அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அழியாச் செல்வம்
2

உளி ஏந்தி, வீசியதுபோக, மீதம் உள்ள கற்களைக் காட்டி, "எப்படி என் வேலை?'' என்று கேட்டுச் சிரித்தான்!

"கற்களை வீசியவன் நீதானா?''

"ஆமாம்! வேறு யாருக்குத் தெரியும் அந்தத் தந்திரம்?''

"எந்தத் தந்திரம்?''

"அக்கறையற்றுக் கிடந்த ஊர் மக்களைச் சிலையைப்பற்றி இவ்வளவு பேச வைத்தேன் அல்லவா? கற்களை வீசி!''

அதற்காகவா இந்த வேலை? அக்ரமக்காரர்! சிலைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுவிட்டிருந்தால்?

"ஏற்படுமா? எனக்குத் தெரியாதா, சிலையின் வலிவு; நான் வீசும் சிறு கற்கள் எப்படிப்பட்டவை என்பது. மேலும் வீசுபவன் யார்? நான்! வேகம் எப்படி இருக்கும் என்பதும் தெரியுமல்லவா?''

"சிலை உடைந்துவிட்டது என்றே நான் பயப்பட்டுப் போனேன்.''

"நீங்கள் பயப்பட்டது கிடக்கட்டும். ஊரே பயந்து போயிற்றே.''

"ஆமாம்! சிலை நொருங்கிவிட்டது என்று எண்ணிக்கொண்டுதான், ஓடோடி வந்தனர் ஊர் மக்கள், திரள் திரளாக!''

"ஊர் மக்களுக்குப் பீதி ஏற்படும் விதமாக, நான்தானே வதந்தி கிளப்பினேன்! சிலை உடைந்து விட்டது! உடைக்கப்பட்டாகிவிட்டது! சிதறிச் சிறு சிறு கற்களாகக் கீழே வீழ்ந்துவிட்டது என்றெல்லாம்.''

"ஊர் மக்கள் சிலையைப்பற்றி அக்கறையற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போதல்லவா தெரிகிறது, ஊராரின் நினைவு, சிலைபற்றியேதான் இருந்து வந்திருக்கிறது என்ற பேருண்மை.''

"இதை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்புக் கிடைத்தது.''

மூவரும் எழுச்சிகொள்ளும் விதமாக, ஊரார், சிலையின் நேர்த்தி குறித்தும்; சிற்பியின் திறம்பற்றியும்; சிலையைக் காண்போர் பெறும் எழுச்சிபற்றியும் பேசி மகிழ்ந்தனர்.

***

தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட நாடு எனும் திட்டத்தையும், தாக்கித் தகர்த்திட எண்ணிப் பலர் வீசிய இழிமொழியும், பழிச்சொல்லும், இந்தக் கதையில் வரும், உளியேந்தியின் வேலைமுறை போன்றது என்று எண்ணத்தக்க விதத்தில், ஒவ்வொரு தாக்குதலின்போதும், ஊரே திரண்டுவந்து கழகத்தைக் கண்டு, கலகலத்துப் போய்விடவில்லை என்பதை அறிந்து, கழகத்தின் "தாங்கும் சக்தி' குறித்துப் பேசிடுவதைக் கேட்கிறோம்.

ஒரு மாறுபாடு - அதனை நான் மறந்திடவில்லை.

கதையில் வரும் உளியேந்தி உள்ளபடி, ஊர் மக்களைத் திரட்டத் தந்திரம் கடைப்பிடித்தான்; அதற்கே கல் வீசினான்.

கழகத்தின்மீது இழிமொழியும் பழிச்சொல்லும் வீசுவோர், அதுபோன்றார் அல்ல.

ஆனால், தமது முயற்சிகள் முறிந்துபோனதை உணர்ந்த பிறகு, அவர்களிலே சிலரேனும் கழகத்துக்குத் தாங்கும் சக்தி எவ்வளவு இருக்கிறது, ஊரார் கழகத்தைப்பற்றி எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நாம் விளங்கிக்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே, பகை கக்குவதுபோல, எதிர்ப்பு நடத்துவதுபோல, ஏளனம் செய்வது போல நடித்தோம் என்று பேசக்கூடும்.

இதிலே, இவர்தம் போக்கிலே, எது நடிப்பு? எது உயிர்த் துடிப்பு? எது கொண்ட கோலம்? எது நிலைத்த தன்மை? என்று கண்டறிவது கடினம்; எனினும், கழகத்தின் தாங்கம் சக்தி வளரவேண்டும் எனில், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, இப்படிப் பட்ட, இழிமொழி, பழிச்சொல், கழகத்தின்மீது வீசப்பட வேண்டும்! மாற்றார் வீசுவதைக் காட்டிலும், உற்றாராக இருந்தோர் வீசுவதுதான், கழகத்தின் தாங்கும் சக்தியை நாம் கணக்கெடுக்க மெத்தவும் பயன்படும்.

அந்தக் கட்டம் திடீரென்று முளைத்தது; வேகமாக வளர்ந்தது; இப்போது முடிவடையும் தருவாயிலிருக்கிறது.

சிலைமீது கல் வீசப்படுகிறது என்ற உடன், சிலை உடைந்து விட்டதாமே என்று பேசியபடி, ஊரே திரண்டுவந்து, சில எதிரே நின்றதுபோல, இப்போது, அரசியல் வட்டாரங்கள் அனைத்தும், ஏடுகளில் பலப்பல, திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து அக்கறை காட்டாது இருந்த கோலம் கலைக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கணமும் கழகத்தைப்பற்றியே, நினைப்பாக இருப்பது காண்கிறோம்.

இசைவாணன், சத்தமாகக் கொட்டாவி விட்டால்கூட "இது ஒரு தனி இராகமோ!' என்று எண்ணிக்கொள்வார்களாம்!

அதுபோல, இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் பேச்சு, நடவடிக்கை எதுவாக இருப்பினும், அரசியல் வட்டாரங்கள் ஆய்வுக் கூடங்களாகின்றன; செய்தி திரட்டுவோர் துப்பறிவோராகின்றனர்; ஒவ்வொரு அங்க அசைவுக்கும், இரப்பைத் துடிப்புக்கும், பொருள் யாதாக இருக்கமுடியும் என்று பொருள் தேடுகின்றனர்; பொறுப்பு மிக்கவர்கள்!!

பெரும்பகுதி, பீதி கிளப்பவும், பிளவு மூட்டவும்தான் எனினும், எனக்கு ஒரு மகிழ்ச்சி - உலகிலேயும் சரி, இங்கேயும் சரி, ஓராயிரம் நிகழ்ச்சிகள் உள்ளன. குலுவிலே "குளு குளு' வாசம் செய்யும் நேரு; வங்க அசாம் வல்லடியால் ஏற்பட்ட கொதிப்பு; பாஞ்சாலத்திலே உருவாகிக்கொண்டுள்ள பரபரப்பு; காஷ்மீர்பற்றி அயூப்கான் காட்டும் கண்டிப்பான போக்கு என்று எண்ணற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. எனினும், இவைகளுக்கெல்லாம் இடம் கிடைப்பதே இப்போது கஷ்டமாகிவிட்டது. கழகத்தைப்பற்றிய செய்திகள், செய்திகளுக்கு விளக்கங்கள்; கழகம் குறித்து ஆருடங்கள்; கழகத்தில் இவருடைய சிரிப்புக்கு என்ன பொருள்? அவருடைய சீற்றத்துக்கு என்ன காரணம்? என்ற ஆராய்ச்சியுரைகள் ஆகியவைகளுக்கு அளித்ததுபோக, மிச்சம் இருக்கும் இடத்திலேதான், குருஷேவும் கென்னடியும், நேருவும் மொரார்ஜியும், அணுகுண்டும் வியன்னாவும், சகாராவும் சஞ்சீவரெட்டியும், பக்ராவும் பண்டார நாயகாவும், குடியேற வேண்டி இருக்கிறது!

நான் அறிந்தவரையில், ஒரு கட்சிக்காகத் தம்மை ஒப்படைத்துள்ள ஏடுகள், வேறோர் கட்சியின் பாதக்குறட்டின் அளவிலிருந்து கூடிப் பேசும் நிகழ்ச்சிவரையில், நேரத்தை, நினைப்பை இத்தனை பெரிய அளவுக்குச் செலவிடுவது இதுதான் முதல்முறை என்று எண்ணுகிறேன். அதிலும், நேற்றுவரை நெறித்த புருவத்துடன், அது ஒரு கட்சியா! அதற்கு எமது இதழிலே இடமா! வேறு வேலையா இல்லை எனக்கு!! என்று மாமேதைகள்போலக் கோலமணிந்துகொண்டிருந்த ஏடுகள், இன்று, பக்கத்துக்குப் பக்கம் கழகத்தைப் பற்றியே வெளியிட வேண்டி வருகிறது!

