அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கருத்தோவியம்
3

தம்பி! எதிரேதானே மண்டிக்கடை; அந்த முதலாளி கைகொடுக்கமாட்டாரா; அவருக்கு இவ்வளவு ஆண்டுகளாக வேலை பார்த்தவனிடம் சிறிதளவாவது பிரிவு இருக்கத்தானே செய்யும். மாடாக உழைத்தவனல்லவா, முதலாளியின் குரல்கூடக் கேட்கிறது, வா, வா, போய்க் கேட்போம்.

காசமாமா! சொல்கிறாரா? சொல்லுவாரே, ஆசாமி என்ன சாதாரணமானவரா! எல்லாவிதமான வேஷமும் போடுவாரே! காசம்னு சொன்னா, பச்சாத்தாபப்பட்டு, விட்டுவிடுவாங்க என்கிற தந்திரம். தெரியுமே எனக்கு, கணக்கிலே திருட்டும் புரட்டும் செய்துவிடுவது, கண்டு பிடித்தது தெரிந்தா, மாட்டிக் கொண்டா உடனே இழுத்துப் போர்த்துக்கொண்டு வீட்டிலே படுத்துக் கொண்டு, எனக்குக் காச வியாதி வந்துவிட்டது என்று சொல்லிக் கண்ணைச் கசக்கிக் காட்டுவது! இந்த வித்தை எனக்குத் தெரியாதா! மரியாதையா அந்தப் பயலை நாளைக் காலையிலே பணத்தோடு வந்து கணக்கைத் தீர்த்துக்கொண்டு போகச் சொல்லு; இல்லே! காசத்துக்கு மருந்து தருகிற பெரிய ஆஸ்பத்திரி இருக்குதே, - எது? ஜெயில்! ஆமா அங்கேதான் அனுப்பிவைப்பேன். காசம் கீசம்னு சொல்லி ஏய்த்துவிடலாம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாமென்று சொல்லு. எனக்குத் தெரியும் இவனோட காசம்! போ! போ! இழுத்துக் கொண்டுவா, பயலை!!

கிணறு வெட்டப் பூதம் கிளம்பும் கதை போலிருக்கிறதே என்று பதறுகிறாயா. தம்பி! பதறாதே! கணக்கிலே திருட்டும் புரட்டும் துளியும் கிடையாது. அதைச் செய்திருந்தால் அவன் ஏன் பாவம், நோயாளியாகி இருக்கப் போகிறான். தனக்கு நோய் வந்துவிட்டதே என்ற கவலையில், கணக்கிலே தவறு செய்துவிட்டிருக்கிறான், வரவு வைத்து எழுதவேண்டியதைச் சரியாகச் செய்யவில்லை. பணத்திலே அவன் கைவைக்கவில்லை. பணம், பெட்டிக்குள் இருக்கிறது; மறதி; ஆகவே, அது கணக்கில் சேரவில்லை.

கணக்கிலே புரட்டுச் செய்து பணத்தை மோசம் செய்துவிட்டு, காசம் என்று வேஷம் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான் என்று முதலாளி அவசர முடிவு செய்கிறான். ஆரோக்கியசாமி, ஏழை; சத்தியத்தை மதிப்பவன். அவன் வீட்டுக்கு மண்டிக்கடை ஆள் போய் என்னென்ன மிரட்டுவானோ, வா, வா, போய்க் கேட்போம்.

காச நோயாமா? யார், பெரிய டாக்டர் சொல்லி விட்டாரா? பெரிய டாக்டரல்லவா, பெரிய பெயராகத்தான் வைப்பார், நோய்க்கு. வெறும் பீதி கிளப்புகிறார். காச நோயல்லப்பா, காச நோய் - டாக்டர் காசு பறிக்கச் சொல்லுகிறார் காசநோய் என்று. நாலு வேளை மிளகுக் கஷாயம் சாப்பிடு, ஒரு நோயும் இருக்காது. அலுப்பின் பேரிலே ஒரு ஆயாசம், இது. இதுவா காசநோய்! வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. காசநோய் என்றால் இந்நேரம் உன்னை நடமாட விட்டிருக்குமா, பேச விட்டிருக்குமா! அதனுடைய குணமே வேறே! இது காச நோயே அல்ல.

