அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு!.....
3

சோற்றுக்காக வருகிறார்கள்! சோற்றுக்காகத்தான் மக்கள் சச்சரவிட்டுக்கொள்கிறார்கள்.

இன்று இந்தியை மக்கள் மதிக்கவேண்டி வருகிறது என்றால், அது மற்ற மொழிகளைவிட மேலானது என்பதற்காக அல்ல, இந்தி படித்தால் பிழைக்க வேலை கிடைக்கும் என்பதால்தான்.

நீங்கள் இந்தியை உங்கள் பிரதேச மொழியாகவும் கொண்டிருக்கிறீர்கள். அதேபோது மத்திய ஆட்சி மொழியாகவுமாக்கிக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு ஒரு ஆதிக்க உயர்வைத் தருகிறது.

ஒன்றை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒருவன் எவ்வளவுதான் இந்தியையோ வேறு மொழியையோ கற்றுக் கொண்டாலும், அது அவனுடைய தாய்மொழியாக இருந்தாலொழிய, ஒவ்வொரு நாளிலும் இருபத்து நான்கு மணி நேரமும் அவன் பயன்படுத்தும் மொழியாக இருந்தாலொழிய, அவன் துரைத்தன அலுவலகங்களில் மேலிடம், உயரிடம் பெறமுடியாது; மற்ற வேலைத் துறைகளிலும் கூடத்தான்.

காமராஜர் மிக்க விருப்பத்துடன் கிளப்புகிறாரே சோற்றுப் பிரச்சினை, அது மொழிப் பிரச்சினையோடு எப்படிப் பிணைந்திருக்கிறது என்பதை சங்கர்ராவ் தேவ் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார். அவருடைய பேச்சை மதித்து ஏற்றுக்கொண்டார்களா? அவர்களா! ஆதிக்க நோக்கம் கொண்டவர்கள் அறிவுரை கேட்டு அதன்படி நடந்து கொள்வார்களா!!

இந்தியை ஆட்சிமொழியாக்குகிறார்கள் என்ற காரணம் காட்டி, நாட்டிலே ஒரு பகுதியின்மீது மற்றோர் பகுதிக்குக் கசப்பு ஏற்படும்படி செய்கிறார்கள் என்று ஒருமைப்பாட்டு உரை நிகழ்த்துவோர் குற்றம் சுமத்துகிறார்கள்.

சரியாகவோ தவறாகவோ, இந்தி புகுத்துவதற்காக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது, இந்தி பேசாத பகுதி மக்களிடையே ஒரு உணர்ச்சியை மூட்டி விட்டிருக்கிறது; அதாவது இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்துறையில், மற்ற வலிவுள்ள மொழிகள் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவே இந்திக்காக இப்படிச் சண்டைபோடுகிறீர்கள் என்ற உணர்ச்சி.

ஐயா! தெற்கே உள்ள இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமான மொழியை (இந்தியை) நீங்கள் தேசிய மொழி என்ற அளவுக்கு அந்தஸ்து தருவதுதான், இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத மக்களுக்கும் இடையே கசப்பை மூட்டி விட்டிருக்கிறது.

இவ்வளவு வெளிப்படையாகப் பேசியவரும், காங்கிரஸ் கட்சியினர்தான். கொலுவிருக்கக் காங்கிரஸ் கிளம்பியபொழுது இடம் தேடிக்கொண்டவர் அல்ல - சுயராஜ்யக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, சண்ட மாருதம்போல் சுற்றிப் பிரசாரம் செய்து சிறைக் கோட்டமும் சென்றவர் - ஆந்திரநாட்டு மாதர் திலகம் - துர்க்காபாய் அம்மையார்.

குறுகிய மனப்பான்மை கொண்டவருமல்ல - மராட்டியத்துத் தேஷ்முக்கைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்.

அந்த அம்மையாரின் எச்சரிக்கையையாவது, இந்தி ஆதிக்கக்காரர்கள் பொருட்படுத்தினரா? இல்லை!

கடந்த மூன்று வாரத்து நடவடிக்கைகளாலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த என் நண்பர்கள் மேற்கொள்ளும் போக்கினாலும் என் உள்ளத்தில் மூண்டு வளர்ந்துள்ள பயத்தை, உள்ளது உள்ளபடி நான் எடுத்துக் கூறாவிட்டால், என் மனச்சாட்சிக்கும், ஆண்டவனுக்கும், என் மாபெருந் தலைவர் மகாத்மா காந்திக்கும் உண்மையாக நடந்து கொண்டவனாக மாட்டேன்.

