அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முதல் பந்தி!
3

நாட்டைப் பிரிவினை செய்ய வேண்டும் என்ற கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தி. மு. கழகத்தை, ஒழித்தாக வேண்டும்! அதற்காக, கழகத்தையே தடுத்துவிடலாமா? அல்லது தனித்தனியாகக் கழகத் தோழர்களைப் பிடித்திழுத்துக் கூண்டிலேற்றிக் கடுமையாகத் தண்டித்து அழிக்கலாமா? என்ன செய்து இந்தப் பிரிவினைச் சக்தியை ஒடுக்குவது என்பதுபற்றிக் கூடிக் கலந்துரையாடினர் முதலமைச்சர்கள்.

அப்போது காமராஜர், தி. மு. கழகத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை; அது தன்னாலே அழிந்துவிடும்; இப்போதே, அதிலே ஏற்பட்ட பிளவு, சண்டை, சச்சரவு! எலக்ஷனுக்குப் பிறகு, இருக்கவே இருக்காது. அதைப்பற்றிக் கவனிக்காமலிருந்துவிட்டால், அது, தன்னாலே செத்துவிடும் என்று பேசியிருக்கிறார்.

புரிகிறதா, தம்பி! காமராஜர், எதை நம்பிக்கொண்டிருக் கிறார் என்பது. நம்மிடையே பிளவு! நம்மிடையே சண்டை சச்சரவு!?. . . இதனைத்தான் மலைபோல நம்பிக்கொண்டிருக் கிறார். இதை அறியாமல், குத்திக் கிளறிவிடுவதுதான், யாராலுமே முடியாத, அபாரமான ஆற்றல் என்ற எண்ணத்தில் நடந்து கொள்பவர் எவராயினும், அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, காமராஜரின் கரத்தை, கருத்தை வலிவுள்ளதாக்கு கிறார்கள் என்றுதான் பொருள்படும்.

தம்பி! காட்டிலே உள்ள புலி, தன் இரையை வேட்டையாடித்தான் பிடித்துத் தின்னும். பலப்பல மைல்கள் வேட்டைக்காக ஓடுமாம், களைப்பு மேலிடுகிற முறையில்! அந்த விதத்தில், அடித்துத் தின்றால்தான் அதற்குத் திருப்தி.

பெருஞ் சிறகடித்துப் பறக்கும் கழுகு, இருக்கிறதே அது வேட்டை ஆடாது - துரத்தித் தாக்காது - துளைத்துக் கொல்லாது - ஆடோ மாடோ, கொல்லப்பட்டோ, செத்தோ, பிணமாகி, அழுகி, நாற்றம் அடிக்கும் நிலையிலே கிடக்கும் போதுதான், கீழே இறங்கிவந்து, குத்திக் கிளறித் தின்று, பசி தீர்த்துக்கொள்ளும்.

சில முதலமைச்சர்கள் நம்மை வேட்டையாடிக் கொல்ல வேண்டும் என்று திட்டம் தருகிறார்கள்.

காமராஜரோ, கழுகு முறையைப் பின்பற்றலாம் என்கிறார்.

வேட்டையாட நினைக்கும் திட்டத்தினர், கழகத்தைத் தடைபோட்டு, ஒழித்துக் கட்டலாம் என்று நினைப்பதும் பேதமை. கழுகாகலாம் என்று கூறும் காமராஜரின் யோசனையும் பலிக்கப் போவதில்லை.

விடுதலை இயக்கம், தடையால், படையால், அழிவதில்லை!

விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்து விட்டோம் என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால், அது புதைகுழியைப் பிளந்துகொண்டு, மீண்டும் மீண்டும் எழும்!

