அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் - 1962

(1962ல் அண்ணா அவர்களும் மூதறிஞர் இராஜாஜி அவர்களும் ஒரு கூட்டணியை அமைத்தனர். அந்தக் கூட்டணிக்கு அரசியலிலிருந்து விலகியிருந்த உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர்களில் மூத்தவரான சர் ஏ.இராமசாமி முதலியார் ஆதரவளித்து 1962 பிப்ரவரி 22ஆம் தேதி காஞ்சியில் அண்ணாவுக்கு ஆதரவாகப் பேசினார். இராஜாஜி அவர்களும் அன்று பேசினார். அப்போது அண்ணா அவர்கள் ஆற்றிய
சிறந்த சொற்பொழிவு இது.)

சென்னையிலே மற்றொரு கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளவேண்டியிருப்பதினால்(இடையில் ஒருவர் - காஞ்சி நகர சுதந்திரக் கட்சியின் சார்பில் இம்மலர்மாலையை அணிவிக்கிறேன்) நான் பேசியான பிறகு அவர்கள் மிகச்சுருக்கமாகப் பேசி முடித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக நானும் என்னுடைய பேச்சை சற்று சுருக்கமாக்கி அவருடைய நீண்ட உரையை எதிர்பார்க்கின்றேன். நீண்ட உரை நாட்டுக்கு இன்றையதினம் தேவைப்படுகிறது. ஏனென்றால் நெடுங்காலமாக மூண்டுபோயிருக்கின்ற கேடுவார்களை நீக்குவதற்கு நீண்ட உரையும் தேவை அடிக்கடி உரைகளும் தேவை தொடர்ந்து உரைகளும் தேவை. ஆகையினால்தான் அவர்கள் பேசுதற்கு இடமளிக்கின்ற வகையில்(இடையில், நல்ல தமிழறிவும் தேவை. அது இல்லை என்று இராஜாஜி அவர்கள் சொன்னவுடன் அண்ணா சிரிக்கிறார்) நான் சில கருத்துக்களை மட்டும் இன்றையதினம் எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.

காஞ்சிபுரத்துத் தொகுதி வாக்காளர்களுக்கு நான் எடுத்துச் சொல்லவேண்டியவைகளையெல்லாம் கிட்டத்தட்ட நூறு கூட்டங்களிலும் எடுத்துச்சொல்லியிருக்கிறேன். இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை எழுதிக்காட்டுவதற்கு ஒன்றுமில்லை கொடுப்பதற்கு என்னிடத்திலே பணமில்லை. ஆகையினாலே நான் இதுவரையிலே எடுத்துச் சொன்னவைகளை புரிந்துகொண்டவர்களும் அறிந்துகொண்டவர்களும் ஏற்றுக்கொண்டவர்களும் நாங்கள் இதுவரையிலே எழுதிக்காட்டியவைகளை உள்ளத்திலே ஏற்றிக்கொண்டவர்களும் எங்களுக்குத் துணையாக நிற்பார்களானால் இந்தத் தேர்தலிலே நானும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் வெற்றிபெறுவதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு அறிவித்துக்கொள்கிறேன்.

ஆனால் நாமெல்லாம் இங்கே கூட்டத்திலே கூடி கைதட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் காங்கிரஸகாரர்கள் கதவைத் தட்டி கையை நீட்டி பணத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்தான் நான் இன்றைய கூட்டம்கூட மிக அதிகநேரம் நடக்கக்கூடாது. நானும் ஒரு ஒருமணிநேரம் இரண்டுமணிநேரம் பேசி இந்த நேரத்தை அதிகம் ஆக்கக்கூடாது என்று கருதுகிறேன். ஏனென்றால் கதிர் முற்றியிருக்கிற நேரமிது. அறுவடைக்குத் தயாராக வயலிருக்கிற நேரம். இந்த நேரத்திலே வயலுக்கு காவலில்லையென்றால் நாட்டு எலியும் வீட்டு எலியும் மோட்டு எலியும் மற்ற எலியும் கதிர்களைக் கொத்திக்கொண்டு போய்விடும். ஆகையினால் இனறிரவு நாளை இரவு வயல் பாதுகாக்கப்படவேண்டிய நேரம். ஆகையினால் வயலுக்கு உரியவர்கள் உழவுத்தொழிலிலே ஈடுபட்டவர்கள் வயலைப் பாதுகாப்பதைப்போல் இந்தத் தொகுதியிலே இருக்கிற வாக்காளர்களை பாதுகாக்கவேண்டிய பெரும்பொறுப்பை நம்முடைய ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பணிவன்போடு நான் விரும்பிவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றை மட்டும் முதலிலே நான் குறிப்பிட்டுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இது ஏதோ கூடாநட்பு என்று நானும் இராஜகோபாலாச்சாரியார் அவர்களும் இராமசாமி முதலியாரும் மூவரும் ஒன்றாக ஒரே மேடையிலே இருப்பதைக் கூடாநட்பு என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் வேறுபட்டிருந்த நேரத்தில் நாங்கள் நட்பாக இருக்கவேண்டும் என்று இவர்கள்தான் வலியுறுத்தி வலியுறுத்தி சொல்லிக்கொண்டுவந்தார்கள். இராஜகோபாலாச்சாரியார் எப்படிப்பட்ட அறிவில் சிறந்தவர் அவரிடத்திலே அண்ணாதுரை அதிகம் நெருங்கிப் பழகாததால்தான் அவரைப்பற்றி ஒன்றும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறான். நெருங்கிப் பழகு நெருங்கிப் பழகு என்று அவர்களே என்னை பல வருஷங்கள் சொன்னார்கள். எனக்கு நெருங்கி பழகுவதற்குக் கிடைத்திருக்கிற சந்தர்ப்பம் மிகச் சமீபக் காலத்திற்கு முன்னாலேதான் ஏற்பட்டது. இன்னமும் என்னை அவர் பரிபூர்ணமாக அறிந்துகொள்ளத்தக்க அளவுக்கு எங்களுக்குள்ளே நட்புகூட இன்னும் ஏற்படவில்லை. அல்லது இன்னும் சொல்லப்போனால் நட்பு என்ற வார்த்தைகூட அவருடைய வயதுக்கும் என்னுடைய வயதுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கிறபொழுது அதை நட்பு என்றுகூட சொல்வதற்கில்லை. அவர் அறிந்தவைகளை அவர் நாட்டுக்கு அறிவிக்கவேண்டியவைகளை என்னிடத்திலே சொல்லிவிட்டுப்போகிற வயது அவருக்கும் கேட்டுக்கொள்ளவேண்டிய வயது எனக்கும் இருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கின்றீர்கள்.

அதைப்போலவே சர்.ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் இந்தக் கூடா நட்பு என்று காங்கிரஸ் காரர்கள் சொன்னதற்கு பல உதாரணங்களைச் சொன்னார்கள். ஒரிசாவைக் காட்டினார்கள் கேரளத்தைக் காட்டினார்கள். நான் இவைகள் எல்லாவற்றையும்விட காங்கிரசையேப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியிலே இன்றையதினம் இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்களா? காங்கிரஸ் கட்சியிலே இன்றையதினம் இருப்பவர்கள் காங்கிரஸ் கொள்கைக்குப் பாதுகாவலர்களா? காங்கிரஸ் கட்சியிலே இன்றையதினம் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காப்பாற்றியவர்களா? காங்கிரஸ் கட்சியிலே இன்றையதினம் இருப்பவர்கள் காங்கிரசிடத்திலே நட்புக்கொள்கிறார்கள் என்றால் எதனாலே நட்புக்கொள்கிறார்கள். தண்டியாத்திரை நடைபெற்ற நேரத்தில் அவர்கள் தூரத்திலே ஒதுங்கியிருந்தார்கள். நானும் இராமசாமி முதலியாரும் தண்டியாத்திரை நேரத்திலேயும் காங்கிரசை எதிர்த்தோம். இன்றையதினமும் எதிர்க்கிறோம். அன்றையதினம் காங்கிரசை நாங்கள் எதிர்த்து இன்றையதினமும் எதிர்க்கிறோம் என்றால் அன்றையதினம் காங்கிரசை எதிர்த்தோம் என்பதாலே கல்லடி படுவோம் என்று தெரிந்தும் எதிர்த்தோம். காரணம் என்ன என்றால் எங்களுடைய உள்ளத்திலே காங்கிரஸ் கட்சியினுடைய செல்வாக்கை ஒருசேர குறிப்பிட்டு அவர்கள் உபயோகப்படுத்துவார்கள் என்ற அச்சம் இருந்ததாலே நாங்கள் அந்த நேரத்தைல் அதை ஆதரிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி கள்ளுக்கடை மறியல் நடத்திய நேரத்தில் கள்ளுக்கடை நடத்திக்கொண்டிருந்தவர்கள் இன்றையதினம் காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டிருக்கிறாகள் என்பதை நம்முடைய ஆச்சாரியார் அவர்கள் அறிவாரோ இல்லையோ என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு தொகுதியிலே காங்கிரஸ் அபேட்சகராக நின்ற ஒருவர் காங்கிரஸ் கட்சி கள்ளுக்கடை மறியல் செய்த நேரத்தில் கிட்டத்தட்ட வேதாரண்ய சத்யாகிரக நேரத்தில் என்று கருதுகிறேன்; அந்த நேரத்திலே கள்ளுக்கடை நடத்திக்கொண்டிருந்தவர் கள்ளுக்கடை மறியலிலே ஈடுபட்டக் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அடித்தது போதாதென்று தம்முடைய அடியாட்களை விட்டு அடித்தார் என்பது மட்டுமல்ல கள்ளுக்கடையிலேயிருந்த ஒருவரை ஆவேசம் வந்தவரைப்போல ஆடச்செய்து என்பேரிலே மதுரைவீரன் வந்துவிட்டான். மதுரைவீரனுக்கு கள்தான் பூஜைப்பொருள்; அந்தக்கள்ளை எப்படி நீங்கள் கெடுக்கலாம் என்று மதுரை வீரன் ஆவேசம் வந்து அடிப்பதாக அடியாளைவிட்டு அடித்தவர் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். அப்படிப்பட்டக் கள்ளுக்கடை நடத்தியவர் தஞ்சைத் தரணியிலே, அறிவு மிகுந்த தஞ்சைத் தரணியிலே, பண்பு மிகுந்தத் தஞ்சைத் தரணியிலே காங்கிரசை வளர்த்தத் தஞ்சைத் தரணியிலே வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகம் நடந்த தஞ்சைத் தரணியிலே வேதாரண்ய உப்புச் சத்தியாகிரக நேரத்தில் ஒற்றையடிப் பாதையிலெல்லாம் எந்த இராஜகோபாலாச்சாரியார் நடந்து சென்றாரோ அப்படிப்பட்ட தஞ்சைத் தரணியிலே அந்த மாஜி கள்ளுக்கடைக்காரர் காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்திவைக்கப்பட்டார் என்றால் மானமுள்ள காங்கிரஸ்காரர்கள் தன்மானத்தை மதிக்கின்ற காங்கிரஸ்காரர்கள் இன்னமும் அதிலே ஒட்டிக்கொண்டிருப்பதென்றால் அது உண்மையிலேயே காங்கிரசுக்கும் அவர்களுக்கும் சேர்த்து அது இழுக்கே தவிர அதுதான் கூடாநட்பு, இது தேடாத நட்பு. இதுநாங்கள் யாரும் ஒருவரைஒருவர் தேடிக்கொண்டு வாருங்கள் நாமெல்லாம் நட்பாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் என்று தேடிப் பெற்றுக்கொண்ட நட்பு அல்ல. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை முறியடித்தாகவேண்டும் என்றத் தம்முடைய நீண்ட பயணத்தில் அவர் நடந்து வந்துகொண்டிருக்கிற நேரத்தில் ஒரு திருப்பத்திலே என்னைச் சந்திக்கிறார். இன்னொரு திருப்பத்திலே இராமசாமி முதலியாரை சந்திக்கிறார். நாங்கள் மூவருமாகச் சேர்ந்து அந்தப் பயணத்திலே தொடர்ந்து நடக்க இருக்கிறோம். இந்தத் தேர்தலோடு அந்தப் பயணம் என்று யாராவது தப்புக் கணக்குப் போட்டால் அருள்கூர்ந்து அந்தத் தப்புக் கணக்கை மறுத்துச் சொல்லுங்கள்.

இதுஒன்றும் பட்டத்திற்காக பதவிக்காக சட்டசபையிலே உட்காருவதற்காக ஓட்டு வேட்டைக்காக அமைக்கப்பட்ட நட்பு அல்ல. ஏற்பட்டிருக்கின்ற இது காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதற்கு யார்யாரெல்லாம் கிளம்பியிருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாகும். யார் யார் கிளம்பியிருக்கிறார்கள் என்பதிலேதான் விசித்திரமே இருக்கிறது டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் சொல்கிறார். அது டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் சொல்வதிலே இருக்கிற விசித்திரத்தைவிட இதிலே ஒரு விசித்திரமும் இல்லை என்பதை அவரேகூட மிக நன்றாக அறிவார்கள்.சோப்பும் சீப்பும் விற்றுக்கொண்டிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் இன்றையதினம் காங்கிரசை விற்க ஆரம்பித்ததிலேயிருந்து அவர் நல்ல வியாபாரி என்பதும் காங்கிரஸ் இன்றையதினம் விலைபோகாத சரக்காகிவிட்டதால் நல்ல வியாபாரியிடத்திலே கொடுத்து ஊர்ஊராகச் சென்று கூவிக்கூவி விற்றுவிட்டு வாருங்கள் என்று டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை அனுப்பியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. அவர் நல்ல அதிர்ஷ்டசாலி. திருச்செந்தூர் முருகன் அருளைப் பெற்று அவர்கள் நாட்டில் இன்றையதினம் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து நான் சொல்லுவேன் நாங்கள் இன்றையதினம் ஈடுபட்டிருப்பது ஓட்டுக்காக மட்டுமல்ல, இந்த நாட்டிலே காங்கிரஸ் எதேச்சதிகாரம் வீழ்த்தப்பட்டாலொழிய ஐந்து வருடத்துக்கொரு தடவை தேர்தலே வேண்டாம் என்று சட்டம் செய்துவிட்டால்கூட நான் அதை ஆதரிப்பேன்.

எதற்காக ஐந்து வருடங்களுக்கொரு தடவை தேர்தலென்று வைப்பது? ஐந்து கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவாகிறது சர்க்கார் தரப்பிலேயிருந்து. பொதுமக்கள் தரப்பிலேயிருந்து அதைவிட நாலு மடங்கு ஐந்து மடங்கு அதிகப் பணம் செலவாகின்றது. எத்தனை ஊர்களிலே தகாறாறுகள். அண்ணன் தம்பிகளுக்குள்ளே சண்டை, மாமன் மைத்துனனுக்கு மனமாச்சரியம், தாய்க்கும் மகளுக்கும் விரோதம், மாமியாருக்கும் மருமகளுக்கும் வழக்கமாக இருக்கிற சண்டையோடு சண்டையாக இந்தச் சண்டையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. இவ்வளவு பெரிய இக்கட்டுகளையெல்லாம் ஏற்படுத்திவைத்து இந்தத் தேர்தலிலே எந்தக் கட்சிக்கும் ஓட்டளிக்காதீர்கள் காங்கிரசுக்கே ஓட்டளியுங்கள் சொல்வதற்காகவா இது? டாக்டரை அழைத்துக்கொண்டு வந்து நாடி பார்க்கச் சொல்லி இருக்கிற வியாதிகளின் கூறுகளையெல்லாம் சொல்லியான பிறகு அவர் கண்ரப்பைத் திறந்து பார்த்து இதற்கு மருந்துகொடுத்துப் பிரயோஜனமில்லை என்று சொல்லிவிட்டுப்போய் அதற்கும் பீஸ் கேட்டால் அந்த டாக்டர் எவ்வளவு கல்நெஞ்சக்காரரோ அவ்வளவு கல்நெஞ்சம் மிகுந்தவர்கள் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கவும் ஓட்டுச்சாவடி கட்டவும் ஓட்டுச்சாவடிக்கு அதிகாரிகளை அனுப்பிவைக்கவும் ஆயுதம் தாங்கிய போலீசாரை ஊரெங்கும் நிறுத்திவைக்கவும் இப்படிப்பட்ட செலவுகளுக்காக ஐந்து கோடி ரூபாயை செலவழித்து எந்தக்கட்சியும் தேர்தலுக்கு நிற்கலாம் வாருங்கள்; சுதந்திரக் கட்சியா வாருங்கள்; பிரஜா சோசியலிஸ்டா வாருங்கள்; கம்யூனிஸ்ட் கட்சியா வாருங்கள்; கழகமா வரச்சொல்லுங்கள் என்று எல்லா கட்சியையும் கூவி அழைத்து எல்லோரும் தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்றவுடன் எதிரிலே நின்றுகொண்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சுதந்திரக் கட்சி பயனற்றக் கட்சி. இரண்டு காரணம் சொல்கிறார்கள் சுதந்திரக் கட்சி பயனற்றக் கட்சி என்பதற்கு, அது பல்போன கிழவர்கள் இருக்கிற கட்சி என்ற சுதந்திரக் கட்சியை ஏதோ பண்டித ஜவகர்லால் நேருவுக்கு இப்பொழுது பாலகுமாரப் பருவம் நடப்பதைப்போல எண்ணிக்கொண்டு இதைப் பல்போனக் கிழவர்கள் கட்சி என்று சுதந்திரக் கட்சியைச் சொல்லிவிடுகிறார்கள். இன்னொன்று இது பணக்காரக் கட்சி என்று இதைச் சொல்கிறார்கள். இது உண்மையிலேயே பணக்காரக் கட்சியாக இருந்து இவர்களுடைய நட்பும் எனக்குக் கிடைத்தால் நானல்லவா ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன். நடேச முதலியாரா கொடுத்திருப்பார்? எனக்கென்ன இராஜாஜியிடத்திலே பணம் இருந்தால் கேட்டு வாங்கத் தெரியாதா? அவரை நான் பார்த்தேனே; நான் எவ்வளவு கவலையோடு இருக்கிறேனோ அதைவிட அதிகக் கவலையோடுதான் அவர்கள் இருந்தார்கள். என்னுடைய கவலை அவருக்குத் தெரியக்கூடாது என்பதிலே எனக்குக் கவலை, அவருடைய கவலை எனக்குத் தெரியக்கூடாது என்பதில் அவருக்குக் கவலை. இந்த விதத்திலே இருந்தார்களே தவிர எங்கே பணக்காரக் கட்சியாக இருக்கிறது. இது மட்டும் உள்ளபடி பணக்காரக் கட்சியாக இருந்து என்னிடத்திலே அந்தப் பணமும் கிடைத்திருந்தால்..... சொல்லுவானேன். ஆகையினால் இந்த இரண்டுவிதமான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை.

இதேதான் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சொன்னார்கள். இது பணக்காரக்கட்சி பணக்காரக்கட்சி என்றார்கள். பணக்காரர்களிலே இரண்டு வகை உண்டு. ஒன்று பணத்தை வைத்துக்கொண்டிருப்பவர்கள. இன்னொன்று பணத்தை சம்பாதிப்பவர்கள். பணத்தை சம்பாதிக்கிறவர்கள் எப்பொழுதும் ஆளுங்கட்சியைத்தான் அடுத்துப் பிழைப்பார்கள். பணத்தை வைத்துக்கொண்டிருப்பவர்கள்தான் இஷ்டப்பட்டக் காரியத்திற்குப் பணத்தைக் கொடுத்து பத்தே வருடத்திலே பணத்தைத் தொலைத்துவிட்டு நானும் ஒருநாள் பணக்காரனாக இருந்தவன் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். பணக்காரர்களிலே இரண்டு வகை என்று நான் சொன்னேன். ஒன்று திருக்குளத்தைப்போல் நீர் வற்றாதிருக்கிறவரையில் நீந்தலாம். நீர் வற்றிவிட்டால் பாசி வழுக்கி விழலாம். இன்னொன்று ஆற்றோட்டத்தைப்போல் வருவாய் வந்துகொண்டே இருக்கும். வாய்க்காலை வெட்டி வெட்டி எந்தெந்தப் பக்கத்திற்குத் தேவையோ அந்தந்தப் பக்கத்திற்கு அனுப்பலாம். அப்படிப்பட்டப் பணக்காரர்கள் அத்தனை பேரும் இன்றையதினம் காங்கிரஸ் கட்சியிலே இருக்கிறார்கள். இதிலே பண்டித நேருவுக்கே நேற்று கொஞ்சம் கூச்சம் ஏற்பட்டது. குவாலியர் மகாராணியாருக்காக அவர்கள் பிரச்சாரம் செய்யப்போகிற நேரத்தில் நான் ஒரு மகாராணியாருக்காகப் பேச வந்திருக்கிறேன் என்பதால் தப்பாகக் கருதாதீர்கள். ஏன் கருதப்போகிறார்கள்? ஒரு நாட்டை ஆள்கிற முதல் மந்திரியே இவ்வளவு தவறான வழியிலே போய்விட்ட பிறகு இந்த நாட்டிலே பிறந்தோமே என்பதற்கு வருத்தப்படுவார்களே தவிர வேறு எந்த வகையிலே வருத்தப்ப்டப்போகிறார்கள்.

வாசற்கதவிடுக்கிலே நம்முடைய கைக் கட்டைவிரல் அகப்பட்டுக்கொண்டால் என்ன செய்வோம்? கதவை அடிப்போமா? கட்டைவிரலை நொந்துகொள்வோமா? வலி தாங்கமாட்டாமல் அழுத்திப் பிடித்துக்கொள்வோம். இராஜகோபாலாச்சாரியார் இன்றையதினம் கதவிடுக்கிலே அகப்பட்டுக்கொண்ட கட்டவிரலைப்போல் ஏற்பட்டத் துக்கத்தை அடக்கிக்கொள்ளத்தான் ஊரூராகச் சென்று இந்த வாதங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டுவருகிறார். அவருடைய வேதனையிலேயிலிருந்துதான் கோபம் பிறக்கிறது என்பதை அவர்களே விளக்கிக் காட்டியிருக்கிறார்கள். பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் கேட்கிறார்கள் எதனாலே இவருக்கு கோபம் என்று. இதை ஒவ்வொருவரும் கேட்கிறார்கள். கேட்காத மிருகங்கள்கூட இருக்கின்றன. மாட்டை மிக வேகமாக ஓங்கி அடித்தால் என்னை ஏன் இப்படி என்று கேட்காது. ஒருபக்கத்திலே அது வண்டியை இழுக்கும். இழுப்பதிலே இருந்து புத்தியுள்ள வண்டியோட்டுபவன் தெரிந்துகொள்ளவேண்டும் மாட்டை அதிகமாக அடித்துவிட்டோம் என்று. மக்கள் மாடுகள் அல்ல. ஆகையினால் மனதிலே இருப்பதை எடுத்துச்சொல்கிறார்கள். மனதிலே இருப்பதை எடுத்துச்சொல்கிற நேரத்தில் இத்தனைக் கோபமா என்று எடுத்துச்சொல்வது அர்த்தமற்ற வாதமாகும்.

ஆனால் இராஜகோபாலாச்சாரியார் கோபத்துக்கும் என்னுடைய கோபத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அவருடைய கோபம் இப்படிக் கெட்டுவிட்டதே இதைத் திருத்தவேண்டுமே என்பதிலேயிருந்து பிறக்கின்ற கோபம். எனக்கிருக்கிற கோபம் இப்படிப்பட்ட கெட்டவர்களையெல்லாம் உண்டாக்கிவைத்தீர்களே என்று எனக்கு அவரிடத்திலேயும் சேர்த்து கோபம் வருகின்றது. ஆகையினால் கோபம் யாருக்கு எந்தவகையிலே வந்தாலும் இந்தத் தேர்தலிலே மட்டும் ஒரு நல்ல எதிர்க்கட்சியை உருவாக்க முயன்றால் அவர்கள் மனதிலே மூண்டிருக்கின்ற மமதை எண்ணங்கள் நிச்சயமாக மாறுபட்டுவிடும்.

நான் முன்னாலே எடுத்துச்சொல்லியிருப்பதைப்போல் எவ்வளவு நல்லவர்களானாலும் எவ்வளவு வல்லவர்களானாலும் எவ்வளவு நம்மவர்களானாலும் தொடர்ந்து ஒரே கூட்டம் அல்லது ஒரே கட்சி ஆட்சியிலே இருக்குமானால் அவர்களுக்கு உள்ளத்திலே ஒரு மதமதப்பு ஏற்பட்டுவிடும். கூட்டத்திலே உட்கார்ந்திருக்கிற நீங்கள் ஒரு அரைமணிநேரம் சேர்ந்தார்ப்போல் ஒரே காலை ஒரு பக்கத்திலே மடக்கிவைத்துப் பாருங்கள் உடல் வலிவு பூராவையும் அந்த ஒரே காலிலே போட்டுப் பாருங்கள் காலிலே இருக்கிற இரத்த ஓட்டம் தடைபடுகிறது. மதமதப்பு ஏற்பட்டுவிடுகிறது. காலை எடுத்து கையாலே நீவிவிட்டால்தான் மதமதப்புப் போகிறது. ஒரு அரைமணிநேரம் ஒரே காலின்பேரிலே உடலின் பாரம் ஏற்பட்டால் மதமதப்பு வருகிறதென்றால் தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எல்லா ஆட்சிப்பொறுப்பையும் ஒரே கட்சியின் பேரிலே போட்டால் உள்ளத்திலே மதமதப்பு ஏற்படாதா? உடலிலே மதமதப்பு ஏற்பட்டால் தடவிக்கொடுக்கலாம். உள்ளத்திலே மதமதப்பு ஏற்பட்டால் எதைக்கொண்டு தடவுவது? கீழே தள்ளுவதுதான் தடவுவதாகும். கீழே அவர்களை இறக்கினால்தான் அந்த உள்ளத்தினுடைய மதமதப்புப் போகுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் நம்முடைய சர் ஏ.இராமாசாமி முதலியார் அவர்கள் ஆங்கிலப்பதம் அரகன்ஸ் என்ற ஒரு பதத்தை உபயோகித்தார்கள். அவர்கள் அவ்வளவு கடுமையான பதத்தைக்கூட உபயோகிக்கூடிய பழக்கம் இல்லை. ஆனால் ஏன் அவர்கள் அதை உபயோகித்தார்கள் என்றால் அதைவிட குறைவானக் கடினமுள்ள வார்த்தை கிடைக்காததாலே அந்த அளவோடு நிறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன்.