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்புவரை, அதிகார வர்க்கம் பிரிட்டிஷாரிடம் இருந்து, லண்டன் நகரத்தில், பெரிய உத்தியோகங்களுக்கான பரிட்சைகள் நடத்தப்பட்டு வந்த நிலையின்போது, எங்களுக்குச் சந்தேகமும் பயமும் மனத்திலே குடிகொண்டன. வெள்ளையனே உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் வகித்து வந்தான் இப்போது உயர் பதவிகளுக்கான பரிட்சை டில்லியில் நடத்தப்படுவதால், இந்தி பேசும் பகுதிகளான உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய இடத்தவர் உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் பெறப்போகிறார்கள்.

ஏன் உத்தரப்பிரதேசத்து மத்தியப்பிரதேசத்துக் காரர்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள்?

நாங்களும் மனிதர்களே! உயர்தரமான தேசிய இலட்சியங்கள் எப்படி எங்கள் எண்ணங்களை உருவாக்கு கின்றனவோ அதுபோலவேதான் பிழைப்பு நடத்துவதும் வேலை பெறுவதும் எங்கள் உள்ளத்தைப் பாதிக்கின்றன. (இந்தியை ஆட்சிமொழியாக்கி விடுவதானால்) ஒரிசா, அசாம், வங்காளம், தென் மாநிலங்கள் ஆகிய இடங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் கூடுதலான சலுகைகள், வாய்ப்பு வசதிகள் ஏற்பட்டுவிடுவதைத் தடுக்க என்ன திட்டம் தீட்டப் போகிறீர்கள் - சொல்லுங்கள்.

இவ்விதம் "அச்சம் தயைதாட்சணியமின்றிக்' கேட்டவர் ஒரிசாவைச் சார்ந்த தாஸ் என்பவர் - புகழ்மிக்க காங்கிரஸ் தலைவர். அவருடைய பேச்சுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா? இந்தி ஆதிக்கக்காரர்கள் தமது போக்கை மாற்றிக்கொள்ள ஒருப்பட்டனரா? இல்லை! இல்லை! அவருடைய வார்த்தையையும் துச்சமென்று தள்ளிவிட்டு, இந்திதான் ஆட்சிமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதிவிட்டனர்.

தாஸ், சங்கர்ராவ், துர்க்காபாய் போலக் காரசாரமாக, ஒளிவு மறைவின்றிப் பேசினால், இந்தி ஆதிக்கக்காரர் கோபம் கொண்டு தமது போக்கை மாற்றிக்கொள்ள மறுப்பார்கள் - இதமாக - விநயமாக - கனிவாக - நேசப்பான்மையுடன் - அடக்க ஒடுக்கமாக - நல்ல வாதத் திறமையுடன் பேசினால், அவர்களின் போக்கு மாறிடக்கூடும் என்ற எண்ணம்போலும், இன்று பாராளுமன்றத் துணைத்தலைவராக உள்ள S.V. கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களுக்கு; அவர் மிகக் கனிவாகப் பேசினார்.

ஐயா! நான் இந்தியைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டேன். என் சொந்த மொழியான கன்னடத்தில், சில இந்திப் புத்தகங்களைக்கூட மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்தி மொழி மிகக் கடினமானதாக இருக்கிறது. அதனால்தான் இந்தச் சபையில் இந்தியில் பேசும் துணிவு வரவில்லை.

இந்தி பேசும் மக்களுடைய மொழியை, அதன் இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்புடன் எங்களால் பிடித்துக்கொள்ள முடியவில்லை. காலம் பிடிக்கிறது. நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன். இங்குள்ள கோவிந்ததாஸ் அவர்களோ, தாண்டன் அவர்களோ, தமிழர்கள் மத்தியில் போய் இருந்துகொண்டு தமிழ் பேசக் கற்றுக்கொள்ளட்டும். அதற்கு அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அவ்வளவு காலம் தேவை, தென்னகத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு.

இவ்வளவு சாந்தத்துடன், சமரசநோக்குடன் பேசினாரே கன்னடக் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராவ், இதையாவது, பாவம்! நம்முடைய கட்சிக்காரர்! இந்தி கற்றுக் கொள்வதிலே உள்ள கஷ்டத்தை அனுபவித்துக் கூறுகிறார். அவர் கூறிடும் வாதம் நியாயமாகத்தான் இருக்கிறது; நாம் இந்தியைத் தென்னகத்துக்கும் சேர்த்து ஆட்சிமொழி என்றாக்குவது அநீதியாகத்தான் இருக்கும் என்ற உணர்வும் தெளிவும் பெற்றனரா, இந்தி ஆதிக்கக்காரர்கள். அவர்களா! அவர்கள்தான், யார் எதிர்த்தாலும், எதிர்ப்புகளை முறியடித்துவிட்டு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டியாக வேண்டும் என்று துணிந்துவிட்டவர்களாயிற்றே! கேட்பார்களா கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களின் பேச்சை! கேட்கவில்லை!

