அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு!.....
2

ஆமாம்! அப்படித்தான் சொல்லக் கேட்டேன் என்றான் கேட்டு மருள்வான்;

ஏமாந்து போனாய்! ஏமாற்றிவிட்டான்! ஏமாளி யானாய்!! என்று அடுக்கினான் மூட்டிவிடுவான்.

எப்படி? எதிலே ஏமாந்து போனேன்? என்று கேட்டான், கேட்டு மருள்வான்.

திருக்குளத்துத் தாமரை இதழ் விரித்து அழகாக இருக்கிறது என்று கூறி உன்னை ஏமாற்றினானே, மன்றத்தான், அதைத்தான் கூறினேன்; கேள் அவனை, இப்போது; தாமரை மலர் இதழ் விரித்து இருக்கிறதா என்று கேள். அவனைக் கேட்பானேன், வா, என்னோடு, திருக்குளம் செல்வோம்; காட்டுகிறேன், நீயே பார்! தாமரை இதழ் விரித்து இல்லை!! வந்து பார்! என்றான் மூட்டி விடுவோன், கேட்டுமருள்வோன் கிளம்பினான், திருக்குளம் நோக்கி சிறு விளக்கொன்று தேவை - இருட்டு அல்லவா? என்று கவனப்படுத்தினான் மூட்டிவிடுவோன் - விளக்குடன் இருவரும் கிளம்பினர், திருக்குளத்தருகே சென்றதும் மூட்டிவிடுவோன், சுட்டிக்காட்டி, பார் நன்றாக! எங்கே, இதழ் விரித்த தாமரை இருப்பதாகச் சொன்னானே உன்னை ஏமாளியாக்க; எங்கே விரிந்த தாமரை? என்று இடித்துக் கேட்டான்.

விரிந்த தாமரை இல்லை - குவிந்த தாமரையே தெரிந்தது.

கேட்டுமருள்வோனுக்கு மெத்த வருத்தம் ஏற்பட்டது. ஏன், மன்றத்தான், தாமரை அழகாக விரிந்து மலர்ந்து காட்சி தருகிறது என்று நம்மிடம் கதை கதையாகச் சொல்ல வேண்டும்! சே! இது ஏன் இந்தச் சூதுப் பேச்சு - இதை நம்பி, நாம் பலரிடம், செந்தாமரை விரிந்து மலர்ந்து அழகாகத் திருக்குளத்திலே இருக்கிறது என்று கூறி வைத்தோமே, இப்போது, நாமல்லவா ஏமாளியானோம் - என்று எண்ணி மனம் வெதும்பினான்.

இனியாகிலும் உணர்ந்துகொள், மன்றத்தான் பேசுவது பொய் என்பதை! - என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தான் மூட்டிவிடுவோன்,

எது அப்பா, பொய்? என்று கேட்டபடி வந்தான், தெளிவளிப்பான்.

திருக்குளத்தில், செந்தாமரை இதழ்விரித்து, அழகாக மலர்ந்து இருக்கிறது என்று பொய் பேசி என்னை ஏய்த்து வந்தான் மன்றத்தான். இங்கு வந்து பார்க்கிறேன், தாமரை குவிந்து கிடக்கிறது. மலர்ந்து, இதழ் விரித்து இல்லை - என்று கோபமும் துக்கமும் கொண்ட நிலையில், பேசினான் கேட்டுமருள்வோன்.

தெளிவளிப்பான் கூறினான், கேட்டுமருள்வோனே! இது இரவுக்காலமல்லவா? இரவுக்காலத்திலே, தாமரை குவிந்துதானே இருக்கும். உதயசூரியன் ஒளிபட்ட உடன்தானே, தாமரை மலரும். தாமரை மலர்ந்திருக்கிறது என்று மன்றத்தான் சொன்னது பொய்யுரை அல்ல. காலையில், தாமரை மலரும், அதைக்கண்டு சொன்னான்! நீயோ, இரவு வந்து காண்கிறாய், மூட்டிவிடுவோன் பேச்சினைக் கேட்டுக்கொண்டு. காலையிலே வந்து பார், மலர்ந்த தாமரை காண்பாய் - தாமரை இதழ் விரித்திடக் காலைக் கதிரவன் ஒளி வேண்டும் - அஃது இல்லாதபோது, தாமரை குவிந்துதான் காணப்படும். குவிந்து காணப்படுவது, காலத்தின் தன்மைக்கு ஏற்ப, தாமரை விளங்கும் என்ற உண்மையைக் காட்டுவதாகும். இரவுக் காலத்தில் குவிந்த நிலையில் உள்ளதால், தாமரை, மலருவது இல்லை, இதழ்விரிப்பது இல்லை, என்றா முடிவு கட்டுவது!! மன்றத்தான் சொன்னது பொய்யல்ல. உதயசூரியன் ஒளிபட்டதும் தாமரை இதழ்விரிக்கும். காலம் வர வேண்டும்! காரிருளில் விரிந்த தாமரை தேடாதே, கலகப் பேச்சுக் கேட்டு மனம் மருளாதே!! - என்றான். மூட்டிவிடுவோன் சென்றுவிட்டான்.