சில ஆறுகள் ஓடிக்கொண்டே வருமாம்; இடையிலே காணாமலே போய்விடுமாம்! பிறகோ நெடுந் தொலைவில் வேறோர் இடத்திலே அதே ஆறு கிளம்பி ஓடி வருமாம்! தம்பி! காணாமற் போய்விட்டது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது, என்ன நடக்கிறது என்றால், ஆறு ஒரு பிலத்தின் வழியாகப் பூமிக்கடியில் சென்றுவிடுகிறது! மறைந்துவிடுகிறது! பிறகு? நெடுந்தூரம் அடிவாரத்திலே ஓடி, மீண்டும் "குபுகுபு'வென மேல் பக்கம் கிளம்பி, மற்றோர் வெடிப்பு வழியாக வெளியே வந்து, பழையபடி ஆறாகி ஓடுகிறது! விடுதலை இயக்கமும் அப்படித்தான். வெளியே நடமாடவிடாதபடி தடைபோட்டு விடுவதாலே, உணர்ச்சி அழிந்துபோய்விடாது! இடம் பார்த்து, காலம் பார்த்து, வழிபார்த்து, பெருக்கெடுத்து ஒடிவரும். எத்தனை முறை, வெள்ளைக்காரக் கவர்னர்கள் சீமைக்குச் சேதி அனுப்பினார்கள் - "காங்கிரஸ் தலைகாட்டுவதில்லை! கல்லறையில் கிடக்கிறது!'' என்று. பார்த்தவர்களும் இருக்கிறார்கள், அதுபற்றிப் படிப்பவர்களும் புரிந்துகொள்வார்கள்!

சச்சரவுகளால் கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் காமராஜர்.

அவர் போன்றாரின் வெளிப்படையான பேச்சைக் கேட்ட பிறகும், கொள்கையில் உறுதிபடைத்த தோழர்கள், கழகத்திலே பேத உணர்ச்சியை மூட்டிவிடுவார்கள் என்று நான் எண்ண வில்லை. அவ்விதம் நடந்துகொள்பவர்களால், ஏற்படும் சிதைவு களையும் சரிப்படுத்திக்கொண்டு, கழகத்தின் கட்டுக்கோப்பைக் காத்து நிற்கும் கர்மவீரர்களின் எண்ணிக்கை மிகப் பெரிது!

எனவே புலித் திட்டமாயினும் கழுகுத் திட்டமாயினும் கழகத்தை ஏதும் செய்துவிடாது.

தம்பி! உனக்கு எப்போதாகிலும், நீர்கோர்த்துக் கொண்டதுண்டா! சளி பிடிக்கிறது என்பார்களே அது? எனக்கு அந்தத் தொல்லை அடிக்கடி!

காய்ச்சல், கைகால் பிடிப்பு, வயிற்றுவலி என்று பலவிதமான நோய்கள் ஏற்பட்டால் ஒருவகையிலே நிம்மதிகூட என்று சொல்லலாம் - ஏனெனில், ஏதும் செய்ய முடியாத நிலையில் படுத்துவிடுவோம். இந்தச் சளிபிடிப்பது இருக்கிறதே இது மிகமிகத் தொல்லை! படுக்க வைக்காது - வேலை செய்யும் நினைப்பைக் கொடுக்காது. ஆனால் வேலையிலே மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, தும்மலாகி, மூக்கைத் துளைத்து, குடைந்து, ஆளைப் படாதபாடு படுத்திவிடும்! சாதாரணச் சளிதானே என்பர் எவரும். மருத்துவரிடம் சொல்லக்கூடத் தோன்றாது! என்ன உடம்புக்கு என்றுகூட எவரும் அக்கறையுடன் விசாரிக்கமாட்டார்கள். நாமாகக் கூறினால்கூட, "சளிதானே! இதற்கா இந்தப் பாடுபடுத்துகிறாய்!'' என்று அலட்சியமாகக் கூறிவிட்டுச் செல்வார்கள். ஆனால், அந்தச் சளியின் தொல்லை, படுபவர்களுக்குத்தான் தெரியும்.

ஒரு வேடிக்கையான கதை சொல்வார்கள்:

விகடகவியான தெனாலிராமன், ஒரு நாள், காளியைத் "தரிசனம்' கண்டானாம்! கவிகளைக் காளி நேரடியாகக் காணக் கூடிய காலத்துக் கதை!

அந்தக் காளி, ஆயிரமுக மாகாளி!

முகம் மட்டும்தான் ஆயிரம்! கரங்கள் அவ்வளவு இல்லை!

கண்ட உடன் தெனாலிராமன், கடகடவெனச் சிரித்தானாம்.

அவன் அப்படிச் சிரித்தது கண்டு, எப்படி இருந்திருக்கும் மாகாளிக்கு?

