அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நரி பரியான கதை!
2

சில "தொகுதிகளில்' காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, "ஓட்டு'' அளித்தனர் - காரணம், அவர்கள், தாங்கள் தரும் "ஓட்டு' அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு - என்று நம்பினர் - நம்பும்படி செய்யப்பட்டனர்.

"இது வெறும் "கைகாட்டி' தானேப்பா!''

"கல்லுப்பிள்ளையார்போல இருக்கும் - வாயைத் திறக்காது''.

"திறவாமலிருந்தால்தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது.''

"ஆமாம். ஆமாம். புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு''

"உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே. . .''

"இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு? காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால் தான்.''

"அது சரி - இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக்கொண்டது?''

"ஊரிலே பெரிய ஆள் - பணக்காரன் என்பதனாலேதான்.''

"பாவம்! பண்டரி, படாதபாடு பட்டு வந்தான் காங்கிரசுக்கு - அவனை நிற்க வைத்திருக்கலாம்.''

"ஆமாம். அவன்கூடக் கேட்டானாம் - கெஞ்சினானாம்.''

"கடைசியில், "எதற்கும் உதவாததை'ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.''

"இது போய் அங்கே என்ன செய்யும்?''

"செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்.''

***

பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக் கொண்டனர் - அபேட்சகர்களின் "யோக்யதாம்சங்களை'ப் பற்றி. "ஓட்' மட்டும் போட்டனர் - ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று - ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூ-கையும் உண்டு, முள்ளும் உண்டு. ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார் - மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் "குன்றுக்கு' ஒரு "மகிமை' கற்பித்து, அதன்மீது இருக்கும் "எதை' எடுத்து உபயோகித்தாலும் "புண்யம்' என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா முள்ளா என்று ஆராய மாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று தேர்தல்! யாரும் "வர முடிந்தது' முலாம் பூசிக் கொண்டதும்!

மக்கள் அளித்த "ஓட்டு' தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு - என்பது அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது - யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது என்ற தைரியத்தை! அவர்களில் பலர் வெளிப்படையாகவே "எனக்கா "ஓட்டு' தந்தனர் - என்ன செய்தாய்? ஏது செய்தாய்? என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!'' என்று பேசிக்கொண்டனர்.

தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். "நான் சாமான்யன் - எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை - மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்'' என்று அடக்கமாகப் பேசி "ஓட்டு' பெற்றனர் - பிறகு, "என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஓட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய் உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் - போக்கும்படி சொல்லு - இங்கே வந்து என் உயிரை வாங்காதே போ'' என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப் பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, "ஓட்டு' பெற்றுக்கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் "உயர்ந்தவர்களின்' உருவம்கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்துகொண்டு சட்டசபை சென்ற "பெருமான்களின்' ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது.

கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு ஆடிக் காட்டுகிறான் - கத்தி கொண்டு வயிற்றில் குத்திக் காட்டுகிறான். அதைக் காணும் நாம் கைகொட்டுகிறோம் - சபாஷ் கூறுகிறோம் - ஆச்சரியமடைகிறோம் - அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன் "என் திறமையைக் கண்டீர்களல்லவா? இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த் தலைவனாகக் கொள்ளக்கூடாது?' என்று கேட்கமாட்டான் - கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தை பல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் - ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டுபோய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக் காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூ-லுள்ள சிக்குகளைச் சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப் பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது? எல்லாம் செய்ய வல்லவர் என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் "வீரன்' சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் - ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக்கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணி புரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதமை. ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளி கொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற தேவையான கருவியும் வேறு வேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர் புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒரு கட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும் - போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, "தேசியமாக' கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வர முடிந்தது - ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது - மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று.

***

பெரும் போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. - சமையல் காரியம் முடிந்ததும், நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்துவிடுகிறோம்! அதுபோலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட "படை'யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்க வேண்டும் - ஆனால், நடந்தது வேறு - விபரீதமானது - அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக்கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக்கொண்டனர் மக்கள் - நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதைபோலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ள போதே தூற்றிக்கொள், கதர் உள்ளபோதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக் கிளம்பிவிட்டனர்.

வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர். அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி, ஆஸ்திரே-ய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரஞ்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதேபோது "இந்தியப் பண்பாட்டை'' இழந்துவிடாதபடியும் பார்த்துக்கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக்கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர், விவாக விடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீத புத்தியின் விளைவு என்று பேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, "ஏகதாரம்' என்று கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன்மீது ஆணையிட்டு "ஏகதாரம்' எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது காங்கிரசு கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும் என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் - அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்த முறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச் செய்யும் முறை - வாழ வைக்கும் முறையல்ல! என்பதுபோல, எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பல வகையினர் உண்டு - அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக் கொள்கிறார்கள்.

கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட கதர் பயன்படுகிறது போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் "புண்ணியவான்கள்' மிகுந்துவிட்டனர். மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன் - கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன் - பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பல வகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக் காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியது தான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆள வந்தோம் என்று கூறிக் கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல - கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள்.

***

காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆக வேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர்.

ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன்

கேட்டால் கேள், விட்டால் விடு!

என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது,

நமது பிரசார முறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும்,

என்ற எண்ணம் தோன்றவேண்டுமே தவிர எரிச்சல் எழக் கூடாது.

எடுபிடியாகிலும் இனிப்புப் பெற்றிட வேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டு விடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

வேடிக்கை என்பதா? வேதனை தருவது என்பதா? பாரேன், தம்பி! 1947லில் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை "துக்க தினம்' என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழா நாள்! என்று (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன்.

விடுதலைப் போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப் போர் நடாத்திய காங்கிரசிலே - போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ள வர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்ற முடியும் பாராட்ட முடியும்?

காங்கிரஸ் விடுதலைப் போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள் காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூற முடியும் ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்க முடியுமே தவிர பாசம் - பற்று - என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!

காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக்கொண்டுவிட்டது.

அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.

தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப் பருப்பு போடுவது முறை, தேவை. ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒரு பிடி தெருப் புழுதியைக் கலந்திடின் பருகிட எவர் இசைவர்?

இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால் தான், பலர் அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்துகொண்டு.

இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர்.

இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர். பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மன மயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் "சூத்திரதாரிகள்' வந்துள்ளனர்.

அத்தகைய மன மயக்கத்தை ஊட்டவே, "சோஷியலிசம்' பேசுகின்றனர்.

***

நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் - வந்தவர் குறுநகை புரிகிறார் - வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணு கிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் - கூரிய வாள் மின்னுகிறது - மன்னனின் மார்பில் பாய்கிறது - அவர் சாய்கிறார் - சதிகாரன் களிக்கிறான் - வேடம் ப-த்தது - வெற்றி கிடைத்தது! வீர வேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது - இதோ முடித்துவிட்டேன் காரியத்தை. மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான்.

இரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி - மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன் சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக் குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக் கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்துகொண்டான். கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான். வீர வேந்தனைத் தனியாகக் கண்டு சில பேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி - தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான்.

மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர் இதனைப் பெரிய புராணத்தில் - வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவ பக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே பயன்படுத்துகின்றனர். கதைகளைப் பக்தர்கள், எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின்மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை "சிவ வேடம்' பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம்.