அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இவனே தமிழ் மறவன்!
3

"தாயே! யார் பெற்ற பிள்ளையானாலும் அவரிடம் பரிவு காட்டும் பண்பின் திருஉருவாகத் தோற்றமளிக்கிறீர்கள்; அதனால் தாயே! என்று அழைத்தேன். . . . .''

"மகனே! பழச்சாற்றிலே பூச்சி விழுந்துவிட்டதுபோல, ஏன் உன் பாச உணர்ச்சியில், வேற்றுமை எண்ணத்தைக் கலந்து விடுகிறாய். தாயே என்று அழைத்தாய்; மகிழ்ச்சி; காரணம் தேடி, அந்தக் கனிவின் தரத்தைக் குறைத்துவிடாதே!''

"மன்னித்துவிடுங்கள், அம்மா! மகன், தாயின் மேலான குணம் முழுவதையும் பெற்றுவிட முடிகிறதா! அதனால் என் பேச்சிலே தேவையற்றது கலந்துவிட்டது. தாயே! களைத்திருக்கிறீர்கள். . . .''

"கடு வழி நடந்து வந்ததால், மகனே!''

"நீண்ட பயணமோ, அம்மா!''

"இலக்கு இருக்கும் இடம் வரையில், பயணம் நீண்டுதானே தீரவேண்டும், மகனே!''

"நெடுந்தொலைவு - எனினும் இலக்கு, பளிச்சிட்டுத் தெரிகிறது தங்களுக்கு''

"இதிலென்ன வியப்பு! வட்டமிடும் பறவைகளுக்கு, நெடுந் தொலைவிலுள்ள பழமுதிர் சோலைகளும், பளிங்கு நீரோடை களும் தெரிகின்றனவே! ஆதவன் இருக்கும் இடம் எங்கே? அவன் அன்புக்கரம்பட்டு, மலரும் தாமரை இருக்கும் இடம் எங்கே? இலக்கு அடையப் பயணம்! இதில் தொலைவு - நெடுந்தொலைவு என்ற பேச்சு ஏது? பொருளற்ற பேச்சாகுமே!!''

"தாயே! கடு வழி என்றீர்கள்?''

"ஆமப்பா! அமைந்த பாதை அல்லவே - அதனால்தான் என் நடையே, தேய்ந்த பாதையில் அல்ல; நான் நடந்து நடந்து தான், பாதையே அமைகிறது. உள்ள வலிவு, அதுதான்.''

"போதுமான வலிவு இல்லை என்று தெரிந்ததும். . .?''

"கடினமான காரியத்தில் ஈடுபடுகிறேனே என்கிறாயா? மகனே! என் வலிவு குறைவாக இருப்பதற்கு நான் எவர்மீது நொந்துகொள்ளமுடியும்? வெட்டுக்கிளியும் வேங்கையும், வலிவிலே ஒன்றாகா! எனினும் இரண்டும் பாயத்தான் செய்கின்றன!! மேலும், மகனே! இந்த வலிவும் பாழ்படா முன்பு, பயணத்தை மேற்கொள்ளவேண்டுமல்லவா? கால்கள் வலிவிழந்தன; கண்ணொளி இருக்கிறது, அதனையும் இழந்தபிறகு, பயணம் நடத்த இயலுமா? ஆகவேதான், இந்தப் பயணம். நிலைபற்றிய கவலையற்று, இந்தப் பயணம். மற்றொன்றுமுண்டு, மகனே! வலிவற்ற நான், பயணம் நடத்தக் காணும்போது, வலிவுற்றவர்கள் துணிவு பெறுவர்; இலக்கினை அடைவர் அன்றோ! என் பயணம், பயணத்தின் தேவையைக் காட்டினாலே போதும், நான் திருப்தி அடைவேன்; என் தள்ளாடும் நடை, வேகமான நடைபோட வல்லவர்களுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டாலும் போதும், நான் களிப்படைவேன்.''

