அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


தவறு செய்தபோது திருத்துங்கள்
(07.03.1967 அன்று சென்னையில் வானொலி நிலையச் செய்தியாளருக்கு அளித்த பேட்டி)

வானொலிச் செய்தியாளர்: முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி எதிர்பாராத வெற்றியா?

அண்ணா: வாழ்த்துக்கு நன்றி. பொதுமக்களிடம் நல்ல தெளிவு இருககிறது. கட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்னும் உணர்வு அவர்களிடம் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆயினும், அந்த உணர்வை இவ்வளவு தெளிவாகக் காட்டி இருப்பது எனக்குக்கூட வியப்பாகவே இருக்கிறது?

வினா: திமுகவின் வெற்றிக்குக் காரணமென்ன?

அண்ணா: திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தேர்தல் அறிக்கையையும் அவர்கள் ஆதரிப்பதாகத்தான் கொள்ள வேண்டும்.

வினா: ஆட்சியில் அமர்ந்ததும் உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

அண்ணா: உடனடியான பிரச்சினைகளுக்கு உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது உணவுப் பிரச்சினை. எனவே, உணவுப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

வினா: இந்தத் தேர்தல் நேர்மையாக நடந்தது என்று சொல்வீர்கள் அல்லவா?

அண்ணா: தமிழ்நாட்டு மக்கள் தெளிவுக்குப் பெயர்பெற்றவர்கள். சில இடங்களில் ஆளுங்கட்சியினர் தவறான முயற்சிகளில் ஈடுபட்டார்கள் என்ற புகார் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் தரக்குறைவான பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள் அவ்வளவே.

வினா: தில்லியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டிருப்பதால், நாட்டின் பொது முன்னேற்றத்திற்குத் திமுக பங்கு என்ன?

அண்ணா: நாட்டின் முன்னேற்றத்திற்குத் திமுகவினால் எந்த இடையூறும் ஏற்படாது. ஒரு பகுதி தாழ்வடைய விடமாட்டோம். எந்தப் பிரிவினருக்கும் எந்த வழியிலும் ஏற்றத்தாழ்வின்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்குங் கொள்கைகளை திமுக கடைபிடிக்கும்.

வினா: முதலமைச்சர் ஆகியிருக்கும் நீங்கள் மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன?

அண்ணா: செய்தி விடுப்பதைவிட என்னுடைய வேண்டுகோளை வானொலி மூலம் மக்களுக்குப் பரப்புங்கள். பொதுமக்கள் என்னோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்குத் தயக்கம் ஏற்படும்பொழுது உற்சாகங் கொடுங்கள். தவறு செய்தபோது திருத்துங்கள். தடுமாற்றம் ஏற்படும்பொழுது உற்சாகங் கொடுங்கள். மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.

(07.03.1967 அன்று சென்னையில் வானொலி நிலையச் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியவை)