அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பொற்காலம் காண!. . .
3

எமக்கேன் விடுதலை!! விடுதலை பெற்றால் நம்மைக் காத்திடும் பொறுப்பினை எவர் ஏற்றுக்கொள்வர்? வேலைக்கு வழி ஏது? சோற்றுக்கு வழி ஏது? செத்துவிடத்தான் இது வழி. ஆகவே, விடுதலை வேண்டாம்!! வெள்ளை எஜமானர்களின் பாதமே நமக்குப் பாதுகாப்பு என்று நீக்ரோக்களில் சிலரைப் பேசவைத்தனர் வெள்ளை வெறியர்கள். . ., விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்கிய நாட்களில்.

இங்கு நம்மிடையே உள்ளோரில் சிலர் இந்தி ஆட்சி மொழியானால் என்ன என்று கேட்கும்போது, தம்பி! எனக்கு அந்தப் பழைய நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. உடலிலேயே தான் நோய் தங்கி இருந்து, உடன் இருந்தே கொல்லுகிறது; பாசி, குளத்திலேயேதான் உண்டாகிறது; களை, வயலிலேயேதான் முளைக்கிறது, காட்டிக் கொடுப்போரும் அதுபோன்றே நமது சமுதாயத்திலேயே உள்ளனர், மினுமினுப்புடன், மிடுக்குடன், துரைத்தனத்தாரின் மேய்ப்புத் தேய்ப்புப்பெற்று!! காட்டுக் குதிரைக்கு ஏது, தங்கமுலாம் பூசப்பட்ட கடிவாளம்? இல்லையல்லவா! நாட்டிலே, பூட்டுவார்கள் விலையுயர்ந்த கடிவாளம் குதிரைக்கு. எதற்கு? நாம் ஏறிச் செல்லும் வண்டியை அக்குதிரை இழுத்துச் செல்ல வேண்டுமே! காண்போர் எப்படிப் பட்ட விலை உயர்ந்த குதிரை என்று கண்டு அதனை உடையவரைப் பாராட்ட வேண்டுமே. . . அதற்காக! அதுபோல, தமிழரில் சிலர் உளர்.

தம்பி! மொழிப் பிரச்சினைபற்றி நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்த ஆட்சி, எப்படியெப்படி ஆதிக்கத்தைப் புகுத்துகிறது என்பதனை எடுத்துக் காட்டிட மட்டுமல்ல; வித்தகர்களின் பேச்சுக்கும் மக்களின் மனக் குமுறலுக்கும் ஒரு துளியும் மதிப்பளிக்காத மமதை கொண்டதாக இருக்கிறதே இந்த அரசு, இவர்களிடமிருந்து எவர்தான் எந்த நியாயத்தைத்தான் எதிர்பார்த்திட முடியும்!. . . என்பது குறித்து எண்ணிடும்போது ஏற்படக்கூடிய திகைப்பையும் எடுத்துக் காட்டத்தான்.

தம்பி! அதோ காண்கிறாயே, கொதி வந்ததும், சோற்றைப் பார்க்கிறார்கள்; அரிசி, சோறாகி இருக்கிறது. அரிசிதானே! அதனுடன் கலந்த கல்லுமா? இல்லையே! கல் கல்லாகவேதான் இருக்கிறது, எத்தனை தீ அதனைத் தாக்கிடினும். வேகக் கூடியதைத்தான் வெந்திடச் செய்யலாம். அடுக்களை எடுத்துக் காட்டும் இந்தப் பாடம் அரசியலுக்கும் பொருந்தக்கூடியதே. இந்த பானை, வேகும் பண்டம் கொண்டதல்ல, இது வெந்து சுவை தரும் பண்டமாகும் என்று எத்தனை நேரம் நெருப்பை எரியவிட்டாலும் வீணாகித்தான் போகும், என்பது. எனவே இந்த வேகாச் சரக்கை எடுத்து வீசிவிட்டு வேறு கொள்ளவேண்டும். இன்றுள்ள போக்குடனும் இயல்புடனும் இவ்வரசு இருந்து வருமானால் நாம் இருக்க விட்டுவைத்திருப்போமானால் - எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கு நீக்கப்பட்டு மக்கள் மகிழத்தக்க "பரிகாரம்' கிடைத்திடாது.

உணவுப் பிரச்சினை, விலை ஏற்றப் பிரச்சினை, தொழில் வளம் சீராக அமையும் பிரச்சினை, வறுமையை ஓட்டும் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை எனும் எதுவாக இருப்பினும், ஒரு ஆணவம், ஒரு அலட்சியப்போக்கு, எல்லாம் எமக்குத் தெரியும் என்ற முடுக்கு, எவர் எம்மை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, இவைதான் தலைவிரித்தாடுகின்றன. இதனை ஒவ்வொன்றிலும் பார்க்கிறோம் தம்பி! இலங்கைவாழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமும், பர்மாவாழ் மக்களைப் பதைக்கப் பதைக்க அந்த அரசு இங்கு ஓட்டிவிட்டதனைப் பார்த்துக்கொண்டு சிறுவிரலையும் அசைக்காது இருக்கும் போக்கும் எதனைக் காட்டுகின்றன? இந்த அரசு மக்களின் நலன்களை, உரிமையினை, வாழ்வை, துச்சமென்று கருதித் துவைத்திடும் இருப்புக்கால் கொண்டது என்பதைத் தானே!!

இந்நிலையிலுள்ள ஓர் அரசு, நான் குறிப்பிட்டுள்ள முறைப்படி இயற்கைப் பொருளை நுண்ணறிவுடன் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்திச் செல்வம் பெருகிடச் செய்து, பெருகிடும் செல்வத்தை அனைவரும் சீராகப் பெற்று, இல்லாமை, போதாமை எனும் கேடு களையப்பெற்று, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத் தக்க புது முறையை, பொற்காலத்தை அமைத்திடவா முனையும்! வீண், அந்த எண்ணம். அதற்கு ஏற்றது இந்த அரசு அல்ல! சாறு, கரும்பில் கிடைக்கும்! மூங்கிற் கழியில் கிடைத்திடுமோ!

இதனை இன்று உணர்ந்து, சமுதாயத்தின் அழுக்குகளும் இழுக்குகளும் நீக்கப்படத்தக்கதான முறை கண்டு நடாத்தும் ஓர் அரசு அமைத்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஓடப்பர் உயரப்பர் எனச் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் நிலையை மாற்றிட வேண்டும், எல்லோரும் ஒப்பப்பர் ஆகிட வேண்டும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

"அதைத்தானே நாங்கள் செய்து வருகிறோம், சமதர்மத் திட்டமிட்டு'' என்கிறார்கள் ஆளவந்தார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சமதர்மத்தைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை, இவர்களின் சமதர்மம் நமது உரிமைகளையும் நமக்குள்ள சலுகைகளையும் பாதுகாத்திடும் சமதர்மம்! ஆகவே, முதலாளிகளே! சமதர்மம் என்ற சொல் கேட்டு மிரண்டிடாமல் இந்தியாவில் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி முதலையும், அச்சமின்றிப் போட்டுத் தொழில் நடத்திடுவீர்!. . . என்று அமெரிக்க நாட்டு முதலாளிகளுக்கு, அந்நாட்டு அரசியற் பெருந்தலைவர்கள் கனிவாகக் கூறுகிறார்கள்; அமெரிக்கக் கோடீஸ்வரர்கள், இந்தியா போன்ற "சந்தை' வேறு இல்லை என்று கூறிப் பேரானந்தம் கொள்கின்றனர்.

அமெரிக்க "முதல்' வேறு எங்கும் ஈட்டிக் கொடுத்திடாத அளவு "வருவாய்' இந்தியாவிலே அவர்களால் பெறமுடிகிறது. பெயர் சமதர்மம்!!

நாற்பதனாயிரம் தொழில் வணிகக் கோட்டங்கள் இணைந்த பிரிட்டிஷ் தொழில் அமைப்பு, இதுபோன்றே, "நாம் இந்தியா மேற்கொண்டுள்ள சமதர்மத் திட்டம் பற்றிக் கவலையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. சமதர்மம் என்று அவர்கள் சொல்லுவதாலே நாம் தொழிலிலே போட்டிருக்கும் முதலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடாது'' என்று கருத்தறிவித்திருக்கிறது.

பொருள் விளங்குகிறதல்லவா தம்பி! நோஞ்சான். பயில்வான் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான், அவ்வளவுதான்! முதலாளிகளின் முகாம் இந்தியா. . . அதற்குப் பெயர், சமதர்மம்!!

