அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (2)
1

பர்மிட்டும் லைசென்சும் பகை போக்கிப் பாசத்தை ஊட்டிவிடும்!
மதில் மேல் பூனை நிலையில் சிலர்
கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்க!
மண்டலத்தின் தேர்தல் நேர வேலைகள்

தம்பி!

சென்ற கிழமை கூறியபடி தேர்தல் காலத்திலே விறுவிறுப்புடனும், மிகுந்த தந்திரத்துடனும் பணியாற்றிடும் சிலர் பற்றி எடுத்துக்காட்டுகிறேன். இவர்களை நமது தோழர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஊருக்கு ஊர் பெயர்கள் மாறிமாறி இருக்கும் - இயல்பு ஒரேவிதமானதாகவே இருக்கும்.

இவர்கள் தேர்தல் சமயம் தவிர மற்ற வேளைகளில் பொது வாழ்க்கையில் இல்லாமல் இருக்கக்கூடும்; தேர்தலின்போது மட்டும் தீவிரமாகிவிடுவர்.

தர்மபுரித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, நமது நண்பர்கள், காங்கிரசில் இன்னாரை வேட்பாளராக்கினால் இன்னின்னார் வேலை செய்யமாட்டார்கள். ஒதுங்கிக் கொள்வார்கள் என்றுகூடச் சொன்னார்கள், அவ்விதம் நம்பினார்கள்; நம்பிக்கை கொள்ளும்படி அவர்கள் பேசி யிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, ஒதுங்கி இருப்பார்கள், ஒப்புக்கு வேலை செய்வார்கள் என்று எவர்களைப்பற்றி நமது நண்பர்கள் கூறிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்தனர்.

அது தவறு என்று நான் கூறவில்லை; அது முறையுங்கூட.

ஆனால் அவர்கள், உண்மையில் ஒதுங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதனை நமது தோழர்கள் முன்னதாகவே உணராமலிருந்தது, தவறு இல்லையா?

கசப்பு, வெறுப்பு, பகை எனும் உணர்ச்சிகள் கொந்தளிக்கும் உள்ளம் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாகத்தான் காங்கிரசில் உள்ளவர்களில் பலர், சாதாரண நாட்களில் பேசிக் கொள்வார்கள்; நம்மிடமேகூடப் பேசுவார்கள்.

இந்தப் பக்தவத்சலம் இப்படித் துப்பாக்கித் துரைத்தனம் நடத்துவது, அதற்கு நாங்கள் துதிபாடிக்கிடப்பது என்றால், அது எப்படி முடியும், எத்தனை நாளைக்கு முடியும்? ★ நான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன், "இந்தி ஆட்சி மொழியாகக்கூடாது. ஆங்கிலம் நீடித்திருக்க வேண்டும்; இதற்கு உத்தரவாதம் சட்டப்படி கிடைக்காத வரையில், நான் காங்கிரசுக்காக வாதாட முடியாது'' என்று.

காங்கிரசுக் கட்சி புனிதமானதுதான், ஆனால் கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுவதுபோலாகிவிட்டது நிலைமை. ஊரை அடித்து உலையில் போடுபவனெல்லாம் காங்கிரசிலே! இந்த நிலைமையில் உள்ள காங்கிரசை ஆதரிக்கும்படி ஏழைகளிடம் எப்படிக் கேட்டுக்கொள்ள முடியும்? முடியாது என்று கூறிவிட்டேன்.

சர்க்காரின் மந்தத்தனம், நிர்வாக ஊழல், இவ்விதம் இருக்கும்போது, எப்படி ஓட்டுக் கிடைக்கும் காங்கிரசுக்கு என்று கேட்டேன், தலைவர்களை. எனக்கென்ன பயம்!

