அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அழியாச் செல்வம்
3

பன்னிப்பன்னிச் சொன்னபிறகும். "பழிபோட்டுத் தலை வாங்கும்' போக்கினர், பிற கட்சிகளுடன், குறிப்பாகச் சுதந்திரா கட்சியுடன், "கூட்டு' ஏற்பட்டுவிட்டதுபோலத் தாமாக இட்டுக் கட்டிக்கொண்டு, பிறகு, அதற்கு "எதிர்ப்பு' ஏற்பட்டதாகக் கயிறு திரித்து, களிப்பைத் தமக்குத்தாமே ஊட்டிக்கொள்கிறார்கள். எதைச் சுவைத்தோ அவர்கள் இன்புறட்டும், தம்பி! நமது கழகம், எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேரவுமில்லை; அதற்கான பேச்சு நடத்தப்படவுமில்லை; எவரும் அதற்காக ஏற்பாடும் செய்ய வில்லை; அழைப்பும் இல்லை!

ஆயிரவர் கூடி, அந்தப் பிரச்சினைபற்றி, அரிய கருத்துகளை தெரிவித்தது, அந்தப் பிரச்சினைபற்றி, நீயும் நானும், மேலும் சிந்திக்க.

ஆயிரவர் எதிர்ப்புக் காட்டினர் என்று ஓர் மண் குதிரை தேடிப்பெற்று, மகிழட்டும் இதழினர். என் மகிழ்ச்சிக்குக் காரணம், கழகம் கலகலத்துவிட்டது, "தேர்தலில் ஈடுபட வேண்டாம்!'' என்று, மனச்சோர்வுடன், திகிலுடன், சலிப்புடன் நமது தோழர்கள் பேசவில்லை. மாறாகத் தேர்தலில் ஈடுபடுவதற்கான நல்வாய்ப்புகள் மிகுந்திருப்பதைத்தான் மெத்த உற்சாகத்துடன் பேசினர் - தன்னம்பிக்கையுடன்.

கழகத்திலே வலிவு குறைந்துவிட்டது; தூற்றல், தாக்குதல் ஆகியவற்றால் கழகத்தின் வாய்ப்புகள் கெட்டுவிட்டன என்ற எண்ணம், கவலை, கலக்கம், பீதி, துளியேனும் தோழர்களிடம் இருந்திருக்கு மானால், யாருடனாவது கூட்டுச் சேர்ந்து, எந்தெந்தக் கட்சிகளின் துணையையாவது கொண்டு, தேர்தலில் நிற்கவேண்டும்; பல கட்சிகளின் "கூட்டும்' உதவியும் இருந்தால்தான், இந்தத் தேர்தலை நாம் சமாளிக்க முடியும்; தனியே நின்று தேர்தலில் வெற்றி தேடிக்கொள்ள முடியாது என்ற முறையில் பேசியிருப்பர். மாற்றார் கூறுவதுபோலவும், மனப் பேதப்பட்டோர் விரும்புவதுபோலவும் கழகம் வலிவு குன்றி இல்லை. எனவேதான், தோழர்கள் நமக்குள்ள வலிவுகொண்டு நாம் தேர்தலில் ஈடுபடலாம் என்ற எழுச்சியுடன், நம்பிக்கையுடன் பேசினர்!

ஆயிரவர் கூடிப்பேசி ஆர்வம் கண்ட நிகழ்ச்சிமட்டுமல்ல, தம்பி! அடுத்த திங்கள், இருக்கிறது. நல்விருந்து; பொது மாநாடு! எத்தனை இலட்சம் மக்கள் கூடப்போகிறார்கள் என்பதை எண்ணிப்பார்!!

வெட்டவெளியிலே, கொட்டும் மழையிலே கூடினோம், முன்னேற்றக் கழகம் துவக்க.

மூன்றாவது பொது மாநில மாநாடு கூடுகிறது! இதற்கு, மதுரையம்பதியில் தோழர் முத்துவுடன் சென்று, திடல் தேடினேன் - மதுரை நகருக்குள், நாம் விரும்புகிற அளவு பெரிதான, வசதியான, திடல் இல்லை!