உண்மை நிலை இதுபோல இருப்பதனால்தான் இவர்கள் நடத்திக்கொண்டுவரும் திட்டம், பணக்காரர்களுக்கே பெரிதும் பயன்பட்டுவிட்டிருக்கிறது. மகனா லோபீஸ் குழு (துரைத்தனமே அமைத்தது) இதனை எடுத்துக்காட்டியும் விட்டது. ஆகவே, ஏழையை வாழ வைத்து, எல்லோரும் பொங்கற் புதுநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடத்தக்கதோர் நிலையைக் காண வேண்டுமானால், இன்றுள்ள அரசை நம்பிக்கொண்டிருந்தால், ஏமாற்றமடைவோம். கவனித்துப் பார், தம்பி! இஞ்சி போட வேண்டிய இடத்தில் மஞ்சளைப் போடுகிறார்களா என்று! அந்தப் பக்குவத்தைக் கவனி! ஒரு வேளைச் சோற்றுக்கு இவ்வளவு பக்குவம், முறை, தெளிவு, முயற்சி வேண்டும். முந்தானை கொண்டு அந்த வியர்வை முத்துக்களைத் துடைத்துக்கொள்ளக் கூட நேரமின்றி உன் குயிலாள் வேலை செய்த பிறகுதான் தம்பி! உனக்குப் பொங்கல், பால், பழம். உழைப்பு! முறையான உழைப்பு! பக்குவமான முறை! இடமறிதல்! நேரமறிதல்! அளவறிதல்,. . . இத்தனையும் வெறும் சொற்கள் அல்ல!! இவைகளின் வடிவங்களே, மனையிலே காண்கின்றாய்! புதிய சமுதாயம் படைத்திட, இவைகளைக் கண்டு கருத்தறிதல் வேண்டும்.

கண்டு கருத்தறிதலோ கடினம்; ஆனால் தேவை; மிக மிகத் தேவை. அறிந்ததை மற்றவர்கட்கு எடுத்துரைத்தல் அதனினும் கடினம்; மிகமிகத் தேவை.

நாடு வாழ்ந்திட, மக்கள் ஏற்றம்பெற, நம் ஆன்றோர்கள் சான்றோர்கள் கூறியன யாவை என்பதனை ஆய்ந்தறிய இவ்விழா நாளில் முயன்றிட வேண்டும்.

இன்றுள்ள புத்தறிவினர் கூறியுள்ளனவற்றினை அன்றிருந்த நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர் என்பது, கண்டு, கண்சிமிட்டி மகிழ்ந்திருப்பது மட்டும் பயன் தராது. அன்று முதற்கொண்டு சொல்லியும் இன்றுவரை அம்மொழி வழி நாம் நடந்தோ மில்லையே என்றெண்ணி வெட்கித் தலைகுனிதல் வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார். கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாரதியார் கூறிக் காட்டவேண்டியதாயிற்று அதற்குப் பிறகும், ஜாதிப் பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து, பேதையொருவன் அதன்மீதே, பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருந்தான் என்றால் - அப்படி ஒரு கதை சொன்னால் - வியப்படைகின்றோம், அறிவுப் பேழை இங்கு. . . ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே!! எனினும் எத்தனை பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டுப் பிடிவாதம், முரட்டுவாதம் சே!!

தம்பி! இதனை எண்ணிடும்போது உள்ளபடி வெட்கம் விலாவினைக் குத்திடுகிறது.

ஆகவே, அன்றிருந்தோர் கூறிச் சென்ற அரிய கருத்துக் களையும், இன்றுள்ள நூலோர் தந்திடும் நற்கருத்துக்களையும் அறிந்து. மற்றவர்க்கும் அறிவித்து அதற்கேற்ப, நமது முறைகளை, ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். மாக்கோலம் போடக் காண்கிறாயே, உன் மனத்தை வென்றாள்! வெண்குழம்பினைக் கலயத்திட்டு, தரைதனைக் கூட்டித் துப்புரவாக்கி, என்ன வரைவது எனத் தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டு, கோலம் போட்டிடக் காண்கிறாய் - வெண் குழம்பைக் கீழே கொட்டிவிட்டு நடப்போர் கால்பட்டுப் பட்டு ஏதேனும் ஓர் கோலம் உண்டாகட்டும் என்றா இருந்து விடுகின்றாள் உன் ஏந்திழை! இல்லையே? சமுதாயம் புதுக்கோலம் கொள்ள, நீயும் நானும் இன்னமும் என்ன வண்ணக் குழம்பு தேவை? எத்தகைய வட்டிலில் இடுதல் வேண்டும்? என்பது குறித்தேகூட, ஒரு திட்டவட்டமான எண்ணம் கொண்டிடத் தயக்கப்படுகிறோமே! புத்துலகு சமைத்திட எங்ஙனம் இயலும்?

நமக்கு நெடுங்காலத்துக்குப் பிறகு, அடவி நிலையினின்றும் விடுபட்டு, நாடு கண்ட இனத்தவரெல்லாம் இன்று தத்தமது நாட்டினைப் புதுமைப் பூங்காவாக்கிப் பொலிவுடன் திகழ்கின்றனர். நாமோ, வித்திடும் செயலைத் தானும் முறையாக மேற்கொண்டோமில்லை. சமூக அமைப்பிலும் செயலிலும் நெளியும் கேடுகளைக் கண்டித்திடும் துணிவுடன் நம் பேச்சும் எழுத்தும் உள்ளனவா? இல்லை! ஒரு சிலர் துணிவு பெற்றிடினும், பாய்கின்றனர் அவர்மீது; பாவி! பழிகாரன்! பழைமையை அழிக்கின்றான்! பாபக் கருத்தைப் புகுத்துகின்றான்! நாத்திகம் பேசுகிறான்! வகுப்பு வெறி ஊட்டுகிறான்! என்றெல்லாம் கதைக்கின்றனர். ஜாதிப் பிடிப்புகளையும் அவைகளுக்கான மூடக் கோட்பாடுகளையும், "புதிய நாடுகள்' என்று நாம் வெகு எளிதாகக் கூறிவிடுகின்ற இடங்களில், எத்தனை காலத்துக்கு முன்பே, எத்துணைத் துணிவுடன் தாக்கினர், தகர்த்தனர் என்பதனை அறியும்போது வியப்படைகிறோம்.

ஏழையர்க்காக வாதாடினவர்கள், செல்வபுரிக் கோட்டைகள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள்; மூட நம்பிக்கைகளை முறியடித்தவர்கள் அங்கெல்லாம் இருநூறு ஆண்டுகட்கு முன்பே வீரஞ்செறிந்த பாக்களை இயற்றினர்; புரட்சிக் கருத்தினை அளித்தனர்.

இங்கோ, அந்த முனையில் பணியாற்றத் துணிபவனை, பாரதப் பண்பாட்டை அழிப்பவன், பக்தி நெறியைப் பழிப்பவன் என்றெல்லாம் ஏசிப் பேசிடக் கிளம்புகின்றனர்.

1873-ம் ஆண்டு பிறந்தவர் ஆங்கிலக் கவிஞர் ஜான்மேஸ்பீல்டு என்பார். சங்கத்தில் பயின்று, சீமான்களின் அரவணைப்புப் பெற்றுக் கவி பாடி அரங்கேற்றினவர் அல்ல! கப்பலில் கூலி வேலை செய்துவந்தவர். மற்றும் பல கடினமான உழைப்புகளைச் செய்து பிழைத்து வந்தவர் - அவர். "நான் கவி பாடுவேன்; யாருக்காக? ஏழைக்காக!'' என்ற கருத்துப்பட ஒரு கவிதை இயற்றினார். அன்று இருந்த அறிவாளர்களிடையேயே அக்கவிதை புரட்சியை மூட்டிவிட்டது என்கிறார்கள்.

எவரைப்பற்றிப் பாடப்போவதில்லை என்பதனை முதலிலேயே தெரிவித்துவிடுகிறார் மேஸ்பீல்டு:

வாழ்வின் சுவைதன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு உடல் பெருத்து
ஊழியர் புடைசூழத்
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேரேறும்
அரசகுமாரர், அருளதிபர்
தமைக் குறித்து அல்ல!

புலவர் கவி பாடுகிறார் என்றால், அது, மன்னனை அல்லது அருளாளனைப் புகழ, போற்றத்தானே இருக்க முடியும் என்ற எண்ணம் அழுத்தமாக இருந்திருக்கிறது. 1873-ம் ஆண்டல்லவா! அதை அறிந்து, மேஸ்பீல்டு நான் உங்களுக்குப் பழக்கமான கவிஞன் அல்ல, நான் புதுமைக் கவிஞன் - நான் மன்னனைப் பற்றியுமல்ல, தேவாலயத்து அதிபனைப்பற்றியும் அல்ல பாடப்போவது!! - என்று தெரிவிக்கிறார்.

