அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (2)
3

ம:- அடுத்த வாரமே நடத்திவிடலாம். . .

மு:- அடுத்த வாரமா. . . அச்சகத்தான் பழைய பாக்கிக்காக நச்சரித்தபடி இருக்கிறான்; வேலையிலே சுணக்கம். . . இரண்டு வாரம் ஆகும். . .

ம:- அடுத்த வாரம் விழா! எப்படி என்ன என்று என்னை ஒன்றும் கேட்க வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். காமராஜர் தலைவர்; அந்தக் கூட்டத்திலேயே, காங்கிரசை ஆதரித்து நீங்களும் ஒரு நாலு வார்த்தை பேசிவிட வேண்டும்; செலவு பற்றி உமக்கு ஒரு கவலையும் வேண்டாம். . .

***

மண்டி மாரியப்பன்:- மண்டலமா! வாங்க, வாங்க, இப்பத்தான் வழி தெரிஞ்சுதா, கண் திறந்துதா. . . அய்யோவ்! உன்னைப் போல ஆசாமிகளை நம்பினா, படு நாசம்தான்யா, யாருக்கும். . . மண்டலம்:- மளமளன்னு சொல்லவேண்டியது அவ்வளவையும் கொட்டிவிடுங்க சீக்கிரமா. . .

ம. மா:- ஆமாய்யா! கேலிதான் பேசுவே. தலைவரில்லையா. . . தெரியப்போகுதே பத்து நாளிலே. தீட்டிக்கிட்டுத்தான் இருக்கிறாங்க எல்லோரும். . .

ம:- ஒழித்துக்கட்டத்தானே. . . செய்யட்டும். . . நீங்களும் சேர்ந்துகொள்ளுங்க. . . தோற்கட்டும் காங்கிரசு, எனக்கு என்ன நஷ்டம்! ஆகிறபடி ஆகுது. . .

ம. மா:- என்ன மண்டலம்! முற்றுத் துறந்ததுபோலப் பேசி மிரட்டிப் பார்க்கறே. ம:- பின்னே, நீங்க எதுக்காக எறிஞ்சி விழறிங்க. . . ம. மா:- நடையா நடந்தேன் உன் வீட்டுக்கு அந்த அதிகாரி கணக்குப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு போயிட்டான். . . மிரட்டிக்கிட்டு இருக்கிறான். . . மானம் போகுதுன்னு. . . மகாநாடுன்னா பணம், மந்திரிவர்ராருன்னா பணம், மண்டலத் தேர்தல் என்றா பணம், மகாத்மா ஜெயந்தின்னா பணம்; யுத்தநிதி, கடன் பத்திரம், கூட்டத்துக்குப் பணம், இவ்வளவுக்கும் நானு! என்னை ஒரு அதிகாரி கேவலப் படுத்தறது, அதைக் கேட்க ஆள் கிடையாது. இது நியாயமா. . . இந்த விதமாக நீங்க நடந்துகொண்டா, எங்க உதவி எப்படிக் கிடைக்கும். . . சொல்லு நீயே. . .

ம:- அந்த அதிகாரி விஷயமா, சொல்லவேண்டிய இடத்திலே சொல்லவேண்டியதை, சொல்லவேண்டிய நேரம் பார்த்து சொல்லி இருக்கறேன். . . நான் என்ன, நன்றிகெட்டவனா! காங்கிரசுக்கு நீங்க செய்கிற உதவியை மறந்து விடுவேனா. . .

ம. மா:- அதிகாரி விஷயமா நீ சொன்னது என்னத்துக்குப் பயன்பட்டுது. கல்லுப்பிள்ளையார்போல இங்கேதானே இருக்கிறான் அந்த இரும்புத் தலையன். அவனை வேறு இடம் மாற்ற முடியல்லையே. . .

ம:- முடியல்லே. ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஏன் முடியவில்லை என்கிற காரணம் தெரியுமா உங்களுக்கு. . .

ம. மா:- உன்னோட பேச்சுக்கு மேலிடத்திலே அவ்வளவுதான் மதிப்புப் போலிருக்கிறது. . .