வளர்ச்சியின் வகையும் அளவும் தெரிகிறதல்லவா!!

திருப்பரங்குன்றம் செல்கிறோம், மாநாடு நடத்த!

மதுரையிலிருந்து எத்தனை கல் தொலைவு என்கிறாயா?

அது எங்கே உனக்கும் எனக்கும் தெரியப்போகிறது!! திருப்பரங்குன்றமே புதிய மதுரையாகக் காட்சி தரப்போகிறதே! இலேசான ஆட்களா மதுரைத் தோழர்கள்! திருப்பரங்குன்றத்தைத் திருநகராக்குகிறார்கள் - திருவிடமாக்குகிறார்கள்.

எழிலூர்

வெட்ட வெளியிலே, கொட்டும் மழையிலே, கழகம் துவக்கினோம்! இன்று மாநாட்டுக் கொட்டகை அமைக்க ஊர் நடுவே இடமில்லை!! எனவே, திருப்பரங்குன்றம் பெரியதோர் திடலை எழிலூராக்குகிறார் வரவேற்புக்குழுத் தலைவர் மதுரை முத்து. தோழமைமிக்க தொண்டர்கள், உங்கள் தேவைகளைக் கவனிக்க.

காவியமும் ஓவியமும், இசையும் கூத்தும், எழுச்சியூட்டும் பற்பலவும், உம்மை மகிழ்விக்க!

எந்நாளும் மறக்கொணாத திருநாளாகும், திருப்பரங் குன்றம் மாநாடு.

தரணியாண்ட நாம் தாழ்ந்திருக்கிறோம், நிலை அறிந்ததால் நிமிர்ந்து நிற்கிறோம்!

பகைவர் சீறிக்கொண்டு பாய்ந்து வருகிறார்; பரணி பாடுவோம்! பகையை வெல்லுவோம்! வாரீர் திருப்பரங்குன்றம்! - என்று கூறு தம்பி! நாட்டினருக்கு!!

நேரு அறியட்டும்

நேரு வருகிறார் பரிவாரங்களுடன் மதுரைக்கு, திருப்பரங்குன்றம் மாநாடு குறித்து அவர் அறிந்துகொள்ள முற்படுவார்!

அவர் செவியில். மிகப்பெரிய மாநாடு! மகத்தான ஏற்பாடு! ஏற்றமிகு எழுச்சி! வெள்ளம்போல் வீரர்கள் என்ற செய்தி விழ வேண்டும்!

திருப்பரங்குன்றம் வருவது திராவிடரின் நீங்காக் கடமை.

வடபுலத்துத் தலைவர் திரு இடத்து மாண்பு அறியத் திருப்பரங்குன்றம் மாநாடு!

இதுவரை எவரும் காணாத அளவுடன், அழகுடன், சுவையுடன், பயனுடன், நடைபெற்றது என்ற நற்பெயர் கிடைத்திட வேண்டும்.

கழகத்தின் மாண்பு காத்திட அனைவரும் வாரீர் திருப்பரங்குன்றம் என்று தோழர்க்கெல்லாம், அழைப்பு அனுப்பு தம்பி! மறவாமல்.

அறைகூவல்

வண்ணமுகப்பு, வரவேற்பு வளைவுகள் கண்ணைக்கவரும் கவர்ச்சியுடன்!

நிழலது தந்து நம் நிலையினை உணர்த்தும் பெரியதோர் பந்தல், அமர்ந்திருந்து அரிய உரைகள் கேட்டிட!

வரிசை வரிசையாகக் கடைகள்! புதியதோர் அங்காடி!

உலவி மகிழச் சாலைகள்! உண்டு களைப்பாற விடுதிகள்! மகிழ்வூட்டும் கலையரங்கம்! கருத்தூட்டும் கண்காட்சி!

இன்பத் திராவிடம் பெற்றிட வாரீர் என இருவண்ணக் கொடிகள் ஆடி அழைத்திடும் அழகுறும் காட்சி!

விடுதலைப் போருக்கான அழைப்பு வந்திடுங் காலை வீறுகொண்டெழுந்திடப் போகும் வீரர்தம் கூட்டம் உலாவரும் காட்சி!

இவை எலாம் உமக்காக!

உமது உழைப்பு நாட்டுக்காக!

திருப்பரங்குன்றம், மாநாடுமட்டுமல்ல; நமது இன மனமகிழ் மன்றம்!

திருப்பரங்குன்றம், ஆட்டிப்படைக்கும் வடவருக்கு அறைகூவல்!

டுத்துக் கெடுத்திடும் நினைப்பினர்க்கு எச்சரிக்கை!

விட்டுச் சென்றவர்கட்கு அறிவுரை!

வீரர் குழாத்துக்கு அழைப்பு! திருப்பரங்குன்றம் பொறுப்புணர்ந்தோர்க்கு!

அகமும் முகமும்

மலர பகற்கனவு என்றார் பண்டிதர்! பாதந்தாங்கிகளும் அதனையே கூறுகின்றனர்! ஏன் கூறினர் அதுபோல்? நாம் எதிர்ப்பு கண்டு அஞ்சுவோம், ஏளனம் கேட்டுத் துஞ்சுவோம், பழிச்சொல் கேட்டுப் பதறுவோம், பயணம் தடைப்படும் என்று எண்ணியதால்! தி. மு. கழகம், அஞ்சி அஞ்சிச் சாவோரைக் கொண்ட அமைப்பா! அல்லது உயிரிழக்க அஞ்சாத உத்தமரின் உறைவிடமா? பித்து மனம் கொண்டோரா? சித்தம் தடுமாறாச் சீலரா?

திருப்பரங்குன்றம் எடுத்துக்காட்டும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவரின் பண்பகம் தி. மு. க. எனும் உண்மையை.

கண்ணீர்த்துளிகளே! நாட்டின் கண்மணிகளே! கடமை அழைக்கிறது! உலகு கவனிக்கிறது! ஊராள்வோர் உற்று நோக்குகிறார்கள்; உலைவைப்போர் முணுமுணுக்கிறார்கள்!

வாளுக்கும் வேலுக்கும் மட்டும் அல்ல, வஞ்சனைக்கும் அஞ்சிடமாட்டோம் என்று அணியணியாய் வந்து கூடி அறிவிப்பீர் அவனிக்கு.

அகமும் முகமும் மலர! தரமும் திறமும் விளங்க! வீரமும் தீரமும் மிளிர! வெற்றிப் புன்னகை தவழ! வீரர்காள்! விரைந்து வாரீர்! திருப்பரங்குன்றம்!! - தம்பி நாடெங்கும் சென்றிடுவாய், நல் அழைப்புத் தந்திடுவாய்.

துணிவோர் தொகை காட்டிட

பொன் இருந்திட, பொருள் இருந்திட, திருவிடத்திலே போக்கற்ற நிலையில் மக்கள் இருந்திடுவதேன்?

கண் இருந்தும் ஒளி இருந்தும், கட்டிப்போட்டுவிட்டால்,

மலரும் மானும், கனியும் பிறவும், காண முடியுமா? திராவிடம் கட்டுண்டு கிடக்கிறது! திராவிடர் தேம்பித் தவிக்கின்றார்! திராவிட நாடு திராவிடருக்கே! முழக்கம் இது; வெற்றி எப்போது? வேலுக்கும் வாளுக்கும் அஞ்சா வீரம், சூதுக்கும் சூழ்ச்சிக்கும் சாயாநெஞ்சம், பதவிக்கும் பவுனுக்கும் இளிக்காப் போக்கு, இவைகொண்டவர் தொகை வளர்ந்து விட்டால், கொடிகட்டி நாம் ஆள்வோம் திராவிடத்தை! விடுதலை வரலாறு தரும் பாடம் இது. இன்பத் திராவிடம் பெற்றிடத் துணிவோர் தொகை எவ்வளவு என்பதைக் காட்டிடத் திருப்பரங்குன்றம்.

திராவிட முரசொலிக்க

பரலோகத்துக்கு வழி காட்டவேண்டிய பாதிரியார், அரசு அமைக்கும் காரியத்தில் ஈடுபடலாமா! என்று ஒருவன் கேட்க, பரலோகம் அனுப்பித்தான் வருகிறார் பாதிரியார், அப்பாவிகளை நம்மீது மோதவிட்டு, சாகடித்து என்று கேலி பேசினான் மற்றொருவன், அன்று! இன்று, சைப்ரஸ் தனி நாடு, தனி அரசு, மகாரியாஸ் பாதிரியார் விடுதலை பெற்றளித்தார்.

சைப்ரஸ் சிறு தீவு! திராவிடம் ஒப்பற்ற நாடு!

சைப்ரஸ் விடுதலை பெற்றது! திராவிடம் இன்றும் அடிமை! ஏன்? திருப்பரங்குன்றம், இதை ஆராயத்தான் ஐயம் கொண்டோர் விளக்கம்பெற, அச்சம்கொண்டோர் வீரம்பெற அவனிக்கு நமது முயற்சியை அறிவிக்கத் திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம், திக்கெட்டும் திராவிட முரசு ஒலித்திட!

திராவிடர் எனில். . .

முடியுடை மூவேந்தர் இவர் முன்னோர்; இன்று நமது அடிபணிந்து கிடக்கின்றார் இழிந்து! டில்லி கூறுகிறது - நாம் கேட்கிறோம். உயிரும் இருக்கிறது! உணர்வும் இருக்கிறது! எனினும் மானம் காத்திடுவோர் தாயகம் மீட்டிடுவோம், அரசு அமைத்திடுவோம் என்று ஆர்த்தெழத்தான வேளை வரவில்லை! அது எப்போது? விடுதலை, எம்முறையில்? அப்பணிபுரிய, எத்துணை வீரர்? இவைகளுக்குப் பதில்காண, திருப்பரங்குன்றம்.

திராவிடர் எனில் வாரீர்! விடுதலை விரும்பிகள் எனில் வந்திடுவீர், திருப்பரங்குன்றம்; - என்று அழைத்திடுவாயன்றோ, இன்பத் திராவிடத்துள்ளோரை எல்லாம். உனக்கா தெரியாது!! தாயகம் விடுபடத், தனி அரசு கண்டிடத், தளராது உழைத்திடத், திரண்டு வாரீர் திருப்பரங்குன்றம் என்று இப்போதே அழைத்துக் கொண்டுதானே இருக்கிறாய்!!

ஆர்த்தெழுவோம்

நாமிருக்கும் நாடு நமது என்றுரைத்திடா நாவும் நாவென்றுரைத்திட நல்லோர் கூசுவர்.

நாமிருக்கும் நாடோ நம்மிடம் இல்லை. நம்மை வடவர் ஆளுகின்றார், சகிப்பதற்கில்லை!

பொன்னை, பொருளை இழந்திடலாம், உரிமை இழப்பதோ? உரிமையற்ற வாழ்வு கண்டு உலகம் சிரிக்காதோ? இந்த உண்மைதனை உணர்ந்தோரெல்லாம திரண்டு வருகிறார், உரிமைப் போரின் அணிவகுப்பை அமைக்க வருகிறார்! திருவிடத்தின் விடுதலைக்கு உழைத்திட நாமே திருப்பரங்குன்றம் சென்று ஆர்த்தெழுவோமே!!

எல்லாக் கண்களும் அப்பக்கம்

எழுச்சியின் அளவு, வகை, கண்டு களித்திட ஏற்ற இடம் திருப்பரங்குன்றம். எல்லாக் கண்களும் அப்பக்கம்! எல்லார் எண்ணமும் அதுபற்றி! இன்றே நண்பரைக் கண்டிடுவீர்! மாநாடு காண அழைத்திடுவீர்! குடும்பத்துடன் வந்து காண வேண்டிய குதூகலாபுரி திருப்பரங்குன்றம்.

கார்கண்ட உழவன்போல், கதிரவன் கண்ட கமலம்போல, கண்டதும் விழியில் மகிழ்ச்சி பொங்கும் வீரரின் நெஞ்சினில் விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும், அணிவகுப்பின் திறம் கண்டு, ஆர்வத்தின் அளவு கண்டு. விழிப்புற்ற திராவிடத்தின் வீரரெல்லாம் கூடுகின்றார், வெற்றிக்கு வழி காண, திருப்பரங்குன்றம்.

மரபு அறிந்தவர், மானம் காப்பவர், இனம் அறிந்தவர், இலட்சிம் மறவார், உழைத்திடுபவர், கழைக் கூத்தரல்ல!! இன்னுயிர் கொடு! இன்பத் திராவிடம் பெற! கட்டளை அஃது எனில், காளையரும் கன்னியரும் போட்டியிடுவர், உயிர்தர, உரிமைபெற! முதியவர் இளைஞரை முந்திக்கொண்டே வருவர், எந்தையர் நாடு விடுதலை பெற்றிட ஈந்தேன் இன்னுயிர் என்று கூறியே!

இல்லங்களிலே

தம்பி! இல்லங்களிலே இப்போதே நடைபெறும் இன்ப உரையாடலை, நான் அறிந்துதான் இருக்கிறேன். "நேற்றிருந்த கோபம்மாறி, நேர்த்தியானதே! முகம் பார்த்திடும்போதே! கேட்கக் கேட்க மொழியும் பாகாய், இனிக்குது இன்று.'' "காரணத்தைக் கூறிடவும் வேண்டுமோ அத்தான்! கண்டிடலாம் மாநாடு என்றுரைத்தீரே!'' இல்லங்களிலே இன்ப உரையாடல், திருப்பரங்குன்றம் சென்றிடலாம், திருவிடத் தீரரைக் கண்டிடலாம். தேன்நிகர் பேச்சினைச் சுவைத்திடலாம். உரிமைக்கோர் வழி கண்டிடலாம் என்பதுபற்றியே! செந்தாமரையின் அழகு, கண்டபோது! மல்லிகையின் மணம் முகர்ந்தபோது! செங்கரும்பின் சுவை உண்டபோது! தாயக விடுதலைக்கான மாநாடு அளித்திடும் மகிழ்ச்சி, எண்ணிடும்போதெல்லாம் இனிக்கும்! பேசிடும் வாய் மணக்கும்! ஏன்? மாநாடு, மானமும் மரபும் காத்திடும் மறவர், கூடி எழுப்பிடும் இலட்சிய முழக்கம் நெஞ்சினில் பதிந்து, நம்மை வீரராய், தீரராய், திராவிடராய் ஆக்கிடத்தக்க கொள்கைக் கோட்டம், திருப்பரங்குன்றம்! தம்பி! திருப்பரங்குன்றம், திராவிடர்க்காக! அறிவாய் நீ! அறிவிப்பாய் மற்றவர்க்கு!!

குடும்பத்துடன்

வருகிறேன், திருப்பரங்குன்றம்! செல்கிறேன் திருப்பரங் குன்றம்! செல்வோம் திருப்பரங்குன்றம்! இல்லங்களின் இன்றையப் பேச்சு இது. வரவேற்புக் குழுத்தலைவர் மதுரை முத்து, பொட்டல் காட்டைப் பூம்பொழிலாக்கக் காத்திருக்கிறார், களிப்பூட்ட! இசைகேட்டு இன்புறுவோம்! வீரக்காதைகள், விடுதலை வரலாறுகள், இலக்கியச் சுவையுடன்!! ஆட்சி முறை, அறவழி ஆகியவைபற்றிய பேருரைகள். மாநாட்டிலே கெனியாடா, திவேலரா, நாசர், ஹோசிமின், போர்க்யூபா, மகாரியாஸ், என்க்ருமா மற்றும் எண்ணற்ற விடுதலை வீரர்கள், வெற்றிபெற்ற வரலாறு கேட்டு, உணர்ச்சி பெறப் போகிறோம். புதிய நம்பிக்கை பெற இருக்கிறோம். நாடகங்கள் உண்டு, நற்கருத்தளிக்க. கழகக்காவலர் அனைவரும் கூடுமிடம், திருப்பரங்குன்றம்! வாழ்நாளில் மறக்கொணாத அரிய நிகழ்ச்சி! நெஞ்சை அள்ளும் எழில் பல மிஞ்சும் வண்ணக் களஞ்சியம், திருப்பரங்குன்றம்! வீட்டிலே சிலர் விம்மிக்கிடக்க, நீவீர் மட்டும் விருந்துண்ண வருவது அழகல்ல!! குடும்பத்துடன் வருக திருப்பரங்குன்றம்! - என்று கூறிடத் தோன்றுகிறதல்லவா!!

வீரருக்கு அழைப்பு

கண் திறந்தது! கருத்து மலர்ந்தது! கழகம் அழைத்தது! கடமை புரிந்தது! எழுந்தனர்! வீரர் எழுப்பினர் முழக்கம்! இன்பத் திராவிடம் எமக்கே என்று.

அவரெல்லாம் கூடுமிடம், திருப்பரங்குன்றம்!

அறமறிந்தோர் மாமன்றம், திருப்பரங்குன்றம்!

விடுதலைக்கு வழிகாண, திருப்பரங்குன்றம்.

எண்ணம் வண்ணமாக, திருப்பரங்குன்றம்!

கூனிக் கிடந்திடமாட்டோம், குமுறிச் செத்திடமாட்டோம், கொத்தடிமையாகிடமாட்டோம்! சித்தம் தடுமாறிடவும் மாட்டோம்! இத்தரையில் எத்தனையோ நாடு! எங்கட்கு இல்லை எம்நாடு! பெற்றிடுவோம் திருநாடுதனை, குற்றுயிராகும் வரை போராடியேனும். பண்பாடக் கேட்டிடுவீர்! திண்தோளர் கூடிடுவீர்! எழுவோம், பகைவெல்வோம்! இதற்கான அறிவிப்பு திருப்பரங்குன்றம் மாநாடு. வீரர்க்கு அழைப்பு, விடுதலை அணிவகுப்பு: திருப்பரங்குன்றம்!

தீரர் தோற்றதில்லை

கருப்பர் என்றனர், இன்று வெள்ளையர் முகம் வெளுத்தது பயத்தால். ஏன்? கட்டுண்டுகிடந்தவர்கள், வெட்டுண்டு மடிவதேனும், விடுதலைக்கே உழைப்போம் என்று கூறிவிட்டனர். இடியோசை கேட்க நாகமென வெள்ளையர், விரண்டுவிட்டனர். சுடுகிறார்கள், சாகிறார்கள்; எனினும், செத்தவர்போக மிச்சம் உள்ளவர், விடுதலை, விடுதலை, விடுதலை என்ற முழக்கமிடு கின்றனர். குண்டுகள் தீர்ந்துவிட்டன - சாவுக்கஞ்சா வீரர் தொகை குறையவில்லை. முழக்கமிடுகின்றனர், எமது நாடு, எமது அரசு, எமது உரிமை. திருப்பரங்குன்றம் வாரீர், விடுதலை பெற்றோர் புகழ்பாட, விடுதலைக்கான பாடம்பெற, தீரர் தோற்றதில்லை, திருவிடரும் தோற்கமாட்டார், திருப்பரங்குன்றம் இதை உலகுக்கு உணர்த்த.

பொங்கி எழுகிறது

தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவுவைத்து, தனி நாடு சமைத்திடுவோம் வாரீர் என்று பன்னிரண்டு ஆண்டுகளாய்ப் பேசிவந்தோர், இன்று பகைவர் பரிகசிக்கப் பேசுகின்றார். அவரல்ல கழகம் என்று அறிவிக்க அனைவருமே வந்திடுவீர் மாநாட்டுக்கு. திருப்பரங்குன்றம் தெரிவிக்கட்டும், விடுதலை உணர்ச்சி மங்கவில்லை, மறையவில்லை! மாறாக, பொங்கி எழுகிறது புதிய வேகத்துடன் - மாற்றாரும் அவரை அடுத்துப் பிழைப்போரும் அகலக் கண்திறந்து, ஆச்சரியப்படத் தக்க அரியதோர் அணிவகுப்பு திருப்பரங்குன்றம், எனும் பேருண்மையை, உழைத்த உத்தமர்களே, உம்மை இகழ்கிறார்கள் - கொள்கைக் குன்றுகளே. உம்மைக் கேலி பேசுகிறார்கள், இனமறிந்த ஏந்தல்களே, உம்மை ஏளனம் செய்கிறார்கள், கழகம் கலகலத்துவிட்டதாம், அணிவகுப்புச் சிதறிவிட்டதாம், நம்பிக்கை நசித்துவிட்டதாம் பதில் என்ன தருகிறீர்கள்? பேசவேண்டாம், ஏசவேண்டாம், திரு இடம் காணவிழைவோர் அனைவரும் திருப்பரங்குன்றம் உலா வருவீர், பேச்சு அடங்கிக்கிடப்பர் மாற்றாரின் கைப்பாவைகள். மகத்தான பொறுப்பு, கழக மாண்பு காப்பது. கழகம் அழைத்தால், அனைவரும் எழுவோம் என்பதை அறிவிக்க, திருப்பரங்குன்றம்.

அறவழி

தோகையில்லை, மயில்தான்; குளிர்ச்சியில்லை, நிலவுதான்; ஒளியில்லை, மணிதான்; சுவை இல்லை, கனிதான்; அணியில்லை, பாட்டுத்தான்; மழலை இல்லை, குழவிதான்; மணம் இல்லை, மலர்தான்; கூறுவரோ எவரேனும்? கேட்டிடின் கைகொட்டிச் சிரிப்பரன்றோ. ஆனால், தனி அரசு இல்லை, திராவிடர்தான் என்றன்றோ இன்றுள்ள நிலை. கேலிக்கூத்தல்லவோ, கேவல நிலைமையன்றோ! பகை முடிப்போம், பழி துடைப்போம், அறவழி நின்று திருவிடம் பெறுவோம். திருப்பரங்குன்றம் வழி காட்டும் கோட்டம்.

வீரக்கோட்டம்

அச்சம், அவனை அடக்கியதில்லை; ஆசை அவனைக் கட்டுப்படுத்தியதில்லை; அரண்மனை கண்டு அவன் சொக்கின தில்லை; மாளிகை தரும் மதுரவாழ்வு வேண்டினவனல்ல. நிந்தனை தந்தனர்; நிலாச் சோறு என்றான். வேதனை வேண்டுமளவு உண்டான்; எனினும், "திராவிட நாடு திராவிடர்க்கே'' எனும் இலட்சியத்தை கடந்தானில்லை, அவனே திராவிடத் தீரன். திராவிடத்துத் தீரரெல்லாம் திரண்டு வருகின்றார் திருப்பரங்குன்றம். தாயகத்தின் தளை நொறுக்கிட தன்மானத் திறம் பெருக்கிட, தனி அரசுதனைச் சமைத்திட, நான், நான், நானுந்தான் என்று முழக்கமிடும் வீரர் கூட்டம் திரண்டிடும் அரிய கோட்டம் திருப்பரங்குன்றம். இலட்சக்கணக்கான இல்லங்களில் ஏற்பாடுகள். . . . . இப்போதிருந்தே இளைஞருடன் முதியவர் போட்டியிடுகின்றனர். ஆடவரும் ஆரணங்குகளும் பயணப்படுகின்றனர், தாயக மீட்புக்கான சூளுரை எடுக்க, திருப்பரங்குன்றம்.

தம்பி! உன்னைக் காண, நான் வருகிறேன், திருப்பரங்குன்றம் என்று சொல்லவா வேண்டும். நீதான் என்னைக் கட்டிப்போட்டு விட்டிருக்கிறாயே, உன் அன்பினால்.

