள பிரஞ்சு மொழி பேசுவோர் மனத்துக்குச் சமாதானம் ஏற்படுத்த, இதுவரை பிரிட்டிஷ் அரசு சின்னம் பொறிக்கப்பட்டதாக இருந்த கனடா நாட்டுக் கொடியைக்கூட மாற்றி அமைத்து, பிரிட்டிஷ் சின்னம் ஆங்கில மொழி ஆதிக்கத்தைக் காட்டுகிறது என்று பிரஞ்சுக் கன்னடியர் கூறுவதால், அந்தச் சின்னத்தை நீக்கிவிட்டு, புதிய கனடா தேசியக் கொடியில், பச்சிலையைச் சின்னமாக்கி இருப்பதனையும் கூறினேன்.

என்ன கூறி என்ன பலன்? கடைசியாகக் கேட்கிறார்கள், எண்ணிக்கையின்படி தி. மு. கழகம் சிறுபான்மைதானே, தமிழகத்தில் என்பதாL. ஆம்! என்றேன். எத்தனை நாளைக்குத் தம்பி! இதனைக் கூறியபடி இருப்பது? சிறுபான்மையினர் அல்ல, நாங்கள்தான் தமிழகத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியினர் என்று கூறும் நிலையை எப்போது ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறாய், தம்பி! கனடாவில் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு பகுதியாக இணைந்து இருந்துவரும் க்யூபெக் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் மட்டும், பிரஞ்சுக் கன்னடிய உணர்ச்சி பெற்றவர்கள் அரசியலில் பெரும் பான்மையினராகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காரணத்தால், கனடா முழுவதற்குமாக இருந்துவந்த தேசியக் கொடியையே, மாற்றிவிடும் காரியத்தில் வெற்றி கிடைத் திருக்கிறது. நீங்கள், உங்கள் மாநிலத்திலேயே, சிறுபான்மை யினராகத்தானே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை, எத்தனை நாளைக்குத் தாங்கிக்கொண்டிருக்கச் சொல்கிறாய். தமிழக அரசு நடாத்துபவர் வேறு; அந்த அரசு இப்படி இப்படி நடத்தப்பட வேண்டும் என்று கூறிடும் எதிர்க்கட்சியாக - சிறுபான்மைக் கட்சியாக - தி. மு. கழகம் என்ற நிலை இருக்கும் வரையில், நமது கொள்கை, ஏழ்மையால் எழில் கெட்டு, இளைத்துக் கிடக்கும் ஏந்திழை மருத்துவரிடம் பெற்ற மருந்துக்குப் பணம் தரக் காசு இன்றி, காதிலுள்ளதைக் கழற்றிக் கடை நோக்கி நடந்திடும் நிலையினில்தான் இருக்கும். இந்த நிலை உனக்குச் சம்மதம்தானா?

அண்ணன்,

28-3-1965