அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இவனே தமிழ் மறவன்!
4

"தடுத்திட எவரும் வரவில்லையோ தாயே!''

"பலர்! பரிவுகொண்டவர் பலர்! பாய்ந்தனர், என்னைத் தாக்கினவனைத் தாக்க! இடையிலே நான் நின்றேன். இருபுற மிருந்தும் எனக்கு இடி! அடி! இதோ, இந்தப் புண், அதன் காரணமாக ஏற்பட்டதுதான்! வேண்டாமடா மகனே! என்பேன்; விடுங்கள் அம்மா கரத்தை; இக் கயவன் தங்களைக் கடுமொழி யால் தாக்கிடக் கேட்டு வாளாயிருக்க, நாங்களென்ன, செவிடரோ, ஊமையரோ அல்லது செய்வதறியாத பேதையரோ? என்று கொதித்துக் கூறிக் கிளம்பினர்; கரம் பற்றினேன் தடுக்க; உதறித் தள்ளினர்; சுழன்று கீழே வீழ்ந்தேன்; கீழே பாறை; புண் ஏற்பட்டது.''

"எவ்வளவு சாதாரணமாகக் கூறிவிட்டீர்களம்மா, இந்த அநியாயச் செயலை.''

"மகனே! தானிட்ட முட்டையை அடைகாக்கும் பறவை, கதகதப்புக்காக, செத்தையையும் குப்பையையும் எடுத்துச் சென்று குவிக்கும்போது, தன் கால்பட்டே முட்டை கீழே வீழ்ந்து, உடைபட்டுப் போய்விடுகிறது; கண்டதுண்டோ? நான் கண்டிருக்கிறேன். அதுபோலவே மகனே! என்னிடம் கொண்ட அன்பு காரணமாகவே எனக்குத் துன்பம் இழைக்கப்பட்டு விடுவதை அவர்கள் அறிவதில்லை. தாக்கத் துணியலாமா தாயை! - என்று கிளம்பினர். . . . .''

"தடுத்து நிறுத்தத் தாங்கள் கூறியது என்னவோ?''

"அவர்கள் கேட்டு அதன்படி நடக்காவிட்டாலும், மகனே! நீ கேட்டு அதன்படி நட! நான் சொன்னேன். மானிடமிருந்து கஸ்தூரியும், மாட்டிடமிருந்து கோரோஜனமும், யானையிட மிருந்து தந்தமும் எடுத்திட விரும்புவோர், அவைதமைத் துன்புறுத்துவர்! அதுபோல, என் இரத்தத் துளிகளைத் தேன் துளிகளாகக் கொள்ளவிரும்புவோர் இருக்கலாம், சிலர்; அவர்தம் இச்சை அதுவானால், என் குருதி குடித்து மகிழட்டும்; அவர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நான் தரக்கூடிய வாய்ப்பை என்னிடமிருந்து பறித்துவிடலாமா? வெட்டட்டும், குத்தட்டும், கொல்லட்டும், வெந்தழலிலிட்டுக் கருக்கட்டும்; நீறு ஆக்கிடட்டும்; தடுத்திடாதீர்; என் பொருட்டுக் கண்ணீர் சிந்துவீர்களல்லவா? அதுபோதும் எனக்கு. உமக்கு மட்டுமா, நான் மகிழ்ச்சி அளித்தபடி இருக்கவேண்டும். அவர்களுக்கும் கிட்டட்டுமே களிப்பு. உழைத்து உம்மை மகிழ்விக்கிறேன் - செத்து அவர்கள் சிந்தை குளிரச் செய்ய, வழி கிடைக்கும்போது, தடுத்திடலாமா? இவள் போனால் இலட்சியமே ஒழிந்துபோகும் என்று கருதும் அவர்களும், நம்பிடும் பேதைகளும், நான் போன பிறகும் இலட்சியம் சாகவில்லை என்பதை அறியும் அரிய வாய்ப்பல்லவோ, என் சாவு! பொன்னான வாய்ப்பு! அதைப் போக்கடிக்கலாமா? உழைத்தாள் உத்தமி! அவள் ஆற்றல் மிக்கவள் என்பது மட்டுமல்ல, ஆற்றலுள்ளவர்களாகப் பலர் அவளால் ஆக்கப்பட்டனர் என்பதை அவனி அறிவதுதானே. எனக்கு உண்மையான பெருமை தரும்! அந்தப் பெருமை எனக்கு, எப்போது கிடைக்கும்? இறந்தால். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ? என்று எண்ணி, என்னைக் கொன்று பெருமையைத் தேடித்தர வருகிறார்கள்; அவர்களைத் தடுக்கலாமா? - என்று சொன்னேன்.''

