அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பொற்காலம் காண!. . .
1

தெற்கு முனையிலே ஏற்பட்ட பெருவிபத்து
எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கும்போக்கு
என் தம்பி மணம் பரப்பிடும் மலர்
இந்தியா முதலாளிகளின் முகாம்
கண்டு கருத்தறிதல் கடினம்; எனினும் தேவை
குப்பை கூளம் பற்றிய ஜான் மேஸ்பீல்டின் கவிதை

தம்பி!

தமிழக மக்கள் தனிச் சிறப்பளித்துக் கொண்டாடி மகிழ்வுபெறும் திருநாள், பொங்கற் புதுநாள். எங்கிருந்தோ ஓர் புத்தெழில், இந்த விழாவன்று அரசோச்ச வந்திடும் விந்தை, சிந்தைக்கு இனிப்பளிக்கக் காண்கின்றோம். இன்னல் மிகுந்த வாழ்வில் பின்னிக்கிடந்திடும் நிலையினிலுள்ள மக்களையும், இன்றோர் நாள், கன்னல் கண்டு பேசிட, செந்நெல் குவிந்திருக்க, செவ்வாழை அருகிருக்க, உழைப்பின் பயனாக உருவான பண்டமெலாம் நிறைந்திருக்க, மாடு கன்றுகளும் மேனி மினுக்குடனே, பொங்கிடுவது நாங்கள் தந்திடும் பாலன்றோ எனக் கேட்பதுபோல் உலவிவர, இந்நாள் இதயம் பாடிடும் நாள்! இஞ்சியும் மஞ்சளும் இயற்கை தந்த அணிகலன் என்பதனை உணரும் நன்னாள் என்றெண்ணி மகிழ்வுதனைப் பெறுத் திகழ்தல் இயற்கை; பொருத்தமும்கூட.

நிறைவாழ்வு, கனிச்சுவை போன்றுளது; அதனை நித்த நித்தம் பெற்றிடும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதோரும், இன்றோர் நாள், எழில் மாளிகைதனை எட்டிப் பார்த்துக் களிப்படையும் "இல்லாதான்' போல, இன்ன விதமெல்லாம் இருந்திட்டால், வாழ்வு சிறந்திடும், பயன் மிகுந்திடும், நாடு பொலிவு பெறும், வையகம் கண்டு பெருமைப்படும் என்று எவரும் எண்ணி மகிழத்தக்க இன்ப நாள்.

இந்நாளில், தமிழ் மரபறிந்த எவரும், அறிதுயிலிலிருந்தபடி அண்டந்தனைக் காக்கும் அரி தங்கும் வைகுந்தமும், ஆடுவதில் வல்லவர் யார்! அறிந்திடுவோம் வந்திடு! என்று உமைதனை அழைத்து, மானாட மழுவாட முக்திக்கு வழிதேடும் பக்தர்கள் மனமாட ஆடிடும் சிவனாரின் கைலையும், இவளழகா அவளழகா? எவள் இன்று எம்முனிவன் தவம் கலைக்க? என்று தேவர் பேசிப் பொழுதோட்டும் இந்திரபுரியும் பிறவும்பற்றிப் பேசிடுவதுமில்லை, எண்ணமும் கொள்வதில்லை.

தாள் ஒலி அல்ல, தையலரின் சிலம்பு இசைக்கும் ஒ தன்னே ôடு போட்டியிட்டு, கட்டழகி பெற்றெடுத்த இன்ப வடிவத்தை எடுத்தணைத்து, முத்தமிடும் இளைஞன் எழுப்பி விடும் இச்சொலிக்கும் போட்டி எழ, கண்டு கருத்தறிந்து, பண்டு நடந்ததனை எண்ணி எண்ணிப் பாட்டன் சிரித்திட, இடையே விக்கல் இருமல் கிளப்பிவிடும் ஒலியும், இன்னோரன்ன ஒலியே, இசையாகிடக் காண்கின்றோம் இத்திருநாளில்.

