அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்



ஆலையூரார் உபதேசம்!
3
இவ்வளவும் நடைபெறும் வேளையில், காந்தியார் ஆலை இலகாலம் என்று கூறுவதும், அதற்கு நமது மாகாண முதல் ஆமைச்சர், ததாஸ்து கூறுவதும், எந்த விதமான நகைச்சுவையோ நாமறியோம்.

இத்துடன் நின்றுவிடவில்லை. உலகில் பல நாடுகளுக்குள்ளும், தங்கு தடையின்றி வியாபாரம் நடைபெறவேண்டும். ஒரு நாட்டிற்கும் சரக்குமீது மற்றோர் நாடு சுங்க வரி போடுவது கூடாது என்று அமெரிக்கா போதனை புரிந்துவருகிறது. இது இந்திய சர்க்காருக்கு இப்போ கிûட்தது வரும் சுங்கவரி வருமானத்தையும் வடநாட்டு முதலாளிகளுக்குக் கிடைத்துவரும் தொழில் பாதுகாப்பையும் கெடுத்துவிடக் கூடுமாகையால், இந்தப் போதனையை முதலாளிகள் ஏற்றுக்கொள்ள இஷ்டப்படவில்லை. இதுபற்றிக் கண்டறிய, கலந்து பேச, விளக்கமுரைக்க, அமெரிக்க சர்க்காரின் பிரதிநிதிகள் இருவர் இங்கு வர ஏற்பாடாகி இருக்கிறது! இந்தக் கலந்து பேசும் காரியங்கள் முடிந்து, முதலாளிகள் மனத்தில் திருப்தி ஏற்பட்ட பிறு உலக வியாபார முறை எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பத பற்றி முடிவு செய்ய, இலண்டனில் 1947 ஜனவரியில் மாநாடு நடைபெற்றுப் பிறகு அமெரிக்காவில் மாநாடு நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது.

இந்தச் சங்கிலித் தொடரில், கை ராட்டினத்துக்கு எங்கே இடம் என்பது பற்றிக் கவலைப்படாமல், இழையில் இராமனைக் காண்கிறேன் என்று கூறிவிட்டால் போதுமா? இப்படிப்பட்ட பலமான, முன்னேற்பாடானா, திட்டத்தை, நெசவுத் தொழிலுக்கும் வேறுபல தொழிலுக்கும் தயாரித்துக் கொண்டு வடநாடு இருக்கும்போது, இருக்கும் ஆலைகளையும் மூடிவிடுகிறேனென்று கூறுகிறாரே நமது மாகாண முதலமைச்சர், சரியா? வடநாட்டுக்கு, தென்னாட்டை மார்க்கட்டாக்குவது தவிர வேறென்ன நடக்கும்? நமது நாட்டுச் செல்வம் நசித்து, தொழில் குன்றி, பாட்டாளிகள் வேலையின்றித் திண்டாடுவதற்குத் தானே இது கொண்டு போய்விடும். இது முறையா? என்பதை நோய் முற்றா முன்பு நேயர்கள் யோசிக்க வேண்டுகிறோம்.

இன்று வட நாடு அடைந்துள்ள முற்போக்கு சாமான்ய மானதென்றோ, அது நமது நாட்டை ஒன்றும் செய்துவிடாதென்றோ எண்ணிடுவது, வெறும் ஏமாளித்தனமாக மட்டும் முடியாது. ஒரு 150 ஆண்டு சீமையின் பிடியில் சிக்கிச் சீரழிந்ததோடு சிரமம் முடிவது போய், மேலும் ஓர் நூற்றாண்டு, வடநாட்டு முதலாளிகளின் பிடியில் நாம் சிக்கிச் சீரழிய வேண்டு நேரிடும்.

