அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அழியாச் செல்வம்
1

சிற்பியும் திறமையும், கருத்துக் கதை -
தி. மு. க.வின் கட்டுக்கோப்பு -
திருப்பரங்குன்ற மாநாடு

தம்பி!

அவன் சிற்பி அல்ல - ஆனால் மனதை ஈர்க்கும் காட்சி களைக் காணும்போதெல்லாம், என்றென்றும் காண்போருக்குக் களிப்பூட்டும் விதமாக, இந்தக் காட்சிகளைச் சிற்பி செதுக்கித்தர மாட்டானா! என்று எண்ணுவான் - ஏங்கக்கூடச் செய்வான்.

அகன்ற தாமரைமீது அமர்ந்து துயிலுறும் அன்னப் பெடை, குஞ்சுகளுக்குத் தீனியூட்டும் பறவை, கன்றின் முதுகைத் தன் நாவினால் தடவி மகிழும் பசு, ஏதோ அரவம் கேட்டுக் காதுகளை நிமிர்த்தியபடி, மிரட்சிகொண்ட கண்களுடன் நிற்கும் புரவி, களத்திலே ஏற்பட்ட வடுகண்டு நண்பன் விளக்கம் கேட்க, அதனைக் கூறிடும்போது கண்களிலே வீரக்களை சொட்டும் நிலையிலுள்ள போர்வீரன், - இவைபோன்ற காட்சிகளைக் காணும்போதெல்லாம், சிற்பி இவைகளைச் செதுக்கி வடிவம் கொடுத்து, எப்போதும், அந்த அழகு காண்போருக் கெல்லாம் மகிழ்ச்சி தந்திடச் செய்ய வேண்டும் என்று எண்ணுவான்.

சிற்பிகள் இருந்தனர் - அவர்களுக்கு இந்தச் சிந்தனை இல்லை! இவனுக்குச் சிந்தனை இருந்தது - ஆனால் அவன் சிற்பி அல்ல!!

"அன்னப் பெடையா? அலர்ந்த மலரா? அன்னமூட்டும் அன்னையா? - அழகாகத்தான் இருக்கும் - மிக அழகாக!

ஆனால், வேலை நிரம்ப இருக்கிறது, ஏற்றுக்கொண்ட வேலை! வயிறு வேறு இருக்கிறது!! - என்று கூறுவர் சில சிற்பிகள் - உளியை எடுப்பர், ஏற்றுக்கொண்ட வேலைக்காக.

திறமை அற்றவர்களோ எனில், அங்ஙனம் எவரும் கூறார்! முகத்திலே ஏற்பட்டுவிட்ட சுருக்கங்களை, அப்படியே சிலையில் வடிப்பதுதான், சிற்பிக்கு உள்ள அறம்! ஆனால், பணம் கொடுக்கும் சீமான், அதைக் கண்டால் சீறுவாரே! அவர் என்ன, தன் முகத்திலே காலக்கரம் கோடுகளை இழுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரா!! அல்லது அவருக்குக் காதவேலை பார்க்கும் காரிகை அதனைக் கவனப்படுத்துவாளா!! தன் முகத்திலே ஒரு கெம்பீரம், ஒரு கவர்ச்சி இருப்பதாக அவர் எண்ணுகிறார் - சிற்பி அதனை அறிவானே! எனவே, உள்ளதை உள்ளபடி காட்டினால், உயிரே போனாலும் போய்விடும்; எனவே கலை பிறப்பிக்கும் கட்டளையைக்கூட மீறுகிறான்! சுருக்கமின்றிச் சிலை சமைக்கிறான்! கலைஞன் மீறக்கூடாத அறத்தை மீறுவதை எண்ணுகிறான். கவலை தாக்குகிறது. முகத்தில் சுருக்கம் விழுகிறது.

சீமான்களும் சீமாட்டிகளும் சிலைவடிவமெடுக்கின்றனர்; சிலையைக் கண்டுவிட்டு, அவர்களைக் காண்பவர் ஏமாற்றமடை கின்றனர்! ஏமாற்றத்தை வெளியே எடுத்துரைக்கவும் இயலாத நிலை! பாராட்டுகிறார்கள் சிற்பியை. சிற்பிக்கோ, வேதனை, வெட்கம்!

