அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கருத்தோவியம்
2

அதனால் கனகசபை தேற்றுகிறார். இடையில், தன்னை முதியவன் என்று பலர் கூறுவார்களே, இவள் அதுபற்றி என்ன எண்ணிக் கொள்வாளோ என்ற கவலையில், தனக்கு வயோதிகம் இல்லை, வாலிபம்தான், முறுக்குடன் இருக்கிறது என்று சொல்வைக்கிற ôர். வாலிபன் இது போலக் கூறத் தேவையில்லை! வாலிபம் தன்னாலே தெரிகிறது. வயோதிகர்தான், தனக்கு வாலிபம் இருப்பதாகக் கூறித் தீர வேண்டும். அதிலும்; பாவம் "கனகசபை' மூன்றாம் தாரமல்லவா பெற்றிருக்கிறார். அதனால்தான், கலங்காதே! காசம் என்னை ஒன்றும் செய்துவிடாது! என்கிறார். ஆனால்! மனத்திலேயோ, காசம் வேறு வந்து விட்டதே! ஏற்கனவே என்னிடம் வெறுப்பு இவளுக்கு - இப்போது என்னென்ன எண்ணுகிறாளோ என்ற கிகில். அந்தத் திகிலை மறைத்துக்கொண்டு தைரியம் பேசிக் காட்டுகிறார், கனகசபை.

காசமேதான்! ஆமாமாம். பெரிய டாக்டரே சொல்லி விட்டார். இனி அசாமி வீட்டோடுதான்! பொல்லாத நோயாச்சே காசம்; அடே அப்பா, ஆளை உருக்கி உருக்கி எடுத்துவிடுமே! ஒரு வேலையும் செய்யவிடாது. ஒரு ஊருக்கம் போகவிடாது சதா தொல்லைதான். காசம்னா இலேசா! ஆசாமி இனி பழையபடி அலைய முடியாது. எங்கே சரக்கு கிடைக்கும், எங்கே பதுக்கி வைக்கலாம் என்கிற காரியத்துக்காக. ஒரு பெரிய தொல்லையே விட்டுதுன்னு சொல்லணும். கொஞ்சமான தொல்லையா நமக்கு அவனாலே. எத்தனை வாடிக்கைக்காரர்களை வலைபோட்டு இழுத்துக் கொண்டான். நம்ம வியாபாரத்தையே நாசமாக்கப் பார்த்தானே. அவனோடு போட்டி போட்டுப் போட்டு நமக்கு இதுவரையிலே எத்தனை பத்தாயிரம் பாழாகியிருக்குது. காசம் வந்தது - இனி காலை மடக்கிக் கொண்டு வீட்டோடு கிடப்பான். நம்ம பாடு இனி நிம்மதிதான். காசம் என்ன இலேசிலே போய்விடுகிற வியாதியா என்ன? நாளைக்கு மூன்று ஊசிதான் போட்டுக் கொள்ளட்டுமே, போய்விடுமா! அதுதான் கிடையாதுன்னேன். காசம், கட்டையோடுதான்! பச்சைச் சிரிப்பு சிரிச்சே மட்டச் சரக்கை ஆசாமிகள் தலையிலே கட்டி அனுப்பு வானே, இனி முடியுமா? முகமே மாறி விடுமே, வியாதி அப்படிப் பட்டது. காரணமில்லாமல் கோபம் வரும், பொறுமை இருக்காது, இதெல்லாம் காசத்தாலே ஏற்படுகிற கோளாறு. நான் பார்த்திருக்கிறேனே, காச நோய் பிடித்த ஆசாமிகளை. எங்க மாமனுக்கே அந்த நோய்தானே! ஒருவரும் கிட்டே போக முடியாது, எரிஞ்சி எரிஞ்சி விழுவாரு. வியாதியோட குணம் அது. காசம் பொல்லாத வியாதி. அது வந்தா அவ்வளவுதான், உலுக்கி உலுக்கி எடுத்துவிடும்.

தம்பி! பேச்சே, ஆசாமி எப்படிப்பட்டவனாக இருக்க முடியும் என்கிறதைக் காட்டிவிடுகிறதல்லவா? ஆமாம், கடைவீதியிலே கனகசபைக்குச் சரியான போட்டி யார் என்று கேட்டால் இந்த வடிவேலுவைத்தான் காட்டுவார்கள். கனகசபை யுடன் போட்டியிட்டுப் போட்டியிட்டுப் பொருள் நட்டம் அதிகம்; ஆனால், ஆசாமி சளைக்கவில்லை. கனகசபையை அடக்கி ஒடுக்கி மூலையிலே உட்கார வைக்காவிட்டால், என் ஒரு பக்கத்து மீசையையே எடுத்து விடுகிறேன் பார்! என்று பகிரங்கமாகச் சொன்னவன். அவன் மனத்திலே ஒரு மகிழ்ச்சி. காசநோய் காரணமாக, கனகசபை வியாபார வேலையைச் சரிவரக் கவனிக்க முடியாது என்பதாலே. நேரிலே போய்ப் பார்த்து, தைரியம் சொல்லிவிட்டுப் பழனிப் பிரசாதம் கூடக் கொடுத்துவிட்டு வந்தார். அது ஊரார் பார்க்க. இந்தப் பேச்சு, உள்ளத்தின் குமுறல், உண்மை!

காசம்டா, பயலே, காசம்! பெரியவீட்டுப் பிள்ளை, சொத்து இருக்குது அந்தஸ்து இருக்குதுன்னு சொல்லி, கிளிபோல உள்ளவளைக் கொடுத்தாளே பேராசைக்காரி பெருந்தேவி, தெரியுமா விஷயம், மாப்பிள்ளை இருக்கானே அவனுக்குக் காசம்! அவளைக் கல்யாணம் செய்துகொண்டு, என்ன சுகத்தைக் காணப் போகிறாள் செல்வி. அழுது கொண்டு இருக்க வேண்டியதுதான். ஊரே திருவிழா கொண்டாடினாலும், இந்தப் பய, வீட்டோடு முடங்கிக் கிடப்பான், அவனுக்குப் பணிவிடை செய்துகொண்டு இந்தப் பெண் செல்லி இருக்குது! பெரிய டாக்டர் வந்தாரா? புதிய மருந்து கொடுக்கல்லியா? - இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டிய வேலைதான் செல்லிக்கு! பெண்ணைப் பெரிய இடத்திலே கொடுக்கிறோம், மோட்டாரிலே மாப்பிள்ளையும் பெண்ணும் போவார்கள், கடற்கரையிலே உலாவுவார்கள் என்றெல்லாம் கனவு கண்டாள் பெருந்தேவி. இனி ஒவ்வொரு டாக்டர் வீடாகப்போய் வரவேண்டிய வேலைதான் செல்லிக்கு. காசம், தீராதநோய்! சொத்து இருந்தும் தான் சுகம் இல்லை. எந்த நேரத்திலும் கவலை, கலக்கம். போயும் போயும் ஒரு காச நோய்க்காரன் தானா கிடைத்தான் செல்லிக்கு என்றுதான் பலரும் பேசுவார்கள். கூலிவேலை செய்பவனாக இருந்தால் போதும் என்றுதான் ஒரு பெண் எண்ணுவாளே தவிர, காச நோய் இருந்தால் என்ன, கை நிறைய வளையல் போட்டிருக்கிறான். காதிலே வைரக்கம்மல் போட்டிருக்கிறான், மாளிகையிலே வாசம் செய்ய வசதி செய்திருக்கிறான், என்று எண்ணியா திருப்திப்பட்டுக் கொள்ள முடியும், பாவம்! அவனுக்குக் காசம்! அதைப் பார்த்துக் பார்த்துக் கலங்கிக் கலங்கி இந்தப் பெண்ணுக்கு என்னென்ன நோய் வந்துவிடுமோ யார் கண்டார்கள்.

செல்லி! - என்று, கனகசபையின் மூன்றாந்தாரம், மங்கையர்ச் செல்வியைத்தான், செல்லமாகப் பெயரிட்டுப் பேசுகிறார். தர்மகர்த்தா தனபால். பெயரில் மட்டுமே "தனம்' இருந்தது, கையிலே, கொடுத்துவராமல் காலாவதியாகிவிட்ட கடன் பத்திரங்களும், புதுவருடப் பஞ்சாங்கமும்தான்! அவருடைய ஒரே மகன் சதாசிவத்துக்கு மங்கையை - செல்லியைத் தரும்படி, போய்க்கேட்டார் தனபால், நடையாய் நடந்தார். செல்லியின் தாயார் பெருந்தேவி ஒரே பிடிவாதம் பிடித்தாள், தன் மகளைச் சீமாட்டியாக்கிக் கண்குளிரக் காணவேண்டுமென்று.

இப்போது என்ன காண்கிறாள் பெருந்தேவி! காசநோய் பிடித்த கனகசபையைத்தானே! என்று கேட்கிறார், தனபால்; பெருந்தேவி வீட்டுத் தோட்டக்காரனிடம், அவன் என்ன சொல்லுவான் பாவம். பெருந்தேவியிடம் போய்ச் சொல்ல முடியுமா! அவன் பார்க்கிறான் பெருந்தேவியை - அதிகமாகக் கவலைப் பட்டதாகக் கூடத் தெரியவில்லை. காசமாமே என்று யாரோ சொன்னதற்குக்கூட பெருந்தேவி, தரித்திரத்தைவிட ஆபத்தான நோய் வேறே கிடையாது, பணத்தைப்போல கைகண்ட மருந்தும் வேறே கிடையாது என்று சொன்னதாகக் கேள்வி.

அவளைக் கண்டிப்பதன் மூலம், தனபால், தன் மகனுக்கு அவன் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடியாமற் போய்விட்டதே என்ற துக்கத்தைத்தான் வெளியிட்டுக் கொண்டார்.

காசநோயா! அவருக்கா? பாரேன், எவ்வளவு வசதியான வாழ்க்கை அவருக்கு. அவருக்கே காசநோய்! அவ்வளவு கெட்டுவிட்டிருக்கிறது ஊர். எதில் பார்த்தாலும் கலப்படம், ஏன் உடல்நலம்ட கெடாது. பலபேர் படாதபாடு படுகிறார்கள். காசம், குன்மம், இப்படிப்பட்ட பொல்லாத வியாதிகளால். இந்தக் காலம் அப்படிப்பட்டதப்பா, அதற்கென்ன செய்வது, என்னென்னமோ வியாதிகள். காற்றிலேயே விஷம் கலந்துவிட்டிருக்கிறது. தண்ணீர் சுத்தம் இல்லை. சாப்பாட்டுப் பண்டங்கள் மோசமான நிலையில். காசம் போன்ற நோய் ஏன் வராது?

பழைய சம்பிரதாயங்களைக் கைவிட்டு விட்டதாலேயே எல்லா நோய்களும் வந்துவிட்டன என்று பிரசாரம் செய்து, பிரமுகர்களிடம் நன்கொடை திரட்டி "யோகாசன சாலா' அமைத்து அதற்குத் தலைவர் ஆகிவிட்டிருந்த "வியாசர்' இதழ் ஆசரியர் வேம்பு அவர்களின் விமரிசனம் தம்பி! ஒவ்வொரு சம்பவத்தையும், தனது கருத்துக்கு வலுவளிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் தெரிந்தவர், கனகசபைக்குக் காசம் என்றவுடன், அவரிடம் சென்று பதினைந்தே நாட்கள், "பத்மாசனம்' முறைப்படி - பிறகு காசம் இருக்கிறதா என்று தேடவேண்டும், ஓடியே போய்விடும் என்று சொல்லிவிட்டு, வியாசர்' இதழுக்குக் கனகசபையை ஆயுள் சந்தாதாரர் ஆக்கிக் கொண்டவர். தமது யோகாசன சாலையை வளரச் செய்ய, கனகசபையின் காசம் ஒரு வரப்பிரசாதம் என்று எண்ணி மகிழ்ந்து பேசுகிறார்.

தம்பி, பார்த்தனையா, உலகத்தின் போக்கை! கனவான் ஒருவருக்குக் காசநோய் என்றவுடன் எந்தெந்த நிலையினர், என்னென்ன நோக்கத்துடன், பேசுகிறார்கள் "பார்த்தனையா?

கனகசபை, சீமான்; ஆகவே அவருக்குக் காசம் என்றதும் பலருடைய கவனமும் அதிலே செல்கிறது. அவரவர்கள் தமக்கும் கனகசபைக்கும் உள்ள தொடர்பு கிளறிடும் எண்ணத்துக்கு ஏற்றவிதமாகப் பேசுகிறார்கள்.

காசம் போன்ற நோய் மட்டுமல்ல, கனவானைப் பீடித்துக் கொள்ளக்கூடிய ஆணவம் என்ற நோய் பற்றிக்கூட, ஒவ்வொருவர் கூறிடும் கருத்தும், அவர்களுக்கும் அந்தச் சீமானுக்கும் உள்ள தொடர்பின் தன்மைக்கு ஏற்றபடிதான் அமையும்.

ஆணவம் கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது, தவிர்க்கப் பட்டாக வேண்டியது. இது பொது இலக்கணம்; பாடப் புத்தகங் களில். ஆனால் சமூக அமைப்பு இன்றுள்ள நிலையில் ஆணவம் பிடித்த ஏழையை அடக்கிட, கண்டித்திட ஆயிரம்பேர் ஓடோடி வருவார்கள், உருட்டு விழிகாட்டியபடி, ஆனால் செல்வத்தாலோ, பதவியாலோ உயர்ந்த இடத்தில் அமர்ந்துவிட்ட கனவான், ஆணவன் கக்கினால், ஏன் என்று கேட்டிட, எதிர்த்து நின்றிட மிகப் பெரும் பாலானவர்கள் வரமாட்டார்கள். அஞ்சுவர்! ஒதுங்கிக் கொள்வர்! முணுமுணுப்பர்!

சரி, தம்பி! காசநோய்க்காரனைப் பற்றிப் பலர் பல்வேறு விதமாகப் பேசினார்களே, உனக்கு என்ன தோன்றுகிறது. பார்த்துவிட்டுத்தான் சொல்லுவேன் என்கிறாயா, சரி வா! போய்ப் பார்ப்போம்.

என்ன அண்ணா! குடிசைக்குள் போகிறாயே..... காசநோய்.... கனவான் மாளிகையில் அல்லவா இருப்பான், இங்கு....! என்று தானே கேட்கிறாய். தம்பி! உற்றுக்கேள்! இதுவும் காசநோய்க் காரன் வீடுதான்! ஏழை இல்லம்.

என்னை என்ன செய்யச் சொல்றே. காசம்னு இப்பத் தான் தெரியுது. பெரிய டாக்டர் முப்பது ரூபா வாங்கிக் கொண்டு, அதற்குப் பிறகுதான் இது காசம்னு சொன்னாரு. நீர்கோத்து கிட்டு இருக்குது வேறே ஒண்ணும் இல்லே, எண்ணெயையைக் காய்ச்சித் தேய்ச்சி நாலு வாரம் தலைமுழுகுன்னு, நம்ம வைத்தியர் சொன்னாரு. இதற்கு முன்னே அவர் சொன்னா சொன்னபடி தானே நடந்து வந்தது. நம்பினேன். நாளை ஒட்டிவிட்டாயே, வியாதி முற்றிவிட்டிருக்குதே என்ற கோபிக்கிறார் பெரிய டாக்டர். நான் என்ன செய்ய. இதுக்கு மருந்து மட்டும் சாப்பிட்டா பிரயோஜனம் இல்லையாம். ஆகாரமுறையே மாறணுமாம். மாறணும்னா என்னா தெரியுமா; டாக்டர் சொல்கிற முறைப்படி சாப்பிட வேண்டுமென்றா வேலைக்கு மூன்று ரூபா வேணும். ஐயா நான் ஏழைன்னு சொன்னேன்; அவரு சிரிக்கிறாரு. காசம், ஏழை பணக்காரன் என்றா வித்தியாசம் பார்க்கும்னு கேட்கிறாரு. வெட்கமாகக் கூட இருந்தது அவர் பேச்சைக்கேட்க. வாரத்துக்கு மூன்று ஊசியாம்; ஊசி ஒன்றின் விலை பதினைந்து ரூபாயாம், இப்படி ஆறு மாதமாம். அத்தோடு விடுதா! அந்த ஆறு மாதம் அலையக்கூடாதாம், பாடுபடக் கூடாதாம். அதைவிட வேடிக்கை துளியும் கவலை இருக்கக்கூடாதாம். கேட்டயா! கவலை இருக்கக் கூடாதாம் இந்த வியாதிக்கு. அந்தப்பய வீட்டை விட்டுப் போயி வருஷம் இரண்டு ஆகுது. அவனுக்குக் கழுத்தை நீட்டிய பாவத்துக்காக அந்தப் பொண்ணு இங்கே குமுறிக்கிட்டு இருக்குது, இந்தப்பய நாலு எழுத்து படிப்பான் நாணயமா இருப்பான்னு நினைச்சா, வீடு தங்கறதில்லை படிப்பிலே வகையில்லை, இப்படி இருக்குது நம்ம குடும்பம்; நான் கவலைப்படக் கூடாதுன்னு டாக்டர் சொல்கிறார்; நினைத்தாலே சிரிப்புத் தான் வருது. மிளகா மிஷனுக்குப் பக்கம் இருப்பவன், தும்மக்கூடாது இருமக்கூடாதுன்னு சட்டம் போட்டா நடக்கிற காரியமா! அதுபோல இருக்குது டாக்டர் சொல்றது. என்கூட வேலை பார்க்கறானே வெள்ளையன் அவன், காசம்தானே இது பரவாயில்லையே, வேறே எத்தனையோ பயங்கரமான வியாதிகளெல்லாம் இருக்கு தெரியுமான்னு சொல்லி மிரட்டி வைக்கறான். உயிருக்கு மிஞ்சியா உடைமை, வீட்டைக் காட்டி ஒரு ஆயிரம் ஐந்நூறு கடனை வாங்கிச் செலவழிச்சி, நோயைக் குணப்படுத்திக்க என்கிறாரு என் சிநேகிதர். ஆனா, வீட்டை விற்கணுமா னாலும், ஓடிப்போயிருக்குதே ஒரு தறுதலை, அதுவந்து கையெழுத்துப் போட்டாகணுமாம். காச நோய்க்காரன்னு தெரிந்தா போதும், வேலையிலேயே இருந்து நீக்கிவிடு வாங்க. எத்தனையோ தொல்லையைத் தாங்கித் தத்தளிக்கிற என்னைப் பார்த்தா வந்து சேரவேண்டும் இந்த வியாதி!

