அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கருத்தோவியம்
1

கனவானின் காசநோயும் பற்பலரின் கருத்துக்களும்
செயலிலே கோணல், சீலம் பற்றிப் பேச்சு !
குற்றம் சுமத்தப் பெற்றவர் உபதேசியாகிறார் !
மக்களின் குறும்புப் பார்வையும் கேலிப் புன்னகையும்.

தம்பி,

சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்; வருகிறாயா? என்ன கேள்வி கேட்கிறேன் பார் ஏமாளித்தனமாக. நான் அழைக்கும் போதெல்லாம், அழைக்கும் இடங்களுக் கெல்லாம் வரத்தவறாத உன்னைப் பார்த்துக் கேட்கிறேனே, வருகிறாயா? என்று. நீ வருகிறாய் என்ற தெம்புதானே என்னையே இயக்கிவைக்கிறது. ஆகவே வருகிறாயா? என்று கேட்டது, கேள்வி வடிவிலே இருக்கிறதே தவிர, ஐயப்பாட்டின் விளைவாக எழுந்துள்ள வினா அல்ல: வா! தம்பி! சில இடங்களைச் சென்று கண்டுவிட்டு வரலாம்.

தங்கமான குணம்! எல்லோராலும் மதிக்கப்படுபவர்! வாணிபத் திறமை கண்டு ஊரே வியந்து பாராட்டுகிறது! ஊர் மக்களின் நலனுக்காக உழைப்பதிலே தனி ஆர்வம்! அவருடைய குணத்துக்கு ஏற்ற பத்தினி! பிள்ளைகள் அவர் கீறிடும் கோட்டைத் தாண்ட மாட்டார்கள், அவ்வளவு அடக்கம், கட்டுப்பாடு, ஒழுக்கம். எந்தக் காரியத்திலே ஈடுபட்டாலும் வெற்றிதான்! வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறவர்! ஆனால், பாவம் அவருக்குத் தீராத காசநோய்!!

தம்பி! பேசினாரே, அவரைப் பார்த்தாயா, "பெரிய புள்ளி', மற்றோர் பெரிய புள்ளியைப் பற்றிப் பரிவுடன் பேசுகிறார். பரிவுக்குக் காரணம் என்ன என்றா கேட்கிறாய். ஏன், சாதாரண - மனிதாபிமானம்! ஒப்புக் கொள்ளமாட்டாயா... சாதாரண மானவர்களுக்குத்தானே மனிதாபிமானம் இருக்கும்; இவர் "பெரியபுள்ளி' யாயிற்றே இவருக்கு வேறு ஏதாவது பெரிய "அபிமானம்' இருக்க வேண்டுமே என்கிறாய்; சரி உன்னிடம் உண்மையை மறைப்பானேன், காசநோய் வந்திருப்பதாகச் சொல்லுகிறாரே, அவர் காசுக்கடை கனகசபை. அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய புள்ளி. அவரிடம் பெரிய "தொகை' கடன் வாங்கி இருப்பவர் இந்தப் "பெரியபுள்ளி' அரிய நாயகம்.

கடன் பட்டிருக்கும் ஆசாமிக்குக் கசப்பு அல்லவா இருக்கும் : பரிவுடன் பேசுகிறாரே ; காரணம் என்ன என்று கேட்கிறாய். விடமாட்டாயே நீ, முழு உண்மையைச் சொன்னாலொழிய.

கடனைத் திருப்பித் தரச்சொல்லி கனகசபை வற்புறுத்திய தாலே, அருமை நாயகத்துக்குக் கசப்புத்தான். ஆனால், அதை மறைத்துக்கொண்டுதான் பேசுகிறார், பரிவுகொண்டவர் போல, ஏன் என்றால், அவர் யாரிடம் பேசிக்கொண்டி ருக்கிறாரோ, அவர் "கனகசபை'யின் "கையாள்'. ஊரிலே யாரார் தன்னைப் பற்றி என்னென்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து வந்து சொல்லுவதற்காகவே "வேலை'யில் வைக்கப்பட்டிருக்கும், வையாண்டி! கடன் பட்டிருக்கும் அருமைநாயகம், கனகசபை யைப் பற்றிப் பரிவு காட்டி, தங்கமான குணம் என்று பாராட்டிப் பேசுவது, இதனை வையாண்டி, கனகசபையின் காதிலே போட்டு வைப்பான், அது கேட்டு மகிழ்ந்து கனகசபை கடனைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்று "கிட்டி' போடுவதை விட்டுவிடு வான் என்பதற்காக. பரிவுக்குக் காரணம் அதுதான்.

