தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரிபோடுவதன்
மூலம் மாநில அரசு நிதிவசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் ஏற்கனவே
உச்சகட்டத்தை எட்டியாகிவிட்டது. ஆகவே, புதிய வரிகள் மூலம்
மாநில அரசின் நிதி ஆதாரங்களைத் தேடுவதென்பது இயலாத செயல்.
மைய அரசு எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க
உத்தேசித்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது
குறிப்பிட்ட மாநிலத்தின் பின்தங்கிய நிலையை வைத்துத் தலைகட்டுக்கு
இத்தனை வரி போடப்பட்டுள்ளது என்னும் அளவை வைத்தா, அந்தந்த
மாநிலத்துப் பெருநகரங்களின் தேவைகளை வைத்தா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
வறட்சிப் பகுதிகள் விஷயத்திலும் பஞ்ச நிவாரணப் பணிகளிலும்
தனிக்கவனம் செலுத்த வற்புறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் நான்காம் திட்டத்தில் துவக்க இருக்கிற தொழில்கள்
பற்றி விரைவில் முடிவாகும்.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துதல் கால்வாய்களை
விரிவுபடுத்துதல், தஞ்சை மாவட்ட வடிகால் அமைப்பைச் சீரமைத்தல்,
குளத்துபபாசனம் உள்ள பகுதிகளில் குளங்களைத் தூரெடுத்தல்,
சென்னை நகரக் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்த்தல், விரிவான
சென்னை மாநகர அமைப்புத்திட்டத்தை மேற்கொள்ளுதல், கைத்தறி
மற்றும் மூடிய மில்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்,
இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வருவோரது மறுவாழ்வுக்கான
திட்டங்களை அமலாக்குதல், படித்து வேலையில்லாது இருப்போர்
பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகிய பணிகளே தமிழக அரசு
நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறைவேற்ற விரும்புகிறது.
(1988 செப்டம்பரில் சென்னையில்
திட்டக்குழுத் துணைத்தலைவர் விரிவாகக் கலந்துரையாடியபின்
செய்தியாளர்களிடம் அண்ணா கூறியவை)