தம்பி! இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து அறிவுரை, தெளிவுரை, கனிவுரை, எச்சரிக்கை தந்தவர்களின் பட்டியல் மிகமிகப் பெரிது; சிலவற்றை மட்டுமே எடுத்தளித்திருக்கிறேன்.

இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் முனைந்தபோதே அறிவாளர் பலர் இதுபோலக் கண்டித்தனர், முயற்சியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர், முடியவில்லை.

அதற்குப் பிறகும் தொடர்ந்து பேரறிவாளர் பலர், இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதைக் கண்டித்த வண்ணம் உள்ளனர்.

நானறிந்த வரையில், எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு இத்தனை பரவலான முறையிலும் தொடர்ந்தும் கண்டனமும் எதிர்ப்பும் இருந்து அத்தனையும், வேண்டுகோள், முறையீடு, வாதம், விளக்கம், கண்டனம் எனும் எந்த வடிவினதாயினும் அலட்சியப்படுத்திவிட்டு, ஒரு சர்க்கார் தன் போக்கிலே பிடிவாதமாக இதுபோல இருந்ததில்லை.

இந்தி ஆதிக்க விஷயத்திலே காங்கிரஸ் துரைத்தனம் காட்டிவரும் பிடிவாதம் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி வைத்திருக்கிறது.

உங்களைப் பேச அனுமதித்திருக்கிறார்களே என்பதும், வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே என்று கூறுவதும், சுட்டுத் தள்ளாமல் இருக்கிறார்களே என்று கூறுவதும், ஆட்சி நடத்தும் வாய்ப்பினைப் பெற்றதனால் ஏற்பட்டுள்ள ஆணவமன்றி, அறிவுடைமை என்று எவரும் கூற முற்படமாட்டார்கள். நெரித்த புருவம், உருட்டு விழி, மிரட்டும் பேச்சு, நெடுநாட்களுக்கு நிலைத்து இருப்பதில்லை.

தம்பி! பலருக்கும் புரியும்படி இதனை எடுத்துக் கூறிடக் கேட்டுக்கொள்கிறேன். இந்தி ஆதிக்கப் பிரச்சினையிலிருந்து, இன்று நமக்கு அமைந்துள்ள அரசு, அறிவாளர்களை எவ்வளவு அலட்சியப்படுத்தி வருகிறது. மக்களின் முறையீட்டினைக் கேட்டும் எத்துணை மமதையுடன் நடந்துகொள்கிறது என்பது புரிகிறதல்லவா! இவ்விதமான ஓர் ஆட்சி முறையையும், அது கடைப்பிடிக்கும் மொழி ஆதிக்கத் திட்டத்தையும் துணிவுடன் எதிர்த்து நிற்பதிலே நாம் பெருமை கொள்கிறோம். பலர் அடக்கப்பட்டுப் போய்விட்டனர். சிலர் அடைக்கலப் பொருளாகிவிட்டனர். வேறு சிலர் "அமங்கல' நிலை பெற்று விட்டனர். நமது கழகமோ, எத்துணைக் கொடுமைகள் தாக்கிடினும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பது என்ற உறுதி தளராமல், தொடர்ந்து அறப்போர் நடாத்தி வருகிறது.

மக்கள் விரைவில் தமது மனத்திலுள்ளதை வெளிப் படையாக எடுத்துக் கூறிடும் இயல்பினைப் பெறுவதில்லை. எத்தனையோ விதமான அச்சுறுத்தல் அவர்களுக்கு. துரைத்தனத்தைப் பகைத்துக்கொண்டால், தொழில் கெடும். வேலை போய்விடும், குடும்பம் சிதறுண்டு போய்விடும், கொடுமைக்கு ஆளாகவேண்டிவரும் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலை.