காசநோயா? அடே அப்பா. என்னமோ ஏதோ என்று எண்ணிக்கொண்டேன். தக்க மருத்துவம் பார்த்தால் பஞ்சு பஞ்சாகப் பறந்து போகாதா அந்தக் காசம். இந்த ஊரிலேயே அதற்குத் தகுந்த டாக்டர் இல்லை என்றால்தான் என்னவாம்! சீமைக்குப் போகிறார்! அமெரிக்கா போகிறார்! சுவிட்சர்லாந்து காற்றுப் பட்டாலே போதுமாமே, காசம் போய்விடுமாம். அவருக்கு என்ன, வசதிக்குக் குறைவா! இருப்பதிலே பதினாயிரத்திலே ஒரு பங்கு வீசி எறிந்தால், வீட்டைத் தேடி ஓடிவருகிறார்கள் உலகப் புகழ்பெற்ற டாக்டர்கள், காசம் அவருக்கு என்று பெருமூச்செறிய வேண்டுமா!!

இவர் யார் தெரிகிறதா தம்பி! காசநோயைப் பற்றி இவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறாரே, இவர் கலியாணத்தரகர் கதிரேசன் - கமிஷன் ஏஜண்டு கதிரேசன் என்று சொல்கொள்வார். இவர், யாரிடம் பேசுகிறார், தெரியுமா? கனகசபைக்கு மூன்றாம் தாரமாகத் தன் இளம் பெண்ணைக் கொடுத்துவிட்டு, இப்போது கலக்கமடைந்திருக்கும் குட்டியப்பரிடம்! பாவி! பணத்துக்கு ஆசைப்பட்டு, பெண்ணைக் கொண்டு போய் காசநோய் பிடித்த வனுக்குத் கொடுத்தாயே, இது அடுக்குமா என்று நாலுபேர் கேட்கிறார்கள். அதனால் ஆத்திரமடைந்து அவர் கதிரேசனிடம் கேட்கிறார் இப்படிப்பட்ட இடம் பார்த்துக் கொடுத்தாயே, என் குடும்பத்தைக் கெடுத்தாயே என்று. அதற்குச் சமாதானம் கூற, ஆறுதல் அளிக்கத் தரகன் தந்திரமாகப் பேசுகிறான், சீமைக்குப் போயாவது காசத்தைப் போக்கிக் கொள்வார், சீமான்! ஏன் கவலைப்படுகிறாய், காசம் அவரை என்ன செய்யும் என்று அடித்துக் கேட்கிறான்.

காசமாமே! ஏழையும் இல்லாதவனும், உடல் வலிவுக்குத் தேவையான உணவு கிடைக்காமல், மாடாக உழைத்து ஒட்டி உலர்ந்துபோய் இந்தவிதமான வியாதிக்கு ஆளாவது உண்டு,. இவருக்கு என்ன குறை! வே-கள் ஆயிரம்! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவர ஆள் அம்பு, மாளிகை; நாலு சமையற்காரர்கள்! வேளை தவறாமல் பால் பழம். ஒரு குறையும் கிடையாதே, வயலுக்குத் தண்ணீர் இறைக்க வேண்டுமா, வண்டியில் மாட்டைப் பூட்டி ஓட்ட வேண்டுமா, வய-லே இறங்கி உழவேண்டுமா, உடலை வாட்டத்தக்க எந்த வேலையாவது உண்டா! கொடுத்து வைத்தவர்! கோலாகல வாழ்வு! அவருக்கு ஏன் வந்தது காசம்? எப்படி வந்தது அந்த நோய்? உடம்பு ஒரு மாதிரியாக இருப்பது தெரிந்தாலே போதுமே, பத்து வைத்தியர்கள் பக்கத்திலே வந்து நிற்பார்களே! மூன்று வேளை பஸ்பம் என்பான் ஒருவன்! ஒரு முழுங்கு கஷாயம் என்பான் இன்னொருவன்? கச்சக்காய் அளவு லேகியம் என்பான் இன்னொருவன்! ஒரே ஒரு ஊசி! அடுத்த நாள் காசம் இருந்தால் என் பெயரையே மாற்றிக்கொள்கிறேன் என்பான் இன்னொருவன்! இப்படிப்பட்ட சுகபோகம் அவருக்கு. அவரை வந்து தொட இந்தக் காசத்துக்கு அத்தனை துணிச்சலா!

