அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


முதல் பந்தி!
2

எவர் கருத்துக்கு மக்களிடம் ஆதரவு திரண்டு வருகிறது; மக்கள் எவர் பக்கம் தீர்ப்பளிக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள பிரச்சினை.

இதனை அறியாமல், சில காங்கிரசார், எமது நேருவையா எதிர்க்கிறாய்? என்று எக்காளமிட்டுத் தமது குறை அறிவைக் கொட்டிக் காட்டுகிறார்கள். என் ஆழ்ந்த அனுதாபம் அவர்கட்கு.

நமது போராட்டம் ஓரு முறையை எதிர்த்து. நேரு பண்டிதரை எதிர்த்து அல்ல.

நேரு பண்டிதர் தமது ஆற்றலை, எந்த முறைக்குப் பக்க பலமாக்கிக் காப்பாற்றி வருகிறாரோ, அந்த முறைமீது நமக்கு வெறுப்பு; அதைக் கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; கிளர்ச்சி நடாத்துகிறோம்; நேரு பண்டிதரெனும் தனி மனிதரிடம், மதிப்புக் குறைவுமில்லை; அவரை மட்டமாக மதிப்பிட நாம் மதியிலியும் அல்ல. மாறாக, நேரு பண்டிதரின், விடுதலை ஆர்வம், நமக்கு அவரிடம் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது; ஆனால், அதனினும் அதிக அளவு மதிப்பு, விடுதலை ஆர்வத்தின்மீது ஏற்படுகிறது!

அவர் காட்டிய ஆர்வம், கொண்ட உறுதி, ஊட்டிய வீரம், பட்ட கஷ்ட நஷ்டம், ஏற்றுக்கொண்ட தியாகம், ஈடுகொடுத்த இன்னல்கள், எதிர்நீச்சலிட்டது, எதிர்ப்புக்கஞ்சாமை, சிறையில் வாடியது, சித்திரவதைக்கும் அஞ்சாமல் நின்றது, அணி திரட்டியது, பாசறை அமைத்தது, படை நடாத்தியது - இவைகளை, நான் தொகுப்பு நூலில் படித்தபோது, இப்படிப் பட்ட நேரு அல்லவா, திராவிடத்தை அடக்கி வைத்திருக்கிறார் என்ற திகைப்பு அல்ல; இப்படி அல்லவா, விடுதலைக்குப் பாடுபட வேண்டும்! இவர்போலல்லவா ஓய்வின்றி உழைக்க வேண்டும்! இவர் பேச்சிலல்லவா, விடுதலையின் ஆர்வம் மேலும் விளக்கமாகிறது! இவரே இவ்வளவு இன்னலை ஏற்றுக் கொண்டாரென்றால், நாம் காணும் இன்னல், மிகச் சாதாரண மன்றோ! இவரே இத்துணை காலம், பலப்பல பாடுபட்டுச் சோர்வு சில வேளை, துயரம் பல நேரம், தோல்வி துளைத்திடும் நிலை சில சமயம் எனும் பல்வேறு நிலைகளைக் கண்டு, மனம் உடையாமல் நின்று, தொடர்ந்து பணியாற்றித்தான், வெற்றி கண்டாரென்றால் நாம், இதனைவிட அதிகமான அளவல்லவா பாடுபட்டாக வேண்டும் - என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது.

புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டதாம்! கான மயிலாடக் கண்ட வான்கோழியும் சிறகு விரித்ததாம் ஆட! அதுபோல இந்த அண்ணாத்துரை, நேருவின் பேராற்றலையும், வீரதீரச்செயலையும் ஏட்டிலே படித்தானாம், உடனே தானும் அதுபோலச் செய்யப்போவதாகப் பிதற்றுகிறான்! என்னே இவன் பேதமை! - என்று பேசுவர் காங்கிரசார். எளிதாகப் பேச இயலும்; பேசும்போது, சுவையாகவும் இருக்கும், தேர்தல் நெருங்கி வருகிறதல்லவா, அதனால், பயனும் கிடைக்கும். பெற்று இன்புறட்டும். எனக்கு நட்டமில்லை.