இவ்விதமாகவெல்லாம், நம்மிடமே வந்து பேசும் காங்கிரஸ் காரர்கள் உண்டு. உள்ளபடி அவர்களில் பலருக்கு மனக்குமுறல் கூட உண்டு. ஆனால், தேர்தல் சமயத்தில், அவர்களில் மிகப் பெரும்பான்மையினர், சட்டை மாட்டிக்கொள்கிறார்கள், காங்கிரசுக்கு ஓட்டு வேட்டையாடுவதில் மும்முரமாகி விடுகிறார்கள். ஏன்? அவர்களின் குமுறல் அடங்கிப்போகும் படியான நிலைமை ஏற்பட்டுவிடுகிறது; அதற்கு ஆயிரத்தெட்டு வழிகள் உள்ளன; ஆளுங்கட்சிக்கு மட்டுமே அந்த வசதிகள் உண்டு.

ஒரு சிறு சலுகை, மன எரிச்சலைக் குறைத்துவிடுகிறது.

ஒரு பர்மிட்டும் லைசென்சும், பகையைப் போக்கிவிடுகிறது; பாசத்தை ஊட்டிவிடுகிறது.

அவரே தோளின்மீது கைபோட்டுக்கொண்டு உரிமையோடு பேசினார், என்ன! உன்னைப்பற்றி என்னென்னவோ சொல்லுகிறார்களே! காங்கிரசுக்கு வேலை செய்யப்போவதில்லை என்று சொன்னாயாமே. நான் நம்பவில்லை. கேள்விப்பட்டபோது திடுக்கிட்டுப் போனேன் என்று கூறினார். அவருடைய நிலைமைக்கு, வீடுதேடி வந்து என்னைப் பார்த்து, தோளின்மீது கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் பேசுவது என்றால் சாதாரணமா! அவர் அவ்வளவு தூரம் கேட்ட பிறகு நான் எப்படி மறுக்க முடியும்? மறுநாளே கிளம்பி வேலை தொடங்கினேன்.

என்று பேசிடும் உண்மைக் காங்கிரஸ்காரரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆளுங்கட்சியை அடியோடு பகைத்துக்கொள்ளப் பலரால் முடிவதில்லை.

மயக்குமொழி கேட்டுப் பலியாகிவிடாத உறுதி பலருக்கு இருப்பதில்லை.

அச்சமும் ஆசையும் அலைக்கழிக்காத விதமான உள்ள உரம் இருந்தால் மட்டுமே, ஆளுங்கட்சியை எதிர்த்து நிற்க முடியும்.

வெற்றியோ தோல்வியோ, நான் என் கட்சிக்காக, எனக்குப் பிடித்தமான கொள்கைக்காக என்று கூறிடும் துணிவு, நேர்மையின்மீது கட்டப்பட்டிருக்க வேண்டும்.

தனித்து நிற்க நேரிட்டாலும் தயங்கமாட்டேன் என்று கூறிடும் துணிவு, ஒரு கொள்கையிடமோ, அந்தக் கொள்கைக்காக உள்ள அமைப்பினிடமோ நாம் வைத்திருக்கும் பற்று இருக்கிறதே அதன்மீது கட்டப்பட வேண்டும்.

அத்தகைய இயல்பினர் நிரம்பப் பேர் இருக்கிறார்கள், கழகத்துக்கு நல்லாதரவு தந்து வருகிறார்கள். ஆயினும், பலர், மதில்மேல் பூனை நிலையில் இன்னமும் உள்ளனர். அவர்களே தேர்தல் காலத்தில், ஆளுங்கட்சி விரித்திடும் வலையிலே எளிதாக விழுந்துவிடுகிறார்கள்; சில்லறைச் சலுகைகளில் மயங்கிப் போகிறார்கள்.

வலை வீசுவதிலும் நாக்கில் தேன் தடவி விடுவதிலும் வல்லவர்கள், காங்கிரசுக் கட்சிக்காகத் தேர்தல் வேலை செய்வதற்கு நிரம்பப் பேர் உள்ளனர்.

தலைவர்களின் மேடை முழக்கங்களால் சாதிக்க முடியாத காரியத்தை இந்தக் காரியவாதிகள் சாதித்துவிடுகிறார்கள்.

மேடையிலே நாம் இந்தப் பதினேழு ஆண்டு ஆட்சியிலே காணக் கிடைக்கும் கேடுபாடுகளை விளக்கிக் காட்டுகிறோம்.

இதனை மறுத்திட முடிவதில்லை காங்கிரஸ் தலைவர் களால்; மறுத்திட முன்வருபவர்கள், தங்களைப் பேச்சாளர்க ளாக்கிக்கொள்வதிலே மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மக்களின் இதயத்தைப் பெறுவதிலே அல்ல.

இந்த முறையினால் மட்டுமே வெற்றி கிட்டிவிடாது என்று உணர்ந்துள்ள, ஊர் அறிந்தவர்கள் கிளம்புகிறார்கள். தனித்தனியே சந்திக்க, தித்திப்புப் பேச்சுத் தந்திட, மனக்குறையைப் போக்கிட! அதிலே நல்ல வெற்றி கிடைக்கிறது.

நாட்டாண்மைக்காரர் இருக்கிறார், ஊரூருக்கும், அவரும், நாம் நடத்தும் கூட்டத்திற்கு வந்திருந்து நாம் காட்டும் காரணங்களைக் கேட்டு, உண்மையை உணர்ந்து விட்டிருக்கிறார் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாட்டாண்மைக்காரர் கூட்டத்திற்கு வருவதுமில்லை! கூட்டத்திற்கு வந்து நாம் சொன்னவைகளைக் கேட்டுச் சென்றவர்களும் அவரிடம் சென்று விளக்கம் கூறுவதில்லை.

இந்த நாட்டாண்மைக்காரரின் பேச்சை மீறி நடந்துகொள்ளும் இயல்பு, கிராமப்புறங்களில் அதிக அளவு இன்னமும் தென்படவில்லை, அரும்பு இருக்கிறது. சில இடங்களில் கருகிய மொட்டுக் களாகிவிட்டதையும் நான் கண்டிருக்கிறேன்.

அரசியல் கட்சிகளிடம் ஈடுபாடு கொண்டு, நாட்டு நிலைமைகளை அறிந்து, அந்த நிலைமைகளைத் தக்க முறையில் திருத்தி அமைக்க வேண்டும் என்ற உரிமையும் கடமையும் தமக்கு உண்டு என்று உணர்ந்து செயல்படுவோர்களைப்போலவே, கிராமத்துத் தலைவர்கள் இருந்துவருவார்கள் என்று எண்ணிக் கொள்வது சரியல்ல; அப்படி எண்ணிக்கொண்டு கணக்குப் போடும்போதுதான், போட்ட கணக்குப் பொய்த்துப் போய்விடுகிறது.

ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது. . . எனும் உண்மை விளக்கப்படும்போது அதற்குக் காரணமாக உள்ள ஆட்சியிடமும் அந்த ஆட்சியை நடத்தும் கட்சியிடமும் விவரமறிந்தவர்களுக்கு எரிச்சல் வருகிறது; அந்தக் கட்சிக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டதே என்ற கவலையில் அல்ல; வரவர கிராமத்திலே அவனவன் அவன் இச்சைப்படி நடந்துகொள்கிறான்; பெரியவர்கள் நாட்டாண்மைக்காரர்கள் ஆகியோரின் பேச்சின்படி நடப்பதில்லை என்ற கோபமும், தனது மதிப்புக் குறைந்து விடுகிறதே என்ற கவலையும் கிராமத்துத் தலைவருக்கு.

அவருடைய "அரசியல்', நாடு அறிந்த அரசியலோடு முழுக்க முழுக்கத் தொடர்பு கொண்டதல்ல.