காலை மலர்ந்தது. கமலமும் மலர்ந்தது. கேட்டு மருள்வோன் அதனைக் கண்டான் - கண்டதால் தெளிவு பெற்றான்.

கமலம் மட்டுமல்ல, கருத்தும் அப்படித்தான்.

உரிய காலம் வரும்போது மலரும். சில காலத்தில் குவிந்த தாமரைபோலிருக்கும், உணர்ந்துகொள், என்றான் தெளிவளிப்போன்.

அதுபோலத் தம்பி! கழகம் காலமறிந்து காரியமாற்றுகிறது. அத்தகைய சீரிய முறைப்படி வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதே, இந்தி எதிர்ப்பு அறப்போர். காலமும் முறையும் அறிந்து, மாற்றார் மூட்டிவிடுவதற்கு இரையாகாமல், கழகம் எனும் அமைப்புக்கும் ஊறுநேரிடாமல் பாதுகாத்தபடி நடத்தப்பட்டு வருகிறது இந்தி எதிர்ப்பு அறப்போர். மூட்டிவிடுவோன் காட்டிடும் வழி நடந்தால், கழகம் படுகுழியில் வீழ்ந்துபடும்; வீழ்ந்துபட்டதும், சேற்றுக் குழியில் வீழ்ந்த யானையைச் செந்நாய்க் கூட்டம் கடித்துத் தின்பதுபோல, கழகத் தோழர்களை, காட்டிக் கொடுப்போரும் மூட்டிவிடுவோரும் காரச் சரக்கினரும் ஈரமற்ற நெஞ்சினரும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கி இருப்பர் அல்லது தமக்குக் குற்றேவல் புரியும் சிற்றாட்களாக்கிக் கொண்டிருப்பர். இதனை அறிந்ததால்தால் கழகத்தை நடத்திச் செல்வோர், காலத்துக்கு ஏற்றபடி முறையினை மாற்றிக் கொண்டனர் - அது குறித்துக் கடாவினோர், கதைத்தோர், என்னாயினர்!! களம் நிற்கின்றனரோ? இலையே!! கதர் அணிந்து கொண்டுவிட்டனர். இவர்கள்தான் நமக்குத் தூபமிட்டவர்கள்.

"விடாதே! தொடுத்திடு போர்! உடைத்திடு தடைச் சட்டத்தை!'' என்றெல்லாம். எதற்கு? கழகம் எனும் அமைப்பு அழிந்துபடும் என்ற நினைப்பில். கழகம் அழிந்துபடுவதால் என்ன ஆதாயம்? கழகம் பெற்று இருக்கும் எதிர்க்கட்சி எனும் ஏற்றமிகு பீடத்தில் தாம் அமர்ந்துகொள்ளலாம் என்ற நப்பாசையில். கழகம் மேற்கொண்ட வேலைத் திட்டம் இந்த ஆசையில் மண் விழச் செய்துவிடவே, மூட்டிவிடுவோர் இனி எதிர்க்கட்சி என்ற ஏற்றம் பெறமுடியாது என்று உணர்ந்து ஆளுங்கட்சியின் ஒளியைப் பெற்றுக்கொள்ளச் சென்றுவிட்டனர். முன்பு கொண்டிருந்த எண்ணங்கள், வெளியிட்ட ஆசைகள், கண்ட இன்பக்கனவுகள் யாவும் பொய்யாய், கற்பனையாய், கனவாய்ப் புகைந்தே போய்விடக் காண்கிறோம். கழகமோ, புயலுக்குத் தப்பிட வளைந்திடும் நாணல்போல, நிலைமைக்கேற்ற முறை வகுத்துக்கொண்டு, நிலைத்து நிற்கிறது.