இந்த வேதனையும் வெட்கமும் போதாதென்று, காலத்தை வெல்லும் கவின்மிகு காட்சிகளை வடித்தெடுக்கச் சொல்கிறான் - வாழ்வுக்காக என்னென்ன பாடுபடவேண்டி நேரிட்டுவிடுகிறது என்பதறியாதான்! அன்னப் பெடையாம்! அழகு மயிலாம்! அலர்ந்த மலராம்! - ஆமாம்! இவைகள் செதுக்கப்பட வேண்டியவைகள்தான். தெரியும். முடியும். ஆனால், செதுக்கினால், பலன்? உளி தூக்கும் அளவுக்குக்கூட உடலிலே வலிவு இராதே! பட்டினியல்லவா கிடக்கவேண்டி நேரிடும்!

பாரே புகழும்! கலை உலகே பாராட்டும்! - என்கிறான். புகழ்! தேன்!! ஆமாம்! ஆனால், முதலில் பசிப்பிணியல்லவா போகவேண்டும் - பிறகல்லவா, தேனென இனிக்கும் புகழ்!!

ஏற்றமிகு எண்ணம் இருக்கிறது இவனுக்கு; நேர்த்திமிகு கலைத்திறன் இருக்கிறது நமக்கு!! ஆனால் வயிறு வேறு இருந்து தொலைக்கிறது!! - என்று எண்ணிக்கொள்வான் சிற்பி.

ஓடோடி வந்தான் இளைஞன் ஓர் நாள்! தைலம் போன கட்டைபோன்ற உடல். கல்லாமையைக் காட்டிடும் கண்கள் - இப்படி உள்ள சீமானைக் கட்டுடலும் கருணைபொழியும் கண்களும் உடையோனாக்கிக் கொண்டிருக்கிறான் சிற்பி! உளிக்கு வாயுண்டா, ஏன் இந்த அக்ரமம் என்று கேட்க!!

"அருமையான காட்சி! அகிலம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய காட்சி!''

"களிநடமிடும் கன்னியைக் கண்டாயோ?''

"இல்லை, சிற்பியாரே! கன்னியை அல்ல! ஒரு காளையைக் கண்டேன்.''

"நம் நாட்டு வீரனோ?''

"காளை, சிற்பியாரே! காளை! வீரன் அல்ல!''

"உண்மையான காளையா? அதிலென்ன அருமை கண்டனையோ?''

"சிற்பியாரே! என்னென்று கூறுவேன் அதனை. காளை வலிவுள்ளது! அழகானது! சந்தனமரத்தைத் தழுவிக்கொண்டுள்ள ஒரு பச்சைக் கொடிமீது இச்சைகொண்டு, இடையே படர்ந் திருந்த நச்சுக்கொடிகளைக் காணாமல், பாய்ந்து சென்றது. கொடிகள், காளையின் கால்களை இறுக்கிக் கொண்டன! விடுபடப் பலம் கொண்டமட்டும் முயற்சி! முயற்சிக்க முயற்சிக்கக் கொடிகள் காலிலும் கழுத்திலும் சுற்றிக்கொண்டன. திணறும் நிலை காளைக்கு! அரிமாவோ என்று எண்ணுவர், அதன் அலறல் ஒலி கேட்டு! சுற்றிக்கொண்டுள்ள கொடிகளை அகற்றப் போராடுகிறது, காலால், கொம்பினால், கொடிகளை அறுத்தெறிந்தபடி! கண்களிலேகூட நீர் வடிகிறது, முள் குத்தியதால்! உடலெங்கும், கொடியிலுள்ள முட்கள், கீறியதால் இரத்தத் துளிகள்! காளை, கருப்பு நிறம்! இரத்தத்துளிகள் உடலிலே! சிறிது நேரத்திற்கெல்லாம் கருப்பும் சிகப்பும் கலந்ததோ என்று எண்ணத்தக்க விதமாயிற்று, உடல்.''