ஆர்ஷனின் படை பலமும், ஆசோகனின் அன்புப் போதனையும், அக்பரின் சமரசமும் சாதிக்காமல் போன காரியத்தை - அதாவது வடநாட்டுக்குத் தென்னாடு அடிமைப்படுவதை - மார்வார் குஜராத் வியபாரிகள் சாதிக்க வழி பிறந்திருக்கிறது. அடிமைச் சங்கிலி, தயாராகிவிட்டது. நாம் அதிலே கட்டுண்டுவிட்டால், தளை ஆறுபடுவது இந்தத் தலை முறையில் இல்லை. இதனைக் காங்கிரசில் உள்ள தமிழர் உணரவேண்டுகிறோம்.

ஆலைகள் என்றால், சாமான்யமான இலாபமல்ல - பணத்தைச் செப்படி வித்தை செய்யும் இடம். போடுகிற முதல தொகையைப் போல, பன்மடங்கு அதிகமாக இலாபத்தைப் பெறும் இடமாகிவிட்டது. ஒரு சில வடநாட்டு ஆலைகளின் இலாபக் கணக்கு மட்டும் காட்டுகிறோம். நிலைமையை உணர்த்த.

ஆலைகள், கதையில் வரும் ஆலாவுதீன் தீபம் போன்ற இலபத்தைத் தருவதைக் கவனியுங்கள். 1944 ஆம் இண்டிலும், 1945லும் சில மில்கள் பெற்ற இலாபமே கீழே தருகிறோம்.

இந்தூர் ஹ÷கும் சந்த் மில் : 36,85,228-11-0 இந்த இலாபம், செலவீனம் நீக்கி, வரி நீக்கி, மெஷின்கள் தேய்வுக்கு ஈடு செய்வதற்காகத் தனியாகச் சேர்த்து வைக்கப்படும் பணம் நீக்கிக் கட்டடம் மெஷின் ரிப்பேர் நீக்கிக்கிடைத்தது. இந்த இலாபத்திலே, ஆலையின் மானேஜிங் ஏஜண்டுக்குக் கிடைத்த பகுதி சாமான்யமல்ல! 7,87,483-8-6. இது போன்ற கொழுத்த தொகை வரக்கூடியபடி, முதலாளிகள் பல கம்பெனிகளில் மானேஜிங் ஏஜண்டுகளாக உள்ளனர். இந்தூர்-மால்வா யுனைடெட் மில் பெற்ற இலாபம் 21,76,810-12-3 கல்யாண்மல் மில்லின் இலாபம் 18,09,871-7-1 நந்தலால் பண்டாரி மில்லுக்குக் கிடைத்த இலாபம் 30,35,159-14-0 ஆமதாபாத், நியூ கமர்ஷியல் மில்லின் இலாபம் 27,85,094-01-11. ஆமதாபாத் விக்ரம் மில்லின் இலாபம் 17,59,600 11-4. பம்பாய் டாட்டா மில்லின் இலாபம் 9,86,006-0-0 பம்பாய் மதுசூதன் மில்லின் இலாபம் 50,63,538-3-11. ஆமதாபாத் ஆம்பிகா மில் இலாபம் 7,83,415-13-8.

இந்த இலாபமெல்லாம் ஒரு வருஷத்துக்கு கணக்கு - மில் ஆரம்ப முதல் அல்ல!

முன்பே கூறினோம். இது நிகர இலாபம் - மொத்த இலாபம் கணக்குப் பார்த்தால் பிரமித்துப் போய்விட நேரிடும், ஊதாரணமாக இந்த ஆம்பிகா மில்லின் மொத்த இலாபத்தில், நிகரம் இந்த 7,83,415 ரூபாய். இதுவுமின்றி இலாபத்தில் 3,00,000 மெஷின் தேய்வுக்காகத் தனியாக வைத்துள்ளனர். அந்த வருஷ இலாபத்தில் எடுத்து இதன்றி, வரிச் செலவுக்காக 25,75,000 ரூபாய் எடுத்தனர். இதுபோலத்தான் ஒவ்வொரு மில் கணக்கும்.