"நன்றாகச் சொன்னீர்களம்மா இந்த நெஞ்சு நோகச் செய்திடும் பேச்சினை! தங்களைத் தருக்கர் கொல்ல வருவார் களாம்; மற்றவர்கள் மரக்கட்டைகளாகிக் கிடக்கவேண்டுமாம். பேதையும் கொள்ளான் இந்தப் போக்கு!''

"பேரறிவு வேண்டும், இந்தப் பொறுப்பினை உணர. இயல்பாக எழக்கூடிய கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தெரியவேண்டும். சாவது என்பதற்கும் கொல்லப்படுவது என்பதற்கும் உள்ள மாறுபாடும், அந்த மாறுபாட்டிலே காணக் கிடைக்கும் மாண்பும் அறியவேண்டும்.''

"பாசம், பற்று, இவை வேண்டாம் என்கிறீரா?''

"சொல்வேனா அப்படி! சொல்ல நானென்ன, வெறும் சோற்றாலடித்த பிண்டமா? சொரணையற்ற ஜென்மமா? பற்றும் பாசமும் வேண்டும் - பொங்கி வழியவேண்டும். ஆனால், அதேபோது, பாசம் காரணமாக என்னைக் கொடியவர் களிடமிருந்து தப்பவைப்பதாக எண்ணிக்கொண்டு, எனக்குக் கிடைக்கக்கூடிய, மிகப் பெரிய, நிலையான, பலனளிக்கத்தக்க பேற்றினைப் பறித்துவிடலாகாதல்லவா? நான் இருந்துகொண்டு, எதை எதையோ கிளறிக்கொண்டிருக்கிறேன் என்று என்மீது பழி சுமத்தப்படுகிறதே - வீணாக அது மறைவது எப்படி? மறுப்பு உரைப்பதாலா? விளக்கம் தருவதாலா? வாதம் புரிவதாலா? போதாது, மகனே! போதவே போதாது. நான் மரித்த பிறகும், நான் ஈடுபட்டுள்ள காரியம், எப்போதும்போல - ஏன். . . இப்போதிருப்பதைவிட வேகமாக, விறுவிறுப்பாக நடக்குமானால், இப்போது என்மீது உள்ள பழி துடைக்கப்பட்டுப் போய்விடும் அல்லவா? என்னை, மற்றவர் சாகடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், நான் செய்துவரும் வேலையைத் தொடர்ந்து செய்ய, மனமில்லாதவர்கள், திறம் போதாதவர்கள், பொறுப்பு மேற்கொள்ள மறுப்பவர்கள் என்று பொருள்பட்டு விடுமே! அதுவும் கூடாதல்லவா?''

"அவ்விதமானால். . .''

"என்னை இகழ்வார்கள்; உங்களுக்கு எரிச்சல் ஏற்படவே கூடாது. என்மீது பழி சுமத்துவார்கள்; நீங்கள் பதறவே கூடாது. என்னைத் தாக்குவார்கள்; நீங்கள் பதிலடிகொடுக்க முனையக் கூடாது. என்னைக் கொல்வார்கள்; நீங்கள் கோலோ வாளோ தூக்கக்கூடாது! என் வேலை உம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று. அந்தச் சம்பவத்துக்குப் பொருள்கொள்ள வேண்டும்; புதிய பொறுப்பு உமக்கு வந்துளது என்பதை உணரவேண்டும்; நீங்கள் நானாக வேண்டும்.''

"இதை எந்த மகனம்மா ஏற்றுக்கொள்வான்?''

"தாயின் தகுதியை அறியும் மகன், நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.'' "தாயை, மறுக்கும் மகன் கிளம்பும் நாட்களம்மா, இது.''

"தாழையைச் சுற்றிலும் முள் உண்டு - ஆயினும் ஒரே செடி தருவதுதான் - பூவும் முள்ளும்!! மேலும், ஒருவர் இயற்கையான நீதியைப் பழிக்கும்போதுதான், இயற்கை நீதிக்கு எத்துணை பேர்களுடைய பேராதரவு இருக்கிறது என்பது தெரிகிறது.''

"அக்ரமக்காரர்களுக்கு ஆதரவு தருவதை ஒரு தத்துவமே ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே, அம்மா! பொறுமை வேண்டும் - ஆனால் இந்தத் தன்மையிலா? இந்த அளவிலா?''

"மாற்றுக் குறையாததுதானப்பா, தங்கம்! நற்குணமும் அதுபோலத்தான்; குறைவற இருந்தால்தான், நற்குணம்; கொஞ்ச நஞ்சம், துண்டு துணுக்கு என்ற முறையிலே நற்குணம் இருத்தல் முறையாகாது. அகழ்வாரைப் பொறுத்திடும் பூமிபோல, இகழ்வாரைப் பொறுதிடவேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்; அறிவாயல்லவா?''

"ஆமாமாம், போங்கள்! நஞ்சு கொடுத்தால்கூடப் பருகிடச் சொல்கிறார்; முகம் கோணாமல் அந்த வள்ளுவர்.'' "பருகினாரே, சாக்ரட்டீஸ், படித்ததில்லையா நீ?''

"பொல்லாங்கு செய்வோருக்குப் புதுத் தெம்பும், துணிவும் பிறந்துவிடுமே! தாங்கள் கூறும் போக்கினை அனைவரும் மேற்கொண்டுவிட்டால்,''

"இல்லை, மகனே! இல்லை! இலட்சியபுரிப் பயணம் மேற்கொள்வோர் பெறவேண்டிய நெஞ்சு உரம் ஏற்பட்டுவிடும், இந்தப் போக்கினை மேற்கொண்டால். ஆனால், அதற்கு, முதலிலே இலட்சியத்திலே, அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - கள் பொங்கக் காண்கிறோம்; பாலிலும் நுரை பொங்கிடக் காண்கிறோம்; இரண்டும் ஒன்றல்லவே. அதுபோலத்தான், நம்பிக்கையை, பொங்கும், பொறி பொறிக்கும், பேச்சினால் வெளிப்படுத்துவது மட்டும் போதாது. சிறு நரியைப் பிடித்து அடைத்தால், கூண்டுக்குள்ளே, வேகவேகமாக ஓடும், பாயும், நடக்கும். சிங்கமோ அங்குகூட, கெம்பீர நடைபோடும் பார்த்திருக்கிறாயா? கூண்டு திறக்கப்பட்டால், நரி பயந்து ஓடும், சிங்கமோ, காண்போரை ஓடச்செய்யும். இலட்சிய முழக்கம், உரத்த குரலில், தடித்த வார்த்தைகளில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கிலே இருப்பதுண்டு. ஆனால், அது நிலைத்து நிற்கும் தன்மைக்குப் பெரும்பாலும் வழிகோலுவதில்லை. திடீரென, முறுக்கி, முடிபோடாதுவிட்ட கயிறு பிரிந்து போவதுபோல், இலட்சிய நம்பிக்கை நலிந்து போகும்.''

"ஆமம்மா! பிறகு, அந்த இலட்சியத்தையே, பழிக்கவும் செய்கிறார்கள்.''

