மிகி: உங்கள்
பிரச்சினைகளின் நிலைமை இப்போது எவ்வாறு உள்ளது?
அண்ணா: இந்தப் பிரச்சினைகள்
எல்லாம் நீண்ட நெடுங்காலப் பிரச்சினைகள். அவற்றுடனே நாங்கள்
வாழ்ந்து வருகிறோம். அவற்றையும் நாங்கள் வெற்றிகொள்வோம்.
உங்கள் ஜப்பான் நாடு எவ்வளவோ எரிமலைகளின் சீற்றங்களுக்கிடையிலும்
எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது!
நீங்கள் பெற்றிருக்கும் எரிமலைகளைப் போலவே நாங்களும் மனித
எரிமலைகளைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் எப்படி எரிமலைகளோடு
பழக்கப்பட்டுச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறீர்களோ
அப்படியே நாங்களும் சமாளிப்போம்.
மிகி:
இந்தியாவின் மொழிச் சிக்கல் பற்றி என்ன கூற இருக்கிறீர்கள்?
அண்ணா: இந்தியா ஒரு மாபெரும்
நாடு. அது ஜப்பானைப் போலல்லாமல் பல்வேறு மொழிகளைப் பேசும்
மக்கள் அங்கு இருக்கின்றனர். இந்த வேற்றுமைகளுக்கிடையிலும்
ஒற்றுமை கண்டு வருகிறோம்.
பல்வேறு மொழிகளைப் பேசும் நாங்கள் ஒற்றுமையாக வாழக் கற்றிருக்கிறோம்.
சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அவற்றைச் சமாளித்து
வருகிறோம்.
மிகி: இந்தியாவின்
எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
அண்ணா: இந்தியாவின் எதிர்காலத்தைப்
பற்றி எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் பெரிய
பிரச்சினைகள் இருந்தபோதிலும் அவற்றைச் சமாளித்து முன்னேறிக்
கொண்டிருக்கிறோம்.
மிகி:
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எவ்வாறு செயற்படுகிறது?
அண்ணா: இந்தியாவில் குடும்பக்
கட்டுப்பாட்டுத்திட்டம் அழுத்தமாக வேரூன்றிவிட்டது. இத்துறையில்
தமிழ்நாடும் மராட்டிய மாநிலமும் முன்னேறி வருகின்றன.
மிகி:
ஜப்பானியக் குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம் அளவுக்கு மீறிய
வெற்றி பெற்றுவிட்டதால், கவலைப்படவேண்டியுள்ளது. எனவே குடும்பக்
கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது. குடும்பக்
கட்டுப்பாடு காரணமாக ஜபபானில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அண்ணா: சேலம் உருக்காலைத்
திட்டத்தைத் தவிர, வேறு திட்டவட்டமான எந்தப் பிரச்சினை குறித்தும்
நான் டோக்கியோவில் பேசவில்லை.
(08.05.1968 அன்று ஜப்பான்
வெளிநாட்டு அமைச்சர் திரு. மியோடு அண்ணா கலந்துரையாடியது)