அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


பர்மா அரிசி
(12.04.1967 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி)

பர்மாவிலிருந்து அகதிகளாக வெளியேறி வந்துள்ளவர்களுக்குப் பர்மா அரசு கொடுக்கவேண்டிய இழப்பீட்டைப் பெரும்பாலும் அரிசியாகவே கொடுக்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு மைய அரசிடம் வற்புறுத்தி வந்திருக்கிறேன்.

பர்மா அரசு நிலங்களை அரசுடைமை ஆக்கிய வகையில் ரூ.50கோடியும் நில உடைமைகளையும் நிறுவனங்களையும் அரசுடைமையாக்கிய வகையில் ரூ.50 கோடியும் இழப்பீடாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

பர்மா தன் அரிசி உற்பத்தியை மேலும் பெருக்கிக் கொள்ள இந்தியாவிலிருந்து வேளாண்மைத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தருவித்துக் கொள்ள எம்.ஏ.ஓ.மூலம் பர்மிய அரசு அணுகலாம்.

எங்கெங்கு உணவுத் தானிய உற்பத்தியைப் பெருக்க முடியுமோ அங்கெல்லாம் உற்பத்தி செய்ய ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும். பர்மாவில்கூட விதை விதைக்குங் காலங்களிலும் அறுவடைக்காலங்களிலும் வடக்கே இருந்து தொழிலாளர்கள் வருவதாக அறிந்தேன்.

ஒன்றுமே கிடைக்காது திண்டாடுகின்ற நிலையில் கூடுதல் விலை கொடுத்தேனும் பர்மா அரிசியை வாங்குவது மேல்.

(12.04.1967 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை)