அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


பிரச்சினைகள் பல
(06.04.1967 -ல் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)

உணவு நிலைமை:
தமிழக அரசு தன்னுடைய உணவுத் தேவை இலக்கில் 40 சதவீத அளவுக்கு கொள்முதல் செய்திருக்கிறது. சிக்கல்கள் எவையுமின்றிக் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இலக்கை அடைந்த உடன் தாலுக்காக்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

உணவுப் பங்கீடு:
இப்பொழுது வழங்கப்பட்டு வரும் உணவுப் பங்கீட்டு அளவைக் குறைக்கக் கூடாது

பர்மா அரிசி:
பர்மா அரசு தரவேண்டிய பணத்திற்குப் பதிலாக அரிசியைக் கேட்டுப் பெறவேண்டும் என்று மைய அரசை வலியுறுத்துவோம். பர்மா அரசு செட்டியார் சமூகத்திற்குப் பர்மாவிலுள்ள நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.200 வீதமாக இழப்பீட்டுத் தொகை தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தின் ஓராண்டு வருமானமாகும் இது. பர்மா அரசு தரவேண்டியன முழுதும் கணக்கிட்டால் ஏறத்தாழ ரூ.15 கோடியாகும். பர்மா அரைசிடமிருந்து இதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டிற்கு அரிசி கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.

அகவிலைப்படி:
மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்குத் தேவைப்படும் அதிகப்படியான தொகையை மைய அரசு வழங்கவேண்டும். ரூபாய் மதிப்புக் குறைப்புக்குப் பின் பணவீக்கம் அதிகரித்ததற்கும் விலை உயர்வுக்கும் மைய அரசே காரணமாதலால், அதுதன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

மதுவிலக்கு:
மதுவிலக்கை அமல்படுத்துவதால் தமிழ்நாட்டு அரசுக்கு ரூ.30 கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் மதுவிலுக்கு அமல்படுத்தப்படும்பொழுது பெங்களூரிலும் புதுச்சேரியிலும் அது கிடையாது. குடிப்பவர்கள் அங்குச் செல்வது கடினமல்ல.

மாறுதல்:
இப்பொழுது மைய, மாநில அரசுகளின் உறவுமுறையில் மாறுதல் தேவை. மாநில மைய அரசுகளின் அதிகாரத்தை பற்றிப் பொதுபட்டியல் வகுப்பதை நான் விரும்பவில்லை.

கோப்பு எரிப்பு:
முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் இந்தி எதிர்ப்புக் கோப்புகளை அழித்ததற்குச் சில அதிகாரிகள் ஆலோசனை காரணமாக இருக்கலாம். ஒரு முதலமைச்சர் கோப்பை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

(06.04.1967 -ல் தில்லியில செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)