இந்த யுகந்தனிலே, இந்தத் தேசந்தன்னில், இன்ன குலத்தினிலே அவதரித்த மன்னவனும், அவனைக் கெடுக்க வந்த அசுரனும் போரிட்டபோது, மன்னவன் முற்பிறப்பில் மாதவம் செய்தான் எனவே அன்னவனை ரட்சித்து அசுரனைக் கொன்றிடுதல் முறை என்று, திருமாலும் "சக்கரத்தை' அனுப்பி வைக்க, வந்தேன்! வந்தேன்! என்று துந்துபி என முழக்கி, வந்தது காண் திகிரி, அழிந்தான் அசுரன்; அந்த நாள், இந்நாள்; பண்டிகை நாள்! இந்நாளில், பாகும் பருப்பும் பாலினிற் பெய்து பக்குவமாய்ச் சமைத்து, சக்கர வடிவமாக்கி, உண்டு உருசிபெறுவதுடன் உத்தமர்க்குத் "தானமாக'த் தருவோர்கள் அடுத்த பிறவியிலே அரசபோகம் பெறுவார்கள். அத்திரி அருளியது அதிகிரந்த மொன்று, அதிலிருந்து பிரித்தெழுதி அளித்திட்டார் மாமுனிவர், அவர் வழியில் வந்தவரே இன்று புராணம் படிப்பவரும், என்றெல்லாம் கதைத்திடும் நாள் அல்ல. வலிந்து சிலர் இதற்கும் கதை கூற முனைந்தாலும், எவர்க்கும் அஃது இனிப்பதில்லை; நெஞ்சில் புகுவதில்லை; இஃது பொங்கற் புதுநாள்! தமிழர் திருநாள்! அறுவடை விழா! உழைப்பின் பெருமையை உணர்ந்து நடாத்தப்படும் நன்றி அறிவிப்பு விழா! என்ற இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது; பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது; அகமும் முகமும் மலருகின்றன; வாழ்வின் பொலிவு துலங்கித் தெரிகிறது.

இந்த உலகத்தின் எழில் யாவும் பொய்யல்ல, மெய்! மெய்! எனும் உணர்வும், அந்த எழிலினையும் பயன்தனையும் நுகர்ந்திடவும் வளர்த்திடவும் முனைதல் மாந்தர் கடன் என்ற மெய்யறிவும், அந்தக் கடமையினைச் செம்மையாய்ச் செய்து முடிக்க ஆற்றல் மிக வேண்டும், அவ்வாற்றல் கூட்டு முயற்சியினால் மிகுந்து சிறப்பெய்தும் என்றதோர் நல்லறிவும், இருள் நீங்கி ஒளி காண்போர் இதயம் மலராகி இன்புற்றிருப்பது போல், நல்வாழ்வுதனைக் குலைக்கும் நச்சரவு போன்ற நினைப்புகளும், நிலைமைகளும், நிகண்டுகளும் அமைப்புகளும் நீடித்திருக்கவிடல் நன்றல்ல, நலம் மாய்க்கும் என்பதறிந்து, அறிவுக் கதிரினையே எங்கெங்கும் பரவச்செய்து எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலே இயற்கை நீதி எனக் கொண்டு பணிபுரியும் ஆர்வமும், பெற்றிடப் பயன்படும் இந்தப் பொங்கற் புதுநாள்.

இயற்கைச் செல்வங்கள் என்னென்ன இங்குண்டு, அவை தம்மைப் புத்துலக நுண்ணறிவால் மேலும் பயன் அளிக்கும் விதமாக, திருத்தி அமைத்திட என்னென்ன முறை உண்டு என்பதெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடலாம், இந்நாள் நமக்களிக்கும் நற்கருத்தைப் புரிந்துகொண்டால். புனலாடி, பொன்னார் இழை அணிந்து, பொட்டிட்டுப் பூமுடித்து, பாற்பொங்கல் சமைத்து அதில் பாகு கலந்து, பாளைச் சிரிப்புடனே பரிவுமிக்காள் தந்திட, சுவைத்திட இதழிருக்க வேறு தரும் விந்தைதான் எதுக்கோ என்று கேட்டிட இயலாமல் குறும்புப் பார்வையினால் அவன்கூற, பெற்றோர் அதுகண்டு பேருவகைதான் கொள்ள, இல்லமுள்ளார் எல்லோரும் இன்புற்று இருந்திடுதல் பொங்கற் புதுநாளின் பாங்கு; மறுக்கவில்லை. ஆனால், முழுப்பாங்கு என்றதனை மொழிந்திட மாட்டேன் நான்; தித்திக்கும் சுவையுடனே, சிந்திக்கவும் வைக்கும் எண்ணங்கள் பற்பலவும் பொங்கி வருவதுதுôன் இந்நாளின் தனிச்சிறப்பு, முழுப்பாங்கு. மலரின் எழில் கண்டு மகிழ்வது மட்டும் போதாது, மணம் பெறவேண்டுமன்றோ! அதுபோன்றே பொங்கற் புதுநாளன்று மனைதொறும் மனைதொறும் காணப்படும் கவர்ச்சிமிகு கோலம் - புறத்தோற்றம் - கண்ணுக்கு விருந்தாகிறது. ஆனால், அது மட்டும் போதாது; கருத்துக்கும் விருந்து வேண்டுமன்றோ! உளது உணர்பவர்களுக்கு உணர்பவர்களே, பொங்கற் புதுநாளின் முழுப்பயனையும் பெற்றவராவர். உடன்பிறந்தோரே! நீவிர், அந்நன்னோக்கத்துடன் இத்திருநாளின் தன்மையினை உணர்ந்து பயன் பெற வேண்டுமெனப் பெரிதும் விழைகின்றேன்.

திருநாளின் தன்மையை மட்டுமல்ல, காணும் ஒவ்வோர் பொருளிலும், தெரிந்திடும் புறத்தழகு மட்டும் கண்டு போதுமென்றிருத்தல் ஆகாது; அப்பொருளின் உட்பொருளை, மெய்ப்பொருளை அறிந்திடுதல் வேண்டும். அந்த நுண்ணறிவே, நாம் காணும் பொருள்களின் முழுத்தன்மையையும் துருவிக் கண்டிடவும், காண்பதனால், பயன் பெறவும் வழி காட்டுகிறது. பொருளின் புறத்தோற்றத்தை மட்டுமல்ல, அவைகளின் தன்மையினையும் பயனையும் நுண்ணறிவுடன் கண்டவர் தமிழர்! இன்று தமிழ் பேசிடுவோர் என்று பொதுவாக எண்ணிவிடாதே தம்பி! நான் குறிப்பிடுவது, தமிழராக வாழ்ந்த தமிழர்களை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று வள்ளுவர் கூறிச் சென்றார்.

காலைக் கதிரவன், மாலை மதியம், ஆடிடும் பூங்கொடி, பாடிடும் அருவி, கொஞ்சிடுங் கிள்ளை, துள்ளிடும் வெள்ளி மீன், மருண்டவிழி மான், ஒளிவிடும் விண்மீன், சிரித்திடும் முல்லை, பேசிடும் புறாக்கள், பழமுதிர் சோலை, வளமிகு வயல்கள், எதுதான், தம்பி! அழகாக இல்லை! எதுதான் தம்பி! இன்பம் தராதிருக்கிறது? வா! வா! என்று வாயால் அல்ல, சிறு கரத்தால் அழைத்திடும் குழவி காண்போன் களித்திடுவது போலத்தான், முற்றிய கதிர் நிரம்பிய வயலின் ஓரத்தில் சென்றிடும் உழவனுக்குக் காற்றால் அசைந்தாடும் பயிர் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தி நேரத்துச் செவ்வானத்தைக் கண்டதுண்டா? கண்டிருப்பாயே! எப்படி அந்த அழகு? உன்னைப்போய்க் கேட்கிறேனே! உன்னை முதன்முதலாகக் கண்டபோது உனக்கு வாய்த்தவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்குமே, நீ அதை அல்லவோ எண்ணிக்கொண்டிருக்கிறாய்!! இருப்பினும் இதனைக் கேட்டிடு தம்பி! எழிலோவியம் நிரம்ப உளது நம்மைச் சுற்றி! ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் வகையான அழகு ததும்புகிறது. ஆனால் அந்தப் புறத்தழகு மட்டுந்தான், அவை நமக்களித்திடுகின்றன என்றால், அவை பெருமைக்குரியனவாகா. புறத்தழகு காட்டி நமை மகிழ்விப்பதுடன், அவை, தமது தன்மையின் காரணமாக நமக்கு மிகுந்த பயனையும் வழங்கு கின்றன! நம் வாழ்வு சிறப்படைய அவை துணைசெய்கின்றன! சிறப்படையவா!! வாழ்வே, அவை நமக்கு வழங்கிடுகின்றன.

வானத்திலே தோன்றிடும் வண்ணக் குழம்பு, காணற் கரியதோர் ஓவியம்; ஆமாம்; ஆனால், கண்ணுக்காக மட்டுமோ அஃது உளது? இல்லை, தம்பி! கருத்துக்காக! என் அழகைக் கண்டிடு, இதயம் மலர்ந்திடும்! என்று மட்டும் கூறி, மையல் ஊட்டிடும் "சாகசக்காரி' அல்ல, இயற்கையாள்! என்னைக் கண்டிடு, அறிந்திடு, முழுவதும் உணர்ந்திடு, என் தன்மையினை ஆய்ந்து பார்த்திடு, பயன் பெறு!! - என்று கூறிடும் வள்ளல் அந்த வனிதை!

இயற்கையாள் நமக்களித்த எண்ணற்ற பொருள்கள் பெற்றோம்; இன்றவை மனையில் மங்கலம் தந்திடக் காண்கின்றோம். ஆயின், இப்பொருள் தம்மைப் பெற்றோர் எத்தனைபேர் என்ற கணக்கினை மறக்கலாமோ, அதற்கான காரணம் அறியாதிருக்கப்போமோ! மண்மகள் தந்தாள் இந்த மஞ்சளும் மா, பலாவும், வாழையும் வழங்கினாளே, செந்நெலும் பிறவும் அந்தச் செல்வியின் கரத்தால் பெற்றோம்; பெற்றதால் பெற்றோம் இன்பம்; பெறுகின்றனரோ அதனை மற்றோர் என்று எண்ணிடத் தவறல் தீது; ஏனெனில், இயற்கை அன்னை, இங்கு இவைதம்மைத் தந்தது. எவரும் இன்புற்றிருக்க; சிலருக்குப் பலவும், பலருக்குத் துளியுமற்ற பாழ்நிலைக்காக அல்ல, இத்தனை தந்த பின்னும், இத்தரைமீதில், எத்தனை எத்தனையோ மாந்தர் என் செய்வோம் என்றழுதும், இல்லையே என்று கூறி இடும்பையின் பிடியில் சிக்கித் தத்தளித்திடுதல் கண்டு, தாங்கிக் கொள்வதுதான் உண்டோ! மெத்தவும் கோபம் கொண்டு, சிற்சில நேரந் தன்னில், அடித்துக் கேட்கின்றாள் போலும், அட மடமகனே! உன்னை நம்பி நான் தந்தேன் எல்லாம்! நலிகின்றாரே பல்லோர்! இது உன்றன் கயமையாலே!! ஆகவே, உன்னை உன்றன் கொடுஞ் செயலுக்காக வேண்டி தாக்குவேன், பார்! என் ஆற்றல்! என்று பெருமழை, பேய்க்காற்று, கடற் கொந்தளிப்பு, நிலநடுக்கம் எனும் கணைகளை ஏவுகின்றாள் போலும். இந்நிலையில், விழாவென்று சொல்லிடவோ இயலவில்லை, விழியில் நீர்த்துளிகள் - உனக்கும் எனக்கும், உள்ளம் படைத்தோர் அனைவருக்கும்.

விண்ணிருந்து மண்ணுக்கு வளமூட்ட வந்த மாமழையைப் போற்றுகிறோம்; போற்றினார் இளங்கோ அன்றே! மண்மீது உள்ளனவும், அவை நம்பி வாழ்ந்திடும் மாந்தரும் அழிந்துபட, மலையென அது கிளம்பி, பெருங்காற்றை உடன்கொண்டு பேரிழப்பை மூட்டினதே, பேச்சற்றுத் திகைத்துக் கிடக்கின்றோம் மூச்சற்றுப் போயினர் பல்லோர் என்றறிந்து.