ஆரியோதயா மில் ஆமதாபாத், பெற்ற இலாபம்ட 25,70,110-3-8 பம்பாய், டான்மில் இலாபம் 10,72,264-10-7. பம்பாய், நியூ யூனியன் மில் இலாபம் 28,26,560-6-2. பம்பாய் சாசூன் மில் இலாபம் 32,51,121-0-2. பம்பாய் டேவிட் மில் இலாபம் 18,36,110-0-0. இந்தூர், ராஜ்குமார் மில் இலாபம் 7,62,097-0-0. பம்பாய் ஆட்வான்ஸ் மில் இலாபம் 6,33,343-0-0. மேயிர் மில் இலாபம் 11,86,755-0-0.

இப்படி இலாபம், கோடிக்கணக்காகும், மொத்த ஆலைகளின் எடுகளைப் பார்த்தால், இவ்வளவு இலாபமும், வடநாட்டுக்கு - நமது நாட்டுப்பணம்! நமது நாரிமணிகளின் சேலையும் நமது இடையும் கோடிக்கணக்கான பணத்தைக் குவிக்கின்றன. வடநாட்டிலே, நமக்கென்று, உள்ள மில்களோ சொற்பம் - அவைகளின் பெரும்பான்மையானவை. நூல் நூற்கும் இடங்களேயாகும். இடை நெய்யும் ஆலைகளிலே, சில வெள்ளைக்காரனுக்குச் சொந்தம் இஹய்க் ஈ போல, ஹார்வி மில் போல. இப்போ நம் நாட்டு நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆலையே வேண்டாம் என்று காந்தியார் ஆறவுரை கூறுவதைப் பக்தியோடு கேட்பவர் யார், பாசாங்கு செய்துகொண்டு, பணத்தை ஆலை மூலம் மலைப்போல் குவித்துக் கொள்பவர்கள் யார் என்று கூறுங்கள் - கூற வேண்டாம் - யோசியுங்கள்.

வடநாட்டு முதலாளித்துவ முறைக்கு ஈடு, இங்குக் காட்டவே முடியாது. ஒரு ஊதாரணம், வடநாட்டு முதலாளி எப்படி வளருகிறான். இலாப வேட்டையிலே எப்படி எப்படி ஈடுபடுகிறான் என்பதை விளக்க.

சேட் கோவிந்தராம் சேக் சேரியா ஏன்றோர் முதலாளி, 1946, மே 22ந் தேதி காலமானார். மரணப் படுக்கையில் இருக்கும்போது, 50 இலட்சம் ரூபாய் தர்மத்தொகை கொடுத்தார். நல்ல மனமுடையவரின் வரலாறே கூறுகிறோம் - கண்டிக்க அல்ல - நம்மவர்கள் வடநாட்டிலே வளரும் முதலாளித்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.

சேட் கோவிந்தராமுக்கு என்ன தொழில்? ஒன்றல்ல, இரண்டல்ல, அவருடைய வாழ்க்கையைக் கவனியுங்கள்.

1932 இல் இவர் பருத்தி ஜின்னிங் பாக்டரி அமைத்தார். இலாபம் கிடைத்தது. ஐதோ கிடைத்த இலாபத்தைக் கொண்டு “ராமா கிருஷ்ணா” என்று இருந்துவிட்டாரா? இல்லை!

இந்தூர் மால்வா மில்லுக்கு மானேஜிங் ஏஜண்டானார். பழைய தொழிலுடன் புதிய வேலை! இரட்டை இலாபம். மானேஜிங் ஏஜண்டுக்கு இலாபம் வரும் அளவு, முன்னாலே குறித்திருக்கிறோம். இந்த அளவோடு நின்றாரா? இல்லை!

1937இல், பம்பாயில் கரீம்பாய் மில்லை விலைக்கு வாங்கினார். கொடுத்த தொகை எவ்வளவு? 12 1/2 இலட்சம்! எது? இலாபத்தொகை! எதற்கு வாங்கினார்? மேற்கொண்டு இலாபம் பெற 1941இல் ஒக்கிய மாகாணத்தில், பிஷ்வான் சர்க்கரை ஆலை ஆரம்பித்தார். அதே இண்டில் கண்டேஷ் பிரதேசத்தில், நிலக்கடலையிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையைத் துவக்கினார்.

1943இல் ஆகர்வால் கம்பெனியாருடன் சேர்ந்து கூட்டாகப் பம்பாயில் பெரிய ஆலையான சாசூன் மில்லை விலைக்கு வாங்கினார்.

இடையே, வேலையோடு வேலையாக, 1932இல் பாப்நான் என்ற இடத்தில் ஒரு சர்க்கரை ஆலை, சிந்து மாகாண ஹைதராபாத்தில் பருத்திக் கொட்டையிலிரந்து எண்ணெய் எடுக்கும் ஆலை, இவைகளையும் ஆரம்பித்தார்.

இவ்வளவு இலாப வேட்டையாடினார். பெரும்பாலான ஆலைகளில், குடும்பமே, மிகப் பெரும்பான்மையான பங்குதாரராக இருந்தது. இப்படி வளருகிறது முதலாளித்துவம் அங்கு!

டால்மியா என்னும் முதலாளியை, நம்மவர்கள் பார்த்ததில்லை - பெயர் பிரசித்தம் எவ்வளவோ தொழில் இருந்தும் என்ன! இப்போ, ஒரு கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து 8 கம்பெனிகளை விலைககு வாங்கினார். விமானக் கம்பெனி, ரசாயனக் கம்பெனி போன்றவைகள், சேலத்தில் கிடைக்கும் “பாக்சைட்” என்ற கனிப்பொருளை அலுமினியத் தொழிலுக்குப் பயன்படுத்த, அமெரிக்காவிலுள்ள கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள டால்மியா முயற்சிக்கிறாராம்! சேலம் வாசிகள்கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. தங்கள பூமிக்கடியிலே, வடநாட்டானையும் அமெரிக்கனையும் வாழ வைக்கும் செல்வம் இருக்கிறது என்ற சூட்சமம்.

ராம்பூர் ஏன்றோர் வடநாட்டு சமஸ்நானம், அங்குச் சகலவித தொழிற்சாலையும் டால்மியா கம்பெனிக்கு! ராம்பூர் சர்க்கரை ஆலை, ரஜா சர்க்கரை ஆலை, ராம்பூர் சோள மில், ராம்பூர் என்ஜினியரிங் தொழிற்சாலை இப்படிச் சகலமும், ராம்பூருக்கு ஒரு ராஜாகூட இருக்கிறார்! இருந்து!! டால்மியாவிடம் என்ன செய்ய முடியும்? ஜீவநாடி அவ்வளவும் டால்மியாவிடம்!

இப்படிப் பார்க்குமிடமெங்கும், எந்தத் தொழிலிலும் தமது பிடியைப் பலப்படுத்திக் கொண்டுள்ளனர் - மேலும் மேலும் இப்போது முன்னைவிட அதிக ஜரூராக!!

இந்தமுறை மட்டுமல்ல, வடநாட்டு முதலாளிகள், இப்போது வெளிநாட்டு முதலாளிகளுக்கு ஏஜண்டுகள். ஒரு ஊதாரணம், ஆமதாபத்தில், சுவஸ்திக் நெசவாலை ஒன்று இருக்கிறது. அந்த மில், பிரான்சில் உள்ள டாய்ரே லிலி கம்பெனிக்கு, இத்தாலியில் உள்ள மானிபாத்தூரா ஈடாலியானா கம்பெனிக்கு, பிரிட்டனில் உள்ள லண்ட் கம்பெனிக்கு, ஜான்நெயிலர் கம்பெனிக்கு, இத்தாலியிலுள்ள மார்ட்டினோ ஸ்கால்ஜியா கம்பெனிக்கு, இப்படிப் பல வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சோல் ஐஜென்டுகள்!

இவ்வணம் வளருகிறது முதலாளித்துவம். ஆலைகள் பெருகுகின்றன. இலாபம் கோடி கோடியாகச் சேருகிறது. இந்நிலையில், ஏன் இங்கு நாம், ஆலைகள் அமைக்கக்கூடாது! அது இலகாலம் என்றால், எப்படி அந்த இலகாலத்தை வடநாடு மட்டும் தாங்கிக்கொண்டது. உண்மையிலே விஷமானால், அதனை எங்கும் இருக்கவிடாமல் தடுக்க ஏன் காந்தியார் முயற்சிக்கவில்லை! அந்த விஷத்தை மேலும் விருத்தி செய்ய, பம்பாய்த் திட்டம், பண்டிதர் ஏற்றுக்கொண்ட தேசியத் தொழில் திட்டம், ஆகியவைகள் அமுல் நடத்தப்படுவதைத் தடுக்க என்ன முயற்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது?

கிராமியத் தொழிலும், கதருமதான் இருக்க வேண்டும் என்றால் காந்தியார் செய்யவேண்டிய முதல் காரியம், விஞ்ஞான யந்திர சாதனங்களைக் கொண்ட பெரிய தொழிற்சாலைகள், ஏற்கெனவே உள்ளவற்றை மூடும்படி இடைக்கால சர்க்காருக்கு உத்திரவிடவேண்டும். செய்வாரா? இல்லையெனில், ஏன் நமக்கு மட்டும இந்த உபதேசம்? நமது மாகாணத்து முதலமைச்சர் மட்டும் ஏன் ஆலைகள் ஏற்படுத்தமாட்டேன் என்று உறுதி கூறவேண்டும்?

வடநாடு, முதலாளித்துவத்தில் மூழ்கிவிட்டது. தென்னாடு அதற்கு மார்கட்டாகிவிட்டது. தென்னாடு நிரந்தரமாக வடநாட்டுக்கு மார்கட்டாக இருக்கவேண்டுமானால், இங்குத் தொழிற்சாலை, யந்திர விஞ்ஞான சாதனம் கொண்ட தொழிற்சாலை வளரக்கூடாது. வீட்டுக்கொரு ராட்டைத் திட்டம் இருந்தால்தான், ஆளுக்கொரு வேட்டி கிடைப்பதும் ஆரிதாகி, ஆமதாபாத்துக்கு காவடி தூக்கி, நமது பணத்தை அங்கு மூட்டை கட்டி அனுப்ப முடியும்! இதுதான் விளைவாகுமே யொழிய வேறென்ன நடக்கும்?

பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஒன்று கூறுகிறோம். இங்கு ஆலைகளே வேண்டாம். சகலமும் கைத்தறி மூலமே தயாரித்துக் கொள்வோம். ஆனால், வடநாட்டு ஆலைத் துணி இங்கு வரஅனுமதிக்கமாட்டோம் என்று பிரகாசம்காருதான் கூறமுடியுமா, காந்தியார்தான் அத்தகைய திட்டத்தை முன்னின்று நடத்த இசைவாரா?

ஆலையூரில் வாசம் செய்துகொண்டு, இருபதாண்டுக் கதர்ப் பிரச்சாரத்துப் பிறகு, 407 நெசவாலைகள் முளைத்து இருப்பதைக் கண்ணால் கண்டு, வடநாட்டு முதலாளிகள் இதனை மேலும் வளர்க்க வழி வகை செய்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கும் காந்தியார், இங்கு, நமக்கு வீட்டுக்கொரு ராட்டை இருக்கட்டும் என்று உபதேசிப்பது நியாயம் என்று கூறுகிறீர்களா?

ஆலைகளின் மூலம் தனிப்பட்ட ஆட்களே இலாபத்தை ஆடைகிறார்களே, ஆகவேதான் காந்தியார் அதனை இலகாலம் என்கிறார் என்று கூறுவர். சரி! ஏன் இந்த ஆலைகளையும் இனி ஏற்பட வேண்டிய ஆலைகளையும், தனிநபர்களிடம் விடாமல், சர்க்கார் ஏற்று நடத்தக்கூடாது?

ஜெமீன்தாரர்களிடமிருந்து அவர்கள் பூர்வீகச் சொத்து - பாத்தியதை உள்ளது - என்று என்ன காரணம் காட்டினாலும் - ஏழைகள் வாழ வேண்டும். இகையால் ஜெமீன்தாரிமுறை ஒழிந்தாக வேண்டும் என்று கூறுவது போல, தனிப்பட்டவர்களின் ஆலைகள் கூடாது, சகலமும் சர்க்காருக்கு - அதாவது மக்களுக்கு இருக்கவேண்டும் என்று ஏன் சட்டம் செய்யக்கூடாது? எந்தக் கட்சியும் தடை செய்யாதே! யாரும் குறைகூறாரே! முதலாளிகளின் எதிர்ப்பு தானே இருக்கும்! அது என்ன, ஏகாதிபத்தியத்தைவிட பலமுடையதா! இருக்கட்டுமே! அதன் கோரப் பசிக்குப் பலியாகவும் எத்தனையோ பகத் சிங்குகள் உண்டே! காந்தியார் ஏன், இந்தக் காரியத்தைத் துவக்கக்கூடாது?

தனிப்பட்டவர்கள் இலாபம் பெறமுடிகிறது - உண்மை - அதற்காக ஆலையே கூடாது - என்று கூறுவதா - ஏன் ஆலைகளை அரசாங்கம், ரயில் தபால் போலத் தனி இலாக்கா இருக்கக்கூடாது என்று கேட்கிறோம்.

உணவு, உடை எனும் அடிப்படைத் தேவையை, இலாபச் சூதாட்டத்தில் விடாமல் சர்க்கார் தனது பொறுப்பாக்கிக் கொள்வதே முறையாகும். அதைச் செய்யாமல், ஆலையே வேண்டாம் என்று பேசுவது.

பேரறிஞர் அண்ணா
அதனையும் ஆலையூரில் இருந்தபடி பேசுவது, அதிலும் ஆலை அரசர்களை அவர்கள் இஷ்டப்படி கொழுக்க விட்டுவிட்டுப் பேசுவது அவர்கள் மேலும் பலமான திட்டம் வகுத்துக் கொண்டிருக்க, அதுபற்றிக் கவனியாமல் தென்னாட்டுக்கு உபதேசிப்பது என்றால் பொருள் என்ன, நெஞ்சில் கைவைத்துக் கூறக் கேட்டுக்கொள்கிறோம், இதன் விளைவு என்ன ஆகும்! ராட்டினம் இடவேண்டுமானால், காந்தியார் அங்குள்ள ஆலைகளை மூடட்டும் முதலில்! அங்கு ஆலை, இங்கு ராட்டை என்றால் பிரகாசம் இணங்கலாம், மூடிவிடுகிறேன் என்று கூடக் கூறிவிடலாம். சிந்திக்கும் காங்கிரஸ் தமிழர்களைக் கேட்கிறோம். உங்கட்குச் சம்மதமா இது? அங்குச் செல்வம், இங்கு வறுமை! அங்கு விஞ்ஞானம், இங்கு வைதிகம்! அங்கு ஆலை, இங்கு ராட்டை! அங்கு முதலாளி, இங்கு பாட்டாளி! அங்கு சுகம், இங்குத் துக்கம்! - இந்த நிலையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மூலப் பிரச்சனையைக் கவனிக்காமல், பிரகாசம் காரு பேச்சை நம்பி திருப்பூரில், ஆலைகள் புதிதாக இனித் துவக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேசின மந்திரி ராகவமேனன் மீது மட்டும், எடுகள் மோதி என்ன பயன்? அவர்மீது குற்றம் சாட்டி என்ன பிரயோஜனம்? அதோ, ஆலையூரார் உபதேசம் செய்கிறார். பக்தர் பிரகாசம் ததாஸ்து கூறுகிறார் - அதைக் கவனியுங்கள் - சூட்சமம் அங்கே இருக்கிறது!
(திராவிட நாடு 6-10-46)