ம:- எனக்கு உள்ள மதிப்பு எந்த விதத்திலேயும் கெட்டுப் போகவில்லை. உங்களோட பேரைச் சொன்னதும் மேல் இடத்திலே, மேலே கீழே பார்க்கறாங்க. காங்கிரசுக்கு நீங்க விரோதியாகிவிட்டதாக யாரோ கதை கட்டிவிட்டிருக் காங்க. . . ஏதோ சங்கக் கூட்டத்திலே பேசிவிட்டிங்களாமே, காங்கிரசுக்கு இந்தத் தடவை வெற்றி கிடைக்காது என்று. . .

ம. மா:- ஆமாம்! கோபம் அவ்வளவு எனக்கு. எங்களோட உதவியைப் பெற்றுக்கொண்டு எங்களையே கேவலமா நடத்தினா காங்கிரசு எப்படி ஜெயிக்கும்னு கேட்டேன். . .

ம:- அது காதிலே விழுந்ததும் மேல் இடத்திலே உள்ளவங் களுக்கு அதிகமான கோபம். இந்த விஷயம் தெரியாமல் நான், அந்த அதிகாரி விஷயமாச் சொன்னேன். மேல் இடம் வேணும் அந்த ஆசாமிக்கு! கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தால் போதாது, வழக்கே போட்டாகணும். . . அப்பத்தான் ஆசாமியோட துடுக்குத்தனம் போகும்னு கூச்சலிட்டு, என்னை விரட்டிவிட்டுது. . .

ம. மா:- வழக்கே போடணுமாமா. . . என்ன அநியாயம் இது. . . வாரி வாரிக் கொடுத்தவனாச்சே. . .

ம:- வருத்தப்பட வேண்டாம், கோபத்தாலே அவ்விதமாகப் பேசிவிட்டாங்க. . . நான் ஒரு சபதம் சொல்லி விட்டுத்தான் வந்திருக்கறேன். . . நீங்க யார் பேச்சையோ கேட்டு வீணான பழி சுமத்தறிங்க. மாரியப்பப் பிள்ளையோட தேச பக்தி உங்களுக்குத் தெரியாது. அவருடைய உதவியாலேதான் இந்தத் தடவை காங்கிரசு ஜெயிக்கப்போகுது. . . அவருக்கு அவ்வளவு செல்வாக்கு. . .

ம. மா:- அது மேல் இடத்துக்கும் தெரியுமே. நம்மிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள கிராமம் 50க்கு மேலே இருக்குமே தவிரக் குறையாதே. . .

ம:- சொன்னேன் விவரமா. . . மாந்தோப்புக் குத்தகை எடுத்து இருக்கிற விஷயம், மாரியம்மன் கோயிலுக்கு அபிஷேகம் செய்திருக்கிற விஷயம், உங்க மச்சினனுக்கு உள்ள செல்வாக்கு, எல்லாம் சொல்லி, இந்தத் தடவை முழு மூச்சாக அவர் ஈடுபட்டு, காங்கிரசுக்கு வெற்றி தேடிக்கொடுக்கப் போகிறார். . . அப்புறமாவது அவருடைய செல்வாக்கையும் தேச பக்தியையும் உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளுங்க என்று சொன்னேன். . .

ம. மா:- சொன்னயா! அதுதான் சரி. . .

ம:- அதிகாரியை மாற்றித்தான் ஆகணுமான்னு, கடைசியிலே, கேட்டாங்க, மேலிடத்திலே. . . நான் சொன்னேன், இப்ப வேண்டாம், தேர்தல் முடியட்டும், மாரியப்பப் பிள்ளையோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டு, பிறகு அதிகாரியை மாத்துங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். உங்களை மலைபோல நம்பி இந்தச் சபதம் செய்துவிட்டேன். அதிகாரியை மாற்றி விடலாம் அரை நொடியிலே. . . உங்களோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பது மேலிடத்துக்குத் தெரிந்ததும். . .

ம. மா:- பகவானோட கடாட்சத்திலே என் செல்வாக்கு எந்த விதத்திலேயும் பழுதாகிப் போகவில்லை. காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுக்கவில்லையானா என் பேர் மண்டி மாரியப்பனில்லே. . . பார்த்துவிடுவோம். . . என்ன செலவாகிவிடப் போகுது. . . ஒரு நூறு மூட்டை கெட்டுப்போச்சுன்னு எண்ணிக் கொண்டாப்போகுது. . .

ம:- என்னத்துக்குங்க கெட்ட பேச்சு! ஒரு சிலோன் பர்மிட் கிடைச்சா கிடைக்கக்கூடியதிலே நூறிலே ஒரு பாகம் ஆகுமா. நீங்க செலவு செய்யப்போகிற தொகை. . .

ம. மா:- சிலோன் பர்மிட்டா? மண்டலம்! அதுமட்டும் எனக்குக் கிடைக்கும் என்கிற உறுதி இருந்தா, எதிரியை ஓடஓட விரட்டி அடிக்கறேன். . . பணம் பத்து ஆயிரம் ஆகும் என்றாலும் கவலை இல்லை. . .

ம:- சிலோன் பர்மிட்டு, காங்கிரசு வெற்றிபெற்ற பத்தாம் நாள் உங்க வீடு தேடி வரும்.

மண்டலம்:- குமரப்பனா! ஏம்பா! என்னோட ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே. . . பத்தாயிரம் கடன் வேண்டும்னு மனு போட்டிருக்கிறயாமே. . .

குமரப்பன்:- ஆமாம் புதிய தொழில் ஒன்று ஆரம்பித்து விட்டுத் தொல்லைப்பட்டுக்கிட்டு இருக்கறேன். . . கடன் தேவைப்பட்டுது. ம:- என்னிடம் சொல்லப்படாதான்னுதான் கேட்கறேன். நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியாமலா போய்விடும். . .

கு:- அதெப்படித் தெரியாமல் போய்விடும். . . அதான் ஒருத்தன் இருக்கிறானே எனக்கு மாமனாருன்னு பேர் வைத்துக் கொண்டு, அவன் சொல்லி இருப்பான். . .

ம:- சேச்சே! அவரு ஒரு பேச்சும் சொல்லவில்லை பாங்க் தலைவர் இல்லே பார்த்தசாரதி, அவர்தான் சொன்னார். உன்னைப்பற்றி விசாரித்தார், ஆசாமி எப்படி? குணம் எப்படி? நிலவரம் எப்படி? என்றெல்லாம். . .

கு:- எல்லா விவரமும் தெரிவித்திருக்கிறேனே. . .

ம:- சொன்னாரு. . . ஆனா அதெல்லாம் உண்மைதானான்னு கேட்டாரு. என் பேச்சிலே அவருக்கு ஒரு நம்பிக்கை. . . போன வருஷம் நம்ம நாராயணன் நாலாயிரம் ரூபா கடன் கேட்டிருந்தான். . . அவனோட சொத்து மதிப்பு போதாதுன்னு யாரோ புகார் செய்துவிட்டாங்க. என்னைத்தான் கேட்டாரு. நான் சொன்னேன், நாராயணன் நாணயஸ்தன், அவனை நம்பி, நாலு என்ன எட்டு ஆயிரம்கூடக் கொடுக்கலாம் என்று கொடுத்தாரு.

கு:- நம்ம விஷயமாகவும் சொல்லி ஏற்பாடு செய்யப்பா. . .

ம:- எனக்கு இல்லையா அதிலே அக்கறை. . . ஆனா எனக்கு இப்ப வேலை நெருக்கடி. . . தெரியுமே உங்களுக்கும் தேர்தல் வேலை. அந்த வேலையாத்தான் பாங்க் தலைவரிடம் போயிருந்தேன். அவர் ஒரு பட்டியல் கொடுத்தார் இன்னின்னாரைப் பார்த்தா நல்லது என்று. . . நம்ம பாங்க் தலைவருக்குக் காங்கிரசு என்றாலே, உயிர். . . அவ்வளவு தேச பக்தி. . . கதர் போட்டவங்களை கண்டபோதும், உபசாரம் செய்வார். . . காங்கிரசுடைய வெற்றியிலே அவ்வளவு அக்கறை. . . பாங்க் வேலையைக்கூட ஒரு பத்து நாளைக்குக் கவனிக்கப்போறதில்லைன்னு சொல்லி விட்டாரு. . .