அது ஒரு கட்சியா! என்று அவ்வளவு ஆணவங்கலந்த அலட்சியம் காட்டிவந்தோமே, இன்று விழுந்தடித்துக்கொண்டு போகிறோமே, என்ன வீசுவார்கள்? யார் ஏசுவார்கள்? என்ன வதந்தியைக் கக்கலாம்? என்ன வசை மொழியைப் பொழியலாம்? - என்று துடியாய்த் துடிக்கிறோமே; அலட்சியப்படுத்தத் தக்கது இந்தக் கழகம் என்று பேசினாயே முன்பு! அது உண்மை என்றால் அந்தக் கழகத்திலே என்ன நேரிட்டால் என்ன? நமக்கு என்ன கவலை! ஊராருக்குத் தெரிவிக்க, எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, எந்தக் கழகத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோம், அது குறித்து எதுவும் எமது வாயால் பேசமாட்டோம், பேசுவது தரக்குறைவு. வீணாக அந்தக் கழகத்துக்கு விளம்பரம் நாமாகத் தேடிக் கொடுப்பதாக முடியும் என்றெல்லாம், உச்சாணிக் கிளை அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோமே, அந்தக் கழகம்பற்றி. இன்று உதிர்ந்தது ஏதேனும் கிடைக்காதா, யாராவது இழிமொழி உமிழ மாட்டார்களா, அதைச் சிந்தாமல் ஏந்தி வந்திடலாமே என்ற அளவுக்கு இறங்கிவந்துவிட்டோமே; - இதை அறியும் மக்கள் நம்மைப்பற்றி, நமது தரத்தைப்பற்றி, என்ன கருதுவார்கள் என்பதுபற்றிக்கூட, அந்த ஏடுகள் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை!

நாடுவாரற்று, நாட்டிலே செல்வாக்கற்று, மதிப்பாரற்று உள்ளது, திராவிட முன்னேற்றக் கழகம்; இதற்கு ஒரு கொள்கை உண்டா? கோட்பாடு உண்டா? எதிர்காலம் உண்டா? ஆதரவு உண்டா? என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர்கள் இன்று!

"கழகம் கலகலத்து வருகிறது!''

"கழகத்தின் கட்டுக்கோப்பு உடைகிறது!''

"கழகத்தில் கலகம் ஏற்பட்டுவிட்டது!''

"கழகத்தில் கொள்கைக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.''

"கழகத்தை இனி நாடு ஆதரிக்காது!''

"கழகத்துக்கு எதிர்காலம் இல்லை!''

என்ற தலைப்புகளிட்டும், தகவல்களைத் தீட்டியும், எழுது கின்றனவே, இதற்கு என்ன பொருள்? ஏதாகிலும் இவர்கள் பேச்சிலே, பொருத்தம், முன்பின் தொடர்பு இருப்பதாக மதியிலியன்றி மற்றவர் கருதுவரா?

இன்று அமாவாசை! - என்று முதல் வரியில் எழுதத் தொடங்கி, ஒளிவிட்டுக்கொண்டிருந்த நிலவு, மங்கிற்று - கருமேகம் நிலவைப் பிடித்துக்கொண்டது என்று எழுதினால், அந்த "எழுத்தாளரை' பித்தர் பட்டிக்கல்லவா அனுப்பவேண்டி நேரிட்டுவிடும்!

கழகம் கவைக்கு உதவாதது! நாடு, அதனைச் சீந்துவ தில்லை!! - இந்த அறிவுசால் தீர்ப்பினை முன்பே அளித்துவிட்ட பேரறிவாளர்கள், இப்போது, கழகத்தின் உயரமும் அகலமும், கனமும் குறைகிறது என்ற கணக்கெடுக்க முன்வருவானேன்! அமாவாசை என்று சொல்லியான பிறகு, நிலவு மேகத்தால் மறைக்கப்பட்டு மங்கிற்று என்று எழுதுவது ஏனோ!

திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கொள்கை இல்லை!! இது, அண்ட சராசரத்து அறிவைத் திரட்டி உருட்டித் தம் எழுதுகோலில் திணித்துக்கொண்டிருப்பதாகக் கருதிக்கொண் டிருப்போரின் தீர்ப்பு!!