என்னமோ கவிபாடுகிறானே, அழைத்தானே "பிரசன்னமாகி, ஏதாகிலும் வரம் கேட்பான், கொடுக்கலாம்; ஆசாமி பிழைத்துப் போகட்டும் என்று பார்த்தால், கண்டதும் விழுந்து கும்பிடாமல், கடகடவெனச் சிரிக்கிறானே! எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு! சூலாயுதத்தை வீசி இவனைத் தொலைத்துவிடலாம்' என்று மாகாளிக்குத் தோன்றிற்று. மறுகணம் கோபம் குறைந்து விட்டது; "பாவம்! இவனோ கவி! எது மனதில் படுகிறதோ, அதை மிகைபடக் கூறிப் பழக்கப் பட்டவன்! உள்ளத்திலே கள்ளமில்லை! இவன்மீது கோபம் கொள்ளக்கூடாது!'' என்று எண்ணி, "எதற்காகச் சிரிக்கிறாய்?'' என்று கேட்டாள்.

"தாயே! தயாபரி! எனக்கு இருப்பது ஒரே மூக்கு! அந்தச் சனியனில் சளி பிடித்துக்கொண்டால், இந்த இரண்டு கைகளும் போதவில்லையே! அம்மா! உனக்கோ ஆயிரம் மூக்குகள்! உனக்குச் சளி பிடித்துக்கொண்டால் என்ன பாடுபடுவாயோ என்று எண்ணினேன், சிரிப்பு வந்தவிட்டது'' என்று தெனாலிராமன் பதிலளித்தானாம்.

மாகாளியும் விழுந்து விழுந்து சிரித்ததாகக் கதை!

தம்பி! நான் மாகாளியையும் கண்டதில்லை! தெனாலி ராமனையும் கண்டவனல்ல. ஆனால், சளியின் தொல்லை நன்றாகத் தெரியும். அதுபற்றித் தெனாலிராமன் சொன்னதைக் காளி மறுத்தால்கூட, நான் மறுக்கமாட்டேன்; அவ்வளவு தொல்லை தருவது சளி.

நமது கழகத்திலே காய்ச்சல், குன்மம், கைகால் பிடிப்பு போன்ற கடுமையான நோய் எதுவும் இல்லை! ஆனால், சளி பிடித்துக்கொள்கிறது அடிக்கடி! தொல்லையான நோய்!

ஆனால், எனக்கே இயல்பாக, அடிக்கடி சளி பிடித்துக் கொள்வதால், இந்தச் "சளி'த் தொல்லையையும், நான் கூடுமான வரையில் தாங்கிக்கொள்கிறேன். அது நிமோனியா காய்ச்சல் ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்கிறேன். ஆனால், அதனால், எத்தனையோ மிக முக்கியமான வேலைகள் கெடுகின்றன! தடைபடுகின்றன.

காமராஜரோ, இந்தச் சளியே கழகத்தைக் கொன்றுவிடும் என்கிறார்.

மருத்துவர்கள் மறுத்து உரைப்பார்கள்; கழகத்தின் நடவடிக்கைகளிலே பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நான், தம்பி! உன் ஒத்துழைப்பால், நிலைமைகளைத் திருத்திவிட இயலும் என்று நம்புகிறேன். என்றாலும், எனக்குத் தெரியும், மற்ற வியாதிகள் ஆபத்தானவை, சளி அசிங்கமானது! எனவே, அதற்காக, அது பிடிக்காதபடி பார்த்துக்கொண்டாக வேண்டும்.

விவரமறிந்த எவரும், ஒரு விடுதலை இயக்கத்திலே, சரிவு, சச்சரவு, சோர்வு, தோல்வி, கலக்கம், மயக்கம், போட்டி, பொறாமை சிற்சில வேளைகளிலே மூண்டுவிடுவதால், அந்த விடுதலை இயக்கமும், விடுதலை உணர்ச்சியும் அடியோடு அழிந்துபோய்விடும் என்று கூறமாட்டார்கள்; எண்ணிக் கொள்ளவும் மாட்டார்கள்.

சூரத் காங்கிரஸ் மகாநாட்டிலே ஏற்பட்ட செருப்பு வீச்சுகளைவிடக் கேவலமாகவா, வேறொன்று இருக்க முடியும்?

அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களெல்லாம், சாதாரணமானவர்களா?