இந்தியோ சிந்தியோ, விருப்பமோ கட்டாயமோ, மெள்ள மெள்ளவோ வேகவேகமாகவோ, எப்படியோ வரட்டும், எதுவோ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கட்டும், நாம் மாடு மனைபெற்று, மனைவி மக்களுடன் நிம்மதியாக வாழ்ந்திட வழி தேடிக்கொள்வோம் என்று பலர் எண்ணுகின்றனர். காரணம், அவர்கள் காண்கின்றனர், கொடி தூக்கியும் கோல் சுழற்றியும், காங்கிரசாட்சியின் கடைக்கண் பார்வையின் பயனாக, இலட்சாதிபதியாவதை! அவன் ஏறும் மோட்டாரின் மெருகு குலையாதிருப்பதையும், இவன் "ஜாண்' வயிற்றுக்காக உடல் கருத்திட இளைத்திட உழைத்து கிருமிக் கூடாவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆளவந்தாரின் அடிவருடினால் என்னென்ன ஆதாயம் கிடைக்கிறது என்பது புரிகிறது; புரியவே, நாம் ஏன் பொல்லாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிடவும், இணங்கிடவும், வணங்கிடவுமான நிலையினைப் பெறுகின்றனர்.

ஒருபுறம் அச்சம் - மற்றோர்புறம் ஆளவந்தாரின் நேசத்தால் கிடைக்கக்கூடிய சுவைபற்றிய எண்ணம் கிளப்பிவிடும் ஆசை - இந்த இரண்டிலிருந்தும் தப்பி, தட்டிக் கேட்க யார் உளர் என்று தர்பார் மொழி பேசிடும் ஆட்சியினரை (இந்தி எதிர்ப்பு அறப்போர்) எதிர்த்து நிற்கும் துணிவும், கடமை உணர்வும் இந்த அளவுக்கு இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மட்டுமல்ல, மக்களாட்சி முறை மடிந்துபோகாது, மாண்புள்ளதாக்கிட முடியும். அந்த முறையை என்ற நல்ல நம்பிக்கையேகூட ஏற்படுகிறது. ஒவ்வோர் விழாவும் இந்த அரிய பாடத்தைத்தான் எனக்கு அளித்து வருகிறது; உனக்கும் அதேவிதமான நிலை என்று எண்ணுகிறேன்.

தமிழுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அம்மொழி ஒருபோதும் அழியாது, அது இலக்கியத்தின் மூலம் இறவா வரம் பெற்று விட்டது என்று பேசுவதும், பேச்சினைக் கேட்பதும் இனிப்பளிக்கலாம். கவிதைகளை எடுத்துக்காட்டி, உவமை நயமதை உரைத்து, கருப்பஞ்சாற்றினிலும் இனித்திடும் இன்மொழியாம் எமது தமிழ் மொழிக்கு, எவரே இழுக்குத் தேடவல்லார்! தென்றலின் இனிமை, திங்களின் குளிர்ச்சி தேனின் சுவை, கடலின் அலையோசை, அருவியின் மழலை, குழவியின் இசை, இயற்கை எழில் - எவரேனும் இந்த இயல்பினைக் கெடுத்திட இயலுமோ!! அஃதேபோல, தமிழின் மாண்பினை மடிந்திடச் செய்திடல் எவராலும் இயலாது என்று பேசலாம் - வீரம் குழைத்து. ஆனால், தம்பி! இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றாகிவிட்டால், இன்பத் தமிழ் பொலிவிழந்து போற்றுவாரிழந்து, வலிவிழந்து வளம் இழந்து, என்றோ தீட்டிய ஓவியமாய், எப்போதோ கேட்ட கீதமாய், கனவினில் கண்ட கனியாய்ப் போய்விடும் - வீணுரை அல்ல இது - வேண்டுமென்றே பயமூட்டக் கூறுவதுமல்ல; அரசுக் கட்டிலிலே இந்தி என்று ஆகிவிட்டால், முரசு முழங்கிய தமிழகத்தின் அள்ள அள்ளக் குறையாத சொத்தாக இருந்துவரும் செந்தமிழ், கண்ணகிபோல் கண்ணீர் உகுத்து, கடந்த காலத்தை எண்ணி ஏக்கமுற்று, கசிந்து உருகிப்போய்விடும்.

ஒன்று புரிந்துகொள்ளச் சொல்லு தம்பி! முதற் கட்டம், இந்தி மத்திய சர்க்காரின் ஆட்சி மொழியாவது; அடுத்த கட்டம்? விளக்கவா வேண்டும்! மத்தியில் ஒன்று, மாநிலத்தில் வேறொன்று என்று இருப்பதனால் ஏற்படும் இன்னல் குறித்துச் சிலபல கூறிவிட்டு, மத்திய சர்க்காருக்கு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட இந்தியே மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இருப்பதுதான் வசதி, முறை என்று வாதிட்டு, அதுபோன்றே செய்தும் விடுவர்.