சுட்டுத் தள்ளுகிறார்களாம் என்று கேள்விப்படும் போது அவருடைய மனம் பதறத்தான் செய்கிறது, அத்தகையவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுகிறார், ஒரு கணம். மறுகணமோ நாலு பேர் நடத்திய பஞ்சாயத்திலே ஒப்புக் கொண்டுபோன குப்பன் அதன்படி நடக்கவில்லையே என்ற கவலை அவரைப் பிடித்துக்கொள்கிறது.

அந்தக் கவலையின் முன்பு நாட்டை வாட்டிடும் அரசியல் பிரச்சினைகள் மங்கிவிடுகின்றன.

இந்த மனப்போக்கு மாற்றப்பட வேண்டும்; இது வெறும் மேடைப் பேச்சினால் மட்டும் மாறிவிடாது; கிராமத்துடன் நமது கழகத் தோழர்கள் தொடர்ந்து, நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமாகவே, நிலைமையையும் நினைப்பையும் மாற்றிட முடியும்.

தர்மபுரியில் நான் கேள்விப்பட்டேன். ஒரு கிராமத்தில் முக்கியமானவரைக் காங்கிரஸ் தலைவர்கள் தமது பக்கம் சேர்த்துக் கொண்டார்கள் என்று.

யார் அந்தக் கிராமத்துப் பெரியவர்? என்று நான் கேட்டேன். மந்திரிக் கவுண்டர் என்று சொன்னார்கள்.

தர்மபுரித் தொகுதியில் சில கிராமத் தலைவர்களுக்கு மந்திரிக் கவுண்டர் என்று பட்டப் பெயரே இருப்பதாக அறிந்து கொண்டேன்.

இவர்களைப் போன்றவர்களின் செல்வாக்குப்பற்றிய கணக்கு நாம்தான் மக்களின் இதயத்தை வென்றுவிட்டோமே என்ற நினைப்புடன் மட்டும் நாம் இருந்துவிடும்போது நமக்குப் புரிவதில்லை. இந்தக் கணக்கு நமக்குப் புரிய வேண்டும், தெளிவாக.

தேர்தல் நேரமாகப் பார்த்து ஆசை ஊட்டியும் அச்சமூட்டியும் எவரெவரை எப்படி எப்படி வளையச் செய்வது என்ற வித்தையில் வல்லவர்கள் நடத்திடும் நாடகத்தில் சில காட்சிகளை இனிக் காண அழைக்கிறேன், தம்பி!

முன்னாள் கள்ளுக்கடைக்காரர்:- போய்யா, போ! போ! காங்கிரசுக்காக வாதாட வந்துவிட்டாயா! எவ்வளவு கிடைச்சுது அதுக்கு. நாங்க எதுக்காகய்யா காங்கிரசுக்கு ஓட்டுப்போடணும், எங்க தலையிலே கல்லைப்போட்டுதே அதுக்காகவா; எங்க பிழைப்பிலே மண்ணைப் போட்டுதே அதுக்காகவா! என்னோட ஓட்டு காங்கிரசுக்குக் கிடையாது - நிச்சயமா - ஆமாம். என் வாயாலே காங்கிரசுக்கு ஓட்டுப்போடுன்னு ஒரு பயலுக்கும் சொல்லமாட்டேன் - நீ கையைப் பிடிச்சிக்கிட்டாலும் சரி, காலைத் தொட்டுக் கும்பிட்டாலும் சரி. . . .

மண்டலம்:- உங்களோட கோபத்துக்கான காரணம் எனக்கு நன்றாகப் புரியுது. உங்கபேர்லே ஒரு துளியும் எனக்குக் கோபம் கிடையாது. இரண்டு தலைமுறையாக நடத்திக்கொண்டுவந்த தொழிலைக் கெடுத்துவிட்டதே காங்கிரஸ், மதுவிலக்குச் சட்டம் கொண்டுவந்து என்ற கோபம் உங்களுக்கு ஆனா. . . .

மு. க. க.:- ஆனா என்னய்யா ஆனா. . . . வழக்கமான உபதேசந்தானே? ஒரு சிலருக்குப் பண நஷ்டமென்றாலும் பல பேருக்கு நன்மை; புண்யகாரியம்; ஏழைகளோட குடும்பத்துக்கு நிம்மதி; இதைத்தானே சொல்லப்போறே. கேட்டுக் கேட்டுக் காதும் புளித்துப்போயிருக்குது. . . .

மண்டலம்:- அய்யய்யோ! நான் அந்தப் பழைய காடிப் பேச்சையா சொல்ல வந்தேன். மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்தாகணும் என்று, ஒரே வற்புறுத்தல். மகாத்மா சொன்னதைக்கூட நிறைவேற்றாமல் இருக்கலாமா, காங்கிரஸ் மந்திரிசபை என்கிற எண்ணம். அதனாலே கொண்டுவரப்பட்டது மதுவிலக்குச் சட்டம். . . .

மு. க. க.:- காரணம் சொல்றிங்களா, காரணம்! காரணத்தைச் சொல்லிவிட்டா, என் பெட்டியிலே காசு வந்து குவிந்துவிடுமா. . . .

மண்டலம்:- சொல்ல வந்ததை முழுவதையும் கேட்காமலே கோபம் பொங்கிவருதே உங்களுக்கு. கேளுங்க. வந்த புதுசிலே மகாத்மா பேச்சை மறந்துவிடக்கூடாது பாருங்க. . . . அதனாலே சட்டம் போட்டாச்சி. இப்ப, காங்கிரசிலே, மதுவிலக்குச் சட்டம் இருந்தாகவேணும்னு பிடிவாதம் பேசுகிற ஆசாமிகளோட தொகை குறைச்சலாகி விட்டுது. மதுவிலக்குச் சட்டம், எதிர்பார்த்த பலனைக் கொடுக்கல்லே என்கிற பேச்சு வலுவாகிவருது. . . .

மு. க. க.:- அதனாலே. . .! போலீசை நாலா பக்கமும் ஏவி வேட்டை ஆடிக்கிட்டு வர்ரிங்க. . . . அதைத்தானே சொல்றே. . .

மண்டலம்:- அதைச் சொல்லவில்லைங்க. . . . ஒரே அவசரம், ஆத்திரம்; பொறுமையாக் கேட்கவேண்டாமா. மதுவிலக்குச் சட்டம் பிரயோஜனமில்லை. அதை எடுத்துவிடலாம் என்று இப்ப ஒரு அபிப்பிராயம் உருவாகிக்கொண்டு இருக்குது. . .

மு. க. க.:- என்னது! என்னது! மதுவிலக்கு வேண்டாமென்று. . .

மண்டலம்:- மதுவிலக்குச் சட்டம் வேண்டாமென்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்ப கருத்து வளர்ந்துகொண்டிருக்குது. கொஞ்ச நாளிலே இந்தக் கருத்துக்கு அமோகமான ஆதரவு கிடைத்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் பளிச்சிட்டுக் காட்டுது. . .

மு. க. க.:- என்னாலே நம்பமுடியல்லையே, மகாத்மாவோட பேரைச் சொல்லிக்கொண்டு மக்களோட ஆதரவு தேடுவது காங்கிரஸ் கட்சி. மகாத்மா, மதுவிலக்குச் சட்டம் வேதம்னு சொல்லிவிட்டாரு. அப்படிப்பட்ட சட்டத்தை எப்படி எதிர்த்து ஒழிக்க முடியும். . . காங்கிரஸ் கட்சியாலே. . .