ஆனால், இன்று நம்மைப்பற்றி இவர்கள் இதுபோல ஏளனம் பேசுகிறார்களே, தம்பி! இதேபோலத்தான், நேரு உள்ளிட்ட காங்கிரசார் விடுதலைக் கிளர்ச்சி நடாத்தியபோது, பிரிட்டனில் இருந்த ஆணவக்காரர்கள், அயர்லாந்து நாட்டிலே, திவேலரா கட்சியினர் நடத்திய போராட்ட முறைகளை ஏடுகளிலே படித்துவிட்டு, இந்தக் "கைராட்டைகள் ஆட்டம் போடுகின்றன! பட்டினி கிடத்தலிலேயிருந்து கோர்ட்டை அவமதிப்பது வரையில், ஐயர்லாந்து முறையின் மறுபதிப்பு! சொந்தப் புத்தி துளியும் கிடையாது. இவர்களுக்கென ஒரு தனி முறையும் இல்லை! எல்லாம் இரவல் சரக்கு! எளிய வாழ்க்கை; ஏழையுடன் ஏழையாக இருப்பது, தன் துணியைத் தானே துவைத்துக்கொள்வது எனும் காந்தி முறைகூட, ரμய நாட்டு டால்ஸ்டாய் தத்துவம்; அவர் சொல்லிக் கொடுத்த பாடம்!'' என்று பேசினர்; ஏளனம் செய்தனர்.

முன் ஏர் போனபடி பின் ஏர் போகிறது - என்பார்கள் அல்லவா? அதுபோல, முன்பு, வெள்ளை வெறியர் பேசியதை இன்று காங்கிரஸ் கண்ணியவான்கள் பேசுகின்றனர். இதைப் புரிந்துகொண்டால், தம்பி! நமக்குக் காங்கிரசாரிடம் கோபம் எழாது; மாறாக, அவர்களே உணரும் வண்ணம், நாம் நமது இலட்சியத்துக்காகப் பாடுபட வேண்டும், இன்னல்கள் அடுக்கடுக்காக வந்தாலும், தளரக்கூடாது; இன்னுயிர் போவதேனும், இலட்சியத்தை இழக்கக்கூடாது என்ற உறுதியை, எழுச்சியைப் பெறவேண்டும் என்று தோன்றும். தரவேண்டிய விலைகொடுத்துப் பெறவேண்டிய விடுதலையைப் பெற்றுக் காட்டினால், இன்று ஏசுவோரின் கண்ணீர் நம்மை வாழ்த்தும் நிலையில் வழியும்!

ஊர்வலம் போகிறார்கள், பாவம், பெரும்பாலானவர்கள், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள்.

உடன் வரும் போலீஸ் அதிகாரிகளைக் காணும்போதே, அவர்களுக்குப் பெருமை, பூரிப்பு! மார்பை நிமிர்த்தி நடக்கிறார்கள்!

முன்பு? ஓட ஓட அடித்து விரட்டினார்களே போலீசார் - அந்த நாட்களில், இதோ இன்று ஊர்வலத்திலே கலந்து கொள்ளும் "பிரமுகர்கள்' - வெள்ளைக்கார அதிகாரிகளுக்குத் தோட்டக் கச்சேரி நடத்திக்கொண்டும், "வேலை வெட்டி இல்லாததுகள்! விவரமறியாததுகள்! நத்தம் புறம்போக்கு! நாலணா எட்டணா!'' என்றெல்லாம், காங்கிரஸ் தொண்டர்களை ஏசிக்கொண்டு இருந்தவர்கள். இவர்கள், "விடுதலை விழா' கொண்டாடும் குழுவினராகிவிட்டனர்! இவர்களைக் கொண்டு "விடுதலை விழா' நடாத்திக்கொள்வதிலே, உண்மைக் காங்கிரஸ் தொண்டர்கள் வேதனைப்படுவர், வெட்கப்படுவர்! ஆனால், அத்தகைய உண்மைக் காங்கிரஸ் தொண்டர்கள், பலபேர், இன்று இல்லை; மறைந்து போயினர்; பலர் வேறு வேறு கட்சியின ராயினர்; இன்னும் சிலர், இந்தத் தலைகீழ் மாற்றம் கண்டு, திகைத்துப்போயுள்ளனர்; பேசவும் இயலாதவராக!

பர்தோலி வரிகொடா இயக்கம்! சபர்மதி ஆசிரமம்! நவகாளி யாத்திரை! சௌரி சௌரா! சம்பரான்! - இவைகளுடன் பின்னிக் கிடக்கும் எழுச்சிமிகு நிகழ்ச்சிகளை அறியாதவர் தொகையே ஏராளம் - நான் கண்ட ஊர்வலத்தில் மட்டுமல்ல - தம்பி! ஒவ்வோர் இடத்து ஊர்வலத்திலும் - மொத்தத்திலே இன்றுள்ள காங்கிரசிலே!