உள்ளத்துக்கு மதமதப்பு ஏற்படுவதைப்போல் மண்டைக்கனம் ஏற்பட்டுவிடுகிறது. மண்டைக் கனம் என்று சொன்னவுடனே சிலபேர் கர்வம் என்று கருதுகிறார்கள். கர்வம் மட்டுமல்ல, நீர்கோர்த்துக்கொண்டால்கூட மண்டைக்கனம் வருகிறது. அதைப்போல அதிகாரப்போதை ஏற ஏற மண்டைக்கனம் வருகிறது. மண்டைக்கனம் ஏற்பட்டுவிட்டால் எதுவும் தெரியாது. ருசி தெரியாது, வாசனை தெரியாது, பேசுவதிலே தெளிவிருக்காது, நல்லது கெட்டது தெரியாது. நீங்கள் நல்லத் தேனைக் கொடுப்பீர்கள். அதை நாக்கிலே தடவுகிறபொழுது என்ன ஒரு மாதிரி இருக்கிறது என்று சொல்வார்களே தவிர சுவை என்று சொல்லமாட்டார்கள். நீர் கோர்த்துக்கொண்டவர்களுக்கு அது தெரியும். எனக்கு அடிக்கடி நீர்கோர்த்துக்கொள்வதாலே எனக்கு அந்தப் பழக்கம் உண்டு. ஆகையினால்தான் நான் இதை சொல்கிறேன். அதைப்போல அதிகாரம் கோர்த்துக்கொள்ள கோர்த்துக்கொள்ள மண்டைக்கனம் ஏற்பட்டுவிடுகிறது. இன்னம் ஒன்று மதமதப்பு உள்ளத்துக்கும் மண்டைக்குக் கனமும் ஏற்படுவதைப்போல் உள்ளத்திலே இரும்பும் கல்லும் ஒருசேர புகுந்துவிடுகிறது. எதையும் நான் மதிக்கமாட்டேன். எவர் வார்த்தையும் துச்சம் என்று மதிப்பேன். ஏனென்றால் எங்களை விட்டால் இந்த நாட்டை ஆள வேறு ஆட்களில்லை. வேறு வக்கில்லை வழியில்லை. ஆகையினால் நாங்கள் போட்டதுதான் சட்டம்; அதிலே ஓட்டைகள் இருக்கலாம்; அதனை இராமசாமி முதலியார் சுட்டிக்காட்டலாம். ஆனால் ஓட்டையாக இருந்தாலும் நாங்கள் போட்டதுதான் சட்டம். ஏனென்றால் வேறு சட்டம் போடுகின்ற அருகதை வேறு யாருக்கும் இல்லை என்று கருதுகிறார்கள். இப்படிப்பட்ட நிலை வளருமானால் ஒரே கட்சி ஆட்சியிலே இருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த ஒரு கட்சிக்குள்ளே நுழைவதற்காக ஸ்ரீரங்கத்திலே வைகுந்த வாசலிலே நுழைவதற்காக பக்தர்கள் இடித்துக்கொண்டு போய் மிதிபட்டுச் சாவதைப்போல் அந்த ஒரு கட்சிக்குள்ளாகவே பலபேர் நுழைந்து காங்கிரஸ் கமிட்டியிலேயே மண்டைஉடைத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகையினால் காங்கிரஸ் கட்சி கெட்டுவிட்டது என்பதையும் அந்தக்கட்சி தொடர்ந்து ஆட்சியிலேயிருந்தால் சர்வாதிகாரம்தான் நடக்கும் என்பதையும் மனதார உணர்ந்தவர்கள் அருள்கூர்ந்து இனியாகிலும் வெளியேறிவிடவேண்டும் என்று பணிவன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன். வெளியேறிய பிறகு அவர்களுக்கு சுதந்திரக் கட்சியின் கொள்கை பிடித்தால் சுதந்திரக்கட்சியின் கொள்கையைப் பரப்பட்டும். முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பிடித்தால் முன்னேற்றக் கழகக் கொள்கையைப் பரப்பட்டும். பிரஜா சோசியலிஸ்ட் கட்சியின் கொள்கை பிடித்தால் பிரஜா சோசியலிஸ்ட் கொள்கையைப் பரப்பட்டும். ஆனால் அந்த இடத்திலே இருந்துகொண்டு அதே கட்சி தொடர்ந்து ஆட்சியிலே இருப்பதற்கு அவர்கள் துணையாக இருக்கவேண்டாம் என்று மட்டும் பணிவன்போடு நான் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இனி நடக்கவேண்டியக் காரியத்திற்கு இடையிலே இருக்கிற நாள் ஒரே நாள். இருபத்தினாலு மணிநேரம். நாளைய தெருவெல்லாம் நீங்கள் சுற்றியலைந்து இரவு படுத்து பொழுதுவிடிந்தால் தேர்தல் ஆரம்பமாகிறது. நானும் டாக்டர் கிருஷ்ணசாமியும் காஞ்சிபுரத்திலே எடுத்துச்சொல்லவேண்டியவைகளை பல கூட்டங்களிலே எடுத்துச்சொல்லியிருக்கிறோம். சில வேளைகளிலே நான் வெட்கங்கூடப்படுகிறேன். எதற்காக நம்மைப்பற்றி காஞ்சிபுரத்திலே நாமே பேசவேண்டும் என்று நானேகூட எண்ணிக்கொள்கிறேன். ஏனென்றால் காஞ்சிபுரம் தொகுதி மக்கள் என்னை இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நன்றாக அறிவார்கள். மற்ற ஊர்களுக்கெல்லாம் நான் மாலையிலே ஆறு மணியிலேயிருந்து பத்து மணிவரையிலே அறிமுகமாகிறவன் மேடையிலே பார்க்கிறார்கள். நீங்கள் என்னை சிறுபிள்ளையாக ஒடி ஆடி விளையாடிய காலத்திலே பார்த்திருக்கிறீர்கள். இங்கே இருக்கிற பள்ளிக்கூடத்திலே படிப்பதற்காக நான் மாணவனாக வந்த பருவத்திலே பார்த்திருக்கிறீர்கள். நான் நம்முடைய மக்கள் மத்தியிலே எளியவர்கள் மத்தியிலே ஊடாடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கின்றீர்கள். என்னிடத்திலே இந்த ஐம்பத்து மூன்று வயதில் ஒருதுளி கேடான காரியம் இருப்பதாகக் கருதினால் அருள்கூர்ந்து அவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டாம். ஆனால் இந்த ஐம்பத்து மூன்று வயதிலே நான் மனதாலும் யாருக்கும் தீங்கிழைத்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வீர்களானால் நான் என்னை ஆதரிக்கவேண்டும் என்று உங்களை மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொள்வதற்காக உள்ளபடி வருத்தப்படுகிறேன். அல்லது நான் சட்டசபைக்குப் போவது நல்லதா கெட்டதா என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்வதென்றால் அதுவும்கூட உண்மையிலேயே வெட்கமாக இருக்கிறது.

உள்ளபடி என்னை எதிர்க்கக்கூடியவர் என்னைவிட அதிகமான நாட்கள் பொதுவாழ்க்கையிலே ஈடுபட்டவராக இருந்து எல்லாவகையான திறமைகளையும் பெற்றவராக ஒருவர் நிற்பாரானால் நான் சொல்லியிருக்கவேண்டும். சென்ற தடவை நான் சொல்லவேண்டி நேரிட்டது. ஏனென்றால் சென்றதடவை என்னை எதிர்த்தவர் காலஞ்சென்ற டாக்டர் சீனிவாசன் ஆவார்கள். காங்கிரஸ் கட்சியிலே வைரம் ஏறியப் பெரிய மனிதர். காஞ்சிபுரம் நகரத்திலேயே அவருக்கு யாரும் பகைவர்கள் கிடையாது. நீங்கள் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் அவரை நான் எதிர்த்துப் போட்டியிட்ட நேரத்தில் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் எனக்கு கடுமையான வயிற்றுவலி வந்த நேரத்தில் நான் போன் செய்து அழைத்த நேரத்தில் என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்கு மருந்து கொடுத்துவிட்டு முதுகைத் தட்டி ரொம்பக் கத்திப் பேசாதே என்று சொல்லிவிட்டுப்போனவர். அவரும் காங்கிரஸ்தான். இவர்களும் காங்கிரஸ்தான். இதை எண்ணுகிறபொழுதுதான் ஐந்தே வருடத்திலே காங்கிரஸ் கட்சி என்ன கதிக்கு வந்துவிட்டது என்பதைப் பார்க்கிபொழுது நான் உள்ளபடி வருத்தப்படுகின்றேன். சென்றதடவை தேர்தல் நடந்ததே இதையெல்லாம் கேள்விப்பட்டீர்களா? உருட்டுப்பேச்சுகளும் மிரட்டு விழிகளும், கனைப்புப் பார்வைகளும், கத்திக்குத்துகளும், காலை இடறிவிடுவதும், மோட்டார் ஏறி ஆள் சாவதும் இவைகளையெல்லாம் கேள்விப்பட்டீர்களா? வாதத்திற்கு வாதம், புள்ளி விபரத்திற்கு புள்ளி விபரம், வேண்டுகோளுக்கு வேண்டுகோள் அது நடந்தது.