புரிகிறதல்லவா, தம்பி! ஏழை வீடு! காசநோய் என்று தெரிந்து கொள்வதற்குள்ளேயே, நோய்முற்றி விட்டிருக்கிறது. கனவானா, உடனே டாக்டர் கண்டுபிடித்துக்கூற. இவன் உழைப்பாளி - மண்டி பண்டரிநாதன் கடையிலே எடுபிடி வேலையிலே துவங்கி இப்போது எண்பது ரூபா சம்பளம் வாங்கும் மானேஜர் வேலை பார்க்கிறான் - பெயர் ஆரோக்கிய சாமி! மனைவி பெயர் தெரியுமா, சந்தோஷத்தம்மாள்! கிருத்தவக் குடும்பம் தம்பி! ஓடிப் போய்விட்ட பயல் பெயர் சாலமன். "இன்னொன்று' பெயர் பீடர்! என்ன செய்வான் இந்தக் காசநோய்க்காரன் டாக்டர் சொல்கிறபடி நடக்கமுடியுமா! கவலை இருக்கக்கூடாதாமே! பார்க்கும்போதே உனக்குக் கவலையாகத்தான் இருக்கும். தம்பி! புறப்படு! காசநோய் கொண்ட இந்த ஏழையைப் பற்றி என்னென்ன பேச்சு கிளம்பியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஏழைதான், என்றாலும் என்ன செய்வது, வியாதியை ஓட்டியாக வேண்டுமே. எங்காவது கடன் வாங்க வேண்டியது தான். வேறேவழி. அநியாய வட்டி கேட்டால் கூடச் சம்மதிக்க வேண்டியதுதான்.

தம்பி! அதோ மண்டிக்கடைக்கு எதிர்ப்புறம் பார்த்தனையா, வட்டிக்கடை! உள்ளே போகலாம்.... என்ன கண்டிப்பான குரல், கேட்டனையா! காசம் என்று சொன்னதும், கல்மனமும் கரையும் என்று நாம் எண்ணிக்கொள்கிறோம். இந்தக் குரல், அதிகாரக் குரல்! கேள், தம்பி!

காசமா? ஆராய்ச்சி நடத்தினார் போலிருக்கு! காசமா இருந்தா என்ன, குன்மமா இருந்தா என்ன! பட்ட கடனைத் திருப்பித்தரச் சொல்லி, கண்டிப்பாய் பேசினா, உடனே காசம், குன்மம், கைகால் விழுந்துவிட்டது என்று எதையாவது சொல்லிக் கா-லே வந்து விழுவது! காசமாமா, காசம்! அதற்கு என்னை என்ன செய்யச் சொல்றான் கொடுத்த கடனை விழுங்கிவிட்டா, காசம் போய்விடும், அதனாலே பணத்தைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்கல்லே, உன் காசம் போனால் போதும்னு சொல்லச் சொல்றானா? இல்லையானா, கலயத்தைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடிப் பச்சிலை அறைச்சித் தரச் சொல்லுகிறானா! காசம் வந்துவிட்டதாமா, காசம்! வரும், வரும்! கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா காசமும் வரும், கண்ணிலே புண்னும் வரும்!

கடன் கொடுத்தவனிடம் போய், காசம் - குன்மம் - காய்ச்சல் என்று எதைச் சொல்லி என்ன பயன்? அதிலும் வேடிக்கை என்ன வென்றால் தம்பி! கடன் பட்டவனுக்கு நோயும் கண்டுவிட்டது என்றால், கடன் கொடுத்தவன் மேலும் கண்டிப்புக் காட்டுவான்! சீக்கிரமாகக் கடனை வசூ-த்துவிட வேண்டும். ஆசாமி போய்விட்டா கொடுத்த பணமல்லவா கோவிந்தா ஆகிவிடும்! ஆகவே, இப்போதே பணத்தை வசூலித்தாக வேண்டும்.

அந்தப் பரபரப்புடன் வட்டிக்கடைக்காரன் பேசுகிறான். கடனிலே ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுத்து விட்டால், பிறகு அவனே கூட; பரிவுகாட்டுவான் பேச்சில், பயம்வேண்டாம் காசநோய்க்காக என்பான், மருந்து பற்றிய விவரம் கூடச் சொல்லுவான். இப்போது அவனுக்கு வேண்டியது பணம்! அந்த நோயாளி பிணமாவதற்குள்!