"பொறு! பொறு! சந்தனமரம்! அதிலே பச்சைக்கொடி பாயும் காளை! அதனைப் பற்றிக்கொண்ட கொடிகள்! விடுபடக் காளை போரிடுகிறது! அற்புதமான காட்சிதான்! சிலை வடிவமாக்கினால் கலை உலகே புகழும்.''

"ஓடோடி வந்தேன், கூற.''

"போராடும் காளை எனும் சிலை வடிக்கச் சொல்லத் தானே!''

"அல்ல, காளையின் நிலையைப் பார்த்ததும், எனக்கு வேறோர் நினைவு வந்தது.''

"என்ன நினைவு?''

"அடிமைப்படுத்தப்பட்ட வீரன்! கட்டுண்டு கிடக்கிறான் தளைகளால்! தளைகளை அறுத்தெறிந்து விடுதலைபெறப் போரிடுகிறான்! கட்டுடலைச் சுற்றிக்கொண்டிருக்கும் இரும்புச் சங்கிலிகளை, உடலை வளைத்தும் நெளித்தும் அறுத்தெறிய முயல்கிறான். அப்படியொரு சிலை சமைக்க வேண்டும். கொடுமைப்படுத்துவோர் எங்கு இருப்பினும், அடிமைப்படுத்தப்பட்டோர் எவரெனினும், அந்தச் சிலையைக் கண்டதும், வீரம் கொப்பளிக்கும் - விடுதலை ஆர்வம் பீறிட்டெழும்.''

சிலை கண்டு, சிற்பியே மகிழ்ந்தான்! சிந்தனையாளன், வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பறித்தெடுத்து மாலையாகத் தொடுத்து, உமக்கு அணிவிக்கும் திறம் எனக்கு இல்லையே என்றான். உன் புகழுரை அதனினும் மிகுதியானது என்றான் சிற்பி. ஊர் நடுவே சிலையை அமைத்தனர், அனைவரும் காண! கண்டனர்! கண் சிமிட்டினர்! அவரவர் தத்தமது அலுவலைக் கவனிக்கச் சென்றனர்.

கண்டவர், வைத்த கண் வாங்காமல் நிற்பர்! பாராட்டுவர்! உற்றார் உறவினரையும் நண்பர்களையும் அழைத்துவந்து காட்டுவர்! இந்த அருமையான சிலையை வடித்தெடுத்த சிற்பியைக் காணத் துடிப்பர் - அவன் பணிமனையைக் கலைக் கோயில் என்று புகழ்வர்! என்றெல்லாம், சிந்தனையாளன் எண்ணினான்.

கல்லால் ஆன சிலையா இது! உயிருடன் ஓர் வீரன், தளைகளை அறுத்தெறியப் போராடுவது போலவேயன்றோ தெரிகிறது! - என்று பலரும் பேசுவர்! காட்சி கற்பனையா? எங்கேனும் நடைபெற்ற வீரச் செயலா? என்று கேட்பர்! கொடியினை அறுத்தெறியப் போரிட்ட காளையைக் கண்டதால் எழுந்த சிந்தனை, இச்சிலையாயிற்று எனச் செப்பி மகிழலாம் என்ற எண்ணினான் சிந்தனையாளன்.

அவரவர்கள், அவரவர் அலுவலைக் கவனிக்கிறார்கள் - சிலையைப் பார்த்துவிட்டு!

புன்னகை செய்கிறார்கள் - சிலர் பெருமூச்செறிவதும் தெரிகிறது! ஆனால், சொக்கிப் போய் நிற்கவில்லை! வியப்புடன் விளக்கம் கேட்கவில்லை! வேலைகளைக் கவனிக்கிறார்கள். வேலை இருக்கிறதே நிரம்ப! ஏற்றுக்கொண்ட வேலைகள்! வயிறு இருக்கிறதே!!

சிற்பிகூட இதைத்தானே முன்பு சொன்னான். சிந்தனை யாளன், அதை எண்ணிக்கொண்டான்.

கலைக்கூடம் சென்று, கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்தான்.

"கவலை எதற்காக அப்பா?''