எனவே, தம்பி! நாம் நடத்தி வரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் குறித்து அமைச்சர்களும் அவர்களின் அணைப்பிலே அகமகிழ்ச்சி பெறுவோரும் எதைக் கூறிக்கொண்டிருப்பினும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை - நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் நமக்கு அழுத்தமான, தூய்மைமிக்க நம்பிக்கை இருந்தால். அந்த நம்பிக்கை இருப்பதனால்தான், நாடு மெச்சிடும் விதமான அறப்போரினைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம்.

மொழிக்காக ஒரு கிளர்ச்சியா, போராட்டமா! செச்சே! என்ன மதியீனம்! வாழவழி என்ன என்பதற்குப் போராடுவார்களா, என்மொழி உன்மொழி என்று சண்டை போட்டுக்கொள்வார்களா என்று பேசுகிறார் காமராஜர்.

மொழிப் பிரச்சினை அவருக்கு அவ்வளவு சாமான்ய மானதாக, உப்புச்சப்பு அற்றதாகத் தோன்றுமானால், நாட்டு மக்களிடையே மனக்கொதிப்பையும் கசப்பையும் மூட்டிவிடும் மொழிப் பிரச்சினைபற்றி ஏன் வீணாகப் பிடிவாதம் காட்டுகிறீர்கள் - ஆங்கிலந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே - தமிழைத்தான் ஆட்சிமொழி ஆக்குங்களேன் என்று இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துவதில் முனைந்து நிற்கும் லால்பகதூர் களிடம் எடுத்துச் சொல்லுவதுதானே! சொல்லிப் பார்க்கட்டும் - அப்போது தெரியும் காமராஜர் கண்காட்டும் வழியிலே காங்கிரஸ் செல்கிறது என்ற பேச்சு எத்தகைய இனிப்புப் பூச்சுள்ளது என்பது.

காமராஜர் கருதுவதுபோல, இப்போது எல்லோரும் கூடி ஒன்றுபட்டு நின்று கவனம் செலுத்தித் தீர்த்துவைக்கவேண்டிய பிரச்சினை, சோற்றுப் பிரச்சினைதான் என்றால், லால்பகதூர் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதிலே இத்தனை தீவிரமும் பிடிவாதமும் காட்டுவானேன்?

இந்தி முக்கியமான பிரச்சினை அல்ல என்று காமராஜரும்,

இந்தி இரண்டு தலைமுறை கழித்துத்தான் வரும் என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும்,

பேசுகிறார்கள் - நம்மை மயக்க - உணர்ச்சியை வேறு பக்கம் திருப்பிவிட! ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புது உத்தரவு கிளம்புகிறது டில்லியிலிருந்து, இந்தியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும்.

தூங்கு, ஒரு பயமும் இல்லை. பூனை நடமாடும் சத்தம், வேறொன்றுமில்லை என்று மாளிகையின் காவலாளி கூறி, மற்றவர்கள் விழிப்புடன் இருப்பதைத் தடுத்து விடுகிறான் என்றால், சூது சூழ்ச்சி அற்ற முறையிலே காவலாளி அவ்விதம் செய்திருந்தால் அவனை ஏமாளி என்போம்; தெரிந்தே வீட்டாரை ஏய்க்க அவ்விதம் கூறியிருந்தால், திருடனுக்கு உடந்தை என்போம்.

இந்திப் பிரச்சினை ஒரு அவசர அவசியப் பிரச்சினை அல்ல என்று பேசுவோரும், இந்தி இரண்டு தலைமுறைக் காலம் வரையில் வராது என்று கூறுவோரும், இந்த இரண்டு வகையில் எந்த வகையினர் என்று கூற இயலவில்லை, தம்பி! ஆனால், எந்த வகையினராக இருப்பினும், நாட்டுக்கு அவர்களின் போக்கு ஆபத்தினையும் கேட்டினையும் மூட்டிவிடுகிறது என்பதிலே அறிவாளர் எவருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது.