"இலக்கு நோக்கி நடக்கவேண்டுமே, தாயே! பயணம் நடத்த வலிவு இருக்கலாம்; நிரம்ப! ஆனால், இலக்குத் தெரியவேண்டு மல்லவா?''

"எனக்குத் தெரிகிறதே?''

"மற்றவர்களுக்கு?''

"மகனே! எனக்கே தெரிகிறதே என்று சொல்லியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். குறை மதியுடைய எனக்கே, குறிக்கோள் தெரிகிறபோது, மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? மரத்தை வண்டு துளைத்திடக்காணும் விறகுவெட்டிக்கு, காரியம் எளிது என்ற எண்ணம்தானே எழும்?''

"உண்மைதான், தாயே! முற்றிலும் உண்மை! ஆனால் இது சொல்லளவில்தானே இருக்கிறது. பயணம் நடத்தப் பலசாலிகள் முன்வரக் காணோமே. இலக்குக் கண்டவர்கள் எங்கே? இல்லையே!''

"பலசாலிகள் தங்கள் பலத்தைக்கொண்டு வேறு காரியத்தை நடத்த முனைகிறார்கள். காற்றிலே பறந்திடும் பஞ்சுத் துண்டுக்கு, இலக்கு ஏன்? பறவைகளுக்குத்தானே தேவை! வலிவுள்ள பலரும், காற்றிடைப் பஞ்சாக உள்ளனர்; இலக்குத் தேடும் நிலையில் இல்லை.''

"அப்படியானால். . . . .''

"இலக்கு நோக்கிச் சென்றிடும் பறவையின் இறக்கையிலே பஞ்சுத் துண்டு ஒட்டிக்கொண்டால்? இலக்குக்கு எடுத்துச் செல்லப்படுகிறது அல்லவா? அதுபோன்றே, பயணம் நடாத்து பவருடன் உறவுகொண்டிடுவோர் இலக்குக் காண்கின்றனர்.''

"விளக்கம் அளிக்கிறீர்களா? உள்ள நிலைமையைக் கூறுகிறீர்களா?''

"விளக்கம் என்பதே, உள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதுதானே!''

"அப்படியானால், பயணத்திலே ஈடுபடப் பலர் உளர் என்கிறீர்கள்?''

"அதில் என்ன ஐயப்பாடு? பயணத்தின்போதுதானே, மகனே! உன்னைப் பெற்றேன். மேலும், பயணத்திலே என்னுடன் துணை எவரும் இல்லை என்று எப்படிக் கூறலாம். உறுதி, துணை நிற்கிறது! நம்பிக்கையின் நட்பு இருக்கிறது!''

"உடலிலே புண் இருக்கத்தான் காண்கிறேன்.''

"முத்து இருக்கும் இடத்திலேயே நத்தைகளும் உள்ளன! நீ, நத்தையை மட்டும் பார்க்கிறாய்.''

"புண்ணுக்கான காரணம்?''