இந்தத் தடவை என்ன நடக்கிறது? ஓட்டுக்குப் பணம் கொடுத்துக்கொண்டு போகிறார்கள் காங்கிரஸ்காரர்கள் என்று கேள்விப்பட்டு நம்முடையத் தோழர்கள் பணம் வாங்காதே என்று கூச்சலிட்டுக்கொண்டு போனால் உடனே டெலிபோன் செய்து போலீஸ் பாராவைக் கொண்டுவந்து போட்டு நம்முடையத் தோழர்களைத் தடுத்து ஆகட்டும் உங்கள் வேலை ஆகட்டும் என்று போலீசே பாதுகாப்புத் தருகிறார்கள். நான் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லுகிறேன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நீங்கள் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறீர்கள்? நீங்களே ஆரம்பியுங்கள் என்ன கெட்டுவிட்டது? நீங்கள் பாதுகாப்பாக இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் பணம் கொடுப்பதைவிட நீங்களே நிறைய போலீஸ் வந்திருக்கிறது; இன்னென்ன தெருவுக்கு நாலு போலீஸ் பணம் கொடுக்கும் என்று தண்டோரா போட்டுவிட்டுக் கொடுங்கள். என்ன செய்வீர்கள் அதனாலே. என்னைத் தோற்கடிக்கவேண்டும் என்பதுதானே உங்கள் எண்ணம். என்னைத் தோற்கடிப்பதாலே உங்களுக்குக் கிடைக்கிற லாபம் என்ன? என்னைத் தோற்கடிப்பதாலே நீங்கள் எதைத் தூய்மைப்படுத்தப்போகிறீர்கள்? என்னைத் தோற்கடித்துவிட்டால் உங்களுடைய எந்தக்கொடி வானத்திலே பறக்கப்போகிறது?

துணிவோடு நீங்கள் என்னை எதிர்ப்பீர்களானால் பணத்தையும் கொடுத்து வெங்கடேசப் பெருமாள் படத்தை வைத்தார்களாம். ஆக உங்களுக்கு என்னை எதிர்க்க வக்கில்லை வழியில்லை, ஏழுமலை ஏறி அவனை அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள். பரவாயில்லை அவர்தானே வருகிறார்? வரட்டும். ஆக என்னை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறீர்கள்! ஒரு சாதாரண அரசியல் கட்சியிலே உள்ளவன் என்றுகூட என்னை மதிக்கவில்லை. அண்ணாதுரையை தடுக்கவேண்டுமானால் ஐந்து ரூபாய்கூட போதாது, தீராத வல்வினையெல்லாம் தீர்த்துவைப்பவனைக் கொண்டுவந்து அவன் படத்தின் பேரிலே ஐந்து ரூபாய் வைத்து எடுத்துக்கொள் என்று சொல்கிறீர்கள். அதை நீட்டுகிறபொழுது தாய்மார்களைக் கேட்கிறேன்; உற்று அந்தப் படத்தைப் பாருங்கள். அந்தத் தெய்வம் எதற்காக ஏழு மலைக்கப்பாலே இருக்கிறதென்று எண்ணிப் பார்த்தீர்களா? நாட்டிலே இருக்கிற அக்கிரமம் தாளமாட்டாமல் தொலைவாகப் போயிருக்கிறது. யாரோ நல்லவர்கள் கஷ்டப்பட்டாகிலும் அங்கே வரட்டும் என்பதற்காகத்தான் அங்கே போயிருக்கிறதே தவிர நாட்டிலே அக்கிரமம் இல்லையென்றால் நம்முடைய வரதராஜபெருமாளைப்போல் ஊரோடு ஊராக இருந்திருக்க முடியும். நீங்கள் உங்கள் தொல்லை தாளமாட்டாமல் ஏழுமலைக்கப்பாலே இருப்பவனை மறுபடி அழைத்துக்கொண்டுவந்து அதர்மக் காரியத்திற்கு நீ துணை செய் என்றால் உண்மையிலே துணை செய்வாரா? வெங்கடேசப் பெருமாள் படத்தின் பேரிலே ஐந்து ரூபாயை வைத்து அதை யாராவது வாங்கினால் வெங்கடேசப் பெருமாளிடத்திலே நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் சொல்கிறேன். அவர்கள் இதுவரையிலே கும்பிட்ட கோவிந்தனுக்கு அவர்கள் செய்கின்ற துரோகத்தைப்போல் கோவிந்தனேது கோபாலனேது என்று பேசுகின்றவர்கள்கூட அவ்வளவு துரோகம் செய்ததில்லை என்பதை அருள்கூர்ந்து எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பூரத்தை எடுத்துக் கோவிலிலே அடித்துவிட்டு கால் ரூபாய் நான் வாங்கியதில்லை  என்றுப் பொய்ச்சத்தியம் செய்பவனைக்கூட சாதாரணமாகக் கருதலாம். வெங்கடேசப்பெருமாள் படத்தை வைத்து அதன்பேரிலே ஐந்து ரூபாய் நோட்டை வைத்து அதை எடுக்கப்போகிற நேரத்தில் தாய்மார்களும் பெரியவர்களும் ஒரு தடவை முகத்தைப் பாருங்கள், வெங்கடேசப் பெருமாள் எதற்காக இருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஐந்து ரூபாய் நோட்டு வாங்கிக்கொடுக்கவா இருக்கிறார்? கைகால் பிணிப்பு வந்தால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள். புத்திக்கோளாறு ஏற்பட்டால் அவரைக் கும்பிட்டால் நீங்கும் என்கிறார்கள். மலடிகள் அந்தக் கோவிலுக்குப் போய்வந்தால் பிள்ளை பிறக்கும் என்கிறார்கள். சொத்து இல்லாமல் அந்தக் கோவிலுக்குப் போய்வந்தால் அறவழியிலே சொத்து சம்பாதிக்கலாம் என்கிறார்கள். பக்தர்கள் பலமாதிரி அதைப்பற்றி சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தேவரிரைக் கொண்டுவந்து அதன்பேரிலே ஐந்து ரூபாயை வைத்தால், நான் இதைக்கூட எண்ணியிருப்பேன், ஐந்து ரூபாயையாவது எடுத்துவிட்டு வெறும் வெங்கடேசப்பெருமாளைக் காட்டியிருந்தாலாவது ஓ! வெங்கடேசப்பெருமாளுக்கு மதிப்பிருக்கிறது என்று எண்ணுவேன். எனக்கு இப்பொழுது எதற்கு மதிப்பு என்றே தெரியவில்லை. ஐந்து ரூபாய் நோட்டுக்கு மதிப்பா? வெங்கடேசப்பெருமாளுக்கு மதிப்பா? இந்த இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்று வைக்கிறார்களே அது மதிப்பா என்று தெரியவில்லை. அதைவிட கூடா நட்பா இது? வெங்கடேசப்பெருமாள் படத்தின் பேரில் ஐந்து ரூபாய் நோட்டை வைத்து ஓட்டரிடத்திலே நீட்டுகிறீர்களே அதைவிட கூடா நட்பா இது? இவர் என்ன வெங்கடேசப்பெருமாள் நான் என்ன மேலே இருக்கிற ஐந்து ரூபாய் நோட்டா? இதைக் காட்டி உங்களுடைய வாக்குகளைத் தட்டிப்பறிக்க விரும்புகிறோமா? இதை எண்ணிப் பாருங்கள்.