"அரசகுமாரர்
அருளாலய அதிபர்
தமைக்குறித்து அல்ல!''

என்ற துவக்கமே, துணிவு நிரம்பியது. கவிவாணர்கள் நெடுங்காலமாகப் பாடிக்கொண்டு வந்த முறையை நீக்கிவிட்டு, நீ புது முறையில் பாடப்போகிறாயோ? எவரைப்பற்றி? என்று கேட்பார்கள் அல்லவா! கூறுகிறார்!!

இன்னல்தரு ஈட்டிவளையத்துள்
ஆண்டுபல இருந்தோர்
ஏனோதானோக்கள்
எச்சிற் கலையங்கள்
சாவுவரும் வரையில்
சளைக்காது போரிட்ட
கந்தலுடைக்காரர்
களம் கிளப்பும்
தூசி ஓசையுடன்
ஓலம் உளம்மருட்ட
மண்டை உடைபட்டோர்
கண் புண்ணானோர்

இவர்களைப்பற்றித்தான் நான் பாடப்போகிறேன் என்கிறார். இவர்கள் இன்னலைக் கண்டவர்கள், இழிநிலையில் தள்ளப் பட்டுள்ளவர்கள், இவர்களை மற்றவர்கள் கவனியாமல், பூபதிகளைப் பாடிக்கொண்டிருந்து வந்தனர்; நான் இந்த

ஏனோதானோக்கள்
எச்சிற்கலையங்கள்

என்று ஒதுக்கிவிட்டிருக்கிறீர்களே, அவர்களைப்பற்றித்தான் பாடப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு, மேலும் எந்த விதமான ஐயப்பாடும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன்

மார்பகம் தன்னில்
விருதுகள் மின்னிட
பரிஏறிப் படைகாணப்
பவனி வரும்
படைத் தலைவனாம்
மன்னனின் செல்லப்பிள்ளை

இருக்கிறானே, அவனைப்பற்றிப் பாடப்போவதில்லை என்று கூறுகிறார்; மன்னன் தனக்கு விருப்பமான ஒருவனைப் படைத்தலைவனா ஆக்கிவிடுவான்; வீரன் என்பதற்காக அல்ல! அவன் மன்னனின் செல்லப்பிள்ளை என்பதால்! அந்தப் படைத் தலைவன், விருதுகள் பதித்த ஆடம்பர உடை அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் குதிரை மீதமர்ந்து வருவான், படைவரிசையைப் பார்வையிட! வழக்கமாகக் கவிஞர்கள், இவர்களைப் பாராட்டுவர், புகழ் பாடுவர்.

இவர்கள் அல்ல உள்ளபடி பாராட்டுப்பெற வேண்டியவர்கள். போரிட்டு மடிந்தவர்கள் வேறு வேறு! இந்தத் தலைவன் காட்சிப்பொருள்! இவனையா நான் பாடுவேன்! இவனை எனக்குத் தெரியாதா! வீரனா இவன்? இவன் மன்னனின் செல்லப் பிள்ளை! என்று கேலி மொழியால் துளைக்கிறார் மேஸ்பீல்டு - துளைத்துவிட்டுக் கூறுகிறார், நான் பாடப்போவது எவரைப்பற்றித் தெரியுமா?

எவர், அவர்? என்று
எவரும் அறியா நிலையினர்!
ஏறு நடைபோட்டு
வெற்றி கண்டார்!
இளைஞர்!

இவர்களைப்பற்றி என் கவிதை! என்கிறார். ஏன்? ஒரு போரிலே மும்முரமாக ஈடுபட்டு, குருதிகொட்டி, வெற்றி ஈட்டியவர்கள் இந்த இளைஞர்கள் - ஆடம்பர உடையுடனுள்ள படைத் தலைவன் அல்ல! நான் அந்தப் "போலி'யைப் புகழ மாட்டேன் என்கிறார்.

கொலு இருக்கும்
கோவை அல்ல!

என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறார். போர் குறித்த புகழ்ப் பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனைப் பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள் - இது நாள்வரை. நான் அப்படி அல்ல!

குடிமகனாய் உள்ளோன்
ஊர் சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்,
தாங்கொணாப் பாரந்தனைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக்கூடத்து உழல்வோன்
ஏதோ இசை எழுப்பி அதனால்
இனிமைபெற எண்ணுபவன்
ஏரடிப்போன்!
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்.