கடல் சீறி எழுவானேன், கடுங்கோபம் எதனாலே அந்தோ! ஒரு தீதும் செய்திடாத மாந்தர்களை கொல்வானேன்!

எத்தனையோ பிணங்கள் மிதந்தனவாம்; நோயாளி தாக்குண்டு, மருந்து தேடித்தானுண்டும், பிழைத்தெழ முடியாமல், பிணமாவர்; தவிர்த்திட முடிவதில்லை. அது போன்றதோ இஃது? இல்லை! இல்லை! ஒரு துளியும் இதுபோல நடந்திடக் கூடுமென்று, எண்ணம் எழாநிலையில் இருந்தவர்கள், துயின்றவர்கள், பிணமானார்; அழிவுதனை ஆழ்கடலும் ஏவியதால்,

முறிபடு தருக்களும், இடிபடு மனைகளும், உடைபடும் அமைப்பும், ஓலமிடும் மக்களும், புரண்டோடி வந்திடு புனலும், இழுத்து அழித்திடு சுழலும், அம்மவோ! கேட்டிடுவோர் நெஞ்சு நடுக்குறு விதத்தன என் செய்வர் அந்த மக்கள்; மூழ்கினர்; மூச்சற்றுப் போயினர். சேதி கேட்டிடும் அனைவருக்கும் நெஞ்சில் பெருநெருப்பு, விழியில் நீர்க்கொப்பளிப்பு. எத்தனையோ இன்னல்களைக் கண்டு கண்டு, அவை தம்மால் தாக்குண்டு, எதிர்த்து நின்று வடுப்பெற்று வாட்டம் ஓட்டிடுவோம் வாழ்வின்பம் பெற்றிடுவோம் என்று உழல்கின்றார், ஏழை எளியோர்கள். அறம் மறந்த நிலையினிலே சமூக அமைப்புள்ள காரணத்தால், ஆயிரத்தெட்டுத் தொல்லை, அவர்கட்கு. பிழைக்க வழியில்லாதார், உழைத்து உருக்குலைந்தார், நம்பிக்கை தேயத் தேய நலிவுற்றார். இத்தகையோர் மெத்த உண்டு பெரு மூச்செறிந்தபடி; உயிரோடிருக்கின்றார் ஓர் நாள் வாழ்வு கிடைக்கும் என்று வறுமையின் தாக்குதலும் அகவிலையின் போக்கதனால் ஏற்படும் அலைக்கழிப்பும் நீதி கிடைக்காமல் அவர்கள் பாதி உயிரினராய் உள்ளதுவும் அறிவோம் நாம்; அறியும் அரசு. எனினும், பொழுது புலருமென்று பொறுத்திருந்து வருகின்றார்; அவர் போன்றோர்க்கு, "வாழ்வு கிடைக்குமென வாடிக்கிடப்பதுமேன்! வற்றிய குளத்தினிலே வண்ணத்தாமரை காண்பதுவும் இயலுமோதான்! உழலுகின்றாய் உயிர்காக்க; உலவுகின்றாய் வாழ்வு கிடைக்குமென்று; உண்மையை நான் உரைக்கின்றேன், கேள்! உனக்கு வாழ்வளிக்கும் வழி காண, இன்றுள்ள உலகுக்கு நேரமில்லை, நினைப்புமில்லை; எதிர்பார்த்து ஏமாந்து இதயம் நொந்து செத்திடுவாய்; சாகுமுன்னம், அணு அணுவாய் உன் எண்ணந்தன்னைப் பிய்த்திடும் ஏமாற்றம் மூட்டிவிடும் வாட்டம்; அதனால் உழல்வானேன் வீணுக்கு; உருண்டோடி வந்துன்னை அணைத்துக் கொள்கின்றேன்; ஆவியைத் தந்துவிடு; அமைதி பெறு!'' என்று கூறியதோ, கொக்கரித்துப் பாய்ந்து வந்த கொடுமைமிகு அலையும்! வாழ வைத்திடுதல் எளிதல்ல; வல்லமை மிகவும் வேண்டும்; சாகடித்திடவோ எளிதிலே இயலும், வா! வா! என்று கூறி மேல் கிளம்பிக் கொதித்துவந்த அலைகள், மாந்தர் உயிர் குடிக்கும் நச்சரவுகளாயின அந்தோ!! பிணமாகி மிதந்த அந்த மாந்தர் உள்ளந்தன்னில் என்னென்ன எண்ணங்கள் உலவி இருந்தனவோ, எவரறிவார்! மணவாளனாவதற்கு ஏற்றவர்தான் அவர்! பெற்றோர் மகன் மனத்தைக் கண்டறிந்தே செய்கின்றார் இந்த ஏற்பாட்டினை, பெறுவேன் நான் மன நிறைவு என்றெண்ணி மகிழ்ந்திருக்கும் மங்கையரும் இருப்பரன்றோ, கத்தும் கடல் அனுப்பப் பாய்ந்து வந்து அலை கொத்திக்கொண்டு சென்ற பல்லோரில்! பூவும் மஞ்சளுடன் போனவர்களும் உண்டே! காய் இது, கனியும் விரைவினிலே என்று கூறத்தக்க பருவமுடன் அழகு தவழ் உருவினரும், அலைக்கு இரையாகிப் போயிருப்பர்! அரும்புகள் பலப் பலவும் அழிந்திருக்குமே. தள்ளாடும் நடையெனினும், தாத்தா! என்றழைத்திடும் மழலை மொழிக் குழவியுடன் மாதரசியும் மகனும் இருக்கின்றான் என்ற எண்ணம் களிப்பளிக்க இருந்து வந்த பெரியவர்கள் பற்பலரும் மடிந்திருப்பர், உயிர் குடியாமுன் மடிந்திடேன் என உரைத்து எழும்பி வந்த அலைகளாலே! என்னென்ன நடந்திருக்கும், எத்தகு ஓலம் எழும்பியிருந்திருக்கும், உயிர்தப்ப ஏதேது முயற்சிகளைச் செய்திருப்பார், எல்லாம் பயனற்றுப் போயின என்றுணர்ந்து, இறுதியாய், இதயத்திலிருந்து அலறல் எவ்விதத்தில் பீறிட்டுக் கிளம்பி வந்திருக்கும் என்பதனை எண்ணிடும்போதே, உள்ளம் நைந்துவிடுவதுபோலாகிறது, என் செய்வோம்; பேரிழப்பை எண்ணி, பொங்கிடும் கண்ணீரல்லால், தந்திட வேறென்ன உண்டு; பொறுத்துக்கொள்க என்று, இழந்தனனே என் மகனை! இழுத்துச் சென்றதுவே என் அரசை! வாழ்வளிக்க வந்தவனை வாரிக் கொடுத்துவிட்டுப் பாழ் மரமானேனே, பாவி நான்! என்றெல்லாம், பதறிக் கதறிடுவோர்க்கு அவர் ஓலம் கேட்டு, காலம் மூட்டிவிட்ட கொடுமையிது எனக்கூறி, கண்ணீர் சொரிவதன்றி, பிறந்தவர் இறந்தே போவர், இறப்பும் ஓர் புது வாழ்க்கையின் பிறப்பாம் என்றெல்லாம் "தத்துவம்' பேசிடவா இயலும்? நாமென்ன, முற்றுந் துறந்து விட்டோம் என மொழியும் முனிவர்களோ! இல்லையன்றோ! இருந்தான் பலகாலும், பெற்றான் பல நலனும் நோய் வந்துற்று மறைந்தான், மறையுமுன் மாடு மனையுடனே மகிழ்ந்திருக்கும் விதமாகப் பெரியதோர் குடும்பத்தை அமைத்தான் சீராக என்று கூறிடத்தக்க நிலையினிலே இறந்துபடுவோர்க்காகக்கூட இதயமுள்ளோர் கண்ணிர் சிந்திடுவர், கவலைகொண்டிடுவர். தெற்கு முனையிலே நேரிட்ட பேரிழப்புக் கண்டோம், மரணம் இயற்கை என்று கூறி எங்ஙனம் ஆறுதல் பெற இயலும்! இது, எந்தமிழ் நாட்டினிலே, என்றும் நடந்திராத, சிந்தையை வெந்திடச் செய்யும் பெருவிபத்து, பேரிழப்பு! ஆறுதல் கூறுவதோ, பெறுவதுவோ எளிதல்ல.