"ஒவ்வொரு புண்ணும், மகனே! ஒவ்வொரு கதை சொல்லும், ஒவ்வொரு புள்ளினமும் ஒவ்வோர் இசைபாடுவது போல! மழையாகப் பெய்யும்போது ஒருவித ஓசை; காட்டாறாகும்போது வேறோர் இரைச்சல்; அருவியாகும்போது மற்றோர் வகையான ஒலி உண்டல்லவா? எல்லா இடத்திலும் காண்பது தண்ணீரைத்தான் - எனினும் வெவ்வேறு ஒலியன்றோ கேட்கிறோம். மகனே! காற்றினில் ஆடை விலகுகிறது, கொடிகள் அறுபடுகின்றன, செடிகள் சிதறுகின்றன, மரங்கள் பெயர்ந்து விடுகின்றன - சிலவேளைகளிலே அதே காற்று, பூங்கொடியைப் புள்ளினம் ஆடும் ஊஞ்சலாக்கி மகிழவைக்கிறது! வெப்ப நாட்களில், விருப்பம்; குளிர் நாட்களிலே, அருவருப்பு, காற்றின்மீது குறையா? நிலைமை நினைப்புக்குக் காரணம்; நிலைமையை ஏற்படுத்தியது, காற்றா? அல்லவே! புண், எனினும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் "காப்பியம்' ஏற்பட்டுவிடுகிறது. வழியிலே புலியின் தாக்குதலால் புண் ஏற்பட்டுவிட்ட ஒரு யானையைக் கண்டேன். ஏறத்தாழ ஒத்த வலிவுள்ளவைகள் போரிட்டன என்பது விளங்கிற்று! கசையடியால் ஏற்பட்ட புண்ணுக்கும், களத்திலே பெற்ற புண்ணுக்கும், பொருள், தன்மை, தரம், எல்லாவற்றிலும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா? புலவர்கள் புகழ்ந்திடுவர், களத்திலேற்பட்ட புண் காணின். மகனே! வழியிலே நான், எலும்புகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்தேன்; பிலம் நோக்கிச் செல்லும் பாம்பினையும், அதைக் கொத்த வரும் பெரும் பறவையினையும் கண்டேன்! பறவை களைப் பிடிக்க விரிக்கப்பட்டிருந்த கண்ணிகளையும் கண்டேன். குஞ்சுக்கு உணவூட்டும் பறவையினையும் கண்டேன். பயந்து பாய்ந்தோடிய முயலையும் பார்த்தேன். எதனையோ துரத்திக் கொண்டு ஓடிய ஓநாயையும் பார்த்தேன். இரத்தத் துளிகளையும் பார்த்தேன்; அம்புகளையும் கண்டேன். வாழ்வுக்காக உயிரினம் நடாத்திவரும் போராட்டத்தின் பல்வேறு வகையான சின்னங்களையும் பார்த்தேன். தாலாட்டுப் பாடக் கேட்டேன்; ஓலக் குரலும் கேட்டது. பழம் கண்டேன், உதிர்ந்த பிஞ்சுகளையும் பார்த்தேன்; சதுப்பு நிலமும் கண்டேன்; வெடித்துக் கிடந்த வயல்களையும் பார்த்தேன், பட்ட மரமும் கண்டேன்! துளிர்த்திடும் செடிகளையும் கண்டேன்; பச்சிலையும் பார்த்தேன், சருகும் கண்டேன்! நெருப்பைக் கண்டேன், நீரும் கண்டேன். பிறப்பு, இறப்பு எனும் இருநிலைகளையும் உணர்ந்தேன்; வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பெரும் முயற்சியும் விளங்கிற்று.''

"தாயே! இவைகளைக் கண்டு, அதிர்ச்சி ஏற்பட வில்லையோ? அச்சம் மூண்டிருக்கவேண்டுமே!''

"ஆமடா மகனே! எங்கும் அழிவு நேரிட்டிருப்பது மட்டும் தெரிந்தால், அச்சம், குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். எனினும் மடப்பிடி இழந்த களிறு கண்டேன்; அது தன் கன்றுகளுடன் விளையாடிடக் கண்டேன். விதைகள் முளைவிடக் கண்டேன்; உரித்துப் போடப்பட்டிருந்த பாம்பின் சட்டையைக் கண்டேன். மரப்பொந்துகளிலே முட்டைகளைக் கண்டேன்; அரும்புகளைக் கண்டேன். அச்சம் அகன்றது. அழிவுக்குப் பிறகும், உயிர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்தேன். பிறப்பும் இறப்பும் மாறிமாறி நடந்திடும் நிகழ்ச்சிகள் என்பதை உணர்ந்தேன். அழிவை எதிர்த்து நிற்கும் ஆற்றல், எங்கும் தென்பட்டது, துள்ளிடும் மீனினம், வட்டமிடும் பறவை, வாட்டத்துடன் காத்துக்கிடக்கும் கொக்கு, இவை கண்டேன். கண்ணியும் வலையும் கண்டதுமட்டுமா, குட்டியும் குஞ்சும்கூடத்தானே பார்த்தேன். எனவே, அழிவுக்கும் அழிவு இருப்பதை அறிந்தேன். வீழும் அலை எழக் காண்கிறோம்; எழும் அலை மடியக் காண்கிறோமல்லவா? அழிவு வெற்றி பெற்றுவிட முடியாது என்ற அரிய பாடமன்றோ, அந்தக் காட்சி? பல் போனவனும் பல் முளைக்காப் பாலகனும் காண்கிறோம்; நோயாளியும் இருக்கிறான், மருத்துவனும் இருக்கிறான், இவ்வளவு ஏன். மகனே! சுடலையில் தீ காண்கிறோம்; சுள்ளிகளை எரியவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு வறியவர்கள் இருந்திடக் காண்கிறோம். சங்கொலியும், சதங்கை ஒலியும் உள்ளன! அழிவுக்கு வெற்றி கிட்டாது. அதன் அகன்ற வாயில் அனைத்துமே விழ்ந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை. ஓயாமல்தான் வேலை செய்கிறது, அழிவு - எனினும், அப்பாடா! என் வேலை முடிந்தது என்று கூறி உட்கார முடிவதில்லையே! செடியும், கொடியும், ஊர்வனவும், பறப்பனவும், பாய்வனவும், பிறவும், ஆறறிவினவும், புதிது புதிதாகக் கிளம்பி, அழிவை, வம்புக்கு இழுத்தவண்ணம் இருக்கின்றன. மகனே! பயணம் தந்த பாடம் இது. வாழ்க்கை நிலையாமை என்கிறார்கள்; அழிவு அதுபோன்றேதான் இருக்கிறது; செத்துக்கிடக்கும் மிருகத்திலிருந்து, புழுக்கள் உயிர்பெற்றுக் கிளம்புகின்றன; அழுகிப் போனவைகள், நெளியும் புழுக்களுக்குத் தொட்டிலாகின்றன. பாவம்! அழிவு, அலுத்துப் போய்விடுகின்றது!''

"ஆயினும், அழிவு கேட்டினைத்தானே செய்கிறது; மரப்பொந்தோ மாளிகையோ - எங்கு அழிவு நுழையினும், அலறல், கதறல் கிளம்புகின்றன.''

"உண்மைதான் மகனே! ஆயினும் முழு உண்மை அல்ல!தாயை இழந்த மான் குட்டிகள், அலறித் துடிக்கின்றன! சிங்கக் குட்டிகளோ, மானிறைச்சியைத் தின்று ஆடுகின்றன; சிங்கம் கண்டு மகிழ்கிறது; குகையிலே குதூகலம்; புதரருகே புலம்பல்!''

"அவ்விதமானால், தாயே! உலகமே, அழிவுச் சக்தியும் அதனை மீறி எழும் சக்தியும் மோதிக்கொள்ளும் போர்க்களம் தானோ?''

"அவ்விதமும் கொள்ளலாம்.''

"அவ்விதமெனின், உலகிலே மாற்றங்கள், திருத்தங்கள், திருப்பங்கள் தேவை என்று முயன்றிடக்கூடத் தேவையில்லை அல்லவா? ஆனால் முயற்சி நடந்தவண்ணம் இருக்கக் காண்கிறோமே.''

"இயற்கையிலே அந்த முயற்சி இருக்கிறது. நம்மில் சிலர் அதற்குத் துணைநிற்கிறோம்; ஊக்கமளிக்கிறோம்; உருவம் அளிக்கிறோம். விண்ணிடை மேகத்திரள் காண்கிறோமே, மகனே! என்னென்ன விந்தையான வடிவங்கள் - வண்ணங்கள் உள்ளன. எனினும் அவை நொடிக்குநொடி, மாற்றம் பெறக் காண்கிறோம். கம்பளம் நிறைந்த வெண்ணிறச் செம்மறி ஆட்டு மந்தை மேய்வதுபோலத் தெரிகிறது சிலவேளை. பிறகு பொங்கி நுரைவழியும் வெண்ணிற நீர்நிலையம் போலாகிடக் காண்கிறோம். கொட்டிவைத்த பஞ்சுபோல் தெரிகிறது சிலநேரம். அந்தக்கோலம் வண்ணமும் மாறுகிறது. வடிவமும் மாறுகிறது. மாற்ற, நாமா முயற்சிக்கிறோம்?''