கு:- அப்படியானா, நம்ம கடன் இப்பக் கிடைக்காதுன்னு சொல்லுங்க. . .

ம:- அவசரம் அதிகமாக இருந்தா ஒண்ணு செய்யுங்க. . . ஒரு நாலு நாளைக்கு நாலு இடம் சுற்றிக் காங்கிரசுக்கு ஓட்டு கேளுங்க. . . சேதி அவர் காதிலே விழுந்தாப் போதும். உடனே கடன் உங்க வீடு தேடி வந்து சேரும். . .

கு:- உன்னோடு கூடவே வந்து வேலை செய்கிறேன் மண்டலம்! எனக்கு சோடப்பட்டி, சொர்ணாபுரம், ஆளிப்பட்டி, அம்மானூர் இங்கே எல்லாம் சொந்தக் காரர்கள் நிறைய. . .

ம:- கேள்விதான் எனக்கும். ஆனா அங்கே உங்க பங்காளி ஒருத்தர் இருக்கிறாராம், அவர் எதிர்த்து வேலை செய்கிறாராம். . .

கு:- என் பங்காளியா! விட்டுத்தள்ளு மண்டலம்! அவனுக்குச் செல்வாக்கா, எனக்குச் செல்வாக்கா என்பதை ஒருகை பார்த்துவிட்டாப்போகுது. . .

ம:- உன் பங்காளி முரட்டுப் பிடிவாதம்போல இருக்குது. கைக் காசைச் செலவழித்துக்கொண்டு வேலை பார்க்கறா னாமே. . .

கு:- பணம் என்ன அவன்கிட்டத்தான் இருக்குதாமா! மற்றவங்களெல்லாம் என்ன பக்கிரியாமா! பார்த்துவிடுவமே அதையுந்தான். அந்த நாலு ஊரைப்பற்றின கவலையைவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன். . . கடன் மட்டும். . .

ம:- தேர்தலிலே நம்ம பக்கம் வெற்றி என்கிற செய்தி வந்த எட்டாம் நாள், கடன் தொகை வீடு தேடி வராவிட்டா, என்னை மண்டலம்னு கூப்பிட வேண்டாம், கமண்டலம்னு கூப்பிடு, வேலையைக் கவனி. . . புறப்படு. . .

மண்டலம்:- நமஸ்காரம்! நமஸ்காரம்! சௌக்கியந் தானுங்களே. . . பட்டாபிஷேக உற்சவத்திலே பார்த்தது. . . தர்மகர்த்தா தாமோதரம்:- ஓ! மண்டலமா! பகவானோட கடாட்சத்திலே சௌக்கியந்தாம்பா. . . பத்து நாளா இலேசா பல் வலி.

ம:- பல்லை எடுத்துவிடலாமே. . . புது டாக்டர் வந்திருக்காரு பாருங்க, ரொம்பக் கெட்டிக்காரரு. . .

த. தா:- உனக்குத் தெரிந்தவர்தானா. . .

ம:- அதென்ன அப்படிக் கேட்டுவிட்டிங்க. நம்ம ஊருக்கு ஒரு நல்ல டாக்டர் வேண்டுமென்று நானே நேரிலே போய் மந்திரியைப் பார்த்து, இவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேனே.

த. தா:- அப்படியா. . . ரொம்ப நல்லதாப்போச்சி. . .

ம:- தேர்தல் வேலை மும்முரம், தெரியுமே உங்களுக்கு. . .

த. தா:- ஆமாமாம்! ஆனா விலை ஏறிவிட்டுது என்கிற கோபம், வருத்தம் ஜனங்களுக்கு. காங்கிரசுமீது வெறுப்பும் இருக்குது. உனக்கா தெரியாது. . .