ஆகையினால் அந்தப் பணத்தைத் தொடுவதற்குக் கைக் கூசவேண்டும். அந்தப் படத்தைப் பார்ப்பதற்குக் கண் கூசவேண்டும். அதைத் தொடுகிறபொழுது இதயத்திலே இதுவரையிலே இருந்துவந்த எல்லா நியாய உணர்ச்சியும் பொங்கி வழியவேண்டும். அது வழியுமானால் அந்தப் பணம் பாவத்தின் சின்னம். அந்தப் பணம் உரிமைச் சீட்டைத் தட்டிப்பறிப்பதற்காக ஊர்சொத்தை அடித்து உலையிலே போடுபவர்கள் நமக்குத் தருகின்ற லஞ்சத்தொகை என்று கருதவேண்டும். நண்பர்களே அந்த ஐந்து ரூபாய் நமக்கு எத்தனை காலத்திற்கு வரும்? மிக அருமையாக நாம் பெற்றெடுத்தக் குழந்தைக்கு ஒரு பட்டுச்சட்டை தைக்கவேண்டும் என்றாலும்கூட அந்த ஐந்து ரூபாய் காணாது. இரண்டு நாளைக்கு நிம்மதியாக சாப்பிடலாம். நாலுதடவை அதை சாப்பிட்ட சந்தோஷத்திலே இருக்கலாம். அதற்குப் பிறகு நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டாமா? என்னுடைய முகத்தைப் பார்க்கிற நேரத்தில் ஐந்து ரூபாய்க்காகவா நமக்காகப் பாடுபட்ட ஒருவனுக்கு கெடுதல் செய்தோம் என்று உங்கள் உள்ளம் உங்களை உருத்தாதா? எண்ணிப்பாருங்கள். இல்லை இவ்வளவுக்கும் பிறகு எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று கருதினால் அதை சிலபேர் செய்ததைப்போல் திருப்பியாவது கொடுங்கள்; அதிலே இருக்கிற பாவத்தைப்போக்கி  நல்ல காரியத்திற்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அதை உபயோகப்படுத்துகிறோம். இல்லை இன்னும்கூட ஒன்று சொல்கிறேன் இதை அப்படியே எங்களிடத்திலே கொடுங்கள்; அதற்குப் பிறகு யார் உங்களுக்குக் கொடுத்தார்களோ அதே காங்கிரஸ்காரர்களிடத்திலே திருப்பித் தருவதற்காக ஒப்புக்கொள்கிறேன். அந்தப் பாவக்காசுக்கூட எனக்கு வேண்டாம்.

ஆனால் இதை நம்பி ஜனநாயகத்தைப் பாழாக்காதீர்கள். என் பேரிலே கோபம் யாருக்காவது இருந்தால் தனியாகக் கூப்பிட்டு நாலு வார்த்தை ஏசுங்கள். என் பேரிலே ரொம்ப அருவருப்பு இருந்தால் நான் ஒண்டிச்சண்டியாக வருகிறபொழுது அடித்துக்கூடப் போடுங்கள். ஆனால் நாட்டைப் பாழாக்காதீர்கள். நல்ல தருணம். ஜனநாயம் வளர்வதற்கேற்ற நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் சாதாரணக் காசுக்காக மயங்கி ஜனநாயகம் வளர்வதற்கு நீங்கள் கேடு செய்யாதீர்கள் என்று பணிவன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

உனக்கு என்ன இந்தக் காங்கிஸ் ஆட்சியிடத்திலே இவ்வளவு பெரிய கோபம் என்று யாராவது நீங்கள் கேட்பீர்களானால் நான் சொல்லுவேன், காங்கிரஸ் என்கிற கட்சியின் பேரிலேகூட அல்ல. இடுப்பிலே நாம் கட்டிக்கொண்டிருக்கிற வேட்டி, வௌ;ளையாகத்தான் எடுத்துக் கட்டுகிறோம். நடந்துபோகிறபொழுது அந்த வேட்டி தானாக அவிழ்ந்துபோய் குப்பைக்கூளத்திலே விழுவதில்லை. ஊரிலே இருக்கிற குப்பைக்கூளமெல்லாம் காற்றாலே அடிக்கப்பட்டு வேட்டியிலே ஒட்டிக்கொள்கிறது. ஒட்டிக்கொண்டவுடனே இது என்னுடைய வேட்டி இந்த அழுக்கு எங்கள் ஊர் அழுக்கு இருக்கட்டும் என்றா சும்மா இருக்கிறோம்? வெளுப்பவனை அழைத்து அதை களைந்துபோடவில்லையா? வெளுத்துப்கொடுங்கள் என்று கேட்கவில்லையா? அவரும் அதை எடுத்துக்கொண்டுபோய் ஆற்றுத்தண்ணீரிலே அழுந்தத் தோய்த்து கற்பாறையிலே ஓங்கி துவைக்கிரபொழுது பக்கத்திலே நின்றுகொண்டு ”அப்பா அப்படி அடிக்காதே. அது ஆறேமுக்கால் ரூபாய் வேட்டி. நான் அருமையாக வாங்கியது. அதை அந்த அடி அடிக்காதே” என்று சொன்னால், சொல்லமாட்டோம், சொன்னால் வெளுப்பவன் என்ன சொல்லுவான்? ”ஐயா, நீ ஏற்றிவைத்திருக்கிற அழுக்கு, இந்த அடிக்குக்கூடப் போகாதுபோலிருக்கிறது. இது இன்னமும் வௌ;ளாவி வைத்து எடுத்தால்தான் அழுக்குப் போகும்போல இருக்கிறது. எண்ணை ஜிகிண்டு ஏறிவிட்டது” என்றல்லவா சொல்லுவான். அதைப்போல இராஜாஜி அவர்கள் காங்கிரசைக் கடுமையாகத் தாக்குகிறாரே என்று நேரு பண்டிதரும் மற்றவர்களும் ”அய்யோ, இந்த அடி அடிக்கிறாரே” என்றால், அதிலே இருக்கிற எண்ணை ஜிகிண்டு அவருக்குத் தெரிகிறது அடிக்கிறார். அவருக்கென்ன வேட்டியின் பேரிலா கோபம்? எண்ணை ஜிகிண்டின் பேரிலே கோபம். ஆனால் சிலபேர் வேட்டி அழுக்கானாலும் சுலபத்திலே எடுத்துப்போடமாட்டார்கள். மேல்பக்கத்திலே அழுக்கானால் உள்பக்கத்திலே மடித்து ஒருநாள் கட்டிக்கொண்டிருப்பார்கள். இடுப்புப்பக்கத்திலே அழுக்கானால் கால்பக்கத்திலே கட்டிக்கொள்வார்கள். கால்பக்கத்திலே அழுக்கானால் இடுப்புப்பக்கத்திலே கட்டிக்கொள்வார்கள். இது உனக்கெப்படி இவ்வளவு விபரமாகத் தெரியும் என்று என்னைக் கேட்பீர்கள். எனக்கே அது பழக்கம். எனக்கு அந்தப் பழக்கம் ஏற்பட்டது என்னுடைய குருநாதர் அவர்கள் பெரியார் இராமசாமிக்கு அது பழக்கம். ஆகையினால்தான் அந்த விஷயத்தை அவ்வளவு விபரமாக நான் சொன்னேன். அதைப்போல காங்கிரஸ் கட்சி ஒரு ஐந்து வருடம் ஏறியிருக்கிற அழுக்கை வெளிப்பக்கத்து அழுக்கை உள்பக்கத்திலே வைத்துக் கட்டியதைப்போல் ஒரு ஐந்து வருடம் ஓட்டியாகிவிட்டது. இடுப்புப் பக்கத்து அழுக்கை கால்பக்கத்திலே வைப்பதைப்போல் இன்னொரு ஐந்து வருடம் தீர்ந்தது. கால் பக்கத்தை இடுப்புப் பக்கத்துக்கு மாற்றி இன்னொரு ஐந்து தடவை தீர்ந்தது. இப்பொழுது ஆடையெங்கும் அழுக்கு இருக்கிறது. முன்பக்கத்திலே இருந்து பார்க்கிறவர்கள் எண்ணை ஜிகிண்டா என்று கேட்கிறான். பின் பக்கத்திலே இருந்து பார்க்கிறவன் சாணிக்கறையா என்கிறான். வலப்பக்கத்திலே இருந்து பார்க்கிறவன் வண்டி மையா என்கிறான். இடப்பக்கத்திலே இருந்து பார்க்கிறவன் இங்க் கரையா என்கிறான். எத்தனை நாளைக்கு எல்லாவற்றையும் மறைப்பீர்கள்? இருப்பது இரண்டு கை. ஆகையினால் நாலுபக்கத்திலே அழுக்கு  இருந்தால் எப்படி மறைக்க முடியும்? சிலபேர் அழுக்கேறிய ஆடையைச் சுட்டிக்காட்டினால் அது அழுக்கு அல்ல ஆடையினுடைய கலரே அப்படி என்பார்கள். அதைப்போல காங்கிரசிலே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றையதினம் ஆடை பூராவும் அழுக்கேறியிருப்பதைப்போல் காங்கிரஸ் கட்சியினுடைய ஆட்சி பூராவிலும் அழுக்கேறிவிட்டிருக்கிறது. பிப்ரவரி இருபத்தினாலு அழுக்கு நீக்குகிற நாள். பிப்ரவரி இருபத்தினாலு ஆட்சிப்பொறுப்பிலே இருக்கிறவர்கள் செய்த அக்கரமங்களுக்கெல்லாம் தண்டனைத் தருவதற்கேற்றத் தீர்ப்பு நாளாகும். இந்தத் தீர்ப்பு ஐந்து ரூபாய் லஞ்சத்திற்காக மாற்றி எழுதாதீர்கள். உள்ளம் என்ன சொல்கிறதோ அதை எழுதுங்கள். உள்ளம் காங்கிரஸ் நல்லது என்று சொன்னால் எழுதுங்கள் காசு வாங்காமல். ஐந்து ரூபாய் கொடுத்தார்களே. காங்கிரஸ் கெட்டதுதான் ஆனால் ஐந்து ரூபாய் நல்லதாயிற்றே  என்று மட்டும் சொல்லாதீர்கள்.

