அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


நிர்வாகமும் கட்சித் தலையீடும்
(13.07.1968 அன்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அண்ணா அளித்த பேட்டி)

வினா: அரசு நிர்வாகத்தின் அன்றாட அலுவல்களில் திமுக தலையிடுகிறது என்னும் சுப்பிரமணியம் குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில் என்ன?

விடை: அரசு நிர்வாகத்தின் அன்றாட அலுவல்களில் திமுக தலையிடுகிறது என்று சி.சுப்பிரமணியம் கூறுகின்றார். அது உண்மைக்குப் புறம்பானது. எந்தக் கட்சிக்கும் குறிப்பாகத் திமுக-வி்ற்கு நிர்வாகத்தினர் எவ்வகைச் சலுகையும் காட்டக் கூடாது என்று அரசு கண்டிப்பான கட்டளை இட்டிருக்கிறது.

வினா: திமுக சாதனைகள் குறித்து குறை கூறுவது பற்றித் தங்கள் கருத்தென்ன?

விடை: தமிழக அரசு செய்துள்ள சாதனைகள் அதன் 15 மாத ஆட்சிக் காலத்துக்குள் வரையறைப்படுத்திக் குறைப்பட்டுக் கொள்வது பொருத்தமற்றது. அரசாங்கத்தின் செயல்முறைகளை ஆய்வு செயவதற்கு 15 மாத காலம் (1967 மார்ச் முதல் 1968 மே வரை) மிகவும் குறுகிய காலமாகும். எனவே, சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் திமுக அமைச்சரவை மீது கூறுகின்ற குற்றச்சாட்டுகள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவை அல்ல.

வினா: பி்ன் எவ்வாறு குற்றச்சாட்டுகளைக் கூறுவது?

விடை: திமுக அமைச்சரவை மீது குறைப்பட்டுக் கொள்ளும் சி. சுப்பிரமணியம் அண்மையில் குறை ஏதாவது இருக்குமானால், இன்ன வகையில் குறை உள்ளது என்று அதனைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும். அப்போதுதான் குறையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளால் எவ்விதப்பயனும் ஏற்படாது.
திமுக நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்குமானால், தமிழகத்தில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி என்னும் வகையில் காங்கிரஸ் கட்சி அந்தக் குறைபாட்டினைக் குறிப்பிட்டு, அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதுதான் கடமை. அப்போதுதான் உண்மையாகவே ஏதேனும் குறைபாடு இருக்குமானால், அதனை விரைந்து நீக்க முடியும்.

வினா: திமுகவிற்குக் கொள்கையோ திட்டமோ இல்லை என சி.சுப்பிரமணியம் கூறுகின்றார். அதுபற்றித் தங்கள் கருத்தென்ன?

விடை: அப்படி என்றால் காங்கிரசுக்கும் கொள்கையோ திட்டமோ இல்லை என்றுதான் ஆகிறது. காங்கிரசின் கொள்கை ஜனநாயக சோஷலிசமா அல்லது வேறு எதுவுமா என்பது பற்றித் திட்டவட்டமான வரைவு வேண்டும் என்று காங்கிரசிற்குள்ளேயே ஒரு பகுதியினர் இன்னுஞ் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் காங்கிரசுக்குக் கொள்கையும் திட்டமும் இல்லை என்பது மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது.

(13.07.1968 அன்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அண்ணா அளித்த பேட்டி)