ம:- கஷ்டப்படுகிற ஜனங்க அப்படித்தான், விவரம் தெரியாததாலே வெறுப்புக் காட்டுவாங்க. . . உங்களைப் போன்ற பெரியவங்கதான் நல்லபடி சொல்லி ஜனங்களைத் திருத்தவேணும். . .

த. தா:- இந்த ஜனங்களை இந்தக் காலத்திலே திருத்தப்போனா, நீ முதலிலே திருந்திக்கொள்ளு என்று பேசுதுங்க. . .

ம:- ஆமாமாம்! இந்தக் காலத்து ஜனங்களோட போக் கைத்தான் பாகவதப் பிரசங்கி பன்னீர்தாஸ் பட்டாபி ஷேகத் திருவிழாவின்போது நடத்தினாரே பக்த ராமதாஸ் காலட்சேபம், அதிலே புட்டுப் புட்டுக் காட்டினாரே. . .

த. தா:- கேட்டயேல்லோ. . . ராமா! ராமான்னு ராமதாசர் பூஜித்ததும் ராமன் நேரிலேயே வந்தாராம். . . அந்தக் காலத்திலே. . .

ம:- நம்ம காங்கிரஸ் ராஜ்யம்கூட, ராமராஜ்ஜியம்தானே. . . காந்தியே வைத்த பெயராச்சே. . .

த. தா:- அது சரி மண்டலம்! யாரோ சொன்னாங்க என்னிடம். . . நீ என்னமோ ராமசாமிப் பெரியார் கூட்டத்திலே தலைமை வகித்தயாம். . . அவரு ராமனையும் சீதையையும் கண்டபடி திட்டினாராம். . . ஏம்பா! நீ கலந்து கொள்ளலாமா அந்தக் கூட்டத்திலே. . .

ம:- நான் காரணம் இல்லாமலா கலந்துகொண்டேன். வேறே யாராவது தலைமை வகித்திருந்தா, பெரியார் பேச்சை மறுக்க முடியாமல் திக்கித் திணறிப்போயிருப்பாங்க. நான் விட்டேனா! இவ்வளவு பேசற இவருடைய பேரே ராமசாமிதான்! என்று சொன்னேன். ஜனங்க ஒரே ஆரவாரம் செய்தாங்க. அந்த ஒரு பேச்சிலே அவருடைய மூன்று மணி நேரப் பேச்சும், போச்சி. . .

த. தா:- பலே! பலே! சரியான பேச்சுத்தான் பேசியிருக்கறே. . .

ம:- அது மட்டுமா! மற்றொரு விஷயம் சொன்னேன். ஜனங்க அப்படியே அசந்து போய்விட்டாங்க. கடவுள் அவதாரமான ராமச்சந்திரமூர்த்தி, மகாலட்சுமியான சீதாபிராட்டி, இவர்களைப் பற்றியெல்லாம் கண்டித்துப் பேசுகிற பெரியாரே, நம்ம காங்கிரசு கட்சியைப் பற்றிக் கண்டிக்க முடியவில்லை; பாராட்டிப் பேசறாரு; ஆதரிக்கச் சொல்கிறார். எதையும் கண்டிக்கிற பெரியாரே காங்கிரசை ஆதரிக்கிறபோது, நாடே திரண்டு வந்து காங்கிரசுக்கு ஓட்டுப் போடும் என்பதிலே என்ன சந்தேகம் என்று கேட்டேன். பத்து நிமிஷமாச்சி, கரகோஷம் அடங்க. . .

த. தா:- ரொம்பச் சந்தோஷம் வரட்டுமாப்பா. . .

ம:- ஒரு சின்னக் காரியம் செய்யணும். . . நம்ம கோயில் நிலம் இருக்குது பாருங்க. . .

த. தா:- கொட்டாவூர், கோனூர், பருதூர் மூன்று இடத்திலே இருக்குது, நிலம். . .

ம:- சிரமத்தைப் பார்க்காமெ ஒரு நடை நீங்க போய் வந்தா நல்லது. . .

த. தா:- ஓட்டுக்குத்தானே. . . சொல்லி அனுப்பிவிட்டால் போகுது. ம:- நேரிலேயே போய்வந்தா நல்லது. . . ஏன்னா! மேல் இடத்திலே, உங்களை ஏரியா கமிட்டிக்குப் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்குது. அந்த இடத்துக்குப் பல்விளக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஆசாமி உங்களைப் பற்றித் தப்புந் தவறுமா சொல்லி வைத்திருக்கிறான். . .

த. தா:- தப்புந் தவறுமாப் பேச என்ன இருக்குது; என்னைப் பற்றி. . .

ம:- ஒண்ணுமில்லிங்க. . . அவருக்குத் தள்ளாத வயது. . . ஓடி ஆடி வேலை செய்ய முடியாது. எந்தக் காரியத்தையும் தானே நேரிலே போய்ப் பார்க்க முடிகிறதில்லை என்று கோள்மூட்டிவிட்டிருக்கிறாங்க. . . சில பேர். அதனாலேதான் இந்தத் தேர்தல் வேலையாக நீங்களே அந்த ஊர்களுக்கு நேரிலேயே போய்வந்தா நல்லதுன்னு நினைக்கிறேன். . .

த. தா:- அப்படியா விஷயம். . . தள்ளாத வயதாமா எனக்கு. . . எல்லாம் தள்ற வயதுதான். . . நடமாட முடியாதாமா. . . நாளைக்கே கிளம்பிப் போறேன். அந்த மூணு ஊருக்கும், அப்பத் தெரிந்துகொள்ளட்டும், தள்ளாதவனோட வேலைத் திறமையை, பல் வலி இருந்தா என்ன. . . கொஞ்சம் காசிகட்டித் தூளை அப்பிக் கொண்டாபோகுது வலி தன்னாலே. . . நாளைக்குக் கிளம்பறேன். . . அந்த ஏரியா கமிட்டி விஷயம்?

ம:- அது உங்க காலடியிலே கிடக்குதுங்க. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

தம்பி! இத்தனைவிதமான முயற்சிகளிலும் ஆளுங்கட்சியால் ஈடுபட முடிகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் அளவுக்கு, நாம் போட்ட கணக்கினை பொய்யாக்கிவிடுகிறது.

மக்களின் இதயம் நமது பக்கம் இருக்கிறது என்பதிலே ஐயமில்லை. ஆனால், மக்கள் தமது இதயம் இடும் கட்டளைப்படி நடந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி, அவர்களை இக்கட்டிலே சிக்க வைத்துவிடும் காரியம் நடந்துவிடுகிறது.

இவைகளையும் எதிர்பார்த்து, இவைகளையும் மீறி, நமக்கு ஆதரவு கிடைத்திடத்தக்க வழி கண்டறிந்து பாடுபட வேண்டும்.

இத்தனை கொடுமைகளைச் செய்த காங்கிரசுக் கட்சியை எதிர்த்துத் தோற்கடிக்க இவ்வளவு பாடுபடவேண்டுமா என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.

கொடுமை, உறுமிக்கொண்டு கிளம்பும் சிறுத்தை வடிவிலே மட்டும் இல்லை; பசும்புற்றரையிலே ஒளிந்துகொண்டு நெளியும் பாம்பின் உருவிலேயும் இருந்திடுவது காண்கிறோமே!

ஆகவே, காங்கிரசாட்சியின் கொடுமைகளை மேடைகளில் எடுத்துக் கூறிவிட்டால் போதும், மக்கள் தெளிவு பெற்று, காங்கிரசாட்சியை வீழ்த்துவதற்கான துணிவு பெற்று, நமக்குத் துணை நிற்பர் என்று எண்ணிவிட்டால் போதாது. கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டாக வேண்டும், தோழமை வளர்ந்தாக வேண்டும்.

ஆசைக்கு மயங்கிவிடுவது, அச்சத்துக்கு இடமளித்து விடுவது, இச்சகம் பேசுவோரின் நச்சு வலையில் வீழ்ந்துவிடுவது ஆகியவற்றினை நீக்கியாக வேண்டும்.

இதற்கு ஏற்ற முறையில் உன் எதிர்காலப் பணி அமைந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே இதனை எழுதினேன்.

அண்ணன்,

2-5-1965