மண்டலம்:- இப்ப இருக்கிற காங்கிரசுக்கும் அப்ப இருந்த காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாததாலே இவ்விதம் பேசத்தோணுது உங்களுக்கு. இப்ப இருக்கிற காங்கிரசிலே. மகாத்மா காந்தியை முன்னே எதிர்த்துக் கொண்டு இருந்தவங்களோட தொகைதான் அதிகம். தெரியுதுங்களா, அவங்களோட எண்ணம், மகாத்மா என்னமோ தன்னைப்போலவே எல்லோரும் தவசிகள் என்ற நினைப்பிலே மதுவிலக்குச் சட்டம் கொண்டு வரச்சொல்லி கட்டளையிட்டார். ஆனா அது நடைமுறைக்கு ஒத்து வராது என்பதுதான்.

மு. க. க.:- அதனாலே. . . போட்ட சட்டம் போட்டபடியே தானேய்யா இருந்துவருது. . .

மண்டலம்:- இருந்துவருது, ஆனா எத்தனை நாளைக்கு? சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்ற குரல் வலுவடையுது தெரியுங்களா? இப்பவே. மகாராஷ்டிரத்திலே கடைகளைத் திறந்தாச்சி.

மு. க. க.:- பம்பாய் பக்கத்திலேயா - அங்கே காங்கிரஸ் ஆட்சி இல்லையா. . .

மண்டலம்:- காங்கிரஸ் ஆட்சிதான் அங்கே நடப்பது, காங்கிரஸ் கட்சியே சொல்லிவிட்டுது மதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்தவேண்டியதுதான் என்று. காங்கிரஸ் கட்சி சொல்வதைக் காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றுது, அதுதானே நியாயம். . .

மு. க. க.:- பம்பாய் பக்கத்திலே மதுவிலக்கு சட்டத்தை மாற்றிவிடச் சொல்லி அங்கே இருக்கிற காங்கிரஸ் சொல்லி இருக்குதா! பலே! பலே! துணிச்சல் பாருங்க அப்படி இருக்குது, அங்கே. இங்கே தொடை நடுக்கம் எடுக்குது காங்கிரசிலே உள்ளவங்களுக்கு. பஞ்சமாபாதகத்திலே ஒண்ணல்லவா குடின்னு பஜனைப் பேச்சுப் பேசறாங்க. . .

மண்டலம்:- எதுவரையிலே பேசுவாங்க? உங்களைப் போன்றவங்க, விவரம் தெரிந்தவங்க, காங்கிரசிலே சேராமப்படிக்கு ஒதுங்கி இருக்கிறவரைக்கும். உங்களைப் போன்றவங்க, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து பாடு படணும். . . விளக்கமாகப் பேசணும். . . இந்த மாதிரிச் சட்டமெல்லாம் வீணா பண நஷ்டத்தைத்தான் உண்டாக்கும் என்று தைரியமாப் பேசணும்.

மு. க. க.:- பேச விடுவாங்களா? மதுவிலக்கு, மகாத்மாவோட திட்டம்; அதை எதிர்த்துப் பேசுவதற்கு எந்தக் காங்கிரஸ் காரருக்கும் உரிமை கிடையாது என்று உருட்டி மிரட்டிப் பேசுவார்களே. . . மண்டலம்:- அதுதான் முடியாது என்கிறேன். ஜனநாயகம் நடக்குது ஜனநாயகம். தெரியுதுங்களா? ஜனநாயக தர்மப்படி, அவரவர்களும் தமக்குச் சரி என்று பட்ட விஷயத்தைப்பற்றி அச்சம், தயை, தாட்சணியம் இல்லாமப்படிக்குப் பேசலாம். . . .

மு. க. க.:- கள்ளுக்கடைகளை மறுபடியும் திறக்க வேணும்னு கூடவா பேச முடியும்? அனுமதிப்பார்களா. . . .!