இவர்களைப்பற்றி நான் பாடுவேன் என்கிறார். இனிமேலா பாட வேண்டும்; இதோ பாடியேவிட்டாரே,

தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்

என்ற வரிகள் அந்த ஏழையின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறதே! மேஸ்பீல்டுடைய இதயந்தன்னில் எவரெவர் இடம்பெற்றுள்ளார் என்பது விளக்கமாகிறதே. இந்தக் கனிவு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டுப்போன, ஏழை, எளியோர்க்காக, உழைத்து உருக்குலைந்தோருக்காக! ஏழையிடம் இந்தக் கனிவு காட்டாத கவிவாணர்களை அலட்சியமாகக் கருதுகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்;

மற்றவர் பாடட்டும்
மகிழ்ச்சி தரும்
மாடு மது குறித்து!

என்று இடித்துரைக்கிறார். செல்வவானைப்பற்றி அவனுடைய சிங்கார வாழ்வு பற்றி, அவன் மந்தகாசம் பற்றி, அவன் மாளிகையிலுள்ள மதுவகை பற்றிப் பாடுகிறார்களே, அவர்களைக் குறித்து மேஸ்பீல்டுவுக்கு அத்துணை எரிச்சல். அவர்கள் பாடட்டும் அவை பற்றி என்று ஒதுக்கித் தள்ளி விடுகிறார்

என் பாடல்
குப்பை கூளம் பற்றி
குப்பன் சுப்பன் குறித்து

என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிலே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு

அவர்கள் இசையினிலே
வண்ணம் புகழுடன்
பொன் மின்னும்,

என்று கூறுகிறார். பளபளப்பு, மெருகு, இவை தேவையா! அவர்கள் இசையிலே கிடைக்கும், போய்ப் பெற்றுக்கொள், அவைதான் பெறத்தக்கன என்று கருதினால் - என்ற கருத்துப் படக் கூறுகிறார்; கூறிவிட்டு,

பிடி சாம்பல்
வாய்க்கரிசி
இவைபற்றி என் பாடல்!
குளிர்கொட்ட
மழை வாட்ட
குமுறிக்கிடப்போர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை!
இஃதே என் காவியம் காண்!

என்று தெரிவிக்கிறார்.

தம்பி! 1873-ம் ஆண்டு பிறந்த ஆங்கிலக் கவிஞர் இந்த அளவுக்கு ஏழைக்காகப் பரிந்து பேசிட முனைந்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் இருக்கின்றோம்; இந்தக் காலத்திலாவது நாம் இடர்ப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு இல்லாமையால் தாக்கப்பட்டுக் கிடக்கும் எளியோர்க்கு நல்வாழ்வு கிடைப்பதற்கான முறையில் ஓர் அரசு முறை அமைத்திடும் முயற்சியில், ஈடுபடவேண்டாமா!

செந்நெல் மணியினைக் காணும்போது தம்பி சேற்றிலே இறங்கி உழுது அதனை விளைவித்த உழவனை நினைவிற் கொள்ள வேண்டும். பாலையும் பாகையும் பழத்தையும் சுவைத்திடும்போது, இவற்றைப் பெற முடியா நிலையிலுள்ள எளியோர்களை வாழ வைத்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட வேண்டும். உழைப்பின் உயர்வுபற்றிப் பேசிவிடுதல் மட்டும் போதாது. உழைப்பவன் உருக்குலைய அவன் தந்த செல்வத்தில் சிலர் புரண்டு கிடந்திடும் சீர்கெட்ட நிலையை மாற்றிட வழிகாண வேண்டும். இயற்கை வழங்கிடும் பொருளின் அளவும், தரமும், வகையும் மிகப்பெரிது, அரசு முறை நேர்மையானதாக்கப்பட்டால், எல்லோரும் இன்புற்றிருக்கும் பொற்காலம் கண்டிடலாம், இந்தத் திருநாளன்று, அந்தக் குறிக்கோளைக் கொண்டிட வேண்டுகிறேன்.

இன்னல் பல பின்னிக் கிடந்திடும்; எனினும் இன்றோர் நாளாகிலும் அவைதமை மறந்து, இன்புற்று வீறுடன் நடாத்தி மகிழ்ச்சி பெற்றிட வேண்டுகிறேன். உனக்கும் உன் மனை யுளாருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமெலாம் பெற்று! வாழ்க தமிழகம் உன் வல்லமைத் தொண்டினாலே!!

அண்ணன்

14-1-1965