அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நரி பரியான கதை!
1

அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன் நான்!
ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை!
கிளிப் பொந்துக்குள் கருநாகம் குடி புகுந்து விட்டது!
"கேட்டால் கேள்! விட்டால் விடு!' என்பதல்ல நமது முறை!
"துக்க தினம்' என்ற பெரியார் காங்கிரசுக்கு வேண்டியவர்!
"விழா நாள்' என்ற நான் காங்கிரசால் கண்டிக்கப் படுபவன்!
வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது!
மரக் கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு!
ஜனநாயக சோஷியலிசம் பாறைமீது தூவிய விதை
காமராஜர் முதலாளி நரிகளைச் சோஷியலிசப் பரிகளாக்கிக் காட்ட முனைகிறார்!

தம்பி!

காங்கிரஸ் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். "ஆமாம் அண்ணாத்துரை! என்ன நீங்கள்கூட அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து விட்டீர்களே?' என்று கேட்டார். நான் சிறிதளவு விவரம் புரியாமலிருக்கக் கண்டு அவரே விளக்கமும் தந்தார்; "அதாவது அமெரிக்காவிடமிருந்து இந்தியா உதவி பெறுவதைக் கண்டிக் கிறீர்களே - கடன் சுமை ஏறுகிறது என்றும் இந்தியாவின்மீது அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்துவிட்டது என்றும் பேசுகிறீர்களே? இது என்ன புதிய போக்காக இருக்கிறதே'' என்று கேட்டார்.

நீண்ட நேரம் பேச வேண்டுமே என்பதனால், அவருடைய கேள்வி பற்றிக் கவலை காட்ட வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, நான் சுருக்கமாக, "ஆமாம்! அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்துவிட்டிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்; அது தீதானது என்றும் எண்ணுகிறேன்; அதனால்தான் கண்டிக்கிறேன். ஆனால், இது புதிய போக்கு அல்லவே!'' என்று கூறினேன், விவாதம் வளராது என்ற நினைப்புடன்.

நண்பர் விடவில்லை; "இல்லை! இல்லை! இப்போதுதான் இந்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது; அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் "சகவாசதோஷம்'' என்றார்.

"அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!'' என்று நான் கூற, நண்பர், "பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய்தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம். ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது'' என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, "சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் "சரசமாட' ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த "அமெரிக்க எதிர்ப்பு' - சகவாசதோஷம்தான் காரணம்'' என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.

"ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா? நண்பரே! இதை எடுத்துக் காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் - உதவியும் - பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகிவிடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு'' - என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை - கதை வடிவம் - தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன் - நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக் காட்ட.

காட்சி - 1

இடம்: கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்

காலம்: காலை

உறுப்பினர்: வாயில் காப்போன், ஒரு சீமான்.

மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, சுண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின்மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.

மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழை மரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒரு புறம் முட்செடிகள் உள்ளன.

வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.

ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!

என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக் கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முக மலர்ச்சியுடன் வரவேற்கிறான்.

காவ: நமஸ்தே!

சீமான்: நமஸ்தே. . . . .

காவ: வாருங்கள்!

(வரவேற்றுக்கொண்டே சந்தனம் தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)

சீ: சந்தனக் கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?

கா: நிறையக் கிடைக்கும்.

சீ: இதை இப்படி அரைப்பது தவிர வேறு என்ன செய்கிறீர்கள்?

கா: அரைக்கிறோம் - யாராவது பெரியவர்கள் இறந்து விட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் - கொஞ்சம் தைலம் - சோப். . . .

சீ: (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா? கா: ஆமாம், கொஞ்சம் - அதிகமல்ல.

சீ: அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?

கா: செய்ய வேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்.

சீ: பேசுகிறார்களா? யார்? கா: மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!

(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)

காட்சி - 2

இடம்: மாளிகை உட்புற மண்டபம்.

உறுப்பினர்: மாளிகைவாசிகளின் சிறு கூட்டம்.

ஒருவர் பேசுகிறார்: எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்திவிட்டோம். நமது மாளிகையோ மிகப் பெரியது. . . .

(ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).

பேசுபவர்: பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும் - எவ்வளவு தெரியுமா? இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.

(உள்ளே நுழைந்த சீமான்)

சீ: உலகமே பாராட்டுகிறது. பேசு: நமஸ்தே! உட்காருங்கள்! இவர்போன்ற உத்தமர் களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.

(ஒரு குரல்: யார் இவன்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன்போல இருக்கிறான்)

பேசு: இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக் கூடாது. இவர். . . .

சீ: மனிதன்; சர்வ தேசத்தான் - மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர். பேசு: காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.

சீ: மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது - ஆனால் கவர்ச்சியில்லை - கவர்ச்சிகரமானதாக்க முடியும் - பழுது பார்க்க வேண்டும் - பல வர்ணம் தீட்ட வேண்டும் - சுற்றுச் சுவரைக் கட்ட வேண்டும்...

பே: ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்

சீ: பழத்தோட்டம் நல்லது.

பே: பூவிலிருந்துதானே பழம். . . .?

சீ: பழம் தராத பூ உண்டு.

பே: ஆமாம், ஆமாம் - நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க. . . .

சீ: தக்க திட்டம் வேண்டும்.

(ஒரு குரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)

பே: (ஆர்வத்துடன்) பயம் வேண்டாம்! நமது மாளிகையிலே, ஏராளமான பணம் புதைத்து வைக்கப்பட் டிருக்கிறது. இடத்தைக் கண்டுபிடித்து, செல்வத்தை எடுத்து, மாளிகையைச் சீரும் சிறப்புமுள்ளதாக்குவோம்!

(பலர் சபாஷ், பலே! என்று களிப்புடன் கூவுகின்றனர்.)

சீ: (கனைத்துக்கொண்டு) முடியும், செய்யலாம். ஆனால். . . .

பே: செய்ய முடியாது என்ற பதமே எம்மிடம் கிடையாது. இந்த மாளிகையைக் கைப்பற்ற முனைந்தபோது காட்டிய மாவீரம் மங்கிவிடவில்லை. . .

சீ: அந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால், புதைந்துள்ள பொருளைக் கண்டுபிடித்து, பிறகு மாளிகையைத் திருத்துவது என்றால் காலம் அதிகமாகும். அதற்குள் கலனான பகுதி மேலும் கலனாகக்கூடும். காசூர் உதவியைப் பெற்றால், இப்போதே மாளிகையைப் பழுது பார்க்கலாம்.

(ஒரு குரல்: காசூர் உதவி, வெள்ளையூர் வேலையாக முடிந்தால் என்ன செய்வது?)

சீ: பழைய பயத்தை மறந்து, இந்தக் காரியத்தைத் துவக்க வேண்டும். (ஒரு குரல்: அது எங்களுக்குத் தெரியும்)

சீ: தெரியாமலென்ன! நீங்கள் மாவீரர்கள்! உங்கள் மூதாதையர் ஞானிகள்! இதோ பேசுகிறாரே உங்கள் தலைவர், அவர் அஞ்சா நெஞ்சு படைத்தவர். உங்கள் மாளிகையோ, பிரம்மாண்டமானது. ஆஹா! இதை மட்டும், திட்டமிட்டுக் கட்டி முடித்தால் காண்போர் களிப்புக் கடலில் மூழ்குவர். காசூர், இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை, ஓர் கைங்கர்யமாகக் கருதுகிறது. காசூருக்கு, வெள்ளையூரார்போல, பிறர் மாளிகையில் புகுந்துகொண்டு, ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே கிடையாது. . .

பே: அதுதான் சிலாக்கியமான கொள்கை. எந்த ஆட்சியும் சொந்த ஆட்சிக்கு ஈடாகாது. . .

சீ: இதையே எங்கள் தலைவர் எழுபத்தெட்டு தடவை சொல்லியிருக்கிறார். உங்களுடைய மாளிகையை உங்கள் மாளிகையிலேயே எங்கெங்கோ புதைத்து வைக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டு, புதிதாக்குவது சிரமம், காலக்கேடு நீங்கள் விரும்பினால், காசூர் பணம் தரும். பழுதுபார்த்து, அழகிய வேலைப்பாடுகள் செய்து முடித்து, அதிலே நீங்கள் குதூகலமாக இருப்பதைக் கண்குளிரக் கண்டு களிக்கும் நோக்கந்தான் காசூருக்கு. . . .

பே: நேர்மையான நோக்கம் நெஞ்சிலே வஞ்சமின்றி.

சீ: வஞ்சகமா! அது பஞ்சையர்களின் குணம். காசூர், நேசர்களின் கொஞ்சுதலைப் பெற, தன்னையே அர்ப்பணிக்குமளவு நல்ல நோக்கம் கொண்டது.

பே: ஆஹா! மகிழ்ந்தேன்! பூரித்தேன்! இப்படிப்பட்ட உதவி கிடைத்ததற்காக இறைவனை வணங்குகிறேன்.

சீ: நன்று! நான் சென்று வருகிறேன். காசூர் சென்று, மாசுமறுவற்ற உமது மனத்தை எடுத்துக் கூறி, இந்த மாளிகை பழுது பார்க்கும் மகத்தான கைங்கரியத்தை, தெய்வ காரியமாக மேற்கொள்ளும்படி வற்புறுத்திக் கூறுவேன். பே: மெத்த சந்தோஷம். ஜெயவிஜயீபவ!

சீ: சந்தேகம் வேண்டாம். எதற்கும், காசூருக்கு உதவி கோரி, இங்கிருந்து யாரையாவது அனுப்பிவைத்தால். . . .

பே: ஆகா! செய்வோம்! பாபாஜீ! பாபா: இதோ, கிளம்புகிறேன்.

(சீமான் விடைபெற்றுக் கொள்கிறார்)

காட்சி - 3

இடம்: காசூர்

உறுப்பினர்: கோடீஸ்வரர்

ஒரு கோடீஸ்வரர், கடிதமொன்றைப் பிரித்துப் படித்து விட்டுப் புன்சிரிப்புடன், அதை மற்றவரிடம் தருகிறார். சுமார் அறுபதுபேர் கூடியிருக்கிறார்கள் அங்கு. ஒவ்வொருவராகக் கடிதத்தைப் படித்து மகிழ்கிறார்கள்.

ஒரு கோடி.: தூதர். . .

இன். கோ.: சாமர்த்தியசாலி! வேறு.

கோ.: அனுபவசாலி!

ஒரு கோ.: பக்குவமாகக் காரியத்தை முடித்திருக்கிறார்.

வேறு கோ.: பழைய மாளிகையைப் புதிதாக்கும் உதவி செய்வதென்றால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்துதானே போகும்.

ஒரு கோ: நன்றாகக் குளிரட்டும்! பழைய மாளிகையைப் புதிதாக்கப் பண உதவி செய்யும்போது மாளிகையை அடமானமாக வைத்தாக வேண்டுமே! பிறகு கடனைப் பைசல் செய்து மீட்டுக்கொள்வதைப் பார்த்துக்கொள்வோம்.

வேறு கோ: தவறு உமது திட்டம். பண உதவி செய்யும் போதே அடமானப் பத்திரம் எழுதச் சொல்லக்கூடாது, விழிப்பும், பயமும் பிறந்துவிடும். பணம் ஏறின பிறகு பத்திரம் தயாரிக்க வேண்டும்.

மற். கோ: அதுதான் சரியான யோசனை, வரட்டுமே போன ஆசாமி.

காட்சி - 4

இடம்: மாளிகை வாசல்

உறுப்பினர்: பேசினோர் பிணியாள்.

பிணியாள்: ஆமாம். என்னவோ மாளிகையின் ரிப்பேருக்குக் கடன் வாங்கப்போவதாக

பே: எவன் கலகமூட்டினான்?

பி: கலகமா! சேதி சொன்னான்.

பே: சேதி முழு உண்மையல்ல. பணம் வாங்கப் போகிறோம் ரிப்பேர் செலவுக்கு. ஆனால் அது கடன் அல்ல, உதவித் தொகை.

பி: உதவித் தொகையா? பே: உனக்குச் சூட்சுமம் புரியாது போ!

பி: புரியத்தான் இல்லை. அன்னியர்கள் ஏதேனும் சாக்குக் கூறிக்கொண்டு உள்ளே நுழைவார்கள் - பிறகு தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்துவார்கள் என்றெல்லாம் முன்பு. . .

பே: சொன்னேன். ஆமாம். அது பழைய கதை. மறந்துவிடு.

பி: மறக்க முடியவில்லையே! உதவித் தொகை தருவதாகக் காசூரான் சொல்கிறான் இப்போது; பிறகு மாளிகை அவன் வசம் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறதே.

பே: சுத்த பயந்தாங்கொள்ளி! போமய்யா, எனக்கு நேரமில்லை உன்னிடம் வம்பளக்க.

மாளிகை - இந்தியா
பேசுபவர் - காங்கிரஸ் கட்சி
சீமான் - கிரேடி
காசூர் - அமெரிக்கா
பிணியாள் - ஏழை ந

ாடகத்தின் பொருள் இப்போது விளக்கமாகும் என்று நம்புகிறோம். இப்படி மனம்போன போக்கிலே, ஒரு நாடகம் தீட்டுவதா என்று கோபிக்கத் தோன்றும் அன்பர்களுக்கு.

இந்திய விடுதலை விழாவிலிருந்து அமெரிக்க நாட்டுத் தூதுவர், ஹென்றி கிரேடி இந்தியாவிடம் காட்டிவரும் "அக்கறை' அனைவரும் அறிந்த விஷயம். அதை ஆதாரமாக வைத்து இந்நாடகம் தீட்டப்பட்டது. போதாது என்கிறீர்களா? சரி! இதோ, மேலும் இரண்டு ஆதாரங்கள்.

கிரேடி பேசியிருக்கிறார், சின்னாட்களுக்கு முன்பு. "வெளி நாடுகளிலிருந்து, மூலதனம் உதவி பெறாமலேகூட நீங்கள் நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் - ஆனால் மூலதனம் ஏராளமாக ஏற்கனவே உள்ள நாடுகளின் உதவியைப் பெறாவிட்டால், உங்கள் நாட்டு அபிவிருத்தி, தாமதப்படும். தக்க நிபந்தனைகளுடனும், சரியான நிலைமையிலும், பலர் பணம் கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை, என் நாட்டு முதலாளிமார்கள் சார்பாக நான் கூற முடியும். ஆனால், இந்த நாட்டிலேயோ வேறு நாட்டிலேயோ சென்று, எங்களிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கெஞ்சமாட்டோம்.

அதற்கு ஒத்து ஊதும் முறையில் சாகல் சந்ஷா எனும் வடநாட்டு வணிகத் தலைவர்

"வெளிநாட்டுத் தொழிலரசர்கள், இங்கு பெரிய தொழிற் சாலைகளை எல்லாம் சில வருஷங்களுக்குள் சர்க்கார் ஏற்றுக் கொள்ளும் என்று பயப்படுகிறார்கள், சந்தேகிக்கிறார்கள் - இந்திய சர்க்கார், உடனடியாக இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும்'' என்று பேசினார். நாடகம் தவறா?

***

படித்து முடித்த நண்பர், "அது சரி! சுவையைக் கூட்டித் தந்திருக்கிறாய் புரிகிறது; எதிர்பார்க்காததுமல்ல'' என்றார்.

"கோபம் குறையாமலே இருக்கிறது. அதனால்தான் விளக்கம் தரும் கட்டுரையைப் படித்த பிறகும் சுமத்திய குற்றச்சாட்டை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீர். போகட்டும், கட்டுரையின் சுவை கிடக்கட்டும், அந்தச் சுவை இருக்கும் என்று எதிர்பார்த்த தன்மை இருக்கட்டும், கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனியும்'' என்றேன். நண்பர் கவனித்துப் பார்த்துவிட்டு, "அப்போதே எழுதியதா இது?'' என்று கேட்டார். "ஆமாம். கட்டுரை, இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொடர்பு காரணமாக எழுதப்பட்டது அல்ல; தேர்தலுக்காக எழுதப்பட்டதும் அல்ல மனதிலே பட்டது, அதனால் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பிடி இந்த அளவு அழுத்திக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட வேதனையால் எழுதப்பட்டது அல்ல. அமெரிக்காவின் "பிடி' விழ ஆரம்பித்த போதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21-12-47லில்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?'' என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது. இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது.

தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது "காங்கிரஸ் நண்பர்' என்று கூறியிருக்கிறேன் கவனித்தனையா? காரணத் தோடுதான் கூறினேன். அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல, காங்கிரசிலே இடம்பிடித்துக்கொண்டவருமல்ல. விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி - பற்று - பாசம். அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக்கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்கமாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர். காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல. இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது!

காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஓட்டு வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் "பக்தி' காட்டி வருகின்றனர். இந்த "பக்தியை' காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்கின்றனர்.

***

ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! "ஓட்டு'' அவருக்கு! அதைத் தெரிந்துகொள்.

என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப்பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி - அவ்வளவுதான் நீ தெரிந்துகொள்ள வேண்டியது - மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக்கொள்ளாதே!

இவருக்குப் போடும் "ஓட்டு'' இவருக்காக அல்ல - காங்கிரசுக்காக! - இவர் முன்பு "ஒரு மாதிரி'' ஆளாக இருந்தாரே - வட்டித் தொழிலால் கொழுத்தவராச்சே - அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகிவிடும் குணவானாயிற்றே! - என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி - சாக்கடைத் தண்ணீரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், "பரிசுத்தமான புண்ணிய தீர்த்தம்' - மறவாதே!

நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு, இவருடைய பண பலத்தின்மீது ஏற்பட்ட பாசத்துக்குக் கட்டுப்பட்டு, காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தி வைக்கிறதே, இது அநியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் "தேச சேவை டைரியைக் காட்டி அல்ல, தமது "செக் புத்தகத்தை'க் காட்டிப் பெற்றாராமே' என்று பேசாதே!

எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன? என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால்தான் உனக்கென்ன? ஏன் அவைகளைப்பற்றி யோசிக்கிறாய்? அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்துவிட்டதோ, அப்போதே அவர், "உங்கள் ஓட்டுக்களை'ப் பெறும் யோக்யதையைப் பெற்று விட்டார் என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை.

தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான் "வெற்றி' பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார்? அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை? திறமை அனுபவம் என்ன? என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாத படியான, பிரசாரம் நடைபெற்றது. இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று - ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக் கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறு செய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து - மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது.