அமெரிக்க நாட்டு மக்கள் நம் நாட்டு
மக்களிடத்தில தோழமை பூண்டிருக்கிறார்கள்.
வாஷிங்டனிலுள்ள கலைக்கண்காட்சியைச் சிறிது நேரந்தான் பார்வையிட
முடிந்தது. உலகிலிருந்து அருமையான பல்பொருள்களை அங்கு சேகரித்து
வைத்திருக்கிறார்கள். இதைக் காண ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு
பகுதியிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.
வாஷிங்கடனி்ல் ஆப்ரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டபோது,
ஆபிரகாம் லிங்கன் பற்றிப் படித்து அறிந்திருந்த பல்வேறு
எண்ணங்கள் இதயத்தில் கனிந்தெழுந்தன.
ஜனநாயகத்திற்காகப் பிற்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்ட மாபெரும்
தலைவரை ஒரு வெறியன் கொன்ற நிகழ்ச்சி, நம் நாட்டிலும் இப்படிப்பட்ட
துயர நிகழ்ச்சி நடந்ததை நினைவூட்டியது. லிங்கன் இறந்துபட்டாலும்
அவர் மூலமாக அமெரிக்க மக்களிடம் ஜனநாயகம் பசுமையாக இருக்கிறது.
போர்ட் தியேட்டர் அரங்கில் ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டது
நமக்குத் தெரியும். ஆனால், அங்குக் கண்டது இதுவரை காணாத
காட்சி. நாடகக் கொட்டகையைத் திருத்தி லிங்கன் நினைவாலயத்தை
அடிவாரத்தில் அழகாக அமைத்திருக்கிறார்கள்.
ஆபிரகாம் லிங்கன் எந்த இடத்தில் நாடகம் பார்த்தார், எங்கு
உட்கார்ந்திருந்தார், கொலையாளி எப்படி வந்தான், எப்படித்
தப்பித்தான், எந்த வழிகாகச் சென்றான் என்பதை நாடக அரங்கப்
பணியாளர்கள் விளக்கியபோது கண்களில் கண்ணீர் மல்கியது. கேட்கின்ற
நம்முடைய நெஞ்சம் நெகிழ்ந்தது. எப்படிப்பட்ட தலைவர் எப்படிப்பட்ட
முடிவை அடைந்தார் என்பதை எண்ணியபோது வருத்தம் மேலிட்டது.
நான் சென்றபோது சேக்குவியரின் நாடகமொன்று காட்டப்பட்டது.
அமெரி்க்க மக்கள் இதனைக் காண வந்தார்கள். வெறும் நாடகம்
பார்க்க வரவில்லை. ஒப்புயர்வற்ற தலைவரின் நினைவுச் சின்னத்தைக்
காணுகிறோம் என்னும் புனித உணர்ச்சியோடு வந்தார்கள்.
வாஷிங்கடனில் தங்கி இருந்தபொழுது அமெரிக்க வாழ்க்கையின்
பல்வேறு துறையினரைக் கண்டு கலந்துரையாடினேன். இந்தியத் தூதரகத்தைச்
சேர்ந்ததோரைக் கண்டு அளவளாவினேன். நல்ல கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன்.
நியுயார்க், யேல், வாஷிங்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று
வந்ததில் மன எழுச்சி கொண்டுள்ளேன்.
தமிழ் நாட்டார் உட்பட இந்தியர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள்
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில்
தாங்கள் பெற்றுவரும் திறமைகளை நம் நாட்டுக்குப் பயன்படுத்த
மெத்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
(28.04.1968 அன்று வாஷிங்டன்
வானொலிப் பேட்டியில் அண்ணா வழங்கிய பாராட்டுரை)