திலகர் நடத்திச் சென்ற காங்கிரசில், "சூரத்' நடந்தது! அதனால் காங்கிரசார், காவி உடுத்திக் கமண்டலமேந்திக் கடும் தவம் செய்யக் காசிக்கா போய்விட்டார்கள்? அல்லது காமராஜர் நமது கழகத்தைப்பற்றிக் கூறுகிறாரே, அதுபோலக் காங்கிரஸ் அழிந்தா போய்விட்டது? ஆத்திரத்தில் அறிவிழந்தனர். கடமை மறந்தனர். உரிமைக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இலட்சியம் பெரிது, கட்சியிலே நமக்குத் தரப்படும் இடம் பெரிதா அல்லவா என்ற எண்ணம் எழக்கூடாது என்பது மறந்தனர், சச்சரவில் ஈடுபட்டனர். பிறகு, ஊரே கூடிப் புத்தி சொல்லிற்று! வெட்கப்பட்டனர்! தமக்குள்ளே ஏற்பட்டுவிட்ட பிளவு கண்டு ஏகாதிபத்தியம் எள்ளி நகையாடக் கண்டனர், நிலைமை புரிந்தது; மனம் திருந்திற்று; காங்கிரசில் மீண்டும் கண்ணியமும் கட்டுப்பாடும் நிலைத்தது! வெற்றி கிடைத்தது.

சூரத் காங்கிரசில், தலைவர்களே ஒருவர்மீது ஒருவர் மிதியடிகளை வீசிக்கொண்டு, கலாம் விளைவித்துக்கொண்ட சம்பவம் குறித்து, வைசிராய், கவர்னர்கள் மாநாடு கூட்டிப் பேசி இருந்தால், பம்பாய் மாகாணக் கவர்னர் என்ன சொல்லியிருப்பார். "காங்கிரசைப் பற்றித் துளியும் கவலைப்படத் தேவையில்லை. அதிலே பிளவு, பேதம், சண்டை, சச்சரவு! சூரத் சம்பவம் தெரியுமல்லவா? நாம் அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தன்னாலே அழிந்துவிடும்'' என்றுதானே கூறியிருப்பார்.

அதேதான், காமராஜர் இப்போது பேசியிருப்பது.

பேச்சு, இயல்பினால்கூட அமைந்ததல்ல, இடத்தால் அமைகிற பேச்சு!

அத்தனை முதலமைச்சர்கள் கூடிப் பேசுமிடத்தில், தி. மு. கழகம் பற்றிய பிரச்சினை வரும்போது, "ஆமாம்! ஆமாம்! தி. மு. கழகம் வளர்ந்துவிட்டது! நாட்டுப் பிரிவினை பற்றிய பேச்சு எங்கும் பரவிவிட்டது! நாங்கள் செய்யும் எதிர்ப் பிரசாரம் பலன் அளிக்கவில்லை. எம்மால் அந்தக் கழகத்தை ஏதும் செய்ய முடியவில்லை'' என்றா ஒரு முதலமைச்சர் பேச முடியும்! எதிர்பார்க்கத்தான் செய்யலாமா, அவ்விதம் பேசுவார் என்று! கொஞ்சம் மீசையை முறுக்கிக்கொண்டு, கனைத்துவிட்டு, ஒரு அலட்சியப் புன்னகையுடன், "தி. மு. கழகம் ஒன்றும் இல்லை. அது தன்னாலே சாகும்!'' என்றுதான் சொல்லத் தோன்றும்.

ஆகவே, தம்பி! காமராஜர் அங்கு அவ்விதம் பேசியது கேட்டு, யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை! கவனிக்கத் தேவையுமில்லை. ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியப் பேரரசு நமது கழகத்தின்மீது குறி வைத்துவிட்டது என்பதுதான்!

சந்தைச் சதுக்கத்துப் பேச்சு, சட்டசபை வரையில் போய்ச் சேர்ந்தது என்று இருந்தோம்.

மற்றோர் கட்டம் இது! இந்தியப் பேரரசு முதலமைச்சர்கள் மாநாடு கூட்டி, தி. மு. கழகத்தை ஒழித்தாக வேண்டும் என்ற துடிப்பை வெளிப்படுத்தி, விதவிதமான திட்டம் தீட்டியது.