நமது அமைச்சர்கள் வாளாயிருப்பரோ? என்று கேட்பர், காங்கிரசை நம்பி உள்ளோர்! வேறு என் செய்வர்? வளைவர், நெளிவர், பணிவர், பிறகு ஆதரவாளராகிவிடுவர். பார்க்கிறோமே ஒவ்வொன்றிலும், வேளாண் பெருங்குடி மகன், வேறெவரும் பெறாத அளவு பதவி அனுபவம் பெற்ற பெரியவர் பக்தவத்சலனார். இந்தியில் பரிட்சை எழுதத் தேவையில்லை என்றார் ஓர் நாள்; காரணம் காட்டினார், மறுக்கொணாததாக; பிறகோ லால்பகதூர் அப்படியா? என்றார், இவர் ஆமென்றார், அவர் ஏன் என்று கேட்டார், இவர் காரணம் கூறினார், அவர் கனைத்தார் இவர் கலங்கினார், பரீட்சை இல்லாவிட்டால் படித்திட மனம் வராதே என்றார், அது உண்மைதான் என்றார் இவர், ஆகவே, என்று ஆரம்பித்தார் லால்பகதூர், இதோ பரிட்சை வைக்கிறேன் என்று முடித்தாரே முதலமைச்சர்.

இவர் போன்றார், இந்திதான் இங்கும் ஆட்சி மொழியாதல் முறை என்று டில்லியினர் கூறினால், தாயின் மேல் ஆணை! தாய்த் தமிழைத் தாழவிடேன்! என்றா முழக்கமெழுப்புவர், டில்லியாரின் தாக்கீதினைத் தலைமீது வைத்துக்கொண்டு, இதுவே தகுந்த முறை என்று ஒப்பம் கூறுவர்; கண் கசிந்திடும் தமிழரைப் பார்த்தோ, "ஏன் அழுகிறீர்கள்? ஆட்சி மொழியாக இந்தி இருந்தால் என்ன? தமிழ் தாழ்வடையுமோ? அகம் என்ன, புறம் என்ன, எட்டுத்தொகை என்ன, பத்துப்பாட்டென்ன, இவைகளைப் படித்திடலாகாது என்று தடுத்திட இயலுமோ! இன்பத் தமிழ், கேவலம் அரசாங்க அலுவலிலே இருக்காதே தவிர, வீட்டிலிருக்கும், அங்காடியில் இருக்கும், மன்றத்திலிருக்கும், மாதரின் நெஞ்சமிருக்கும், மழலையரின் மொழியில் இருக்கும், என் உள்ளத்திருக்கும் உன்னிடமும் இருக்கும், ஆகவே தமிழ் மகனே! கவலைகொள்ளற்க!'' என்று கூறிடுவர், தமிழின் இனிமையினை அறிந்தவனே யானும் என்று கூறி, அதனை மெய்ப்பிக்க,

திருவே என்செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் ஜோதிமிக்க
உருவே என்உறவே என் ஊனே
ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளேநின்ற
கருவே என் கற்பகமே கண்ணே
கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய், காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் துறையுறையும் அமர ரேறே

என்று பாடிடக்கூடும். பக்கம் நின்று சிலர், என்னே தமிழ்ப்பற்று! என்னே தமிழினிமை! என்று பேசி மகிழ்விக்கக்கூடும்.

இப்போதேகூடச் சிலர் இதுபோல், தமிழின் இனிமை, பெருமை, தொன்மை, மென்மை, வளம் வனப்புப்பற்றி கேட்போர் நெஞ்சு நெக்குருகப் பேசி, இந்தி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஆபத்து ஏற்படாது என்று வாதாடுகின்றனர்.

மாசறு பொன்னே!
வலம்புரி முத்தே!
காசறு விரையே!

என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசிய கோவலன்தான் பின்னர், கண்களில் கொப்பளிக்கும் நீரும், காலிற் சிலம்பும் கொண்ட நிலையினளாக்கினான் கண்ணகியை. . . மையல் வேறோர் மாதிடம் கொண்டதால்.

எனவே, தம்பி! இவர் போன்றாரின், புகழுரையால் மட்டும் தமிழுக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் வர இருக்கும் ஆபத்தினைத் தடுத்திட முடியாது - நாம் மேற்கொள்ளும் அறப்போரின் பலனாக எழும் தியாக உணர்வே தீந்தமிழைக் காத்திடவல்லது. அத்தகைய தொண்டாற்றும் தூயமணியே! உனைக் காண்பதிலும், உன்னுடன் அளவளாவுவதிலும் நான் பெறும் மகிழ்ச்சி, என்னை அந்தத் தொண்டினைத் தொடர்ந்து நடாத்திடத் துணை செய்கிறது. வாழ்க நின் ஆர்வம்! வளர்க உன் தியாக எண்ணம்! வெல்க தமிழ்!

அண்ணன்,

26-7-1964