மண்டலம்:- அனுமதி மறுக்க யாருக்கு உரிமை! ஒருவருக்கும் கிடையாது. கேட்கலாமே நீங்க, என்னப்பா நான் பொருளாதாரக் காரணத்துக்காகவும், உழைப்பாளிகளுடைய நன்மைக்காகவும் கள்ளுக் கடைகளை மறுபடியும் திறக்க வேண்டும் என்று சொன்ன உடனே, சரமாரியா கண்டனத்தை வீசுகிறீங்களே - காங்கிரசுக்கு இது ஆகாது அடுக்காது என்றெல்லாம்; அதே காங்கிரஸ்தானே புதுச்சேரியிலே அரசாளுது - அங்கே கள்ளுக்கடை கோலாகலமாக இருக்குதே. . . காந்திராஜ்யம் கடலூருக்கு மட்டுந்தானா, காரைக்கால் புதுச்சேரிக்குக் கிடையாதான்னு கேட்கலாமே. என்ன பதில் சொல்ல முடியும். உண்மையைச் சொல்லட்டுமா; உங்களைப்போல ஒரு பத்துப் பேர் இதுபோலப் பேசினா, மதுவிலக்குச் சட்டம் தன்னாலே போய்விடும். . .

மு. க. க.:- கள்ளுக்கடையைத் திறக்கச் சொல்லிக் கள்ளுக் கடைக்காரன் சொல்கிறான் என்று கேலி பேச மாட்டாங்களா. . .?

மண்டலம்:- எப்படிப் பேசுவாங்க! நீங்க காங்கிரசுக்கு வெளியே இருந்துகொண்டு பேசினா, கண்டனம், கேலி, எதிர்ப்பு எல்லாம் கிளம்பும். நீங்களே காங்கிரசிலே சேர்ந்துவிட்டா! ஒரு பய நாக்கை வளைக்க முடியுமா! காங்கிரஸ்காரர்தான் அவரும் என்று நாங்க பேசமாட்டமா, உங்க பக்கம் ஆதரவு காட்டி. . . .

மு. க. க.:- நினைக்க நினைக்க இனிக்குதப்பா. . . .

மண்டலம்:- அதனாலேதான் சொல்றேன். இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு ஆதரவு காட்டி, வேலை செய்து காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுங்க. பிறகு பாருங்களேன், நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருது காங்கிரசு. . . .

மு. க. க.:- கள்ளுக்கடை நடத்தின ஆசாமி இப்பக் காங்கிரசிலே சேருகிறானே என்று ஊர் ஒரு மாதிரியாப் பேசாதா. . .

மண்டலம்:- வீணான சந்தேகம் உங்களுக்கு, உங்களைப் போன்றவங்க வேண்டியபேர் இப்பக் காங்கிரசிலே வந்து சேர்ந்திருக்காங்க. . .

மு. க. க.:- என்னைப்பற்றி, உங்க தலைவர்களுக்கு நல்லபடி சிபார்சு சொல்லி வைக்கணும். . .

மண்டலம்:- பாருங்க என்னோட வேலையை, போகப்போகப் புரியும். உங்க மனசோட போட்டு வையுங்க, இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு வெற்றி ஏற்படும்படி வேலை செய்து காட்டுங்க, உங்களையே இந்தப் பக்கத்துக்குக் காங்கிரஸ் தலைவராக்கிக் காட்டுகிறேன். . .

மு. க. க.:- நமக்கு எதுக்கப்பா தலைவர் வேலை. . . மண்டலம்:- நம்மாலே முடியாதுன்னு பார்க்கிறிங்களா. . .

மு. க. க.:- செச்சே! அப்படி நினைப்பேனா. எனக்குப் பலபேர் சொல்லியிருக்கிறாங்களே உன்னைப்பற்றி, உன் யோசனைப் படியே நடக்கறேன், சரிதானே. என் ஓட்டு உன்னோட காங்கிரசுக்குத்தான், திருப்திதானே. . .

மண்டலம்:- அதென்னங்க, உன்னோட காங்கிரசு என்று சொல்றிங்க. நம்மோட காங்கிரசு என்று சொல்லுங்க. . .

மு.க.க.:- நான் இன்னும் கதர்கூடப் போடவில்லை யேப்பா. . .