காளிங்கமர்த்தனம்! கம்சவதம்! சிசுபால சம்ஹாரம்! கோவர்த்தனத்தைக் குடைபிடித்தது! - என்பவைகளைக் "கிருஷ்ண லீலா' காலட்சேபத்திலோ, கூத்திலோ மட்டுமே தெரிந்துகொள்கிறார்களல்லவா மக்கள். ஆனால், அதற்காகக் கிருஷ்ணன், கண்ணன், கோபாலன் எனும் பெயருடையார்களை அழைத்து, வெண்ணெய் தருவார்களா!! அதுபோலத்தான், பர்தோலி, சபர்மதி, சம்பரான், நவகாளி என்பவை களைப்பற்றி, நான் குத்திக் காட்டுவதால் மானம் பொத்துக்கொண்டு வருகிற நிலையில் சிலர் பேசினாலும், அதற்காக, இன்றுள்ள காங்கிரசாருக்கு ஆதரவு காட்டமாட்டார்கள் - அந்தக் காரணத்துக்காக!

பர்மிட் பெறத் துணை நின்றார்! பஸ் ரூட் வாங்கிக் கொடுத்தார்! பஞ்ச நிவாரணக் கடை கிடைக்கச் செய்தார்! ஏரி மராமத்து காண்ட்ராக்ட் எடுத்துக் கொடுத்தார்! பால் பவுடர் தந்தார்! மந்திரி பக்கத்தில் உட்கார வைத்தார்! பெரியப்பாவிடம் உயிர்! பெரியதனக்காரருக்கு நண்பர்! சத்திரம் ஆறு! சமாராதனை வருடா வருடம்! ஜாதியில் பெரியவர்! ஊரில் பாதி அவருடையது! கடன் கொடுப்பவர் அவரேதான்! கலெக்டர் மகனுக்குப் பெண் தந்தார்! - எனும் இப்படி ஏதாகிலும் காரணங்களுக்காகப் பெரும்பாலான காங்கிரசாருக்கு, ஆதரவு - தேர்தல் காலத்தில் - தரப்படுகிறதேயன்றி, இவர்கள், விடுதலை வாங்கித் தந்தவர்கள்! வீரதீரச் செயலாற்றியவர்கள்! என்று எண்ணி அல்ல. மக்கள் இத்தனை விவரமாகப் பேச மாட்டார்களே தவிர, அவர்கள் விவரம் அறியாதவர்கள் அல்ல!!

ஊர்வலம் செல்வோர், தவறான எண்ணம்கொண்டுள்ளனர் - இவர்களை விடுதலைப் போர் நடாத்திய வெற்றி வீரர்கள் என்று நாம் எண்ணி ஏமாறுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள்! அத்துடன், இத்தகைய வெற்றி வீரர்களை எதிர்த்து நின்று, நாம் நமது இலட்சியத்தை அடைய முடியாது என்ற அச்சம், நம்மைப் பிடித்து உலுக்கும் என்றும் எண்ணுகிறார்கள்.

இவர்களை, நாம் விடுதலை பெற்றுத்தந்த வீரர்கள் என்று எண்ணி ஏமாறமாட்டோம் - விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாம், காங்கிரஸ் நடத்திய விடுதலைக் கிளர்ச்சிபற்றிய வரலாற்றினை, காங்கிரசில் ஒட்டிக்கொண்டுவிட்ட இவர்களைப் போல் அல்லாமல், தெளிவாகப் படித்துப் பாடம் பெற்றிருக்கிறோம். மாட்டின் கழுத்திலே கட்டப்பட்ட மணியைக் கொண்டு மாட்டின் விலையை மதிக்கமாட்டார்கள்; அந்நிலையில் மாட்டின் கழுத்து மடிப்பில் ஒட்டிக்கொண்டு கிடக்கும் "உணியைக் காட்டி பத்து ரூபாய் சேர்த்துக்கொடு என்று மாட்டுக் குடையான் கேட்டால் கைகொட்டியல்லவா நகைப்பார்கள்! அதுபோல' காங்கிரசுக்குக் கிடைத்துள்ள பதவியைக் கண்டே, மயங்க மறுக்கும்போது, ஒட்டிக் கொண்டுள்ள உணிபோல, ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறின பிறகு, அதிலே குடிபுகுந்த குணாளர்களைக் கண்டா, மருளப்போகிறோம்? அவர்களுக்குப் பாபம், அப்படி ஒரு நினைப்பு!

இவர்களின் நினைப்பு இதுவென்றால், விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய அனுபவம் பெற்ற காங்கிரஸ் தலைவர்களோ, தங்களோடு, வீரர் வரிசையே தீர்ந்துபோய்விட்டது! ஆற்றலின் கடைசிச் சொட்டும் தீர்ந்துபோய்விட்டது. விடுதலைக் கிளர்ச்சி என இனி ஒன்று தலைதூக்காது! தலைதூக்கவேண்டிய அவசியமே இல்லை! எவராலும் முடியாது! எவருக்கும் இல்லை அந்த ஆற்றல்! - என்று திடமாக - மிகத் திடமாக நம்புகிறார்கள்.

அவ்வளவு நல்லவர்கள், இவ்வளவு பொல்லாங்கான எண்ணம் கொண்டிருப்பதைக் காணும்போதுதான், நமக்குக் கோபத்துடன் வருத்தமும் பிணைந்து வாட்டுகிறது.

காங்கிரசின் தொண்டர்கள், துணைநாடி வந்துற்ற பிணி போன்றார், எப்படி, "எமது நேரு பண்டிதரையா எதிர்க்கத் துணிகிறாய்?'' என்று கடுங்கோபம் கொண்டு கேட்கிறார்களோ, அதுபோன்றே, விடுதலைக்குப் பாடுபட்டவர்கள், விடுதலையின் அருமை அறிந்தவர்கள், விடுதலை உணர்ச்சி பெற்று விட்டவர்கள், எங்ஙனம் எதற்கும் துணிந்தவராவர் என்பதனைத் தெரிந்தவர்கள் எனும் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்களும், "இதுகளா! நம்மையா! விடுதலையா! போரா!'' - என்று கேலி பேசுகிறார்கள். அதைக் காணும்போதுதாம், தம்பி! உள்ளபடி இவர்கள், தமது தத்துவங்களைத் தாமே இகழ்கிறார்களே! இன்றைய நடவடிக்கையால், முன்னாள் செயலால் கிடைக்கும் பெருமைகளுக்கும் இழுக்குத் தேடிக் கொள்கிறார்களே! என்று பரிதாபமாக இருக்கிறது.

வெள்ளையரை நேரு போன்றார் எதிர்த்தபோது, அவர்களிடம் இருந்துவந்த, ஆயுதம் என்ன? திடமான நம்பிக்கை! அசைக்க முடியாத ஆர்வம்! எதையும் தாங்கும் உள்ளம்! வேறு உண்டா? சொத்து நிரம்ப இருந்தது அவர்களிடம் - நம்மைப் போல நடுத்தெரு நாராயணர்கள் அல்ல, அந்த நாள் காங்கிரசார். இன்று காங்கிரசார் ஆகிவிட்டவர்கள்போல, ஊரை அடித்து உலையிலே போடவேண்டிய நிலையினரும் அல்ல. பூர்வீகச் சொத்து! நல்ல வருவாய்! சமூகத்திலே மேலிடம்! படிப்பு! பதவி! - எல்லாம் இருந்தது.

தம்பி! என்றாவது ஒரு நாள், முதன்முதல் காங்கிரசை நடத்த முன்வந்தவர்கள் எவரெவர், அவர்களின் செல்வநிலை, சமூகநிலை என்ன என்பதோடு, வெட்ட வெளியில் கொட்டும் மழையில் கூடி தி. மு. கழகம் துவக்கினோமே, அவர்களுடைய நிலையுடன், ஒப்பிட்டுப் பார். உனக்கே வியப்பாக இருக்கும். நாமா இப்படி ஒரு இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி வர முடிகிறது என்று.

செல்வமும் செல்வாக்கும், படிப்பும், பதவியும், சமூகத்தில் உயர்நிலையும் இருந்தன என்றாலும், வெள்ளையரிடம் இருந்து வந்த அதிகார பலம் - ஆள் பலம் - ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவை மிக வலிவற்றவை! எனினும் துணிந்து எதிர்த்து நின்றார்கள் - திட நம்பிக்கையுடன் - வெற்றி நாடி வந்தது.