முதலாளி அனுப்பிய ஆள்தான். அவனுக்குத் தெரியும் ஆரோக்கியசாமியின் நாணயம். ஆகவே, அவன் விவரம் கேட்கிறான். மறதியால் நேரிட்டுவிட்ட தவறு பற்றி ஆரோக்கிய சாமி சொல்லிவிட்டு, மண்டிக்குக் கிளம்புகிறான், முதலாளியின் சந்தேகத்தைத் துடைக்க.

ஆரோக்கியசாமிக்கு ஆறுதல் அளிக்க, தைரியம் கூறுகிறான் அவனைப் போன்ற ஏழை, ஏகாம்பரம்; இது காச நோயே அல்ல என்று.

அந்த ஏழையின் பேச்சு ஒரு தெம்பு கொடுக்கிறது ஆரோக்கியசாமிக்கு. பழைய கோட்டை உதறிப் போட்டுக் கொண்டு புறப்படுகிறான். சந்தோஷத்தம்மாள்கூட, தன் கணவனுக்கு உள்ளபடி காசம் இல்லை; வீண் சந்தேகம், பயம், இதனால் கவலை என்றுதான் எண்ணிக் கொள்கிறார்கள்.

மறதியாகப் பெட்டிக்குள் வைத்துவிட்ட பணத்தை எடுத்துக் கொடுத்ததும், முதலாளி மகிழ்ந்து போவார், அல்லவா! அந்த எண்ணம் துள்ளுகிறது அவன் மனத்தில். அதனால்தான் அத்தனை வேகமான நடை.

அய்யோ! என்ன இவனுக்கு, மறதி கூடப் பிறந்த வியாதி! பாதை ஒரத்தில் நடக்காமல், இப்படி....

அய்யோ! அடடா; ஏ! கிழவா! ஏ! ஏ! மோட்டார்!

அவ்வளவுதான் தம்பி! நாம் செய்யக்கூடியது. அவன் போய்விட்டான். காசம் இனி அவனை ஒன்றும் செய்யாது!

மோட்டார் ஓட்டி வந்தவர் டாக்டர்! அவரே கூறி விட்டார், அதிர்ச்சி - இருதயம் வெடித்துவிட்டது என்று. அதே டாக்டர் தம்பி! கனவான் வீட்டு, டாக்டர்.

அங்கிருந்து அவசரமான அழைப்பு. அதனால்தான் மோட்டாரை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார், வழியில் இவன்!

போலீசுக்கு ஏதோ குறிப்பு கொடுக்கிறார். மோட்டார் கிளம்புகிறது; கனவான் மாளிகைக்கு. அவருக்குக் காசமல்வா!! போகலாமா மறுபடியும், மாளிகைக்கு? வேண்டாம் என்கிறாயா! ஆமாம் தம்பி! வேதனையாகத்தான் இருக்கும். ஆனால், என்ன செய்வது, நிலைமை அவ்விதம் இருக்கிறது.

உலகின் போக்கு இருக்கும் விதம்பற்றி எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல காசு மிக்கவனுக்குக் காசநோய் வந்திடின் எவரெவர் என்னென்ன விதமாகப் பேசிடுவர் என்பதனை எடுத்துக் காட்டியது.

வேறோர் விந்தை நடைபெற்றிடின் தம்பி! என்ன கருதிடத் தோன்றும்.

வேகமாக மோட்டாரை ஓட்டிக்கொண்டு சென்று எழையைச் சாகடித்தாரே ஒரு டாக்டர், அவர் கிளம்புகிறார் என்று வைத்துக்கொள். ஆபத்தில்லாமல் மோட்டார் ஒட்டும் முறைபற்றிய விளக்கமளித்திட! எப்படி இருக்கும்!! கை கொட்டிச் சிரிப்பர்.

காசு படைத்தவர் என்பதால் மூன்றாந்தாரம் தேடிப் பெற்றுக்கொண்ட காசநோய்க்காரர் கனகசபை "இல்லற இன்பம்' பற்றிய சொற்பொழிவு நடாத்திடக் கிளம்பிடின் எப்படி இருக்கும்!

அம்மையார் - அதாவது கனகசபையின் இல்லக் கிழத்தியார் - இளமங்கை - "பதிபக்தி' மகத்துவம் பற்றிய காலட்சேபம் செய்திடின் மக்கள் என்ன நினைப்பர்?

கைகொட்டிச் சிரிப்பர், கண்டித்திடுவர்; செயலிலே கோணலாக நடந்துகொண்டு சீலம் பற்றிப் பேசவும் வந்துள்ள னரே என்று கேலி பேசுவர். அப்படித்தானே?

இல்லை என்கிறேன், தம்பி! இல்லை என்கிறேன், உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள், செல்வம் படைத்தவர்கள், அக்கிரமம் பல செய்துவிட்டு, அவற்றினை மறைத்துவிட்டு, ஏதுமறியாதார் போல நடித்து, ஊருக்கே உபதேசம் செய்திட முன்வந்திடின், ஊர் மக்கள் திகைப்படைவர், ஆனால், கண்டித்துப் பேசிட முன்வர மாட்டார்கள்.

பெரிய இடத்துப் பகை நமக்கேன் என்று இருந்து விடுவர். அதுவே உலக வாடிக்கையாகிவிட்டது.

செய்த அக்கிரமத்தை மறைத்துவிடவும், மக்கள் அதனை மறந்துவிடும்படி செய்துவிடவும்கூட முடியும், செல்வவான் களால், ஆனால், சீலர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கவும் முடியுமா, பெரும் பாலான மக்களுக்கு அச்சஉணர்ச்சி அழுத்தமாக இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இந்த நிலைமையையும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று வாதாட நினைப்பர் - சிலரேனும்.

அப்படிப்பட்டவர்கள் கூடத் தமது கருத்தை மாற்றிக் கொள்வர், முன்னாள் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் தமிழகத்தில் அரசியல் உபதேசம் அருளிக் கொண்டு வருகிற விந்தையைக் கண்டபிறகு.

முடிகிறதே அவரால்! நாடு தாங்கிக்கொள்ளுகிறதே அவருடைய உபதேசத்தை!!

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் - சுமத்தப்பட்ட என்றே கூறுகிறேன், தம்பி! மெய்ப்பிக்கப்பட்ட என்று கூறுவில்லை - பற்றிய பேச்சும் வதந்திகளும் நிரம்பக் கிளம்பின.

மறைந்த பிரதம மந்திரி லால்பகதூர், டி.டி. கிருஷ்ண மாச்சாரியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபத்த மானவை, அடிப்படையற்றவை, கவனிக்கத்தகாதவை என்றுகூறி குற்றச்சாட்டுகளைக் கொண்ட புகார் மனுவைத் தூக்கிக் குப்பைத் தொட்டியிலே வீசிவிட்டு, டி.டி. கிருஷ்ணமாச்சாரியின் முகத்தைத் துடைத்து, முகமன் கூறி, மாசுமருவற்றவரே! மாநிதியே! மாச்சரியம் காரணமாகத் தங்கள் மீது இல்லாததும் பொல்லததுமான புகார்களைக் கூறினர், புல்லர்கள், சிலர் - உமது அருமை பெருமை, நேர்மை, நாணயம், திறமை, தகுதி, ஆற்றல் அறியாது. அந்தப் புகார்க் கடிதத்தைச் சுக்கு நூறாக் கிழித்துக் குப்பை கூடையில் எறிந்துவிட்டேன். ஆகவே, ஆற்றல் மிக்கவரே! புகார்பற்றித் துளியும் கவலையற்றுப் பதவியில் வீற்றிருந்து பாரதமாதாவுக்குச் சேவை செய்து கொண்டு வரவேண்டும்! மறுக்கக்கூடாது! பிரதம மந்திரியாம் எனது வேண்டுகோளை மறுக்கக் கூடாது! - என்றா கூறினார்?

இல்லை, தம்பி! இல்லை! புகார் மனுவை, இந்தியாவின் பிரதம நீதிபதியிடம அனுப்பி வைக்க இருக்கிறேன், அவர் பரிசீலனை நடத்தித் நமது கருத்தளிப்பது நல்லது, தேவை, முறை என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

அவர் தெண்டனிடாதது மட்டும்தான் பாக்கி, அத்தனை பணிவுடன் கூறிப்பார்த்தார், புகார் பற்றித் தாங்களே பரிசீலனை செய்யலாமே, அல்லது தாங்கள் அமைக்கும் ஒரு குழுவினர் பரிசீலனை செய்யலாமே, பிரதம நீதிபதியிடம் அனுப்பத் தேவையில்லையே என்று முறையிட்டுக் கொண்டார்.

தாங்களோ எனது சகா! தங்கள்மீது வந்துள்ள புகாரை நான் விசாரிப்பதா! செச்சே! அது முறையாகாதே! அதனால்தான் இந்தியாவின் பிரதம நீதிபதியிடம் அனுப்பி வைக்க எண்ணுகிறேன். அவர் துவக்க வேலையைத்தான் பார்த்திடுவார்; அதாவது இந்தப் புகார்களுக்குத் துளியேனும் ஆதாரம் இருக்கிறதா, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத்தக்கதுதனா இந்தப் புகார், அல்லது வெறும் குப்பைதானா என்பதுபற்றிப் பிரதம நீதிபதி ஆராய்வார். அதுதான் முறை? அதுதான் என் முடிவு என்று வலியுறுத்தினார்.

தங்கள் முடிவு அதுவாக இருந்தால், நான் நிதி மந்திரியாக இனியும் இருந்து வருவது முறையாக இராது; எப்போது என்மீது வந்த புகார் பற்றிப் பிரதம நீதிபதியைக் கொண்டு பரிசீலனை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்களோ, அப்போதே தங்கள் நம்பிக்கையை நான் பரிபூரணமாகப் பெற்றில்லை என்பது விளக்கமாகிறது. ஆகவே நான் என் பதவியை ராஜிநாமாச் செய்கிறேன் என்று தெரிவித்தார்.

லால்பகதூர், வருத்தம் தெரிவித்தார்; ஆனால், தமது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்தார், டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் தமது ராஜிநாமாவை வலியுறுத்தினார்; லால்பகதூர் அதனை ஏற்றுக்கொண்டார் - வருத்தத்துடன்!!

இது நடைபெற்ற நிகழ்ச்சி - நாட்டை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது.

புகார் பற்றியோ, அது குறித்து எழுந்த விவாரம் பற்றியோ, காமராஜரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றுகூட லால்பகதூர் கருதவில்லை. பெரிய ரோஷக்காரர் என்று விருதுபெற்ற காமராஜரும் தாம் இவ்விதம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. எங்கோ கனாவில், கயானாவில் நடைபெறும் நிகழ்ச்சி என்று விட்டுவிட்டார்.

டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் பதவியை ராஜினாமாச் செய்தார். புதிய நிதி மந்திரி நியமிக்கப்பட்டார்.

புகார் மனுவைக்கூட லால்பகதூர் தள்ளிவிட வில்லை.

இன்று வரையில் - நாளை எப்படியோ - காமராஜரேகூட டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் மீது ஒரு அபத்தமான புகார் தொடுக்கப்பட்டது குறித்தோ, அதை ஒரு பெரிய பிரச்சினையாகக் கொண்டு ராஜிநாமாச் செய்யவேண்டிய நிலைக்கு அவரைத் துரத்திய நிலைமைகள் பற்றியோ ஒரு கண்டனம், ஒரு சொல் பேசவில்லை. அவருடைய அபாரமான ஆற்றல் அத்தனையும், தி.மு. கழகத்தின் எதிர்காலம் பற்றிய "ஆரூடம்' கணிப்பதற்கே செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படித் தன்னைக் கவனிப்பாரற்ற நிலையினராக்கி விட்டதனை எண்ணி, டி.டி. கிருஷ்ணமாச்சாரியார்,

அரசியல் துறவுபற்றியும்

சுயசரிதம் எழுதுவதுபற்றியும்

குறிப்பிட்டதுடன், டில்லியில் இருந்துகொண்டு அங்கு நடை பெற இருக்கும் "வேடிக்கை'யைப் பார்க்கப் போவதாகக் கூறினார்.

என்ன வேடிக்கையோ, கூறவில்லை.

எதிர்பாராத முறையில் லால்பகதூர் மறைந்தார்.

இந்திராகாந்தியார் பிரதம மந்திரியாவதற்காக டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் மும்முரமாகப் பணியாற்றினார்.

இந்திராகாந்தியார் தகுதியுள்ளவர் என்ற உணர்வு சலித்துப் போன உள்ளத்துட்ன் இருந்தவரையும் சுறுசுறுப்பாக்கிற்று என்று கூறினர்.

வேறு சிலரோ, தப்பித் தவறி மொரார்ஜிதேசாய் பிரதம மந்திரியாக வந்துவிட்டால், புகார் மனு பற்றிய புதுக் கட்டங்கள் அமைந்துவிடுமே என்ற திகில் உலவுகிறது என்றனர்.

இந்திராகாந்தியார் வெற்றி பெற்றார்.
அவர்களாவது, டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் மீது -
பொறாமை
பொச்சரிப்பு
பகை
போட்டி உணர்ச்சி
போன்றவை காரணமாகச் சிலர்
அபத்தமான
ஆதாரமற்ற
அலட்சியப்படுத்தத்தக்க

புகார்களை அனுப்பியுள்ளனர். அதனை நான் பொருட்படுத்த வில்லை. அவர் மாசு அற்றவர் என்று தீர்ப்பளிக்கிறேன், அவருடைய பெருமையை நாடு உணரத்தக்க விதத்தில், அவர்மீது தொடுக்கப்பட்டுள்ள புகாரைக் குப்பையில் போட்டுவிட்டு மீண்டும் அவரை மந்திரிசபையில் அமர்ந்து பணியாற்றும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தாரா என்றால் இல்லை.

அவர், தமது பதவியை ராஜிநாமாச் செய்து விட்டதால், அவர் குறித்து அனுப்பப்பட்ட புகார்பற்றி மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கையும் மேற் கொள்ளத் தேவையில்லை என்று சர்க்கார் முடிவு செய்கிறது என்று மட்டுமே அறிவித்தார்;

டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் குற்றமற்றவர் என்று கூறிடவில்லை.

டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மெய்ப்பிக்கப் படவில்லை.

போதுமான அளவு தன்மான உணர்வு உள்ள எவரும் இந்த நிலையை வரவேற்கத்தக்கது என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தகுத்த முறையில் புகார்பற்றி பரீசீலனை செய்து, என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் யானவை என்று மெய்ப்பிக்கப்படவேண்டும். அதுதான், சமூகத்தில் எனக்கு உண்மையான மதிப்பைக் கொடுக்கும். ஆகவே, புகார் பற்றிய விசாரணைக்கு ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்துகிறேன்.

என்று டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் வற்புறுத்தி இருக்க வேண்டும். செய்யவில்லை! ஏன் என்றும் கூறவில்லை!

தம்மீது பூசப்பட்ட அழுக்கைத் துடைத்துக்கொள்ள முனையாமல், அவர் கிளம்பிவிட்டிருக்கிறார், எதிர்க்கட்சிகளை - குறிப்பாக, கழகத்தை - வெளுத்து வாங்க!

அவர் தரிசனம் கிடைத்ததும், பார்வையாளர்களின் கண்களிலே ஒருவிதமான குறும்புப் பார்வை! இதழ்களிலே ஒரு கேலிப்புன்னகை !

மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள் :

இவர் கதியைப் பாருங்கள் !

இருந்ததை இழந்துவிட்டு அலைகிறார்.

இந்திராகாந்தியார் கூட இவருக்குப் பதவி தரவில்லை.

இவருக்காகக் காமராஜர் ஒரு வார்த்தை பரிந்து பேசவில்லை.

பதவிகூட வேண்டாம், புகார் அபத்தமானது என்று ஒரு வார்த்தை சொல்லி, இவர்மீது பூசப்பட்ட அழுக்கை யாவது துடைத்திருக்கலாமல்லவா! அதையும் செய்ய வில்லை.

இவர் கழகத்தின் அழுக்கு பற்றிப் பேசுகிறார்.

நமக்கோ இவரைப் பார்த்ததும், இவர்மீது இப்போது பூசப்பட்ட அழுக்கும், முன்பு கிளம்பிய முந்திரா ஊழல் கிளப்பிவிட்ட முடைநாற்றமும், அப்போது ஒரு தடவை இவர் பதவியைவிட்டு வெளியேறிய சம்பவமும்தான் நினைவிற்கு வருகின்றன.

என்று இவ்விதமாகத்தான் பேசிக் கொள்கிறார்கள்,

இந்த மனநிலையுடன் உள்ளவர்களின் மத்தியில் பேசுகிறார்: பலன் எத்தனை உருப்படியாக இருக்க முடியும் என்று விளக்கவா வேண்டும்.

ஆனால், பேசுகிறார்! அபாரமான நம்பிக்கையுடன்!!

எந்த நம்பிக்கை? மற்றவர் விஷயம் இருக்கட்டும் மகானுபாவரே! தங்கள் விஷயம் என்ன? ஏன் தங்கள் மீது துளியும் குற்றம் இல்லை; தொடுக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமே இல்லை என்று ஒரு விசாரணைக் குழு மூலம் விளக்கக்கூடாது. அப்படிச் செய்து விட்டுப் பிறகு ஒழுக்கப் பிரசாரம் செய்தால் நன்றாக இருக்குமே என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை!

அதைப் பார்த்த பிறகுதான், தம்பி! எனக்கு, காச நோய்ச் சீமானும் அவன் கடிமணம் செய்துகொண்ட காரிகையும், ஆளைச்சாகடித்த டாக்டரும், ஊருக்கு, முறையே இல்லற இன்பம் - பதிபக்தி - ஆபத்தின்றி மோட்டார் ஓட்டுவது போன்றவை பற்றிய "உபதேசம்' செய்ய முற்படுவது என்றால் மக்கள் என்ன கருதுவார்கள் என்று சிந்திக்கத் தோன்றிற்று.

என்ன கருதுவார்கள்? என்ன கருதுகிறார்கள்; டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேச்சைக் கேட்டுவிட்டு!

அவர் என்னமோ ஓயாமல் உச்சரிக்கிறார்!

கழகத்தை நம்பாதே!
கழகத்தை நம்பாதே!

என்று, ஊரூருக்கும் சென்று அவர் அந்தத் திருமந்திரத்தைத்தான் உச்சரித்தபடி இருக்கிறார். ஆனால், மக்கள் செவியில் விழுவதோ

முந்திரா விவகாரம்
முந்திரா விவகாரம்

என்ற சொற்களே!! காசநோய் கனகசபை இல்லற இன்பம் பற்றிப் பேசும் போது மக்கள் செவியில் என்ன விழும்!

மூன்றாந்தாரம்! இளமங்கை என்ற சொற்கள்!

மேலிடம் சென்றவர்கள் - பணம் காரணமாகவோ பதவி காரணமாகவே மேலிடம் சென்றவர்கள், தீயன புரிந்துவிட்டு, உபதேசிகளாக வடிவமெடுக்கும்போது, எதிர்த்துக் கேட்டிடமாட் டார்கள்; உன் வாயாலா இது பற்றிப் பேசுகிறாய் என்று கூற மாட்டார்கள்; அவர்களின் கண்களிலே ஒரு குறும்புப் பார்வை மலரும்; இதழோரத்தில் ஒரு கேலிப் புன்னகை தெரியும்.

எனக்கு ஓவியம் தீட்டத் தெரியாது, தம்பி! தெரிந்திடின் எனக்குக் கொள்ளை ஆசை; அந்தக் குறும்புப் பார்வையையும், கேலிப் புன்னகையையும் படமாக்கித் தந்திடவேண்டும் என்று. இயலவில்லை. உன் மனக்கண்ணால் அந்தக் காட்சியைக் கண்டு கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். கருத்தோவியம் கிடைத்திடும்.

அண்ணன்,

22-5-66