இன்று, திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையான திராவிட நாடு திராவிடருக்கே என்பதை, இன்னின்னார் எதிர்க்கிறார்கள் என்று பட்டியல் வெளியிடுவது என்ன பேரறிவோ!!! கைகொட்டிச் சிரிப்பர், இவர்தம் மன அரிப்பையும், அந்த அரிப்பைப் போக்கிக்கொள்ள யார் சொறிந்துவிடுவார்கள் என்று இவர்கள் அலைகிற நிலையையும் காண்பவர்கள்!!

வங்காளியும் - அசாமியனும் வெட்டிக்கொண்டு சாகிறார்கள்!

பஞ்சாபிலே, தாராசிங் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டால் என்னென்ன பயங்கர விளைவுகளோ கிளம்பக்கூடும் என்ற பீதி படை எடுத்திருக்கிறது.

மராட்டியத்துக்கும் - விதர்ப்பத்துக்கும் மோதல் உருவாகிக்கொண்டு வருகிறது.

ஆற்றுநீர்பற்றி அண்டை அண்டை நாடுகளுக்கிடையே அமளிநிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இரண்டில் ஒன்று பார்த்தேவிடுவோம் என்று காஷ்மீர் பற்றி அயூப்கான் முழக்கமெழுப்புகிறார்.

மத்தியப்பிரதேசத்திலே கொள்ளைக்காரரின் அட்டகாசம் குறையக் காணோம்.

பீகார் காங்கிரசிலே கோஷ்டிச் சண்டை முற்றுகிறது; முடைநாற்றமெடுக்கிறது.

ஆந்திரத்தில், பழங்குடி மகனை முதலமைச்சராக்கி விட்டதால், "உயர் வகுப்பினர்' எதிர்ப்பினைப் பல்வேறு முனைகளிலே கிளப்பியபடி உள்ளனர்.

தமிழ்நாட்டில், டில்லியில் இருக்கமுடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட, டி. டி. கே.யை முதலமைச்சராக்கும் முயற்சி நடப்பதாகக் கேள்விப்பட்டுக் காங்கிரஸ் வட்டாரமே கிலியும் கசப்பும் கொண்டு பேசி வருகிறது.

கருநாடகத்திலே காங்கிரஸ் கட்டுப்பாடு என்பது பதவிப் பிசின் போட்டு ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது; எந்த நேரத்திலும் பிய்த்துக்கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

வெற்றிமுரசு கேட்கும் ஒரிசாவிலேயே, முன்னாள் முதலமைச்சர், காங்கிரசுக்குத் துரோகம் செய்தார் என்று இந்நாள் முதலமைச்சர் குற்ற விசாரணை நடத்த ஏற்பாடு செய்கிறார்!

உடலெல்லாம் சிரங்கு! தலையெல்லாம் ஈரும் பேனும்! அந்த அரிப்பு அடங்க மருந்து தேடாமல், கழகத்தின் காலிலே ஒட்டிக்கொண்டுள்ள கசுமலத்தை வழித்தெடுத்து நாட்டுக்குக் காட்டிடும் காரியத்திலா ஈடுபடுவது.

பண்டித நேருவுக்கு அடுத்தபடி, யார்? என்பது தலைவலி அளவுக்குள்ள பிரச்சினையாகிவிட்டது! மொரார்ஜியா? ஜெகஜீவன்ராமா? கிருஷ்ணமேனனா? லால்பகதூரா என்று புரியவில்லை? முகாம்கள் அமைக்கப்படுகின்றன! கோவிந்த வல்லப பந்த் மறைத்த உடனே, அவர் இருந்துவந்த அறையிலே நுழைந்து மொரார்ஜி கொலு இருக்கிறாராம்!! இது யாரைக் கேட்டுக்கொண்டு செய்தார் என்று நேரு பெருமகனார் கேட்க, இதற்கு நான் யாரைக் கேட்கவேண்டும்! என்று மொரார்ஜி அலட்சியமாகப் பதில் அளிக்கிறார்.

அடுத்த முறை, டில்லியில் நான்தான் மந்திரி! - என்று வணிகக் கோட்டத்தாருக்கு கோவை சி. சுப்ரமணியம் செப்பிட, ஐயயோ! நான் என்ன கதியாவது? என்று அரியலூரார் அலறுகிறார் என்கிறார்கள்.

எத்தனை காலம், நான் வெறும் மந்திரியாக இருப்பது!! எவ்வளவு நெருக்கடிகளைக் கடந்திருக்கிறேன்! எத்துணை நெளிவு சுளுவுகள் தெரியும் எனக்கு! இருந்தாலும் ஒரு முறையாவது முதல் மந்திரியாக இருக்க அனுமதிக்கக்கூடாதா! மறுபடியும் வெறும் மந்திரி வேலைதான் என்றால், ஏன் எனக்கு அது!! - தேர்தலுக்கே நிற்கப்போவதில்லை!! - என்று மனம் நொந்து பேசுகிறாராம், பக்தவத்சலம்.

"அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை'' என்பார்கள்; அதுபோல இருக்கிறது அந்த இடத்து விவகாரம்! இந்த இலட்சணத்தில், கழகத்திலே காலையிலே நடப்பது என்ன? மாலையிலே சூடுவது யாது? பிற்பகல் பேசியது என்ன? யாருக்கு யார் மேல்? கீழே என்ன? மேலே என்ன? என்ற இந்த ஆராய்ச்சியிலா, ஈடுபடுவது!! குற்றுயிராகக் கிடக்கும் கணவனுக்கு, மருந்து கலக்கிக் கொடுக்கவேண்டிய மாதரசி, வெள்ளைச் சேலை வாங்கினாளாமே வள்ளி, காரணம் என்ன? என்று அண்டை வீட்டுக்காரியுடன் வம்பளப்பு நடத்துவது போலல்லவா, ஆளும் கட்சியிலே உள்ள ஆயிரத்தெட்டுக் கோணல்களை நிமிர்த்த முயற்சிக்காமல், கழகக் கோட்டத்தை எட்டி எட்டிப் பார்த்துவிட்டு, கண்ணுக்குத் தெரிவது செக்கா? சிவலிங்கமா? என்று ஆராய்ச்சி நடத்துகிறார்கள்!! இதனால் அடையப்போகும் இலாபம் என்ன? இந்த இதழ்கள், நமது சிறப்புகள்பற்றி இதுநாள்வரை, சிந்து பாடிவந்தன என்றாலாவது, ஐயோ! இப்போது தூற்றித் திரிகின்றனவே என்று கவலைப் பட்டிருக்கலாம். எப்போதும் எதிர்ப்பு எழுதிய ஏடுகள்! இப்போதென்ன புதிதாக, இவைகளில் எழுதப்படுவது கண்டு, பதற இருக்கிறது!! பன்னீர் வியாபாரம் செய்வதன் கரம், காடிப்பானையில் பட்டால், அட பாவமே! நறுமணம் போய்விடுமே என்று பரிதாபப்படலாம்!! காடிப்பானையில் விட்டிருந்த கையிலே, கருவாட்டுத் துண்டு எடுத்தால், பரிதாபப்படவா செய்வார்கள்!

காலமெல்லாம், கழகத்தைக் கண்டித்துவந்த ஏடுகள் - இன்று பிறர் உமிழ்வதை எடுத்து வைத்துக்கொண்டு, ஊருக்குக் காட்டுகிறார்கள்! வேறென்ன!!

வீசப்படுபவை வீழ்ந்துபடும்! நிலைத்து நிற்பது, நிமிர்ந்து நிற்கும்!

எதிர் நீச்சலில் ஈடுபட்ட கழகம் எரிச்சலாளர்களின் இருமல், தும்மல், ஏப்பம், கனைப்பு இவைகளைக் கண்டு கலங்கப் போவதில்லை. எரிச்சலாளரின் இருமல், தும்மல், ஏப்பம் இவைகளை ஊருக்கு எடுத்துக் காட்டிடும், "மேலான' செயலிலே, ஈடுபடும் ஏடுகளின்மீது எனக்குத் தம்பி! கோபம்கூட இல்லை, பரிதாபம்தான். நிச்சயமாக!!

கற்கள் வீசப்படுவது கேட்டு, சிலைக்கு ஏதேனும் சேதம் நேரிட்டுவிட்டதோ என்று காண ஓடோடி, ஊரார் திரண்டு வந்ததுபோலத்தான், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி ஏடுகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ள, கழகத்திடம் வியப்புற்றோர், விசாரப்படுவோர், கோபம்கொண்டோர், அச்சப்பட்டோர், விளக்கம் தேடுவோர் எனும் பல்வேறு வகையினரான பொது மக்கள், முன்பு காட்டியதைவிட அதிக அளவு அக்கறை காட்டுகிறார்கள் - ஆதரவு திரட்டித் தருகிறார்கள்!

வண்டுபோல் சுற்றுகிறார்கள் நமது தோழர்கள் - உற்சாகம் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகியபடி இருக்கிறது.

தம்பி! கழகத்தைக் குறித்து எவரெவரோ ஏதேதோ பேசுகிறார்களே, கழகத் தோழர்களிடம் ஏதேனும் உற்சாகக் குறைவு, எழுச்சியிலே விரிசல், சலிப்பு இருக்கிறதா என்று கண்டறியவே, "கொள்கை பரப்புவோர்' கூடிப் பேசிட வாரீர் என்று அழைத்திருந்தேன்.

இது மாநாடு அல்ல! இங்கு விவாதங்கள், தீர்மானங்கள், இல்லை! இது பொதுக்குழு அல்ல - செயற்குழு அல்ல! - கொள்கை பரப்புவோர் கூடிக் கலந்துரையாடலாம் வாரீர் என்று அழைத்திருந்தேன். . . . நூறிலிருந்து இருநூறு பேர் வரையில் வரக்கூடும் என்று நினைத்திருந்தேன். வந்தவர் தொகை ஆயிரத்துக்குமேல்! வர இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்திருந்தோர் தொகை அந்த அளவு இருக்கும்.

இரண்டு நாட்கள்! கண்மூடிக் கண்திறப்பதற்குள் கழிந்து விட்டன! எத்தனை உற்சாகம்! எவ்வளவு எழுச்சி!!

தருணமறியும் தங்கவேலர் என்று முன்பு ஒரு முறை "விடுதலை'யில் நான் தலையங்கமெழுதி இருந்தேன் - காஞ்சி புரத்திலே, "பிரிவினை மாநாடு' நடத்தியதற்காக, அந்தத் தங்கவேலர்தான், உறுதுணையாக நின்றார்; உணவளித்தார்; உரையாடல் கேட்டு மகிழ்ந்தார்.

அவருடைய தென்னந்தோப்பிலே அமைக்கப்பட்ட விடுதியில் தோழர்கள் தங்கினர்; கொட்டகையில் கூட்டம் நடந்தது. ஆயிரம் தோழர்கள்; ஐந்தாறு சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டுக் கலைந்தனரோ? அதுதான் இல்லை!!

அவர்கள் அனைவரும் தத்தமக்குச் சரியென்றுபட்ட கருத்துக்களை, பல பிரச்சினைகளுக்கு ஆய்வுரைகளை, அரிய யோசனைகளை எடுத்துரைத்தனர்.

கழகம் கலகலத்துப் போய்விட்டது என்பதற்கு அடையாளமா இது!! கண்ணுள்ளோர் கண்டனர்; கருத்துள்ளோருக்கு உண்மை புரிந்தது!!

கழகம் உடைபடுகிறது என்று சில ஏடுகள் எழுதி மகிழ்ந்து கொண்டிருந்த வேளையிலேயே, மெயில் இதழின் தனி ஆய்வாளர், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, அரசியல் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து, விளக்கக் கட்டுரைகள் வெளியிட்டார்.

அதிலே, அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும், பிளவு, குழப்பம், பிரிவு, சரிவு என்று எந்தத் தி. மு. கழகத்தைக் குறித்து இட்டுக்கட்டிக் கூறப்படுகிறதோ, அந்தக் கழகம், வலிவு குன்றாமல், பொலிவுடன், விளங்கி வருவதையும், காங்கிரஸ் கட்சிக்குச் சரியான அறைகூவல் விடத்தக்க நிலையில் இருப்பதையும் எடுத்துக் காட்டியிருந்தார்.

ஆயிரவர் கூடினர், அதனை மெய்ப்பித்தனர்!!

தத்தமது வட்டாரங்களிலே கழக வளர்ச்சி எந்த அளவு உள்ளது என்பதுபற்றி, மாவட்ட வாரியாக அமர்ந்து, ஆய்வுரை தந்தனர்.

ஆர்வமும், நம்பிக்கையும், எழுச்சியும் எந்த அளவுக்கு இருந்தால், தேர்தலில், தி. மு. கழகம் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்தாகவேண்டும் என்பதில்லை என்ற கருத்தைக் கூறி யிருப்பார்கள் என்பதை, அப்படி ஒரு கருத்து வெளியிடப் பட்டது. "எதிர்ப்பு' என்ற தலைப்பிட்டு எழுதும் இதழ்கள், எண்ணிப் பார்க்கவேண்டும்.