அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பொற்காலம் காண!. . .
2

இயற்கைப் பொருள் ஒவ்வொன்று பற்றியும் மிகுந்த நுண்ணறிவுத் திறனுடன் புலவர்கள் கூறியுள்ளனர்; மலை, மரம், மடுவு, அலை, அடவி, கலகம், புலம், அருவி, வாவி, குளம் எனும் எவை பற்றியும் அந்நாளில் தாம் கண்டனவற்றைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். இயற்கையின் எழில், அந்த எழிலைக் காட்டும் பலவடிவங்கள், வகைகள் இவை மட்டும் காணக் கிடைக்கும் பட்டியலல்ல அந்தப் பாக்கள். விளக்கின் ஒளிகொண்டு வேறு பொருளைக் காட்டிடும் பான்மைபோல, இயற்கைப் பொருள்களைக்கொண்டு, இன்னுரை, நல்லுரை, வாழ்வு முறை என்பனவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இவை யாவும், தம்பி! அன்றோர் நாள்!! இன்று அந்த "அந்தநாள் சிறப்பினை' மீண்டும் கண்டிட ஓர் சீரிய முயற்சியினில் ஈடுபட்டுள்ளனர் இந்நாளில். விழிப்புற்ற, கற்ற தமிழ் மறவாத மரபழிக்கும் மாபாதகம் வெறுத்திடும் தமிழ்ப் புலவோர். இடையிலேயோ! உயர உயரச் சென்றுவிட்டோம்! கொண்டு சென்றுவிட்டனர் தமிழர்களை! முல்லை பறித்திடச் சென்ற மங்கையை, வேழம் விரட்ட விருது பெற்ற வீரன் கண்டனன் என்ற கதை கூறினரன்றோ அந்த நாள் புலவோர்! ஓ! ஓ! இது மட்டுந்தானோ கூற இயலும் இவர்களால், நாம் கூறுகின்றோம் கேளீர் "மேல் உலக'க்காதை என்று அழைத்தனர் இடையில் வந்தோர்; பாரிஜாதம் காட்டினர், பாற்கடல் காட்டினர், பாசுபதம் காட்டினர், பற்பல விந்தைகளைக் காட்டினர், தமது காதைகளில்! உள்ளதை மறந்தனர் தமிழர்! உருவாக்கப் பட்டனவற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். அதன் காரணமாகவே, பல்வேறு விழாக்கள் - பண்டிகைகள் - தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்டன. பொங்கற் புதுநாள் அதுபோன்றதல்ல, இது நமது விழா; நம்மை நாம் உணர உதவும் விழா; இடையிலே படர்ந்தனவற்றை நீக்கி, தமிழரின் உள்ளத்தை மாசறு பொன்னாக்கி, ஒளிவிடு முத்து ஆக்கிடத்தக்க நன்னாள். பொங்கிற்று! பொங்கிற்று! பொங்கலோ பொங்கல்! என ஒஎழுப் பிவிடுவதனால் மட்டும் அல்ல! நான் முன்னம் கூறியுள்ளபடி, பொருள் உணர்ந்து பாடம் பெறுவதனால்!!