இவர் யார் கூறட்டுமா? புதிதாகப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் புன்னைவனம். கனகசபை போன்ற பெரிய புள்ளிகளின் நேசத் தொடர்பு மூலம் ஆதாயம் தேடிக் கொள்ளும் போக்கினன். பணம் ஒருவருக்குக் சேருவதே அவன் செய்த புண்ணியத்தினால் என்பதிலும், பணத்தைச் செலவிட்டால் எந்தவிதமான கஷ்டத்தையும் போக்கிட முடியும் என்பதிலேயும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன். கனகசபையுடைய கடைச் சரக்குகளை மொத்த விலைக்கு வாங்கிக் கடைகளுக்கு விற்பனை செய்திடும் ஏற்பாட்டுக்காகத் திட்டமிட்டுக் கொண்டி ருப்பவன். அதற்குத் தன்னோடு "பங்கு' சேர விருப்பம் தெரிவித்து பிறகு "ஒருவிதமாக'ப் பேசத் தொடங்கிய பரசுராமனிடம் பேசுகிறான். கனகசபைக்குக் காசமே வராது! வந்திருப்பது காசமாக இருக்கமுடியாது! என்று கூறுகிறான்', பரசுராமனுக்குத் தைரியமூட்ட.

அபிஷேகம் செய்தார், ஆராதனை நடத்தினார், ஆலயம் கட்டினார், திருவிழா நடத்தினார், புண்ணியவான், தர்மவான், பக்திமான் என்று ஊரே கொண்டாடுகிறது. அவருடைய தெய்வ பக்திதான் அவருக்கு வே-கள் ஆயிரம் தந்தது. போதும் என்கிற அளவு செல்வம் கொடுத்தது, நிம்மதியான வாழ்க்கையைக் கொடுத்தது என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டார்களே; தெரியுமா விஷயம்? ஆசாமிக்.குக் காசம்!! ஆமய்யா, ஆம்! காசம்!! உலுக்கி உலுக்கி எடுக்கிறது! உடலை உருக்கியே விடுகிறது. பொல்லாத வியாதி இந்தக் காசம்; அது இவருக்கு!!

கொதிப்புடன் பேசுகிறானே ஏன் என்று யோசிக்கிறாயா, தம்பி! கோதண்டன், நல்லவன்; வாழ்ந்து கெட்டவன் - அயன் நஞ்சை ஒரே சதுரம் அறுபது ஏக்கர்! யானை கட்டிப் போர் அடிப்பது என்று பாடுகிறார்களே, இப்படிப்பட்ட வயல் பற்றித்தான் - அந்தச் சதுரத்தை அநியாயமாக விலையைக் குறைத்து, வேறு ஒருவனும் "ஏலம்' கேட்க வராமல் தடுத்து, தட்டிப் பறித்துக் கொண்டான் கனகசபை. கொதிப்பு ஏற்படாமலா இருக்கும் கோதண்டனுக்கு. தன் நிலத்தை அநியாயமாகக் கனகசபை அபகரித்துக் கொண்டது பற்றியும், திருட்டுக் கணக்கு எழுதியது பற்றியும் ஊரிலே பெரியவர்களிடம் கோதண்டன் முறையிட்டபோது, அவர் அப்படிச் செய்யக்கூடியவரே அல்ல! பக்திமான்! தர்மிஷ்டர்! என்றெல்லாம் கூறினார்கள். தனக்காக, நியாயத்துக்காகப் பரிந்து பேச ஒருவரும் வரவில்லையே என்ற எரிச்சல். இப்போது, கனகசபைக்குச் காசம் என்று கேள்விப் பட்டதும், அடக்கிவைக்கப் பட்டிருந்த ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு கிளம்புகிறது. கனகசபையின் அக்கிரமத்தைக் கண்டிக்கத் துணிவற்றுக் கிடந்தவர்களை இடித்துக் கேட்கத் துடிக்கிறான். பெரியவர்கள் இவனை இவ்விதம் பேசவிடு வார்களா! அதனால்தான், பெரியவர்கள் காதிலே விழட்டும் என்று, பெரியவர்கள் பலர் நடத்தும் பண்டரி பஜனைக் கூடத்து மானேஜர் மார்க்க பந்துவிடம், பேசுகிறான், ஆத்திரம் தீர.

