அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (2)
2

மண்டலம்:- அதனாலே என்ன! உடையிலே என்ன இருக்குது! எல்லாம் உள்ளத்திலே இருக்கணும்; இருக்குது.

மு. க. க.:- ஏம்பா! உன் பேச்சைக் கேட்டு, காங்கிரசிலே சேர்ந்துவிடறேன். கட்டாயம் நாம் ஜெயித்தாகணும்; இல்லையானா ஊர் கேலி பேசும்.

மண்டலம்:- வெற்றியிலே இனி என்னங்க சந்தேகம். நீங்களே இனி காங்கிரஸ். வெற்றி பெற்றுக் காட்டாமலா இருப்பிங்க. . . இந்தப் பக்கத்து ஓட்டு மூணு ஆயிரம். . .

மு. க. க.:- ஆமாம்; நம்ம பேச்சுக்குக் கட்டுப்பட்டவங்க ஒரு ஆயிரம் இருக்கும், எவ்வளவு குறைச்சி மதிப்புப் போட்டாலும்.

மண்டலம்:- மற்ற இரண்டு மட்டும் என்ன! உங்களை மீறியா போய்விடும். . .

மு. க. க.:- எதிரி கால் அரைன்னு ஆசை காட்டினா. அதுக பல்லை இளிச்சிவிடுமேன்னு பார்க்கறேன்.

மண்டலம்: நீங்க இருக்கிற பக்கம், ஒருவன் வந்து கால் அரைன்னு பேரம் பேசுவானா, அவ்வளவு துணிச்சலா! ரோஷம் கிளம்பிவிட்டா, ஓட்டுக்கு இரண்டு மூணுகூட எடுத்து வீசுவீங்கன்னு தெரியாதா எதிரிக்கு. . .

மு. க. க.:- ரோஷத்தைப் பார்த்தா, செலவு அதிகமாக ஆகி விடுமே. . .

மண்டலம்:- அந்தப் பயம் எதிரிக்கு இருக்குமேல்லோ. . . அவன் என்ன உங்களைவிடப் பெரிய புள்ளியா.

மு. க. க.:- புள்ளியாவது கள்ளியாவது; இப்பத்தான் கொஞ்சம் பசை! வரட்டும்பய, பார்த்துக்கொள்ளலாம். . .

மண்டலம்:- அப்ப, நான் வரட்டுங்களா! இனி இந்த வண்டிப்பேட்டை பக்கம், என்னுடையது அல்ல, உங்களுடையது. . .

மு. க. க.:- நீ போய், மற்ற இடத்தைக் கவனி தம்பி! வண்டிப் பேட்டை ஓட்டு, இப்பவே நம்ம பெட்டியிலேன்னு வைத்துக்கொள்ளு. . .

மண்டலம்:- அதிலே சந்தேகம் என்ன! ஒரு ஐம்பது எடுங்க. . .

மு. க. க.:- ஐம்பது ரூபாயா. . . ஏம்பா! மண்டலம்:- ஆமாங்க! ஒரு செட்டு கதர் உடை அனுப்பி வைக்கிறேன். . .

மு. க. க.:- ஆமாம்பா! அப்படியே கொடிகூட. . .

மண்டலம்:- பட்டுத் துணியிலே உங்க மாளிகைக்கு. . . மற்ற இடத்துக்கு, துணியிலே சரிதானே,

மு. க. க.:- உனக்கா தெரியாது.

ஆலை அதிபர் ஆரிமுத்து:- மந்திரி வருகிறார் என்று சொன்னா, நாங்க என்ன மயக்கம் போட்டு விழுந்துவிடுவோம்னு நினைப்பா, நாங்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. மந்திரி வரட்டும் மகராஜனாக, உனக்குச் சொன்ன பதில்தான் அவருக்கும். தேர்தல் செலவுக்கென்று எங்களைக் கசக்கிப் பிழிந்தால், நாங்கள் என்ன கதியாவது. நாங்கள் என்ன முன்புபோலவா இருக்கிறோம், எங்களைத்தான் வரி போட்டுப் போட்டு வாட்டி எடுக்கிறதே உங்க கட்சி சர்க்கார். . .

மண்டலம்:- நான், முன்பே இதைச் சொன்னேன். டி. டி. கே. க்குத் தந்திகூடக் கொடுத்தேன். . .

