அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


நல்லவர் விரும்பும் தொடர்பு
(மலேசிய வானொலிக்கு அண்ணா அளித்த பேட்டி 17.07.1965)

வினா: தலைமையமைச்சர் துங்குவைப்பற்றி...

அண்ணா: இந்தியா மீது சீனர் படையெடுத்தபோது. மலேசிய நாட்டின் தலமையமைச்சர் துங்கு அவர்கள் ஆதரவு அளித்ததும் நிதியளித்ததும் இந்திய வரலாற்றில் என்றும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது.
இந்திய மக்கள் உங்கள் துங்குவின் பெருமையையும் அரசியல் பெருந்தன்மையையும் நன்கு அறிந்துள்ளவர்கள்.

வினா: மலேசியாவிற்குத் தாங்கள் வந்ததன் நோக்கம்?

அண்ணா: மலேசிய நாட்டின் அரசியல்முறை, இங்கு வாழும் மக்கள் நிலை ஆகியவற்றை அறியவே மாணவன் என்னும் முறையில் நான் இங்கு வந்துள்ளேன்.
மலேசியத் தலைமையமைச்சர் துங்குவைக் காண ஆவல் கொண்டுள்ளேன். சிறந்த தலைவரான அவரைக் காணப்பெற்றால் பேருவகை கொள்வேன்.

வினா: நாடகங்களைப் பற்றித் தங்கள் கருத்து...

அண்ணா: சமூகத்தில் ஊழல்களை எடுத்துக் காட்டிச் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தும் நாடகங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
இந்தியாவில் புரட்சி வசனங்களைக் கொண்ட நாடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
திறமை வாய்ந்த எழுத்தாளர்களால் எழுதப்படும் நாடகங்கள் இந்தியாவில் எல்லா மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ் எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.

வினா: நாடகங்களைப் பற்றித் தங்கள் இளமைக்கால நினைவுகள் யாவை?

அண்ணா: நான் இளம்வயதில் பல நாடகங்களில் நடித்துள்ளேன். நடிப்பின்போது உண்மையாக ஏற்கும் பாத்திரமாகவே மாறி நடிப்பேன்(துரைராஜ், காகப்பட்டர்)

வினா: தற்பொழுது தங்கள் நாடக ஈடுபாடு எவ்வாறு உள்ளது?

அண்ணா: இப்போது 24 மணிநேரமும் அரசியலில் மூழ்கி இருப்பதால், நாடகத்தில் நான் கவனம் செலுத்த முடியவில்லை.

வினா: எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கும்?

அண்ணா: உலகிலேயே பல இலக்கியங்களைப் பெற்றுள்ளதும், பழமையானதும், மிக்க செல்வாக்குள்ளதுமான மொழி தமிழ். எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும்.
கற்பனை வளம்பெற்ற திறமைவாய்ந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை இப்போது பெருகிவருகிறது.
அவர்களின் மூலம் தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சியுடன் ஒளிவிடும்.

(மலேசிய வானொலிக்கு அண்ணா அளித்த பேட்டி 17.07.1965)