அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


அரசியலறிவும் உணர்வும்
(14.02.1967 அன்று உலகப்புகழ் பெற்ற வாஷிங்டன் போஸ்ட் என்னும் இதழுக்கு அளித்த பேட்டி)

கேள்வி: இந்த முறை நடக்கும் தேர்தலில்(1967) உங்கள் கழகம் அதிக வலிவுறப்போகிறது என்று அனைவருமே கூறிகின்றனர். அது எந்த அளவுக்கு என்று கூற முடியுமா?

அண்ணா: ஆட்சி அமைக்கும் அளவுக்கு.

கேள்வி: உங்கள் கூட்டணியில் தோழமைக் கட்சிகள் நிறைய இருக்கின்றன. இவ்வளவையும் வைத்துக் கொண்டு எப்படி அமைச்சரவை அமைப்பீர்கள்?

அண்ணா: கட்சி அடிப்படையில் பிரநிதித்துவத்தை வற்புறுத்தாமல், திமுக அமைச்சரவைக்கு ஆதரவு தரமுடியும் என்று எல்லா நண்பர்களும் உறுதி தெரிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் பிரச்சினைகள் எவையேனும் கிளம்புமா?

அண்ணா: நிச்சயம் எழா. கூட்டுணர்வு நிரம்ப இருக்கிறது.

கேள்வி: நீங்கள், எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தீர்கள்?

அண்ணா: காங்கிரசின்பால் மக்கள் கொண்ட அதிருப்தி. அதைப் போக்கி நிறைவு செய்யும் வகையில் இருக்கும் எங்கள் பணிகள்.

கேள்வி: உணவு நிலைமை இப்படி மாறக்காரணமென்ன?

அண்ணா: உணவுத் துறையில் வகையற்ற திட்டங்கள் போடப்பட்டதுதான்.

கேள்வி: காமராஜரின் காங்கிரஸ் கட்சி சொந்த மாநிலத்திலேயே பதவி இழந்தால், அவரது அனைத்திந்திய நிலைமை என்ன ஆகும்?

அண்ணா: காங்கிரசையே மாற்றியமைக்க முனைவார்.

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எனன வழங்குவீர்கள்? எதைச் செய்வீர்கள்?

அண்ணா: நேர்மையான ஆட்சி.

கேள்வி: மொழிப் பிரச்சினையைப் பற்றி கூற முடியுமா?

அண்ணா: ஆட்சிமொழியாக இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். இதற்காக அரசியல் சட்டம் உரிய முறையில் திருத்தியமைக்கப்படவேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் இநதித் திணிப்புக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் மிகத் தெளிவாக உணர்ந்துவிட்டார்கள். ஆனால், இங்கே உள்ள அமைச்சரவை இந்த உண்மை நிலையைப் புதுதில்லி அரசுக்கு உணர்த்தவில்லை.
நாங்கள் வெற்றிபெற்றால், ஆட்சியின் மூலம் மக்கள் பிரதிநிகள் என்னும் வகையில் மொழிப் பிரச்சினையை உரிய வகையில் புதுதில்லிக்கு உணர்த்துவோம்.
மாநிலத்தின் தேவைகளுக்காகவும் மைய அரசுடன் அவ்வப்போது போராடி வேண்டியனவற்றைப் பெறுவோம்.

கேள்வி: உணவு அமைச்சரின் தேசிய உணவுத் திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அண்ணா: அவரது திட்டம் உண்மையில் ஆக்க முறையான திட்டமல்ல. மாநிலங்களின் எந்த முதலமைச்சரும் தங்கள் உபரியைத் தேசியக் கொள்முதலுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை.
தென்னக மாநிலங்களைப் பொறுத்தவரையில் நான்கும் தங்கள் தேவைகளைத் தாங்களே போக்கிக் கொள்ள முடியும்.

கேள்வி: அப்படியானால் மற்ற மாநிலத்தின் தேவை என்ன ஆகும்?

அண்ணா: இவைகளில் பெரும்பகுதி அரிசியை உணவாகக் கொண்டிருக்கவில்லை.

கேள்வி: இலங்கை அகதிகளைப் பற்றி...

அண்ணா: இதுபற்றி இலங்கை-இந்திய அரசுகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை நாங்கள் கண்டித்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் நேரு கூறிய இந்தியக் குடி வழியினரான இலங்கைக் குடிமக்கள் என்னும் கொள்கையைத்தான் மதிக்கிறோம்.

கேள்வி: அகதிகளுக்குத் தரப்பட்டுள்ள நிவாணங்கள் உங்களுக்கு மனநிறைவை அளிக்கின்றனவா?

அண்ணா: நிச்சயம் இல்லை. சிறுகடைகள் வைத்துக் கொள்வதற்காக என்று அதற்கும் போதாத தொகைகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த அகதிகள் எல்லாம் மலைத் தோட்டங்களில் வேலை செய்து பயிற்சி பெற்றவர்கள். அவர்களை அத்தகைய வேலைக்குத்தான் பயன்படுத்த முடியும். நான்கு மாநிலங்களும் ஒருமித்துச் செயலாற்றினால் இதற்கு ஒரு வழி கிடைக்கும்.

கேள்வி: அன்றாடம் நீங்கள் மக்களைச் சந்திக்கிறீர்கள். அவர்களிடம் என்ன பேசுகிறீர்கள்?

அண்ணா: ஜனநாயகம் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். மக்களுக்கு அரசியல் அறிவும் உணர்வும் உண்டாக்குகிறோம்.

(14.02.1967 அன்று உலகப்புகழ் பெற்ற வாஷிங்டன் போஸ்ட் என்னும் இதழுக்கு அளித்த பேட்டி மூலம் நம்நாடு 17.02.1967)