"இல்லையே! தம்மையே அல்லவா இகழ்ந்துகொள் கிறார்கள். நான் ஓர் ஏமாளி! இதனைப்போய் இதுநாள்வரையில் இலட்சியம் என்று கொண்டிருந்தேன். நான் ஓர் அகம்பாவி! நான் கொண்ட நம்பிக்கையிலே எனக்கே ஒரு நிலையான தன்மை ஏற்படுமுன்பு, ஊருக்கு அறிவுரை கூறும் தகுதி பெற்று விட்டதாக எண்ணிக்கொண்டேன். நானோர் எத்தன்! அந்த இலட்சியத்திலே எனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட்ட பிறகும், மூடிமறைத்து வைத்திருந்தேன். நான் குற்றவாளி! பிழையான ஒரு இலட்சியத்திலே ஊரார் நம்பிக்கை கொள்ளும்படி செய்து விட்டேன். - என்றெல்லாம் அவர்கள் தங்களைத் தாங்களே அல்லவா, இகழ்ந்துகொள்கிறார்கள். அப்பா அம்மாவைக் கலியாணம் செய்துகொண்டபோது, எனக்கு ஏனப்பா சொல்லவே இல்லை! - என்று ஒரு மகன் கேட்கமுடியுமா? இந்த நாட்டில்!! அந்த விந்தையினும் விந்தை, இதுநாள்வரை கொண்டிருந்த இலட்சியம் இலட்சியம் அல்ல என்று பிறிதோர் நாள் பேசுவது. இப்போது, பேரறிவு திடீரென வந்துவிட்டது என்பதற்கு என்ன உறுதி காட்ட இயலும்? மீண்டும், உரத்த குரல், தடித்த சொற்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கன்றி. ஆகவே மகனே! வேகமான நம்பிக்கை மட்டும் போதாது - அழுத்தமான நம்பிக்கை வேண்டும் - அப்போதுதான் காற்றடிக்கும் பக்கம் கருத்து அலையும் நிலை ஏற்படாது. மகனே! மண்ணையே கொண்டுதான் செங்கற்களாக்குகிறார்கள் - எப்படி? அழுத்தமாக்கி! சூளையிலிட்டு!! மண்ணை இறுக்கி அழுத்தம் ஏற்றுகிறார்கள் - அந்த அழுத்தம் குறையாமல் நிலைத்து இருக்க, சூளை போடுகிறார்கள். இலட்சிய அழுத்தம் தரமானது ஆக, கஷ்ட நஷ்டமெனும் தீயிலே இடப்பட்டாக வேண்டும். வெறும் மண், மழையால் கரையும் - அதே மண், அழுத்தம் ஏற்பட்ட செங்கற்களானால், மழையைச் சட்டை செய்வதில்லை.''

"பக்குவம் ஏற்படாததால் வந்த தொல்லை என்கிறீர்களா தாயே!''

"பெரும்பாலும் அப்படித்தான். சில வேளைகளிலே நெஞ்சறிந்து பொய் சொல்வதுமுண்டு.''

"இலட்சியத்தைவிட்டு விலகுபவர்கள், தாங்கள் கூறுவதைப் பார்த்தால், பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்டாலோ, கோபமல்லவா மூள்கிறது? அந்த முறையிலல்லவா, இலட்சியத்தை இகழ் கிறார்கள்.''

"இகழட்டுமே, மகனே! இலட்சியபுரிப் பயணத்திலே இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும். நெடுநேரம் உன் நேரத்தை வீணாக்கிவிட்டேன். எங்கு கிளம்பினாயோ! என்ன வேலையோ? ஓவியம் தீட்டுபவனோ! உயர் கவிதை இயற்றுபவனோ! உனக்கு இருக்கும் அவசர அலுவலில் குறுக்கிட்டு விட்டேன். . . . .''

"தாயே! பிழைத்த என்னைச் சாகடிக்காதே! வலிவு இருப்பதற்குள் பயணம் நடத்தியாக வேண்டும் என்பது உமது நோக்கம். நமது நாடு சீர்கேடு அடைந்திருப்பதைக் கண்டும் களிநடமாடுவது என் போக்காக இருக்கவேண்டுமோ! அம்மா! புறப்படுங்கள்.'' "போய்வரவா, மகனே!''

"புறப்படுங்கள், தாயே! தங்கள் கால்பட்ட மண்ணை என் நெற்றிக்கு அணிந்துகொண்டு, இதோ, உடன் வருகிறேன். விலகினோர், இலட்சியபுரி பயண இலக்கணத்துக்கு விதிவிலக்கு என்போம். வீழ்ந்துபடுவதாயினும், விடுதலைக்கான முயற்சி யிலேயே அது வந்து நேரட்டும். என் தாயுடன் செல்வது என் கடன்! மயிலும் குயிலும் தேடிட ஓடுவோர், மாநிதி பெற்றிட விலகுவோர், மனமருளால் ஒதுங்குவோர் என்பவர்பற்றிய கவலை நமக்கு வேண்டாம். பயணம் நடக்கட்டும், இலட்சியபுரிப் பயணம்.''

"புனிதப் பயணம், மகனே! தாய்த் திருநாடு மீட்கும் தூய தொண்டு, அதில் ஈடுபட்டால், கிடைப்பது என்ன என்பதை என் புண்கள் காட்டுகின்றன. பார்த்தாயல்லவா?''

"புண்களா அவை, தாயே! பூணாபரணம் எதுவும் இதற்கு நிகராகா.''

"மகனே! என்னைவிட்டு விலகும் நிலையும் சிலருக்கு வந்துற்றதே என்று வருத்தப்பட்டேன். துயர் துடைக்க வந்தாய்! துணை நிற்க வந்தாய். நன்றி மகனே! நிரம்ப மகிழ்ச்சி!''

"நான் மட்டும் அல்ல, தாயே! விலகுவோம். விம்முவர்! விலகுவோம், விரிசல் ஏற்படும்! விலகுவோம், பயணம் நின்று விடும்! என்று கூறுவோர் சிலராகவும், சிலர் விலகித் தாயின் சித்தத்தைத் தாக்கிச் சித்திரவதை செய்யும் இந்த நேரத்தில்தான், இதுவரையில் ஈடுபடாது இருந்த பலரும், இனி இலட்சியப் பயணத்தில் தங்களுக்குத் துணையாக வருகின்றனர் என்பதைத் தாயே! கண்டு பெருமைப்படப் போகிறீர்கள். நான் முதல்! பிறர், வந்தவண்ணம்.'' "மகனே! உன் பேச்சே இசைபோல் இனிக்கிறது. பாடவும் வல்லையோ?. . . . . ''

"பாடலொன்று இசைப்பேன், தாயே! பயணம் நடத்தியபடி.''

தம்பி! இந்தவிதமாக உரையாடலொன்று நடப்பதுபோன்ற ஓர் உள் உணர்ச்சி; அதைத் தொடர்ந்து ஒலித்தது உணர்ச்சிமிகு பாடல்:

"தன்னாட்டைத்தான் பெறான் உலகில்
எந்நாட்டானாயினும் இழிந்தவன் தோழி!

முன்நாட்டை ஆண்டவன்
முழுவாழ்வு வாழ்ந்தவன்
தென்னாட்டான் இந்நாளில்
தில்லிக் கடியவன்
என்னேடி தோழி
இழிவில் இழிவன்றோ!

ஒன்றேகுலம் என்றான்
புகழே உயிர் என்றான்
அன்றாடம் சாகின்றான்
தில்லிக்கே ஆட்பட்டான்
நன்றோடி தோழி
நாயினும் கேடானான்!

செந்தமிழ் காத்தான்
திருக்குறளில் ஆர்வத்தான்
இந்தி சுமக்கின்றான்
தில்லிக் கிளிக்கின்றான்
இந்தாடி தோழி!
இவனா தமிழ்மறவன்?

மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல் என்பான்
ஆனதமிழன் இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ?''

தம்பி! குயில் இசை குளிர்ச்சி அளித்தது. மனத்துயர் விலகிற்று. என் கற்பனை உரையாடலில் கலந்துகொண்ட இளைஞன் போன்றார் எங்கெங்கும், திரண்டெழுந்து நிற்கின்றனர் என்ற எண்ணம் தித்திப்பு அளித்தது. இலட்சியபுரி பயணத்துக்கு இடையூறு விளைவிக்கும் முறையில், சிலர் நடந்துகொண்டாலும், இதோ நான் இருக்கிறேன், துணைநிற்க, இலட்சியபுரிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த என்று, எவன் தெரிவிக் கிறானோ, அவனே தமிழ் மறவன்! ஆம்! ஆம்! இதில் ஐயமில்லை! ஏன், தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? யாரையோ தமிழ் மறவன் என்று கூறுகிறேன் என்ற எண்ணத்தாலா? தம்பி! உன்னைத்தான் குறிப்பிடுகிறேன் - இவனே தமிழ் மறவன் என்று.

அண்ணன்,

14-5-61