அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முதல் பந்தி!
1

விடுதலைக் குற்றம் -
நேரு பண்டிதரின் பேராற்றல் -
கொள்கையில் உறுதி -
நீண்டகாலச் சிறை

தம்பி!

மேளதாளம் முழங்க, வாழ்த்தொலிகள் பீறிட்டுக் கிளம்ப, கோலோச்சுவோருக்குப் பாராட்டுப் பண் பாடியபடி கொடி ஏந்திகள் நடைபோட, கோலாகலமாக, "சுதந்திர தின' ஊர்வலம், எங்கள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது, அவர்கள் நம்புவார்களோ இல்லையோ, என் வார்த்தையை - நான், பண்டித ஜவஹர்லால் நேருவின் சொற்பொழிவுகள் கொண்ட தொகுப்பு நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஊர்வலத்திலே கலந்து கொண்டவர்களிலே, எத்துணை பேர், அந்த நூலைப் படித்தவர்களோ, நான் அறியேன்! பலர், நாடாளும் நிலையைக் காங்கிரஸ் கட்சி பெற்ற பிறகு கதர் அணிய ஆரம்பித்தவர்கள் என்பதை நானும் அறிவேன் - ஊரறியும். எனவே, அவர்கள், பண்டிதரின் சொற்பொழிவுப் புத்தகத்தை, ஏன் தொட்டிருக்கப் போகிறார்கள், பாபம்! அதிலும், நான் குறிப்பிடுவது, இந்திய துரைத்தனத் தலைவராக நேரு பண்டிதர் அமர்ந்த பிறகு ஆற்றிய உரைகள் அல்ல! அன்றோர் நாள்! விடுதலை இயக்கத்தின் முன்னணி நின்று, இலட்சிய முழக்கமிட்ட நாட்களில்! "கனவு காண்கிறான் இந்தச் சீமான் மகன்! கற்றதைக் கதைக்கிறான்! கவைக்குதவாதன பேசுகிறான்! பரந்த சாம்ராஜ்யத்துக்கு அதிபனாக உள்ள வெள்ளையனைப் "பயமறியாப் பருவம்' காரணமாக எதிர்க்கிறான் - நடக்கிற காரியமா இது?'' - என்று கண் சிமிட்டியபடி, கேலிப் புன்னகை தவழ, "மேதைகளும்', "அனுபவக் களஞ்சியங்களும்', பேசிக் கொண்டிருந்த நாட்கள்! அந்த நாட்களில், பண்டிதர் பேசியவற்றினைப் படித்துக்கொண்டிருந்தேன் - இன்று கிடைத்த அரசியல் செல்வாக்கைச் சுவைத்தபடி, தேசியத் தோழர்கள், உரத்த குரலிலே முழக்கம் எழுப்பிக்கொண்டு, ஊர்வலம் வந்தபோது. எப்படிப்பட்ட நேரு தெரிந்தார் என்கிறாய், தம்பி! எழுச்சியூட்டும் நேரு! தளைகளைப் பொடிப் பொடியாக்கி விடவேண்டும் என்ற துடிப்பினை எவரும் கொள்ளத்தக்க வீரம் ஊட்டும் பேச்சாளர்! அச்சம், தயை, தாட்சணியம், அருகே நெருங்க முடியாத நிலையினர்! மாற்றானிடம் மண்டியிடுபவன், மாபெரும் துரோகி! பேரம் பேசுபவன் கோழை! குழைபவன் கோமாளி! திகைத்துக் கிடப்பவன், உருவில் மட்டுமே மனிதன்! - என்று பண்டிதர் நாடெங்கும் இடிமுழக்கமெனக் குரல் கொடுத்து, சோர்ந்த உள்ளங்களைத் தட்டி எழுப்பி, படை திரட்டிக்கொண்டு வந்த நாட்களிலே, அவர் பேசியவை இன்றும், என்றென்றும், விடுதலைக் கிளர்ச்சியிலே, தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள, எவருக்கும் வீர உணர்ச்சியை ஊட்ட வல்லவை!!

"ஆனாலும்'' - "என்ன செய்வது'' - "இப்போதைக்கு இதுதான்'' - "இயன்ற அளவுதானே'' - "படிப்படியாக'' - என்ற சொற்கள் பேச்சிலே இடம் பெறாத நாட்களைக் குறிப்பிடு கிறேன். உலைக்களத்திலிருந்து பழுக்கக் காய்ச்சப்பட்ட நிலையில் வெளியே எடுக்கப்படும் இரும்புக் கம்பியைப் பார்த்திருப்பாயே, தம்பி! அந்த நேரு!! ஆமாம்! இப்போது உள்ள பட்டுக் குஞ்சம் கட்டப்பட்டுப் பளபளப்பான உறையில் இடப்பட்டுள்ள உடைவாள்போன்ற நேரு அல்ல! சந்தனப் பொதிகையில் சிந்துபாடி விந்தைகள் செய்திடும் பூங்காற்று! மின்சார விசிறி தரும் காற்று அல்ல!! மரத்திலே பழுத்து, காற்றுக்கு ஆடிடும் கனி! கீழே விழுந்து, ஒரு பக்கம் கருத்துப்போன நிலையில் உள்ள பழம் அல்ல! "பாரதத்தை'க் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப், பலரும் பரிவு காட்டிப் பக்கம் நின்று துணை புரியவேண்டும் என்ற முறையைத் துணைகொண்டு, இலட்சியத்தைக் குறைத்தும், மறைத்தும், தேய்த்தும் உருக்குலையச் செய்துவிட்ட நிலைக்குத் தம்மைத் தாமே துரத்திக்கொண்ட துரைத்தனத் தலைவரின் பேச்சு அல்ல - அதிலே தயக்கம், தடுமாற்றம், முரண்பாடு, முணுமுணுப்பு, மிரட்டல் என்பவைகள் கலந்துவிட்டன!

தொடுத்த கணை "விர்'ரெனப் பாய்கிறதல்லவா! பாயும் அம்பு! நான் குறிப்பிடும் நேரு!!

குறி தவறிக் கீழே வீழ்ந்து கிடக்கும் அம்பு போன்றுள்ள நிலையினராகிவிட்ட நேரு அல்ல!!

ஊர்வலத்தினர், உலக நாடுகளிடம் கடன் வாங்கவல்ல, உள்நாட்டிலே தேர்தல் வெற்றி பெற்றுத் தரத்தக்க, எதிர்க் கட்சிகளை அழித்தொழித்திடும் ஆற்றலைக் காட்டி நிற்கும், நேருவின் புகழ் பாடிக்கொண்டு சென்றனர். நானோ "பழுதுபடாத இரத்தினமாக' இருந்த நாட்களில் அவர் பேசியவற்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர்களோ அடுத்து வர இருக்கும் தேர்தலை எண்ணிக்கொண்டு, நேருவை வாழ்த்திக்கொண்டிருந்தனர்.

வழக்குமன்றத்திலே முழக்கம், வாலிபர் மாநாட்டிலே பேச்சு, காங்கிரஸ் மாநாடுகளிலே பேருரை, பத்திரிகை நிருபர்களிடம் விளக்கம். இவ்வண்ணம் வடிவங்கள் பல உள; ஆனால் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது, வீர உணர்ச்சி, செயலாற்றவேண்டுமென்ற துடிப்பு, இலட்சியம் வெற்றிபெற்றே தீரும் என்ற திடமான நம்பிக்கை, மக்கள் திரண்டெழுந்து விட்டனர் என்பதைக் கண்டதால் ஏற்பட்ட களிப்பு!

வாதாடுவதற்காக, நான் வழக்குமன்றத்திலே நிற்கவில்லை! என் நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்கு நான் வாதாடவா வேண்டும்!! பொருள் இல்லை அதற்கு.

ஏதேதோ, செக்ஷன்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள், நான் செய்த குற்றங்கள் என்பதாக. நான் ஒரே ஒரு குற்றம்தான் செய்திருக்கிறேன் - தொடர்ந்து செய்து கொண்டு வருவதாகவும் இருக்கிறேன். என் நாட்டை அந்நியன் பிடியிலிருந்து மீட்பதற்காகப் போராடுவது. அது குற்றம் என்றால், நான் குற்றவாளி! சந்தேகமின்றி!! உங்கள் சட்டப்படி!! ஆனால் அதனை நான் செய்யாதிருந்தால், நான், என் நாட்டுக்கு, மக்களுக்கு, மாபெருந் துரோகி யாவேன்! அதனை அறிந்தே அடிமைத்தனத்தை எதிர்க்கும் காரியத்திலே ஈடுபட்டிருக்கிறேன்! சட்டம் அதைக் குற்றம் என்று கூறுகிறதா? கூறட்டும்! நீங்கள் காட்டும் சட்டத்தை விட, மேலான சட்டம் ஒன்றுக்கு நான் கட்டுப்பட்டவன்! அது நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டாகவேண்டிய கடமை!

இங்கு, சட்டங்களை அலசுவார்கள்; ஆராய்வார்கள், மறுப்புகள், குறுக்குக் கேள்விகள் கிளம்பும். அறிவேன். ஆனால், நியாயம் பெற இது அல்ல இடம் என்பதை அறிந்திருக்கிறேன். வழக்கு மன்றத் தலைவரிடம் மதிப்புக் குறைவு அல்ல - இந்த வழக்குமன்றம், சட்டம் இவையாவும், என் நாட்டை அடிமைப்படுத்திவிட்டுள்ள அந்நியனின் கைப்பாவைகள்! எடுபிடிகள்! ஏவலர்கள்! இங்கு, நியாயம் எப்படிக் கிடைக்கும்? எதிர்பார்க்கத்தான் முடியுமா?

தண்டனை தாருங்கள்! தாராளமாக! நீண்டகாலத் தண்டனையாக!! விடுதலைப் போரில் ஈடுபடுபவனுக்கு அதனினும் மேலான பேறு இல்லை; அதனினும் மேலான மகிழ்ச்சி தரவல்லது - ஒரு சமயம், விடுதலைப் போரிலே மடிவது அல்லது விடுதலை பெறுவது என்பதன்றி - வேறு எதுவாகவும் இருக்க முடியாதல்லவா?

சிறையில் தள்ளுங்கள் என்னை! என் ஆருயிர்த் தோழர்கள், பெருமதிப்புக்குரியோர் சிறையில் உள்ளனர்; நான் வெளியில் இருக்கிறேன்; இதுதான் தாங்கமுடியாத வேதனை! என்னை, என் தோழர்கள் உள்ள இடத்துக்கு அனுப்புங்கள்!!

இந்த நாடே பெரிய சிறைக்கூடம்! இதிலே உள்ளே சென்றால்தானா சிறை! அளவுதான் பெரிது, சிறிது! நிலைமையில் வித்தியாசம் இல்லை! தண்டனைதரக் கூடியுள்ள இடத்தில், வாதாடிக் காலங் கழிப்பானேன்! கொடுப்பதைச் சற்றுக் கடினமானதாகக் கொடுங்கள்!!

தம்பி! வழக்கறிஞர்களிலேயே மிகக் கீர்த்தி வாய்ந்தவர், நிரம்ப வருமானம் உடையவர், வாழ்க்கையில் இன்பம் காண்பவர்; அரண்மனைபோன்ற வீட்டை உடையவர்; ஆள் அம்பு ஏராளம்; நிலபுலம் நிறைய; ஊரிலே செல்வாக்கு; இவ்வளவும் பெற்றுத் திகழ்ந்த மோதிலால் நேருவின் திருக்குமாரர், பல ஆண்டுகள் இங்கிலாந்திலே படித்துப் பட்டம் பெற்றவர், இதுபோல, வழக்குமன்றம் நின்று முழக்கமிடக் கேட்பவர்கள், எழுச்சிப் பிழம்பாகிவிடுவரன்றோ! ஆமாம் அதற்குத்தானே அவரும் அவ்விதம் பேசினார் - வழக்குமன்றத்தினருக்காகவா அந்தப் பேச்சு - நாட்டு விடுதலை வீரர்களுக்காக!!

நேரு பண்டிதர், உலகிலே பல நாடுகள் விடுதலை பெற நடத்திய, வீரக்காதைகளை, காப்பியங்களை நன்கு கற்றுணர்ந்தவர் - விடுதலைப் போர் நடத்தியவர்களில் சிலரைக் கண்டும் பேசியவர் - விடுதலைப் போரிலே வீழ்ந்துபட்டவர்களின் கல்லறையின்மீது, விடுதலை பெற்ற மக்கள், கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தும், உள்ளமுருக்கும் காட்சிகளைக் கண்டவர் - எனவே, அவருக்கு, வழக்குமன்றத்திலே நிற்கும்போது, தம்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள், சட்டப்புத்தகத்திலே, அவை களுக்காகத் தரப்பட்டுள்ள விளக்கங்கள் எனும் இவை அல்ல, நிச்சயமாக. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் அணிவகுப்புத் தான் தெரிந்திருக்கும். நான் கண்டேனே, கோலாகலமாகக் கொடி ஏந்திச் சென்றவர்கள், அந்த அணிவகுப்பிலே, மருந்துக்குக் கூட அப்படிப்பட்ட, விடுதலைப் போர்புரிந்த மாண்பினர் கிடையாது! ஆகவேதான், மிக உரத்த குரலிலே முழக்கமெழுப்பினர்! தம்பி! குயிலுக்கு முடிகிறதா, காக்கைபோலக் கரைய!! இனிமை என்று எண்ணிக்கொண்டு, வலிவற்ற குரலெழுப்புகிறது! காக்கை அப்படியா! காதைக் குடைந்தெடுத்து விடுகிறதல்லவா? உள்ளபடி, விடுதலைப் போரிலே ஈடுபட்டுக் களம் நின்று, தாக்குதலுக்கு ஆளாகித் தழும்பேறப் பெற்றவர்கள், அன்று பேசக்கூட இயலாதபடி, கண்கள் களிப்புக் கவிதை பாடிடும் நிலையில் இருப்பர். கட்டித் தங்கம், பூமிக்கடியில்தானே தூங்கி க்கொண்டிருக்கிறது! சிறு தகரத் துண்டுகள், கண்களைப் பறித்துவிடும் விதமான, ஒளி கிளப்பிக்கொண்டல்லவா உள்ளன - வெயில் வேளையில்! கடலுக்கு அடியில் அல்லவா முத்து உறங்குகிறது! கடலோர மணலில், குவியல் குவியலாக உள்ளவை வெறும் கிளிஞ்சல்கள்!!

"விடுதலை பெற்றோம், விழி பெற்றோம்'' என்றார் ஓர் பேரறிவாளர்! ஒரு நாட்டின் எழில், ஏற்றம், வளம், வாழ்வு, யாவும், வேற்று நாட்டானிடம் நாடு சிக்கிக் கிடக்கும்போது, மங்கிப் போகிறது. நமது நாடு ஏழை நாடு; வளமற்றது, வாழவைக்கும் வல்லமை பெற்றது அல்ல என்று நாமே எண்ணும்விதமான, புத்தித் தடுமாற்றத்தைக் கொடுத்துவிடுகிறது, அடிமைத்தனம், நாட்டிலே செல்வம் இருக்கும், நாட்டவர் கண்களுக்குத் தெரியாது! வயலில் வளம் இருக்கும்! பெற்றிட வழி தெரியாது! நாட்டுக்குப் புகழ்மிக்க வரலாறு இருக்கும், படித்திட வாய்ப்பு இருக்காது! கண்ணுக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்! நம்மை நாமே ஆண்டுகொள்ள முடியாதவர்கள் - நம்மை ஆள நம்மைவிட வலிவுமிக்கவர்கள், அறிவுமிக்கவர்கள், அனுபவமிக்கவர்கள் வந்திருக்கிறார்கள். எப்படி ஆள்வது என்பது அவர்கட்குத் தெரியும்! ஆளும் பொறுப்பை நாம் அவர்களிடம் விட்டு விட்டு, ஆடுமாடுகளை மேய்த்திடலாம், காடுமேடு திருத்திடலாம், கைகட்டிப் பிழைத்திடலாம், கடைகண்ணி வைத்திடலாம், கால் வயிற்றுக்குக் கிடைத்தாலும், கந்தா! முருகா! என்று பஜனை செய்தபடி இருந்து, மாயாபந்தம் விடுபட்டு, மகேசன் அடி சேர்ந்துவிடலாம். அதுவரையில் இந்தக் "கட்டை' நடமாடும் இடம், இந்த உலகம் - நாடு - வீடு! - என்று வேதாந்தம் பேசிடுவர் மக்கள் - அடிமைப் பிடியில் இருக்கும் காலை! அவர்கட்கு, விழி இல்லை - நாட்டைக் காண, நல்வழி காண! அதனால்தான் பேரறிவாளர் சொன்னார், "விடுதலை பெற்றோர், விழி பெற்றோர்!'' என்று.

ஊர்வலத்திலே சென்றவர்கள், அந்தவிதமான விழி பெற்றவர்கள் அல்ல! விடுதலை பெற்றுத் தந்தவர்களின் முகாமிலே நமக்கு இடம் கிடைத்துவிட்டது! அவர்கள் ஈட்டியுள்ள செல்வாக்கு, நமக்குப் பயன்பட வழி கிடைத்து விட்டது! அவர்கள் பெற்றுள்ள வடுக்களைக் காணும் மக்கள், நெஞ்சம் நெக்குருக நிற்கிறார்கள்! உமது கட்டளைப்படி நடந்து கொள்கிறோம் என்று உள்ளம் உருகிக் கூறுகிறார்கள்! நாடு, மீட்டுத் தந்தவர்களுக்கு, நன்றி காட்டுவதும், அன்புக் காணிக்கை செலுத்துவதும், நமது தலையாய கடமை என்ற உணர்வு கொண்டவர்களாக மக்கள் இருப்பது அறிந்து, இந்தப் பொன்னான வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்ற நோக்குடன், விடுதலைப் போர் நடாத்தியவர்களின் முகாமுக்கு, தங்கக் கூடாரம் அமைத்துத் தருகிறோம், தர்பார் மண்டபம் கட்டிக்கொடுக்கிறோம், வெற்றிவிழா நடத்துகிறோம், விருந்து வைபவம் ஏற்பாடு செய்கிறோம், இசை நிகழ்ச்சியும் நாட்டியங் களும் களிப்பூட்டும் விதமானவைகளாக இருப்பது எமது பொறுப்பு. நீவிர் நடமாடும் பாதையில் நறுமண மலர் தூவுகிறோம்; குளித்திடப் பன்னீர் வேண்டுமா? உடுத்திடப் பட்டுப் பட்டாடை தேவையா? பூண்டிட, அணிகள் வேண்டுமா? கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறோம்! கோலாகலமாக விழா நடத்திக் காட்டுகிறோம்! கண்டு களியுங்கள் - காதுகுளிர வாழ்த்துகிறோம், கேட்டு இன்புறுங்கள்! - என்றெல்லாம் பேசி, பாசம் காட்டி, நேசம் பெற்றால், கிடைக்கக்கூடிய, "பசையும் ருசியும்' விழியில் படுகிறது - மனதிலே ஆசை அலை மோதுகிறது! அந்தக் கொந்தளிப்புத்தான், உரத்தகுரல் முழக்க மாகிறது! கள்தானே தம்பி! பொங்கி வழிகிறது! இளநீர்? அப்படி இல்லையல்லவா? உற்றுப் பார்த்தால் தெரியும், வெண்ணெயை விடச் சுண்ணாம்பு, பளபளப்பான வெண்மை நிறம் காட்டுகிறது!

நான் படித்துக்கொண்டிருந்த ஏடு, பிழைக்கத் தெரிந்த வர்கள் கட்டித்தழுவி, உச்சிமோந்து முத்தமிட்டு, கண்ணே! கற்பகமே! கலிதீர்க்க வந்தவனே! என்று கொஞ்சிடும் நிலையைக் காங்கிரஸ் பெற்ற நாட்களிலே, பேசப்பட்டவைகள் அல்ல; இது என்ன வீண் வேலை! தலைகீழாக நின்றாலும் இவர்களின் எண்ணம் ஈடேறாதே! உயரஉயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? வீணாக உதைபட்டுச் சாகிறார்கள்! பிடிபட்டு வதைபடுகிறார்கள்! ஆற்றல் இல்லாமலா, அவ்வளவு தொலைவிலிருந்து, இங்கு வந்து, நம்மை அடக்கி ஆள முடிகிறது வெள்ளையரால்! படைகொண்ட முடிமன்னர்களெல்லாம், அவனைப் பகைத்துக்கொண்டு, பொடிப் பொடியாகிப் போயினர்! கோட்டைகளெல்லாம் தரை மட்டமாகிவிட்டன; புல் முளைத்துவிட்டன! தோள்வலியும் வாள்வலியும் கொண்டோர் யாம்! தொடுத்திடுவோம் கணைகள் பல, எதிரிகள் சிரம் கொய்திட! என்று வீரம் பேசியோரெல்லாம், வீழ்ந்தடித்து ஓடினார்கள், அவன் "வேட்டு'க் கிளப்பியதும், கொச்சி, திருவிதாங்கூரும், கோலமிகு மைசூரும், ஹைதராபாத்தோடு, அழகுமிகு ஜெய்ப்பூரும், போபாலும், பீகானிரும், போர்ப் புலிகள் நிரம்பிய பேரரசாம் மராட்டியமும், விருதுப் பெயர்களையே விண்முட்டும் அளவுபெற்ற எத்தனையோ அரசுகளும், எதைக் காட்டி வருவனவாம்? எதிர்த்தார் பிழைத்ததில்லை, தொழுதார் வாழ்ந்திடலாம், எனும் நிலையையன்றோ! களம் நின்று கடும் போரிட்டு, வெற்றி பல பெற்று, வீரமரபினர் என விருது பெற்றவர்கள் வீழ்ந்துபட்டனர்; இவர்கள் மேடை அதிரப் பேசிக் காணப்போவது என்ன? சிறை! சித்திரவதை தூக்குமேடை! இவைதாமே! இஃது அறியாமல், சுயராஜ்யம் எமது பிறப்புரிமை என்று சுலோகம் பாடுகிறார்களே!! பாய்ந்து வரும் வெள்ளத்தில் படகேறிச் செல்வதோ? சீறிவரும் வேங்கையைச் சிறு கோலால் தாக்குவதோ? விரண்டோர் வேழம் வந்தால், தடம்படுத்துத் தடுப்பதோ? கடற்போரில் வல்லவர்கள் - தரைப்படையில் மிக்கவர்கள் - தந்திரம் அறிந்தவர்கள் - போர் யந்திரம் வைத்துள்ளவர்கள்! இவர்களை எதிர்த்து நிற்க இயலுமோ எவராலும்? - என்றெல்லாம், பரிதாபம் காட்டியும், பரிகாசம் பேசியும், பாமரர் மட்டுமல்ல, படித்தோரும், துச்சமெனக் காங்கிரசைக் கருதிய நாட்களில், அதன் சார்பில் நின்று, பண்டிதர் பேசிய பேருரைகள் கொண்ட ஏடு நான் படித்தது.

இன்று பண்டித நேருவின் ஒரு சொல், சிலரைக் கோடிக் கணக்கான பணம் பெறவைக்கும் ஆற்றல் படைத்தது. எடுத்துக்காட்டுக்கு, இனி எவரும் அரிசிச் சாதம் சாப்பிடக் கூடாது என்று அவர் கட்டளையிட்டால், கோதுமை மண்டலத்து வணிகக் கோட்டம் கோடீஸ்வரர்கள் கொலு விருக்கும் இடமாகிவிடும்.

அன்று பண்டிதரின் பேச்சு, எத்தனையோ இளைஞர்களை இன்ப வாழ்வை இழந்துவிடச் செய்தது.

அந்த நாள் நேரு, அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறவேண்டும் என்பதற்காக எடுத்துக் காட்டிய காரணங்களை, அவர் வீர உணர்ச்சி பொங்கிடத்தக்க விதத்தில் விளக்கிய வகையைப் படித்துக்கொண்டிருந்தபோது - காங்கிரஸ் நண்பர்கள் திடுக்கிடக் கூடாது - நாம் மேற்கொண்டுள்ள காரியத்திலே எனக்கு முன்னிலும் பன்மடங்கு ஆர்வம் வளர்ந்தது!

"எவ்வளவு பெரிய தலைவர் எமது நேரு! எத்துணை வீர உரைகள் ஆற்றியவர்! அணி வகுப்புகள் நடாத்தியவர்! ஆங்கில ஏகாதிபத்தியத்தை அதிர அடித்தவர்! சிறைக்கஞ்சாச் சிங்கம்! என்பதை அவர் பற்றிய ஏடு படித்துத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகுமா, உனக்கு, அவரை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தத் தோன்றுகிறது! பித்தமோ உனக்கு! உலக வல்லரசுகளிலே முன்னணி உள்ளது பிரிட்டன். அந்தப் பேரரசே, எமது நேருவின் வீரத்தின் முன்பு தலைகாட்ட முடியாமல் ஓடோடிச் சென்று விட்டது. பேதையே, அதை எல்லாம் படித்தேன் என்றும் பேசுகிறாய். வீரம் கொந்தளிக்கும் பேச்சு என்கிறாய்! சொல்லிவிட்டு, நீ கிளம்புகிறாய் முனைபோன கத்தியும், மூளியான கேடயமும் தூக்கிக்கொண்டு, புண்ணான உடல் கொண்டோன், கண்போன குதிரை ஏறிக் களம் செல்லும் கதைபோல. நீ எதிர்க்கிறாய் எமது நேரு அரசை! அதைப் படித்தேன் இதைப் படித்தேன் என்று கூறுகிறாய். அறிவு பெறாமல், எதைப் படித்துத்தான் என்ன பலன்? நேரு பண்டிதரின் அருமை பெருமை அறியாமல், அவராற்றிய அருஞ்செயல்கள் தெரியாமல், அவரை எதிர்க்கக் கிளம்பினால், அப்படிப்பட்டவனை, "அவன் அறியமாட்டான், அந்த அஞ்சா நெஞ்சுடை ஆற்றலரசின் வீரத்தை' என்று எண்ணிப், பரிதாபப் படலாம். நீயோ, அதை நான் அறிந்திருக்கிறேன் என்கிறாய் - அறிந்தும் எதிர்க்கத் துணிகிறாயே! இது ஏமாளித்தனம் மட்டுமல்லவே - முழுக்க முழுக்க முட்டாள்தனமல்லவா?'' - என்று காங்கிரசாருக்குக் கேட்கத் தோன்றும். சிலர் இதுபோலப் பேசவும் செய்கிறார்கள். பாடக்கூடச் செய்கிறார்கள்.

பாவம், அவர்கள் பண்டித நேருவின் வல்லமைக்கு நான் அறைகூவல் விடுவதாக எண்ணிக்கொண்டு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள், பண்டித நேருவின் வலிவை மட்டுமே நம்பிப் பிழைத்துத் தீரவேண்டியவர்களாக இருப்பதால், அவருடைய வல்லமையை எவரேனும் மதிக்காவிட்டால் மருளுகிறார்கள் - எதிர்க்கத் துணிந்தால் திகைக்கிறார்கள்.

தம்பி! மிகப் பழங்காலத்தில் அல்ல, இரண்டொரு நூற்றாண்டுக்கு முன்பு வரையில்கூட, ஐரோப்பாக் கண்டத்து நாடுகளில், காதல் விவகாரச் சண்டையிலிருந்து, நாட்டுப் பிரச்சினைபற்றி எழும் சச்சரவு வரையில், ஒருவருக்கொருவர், வாட்போர் புரிந்துகொள்வதன் மூலம் தீர்த்துக்கொள்வார்கள்; அது மிகவும் போற்றப்பட்டு வந்த முறையாகவும் கொள்ளப் பட்டது சில நாடுகளில். அந்த முறையைச் சில நாடுகளில் தடுக்கச் சட்டம் இயற்றினர்; இயற்றியும் அந்த முறையைச் சிலர் துணிந்து மேற்கொண்டனர்.

அதுபோன்றது அல்ல, இன்று நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள்.

எனவே, இதிலே, தனி மனிதர்களின் தாக்கும் சக்தி, தாங்கும் சக்தி, போர்த் திறமை, போர்க் கருவிகள் என்பவைகளுக்கு இடமில்லை.