"கருத்தற்ற மக்கள்! கலை அறிவு துளியுமற்ற மக்கள்! கண்ணற்ற மக்கள்!'' "கண்ணற்றவர்கள் அல்ல அப்பா! கண் இருக்கிறது காண! ஆனால், வயிறு இருக்கிறதே!''

"வயிறு! வயிறு! வயிறு! கேட்டுக் கேட்டுக் காது குடைகிறது, இந்தப் பேச்சை.''

"காது கேட்காது! கண் பஞ்சடைந்துவிடும் வயிறு காய்ந்தால். அதைத் தெரிந்துதான், கண்டுவிட்டு, அவரவர் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கச் செல்கிறார்கள்.''

"வாயாரப் பாராட்டினால் என்னவாம்? கலை அறிவு இருந்தால்தானே!''

"கலை அறிவு இருக்கிறது, கண் இருப்பதால். ஆனால், பாராட்ட நேரம் இல்லை! வேலை இருக்கிறதே நிரம்ப! ஏற்றுக் கொண்ட வேலை! வயிறு இருக்கிறதே!''

"ஊரே திரண்டு நின்று புகழப் போகிறது என்று எதிர்பார்த்தேன்.''

***

சிற்பியும் சிந்தனையாளனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த உளி ஏந்துவோன், "களுக்'கெனச் சிரித்தான். இருவரும் திரும்பிப் பார்த்தனர்; சிந்தனையாளன் சீற்றத்துடன்; சிற்பி ஏதும் புரியாத நிலையில்!

***

"மன்னிக்க வேண்டும்'' "அடக்கம் போதும்! சிரித்த காரணம்?''

"தங்கள் பேச்சுக் கேட்டுச் சிரிப்பு. . . . .''

"வயிறு எரிந்து பேசுகிறேன் நான்! உனக்குச் சிரிப்பு வருகிறது உம்!''

"கோபம் கொள்ளாதீர் ஐயா! சிலையைக் கண்டு ஊரே திரண்டு நின்று கொண்டாடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னீர்கள். . .''

"ஆமாம்! எதிர்பார்த்தது தவறா? சிலை, அத்தகைய பாராட்டுதலைப் பெறத்தக்க ஏற்புடையது அல்லவா?''

"என் ஆசானின் திறமையை நான் நன்கு அறிவேன். சிலை, முதல் தரமானது! எவரும் கண்டு பாராட்டத்தக்கது. ஐயம் எவர்க்கும் எழாது! பாராட்டத்தக்க நிலையில் உள்ள சிலையைப் பாராட்டுவது தங்கள் கடமை என்று அறியும் உணர்வு, மக்களில் பெரும்பாலாருக்குக் கிடையாது. . .''

"பாராட்டத் தெரியாது - அதாவது, நான் சொன்னபடி, மக்களுக்குக் கலை அறிவு இல்லை.''

"கலை அறிவு எப்படிப்பட்டது என்று எடுத்துரைக்கத் தெரியாது. ஆனால் கலை அறிவே இல்லை என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. மேலும், மிக நேர்த்தியாகத்தான் இருக்கிறது என்று மனதிலே எண்ணிக்கொள்வார்கள் - பேச மாட்டார்கள்!''

"அதுதான் தவறு என்கிறேன்.'' "அதுதான் மக்கள் இயல்பு!''

"அழகுச் சிலையைக் காண்பது; வாய்மூடிக் கிடப்பது! இது ஒரு இயல்பா!!''

"ஊரே வியப்புற்று ஓடோடி வந்து சிலையைக் கண்டு, அதுபற்றிப் பரபரப்புடன் பேச வேண்டும் என்கிறீர்.''

"எதிர்பார்த்தேன்!''

"ஏமாற்றம் அடைந்தீர்! எரிச்சலும் கொண்டுள்ளீர்.''

"ஆமாம்! ஊரே இந்தச் சிலை பற்றியே பேச வேண்டும் - மற்ற எதனையும் மறந்து! என்று எதிர்பார்த்தேன்.''

"பேசச் செய்கிறேன்.''

***

உளி ஏந்துவோனின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சிற்பியும் சிந்தனையாளனும் திடுக்கிட்டுப் போயினர்.