பொன்னிழந்து விட்டால் வேறு
பொருள் விளைக்கலாகும்; நாளும்
உண்ணும் சோறிழந்தால் வேறு
உணவு தேடலாகும்; மொழிக்
கண்ணிழந்து விட்டால், வாழ்வுக்
காட்சி காண்பதேது? பின்னர்
மண்ணின் வாழ்வெதற்கு? இதனின்
மடிதல் மேலதன்றோ?

இவ்விதம் கேட்கிறார் கவிஞரொருவர் - இலங்கைத் தீவினிலிருந்து.

கவிஞர்தானே! அப்படித்தான் கேட்பார் என்று கூறுவார்களோ ஒருவேளை, சரி, தம்பி! கற்பனைச் செல்வம் தரும் கவிஞரின் பேச்சுடன், வேறொன்றும் காட்டுவோம்.

இவர் அரசியல் தத்துவம் போதிக்கும் பேராசிரியர், பெயர் பி. கே. எஸ். ராஜா. 1963-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள், கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். சோற்றுப் பிரச்சினையா, மொழிப் பிரச்சினையா என்று கேட்கிறாரே காமராஜர், அவர் காணட்டும், பேராசிரியரின் கருத்தினை.

இந்நாட்டில் உள்ள மக்களிடையே பேசப்படுகிற மொழிகளில், இந்தி சிறுபான்மையோர் மொழியாகும். பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள்.

ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதால் இந்தி பேசும் மக்கள் நியாயமற்ற வகையில் முன்னணியில் நலம் பெறுவர்.

முதலாவதாக, தேசிய மொழியின்றி இந்தியா ஒரு நாடாக விளங்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஆங்கிலமே நீடிக்க வேண்டும்.

ஆங்கில மொழியின் நுழைவால்தான் இந்தியத் தேசியம் உருவெடுத்தது. இதன் பயனாகவே இந்தியத் தேசியக் காங்கிரசும் தோன்றியது.

கேட்டாயா, கேட்டாயா! ஆங்கிலம், ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமாமே. நாட்டுப்பற்று இருந்தால் ஒரு அன்னிய மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இந்தப் பேராசிரியர் பேசுவாரா? ஒரு தேச பக்தனுக்கு, காங்கிரஸ்காரருக்கு இப்படிப்பட்ட கெடுமதி இருக்குமா! ஆங்கிலம் படித்து அதனால் பிழைப்பு நடத்தும் பேர்வழி இவர்; இத்தகையவர் பேச்சை மதிக்கப்போமா, கேட்கப் போமா, பேசலாமா என்றெல்லாம் வெகுண்டெழுந்து கூறுவர் - உண்மைக் காங்கிரசார் அல்ல - ஒட்டிக்கொள்பவைகள்.

போகட்டும், நமக்கேன் தகராறு - ஒரு காங்கிரசாரின் கருத்து, அதிலும் ஆங்கிலம் பற்றியுள்ள கருத்தினைத்தான் கூறுவோமே.

ஆங்கிலத்தின் இடத்தை இந்தி வகிக்க வேண்டுமாம்! இதிலே எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆங்கிலம் இந்த நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஒரு காங்கிரசுக்காரர், மனம் துணிந்து, மரபு மறந்து, ஆங்கிலம் இந்நாட்டுத் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஏ! அண்ணாத்துரை, ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசி எமது இதயத்தில் வேதனை மூட்டுகிறாய், நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழியா, தேசிய மொழி! ஏகாதிபத்திய மொழியா, எமது தேசிய மொழிகளிலே ஒன்று! இப்படியும் கூற ஒரு காங்கிரசுக்காரரின் நாக்கு வளைகிறதா! ஐயகோ! என்ன நாக்கய்யா அது! என் செவியில், ஜனகணமனவும் வந்தேமாதரமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்ற முழக்கமும் விழுந்து விழுந்து, புனிதத் தேனைச் சொரிந்தது - அந்தச் செவியிலா இந்தச் செந்தேள் நுழைய வேண்டும்! என்னே கொடுமை! என்ன அநீதி! ஆங்கிலம் நமது தேசிய மொழிகளிலே ஒன்றாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர், காங்கிரசில் உறுப்பினராக இருக்கலாம் - புதிதாகப் புகுந்தவராக - பதவிப் பசை தேடி வந்தவராக - இருக்கலாம் - ஆனால் நிச்சயமாக அவர் உண்மையான காங்கிரசுக்காரராக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வீரராக இருக்கவே முடியாது. அது யாரோ ஒரு போலி! ஒரு இடந்தேடி! ஒட்டுச்சரக்கு! - என்றெல்லாம் ஆத்திரம் பொங்கிவழிய, காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும் அவருடைய ஐயப்பாட்டினையும் போக்கிவிடுவது நல்லதல்லவா, தம்பி! ஆங்கிலம் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று பேசியவர், புதியவருமல்ல, புசிக்க ஏதேனும் கிடைக்கும் என்பதற்காக நேற்றுப்புகுந்தவருமல்ல - உண்மைக் காங்கிரஸ் காரர் - முன்னணியினர் - மூலவர்களிலே ஒருவர் - நாடாளும் நற்பேறுகொண்டவர், பம்பாய் மாநில முதலமைச்சர் சாவன்! ஆம், தம்பி! இப்போது மத்திய சர்க்காரில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள அதே சாவன்தான் - நாகபுரியில் பேசினார் மூன்றாண்டுகளுக்கு முன்பு - 19-8-61 இதழ் பார்த்தால் புரியும். அவருடைய அந்தக் கருத்தினைப் பாராட்டியும் வரவேற்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டது.

ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கருதினால் அது அவலமாக முடியும் என்பதை சாவன் வற்புறுத்தி அறுதியிட்டுக் கூறியுள்ளார். உண்மையில் ஆங்கிலம் ஓர் அனைத்துலக மொழி; அறிவு வள மொழி என்பதாக.

தம்பி! நாம் அதுபோலக்கூட ஆங்கிலத்துக்கு மேம்பாடான இடமளிக்க வேண்டும் என்று வாதாடவில்லை - அதற்காகப் போராடவில்லை; நமது தாய்மொழியாம் தமிழ் மொழியையும் ஆட்சிமொழியாகக் கொள்ளுங்கள். அந்தக் காலம் வருகிற வரையில், வேறோர் பகுதி மக்களின் தாய்மொழியான இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்றாக்கி எம்மை இழிவு படுத்தாதீர், இன்னல் விளைவிக்காதீர் இழிமக்களாக்காதீர் என்று கேட்டே போராட்டம் நடத்துகிறோம்.

சாவன் போன்ற உண்மையான காங்கிரஸ்காரரின் வார்த்தைக்கு மதிப்பு தரப்பட்டதா? இல்லை!

ஒரு காங்கிரஸ் தலைவருக்கே ஆங்கிலத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த அளவுக்கு இருக்கிறதே என்பது பற்றி இந்தி ஆதிக்கக்காரர்கள் துளியாவது அக்கறை காட்டினரா? இல்லை! இல்லை!!

மனத்துக்குள்ளாக - சாவன் ஒரு மராட்டியர் - காங்கிரஸ் காரராக இருந்தபோதிலும், அவருக்கு மராட்டியர் என்ற உணர்ச்சிதான் மேலோங்கி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

இங்கே சிலர்தான் இந்தியை எதிர்க்கிறார்களே தவிர, ஆயிரக்கணக்கான தென்னாட்டவர் இந்தி படித்துக்கொண்டு வடக்கே வந்திருந்து வாழ்கிறார்கள் - அவர்களுக்கு இந்திமீது வெறுப்பு இல்லை - அவர்கள் இந்தியை எதிர்ப்பதில்லை என்று கூறி, இந்த நிலையை இந்திக்கு நிரம்ப ஆதரவு இருப்பதற்கு அடையாளம் - சான்று என்று பேசுவோர் உளர். இந்த வாதம் எத்தனை சொத்தையானது என்பதனை எடுத்துக்காட்டி உடைத்தெறிந்திருக்கிறார் ஒருவர் - அவரும் காங்கிரஸ்காரர் - மராட்டியப் பகுதியினர் சங்கர்ராவ் தேவ் என்பார்.

தெற்கே இருந்து வடக்கே மக்கள் வருகிறார்கள் - இந்தி மொழிமீது உள்ள ஆசை காரணமாகவும் அல்ல, அந்த இந்தி மொழி மூலம் பெறக்கூடிய கலாச்சாரத்திற்காகவும் அல்ல; அவர்கள் வருவது பிழைப்புத் தேடி.