"தலையைக் கொண்டுவருபவர்களுக்கு இனாம் தரப்படும்!'' என்ற அளவுமட்டும் எழுதித் தொகைபற்றி ஒருமித்த முடிவு ஏற்படாததால், அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டதுபோல என்று வைத்துக்கொள்ளேன்.

தி. மு. கழகத்தின் வளர்ச்சியும், திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்துக்குச் செல்வாக்கும், எந்த அளவுக்கு என்றால், முதலமைச்சர்கள் மாநாட்டிலே, கூடிப் பேசவேண்டிய நிலைமைக்கு இந்தியப் பேரரசைக் கொண்டு வந்து விட்டுவிட்டது.

"அதெல்லாம் வீண் புரளி, வேண்டாம்! உங்கள் கழகத்தைப் பற்றி ஒன்றும் முதலமைச்சர்கள் கூடிப்பேசவில்லை. "அசாம்' பஞ்சாப் ஆகிய இடங்கள்பற்றிப் பேசினார்கள்; அந்தப் பேச்சோடு பேச்சாக, தமிழ்நாடு பற்றிய பேச்சும், தி. மு. க. பற்றியும், எழுந்தது; அவ்வளவுதான்.'' - என்று பேசுவர், காங்கிரஸ் பேச்சாளர்.

தம்பி! முதலமைச்சர்கள் மாநாட்டிலே, அசாம், பஞ்சாப் பற்றிப் பேசினது உண்மை; பேசவேண்டிய விதமான நிலைமைகள், நெருக்கடிகள் அங்கே! வங்காளியும் அசாமியனும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மடிகிறார்கள். "ஜெய்ஹிந்த்' முழக்கமிட்டபடி!! பாஞ்சாலத்தில், எந்த விநாடி என்ன நடக்குமோ என்று பீதி கொள்ளத்தக்க நிலைமை. எனவே. சட்டம் சமாதானம் காத்திட, அவைபற்றிப் பேச எண்ணம் எழும்.

தமிழ் நாடு நிலைமை அதுவல்ல. இங்கு தி. மு. கழகம் எந்தவிதமான கிளர்ச்சியிலும் இப்போது ஈடுபட்டிருக்கவில்லை. அமைதியான பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பஞ்சாபில் கிளர்ச்சி, அசாமில் அமளி! அவைபற்றிப் பேசும்போது, தி. மு. க. குறித்து, ஏன் எண்ணம் பாய வேண்டும்?

அந்தக் கிளர்ச்சி - அமளி ஆகியவைகளைவிட, தி. மு. கழகம் நடத்திவரும் திராவிட நாடு பற்றிய பிரசாரம், தொடர்ந்து, கட்டுப்பாடாக, பட்டிதொட்டிகளிலும், வேக மாகவும் வெற்றிகரமாகவும், கேட்போர் உள்ளத்தைத் தொடத்தக்க விதத்திலும் நடைபெற்றுக்கொண்டு வருவதுதான், உண்மையில், இந்தியப் பேரரசு எனும் ஆதிக்கத்தின் சல்வேரினை அரித்துக்கொண்டு வருகிறது என்பது, அவர்களுக்குப் புரிகிறது. எனவே கவலை குடைகிறது.

கழகத்திலே அவ்வப்போது ஏற்பட்டுவிடும் "நலிவுகள்' - கழகத்தின் "தேர்தல்' வேலையை வேண்டுமானால் ஓர் அளவுக்குப் பாதிக்குமேயன்றி, கழகம் மேற்கொண்டுள்ள, நாட்டு விடுதலைக்கு மக்களைப் பக்குவப்படுத்தும், காரியத்தைக் கெடுக்காது, தடுக்காது என்பதை, யூகமுள்ள காங்கிரஸ் தலைவர்கள் அறிந்து கொண்டுள்ளனர். இதனை நம்மிலே "பிளவு' ஏற்பட்டபோது, ஊர் கூட்டிக் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்த ஏடுகளே உணர்ந்து, "எதிர்பார்த்தபடி, தி. மு. கழகம் வலிவு இழக்கவில்லை; வேலை நிற்கவில்லை; விறுவிறுப்பாகத்தான் பணியாற்றுகிறது'' என்று இப்போது எழுதிவிட்டன.

இந்தக் கழகத்தை யார் பொருட்படுத்துகிறார்கள்? இதனுடைய வறட்டுக் கூச்சலுக்கு எவர் செவிகொடுப்பார்கள்? என்றெல்லாம் பேசிய நிலை போயேவிட்டது! என்ன செய்து, இதை ஒழிப்பது என்று கலந்துபேசும் கட்டம் வந்துவிட்டது.

இந்தக் கழகத்தை இனி யார் சீந்துவார்கள்? இதிலிருந்த வீரரும் தீரரும் விவேகியும் போய்விட்டார்கள் வெளியே! இனி இது இளைத்து ஈளைகட்டி இருமிச் சாகப்போகிறது என்று மேடைகளிலே காங்கிரசார் பேசிக்கொண்டிருக்கும் நிலை கண்டோம். ஆனால், முதலமைச்சர்கள் முகாம் அமைத்துத் திட்டம் தீட்டுகிறார்கள், தி. மு. கழகத்தை ஒழிக்க!

அடுத்து வர இருக்கும் தேர்தலில் வெற்றி பெரிய அளவு கிடைத்து ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தம்பி! எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை இந்தச் சேதி தருகிறது!

நாம் கவனிக்கப்பட்டாகிவிட்டோம்! குறி வைத்து விட்டார்கள்! பட்டபாடு வீண்போகவில்லை! பாரெல்லாம், நமது கழகம் பற்றியும் இலட்சியம் குறித்தும் அறிந்து கொள்ளத்தக்க நிலையை நோக்கி நடைபோடுகிறோம்! - என்ற எண்ணம், என்னைத் தம்பி! என்னென்னவோ இன்ப நினைவுகளைக் கொள்ளச் செய்தது. பாதி இராத்திரி வேளையில், தடதடவெனத் தெருக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்பது போலவும், திறந்த உடனே கரங்களைப் போலீஸ் அதிகாரி பற்றி இழுப்பது போலவும், வெளியே தயாராக நிற்கும் வண்டியில் ஏற்றுவது போலவும், வழி நெடுக இதுபோன்ற வண்டிகள் நடமாடுவது போலவும், திராவிடரில் ஒரு பகுதியினர் சிறையில் என்னோடு இருப்பதுபோலவும், இப்படி எல்லாம், காட்சிகள்!!

முதலமைச்சர்கள் மாநாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை களைத் துரிதப்படுத்துவார்களானால், தம்பி! என்னென்ன நடைபெறக்கூடும் என்று எண்ணிப் பார்த்தனையா? பொலிவு மிக்க முகத்தினராய், வலிவு மிக்க குரலில், திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கம் எழுப்புகிறார்களே நமது தோழர்கள், பட்டி தொட்டிகளிலும், மும்மூன்றாண்டு உள்ளே தள்ளலாம் அதற்கே!!

ஆமாமடா, தம்பி! காட்டுக் கூச்சல்! வறட்டுக் கூச்சல்! என்றார்களே! அது புதியதோர் குற்றம்!! மூன்று ஆண்டுகள் உள்ளே!! கொடிக்குத் தடை! கூட்டத்துக்குத் தடை! ஏடுகளுக்குத் தடை! இலட்சியத்துக்குத் தடை!! உம்! மளமளவென்று வரக்கூடும் எல்லாம். தேர்தலுக்கு முன்பா, பிறகா என்பதுதான் பிரச்சினை!

திராவிட நாடு திராவிடருக்கே என்று கேட்பது, பிரிவினைப் போக்கு, அது சட்டப்படி குற்றம் - மூன்றாண்டு உள்ளே! - என்ற நிலைமை ஏற்பட்டால், நாட்டிலே, அந்த முழக்கமே எழாது, இயக்கமே இருக்காது என்று "வந்தே மாதரம்' கூறுவது குற்றம் என்று கூறப்பட்டதை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட, காங்கிரசார் நம்புகின்றனர். ஏன், தம்பி! நம்மைக் கோழைகள், கொள்கையிலே வலிவற்றவர்! குடும்பம் பெரிது குவலயம் சிறிது என்று கொள்பவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

"ஏன் வீணாகச் சிக்கிக் கொள்கிறீர்கள்? இன்னின்னார் இப்படி வரும் என்று அறிந்து, முன்னதாகவே எங்களுக்குத் திராவிட நாடு வேண்டாம்'' என்று சொல்லி, தப்பித்துக் கொண்டார்களே, அதுபோல, நீங்களும் ஓடிவிடுங்கள்; இல்லையேல், உள்ளே தள்ளிவிடுவோம்! - என்று டில்லி தெ ரிவித்துவிட்டது.

தம்பி என்ன சொல்கிறாய்?

"என்ன சொன்னார் நேரு பண்டிதர் வெள்ளை ஏகாதிபத்தியம், அவரை மிரட்டியபோது'' - என்பதைப் படித்து விட்டுத்தான் இதனை எழுதுகிறேன்.

என்ன செய்தார்கள் விடுதலை கேட்ட, ஜோமோ கெனியாடாவை? எட்டு ஆண்டுகள் சிறை! பிறகு? அந்த எஃகு உள்ளம் என்றும்போல் இருக்கக்கண்டு, நேற்று, விடுதலை நெய்ரோபி நகரில். பதினாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர் கூடி ஆடிப்பாடி வரவேற்றனர், கெனியாடாவை! அதைப் படித்து விட்டு அந்த மகிழ்ச்சியிலே இதனை எழுதினேனில்லை.

ஐயர்லாந்து நாட்டு விடுதலைக்காகப் போராடிய மாவிரன் மடிந்தான்; அவனுடைய புதைகுழிக்கருகே நின்று, மற்ற விடுதலை வீரர் பேசினர். அந்தப் பேச்சைப் படித்துவிட்டு இதனை எழுதுகிறேன்.

வாய்ச் சொல்லில் வீரரா? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு, வருவது ஏற்கத் தயாராக இருக்கும், விடுதலை விரும்பிகளா? என்று நாடு கேட்கிறது. காலம் கேட்கிறது தம்பி! என்ன சொல்கிறாய்?

விடுதலைக் கிளர்ச்சியில் எதிர்பார்க்கவேண்டிய அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும் வேளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தம்பி! என்ன சொல்கிறாய்? முதல் பந்தியா! பிறகா! வேண்டவே வேண்டாமா! பதில் சொல்லிவிடு! மணி அடித்து விட்டார்கள்!!

தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பேசுகிறார் காமராஜர்.

தம்பி தேர்தலின் முடிவு, பார்த்து இலட்சியத்தைப்பற்றிய கருத்தினைக் கொண்டவர்களல்ல, நாம்! தேர்தல், நமக்கு ஏற்பட்டுவிடும் பல வேலைகளிலே ஒன்று!! அது முடியட்டும் என்கிறார் காமராஜர் - என்னைப் பொறுத்தவரையில், தேர்தலுக்கு இரண்டாவது இடம்தான் - முதல் இடம் இலட்சியம் என்ன ஆவது என்பதுதான்! அதனைக் காத்திட, கொடிய அடக்கு முறையையும் தாங்கி நிற்கும் தோழரின் தொகை எவ்வளவு என்பதுதான், எனக்குத் தேவை! மன்னித்து விடு தம்பி! எனக்கு என்று எக்களிப்பில் கூறிவிட்டேன் - நாட்டுக்குத் தேவை.

விடுதலை கேட்கும் எம்மை சிறைக்கு இழுத்துச் செல்லும்போது, அந்தச் சிறையில் - எத்தனை M.P..க்கள் எத்தனை M.L.A.க்கள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதோ, அந்த அளவுக்கு தேர்தலிலே வெற்றி தேடிக் கொடுங்கள். பொட்டிட்டு ஆர்த்தி எடுத்து, போய் வருவாய் களம் நோக்கி! என்று வழி அனுப்பி வைப்பதுபோல, நாட்டு மக்களே! நல்லோர்களே! நீண்டகாலச் சிறை அழைக்கிறது! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் இழுத்தேகலாம்! உங்கள் ஆதரவைத் தந்து, வழியனுப்பி வையுங்கள்; தேர்தலிலே நீங்கள் தேடித்தரும் வெற்றி, களம் செல்லும் வீரருக்குத் திலகம் இட்டு அனுப்புவதுபோன்றது என்பதை, தம்பி! இன்றே கூறிவிடு, எதற்கும் தயாராகிவிடு!!

அண்ணன்,

20-8-61