ஆலை:- உடனே வரியைக் குறைத்துவிட்டாராக்கும். விடப்பா அந்தப் பேச்செல்லாம். முன்பு போல எங்களுக்கு இலாபம் கிடையாது. ஏதோ ஒரு ஆயிரம் தொழிலாளிகள் பிழைக்க வேண்டுமே என்பதற்காக இதைக் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கிறது. வருவதிலே ரூபாய்க்கு 14 அணா கொட்டிக் கொடுக்கணுமாம், அதற்குப் பெயர் சமதர்மமாம். . . சோஷியலிசமாம். . . இதற்கு நாங்களே பணம் செலவழித்துக் காங்கிரசை ஆளச்சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டுமாம். குழியை வெட்ட வேண்டியது நாங்கள் - எங்களை அதிலே போட்டு மூடி மண்ணைப் போடுவீர்கள் நீங்கள். எதற்காகப்பா, வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்கள். சோஷியலிசம் பேசுகிற கட்சி, முதலாளிகளிடம் வரலாமா பணம் திரட்ட. . .

மண்:- கோபம் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்போதுகூட, உங்களுக்கு வரிச்சலுகை செய்தது காங்கிரஸ் அரசாங்கம்தான்.

ஆலை:- அதற்குப் பெயர் சலுகையா. . . வரம்னு சொல்லப்பா! உனக்கு என்ன தெரியும் பொருளாதார சாஸ்திரம். உங்களோட காங்கிரஸ் சர்க்காரின் கண்மூடித்தனமான போக்கினால், தொழில் அமைக்க மூலதனம் கிடைப்ப தில்லை. தெரியுமா! மூலதனம் எங்கே இருந்து வரும்? அந்தரத்திலிருந்தா? இலாபம் கிடைக்க வேண்டும்; அந்த இலாபத்திலிருந்துதானே மூலதனம் கிடைக்க முடியும். . .

மண்:- அதைக் காங்கிரஸ் சர்க்கார் ஒப்புக்கொள்கிறதே! ஒப்புக்கொள்வது மட்டுமா! கம்யூனிஸ்டுகளின் வாயை அடக்க இந்த வாதத்தைத்தானே பயன்படுத்துகிறது.

ஆலை:- பேசுவது சோஷியலிசம்; தேர்தல் நிதிக்கு. முதலாளிகள்!

மண்:- காங்கிரஸ் சொல்லும் சோஷியலிசத்தில், முதலாளி களுக்கும் இடம் உண்டு. அதுதானே அதிலே இருக்கிற அருமையே. மற்ற நாடுகளில் சோஷியலிசம் என்றால் முதலாளிகள் இருக்கக்கூடாது என்பது திட்டம். இங்கே அப்படியா! முதலாளிகள் கட்டாயம் இருப்பார்கள், இருந்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகப் பேசுவது காங்கிரஸ் கட்சி. அதை மறந்துவிடலாமா?

ஆலை:- முதலாளி இருக்கலாம், ஆனால், அவனிடம் இலாபம் சேரக்கூடாது, அதற்கு ஆயிரத்தெட்டுத் தடைகள், விதிகள், சட்டங்கள். ஏன் இதைச் செய்துகொண்டு எங்களிடம் பணமும் கேட்கிறீர்கள்? எதற்காகக் கொடுக்க வேண்டும்? எங்கிருந்து கொடுக்க முடியும்?

மண்:- இப்படிப் பேசினால் நான் என்னத்தைச் சொல்ல முடியும். பணம் தேவை, பெரிய அளவில் காங்கிரசு முதலாளிகளை வாழ வைக்கிறது என்று பலமான பிரசாரம்; எதிர்ப்பு அதிகம். காங்கிரஸ் தேர்தலில் தோற்றுப்போனால், பிறகு சோஷியலிசத் திட்டப்படி தொழில்களைத் தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கவிடமாட்டார்கள். . .

ஆலை:- அந்த இழவுக்காகத்தான் எங்களாலான உதவி செய்து தொலைக்கிறோம் காங்கிரசுக்கு. போன தடவை ஒரு கோடி ரூபாய் அளவுக்குக் கொடுத்திருக்கிறோம்.

மண்:- கொடுத்ததைக் கவனத்தில் வைத்துக்கொண்டுதான், காங்கிரஸ் சர்க்கார் உங்களுக்கு உள்நாட்டுக் கடன், வெளி நாட்டுக் கடன், சலுகை எல்லாம் கிடைக்கும்படி செய்தது. . .

ஆலை:- செய்ததோ இல்லையோ, அதுகூட இருக்கட்டும் ஒருபுறம். எங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் மேடைமீது ஏறிக்கொண்டு, உற்பத்தியான செல்வத்தை நாங்களே உறிஞ்சிக் கொண்டோம் என்றா பேசுவது, மக்களுக்கு எங்கள் பேரிலே ஆத்திரம் வருகிறபடி. அவர்கள் சொத்து சிலரிடம் குவிந்திருப்பது ஏன் என்று கேட்டுப் புரட்சியை செய்ய மாட்டார்களா!

மண்:- விடுவோமா! இருக்கிற சொத்தையும் வருவாயையும் பங்கு போட்டுக்கொள்வது சோஷியலிசம் அல்ல என்று பேசி வருவது எந்தக் கட்சி? காங்கிரசல்லவா! சோஷியலிசத்துக்கே நாங்கள் புதிய வியாக்யானம் கொடுத்திருக்கிறோம்.

ஆலை:- என்ன வியாக்யானமோ! என்ன தத்துவமோ! புலியிலே புலி இது புதுப்புலி! சைவப்புலி! என்கிறீர்கள். போகட்டும், இப்போது என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்?

மண்:- உங்கள் தரத்துக்குத் தக்கபடி; எங்கள் தேவைக்கு ஏற்றபடி. . .

ஆலை:- உங்கள் தேவை நாளுக்கு நாள் வளரும்; நாங்கள் என்ன செய்வது? உங்களிடம் கண்டிப்பு இல்லை; உங்கள் கட்சியிலேயே சில பேர் கண்டபடி பேசுகிறார்கள், முதலாளிகளின் மனம் புண்படும்படி. கொள்ளைக்காரனை நடத்துவதுபோல நடத்துகிறீர்கள் - காட்டு கணக்கு என்கிறீர்கள் - பூட்டு கடையை என்கிறீர்கள் - நீட்டு நோட்டுகளை என்கிறீர்கள்.

மண்:- அப்படி ஒன்றும் நடக்காது. முன்பு ஏதாவது நடந்திருந் தாலும் இனி நடக்காது. இப்போதே டி. டி. கே. போட்டுள்ள புதிய திட்டத்தைப் பார்த்தீர்களல்லவா? கருப்புப் பணத்தில் ஒரு பகுதியைச் சர்க்காருக்குக் கொடுத்துவிட்டால், மற்றதற்குக் கணக்கு வழக்கு இல்லை என்று கூறி விட்டார். . .

ஆலை:- கருப்புப் பணம் உள்ளவர்களுக்கு அது சலுகையாக இருக்கலாம். என்னிடம் எது?

பணம்:- நான் சொன்னேனா? சொல்லுவேனா? எதிர்க்கட்சிக் காரர்கள்தான் அப்படிப் பேசி ஏசுகிறார்கள். இந்தக் காங்கிரஸ் சர்க்கார் கள்ளமார்க்கட்காரரிடம் சரணாகதி அடைந்துவிட்டது என்கிறார்கள். இதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள்; அதனால் இந்தத் தடவை காங்கிரசுக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று பேசுகிறார்கள். இந்தத் தடவை, காங்கிரஸ் தோற்று விட்டால், கள்ளமார்க்கட்டுக்காரருக்குக் காங்கிரஸ் கட்சி உடந்தையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மை என்றாகிவிடும். ஆகவே, அந்த விதமான பழி விழாதிருக்கவும், முதலாளிகளைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டமிடுபவர்கள் ஆதிக்கம் பெறாதபடி தடுக்கவும், காங்கிரஸ் வெற்றி பெற்றேயாகவேண்டும்.

ஆலை:- உம்முடைய வாதம் சரியோ, தவறோ, நான் நீண்ட காலமாகக் காங்கிரஸ் பக்தன். அதனால் என்னாலானது செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்போது வருகிறார் மந்திரி?

மண்:- நீங்கள் நாள் குறிப்பிட்டதும். . .

ஆலை:- என் தகப்பனாரின் தலைத் திவசம் இந்தப் புதன்கிழமை. . .

மண்:- நினைவு நாள் கொண்டாடிவிடுவோம். . . மந்திரி தலைமையில். . .

ஆலை:- அன்றைக்கோ, அமெரிக்கக் கூட்டுறவுடன் நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழிற்சாலைக்கான அடிப்படைக் கல்நாட்டு விழாவும். . .

மண்:- நடத்திவிடுவது. . . இதற்கு ஒரு மந்திரி. . . அதற்கு ஒரு மந்திரி. . .

ஆலை:- மந்திரியிடம், தனியாகச் சில விஷயங்கள் பேச. . .

மண்:- ஒரு மணி நேரம் ஒதுக்கச் சொல்கிறேன், போதுமா?

ஆலை:- ஒரு முக்கியமான விஷயம். . . மந்திரி இங்கு வருகிற போது, என்னை மதிப்புக் குறைவாக நடத்திய அதிகாரி இருக்கிறாரே, தெரியுமே உங்களுக்கு, அவர் இருக்கக் கூடாது. . .

மண்:- மாற்றிவிட்டால் போகிறது, வேறு இடத்துக்கு.

ஆலை:- மகாத்மா காந்தியின் அருளால், தேர்தலில் நமக்கு ஜெயம் நிச்சயம். . .

மண்:- உங்களுடைய ஆசீர்வாத பலம் உண்டு என்று தெரிந்த பிறகுதான், நான் தேர்தல் வேலையிலே ஈடுபட்டேன்.

முற்போக்காளர்:- என்ன இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்தபடி இருக்கிறது.

மண்டலம்:- நீங்கள் நினைப்பது தவறு. கூடிக்குலவி முதலாளிகளை ஒழித்துக்கட்டும் தந்திரமான திட்ட மல்லவா காங்கிரஸ் மேற்கொண்டிருப்பது.

மு:- கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது என்பார்களே, அப்படி இருக்கிறது உங்கள் போக்கு. . .

ம:- அப்படியானால் முதலாளிகளை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்கிறீர்களா? சரி, செய்வோம். அதற்குக் காங்கிரசு வெற்றி பெற்றால்தானே. . .

மு:- முதலாளியை ஒழிக்க, காங்கிரஸ் வேட்பாளராக ஒரு முதலாளியையே நிறுத்துவதா. . . வெட்கக் கேடு. . .

ம:- என்ன செய்வது? காங்கிரசுக்கோ எதிர்ப்பு அதிகமாகி விட்டிருக்கிறது. பணம் நிறையத் தேவை. பணம் செலவழிக்கக்கூடிய ஆசாமியாகப் பார்த்துப் போட்டால் தானே. . .

மு:- தன் பணத்தால்தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற நினைப்பில், அந்த முதலாளி மேலும் இறுமாப்புடன் நடந்துகொள்வாரே!

ம:- எப்படி முடியும்! எத்தனை பணம் இருந்தாலும், நம் போன்றவர்களின் உதவியில்லாமல் வெற்றி கிடைக்காது என்பது தெரியாதா அவருக்கு?

மு:- அவருக்கு நம்முடைய கொள்கையில் நம்பிக்கை இல்லை; நமக்கு அவருடைய குணத்தில் வெறுப்பே இருக்கிறது. ஆனாலும் தேர்தலுக்காக ஒரு உறவு வைத்துக் கொள்கிறோம், முறையா! கூடா நட்புக் கேடாய் முடியும் என்பார்களே. . .

ம:- தேர்தலுக்காக இவரைப் பிடித்து இழுத்துப் போட்டு வைத்திருக்கிறோம், அவ்வளவுதானே, திட்டம் போடுவது, கொள்கை தீட்டுவது இவரா!! மு:- கொள்கை, திட்டம் இவைகளைத் தீட்டும் நிலையில் உள்ள தலைவர்கள் மட்டும் என்ன இலட்சணத்தில் இருக்கிறார்கள்! ஒரே குளறுபடி! மொரார்ஜி வலதுசாரி, மேனன் இடதுசாரி, மாளவியா தீவிரவாதி என்று இப்படித் திக்குக்கு ஒருவராக இருக்கிறார்கள். ஒருமித்த கருத்து இல்லையே. . .

ம:- எந்தக் கருத்துக்குப் பெரிய ஆதரவு கிடைக்கும் தெரியுமோ, நம்மைப்போன்ற முற்போக்காளரின் கருத்துக்குத்தான். . .!

மு:- முற்போக்காளர் முகாமில்தானா தாங்களும். . . .!
முற்போக்கு, இனி ஒரு முழக் கயிறு தேடிக்கொள்ள வேண்டியதுதான்! துணிந்து சொல்கிறீரே, உம்மை முற்போக்காளர் என்று. . . ஒரு தேர்த்திருவிழா பாக்கி கிடையாது, ஆலமரத்தடி கிளி ஜோதிடனிலே இருந்து நாடி ஜோதிடர் வரை தேடி அலைகிறீர், முற்போக்காளர் என்று வேறு சொல்லிக்கொள்கிறீர்.

ம:- அதிலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்! அப்படித்தானே! அதுதான் தவறு. . .!

மு:- நம்பிக்கை இல்லாமலா, ஆடி அடங்கிய சாமியாருக்கு அன்னாபிஷேகம் செய்து அவர் காலைக் கழுவி அந்தத் தண்ணீரைப் பருகினீர் - போன வாரம். . .

ம:- பைத்யம்! பைத்யம்! ஆடி அடங்கிய சாமியாருடைய அற்புதத்திலே நம்பிக்கையா எனக்கு! நான் என்ன மடையனா, அப்படிப்பட்ட மூடநம்பிக்கை கொள்ள. ஆடி அடங்கிய சாமியாரிடம் சொக்கிக் கிடக்கும் மக்கள் ஊரிலே நிறையப் பேர், தெரியுமா! சாமியார் ஒரு வார்த்தை சொன்னால் போதும், அந்தப் பக்தர்கள் ஓட்டு அவ்வளவும் நமக்குத்தான். அதற்காக, அவருடைய பக்தனாக ஒரு நாள் இருந்தேன். என்னுடைய உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமல், பேசுகிறீர். . .

மு:- அப்படியானால், பேய், பூதம், பிசாசு, மோட்சம், நரகம், முன்வினை, மறுஜென்மம், சடங்கு, சம்பிரதாயம், மாயமந்திரம், புராணம், இதிகாசம் இவைகளைப் பற்றிய நம்பிக்கை உமக்குக் கிடையாது என்று சொல்லும். . . .

ம:- சொல்ல வேறு வேண்டுமா - ஐயா! என் தலைமை யிலேதான் பெரியார் கூட்டம் நடந்தது. அன்றைக்கு விளாசினார் பாருங்க இராமாயணத்தைப் பற்றி, அடே அப்பா! அவ்வளவு பிரமாதம்.

மு:- அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தது எனக்குத் தெரியாது. ஆனால், ஆரண்யபுரம் என்ற ஊரில் கோதண்டராமசுவாமி கோயிலில், பட்டாபிஷேகத் திருவிழாவிலே முக்கிய பங்கு உங்களுடையது என்று பேப்பர்லே பார்த்தேன்.

ம:- ஆமாம்! போட்டோ கூடப் போட்டிருந்தாங்களே. ஆனால், உம்மிடம் சொல்லிவைக்கிறேன், ஏன் போனேன் அந்தப் பட்டாபிஷேகத்துக்கு? ஆரண்யபுரம் வட்டத்திலே மட்டும் ஆறு ஆயிரம் ஓட்டு! புரியுதா! அங்கே என்னைப் பட்டாபிஷேக வைபவத்திலே கண்டதிலே எவ்வளவோ மகிழ்ச்சி, நம்பிக்கை, அந்த ஊராருக்கு. . .

மு:- அவர்களை ஏமாற்றினீர் என்றுதானே பொருள்?

ம:- அவ்வளவு பச்சையாகச் சொல்லலாமா. . . இது ஜனநாயகக் காலமாச்சே. . .

மு:- நான் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதற்குச் சம்மதித்தாலும் இராமாயண பாரதத்தை நம்பும் பைத்யக்காரத்தனத்தைக் கண்டிக்காமல் இருக்கமாட்டேன். . .

ம:- உங்களைக் கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. அந்தப் பயமே வேண்டாம். . . காங்கிரசுக்குள்ளேயே மூட நம்பிக்கை ஒழிப்புமுனை என்று ஒரு அமைப்பு வைத்துக் கொள்ளுங்கள். . . யார் தடுக்க முடியும். . .

மு:- அப்படியா. . . பகுத்தறிவுப் பாசறையும் ஏற்படுத்திக் கொள்ளலாமா. . .

ம:- தாராளமாக! இப்போது சமதர்மமுனை என்று ஒன்று வேலை செய்கிறதே, காங்கிரசிலே தெரியாதா. . .

மு:- என்ன நோக்கத்துடன். . .?

ம:- காங்கிரஸ் சமதர்ம திட்டத்தைச் சரிவர, மும்முரமாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்த, சமீபத்திலே மகாநாடுகூட நடந்தது. . .

மு:- யாரார் போயிருந்தார்கள் அந்த மகாநாட்டுக்கு. . .

ம:- ஏன்! நம்ம காமராஜரே போயிருந்தார். . .

மு:- சரி! என் ஓட்டு காங்கிரசுக்குப் போடுவதாலே, என் சமதர்மக் கொள்கை, பகுத்தறிவுக் கொள்கை எதுவும் பறிமுதலாகிவிடாது என்று சொல்வதாலே, காங்கிரசுக்கு வேலை செய்கிறேன். ஒரு சின்ன உதவி. . .

ம:- சொல்லுங்க செய்துவிடலாம். . .

மு:- நான் எழுதியுள்ள கடவுள் ஒழிக! என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்குக் காமராஜரைத் தலைமை வகிக்க அழைத்துவரவேண்டும். . .