பெறவேண்டுவனவற்றைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவதிலே ஏற்படக்கூடியது ஆர்வம்; இருந்ததை, இடையில் இழந்ததை மீண்டும் பெற்றிட எடுத்துக்கொள்ளப்படும் முயற்சி இணையற்ற எழுச்சியை ஊட்டிவிடுமன்றோ? அந்த எழுச்சி பெற்ற நிலையில், பொங்கற் புதுநாளை, புதுமையினைச் சமைத்திடும் பேரார்வம் பொங்கிடும் நாளாகக் கொண்டுள்ளனர். எனவேதான் தம்பி! நாட்டு வளம்பற்றி, மக்கள் நிலை குறித்து, அரசு முறைபற்றி, அறநெறி குறித்து, தாழாத் தமிழகம் என்ன கருத்துக் கொண்டிருந்தது என்பதனைக் கண்டறியும் ஆர்வம் மிகுந்துளது. இந்த ஆர்வத்தை மேலும் பெற்றிடச் செய்திட வேண்டும், பொங்கற் புதுநாள். இயற்கைச் செல்வம் இத்துணை பெற்றிருந்த இன்பத் தமிழகத்தில் இன்னல் கப்பிக்கொண்டிருக்கக் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டாமோ? கண்டறிய, உலகின் பல்வேறு இடங்களிலே இயற்கையாள் அளித்துள்ளன யாவை? ஆங்கு உள்ளோர் அவற்றினை எம்முறையில் பயன்படுத்தி ஏற்றம் கண்டுள்ளனர்? அம்முறையில், நாம் பெறத்தக்க அளவு யாது? பெற்றிடும் வழி என்ன? என்பனவற்றை அறிந்திடவேண்டுமன்றோ? வேண்டுமாயின், உலக நாடுகளின் வரலாற்றினை ஓரளவாகிலும் நாம் அறிந்திடவேண்டுமே? அறிகின்றோமா? மாலை நேரத்தில் மாபெரும் நகரங்களில் கூடி மக்கள் கூட்டம் இதுபோது பல்வேறு நாடுகளின் வரலாறு பற்றிய விரிவுரையையா கேட்டுப் பயன் பெற்று வருகிறது! இல்லையே! போகப்போகும் இடம்பற்றிய கதைகளை அல்லவா, இருக்கும் இடத்திலே இடரும் இழிவும் நீக்கிடும் முயற்சியை மேற்கொள்ளாத மக்கள் கேட்டு இன்புறுகின்றனர். இந்நிலையில் நாட்டவர் இருந்திடின், உலகின் நிலையினை உணர வழி ஏது, உணர்ந்து நம் நாட்டை நமக்கேற்ற நிலையினதாக்கிடும் முயற்சியில் ஈடுபடுவது ஏது?

இங்கு வயலின் அளவு மிகுதி, விளைச்சலின் அளவு குறைவு என்கிறார்கள்.

பொருள்கள் இங்கு மிகுதியும் பெற்றிடலாம். ஆனால் பெற்றோமில்லை என்கிறார்கள்.

பெருகிடும் பொருளைக்கூட. சீராகப் பகிர்ந்தளித்தால் சமூக நலன் மிகும்; செய்யக் காணோம் என்கின்றார்கள்.

முப்புரம் கடலிருக்கிறது. ஆனால், கப்பல் வாணிபம் தேவைப்படும் அளவு இல்லை; மிகமிகக் குறைவு என்கின்றனர்.

இரும்பு கிடக்கிறது புதைந்து; ஆனால், எஃகு ஆலைதான் அமைக்கப்படவில்லை என்கின்றார்கள்.

கத்தும் கடல்சூழ்ந்த இடம் இது; எனினும், மீன்பிடி தொழிலும் வளரக் காணோம் என்கின்றார்கள்,

பொது அறிவு வளம் மிக்கவர் இவர் என்கிறார்கள், எனினும், புத்தறிவு பெற்றிடவில்லை என்று கூறுகிறார்கள்.

விழி உண்டு பார்வை இல்லை; வாயுண்டு பேசும் திறனில்லை; வளமுண்டு, வாழ்வு இல்லை; இதுபோல, நம் நாடு பற்றிப் பேசிடக் கேட்கின்றோம்.

ஏன் இந்த நிலை? எதனால் இம் முரண்பாடு? எவர் செய்த செயலால் இந்தச் சீரழிவு? என்பதனைக் கண்டறிய வேண்டாமோ? வளரவேண்டிய முறையிலும் அளவிலும் பயிர் வளரவில்லை என்றதும் உழவன், தம்பி! என்னென்ன எண்ணுகிறான்? என்னென்ன கேட்கின்றனர் அவனை, பூமிநாதர்கள்!!