இந்தப் பாடம், அந்த விடுதலை வரலாறு படிக்கும்போது மிகத் தெளிவாக நமக்குப் புரிகிறது. ஆனால், அந்த வரலாற்றுக்கு உரியவர்களென்று தம்மைக் கூறிக்கொள்பவர்களோ, நாம் ஈடுபட்டுள்ள விடுதலைக் கிளர்ச்சியைத் துச்சமென்று எண்ணுகிறார்கள். ஏன், தம்பி, இது? சொன்னால் கோபித்துக் கொள்ளமாட்டாயே? அவர்கள், நமது உறுதியைச் சந்தேகிக் கிறார்கள்!! ஆமாம்! முழக்கமெழுப்புகிறாய், திராவிட நாடு திராவிடருக்கே என்று; ஆனால் கொள்கையிலே உறுதி இருக்கும், கொள்கைக்காக எதையும் இழக்கச் சம்மதிப்பர் எத்துணை இன்னல்களையும் ஏற்றுக்கொள்வர் என்று நான் சொல்வதை, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! விளைவு தெரியாமல் வீம்பு பேசுகிறார்கள்! கனவு காண்கிறார்கள்! கவைக்குதவாதன பேசுகிறார்கள்! பேச்சுக் கச்சேரி நடத்துகிறார்கள்! எதிர்ப்புக் கண்டால் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிடுவார்கள்! பிடி! அடி! சுடு! என்று உத்தரவு பிறப்பித்தால் போதும், காலடி வீழ்ந்து கதறுவார்கள்! அவர்கள் சுகவாழ்வு விரும்புபவர்கள்! தாமுண்டு, தம் குடும்பம் உண்டு என்று இருப்பவர்கள்! தொழில் செய்ய வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள்! பொழுதுபோக்கு அரசியல் நடத்துகிறார்கள்! வீரமோ தீரமோ அற்றவர்கள்! வெஞ்சமர் காண அஞ்சுவர்; கொடுஞ் சிறை எனின் ஒளிவர்! கோலோச்சுவோரின் கோபப் பார்வை பட்டால் கருகிச் சாம்பலாவர்! - என்று எண்ணுகிறார்கள்.

உன்னை இகழ்கிறார்கள்; உன் வீரத்தைப் பழிக்கிறார்கள்; உறுதியைச் சந்தேகிக்கிறார்கள்.

என்மீது கோபித்துக்கொள்ளாதே தம்பி! எனக்கு இல்லை, அவ்விதமான சந்தேகம். நான் நம்புகிறேன் - பரிபூரணமாக நம்புகிறேன். நான் நம்பிக்கை கொள்ள வேறு என்ன இருக்கிறது! என் எண்ணமல்ல, மேலே சொன்னது. உன்னையும் என்னையும் சேர்த்து, முன்பு விடுதலைக் கிளர்ச்சி நடத்திய காங்கிரசார் சந்தேகிக்கிறார்கள். இவர்களுக்கு, ஒரு விடுதலை இயக்கத்தை நடத்தத் தக்க வீரம் கிடையாது; அதற்கேற்ற தியாகம் புரியும் ஆற்றல் கிடையாது; இலட்சியத்திலேயே அசைக்க முடியாத நம்பிக்கை கிடையாது - என்று எண்ணுகிறார்கள்.

நம்முடைய முயற்சிகளை அவர்கள் கேவலமாகக் கருதி ஏளனம் பேசுவதற்குக் காரணம் இதுதான். நான் உள்ளதை உள்ளபடி உரைத்துவிட்டேன்.

மற்றொன்று தம்பி! நாம் கொள்கையிலே உறுதி கொண்ட வர்கள்தானா, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்தானா, எதிர்ப்புக்கு அஞ்சாதவர்கள்தானா என்பதுபற்றிய சந்தேகம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது தெரிகிறதா? அதையும், நான் மறைக்க விரும்பவில்லை. இரண்டு நிலைமைகள் இதற்குக் காரணம்.

ஒன்று, நம்மிலே மிக முக்கியமானவர்கள் என்ற நிலையினர், நம்மைக் காட்டிலும் அடித்துப்பேசிக் கொள்கை பரப்பியோர், அமைச்சர்களை அறைகூவி அழைத்தும், எதிர்ப்பாளர்களை ஏசிப் பாடியும், இழிமொழியால் தாக்கியும் வந்தவர்கள், திடீரெனத் "திராவிட நாடு கிடைக்காது விட்டு விட்டோம்; விட்டு விடுக! இல்லையேல் கெட்டுவிடுவீர்கள்! நீங்களாகக் கெடாவிட்டால், நாங்கள் எதிர்த்துக் கெடுத்து விடுவோம்' என்றெல்லாம் பேசிடும் கோலம் கண்டதால், காங்கிரஸ் தலைவர்களிலே சிலருக்கு ஒரு நம்பிக்கை - இதுபோலத்தான் மற்றவர்களும், திராவிட நாடு கொள்கையை விட்டுவிடுவார்கள்; இவர்களுக்கு என்றைக்குமே அந்தக் கொள்கையிலே அழுத்தமான நம்பிக்கை இருந்ததில்லை! எந்தக் கொள்கையிலும் நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களே அல்ல இவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

மற்றொன்று, நமது தோழர்களுக்கிடையே, அலுவலர் களாகப் பணியாற்றும் வகையிலே எழும் கசப்புகள், பேதங்கள் இவைகளைக் காணும்போது, காங்கிரஸ் தலைவர்கள் களிப்புடன் பேசிக்கொள்கிறார்கள், "பயல்கள் அடித்துக் கொண்டு மடியப்போகிறதுகள். கொள்கையிலே அழுத்தமான நம்பிக்கை இருந்தால், அதற்காக உயிரையும் கொடுக்கவேண்டுமென்ற உறுதி இருந்தால், இப்படியா, சில்லறை விஷயங்களுக் கெல்லாம் சிண்டுபிடி சண்டை நடக்கும். கொள்கையாவது மண்ணாவது! காட்டுக் கூச்சலோடு சரி! காரியமாற்றும் திறம் ஏது! கொள்கையிலே நம்பிக்கை இருந்தால்தானே!'' என்று பேசிக் கொள்கிறார்கள்.

தம்பி! இந்த நிலைமை வளரும், பேதமும் பிளவும் அதிக மாகும், கழகம் கலகலத்துப்போகும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள்.

நம்மிடையே தோன்றிவிடும் சில பல செயல்கள், அந்தத் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை வளரச் செய்கிறது! என்ன செய்வான் இந்த அண்ணாத்துரை! தடுத்துப் பார்க் கிறான் - மறுத்துப் பார்க்கிறான் - நிலைமை சீர்படாவிட்டால், என்ன செய்வான்? விட்டுவிட்டு ஓடிவிடுவான்! பார்! பார்! நடக்கப்போவதை!! - என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பேசுவதுகூட எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொள்கையை விட்டுவிட்டுச் சிலர் போய்விட்டதும், கொள்கைக்காகக் கழகமே தவிர, நமது உரிமைகளுக்காக, பெருமைகளுக்காக, இலாபத்துக்காக அல்லது அதை யாரோ பெற்றுவிடுகிறார்களோ என்று மோப்பம் பிடித்து முணுமுணுப்பதற்காக அல்ல என்பதை முற்றிலும் உணராததால் மூண்டுவிடும் சச்சரவுகளும், காங்கிரஸ் தலைவர்களை, மொத்தத்தில் நமது கழகத்தவருக்கே கொள்கையிலே நம்பிக்கை இல்லை என்ற எண்ணம்கொண்டு பேசச் செய்கிறது.

நான் தம்பி! அவர்களின் தீர்ப்பும் வாதமும் சரியென்று கூறவில்லை.

அவர்கள் அவ்விதம் எண்ணவும், பேசவும், நம்முடைய, நடவடிக்கைகள் சில இடம் கொடுத்துவிடுகின்றன என்பதைத்தான் கூறுகிறேன்.

எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும், ஊரறியும் உலகறியும், காங்கிரஸ் கட்சிக்குள்ளே முளைத்து, வெடித்து, முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கும் சச்சரவுகள்.

அமைச்சரவை அமைக்கப்பட்ட ஏழு திங்களுக்குள், இரண்டாவது முறையாக குப்தா அமைச்சர் அவைமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பண்டித நேருவின் சொந்த இராஜ்யத்தில்!

குப்தா அமைத்திருப்பது காங்கிரஸ் மந்திரி சபை.