கொடும் அலைக்குப் பலியானோர் விட்டுச் சென்ற குடும்பத்து மற்றவர்கள் தம்மை நம் உற்றார் உறவினர் என்று கொண்டு, அழித்தது அலை, அரசு அணைத்தது என்றவர் எண்ணும் வண்ணம், உயிர் குடித்தது அலை வடிவிலே வந்த கொடுமை, வாழ்வளித்தனர் அன்னையாகி இவ்வரசு எமக்கு என்று கூறத்தக்க விதத்தில் அரசு திட்டமிட்டுத் தக்கனவற்றை விரைந்து செய்தளிக்க வேண்டும். நாட்டினர் அனைவருமே, ஒருமித்துக் கேட்டிடுகின்றனர் அரசை, வீடிழந்து, தொழிலிழந்து, பெற்றோர் உற்றார் இழந்து, பெற்றெடுத்த செல்வந்தனை இழந்து அழுது கிடக்கின்ற மக்களுக்கு, புதுவாழ்வு, முழுவாழ்வு நல்வாழ்வு அளித்திட, பொருள் அளவு அதிகமாமே என்றெண்ணி மருளாமல், பரிவுடன் அவர் நிலையைப் பார்த்து, நலன்தேட முனைந்திடுதல் வேண்டும் என்று. அழிவு ஒரு நாள், அழுகுரல் ஆறு நாள், வேண்டுகோள் ஒரு நாள், ஆகட்டும் பார்க்கலாம் என்று சில நாள், பிறகு "அதது அததன்' வழிப்படி சென்றிடும் என்ற முறையிலே எண்ணத்தை ஓட விட்டுவிடாமல், தமிழக மக்கள் மனம் குளிர, பிறநாட்டவரும் கேட்டு மகிழத்தக்க விதத்தில், அரசு செயலாற்ற வேண்டுகிறோம். செய்வர் என்று எண்ணி, அந்த நம்பிக்கை தன்னையே ஒளியாக்கிக்கொண்டு, இருண்ட கண்களில் அதனை ஏற்றி, விழாவினுக்குரிய இந்நாளில், தமிழகத்தோர்க்கு என் கனிவுமிகு வாழ்த்துக்களைச் செலுத்துகின்றேன்.

அணைத்த கரம் அடிக்கிறது, ஆனால், அடித்தது போதுமென்றெண்ணி மீண்டும் அணைத்துக்கொள்கிறது போலும். தம்பி! இயற்கையாள் தந்திடுவனவற்றைப் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்று, சிலர் மட்டும் வாழ்ந்திருத்தல் நன்றன்று. நாம் எவை எவை பெற்று இன்புற்றிருக்கின்றோமோ, அவைதமை அனைவரும் பெற்று மகிழ்ந்திடுவதே முறை, அதற்கே உளது இயற்கைச் செல்வம். பொங்கற் புதுநாளன்று இக் கருத்து நம் நெஞ்சில் ஏற்கவேண்டும், ஊறவேண்டும். கனியெலாம் சிலருக்கு, காய்சருகு பலருக்கு; ஒளியில் சிலர், பாழ் இருளில் பலர்; வாழ்வார் சிலர், வதைபடுவார் பலர்; எனும் நிலைகாண அல்ல; இத்தனைக் கோலம் காட்டி எண்ணற்றனவற்றை ஈந்து, என்றும் இளமையுடன் இயற்கையாள் கொலுவீற்றிருப்பது. அதிலும் தம்பி! இன்பத் தமிழகத்தினிலே, இயற்கையாள் தீட்டி வைத்துள்ள கோலம், எண்ண எண்ண இனிப்பளிப்பதாக உளது. நாமணக்கப் பாடிய நற்றமிழ்ப் புலவோரின் பாக்களில் காண்கின்றோம், பற்பல படப்பிடிப்பு.