"தானாகவும் ஏற்படுவதில்லையே, அந்த மாற்றங்கள். காற்றின் காரணமாகவன்றோ ஏற்படுகின்றன அந்த மாற்றங்கள்.'' ஆமப்பா! காற்றுப்போன்ற நிலையிலேயே உள்ளது உணர்ச்சி. காற்றே இல்லை என்றால் ஒரே புழுக்கம்! காற்று அதிகமானால் எதுவும் சிதறும். அடிபெயரும்! எனவே அதனை - உணர்ச்சியை முறைப்படுத்துதல் வேண்டும். அதனை முறைப் படுத்துவதே, அறிவாளர் கடன். உணர்ச்சியை அடியோடு வேண்டாமென்று கூறி ஒழித்திடுவதும் நல்லது அல்ல; செய்கிற காரியத்தைத்தானே செய்யட்டும் என்று உணர்ச்சியைக் கட்டுப் படுத்தாது விட்டுவிடுவதும் ஆபத்து. முறைப்படுத்துவதுதான் முறை. முறைப்படுத்த வேண்டுமெனின், ஒரு இலக்கு இருத்தல் வேண்டும். அந்த இலக்கு அறிந்த பிறகு நடத்தப்படுவதே பயணம். அந்தப் பயணம், தொடங்கியபின் நிறுத்துவது என்பது இல்லை. முழுப்பயணம் முடியுமுன்பு வீழ்ந்துபடுவதுண்டு; பயணத்தை இடையிலே நிறுத்தி வாழ்வார், வாழ்வார் அல்லர்.'' "பயணம் இலக்கு நோக்கி என்று கூறிக்கொண்டு, உடல் தேய்ந்து, புண்கொண்டு உழல்வதும் ஒரு வாழ்க்கையா! - என்று பலர் எண்ணுகின்றனர்.''

"ஆமப்பா! அதனால்தான், வாழ்க்கை இன்பத்திலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாமல், இலட்சியபுரி நோக்கிப் பயணம் நடத்தும் சிலருக்கு, தொல்லையும் அதிகம்; அதுபோன்றே பொறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்தச் சிலரும், சீலர்களாகக் கடைசிவரையில் இருக்க இயலாமல் போய்விடவும் காண் கிறோம். என்போன்றார் இறுதி மூச்சு உள்ளவரையில் பயணத்தை நிறுத்தப்போவதில்லை. இதோ மகனே! இந்தப் புண், இதைச் சொன்னதால், ஏற்பட்டதுதான்.''

"யாரம்மா தாக்கினார்கள்?''

"தாக்கமட்டுமே தெரிந்தவர்கள்!''

"காரணம் என்ன? கடுங்கோபமா?''

"கடுங்கோபம்தான்! பயணம் வேண்டாம்! பழம்பறித் துண்போம், அதோ சோலை என்றனர். இந்தச் சோலையினை விடக் கவர்ச்சிகரமானது, அதோ அங்கு நாம் சேரவேண்டிய இடத்திலே இருக்கிறது; அங்கு கிடைத்திடும் கனி, சுவை மிக்கது. அங்கு செல்வோம், என்றேன். கண் எதிரே தெரிந்திடும் கனியை விட்டுவிட்டு, உன் கற்பனைத் தோட்டம் காண வரவேண்டுமா? நானென்ன ஏமாளியோ! போ! போ! நான் வரமுடியாது. இந்தப் பயணமே பைத்தியக்காரத்தனம் என்று கூறி, நான் அளித்த விளக்கத்தை விதண்டாவாதமென்றுகொண்டு, என்னுடன் வம்புக்கு நின்று தாக்கினான்.''