நாடு முழுவதிலும் இன்று உள்ளதோர் நலிவுநிலை குறித்து, காரணம் கண்டறிய, கேடு களைந்திட, நலம் விளைவித்திட நன்முயற்சியில் ஈடுபடவேண்டாமோ? இல்லையே, அந்த நன்முயற்சியும், ஒருவரிருவர், சிறு குழுவினர் மேற்கொண்டால் பலன் மிகுந்திராது, கிடைப்பதும் அவர்க்கு மட்டுமன்றோ போய்ச் சேரும்? நாடு வளம் பெற, பெற்றவளம் அனைவருக்கும் பயன்பட, பயன்படும் முறையை எவரும் பாழாக்காதிருந்திட, தனித் தனியாக முயற்சி செய்யப்படுவது, வளர்ந்துவிட்டுள்ள சமுதாயத்திலே முடியாததாகும். இதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டுவது, அரசு.

அரசு, தம்பி! அமைந்துவிடுவது அல்ல, நாம் அமைப்பது. அரசு நடாத்துவோரும், இதற்கென்று எங்கிருந்தோ எல்லாவிதமான ஆற்றலையும் பெற்றுக்கொண்டு இங்கு வந்தவர்கள் அல்லர்; நம்மில் சிலர், நமக்காக, நம்மாலே நமை ஆள அமர்த்தப்பட்டவர். பொருள் என்ன? விதைக்கேற்ற விளைவு! அரசு அமைத்திடும் திறம் நமக்கு எவ்விதம் உளதோ அதற்கு ஏற்பவே அரசு! எனவே, நாட்டு வளம் காண அரசு முயற்சியில் ஈடுபடல் வேண்டும் என்று கூறிவிட்டு, நாம் கைகட்டி வாய்பொத்திக் கிடந்திடின் பயன் இல்லை; நல்லரசு அமைத்திடும் முயற்சியினைத் திறம்பட மேற்கொண்டு அதிலே நாம் வெற்றி பெற்றிடல் வேண்டும். உழவன் பெற்ற வெற்றிகளன்றோ உன்னைச் சுற்றி இன்று! செந்நெலும், காயும் கனிவகையும், உண்பனவும் உடுப்பனவும், பூசுவனவும், பூண்பனவும்!! அவன் பெற்ற வெற்றிக்காக எத்துணை உழைப்பினை நல்கினான், நாடு முழுவதும் வளம்பெற, ஓர் நல்லரசு அமைத்திட வேண்டுமே, அந்தப் பணிக்காக நாம் எத்தனை அளவு உழைத்துள்ளோம்? அதுகுறித்து நம் மக்கள் எந்த அளவு தமது சிந்தனையைச் செலவிடுகின்றனர்? சிந்தனையில் எந்த அளவு தெளிவு பெற்றுள்ளனர்? தெளிவு பெற்றிடத்தக்க நிலையில், எத்தனை பேர்களுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது? எண்ணிப் பார்த்திடும்போது தம்பி! ஏக்கம் மேலிடும். ஆனால், ஏக்கம் மேலிட்டு ஏதும் செய்ய இயலா நிலையினராகிவிடின் நாடு காடாகும்; மக்கள் பேசிடும் மாக்களாவர். எனவே, அந்த ஏக்கம், நம்மைச் செயல்புரிய வைத்திடும் வலிவாக மாறிட வேண்டும்; மாற்றிட வேண்டும். உலகிலே பல்வேறு நாடுகளில், இடர்ப்பட்ட மக்கள், இழிவு நிலையினில் தள்ளப்பட்ட மக்கள், துக்கத்தால் துளைக்கப்பட்டு, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, இதயம் வெந்து, இடுப்பொடிந்து ஏதும் செய்ய இயலாத நிலையினராகி விட்டவர்போக, சிலர் - மிகச்சிலர் - துணிந்து எழுந்தனர், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர். பெருமூச்சிலிருந்து புன்னகை பிறந்தது! சிறைக் கோட்டங்களிலிருந்து மக்களாட்சி மன்றங்கள் அமைந்தன. வெட்டுண்ட தலைகளிலிருந்து கொட்டிய இரத்தத் துளிகள், கொடுமையை வெட்டி வீழ்த்தும் கூர்வாளாயின!

