அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நரி பரியான கதை!
3

நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச் சின்னம், ஆகவே அதை அணிந் திருப்பவரின் உள்ளம் தூய்மையானதாக இருந்தே தீரவேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவ கோலத்தவரிடம், சிவாகம் ஏடுதான் இருக்கும் - என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக் கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர்.

மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள் தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக்கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்துகொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர்.

யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின்மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும்போது, எதன்மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதேபோல் கோலம் பூண்டு வந்தே ஏய்ப்பர் - ஏய்த்திருக்கின்றனர் - ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம் - மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு - ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும் படியாக மாறிவிட அனுமதிக்கலாகாது.

இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும்.

நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன் கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன? விலை என்ன ? வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன? இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்!

விதை தூவினால் மட்டுமே பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது!

நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக் கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ ?

பாறைமீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின் போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும்.

உடன் இருப்போர் ஊர்க் குடி கெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும்.

ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார் பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத் தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!! - என்கிறார்கள்.

இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்றுதான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக்கொண்டே!!

இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதைபோலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!!

காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அளவுக்குத் தாழ்ந்துபோகவும், தரக் குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை.

அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார், முதலாளிகளை சோஷியலிஸ்டுகளாக்கிக் காட்டுகிறார்.

தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்!

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த "பக்தனை'க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர்.

குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சி கொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக் கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடு நோக்கி ஒடிவிட்டன என்பர்.

கண்ணுதற் பெருங் கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது.

நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட!

ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகளாக்கிட முடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!!

ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டு கிறது - காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்?

மக்களுக்கு நம்பிக்கை எழாது நிச்சயமாக! ஆனால் ஒரு மயக்கம் ஏற்படும் அல்லவா? அதுபோதும் ஓட்டுகளைத் தட்டிப் பறித்திட என்று அவர் திட்டமிடுகிறார்.

அந்த மயக்கத்தைப் போக்கிடும் தொண்டினில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறோம். தன் திட்டத்தைத் தாக்குகிறார்களே என்பதாலே அவருக்கு நம்மீது ஆத்திரம்! விநாடிக்கு விநாடி அந்த ஆத்திரம் வளருகிறது, பொங்குகிறது.

காமராஜர் தயவால் ஒரு புதிய வேட்டை கிடைக்க இருக்கிறதே, அதனை இந்தப் "பாவிகள்' கெடுத்துத் தொலைக் கிறார்களே என்பதை எண்ணிடும்போது முதலாளிமார்களுக்கு நம்மீது கோபம் - கொதிப்பு!

இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக்கொண்டுதான் நாம் பணியாற்றவேண்டி இருக்கிறது. நமது பணி பெரிது! பொறுப்பு அதனைவிடப் பெரிது! எதிர்ப்பு, பல வகையின, மிகப் பெரிய அளவினதுமாகும்!

"அப்படியா அண்ணா!'' என்று ஆயாசக் குரலிலே கூறிடமாட்டாய். அதனால் என்ன அண்ணா நான்தான் அந்தப் பணிக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனே! அஞ்சாதே அண்ணா! அறம் வெல்லும்!! என்று உறுதியுடன் பேசிடுவாய் என்பதை உணர்ந்தே தம்பி! உன்னை அழைக்கிறேன். வேறு யாரை நான் அழைப்பேன்?

அண்ணன்,

23-10-66