அதற்கு எதிர்ப்புக் கிளம்புவது, முன்னாள் முதலமைச்சர் சம்பூரணானந்தாவின் ஆதரவாளர்களாக உள்ள காங்கிரஸ் எம். எல். ஏ. க்களிடமிருந்து!

அதனை அவர்கள் திரைமறைவில்கூடச் செய்யவில்லை. சம்பூரணானந்தாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கமலபதி திருபாதி என்பவர் இல்லத்தில் கூடியே பேசுகிறார்கள் - பத்திரிகைகளில் வெளிவருகின்றன.

அந்த மாநிலத்திலேயே வெளிவரும், இந்தி - உருது - பத்திரிகைகளிலே, பார்த்தால்தான் தெரியும், குப்தா கோஷ்டியின் குட்டுகளை உடைக்கிறேன் என்று ஒரு பத்திரிகையும், சம்பூர்ணானந்தாவின் செல்வாக்குக்குச் சமாதி கட்டுகிறேன் என்று மற்றோர் பத்திரிகையும் நாராச நடையில் எழுதித் தீர்த்துக்கொள்ளும் விந்தை!

இங்கு நமக்கு வருகிற சேதி, குப்தா அமைச்சர் அவைமீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வருகிறது என்ற அளவுதான். அங்கு உள்ள நிலைமையிலே, இது நூற்றில் ஒரு பகுதி.

ஒவ்வொரு நாளும், இரு பிரிவுக் காங்கிரசாரும் முகாம்களில் கூடிப்பேசுவதும், கலகமூட்டுவோர், கலாம் விளைவிப்போர், கைக்கூலி பெறுவோர், கபட நாடகமாடுவோர், கூடிக் குடிகெடுப்போர், மிரட்டிச் சலுகை பெறுவோர் என்பவர்கள் மும்முரமாக வேலை செய்வதும், இவரைப்பற்றிய ஒரு இரகசியம் என் உள்ளங்கையிலே இருக்கிறது என்று ஒருவரும்; அவர் விஷயமாக எனக்குத் தெரிந்ததை அவிழ்த்து விட்டால், ஊர் நாறும் என்று இன்னொருவர் பேசுவதும்; இதை நீங்களே பேசிக்கொண்டு இருக்கக்கூடாது; ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்; ஆகையினால், மாற்றுக் கட்சிக்காரரிடம் "தகவலை'க் கொடுங்கள், அவர்கள் அம்பலப்படுத்தட்டும், ஆசாமி அகப்பட்டுக்கொண்டு விழிக்கட்டும்; நாம், இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற பாவனையில் இருந்துவிடலாம் என்று யூகம் தெரிந்தவர் சொல்லிக்கொடுப்பதுமாக நிலைமை இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் மட்டுமல்ல தம்பி! பல இடங்களிலும்.

ஆனால், அவை குறித்துப் பேச்சு, வெளியே அதிகம் எழாது; மூடி மறைப்பார்கள்; கமிட்டிச் சண்டை என்பார்கள்; இதனால் காங்கிரசுக்கு ஒரு கெடுதியும் வராது என்பார்கள்.

நம்முடைய கழகத்தில் ஒரு சிறு சம்பவம் ஏற்பட்டாலும், பெரிதாக்கிக் காட்டி, ஊர் கூட்டி, குழப்பி, நமது கழகத்தைக் குலைக்க முயற்சி எடுப்பார்கள், எடுக்கிறார்கள்.

இப்போது, தம்பி! விளக்கமாகிறதல்லவா, ஏன், நம்முடைய விடுதலைக் கிளர்ச்சியை, அந்த விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்ட கழகத்தை, காங்கிரஸ் தலைவர்கள் துச்சமாக மதிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்பதற்கான காரணம்.

சொல்லிவிட்டேன். நீ சோகமடைய அல்ல, ஒவ்வொருவரும் தத்தமது பங்காக, கழகத்தின் கண்ணியம் நம் ஒவ்வொரு வரின் உரிமையைவிடப் பெரிது என்ற போக்கில், நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

ஆனால், இதனால் நமது கழகம் ஒழிந்துபோகும் என்று நம்புவது மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டத்துப் பல்வேறு இராஜ்ய முதல் மந்திரிகளெல்லாம் கூடிய மாநாட்டில், கனம் காமராஜர், இதனை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் - அறிவாய்.