இதுபோல் ஆகும் என்பதனை அன்றே உணர்ந்து உரைத்தார் பொய்யா மொழியார்.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

என்பதாக. கொடுமைக்கு ஆளான மக்கள் கொட்டிய கண்ணீர், ஆதிக்கக் கோட்டைகளைத் தூளாக்கிடும் வெடிகுண்டுகளாயின. வரலாறு காட்டுகிறது, வல்லூறை விரட்டிய சிட்டுக்குருவிகளின் காதையை! நமது மக்களுக்கு இதனை எடுத்துக் கூறுவார் யாருளர்! கூறாதது மட்டுமோ! கருங்குருவி மோட்சம் பெற்ற காதையும், கரிவலம் வந்த சேதியுமன்றோ அவர்கட்கு இசை நயத்துடன் கூறப்பட்டு வருகிறது.

தம்பி! ஊர்ந்து செல்லும் ஆமையைக்கூட, பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால், போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச் சேரும். இங்கு நாம் ஆமைகள் பூட்டிய அலங்கார வண்டியில் பாய்ந்தோடவல்ல குதிரையை ஏற்றி வைத்து, ஒரு விந்தைப் பயணம் நடத்திப் பார்க்கிறோம். கனி பறித்துச் சாறு எடுத்துப் பருகிடுவார் உண்டு; முறை; தேவை. இங்கு நாமோ, கனி எடுத்துச் சாறுபிழிந்து, அந்தச் சாற்றினைக் காய்கள் மேல் பெய்து தின்று பார்க்கின்றோம்.

இந்த நாட்டிலேதான் தம்பி! இந்த இருபதாம் நூற்றாண்டில், இத்தனை திரித்துக் கூறுவதும் இருட்டடிப்பிலே தள்ளுவதும், இட்டுக் கட்டுவதும், இழிமொழி பேசுவதும் தாராளமாக நடத்திச் செல்ல முடிகிறது, ஆதிக்கக்காரர்களால். இங்கு நாம் மனிதத் தன்மைக்காகவும், பகுத்தறிவுக்காகவும் வாதாடினால், நாத்திகப் பட்டத்தைச் சுமத்திவிடுவதும்,

ஒற்றுமைப்பட வேண்டும், பேதம் கூடாது, அதனை மூட்டிடும் ஜாதிகள் கூடாது என்று பேசினால், சமுதாயக் கட்டினை உடைக்கிறோம் என்று பழி சுமத்துவதும்,

பெண்ணை இழிவுபடுத்தாதீர் என்று பேசினால், ஒழுக்கத்தைக் கெடுக்கிறோம் என்று ஓலமிடுவதும்,

ஏழையின் கண்ணீரைத் துடைத்திடுக! என்று கூறினால், வர்க்கபேதமூட்டிப் புரட்சி நடத்தப் பார்க்கிறான் என்று பேசிப் பகை மூட்டியும்,

ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைத்துக்கொள்வது நல்லதல்ல; அதிகாரத்தைப் பரவலாக்கிடுக! என்று கூறினால், அரசு அமைப்பை உடைக்கப் பார்க்கிறான் என்று கொதித்தெழுந்து கூறியும், நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் நல்லாதரவு கிடைத்திடுவதைத் தடுத்திடும் நோக்குடன் செய்து வருகின்றனர்.

தம்பி! தம்பி!! தூய தமிழுக்காகப் பேசிப்பார்! ஓ! இவனுக்கு "மொழி வெறி' என்று கூறிக் கிளம்புவர் கோலோச்சும் குணாளர்கள்.

சங்கத் தமிழ் மணக்கும் தமிழகத்தவர்க்கும் சேர்ந்தா இந்தியெனும் ஆட்சிமொழி என்று கேட்கின்றோம்; தேச பக்தி அற்றவர்கள் என்றன்றோ தூற்றப்படுகின்றோம்?

கண்ணீர் வடித்திடுகின்றனரே பல லட்சம் தமிழர் கடல் கடந்து சென்றுள்ள நாடுகளிலே, கொடுமையாளர்களால் என்று பேசும்போது, இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பகை மூட்டுகிறான்; பாதுகாப்புச் சட்டத்தின்படி இவனைப் பிடித்தடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.

தொழில்கள் மிகுதியாக நாட்டின் ஓர் பகுதியில் குவிந்திடல், பொருளாதார ஏற்றத்தாழ்வை உண்டாக்கிடும்; எனவே, புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தென்னகத்தில் புதுப் புதுத் தொழிலைத் துலங்கிடுக! என்று கூறிடுவோரை "பாரதப் பண்பு' அற்ற மாபாவிகள் என்று ஏசுகின்றனர்.

தொழிலில், பெருத்த வருவாய் தரத்தக்கனவற்றை எல்லாம் முதலாளிகளிடம் விட்டுவிடுகின்றீர்களே, இதுவோ சமதர்மம் என்று கேட்டிடின், இவன் தொழில் வளர்ச்சியைக் கெடுக்க முயலுகிறான் என்று கூறுகின்றனர்.

சர்க்கார் துவக்கி நடத்தும் தொழில்களில், தக்க வருவாய் பெறவில்லையே! இது முறையல்லவே! என்று பேசிடின், இவன் சர்க்கார் துறையை வெறுப்பவன், சுதந்திரக் கட்சியினனாகிறான் என்று கலகப் பேச்சை மூட்டிவிடுகின்றனர்.

கண்மண் தெரியாமல் கடன் வாங்கிக்கொண்டு போகிறீர்களே, இது பெருஞ்சுமையாகிவிடுமே, எதிர்காலச் சந்ததி இடர்ப்படுமே! என்று கூறிடின், நாடு வளம் பெற வழி தேடினால் இவன் குறுக்கே நிற்கிறான் என்று குறைகூறுகின்றனர்.

விலைகள் ஏறியபடி உள்ளனவே என்றால், இதைக் கூறி, அரசியல் இலாபம் தேடப் பார்க்கிறான் என்கிறார்கள்.

ஊழல் மலிந்திருக்கிறதே, ஊடுருவிக் கிடக்கிறதே என்றால், எத்தனையோ நாடுகளில் இதுபோல என்று சமாதானம் கூறுகின்றனர்.

தம்பி! எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கின்றனர்; திரித்துக்கூற முற்பட்டுவிடுகின்றனர். ஏடுகளிலே மிகப்பல இதற்குத் துணை செய்கின்றன. இந்நிலையில், இவ்வளவு பேர்களாகிலும், துணிந்து பேசுகின்றனரே என்பது உள்ளபடி பாராட்டி வரவேற்கப்படவேண்டியதே.

நாடே போர்க்கோலம் பூண்டுவிடும் நேரத்தில், நானும் அதில் கலந்திருந்தேன் என்று கூறிக்கொள்வதிலே கிடைத்திடும் பெருமை அதிகமில்லை; இன்று நம்முடன் நாட்டவரில் பலர் இல்லை, நல்லறிவு கொளுத்தி நல்லாட்சி காணப் பாடுபடும் கடமையுடன் பணியாற்றவேண்டிய இதழ்களில் பல இல்லை என்ற நிலையில், எவர் வரினும் வாராதுபோயினும், இன்னலுடன் இழிவு சேர்ந்து வந்து தாக்கினும், இவன் நமக்காகப் பாடு படுகிறான் என்பதனைக் கூறிடவும் பலருக்கு நினைப்பு எழாது போயினும், எத்தனை சிறிய அளவினதாக இப்படை இருப்பினும், இதிலே நான் இருந்து பணி புரிவேன்; என் இதயம் இடும் கட்டளையின்படி நடந்திடுவேன்; என் நாட்டைக் கெடுக்க வரும் எதனையும், எவரின் துணைகொண்டு வந்திடுவதாயினும், எதிர்த்து நிற்பேன், சிறைக்கஞ்சேன், சிறுமதியாளர்களின் கொடுமைக்கஞ்சேன், செயலில் வீரம், நெஞ்சில் நேர்மை, உறுதி கொண்டிட்டேன், செல்வேன் செருமுனை நோக்கி என்று சென்று அணிவகுப்பில் சேர்ந்துளரே அவர்க்கே பெருமை அளவிலும் தரத்திலும் மிகுதி! மிகுதி!

அத்தகைய அணிவகுப்பில் தம்பி நீ உள்ளாய்; அகமகிழ்ச்சி எனக்கு அதனால்; உன் ஆற்றல் நானறிவேன், "நானிலம்' அறியும் நாளும் வந்தே தீரும். பூத்த மலரிலெல்லாம் வாசம் உண்டு; நுகர்வோர் குறைவு என்றால், மலர்மீது அல்ல குற்றம். இதோ இந்தப் பொங்கற் புதுநாளன்று, எத்தனையோ இல்லமதில், என் அப்பா சிறை சென்றார்! என் அண்ணன் சிறை சென்றான்! என் மகன் சிறை சென்றான்! செந்தமிழைக் காத்திடவே, சிறை சென்றான் என் செம்மல்! என்று பேசிப் பெருமிதம் அடையத் தான் செய்வர். பலப் பல இல்லங்களில், பாற்பொங்கல் இன்றிங்கு, பண்பற்ற ஆட்சியாளர் என் மகனை இங்கிருக்க விட்டாரில்லை; இருட்சிறையில் அடைத்திட்டார்; இருப்பினென்ன! கண் கசிய மாட்டேன் நான், கடமை வீரனவன்! காட்டாட்சி போக்குதற்குப் போரிட்டான்; மகிழ்கின்றேன் என்று கூறிடுவர், தமிழ் மரபு அறிந்ததனால்.

பொங்கற் புதுநாளில் எத்தனையோ இல்லமதில், இணைந்து நம்மோடு இல்லாது போயிடினும், நம்மைப்பற்றி எண்ணாதார், இலலை என்று கூறிடலாம். மக்களைத் தாக்கிடும் கேடு எதுவானாலும், கேட்டிட முன்வருவோர் கழகத்தார்! ஆமாம்! அவர்கள் கேட்ட உடன், பாய்கின்றார் அரசாள்வோர், எனினும் பயமும் கொள்கின்றார்; பாவிமகன் கழகத்தான் பற்பலவும் கூறித்தான், அம்பலப்படுத்தி நம் ஆட்சிக்கு ஆட்டம் கொடுத்தபடி இருக்கின்றான் என்றஞ்சிக் கிடக்கின்றார் ஆளவந்தார் எனப்பேசிச் சிரித்திடுவர். புள்ளினம் கூவினதும், பூக்கள் மலர்ந்ததும், புறப்பட்டான் கதிரவனும், புறப்படுவோம் துயில்நீங்கி என்று எல்லா மாந்தருமா கிளம்புகின்றார்? கிளம்பாதுள்ளோர் கண்டு கதிரவன் கவலை கொள்ளான். பாடிடவோ மறவாது புள்ளினந்தான், மலர்ந்து வரவேற்கும் பூக்களுமே! தம்பி! கதிரவனாய், கானம் பாடிடும் வானம்பாடியாய், மணம் பரப்பிடும் மலராக நீ இருக்கின்றாய். மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு, மாசற்றது உன் தொண்டு என்பதனால், நாம் ஈடுபட்டுள்ள பணி எதனையும் எடுத்தாய்ந்து பார்த்திட்டால், தூயது அப்பணி, அறிவாளர் வழிநின்று ஆற்றுகின்றோம் அப்பணியினை என்பதனை அறிந்திடலாம். வந்து புகுந்து கொள்ளும் இந்தியினை எதிர்க்கின்றோம்; இடரில் தள்ளுகிறார் இந்திக்குத் துணைநிற்போர்; இழித்துப் பேசிவிட்டு எனக்கென்ன சுவைப்பண்டம் என்று கேட்டு நிற்கின்றார் மாற்றார் தொழுவத்தில், மரபழித்தார்; ஆயினுமென்! நம் கடமைதனை நாம் செய்தோம் என்ற மனநிறைவு நமக்கு இன்று; நாளை வரலாற்றில் அதனைப் பொறித்திடுவர். எதிர்த்தாய் என்ன பயன்? இந்தி ஏறும் அரியாசனம் என்பது உறுதியன்றோ! என்று கேட்பாரும் உளர்; கெடுமதியால் நடமிடுவோர் கேட்டிடட்டும். கேலியாம் அம்மொழியும் நம் விலாவை வேலாகக் குத்தட்டும்; ஈட்டியாய் அப்பேச்சு நம் இதயத்தில் பாயட்டும்; இருக்கும் வீரம் பன்மடங்கு கொப்பளித்து எழட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் நமது பணி என்போம் நாம். மலக்குழி கண்டேன் நான், ஒதுங்கி நடக்கின்றேன். மலமே உனக்கு மணமளிக்குதே அந்தோ! என்றுகூட நாம் அன்னவரைக் கேட்டிடல் வீண் வேலை. எதிர்த்து வந்த சிறுத்தையினை எதிர்த்து நின்றேன் வீரமாய் நான்; என் உடலில் அதன் கீறல். பற்கள் படிந்துள்ள நிலைதான்; குருதி கசிகிறது உண்மை; சொல்ல நான் துடிதுடித்தேன், எனைத்தாக்கி ஓடிப்பதுங்கி, உறுமிக்கிடக்கிறது அச்சிறுத்தை? கூடி அதனைத் தாக்கிக் கொன்றுபோட வாராத கோழையே! என்னை நீ கேலிவேறு செய்வதுவோ! சிறுத்தையின் வாயினிலே கசியும் செந்நீரைப் பானமாய்ப் பருகும் ஈ, எறும்பு, பூச்சி, நீ! என்று கூறிடலாம் ஏசித்திரிவோரை! வீண் வேலை! நேரம் இல்லை! நம்மாலானவற்றை நாம் செய்தாக வேண்டும்; நாமிருந்தும் இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்ற பேச்சு எழவிடோம், இது உறுதி.

மொழித் துறையினிலே புகுத்தப்படும் அக்கிரமம் நிறைந்த ஆதிக்கம், அத்துடன் நில்லாது. காலிலோ கரத்திலோ எந்த இடத்திலே கருநாகம் தீண்டிடினும், உடலெங்குமன்றோ விஷம் பரவி உயிர் குடிக்கும். அஃதேபோல, மொழித் துறையினிலே ஆதிக்க நச்சரவு பதித்திடும் பல்லினின்றும் கக்கிடப்படும் நஞ்சு, தமிழரின் உடல் முழுவதிலும் பரவும்; வாழ்வு அழியும்.

மொழி ஆதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற் படுத்தும், அஃது பொருளாதார ஆதிக்கத்திற்கு வழிகோலும், பிறகோ தமிழர் அரசியலில் அடிமைகளாகி, அல்லற்படுவர். இதனை அறிந்தோர் கூறி வருகின்றனர்; ஆலவட்டம் சுற்றிடுவோர் மறுத்துப் பேசி, ஆளவந்தார்களை மகிழ வைக்கின்றனர்.