அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இவனே தமிழ் மறவன்!
1

பெரியாரின் திராவிடம் -
திராவிட மொழி ஒற்றுமை -
வடவர் ஆதிக்கம் புதிய தலைவர் போக்கு -
தமிழன்னையும் மறவனும்

தம்பி!

"நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று பலகணி வழியாய்ப் பார்த்தபோது,

பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு அவனைக் கவனித்தேன்.

அவன் மாலை மயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,

அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டு வழியாய் நடந்துபோனான்.

அப்பொழுது இதோ வேசியின் ஆடை ஆபரணந்தரித்த, தந்திர மனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சில வேளை வெளியி லிருப்பாள், சில வேளை வீதியிலிருப்பாள், சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.

அவள் அவனைப் பிடித்து முத்தஞ் செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து,

தொகுதி மூன்று 369 சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது. இன்றைக்குத் தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

என் மஞ்சத்தை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திர மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப் போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப் பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம் வரைக்கும் இன்பங்களினால் பூரிப்போம். புருஷன் வீட்டிலே இல்லை. தூரப் பிரயாணம் போனான். பணப் பையைத் தன் கையிலே கொண்டுபோனான்; குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப் பண்ணினாள்.

உடனே அவன், அவள் பின்னே சென்றான்! ஒரு மாடு அடிக்கப்படும்படி செய்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப் பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலவும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.''

என்ன அண்ணா! இது. உன்னிடம் இருந்து, அரசியல் விளக்கங்களைப் பெற ஆவலாக உள்ளோம்; நீ இப்படி அலங்காரக் கதைகளைக் கூறுகிறாய்; நமது மாற்றார்களோ, பார்! பார்! உங்கள் அண்ணன், ஆபாசமான விஷயமாகவே எழுது கிறான்; இப்படிப்பட்டவனை அண்ணன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றெல்லாம் கேட்டுச் சாடுகிறார்கள். நீயோ, கள்ளி ஒருத்தி காமவலை வீசி இளைஞன் ஒருவனை இழுத்துச் செல்லும் கதையைக் கூறுகிறாய் - போங்களண்ணா! - என்று, தம்பி! என்மீது கோபித்துக் கொள்ளாதே. மீண்டும் ஒருமுறை அதனைப் படித்துப் பார் - நடை காட்டும், அது நான் சொல்வது அல்ல, என்பதனை. தம்பி! காமச் சுவையூட்டும் நோக்குடன் எழுதப்பட்டதும் அல்ல அது. இகபரசுகம் எனும் இரண்டில், முன்னது பெறும் வழி யாது என்பதற்கான விளக்க நூலிலிருந்தும், நான் இதனை எடுத்துக் காட்டவில்லை - கர்த்தரின் வழியைக் காட்டும் விவிலிய நூலில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறேன்; நீதி மொழிகள் பகுதியிலிருந்து. வலைவீசிய வனிதையிடம் சிக்குண்டவனைப்பற்றிக் கூறியதன் தொடர்ச்சிக்குப் போவோம்.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவி கொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்;

அவள் அநேகரைக் காயப்படுத்தி விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலை செய்தாள்.

அவள் வீடு பாதாளத்துக்குப் போம் வழி; அது மரண அறைகளுக்கு கொண்டுபோய்விடும்.

தாவீதின் குமாரனும், இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமோனின் நீதிமொழிகள், விவிலிய நூலின் பழைய ஏற்பாடு பகுதியில் உள்ளன; அதிலே உள்ளதைத்தான் தந்துள்ளேன். இட்டுக்கட்டியதுமல்ல; சுவை சொட்டுகிறதா என்று பார்த்துத் தருவதுமல்ல.

இருக்கட்டும், அண்ணா! இப்போது எதற்கு இந்த நீதி மொழிகள்? என்று கேட்பாய். தம்பி! மனச்சங்கடம் ஏற்படும் போது, எவரெவருக்கு, என்னென்னவிதமான குழப்பங்கள், கொந்தளிப்புகள், கிலேசங்கள் ஏற்பட்டன; எவ்விதம் போயின என்பதனை அறிந்துகொள்வதிலே நாட்டம் செல்லுமல்லவா? அந்தப் போக்கிலே, ஈடுபட்டிருந்தபோது, சாலமோனின் நீதி மொழிகள் குறித்துப் பார்த்தேன்; எனக்கு, அது காமவலையில் விழாதே என்பதற்காக மட்டுமல்ல, பொதுவாக வழிதவறாதே என்பதற்காகவே எடுத்துக்காட்டப்படும் அறிவு விளக்கமாகத் தான் பட்டது. என் மனக்கண்முன், முத்தமிட்ட ஆரணங்கு, அவள் சித்தரித்துக் காட்டிய பஞ்சணை, அதைக்கேட்டு மயங்கி மதியிழந்த வாலிபன், அவனை அவள் இழுத்துச்சென்ற காட்சி, இவை அல்ல தெரிந்தவை. வழி தவறி - வழுக்கி விழுந்து - நிலை மாறி - நினைப்புக் கெட்டு - வலையில் வீழ்ந்து - இலட்சியப் பாதையைவிட்டு விலகுபவர்கள்தான், என் மனக்கண்களுக்குத் தட்டுப்பட்டார்கள். கண்ணியில் விழச்செல்லும் குருவிபோலவும், குழியில் விழப்போகும் களிறுபோலவும், இருக்கிறார்களே இலட்சியத்தை விட்டு விலகும்படியான மயக்கத்தை, மதுரத்தை ஊட்டியவர் எவர்? எதனால் சொக்கிப்போய், சொந்தம் பந்தம் மறந்தனர்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டேன்; ஏக்கமும் கொண்டேன். சாலமோன்போல, பிள்ளைகளே! கேளுங்கள் என்றுகூட அல்ல, தம்பி! கேள்! என்று கூறிடும் உரிமையைக்கூட அல்லவா, வழிதவறியவர்கள் பறித்துக்கொண்டனர். இனி எப்படி அவர்களுக்கு நல்லுரை கூறுவது? சரியான பாதைக்கு வரும்படி அழைப்பது? இயலாதுபோலிருக்கிறதே என்று துக்கப்பட நேரிடுகிறது.

திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை அன்று நாமும் சரி, இது கவைக்கு உதவாது என்று இன்று போதித்து வரும் போக்கினரும் சரி, அவசரப்பட்டோ, ஆராயாமலோ, ஆதாரம் தேடாமலோ, ஏற்றுக்கொண்டோமில்லை. அது மட்டுமல்ல! நாம் அந்த இலட்சியத்தைக் கொண்டதும், நமக்கு அறிவுரைகள், எச்சரிக்கைகள், அச்சுறுத்தல், கழிவிரக்கம் என்பவைகளை எவரும் அள்ளி வீசாமலுமில்லை. அகில உலகம் அறிந்தவர் என்று போற்றப்படுபவரிலிருந்து, அன்புக் கட்டளையிடும் உரிமை பெற்றவர்கள் என்பவர் வரை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் வந்தனர்; நாம் நமது இலட்சியத்தைப்பற்றி ஐயப்பாடு கொள்ளவுமில்லை; அவர்களின் உரைகளை ஏற்கத் தக்கவை என்று கொள்ளவு மில்லை; எதேச்சாதிகாரி பேசும் இனிய மொழி என்றும், கங்காணி பேசும் கனி மொழி என்றும், சூதுக்காரரின் சுவை தடவிய பேச்சென்றும் கருதினோம்; கூறினோம்; நாடும் ஏற்றுக்கொண்டது; நம்பிக்கை அழுத்தமாயிற்று; பரவவுமாயிற்று.

"திராவிட என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால், அவன் முகத்தில் காரித்துப்புங்கள்; தனது தாய் நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில், நமக்கு என்ன நன்மை விளைய முடியும்.

இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி மனிதத் தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்?''

என்று கேட்டார் பெரியார்; நாம் அவருடன் இருக்கும்போது கூட அல்ல; விட்டுப் பிரிந்த பிறகும், மகிழ்ந்தோம்; பெருமைப் பட்டோம். இலட்சியத்தில் நமக்கு இருந்த பற்று, நம்பிக்கை வளர்ந்தது; மணம் தந்தது. அதே நிலையில் நாம்! ஆனால் சிலர், இன்று, முகத்தில் காரித்துப்புங்கள் என்று பெரியார் சொன்னாரே, அதையும் மறந்து, திராவிட என்றால் முகம் சுளிக்கிறார்கள். பெரியாரைப் பொறுத்தவரையில், "திராவிட' என்ற சொல்லை, கருத்தை, இலட்சியத்தை, அவர் விட்டுவிடவுமில்லை, இகழவுமில்லை. அவருடைய வாதமெல்லாம், மொழிவழி அரசுகள் அமைந்தான பிறகு, திராவிட அரசு அமைக்க முற்படுவது இயலாத ஒன்று; எனவே தமிழ் அரசு அமைக்க முற்படவேண்டும் என்பதேயன்றி, திராவிட என்பதே பொருளற்றது என்றோ, ஆபத்தானது என்றோ கருதவில்லை. வேறு சிலர், ஆந்திர, கேரள, கருநாடகத்தாரிடமும், இங்கேயே தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழி பேசுவோர் களாக உள்ளவர்களிடத்திலேயும், காரணமற்ற வெறுப்புக் கொண்டு பகை கக்க, தமிழ் நாடு, தமிழ் அரசு என்ற சொற்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற நிலையில், பெரியார் தம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொள்ளவில்லை.

தெலுங்கர், கேரளர், கருநாடகர், திராவிடராவரா? என்று கம்யூனிஸத் தோழர் இராமமூர்த்தி கேட்டார்.

தமிழ் தேசியம் என்று ஏற்படுத்த இயலும் - ஏற்படுத்த வேண்டும் - ஆனால் திராவிட தேசியம் என்பது போலி, அதனை ஏற்படுத்தவே முடியாது என்று வாதாடினார். எள்ளி நகையாடினோம். அன்று அதற்காக அவர்களைக் கொள்கைக் குழப்பம் கொண்ட கும்பல் என்று கூறி, "வீரகண்டாவும் வெற்றிலை மாலையும்' பரிசாகப் பெற்றவர்கள், இன்று அதே வாதத்தை எடுத்துவைத்துக்கொண்டு, மரியாதைக்காகவாவது இது புதிய வாதமல்ல, முன்பே கம்யூனிஸ்டு தலைவர்கள் சொன்னதுதான், அப்போது அறிவுக்கு எட்டவில்லை, நாக்கு சற்று நீண்டிருந்தது; என்னென்னமோ பேசிவிட்டேன்; இப்போது, அப்போது அவர்கள் சொன்ன வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்; உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன் என்ற முறையிலல்லவா பேசவேண்டும். தடித்த வார்த்தைகளில் இதைக் கூறுவதானால், திராவிடத் தேசியம் என்பது கிடையாது, முடியாது, ஆகாது என்ற எண்ணம் உறுதியானதாகிவிட்டால், நேரே, கம்யூனிஸ்டு கட்சி காரியாலயம் சென்று, தலைவர்கள் முன் நின்று, காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு, பிழை பொறுத்திடுக! புத்தி வந்தது! புத்தி வந்தது! - என்றல்லவா, பேசவேண்டும்! அதை விட்டுவிட்டு, கம்யூனிஸ்டுகளுக்கேகூட, புதிய கண்டுபிடிப்புத் தத்துவம் தாம் தருவதுபோலவா நடந்து கொள்வது. தம்பி! விலகினோருக்கு ஏற்பட்டதுபோல நமக்கும் ஏற்பட்டிருந்தால், நாம் ஏற்கனவே, அந்தக் கருத்தை வலியுறுத்திய வர்களிடம் இதுபோலத்தான் நடந்துகொண்டிருக்கவேண்டும். நமக்கோ, அன்று எப்படி, கம்யூனிஸ்டுகளின் பேச்சுத் தேவையற்றதாக பொருளற்றதாகத் தோன்றிற்றோ, அது போலவேதான் இப்போதும் தோன்றுகிறது; எனவே புத்தி! புத்தி! என்று சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மனம் மாறினவர்கள் அப்படிச் செய்யக் கடமைப்பட்டிருக் கிறார்கள் என்று உலகம் கூறும். அது மட்டுமல்ல, தம்பி! முன்பு, அந்தத் தத்துவத்தை, வாதத்தை, அறிவுரையை, ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளாது இருந்தவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றது எங்ஙனம்? காரணம் என்ன? அதிலும் வேடிக்கை என்னவென்றால், அந்த தத்துவத்தைப் பேசிக்கொண்டு வந்த கம்யூனிஸ்டுகள், அதைப் புதிய விளக்கங்களுடனோ, புதிய ஆதாரங்களுடனோ இப்போது எடுத்து வலியுறுத்திக் கொண்டும் இல்லாத நேரம். அதுமட்டுமல்ல; நாங்கள் நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிடச் சொல்லி, "கூட்டுச்சேர' அதனை ஒரு நிபந்தனையுமாக்கவில்லை; யோசனைதான் கூறுகிறோம்; நாட்டுப் பிரிவினை தேர்தல் பிரச்சினை அல்ல; தேர்தலில் உள்ள பிரச்சினை காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடிப்பதுதான் என்று சொல்லும் காலம். இந்த நேரத்தில், மனமாற்றம் ஏற்பட வேண்டிய காரணம்? சாலமோன் கூறியபடி,

"ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல அதில் விழத் தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்.''

என்பது போலத்தானா என்று கேட்கத் தோன்றுமல்லவா எவருக்கும், கேட்டாலோ, ஆஹா! அவ்வளவு துடுக்கா? நீ யார் அதைக் கேட்க? உனக்கும் எனக்கும் ஒட்டு என்ன? உறவு என்ன? என்று பேசிவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுகிறதா? வேண்டாமப்பா, ஒட்டும் உறவும்! குடும்பத்திலே, பந்தமும், பாசமும் பெருகட்டும், பால் பொங்கட்டும், வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், நெஞ்சுக்கும் நாவுக்கும், நேர்மைக்கும் பேச்சுக்கும் ஒட்டு உறவு இருக்கவேண்டும் அல்லவா? அதுவுமா, வேண்டாம்!! என்ன தம்பி, இது அக்ரமமாக அல்லவா இருக்கிறது.

"இந்தச் சென்னை இராஜ்யத்திலே தமிழர்கள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் ஆகியோர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா?''

என்று கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி கேட்டார் - ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால்.

"ஆம்! ஒரே தேசிய இனம்தான். கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், தமிழின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிருக்கும் வரலாறு, கட்டுரையாளருக்குத் தெரியாமலிருக்க முடியாது.''

என்று சொல்லப்பட்டதே; நினைவில் இருக்கிறதா,தம்பி! அதனைத்தானே காட்டிக்காட்டி, கம்யூனிஸ்டுகளைச் சாடினர் விலகினோர்; இன்று மாறினர்; அது அவர்கள் விருப்பம்; ஆனால், அவர்கள் மாறிவிட்டதால், "வரலாறுமா' மாறி விட்டது? பேராசிரியர் சுந்தரனாரின் அருங்கவிதை அளிக்கும் அறிவுரைக்குமா ஒட்டு என்ன, உறவு என்ன என்ற கேள்வி!! பயங்கரம்!! மிகப் பயங்கரம்!!

பெரியார், வெளிப்படையாகச் சொன்னார். எங்கள் முயற்சி, ஆந்திர, கேரள, கருநாடகப் பகுதிகளிலே வெற்றி பெறவில்லை இதுவரையில், அதனால் எல்லாம் ஒன்றா என்று கம்யூனிஸ்டுகள் கேட்கிறார்கள் என்று.

"திராவிட கழகத்தின் முயற்சி தமிழ் நாட்டுடன் என்றில்லாது, மற்ற திராவிட மொழிக்காரர்களிடையேயும் பரவியிருந்திருக்குமானால், இச் சந்தேகத்தை எழுப்பி இருக்க முடியாது.''

இதைக் கூறினவர்கள் மனம் மாறட்டும்; அந்த வாதத்திலே தொக்கியிருக்கும் உண்மை மாய்ந்தா போய்விடும்? பூக்கடைக் காரனுக்கு புண் ஏற்பட்டு, மருந்து தடவிக்கொண்டிருக்கலாம், அந்த மருந்து நாற்றம் அடிக்கக்கூடும்; ஆனால் அவன் கடை மல்லிகையின் மணம் போயாவிடும்? காய்ச்சல் காரணமாக, சாறும் சோறும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் சாறும் சோறும் எல்லோருக்குமா கசப்பாகிவிடும்?

தம்பி! ஒரு கொடுங்கோலன் - அவனுக்கு, மருத்துவர், உடற்கூறைப் பரிசோதித்து, மாம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டாராம்; உடனே மன்னன் உத்தரவிட்டானாம்; தன் இராஜ்யத்தில் மாந்தோப்பே இருக்கக்கூடாது - வெளியே இருந்தும் மாம்பழம் வரவழைக்கக் கூடாது என்று. அதுபோலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று. அவன் கொடுங்கோலன். - இவர்கள் இந்த இலட்சணத்தில் ஜனநாயக வாதிகளாம்! அதிலும் தீவிரமான ஜனநாயகவாதிகள்!!

திராவிட தேசியம் ஏற்படவில்லை - ஏற்பட முடியாது, தமிழ் தேசியம்தான் சாத்தியம் என்கிறார்கள். ஏதோ அதுவரையிலாவது, நின்று நிலைத்து, முயற்சியில் ஈடுபடட்டும். ஒட்டு உறவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் என்ற அந்தச் சொந்தம் மறுக்கப்பட மாட்டாது என்று நம்பி, நெடுந்தொலைவில் இருந்தபடியே வாழ்த்துவோம்; ஆனால் தமிழ் தேசியம் என்று கூறும்போது, வேறு பல தேசியங்கள் உள்ளன என்பதும், அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டவை என்பதும், தமிழ் தேசியம் என்பதற்குத் தனியான சில இலக்கணம் உண்டு என்பதும், அதுபோலவே தனியான சில இலக்கணம் காரணமாகவே தனித்தனி தேசியம் ஏற்படுகிறது என்பதும், ஒப்புக்கொள்ளப்படுகிறது. அவ்வித மெனின் தமிழ் தேசியத்தை, ஆந்திர தேசியத்திலிருந்து, கருநாடக தேசியத்திலிருந்து, கேரள தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை யாவை? மொழி ஒன்றுதான் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், மொழிவளம் அறிந்தவர்கள் கூறுவதை, என்னைவிட அவர்கள் எந்தவகையில் பெரியவர்கள் என்று கேட்டுவிடாமல், இந்தத் துறைவரையிலாவது அவர்கள் நம்மைவிட வல்லவர்கள், கருத்தளிக்கத்தக்கவர்கள் என்பதை யாவது ஒப்புக்கொண்டால், அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் - நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.

நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது.

இதோ அந்த விளக்கம்:

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
தாய் தல்லி தாய் தள்ளே
தகப்பன் தன்றி தந்தை அச்சன்
அண்ணன் அன்ன அண்ண சேட்டான்
தம்பி தம்புடு தம்ம அனுசன்
கணவன் மொகுடு கெண்ட பர்த்தா
மகன் குமாரடு மகனு ஆண்குட்டி
பாட்டன் தாத தாத மூப்பன்
உடல் ஒள்ளு மய்யி தேகம்
மனைவி பெண்ட்லாழு எண்டத்தி பாரியா
மகள் குமாரத்தி மகளு பெண்குட்டி
அக்காள் அக்க அக்க சேட்டச்சி
மாமன் மாம மாவ அம்மாவன்
மருமகன் அல்லுடு அளிய மருமான்
பாட்டி அவ்வ தாத்தி முத்தி
எது எதி எது எது
அது அதி அது அது
இது இதி இது இது
இங்கே இக்கட இல்லி இவடே
அங்கே அக்கட அல்லி அவடே
எங்கே எக்கட எல்லி எவடே
இப்போது இப்புடு ஈவாக இப்போள்
அப்போது அப்புடு ஆவாக அப்போள்
எப்போது எப்புடு ஏவாக எப்போள்
சிறிய சின்ன சிக்க சிறிய
பெரிய பெத்த தொட்ட வலிய
நெருப்பு நிப்பு பெங்கி தீ
மழை வான மளெ மழ
கொடு ஈய் கொடு கொடு
இரவு ராத்தி ராத்திரி ராத்திரி
பகல் பகலு அகலு பகல்
யார் எவுரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
சோறு அன்ன ஊண்ட ஊணு
சேலை சீரா சேலை முண்டு
நீர் நீள்ளு நிறு வெள்ளம்
கண்ணு கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
காது செவ்வு கிரி செவி
வாய் நோரு பாயி வாயி
தலை தல தலெ தலை
வா ரா பா வரி
பசு ஆவு அசுவு பசு
எருது எத்து எத்து காள
சொல்லு செப்பு ஹேளு பர

இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் - மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் - வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?

"ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.'' இனிப் பெரியார் அவர்கள், "தமிழ் நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு' என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ் நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.

"திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?''

என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகிய வர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.