சிற்பி, சிந்தனையாளனுக்கு ஆறுதல் கூறினான் - ஆனால், அவன் மனமும் குமுறிக்கொண்டுதான் இருந்தது. கலைத் திறனுக்கு - ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது சிலை! எனினும், வியப்பை, மகிழ்ச்சியை, புகழுரையைக் கூற எவரும் துடிதுடித்துக் கொண்டு வராதது, சிற்பிக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. இவ்வளவுதான் மக்கள்! என்று எண்ணிக்கொண்டான். சலிப்பு!

கட்டுடல் மட்டுமல்ல, தளைகளை அறுத்திட முனையும் போது, நரம்புகள் எவ்விதம் புடைத்து இருக்குமோ அந்த நுணுக்கம்கூடத் தெரிந்தது சிலையில்! ஒருபுறமுள்ள தளை அறுபடும் நிலை ஏற்படும்போது, புன்னகை! ஆனால், அதேபோது வேறோர் புறம்; தளை சதையை மென்று தின்றுவிடுவதுபோல இறுக்கிக்கொண்டிருப்பதால் வேதனை! இரண்டுமே சிலையிலே காட்டினான் சிற்பி!

சிலை சமைப்பதிலே, தான் காட்டியுள்ள திறமையை, சிலையின் தரத்தைக் குறித்து எவரும் பேசாதது, சிற்பிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஊரே திரண்டுவந்து பாராட்டும் என்றுதான் அவனும் எதிர்பார்த்தான்.

வீரன் - கட்டுண்டவன் - தளை அறுத்தவன் - இந்நிலை யுள்ள சிலைகளைப் பலரும் சமைத்தனர் - முன்பு.

இந்தச் சிலை, ஒவ்வொரு நிலையிலும் காணக்கிடக்கும் சிறுசிறு குறைகளை நீக்கி, ஒவ்வொன்றிலும் விளங்கிய அழகைக் கூட்டிச் சமைக்கப்பட்டது.

இந்தச் சிறப்பியல்பை எடுத்துக்காட்டுவர் என்று சிற்பி எதிர்பார்த்தான்.

சீமாட்டியின் சிலையாக இருந்தால், பொன்னும் பொருளும் கொடுத்திருப்பார் சீமான்.

இந்தச் சிலை சமைத்தபோது, எவரிடமும் பொன்னும் பொருளும் எதிர்பார்க்கவில்லை.

அரண்மனையோ, மாளிகையோ, இந்தச் சிலை தமக்குரியது என்று உரிமை கொண்டாடப் போவதில்லை.

இது வீரனின் சிலை! விருதுபெற்ற வீரன் அல்ல! வேந்தர் அவையில் உயர் இடம் பெற்ற வீரன் சிலை அல்ல! கட்டுண்ட வீரன் - விடுதலை பெறத் துடிக்கும் காளை - தளைகளை அறுத்திடும் முயற்சியில் தன் முழுவலிவையும் ஈடுபடுத்திய நிலையிலுள்ள வீரன் சிலை! இதை மன்னர் மகனோ, மாளிகை உடையோனோ, பாராட்ட எப்படி முடியும்? வீரர்கள்! விடுதலை விரும்பிகள்! தளைகளின் கொடுமையைக் கண்டவர்கள்! உரிமைக்காகப் போரிடத் துணிந்தவர்கள்! இவர்களுக்கு மட்டுமே, இதன் அருமை தெரியும்! பாராட்டத் தோன்றும்!

மக்களே, இதன் மாண்பு அறியத்தக்கவர்கள்.

மக்கள், மன எழுச்சி பெறவே இந்தச் சிலை!

இந்தச் சிலை காட்டும் வீரத் திரு உருவமே, மக்களை மாக்களாக நடத்திடும் மமதையாளரை அழித்தொழிக்கும் மாவீரத்தை மக்களுக்கு ஊட்டவல்லது!

சிலை இத்தகைய எழுச்சியூட்டும்; இது கல்லில் எழுதப் பட்டுள்ள காவியம்! என்று மக்கள் கூறுவர் சிலையைக் கண்டதும், கண்களிலே ஓர் புத்தொளி தோன்றும்! வீரம் கொப்புளிக்கும் நெஞ்சத்திலே! கூனிக் கிடந்தவன் நிமிர்ந்து நிற்பான்! அஞ்சிக் கிடந்தவன் கெஞ்சி நின்றவன், பஞ்சை அல்ல நான்! கோழை அல்ல நான்! கொடுமையை எதிர்ப்பவன்! உரிமைக்காகப் போராடுபவன்! - என்று முழக்கமிடுவான். மனிதன் வீரனாவான்! மமதையாளன் அச்சம் கொள்வான். சிலை மூலம், சிறப்பானதோர் பாடம் தருகிறோம் - என்றெல்லாம் சிற்பி எண்ணாமலில்லை.

ஆனால், மக்கள்? பார்த்தனர், நன்றாகத்தான் இருக்கிறது என்றுரைத்தனர் - மறுகணமோ, ஏருடன் சென்றான் ஒருவன்; எருது தேடிச் சென்றான் இன்னொருவன்; பருகச் சென்றான் ஒருவன்; பண்டம் பெறச் சென்றான் மற்றொருவன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டனர்! என்ன செய்வர்? வேலை இருக்கிறதே நிரம்ப. ஏற்றுக்கொண்ட வேலை! வயிறு இருக்கிறது! அது வேறு!

மக்களின் இந்த அக்கறையற்ற போக்கு கண்டு மனம் கொதித்த சிந்தனையாளனுக்கும், அதை மறைத்திட முயன்ற சிற்பிக்கும், உளியேந்தி திடுக்கிடத்தக்க பேச்சல்லவா சொன்னான். ஊரே பேசத்தானே வேண்டும் சிலையைப்பற்றி? பேச வைக்கிறேன்!! என்று. எப்படி என்று இருவரும் யோசித்தனர். உளியேந்தி திட்டம் வகுத்துக்கொண்டான்.

"விர்'ரென்று பறந்துவந்து வீழ்ந்தது ஒரு கல்! சிலைமீது "கல்'லென்ற ஒலி கேட்டது! வழியே சென்றோர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்! சிலைமீது பட்டுத் தெறித்தது கல்!!

யார் இந்தக் காரியம் செய்தது?

என்ன ஈனத்தனமான காரியம் இது? கல்லெறியும் கயவன் யார்?

சிலை இவனை என்ன செய்து?

சீற்றத்துக்குக் காரணம் என்ன?

சீற்றமா புத்தித் தடுமாற்றமா?

ஏமாளியா! அல்லது எவரேனும் ஏவிவிட்டனரா?

இவ்விதமான பேச்சு எழுந்தது! கற்கள், "விர்விர்'ரெனப் பறந்து வந்து, சிலைமீது விழுந்தவண்ணம் இருந்தன!

கற்கள் சிறியவை - சிலை பெரிது! கற்கள் வீழ்வதால் ஓசை கிளம்பிற்று - சிலைக்குச் சேதம் இல்லை!

மக்கள் பரபரப்பு அடைந்தனர்! இங்குமங்கும் பதறி ஓடினர்! எதிர்ப்பட்டோரிடம் கூறினர்!
சிலைமீது கல்லெறிகிறார்கள்!
சிலையை உடைக்கிறார்கள்!
சிலை உடைகிறது!
சிலையை உடைத்துவிட்டார்கள்!
அடடா! சிலை அழகானது என்று மகிழ்ந்தனரே!
அற்புதப் படைப்பு என்றனர் அறிந்தோர்!
ஊர் நடுவே அழகாக அமைந்திருந்தது!
உடையக்கூடியதல்லவே அந்தச் சிலை!
அப்படிப்பட்ட சிலைக்கும் ஆபத்து வந்ததே!

ஊரில், இதுபோலப் பேச்சு; பல்வேறு வகையாக. பலரும், சிலையைக் காண ஓடோடி வந்தனர். முன்பு கண்டதைவிட அக்கறையுடன் பார்த்தனர்; அழகு கண்டு வியந்தனர்!

இதை உடைக்கவும் மனம் வந்ததே!

காதகன்! தன்னால் இப்படிப்பட்ட நேர்த்தியான சிலை செய்ய முடியவில்லையே என்ற பொறாமை!

சிலை செய்த சிற்பிக்கு நாடு சிறப்பளிக்கும்; தனக்குக் கிடைக்காதே என்ற காய்ச்சல்!

கெடுமதி! சிலை, பொதுச்சொத்து! கலைக் கருவூலம் என்ற பேரறிவு இல்லாதனின் பேய்ச்செயல்!!

கூடி நின்றோர் பேசினர் இதுபோலெல்லாம்.

வீசிய கற்கள் கீழே சிதறிக்கிடந்தன.

"பார்த்தீர்களா! சிலை பொடிப் பொடியாகிவிட்டது.''

என்றான் ஒருவன்! மற்றொருவன் அவசரமாக முடிவுக்கு வரும் இயல்பினன்.

"ஆமாம்! சிலை உடைந்ததால்தான், இந்தக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன''

என்றான்.

மூன்றாமவன் சிலையை உற்று நோக்கினான்! சிதையாமல் நின்று கொண்டிருந்தது!

கீழே பார்த்தான்; கற்கள்! சிலையின் கண்ணோ, கையின் துண்டோ! காதோ! காலின் துண்டோ! - எது உடைந்து போயிற்றோ என்று பார்த்தான். அதது அப்படி அப்படியே இருந்திடக் கண்டான்.

"இவை கற்கள்! வீசப்பட்ட கற்கள்! சிலைமீது சீற்றத்தால் சிற்றறிவினனானவன் வீசினானே, அந்தக் கற்கள்! சிலை உடைக்கப்பட்டதால் சிதறி வீழ்ந்த கற்கள் அல்ல! சிலையைப் பாருங்கள், மீண்டும்! சரியாகப் பாருங்கள்! பழுதுபடாமல் இருக்கிறது கலை அழகுடன்!''

பிறகு மற்றவர்களும் உற்றுப் பார்த்தனர் - உண்மை புரிந்தது. சிலை கெடவில்லை!

சிலையை உடைத்துவிட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீயெனப் பரவவே, ஊரே திரண்டது சிலை எதிரில்!

முன்பு அதே சிலையைப் பார்த்திருக்கிறார்கள்; ஆனால், அதுபற்றி அதிகமாகப் பேசினதில்லை.

இப்போது அதே சிலை! அதே மக்கள் பார்க்கிறார்கள்; பார்த்துவிட்டு நிரம்பப் பேசுகிறார்கள். ஊரே திரண்டு வந்து பார்க்கிறது சிலையை! ஊரார் சிலை பற்றியே பேசுகிறார்கள்.

அவசரத்தில் சிலை உடைந்துவிட்டது - பொடிப்பொடி யாகிவிட்டது - என்று பேசுகிறார்கள். பிறகோ கூர்ந்து பார்க்கிறார்கள்; வீழ்ந்து கிடப்பவை வீசப்பட்ட கற்களே என்பது புரிகிறது; சிலை உடைபடாமல் இருப்பதைக் காண்கிறார்கள்.

உடைந்துபோய்விட்டது என்று நினைத்தோம், சிலை உடைபடவில்லை!

கற்களைச் சரமாரியாக வீசித்தான் பார்த்தார்கள். சிலைமீது வீழ்ந்தன; ஆனால், சிலை உடைபடவில்லை! வீசப்பட்ட கற்கள், மூலைக்கு மூலை வீழ்ந்து கிடக்கின்றன!

ஊர் மக்கள் இதுபோல் பேசத் தொடங்கிச் சிலை உடைபடாத தன்மைபற்றித் துவக்கிச் சிலையின் அமைப்பு, நேர்த்தி, தரம், சிற்பியின் திறம், சமைத்த நோக்கம், சிலை தரும் எழுச்சி என்பன பற்றியெல்லாம் பேசலாயினர்.

சிற்பியும் சிந்தனையாளனும், ஊரே சிலைபற்றிப் பேசுவது கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.