திருப்பரங்குன்றம் மாநாடு எழிலுடன், ஏற்றத்துடன் நடைபெற, உன் சீரிய கருத்துரைகளை எடுத்துரை. தி. மு. கழகம், கூட்டு முயற்சியால் ஈட்டிய கருவூலம் உள்ள பெட்டகம். இங்கு "எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பேச்சுக்கு இடம் இல்லை. அந்தப் போக்கு முற்றினால், பொது வாழ்வுக்கு வந்தது பெருந் தொல்லை. துவக்க முதல், நாம் கட்டிக் காத்துவரும் "தோழமை'. . . திருப்பரங்குன்றத்தில், கோடையிலே இளைப்பாறிக் கொள்ளக் கிடைத்த குளிர் தருவாய், இதயப் பூங்காவில் உள்ள எழில் மலராய், நமக்கு இனிமை பயக்கட்டும். பயணத்தில் மிக முக்கியமான கட்டம் வந்துள்ளோம், திருப்பரங்குன்றம், மேற்கொண்டும் பயணமாகி வெற்றியூர் சென்றிடும் அறிவாற்றலை நமக்கெல்லாம் அளிக்கட்டும்.

மாற்றார் தம் மனம்போன போக்கிலே ஏசட்டும், பேசட்டும்; செவிபுகவிடாதே. நாம் மேற்கொண்டுள்ள பணி மகத்தானது. தூய்மையுடன் கூடிய தோழமை கலந்த, கூட்டு முயற்சி மட்டுமே, நமக்குள்ள அழயாச் செல்வம். கண்ணீருடன் பிறந்தோம். அந்தக் கண்ணீரும் கேலி செய்யப்படுகிறது. அது கேட்டுக் கண்ணீருக்கிடையிலே ஓர் புன்னகையும் பூத்திடும் முகம் காட்டுகிறோம். நம்மை நிந்திக்கிறார்களே என்று கலக்கமடையாதே; நாராச நடையாலே, நம்மை அழிக்க நினைத்தோர்கள் பலர்; நாம் அழிந்தோமில்லை. காரணம், நம்மை நாட்டுக்குரியதோர் நற்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு விட்டோம்.

ககனப்பூ வந்திமகன், கொய்தானாம்
அதைக்கண்டு குருடன் அம்பால் எய்தானாம்
செகமிசை ஊமையனும் வைதானாம்
அதைச் செவிடன் கேட்டு நகை செய்தானாம்
கரமில்லான் வாதியைப் பிடித்தானாம்
காலில்லான் உதைத்துதைத்து இடித்தானாம்
சிரமில்லாதவன் கடித்தடித்தானாம்

வேதநாயகம், பொய்யுரைப்போரை, நகைச்சுவையுடன் கூடிய பாடலால் சாடினார். குருடன் குறிபார்த்து அம்பு எய்கிறான்! ஊமை, திட்டுகிறான்! செவிடன் அதைக் கேட்டுச் சிரிக்கிறான்! கரம் இல்லாதவன் ஆளை இழுக்கிறான் கால் இல்லாதவன் எட்டி உதைக்கிறான்! தலையில்லாதவன் ஆளைக் கடிக்கிறான்!!

நம்புவார்களோ! நம்பமாட்டார்கள்;

கூறுவரோ? இதனையே அல்ல என்றாலும், இதுபோன்ற பொய்யுரைகளைக் கூறுவர் - எங்கு? எவர்? வழக்குமன்றத்தில்! காசாசையால்!

நம்மைப்பற்றிப் பேசப்படுவன, இவைபோன்றன; நம்ப முடியாதன! எனவே, நாம், பதிலுரை தரத் தேவையில்லை! நாடு, நல்ல தீர்ப்பளிக்கும்; நாம் நமது நினைப்பைத் திருப்பரங்குன்றம் பக்கம் திருப்புவோம்; மாநாடு நமக்கு மாண்பளிக்கும்.

அண்ணன்,

25-6-61