அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


ஆவலும் ஆர்வமும்
(27.04.1968 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணா அளித்த வானொலிப் பேட்டி)

செய்தியாளர்: தங்கள் உடல்நலத்தையும் பிற நலத்தையும் கேட்டிறிவது முறை. தமிழ் மக்களும் இதுபற்றி அறிய ஆவலாக இருப்பார்கள். தங்கள் உடல் நலம் எவ்வாறிருக்கிறது?

அண்ணா: சென்னையிலிருந்து புறப்படும்போதே நல்ல உடல்நலத்துடனே புறப்பட்டேன். இப்போது நலமாகவே உள்ளேன்.

செய்தியாளர்: யேல் பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு எற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அண்ணா: நிகழ்ச்சிகள் மன எழுச்சி ஊட்டும் வகையிலும் உள்ளத்திற்கு உவகை அளிக்ககும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி அவை ஒழுங்காக நடந்து வருகின்றன.

செய்தியாளர்: சப் திட்டத்தில் பெரிய பிரமுகர்கள் வரிசையில் தாங்கள் அழைக்கப்பட்டது குறித்துத் தமிழ்நாடு பெருமையடைகிறது. இங்கு வந்தது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அண்ணா: நான் இந்தியாவிலிருந்து வந்தேன் என்பதால், இங்குள்ள மாணவர்கள் நம் நாட்டின் நிலை பற்றி அறிய ஆர்வங்காட்டினார்கள். இந்தியாவின் தொழில் முன்னேற்றம், சாதிக்கட்டுப்பாடு போன்ற பல வகைப்பட்ட பொருள்கள் குறித்து அறிய ஆவல் காட்டினர். தமிழ்நாட்டைப் பற்றி நிரம்பத் தகவல்களைக் கேட்டறிந்தனர். இவற்றை அறிய அவர்கள் காட்டிய ஆர்வங்கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தியாளர்: இங்கு இந்தியாவைப் பற்றி அறிய ஆர்வம் அதிகம் இருந்ததா? தமிழகத்தைப் பற்றி அறிய ஆர்வம் அதிகமாயிருந்ததா?

அண்ணா: இந்தியாவின் பொது முன்னேற்றத்தைப் பற்றி அறியவும், ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றி அறியவும் ஆர்வங் காட்டினர்.
தமிழக வரலாறு, தமிழர் கலாச்சாரம், தமிழ்மொழி ஆகியவை குறித்தும் அறிய ஆவலுடன் இருந்தனர். தமிழ் நாட்டில் காங்கிரஸ் அல்லாத கட்சி அரசு அமைத்திருப்பதைப் பற்றி விளக்கமாக அறிய விரும்பினர்.

செய்தியாளர்: அண்மையில் தொலைக்காட்சி வானொலிப் பேட்டிகளில் எத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன?

அண்ணா: எல்லோரும் ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றியும் உணவுநிலை குறித்தும் மிக அக்கறையுடன் கேட்டனர். சென்ற ஆண்டு இந்தியாவின் உணவுநிலை சீர்கேடு அடைந்தது. அதை அவர்கள் அறிந்திருந்ததால், இந்த ஆண்டு எப்படி இருக்கிறது என்று அறிய ஆவல் கொண்டுள்ளனர்.
வேளாண்மையில் புதிய திருப்பங்கள் பற்றியும் அவை எந்த அளவு வெற்றிபெற்றன என்பது பற்றியும் அறிய விரும்பினார்கள்.
வெளிநாட்டுக் கொள்கை பற்றி விரிவாகக் கேட்கவில்லை என்றாலும் வியட்நாம் குறித்துக் கேட்டார்கள்.
நான் திமுகவானாலும் வெளிநாட்டுக கொள்கையில் இந்திய அரசின் கொள்கைகளுக்கு பொதுவான ஒப்புதலைத் திமுக தந்திருக்கிறது என்று எடுத்துக் கூறினேன்.

செய்தியாளர்: திமுக அரசு அமைத்தது எவ்வாறு என்று கூறினீர்கள்?

அண்ணா: திமுக அரசு அமைந்திருப்பது வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்றுமில்லை. 1957-ல் 15 இடங்களில் வெற்றிபெற்றோம். எங்கள் பணியைப் பாராட்டிய மக்கள் இரண்டாவது தேர்தலில் 50 இடங்களை அளித்தார்கள். 1967-ல் 130-க்கு மேற்பட்ட இடங்களை வழங்கினார்கள். ஆகையால், இந்த வளர்ச்சி படிப்படியாக ஆய்ந்து பார்த்து மக்கள் அளித்த ஆதரவால் ஏற்பட்டது. சட்டென்று குருட்டாம்போக்காக ஏற்பட்டது அல்ல எனக்கூறுகிறேன்.

செய்தியாளர்: இங்குள்ள மாணவர் போக்கு எவ்வாறு உள்ளது?

அண்ணா: உலகில் பல நாடுகளிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களைப் பாதிக்கக் கூடியவற்றில் அக்கறை காட்டுவது வரவேற்கத் தக்கதாகும்.
கிளர்ச்சி செய்யும்பொழுது அவர்களிடம் அக்கறை காட்டுவது போலவே மற்ற நேரங்களில் அவர்களை விட்டுவிடக்வடாது. அவர்கள் மனப்போக்கை அறிந்து கொள்ள வேண்டும்.
கறுப்பின மாணவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கவேண்டும் என மாணவர்கள் இங்குக் கிளர்ச்சி நடத்தியதாகச் செய்தித்தாளில் இப்போதுதான் ஒரு செய்தி படித்தேன். இதுபோன்ற இன்றியமையாத கிளர்ச்சியில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. இத்தகைய பிரச்சினைகள் காலத்தால் ஏற்படுபவை. அவற்றை ஒதுக்கிவிட முடியாது.
இங்கு அமெரிக்க மாணவர்கள் இந்திய மாணவர்களுடன் தோழமை உணர்ச்சியுடன் பழகுகிறார்கள். இது கண்டு பூரிப்படைந்தேன்.

செய்தியாளர்: நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்தவின் ஓர் எழுத்தாளர், ஒரு கலைஞர் என்னும் முறையில் தங்கள் எண்ணங்களைக் கூறுங்கள்.

அண்ணா: நயாகரா நீர்வீழ்ச்சி கனடாநாட்டுப் பகுதியின் எழில்தோட்டமாக அமைந்துள்ளது. அமெரிக்கப் பகுதியில் தொழில் வளம் பெருகியுள்ளது. கனடா நாட்டுப் பகுதியிலிருந்து பார்ப்பது எழில்மிகுந்தது. தொடர்ந்து இது பற்றிப் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் குறிப்பிடலாம் என இருக்கிறேன்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் நயாகரா நீர்வீழ்ச்சி மிக அழகுடனும் எழுச்சி தருவதாகவும் மிகப் பெரியதாகவும் இருந்தது என்பேன்.

செய்தியாளர்: தாங்கள் ஒரு பால் பண்ணையைப் பார்வையிட்டீர்களே? அம்முறைகளைத் தமிழ்நாட்டில் புகுத்த இயலுமா?

அண்ணா: அமெரிக்காவில் கண்ட வியத்தகு அமைப்புகளைத் தமிழகத்தில் புகுத்த முடியாது எனக் கருதுகிறேன். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மேய்ச்சலுக்காக ஒதுக்கும் அளவு தமிழ்நாட்டில் நிலம் இல்லை என்றாலும் அறிவியல் துறையில் பல பாடங்களை நாம் பெற இயலும்.

பாப்லோநகர் அருகிலுள்ள ஒரு வேளாண் குடும்பத்துடன் நான் தங்கி இருந்தேன். அந்த இடம் அமைதி சூழ்ந்திருந்தது. சற்றிலும் சிறிய குன்றுகளும் பசுமையான வயல்களும் வயல்களுக்குத் தேவையான இயந்திரங்களும் இயந்திரங்களைச் செலுத்த உழவர்களும் அவர்களிடமுள்ள பொது அறிவும் பெருமைப் படத் தக்கதாய் இருந்தன.

நம் நாட்டிலும் படித்தவர்கள் வேளாண்மை, பால்பண்ணை போன்றவற்றை நடத்துவதில் ஈடுபடவேண்டும். புதிய முறைகளை ஆய்ந்து பார்க்கவேண்டும்.

(27.04.1968 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணா அளித்த வானொலிப் பேட்டி)