காசம்தானே? குஷ்டம், குன்மம்! குடல்புண், இப்படி ஏதும் இல்லையா! காசம்தானா வந்தது, எத்தனையோ பேர்களுடைய வாழ்வை வாட்டி வதைத்த அந்த உத்தமருக்கு! காசமாம்! அது என்ன துடிதுடிக்கச் செய்யுமா, பதைபதைக்க வைக்குமா! ஒரு குற்றமும் செய்யாதவனைப் பிடித்துக் கொள்கிறது தொழுநோய் - இவருக்குக் காசம்!! காசநோய் வந்தால் என்ன? பட்டென்று கீழே வீழ்ந்து பொட்டென்று உயிரா போய்விடும். ஐயோ அப்பா! அம்மா! என்று அலறியா துடிக்கப் போகிறார்! ஒரே ஊசி போட்டு குணப்படுத்திவிட மாட்டார்களா, டாக்டர்கள்! காசம் வந்துவிட்டது காசம் வந்துவிட்டது என்று பேசிக் கண்ணைக் கசக்கிக் கொள்வதா! செத்தே போனாலும் என்ன, குடும்பம் சோற்றுக்கு இல்லையே என்று தேம்பிக் தவித்துக்கிடக்கவா போகிறது. ஊரை அடித்து "உத்தமன்' குவித்து வைத்திருக்கிற சொத்து, மூன்று தலைமுறைக்குப் போதுமே! காசம் வந்துவிட்டதாம், காசம்! காசம்தானே வந்தது போ! போ!

சின்னப்பன்! தம்பி! இவனுக்கு ஊரிலே கெட்டவன் என்று பெயர்! சிறையிலே இவன், தங்கக்கம்பி! என்னமோ திருட்டுக் குற்றத்துக்காகத்தான் பயல் தண்டிக்கப்பட்டிருக்கிறான்; ஆனால், நான் சொல்கிறேன்; இவனை நம்பி ஒரு இலட்சம் ரூபாய்கூட நான் கொடுத்துவைப்பேன். எனக்கு இவனிடம் அவ்வளவு நம்பிக்கை என்று ஒருமுறை சிறை மேலதிகாரியே கூறியிருக்கிறார். அவரிடம் இலட்சம் ரூபாய் இல்லை என்கிற தைரியத்திலேதான் அப்படிப் பேசினாரோ என்னவோ! ஆனால், சின்னப்பன் சிறையிலே நல்ல பெயருடன்தான் இருந்திருக்கிறான். அவனைக் கூண்டிலே நிற்க வைத்த கனகசபை சாமி சாட்சியாக'ச் சொன்னார், நல்ல அமாவாசைக் கருக்க-ன்போது சின்னப்பன் தன்னை வழி மடக்கி, கழுத்திலே இருந்த தங்க உருத்திராட்சமாலையைப் பறித்ததாக! சாட்சிகளைத் தீர விசாரித்து, குற்றம் மெய்ப்பிக்கப் பட்டதாகக் கூறி நாலு வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார் நீதிபதி. கடைசி வரையில் சின்னப்பன் நான் ஒரு பாவமும் அறியேன் என்றுதான் சத்தியம் செய்தான். அவன் மனைவி மருதாயி கண்ணீர் பொழிந்தாள். அவளை, கனகசபை "கெடுக்க' முயன்ற போது, சின்னப்பன் அடித்து விரட்டிய சம்பவமே, வழிப்பறி வழக்காக வடிவமெடுத்தது என்று ஊரிலே வதந்தி. இது உண்மையா அல்லவா என்று கூற ஒரே ஒரு சாட்சி தான் உண்டு; மருதாயி! ஆனால், மருதாயியின் பிணம்தான் மடுவில் மிதந்ததே, சின்னப்பன் ஜெயிலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட நாளைக்கு மறுநாள். ஆகவே, சின்னப்பன், நடுஜாம பூஜைக்காக நந்திகேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கனகசபையை வழி மறித்துக் கொள்ளை அடித்தான் என்பதை ஊர் ஏற்றுக் கொண்டுவிட்டது. அந்த ஆத்திரம் சின்னப்பனுக்கு! ஊரே, அநியாயத்திற்குத் துணை நிற்கிறதே என்று எண்ணி வேதனைப்பட்டான். அதனால்தான் தம்பி! கனகசபைக்குக் காசம் என்றதும், காசம்தானே! குஷ்டம் வரவில்லையே என்று கொதிப்புடன் கேட்கிறான். அவனுக்கு ஒரு எண்ணம் கனகசபை தனக்குச் செய்த துரோகத்துக்காக தண்டனையைக் கடவுள் எப்படியும் தருவார் என்று. ஆனால், காசம் போதுமான தண்டனை அல்ல; இதைவிடப் பயங்கரமான நோய் வரவேண்டும் அந்த அக்கிரமக்காரனுக்கு என்று எண்ணுகிறான். அந்த ஆத்திரத்தைத்தான் கொட்டிக்காட்டுகிறான், உண்மை தெரிந்தும் ஊமையாகிக் கிடந்த கனகசபையின் வண்டியோட்டியிடம்.

காசம்தான், சந்தேகமே இல்லை! முதலிலேயே எனக்குச் சந்தேகம். ஆனால், அவசரப்பட்டுச் சொல்லிவிடலாமா? அதனால்தான் இரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தேன், இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது. காசம்தான்! உடம்பைக் கவனித்துக்கொள்வதில்லையே நீங்கள்! ஓயாத வேலை. வேளையறிந்து சாப்பிடுவதில்லை. நான் பல நாள் சொல்லி இருக்கிறேனே, எல்லா வேலையையும் தலையின்மீது போட்டுக் கொண்டு ஏன் சுமக்க வேண்டும்? மகன் இருக்கிறான். மருமகன் இருக்கிறான், நாணயமான ஆட்கள் இருக்கிறார்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், என்று சொன்னேன். கேட்டால்தானே! பொழுது போகவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தீர்! இப்போது? பொல்லாத காசம் வந்துவிட்டிருக்கிறது. ஆபத்து இருக்காது, குணப்படுத்திவிடலாம், அதற்காக நான் துளியும் கவலைப்பட வில்லை; ஆனால், உங்களுக்கு எதற்காக இந்தத் தொல்லை? நீங்களாகவா தொல்லையைத் தேடிக் கொள்வது? அதைத்தான் கேட்கிறேன். குற்றாலம் போய் வாருங்கள், கொடைக்கானல் போய் ஒரு மாதம் இருந்து விட்டு வாருங்கள் என்று தலைப்பாடாகச் சொன்னால் கேட்டீர்களா? குடகு போக வேண்டும் ஆரஞ்சு வாங்க, கொச்சி போக வேண்டும் முந்திரி வாங்க கோவை போகவேண்டும் மந்திரியைக் காண என்று இப்படி எதையாவது சொல்லி என் வாயை மூடிவிடுவீர்! இப்போது? இலட்ச இலட்சமாகப் பணம் இருந்து என்ன பயன்? காசநோய் வருவதை அந்தப் பணத்தினாலே தடுக்க முடிந்ததா? ஊரே பேசும் இனி காசமாம் அவருக்கு என்று! எதற்காக இதற்கு இதற்கு இடம் கொடுப்பது? காசம் வரலாமா உங்களுக்கு!

பந்த பாசத்துடன் இதுபோலப் பேசுகிறார் டாக்டர் பாஸ்கர் - கனகசபைக்குக் குடும்ப டாக்டர்! இந்த ஒரு குடும்பத்தின் மூலமாக மட்டும் டாக்டருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். அவர் வந்து "ஊசி' போட்டால்தான், அம்மாவுக்குத் தூக்கமே வரும் என்று "ஐயா' வே சொல்கிறார் : "ஐயாவுக்குத் தனியாகத் தயாரிக்கப்பட்ட "டானிக்' டாக்டர் கொடுக்கிறார்' வேறு ஒருவருக்கும் கிடைக்காததாம், அந்த டானிக்!

கிடைக்காததா, தேவைப்படாததா என்று கனகசபையின் "வீட்டில்' கேட்பார்கள், குறும்புப் புன்னகையுடன்.

டாக்டர், கனகசபையின் ஆதரவு பெற்றுத்தான் ஜில்லா மிராசுதாரர் சங்கத்தின் வைத்திய ஆலோசகரானார்! வியாபார சங்கத்தார் நடத்தும் "பிரசவ ஆஸ்பத்திரி'க்கு "கௌரவ' டாக்டரானார். அவர் பரிவு காட்டக் கடமைப்பட்டவர்தானே!

காசம்தானே இதற்கு ஏன் இப்படிப் பயந்து பதறிக்கிடக்கறே - பைத்தியம்! பைத்தியம்! என்னை என்ன செய்துவிடும் இந்தக் காசம்! இதோ பார்! இது எப்படிப்பட்ட உடம்பு தெரியுமா! பாம்பு கடித்தால்கூட விஷம் ஏறாது. அவ்வளவு மூலிகைச்சாறு உள்ளே போயிருக்குது. ஏதோ என்னோட வந்து நடக்கச் சொல்லு உன்னோட தம்பியை; வயது என்ன இருபதுதான்! அறுபதுன்னு கணக்கு என் வயது, வந்து போட்டி போடச் சொல்லேன் வாலிப வயசுக் காரனுங்களை. காசம்னு டாக்டர் சொன்னதும் ஐயோ! காசமாமே! என்று கவலைப்படுகிறாயே! கல்லுப்பிள்ளையார் போல இருப்பேன். நீ எதற்கும் கலங்காதே! கொஞ்சம் இழுப்பும் ஆயாசமும் இருக்கும்; ஒரு நாலு நாளைக்கு; ஒரு மருந்தும் சாப்பிடாமல், தன்னாலேயே போய்விடும். இருந்தாலும் டாக்டர் சங்கடப்படுவாரே என்பதற்காக அவர் கொடுத்த மருந்தையும் சாப்பிட்டு வைத்திருக்கிறேன். நாளை மறுநாளே பாரேன். வழக்கப்படி, கோயில் பிரதட்சணம் செய்யிறேனா இல்லையான்னு. காசம் என்னை என்ன செய்துவிடும்! சுத்த சொத்தையான வியாதி, இந்தக் காசம்!!

அந்தக் கண்களிலே வெறுப்பு இருந்தது; அவர் அதை வேதனை என்று எண்ணிக் கொண்டார், ஏதோ சாப்பிட்டு விட்டதால் கண் சிவப்பாகிக் கிடந்தது, அழுது அழுது கண்களைச் சிவப்பாக்கிக் கொண்டதாக அவர் கூறுகிறார், யார்? கனகசபைதான்! மூன்றாம் தாரமாக வாய்த்த, மங்கையிடம்!

ஒரு உத்தமி, தன் கணவனுக்குப் பொல்லாத நோய் வந்ததறிந்தால், என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று கலங்கிப் போவாளல்லவா? கணவன், ஆறுதல் கூறி தைரியம் ஊட்டினா லொழிய, உத்தமி வேதனையில் வீழ்ந்து துடிக்க மாட்டாளா!