ஆகையினால் பிப்ரவரி இருபத்தினாலு தீர்ப்பளிக்கிற நாள் வழக்கை எடுத்துச் சொல்வதற்கு இந்தியாவிலேயே தலைசிறந்த இரண்டு வழக்கறிஞர்கள் இந்த மேடையிலே வந்திருக்கின்றார்கள். ஒரு வழக்கறிஞர் இருக்கின்ற வழக்கை எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். இன்னொரு வழக்கறிஞர் அந்த வழக்கை நாமெல்லாம் அறிந்துகொள்ளத்தக்க வகையிலேயும் நீதிபதிகள் உணர்ந்து நல்ல தீர்ப்பு அளிக்கத்தக்க விதத்திலேயும் குற்றவாளி கூண்டிலே இருக்கின்றவர்களே ஆமாம் நாம் குற்றம்தான் செய்தோம் என்று அவர்களே கழுவிரக்கப்படத்தக்க விதத்திலேயும் அவர்களும் இந்த வழக்கை எடுத்துச்சொல்லுவார்கள்.

நான் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டேன். நாளையதினம் முழுவதும் நீங்கள் எனக்காக உதயசூரியன் சின்னத்துக்கும் டாக்டர் கிருஷ்ணசாமிக்காக சிங்கம் சின்னத்திற்கும் முத்திரையிட்டு வெற்றி தேடிக்கொடுக்கவேண்டும்.

நானாகிலும் இந்த நாட்டிலே இருக்கிற அளவோடுதான் படித்தவன். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நல்ல அரசியல் தெளிவு பெற்று பார் அட் லா படித்து அவர் வழக்கறிஞராகப் பணியாற்றினால் அவருடைய தகப்பனார் சந்தோஷப்படுகின்ற அளவுக்கு பணத்தையாவது சம்பாதித்திருக்கலாம். ஆனால் அவர் அதையும் ஒரு பொருட்டாக மதியாமல் பாராளுமன்றத்திலே உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உலகத்திலே இருக்கிற பல நாடுகளிலே உள்ள மக்களினுடைய உரிமைகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு குழுவிலே அமர்ந்து அந்தக் குழுவுக்குத் துணைத் தலைவராக இருந்து அரியதோர் ஆராய்ச்சி அறிக்கையை எழுதி அந்த ஆராய்ச்சி அறிக்கையைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் மன்றத்தினுடைய செயலாளராக இருந்து மறைந்த ஹெமர்ஷீல்டு அவர்கள் நேருவுக்கே கடிதம் எழுதி நல்லவரை அனுப்பினீர்கள் வல்லவரை அனுப்பினீர்கள் அவருடைய அறிக்கையை நான் பாராட்டுகிறேன் என்று புகழ்ந்துரைக்கத்தக்கவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். அவர்கள் பாராளுமன்றத்திலே அமர்ந்திருப்பது நல்லது. அவர் ஆங்கிலத்தில்தானே பேசுகிறார் என்று தமிழிலேயாவது புலமை பெற்றவர்கள் சொன்னார்களா என்றால் இல்லை. அவர்கள் ஆங்கிலம் பேசுகிறபொழுது ஆங்கிலம் அறியாதவர்கள் மத்தியிலே பேசுகிறார்கள். தமிழ் பேசுகிறபொழுது தமிழ் தெரியாதவர்கள் மத்தியிலே பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியை அவர் ஆங்கிலம்தானே பேசுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்திலே ஆங்கிலத்திலே பேசுவது இன்றையதினம் மிகமிகத் தேவைப்படுகிறது. பாராளுமன்றத்திலே மட்டுமல்ல அகில உலகத்திலே இருக்கின்ற அறிவு வந்த நாடுகளில் ஆங்கிலம் இருந்தால் கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். ஆகையினால் அந்த ஆங்கிலப் புலமையும் அரசியல் தெளிவும் நேர்மையும் படைத்த டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரிக்கவேண்டும்.

வேறு எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். இராமசாமி முதலியாரையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் நீங்கள், டாக்டர் கிருஷ்ணசாமியை நீங்கள் இந்த இருபது ஆண்டுகளாக அரசியலில் யார் யாரெல்லாம் எப்படி எப்படி கட்சி மாறினார்கள் என்பதைப் பார்த்தீர்கள் லாபத்துக்காக. அவர் மாறியிருக்கிறாரா? நஷ்டத்திற்குக் கட்சி மாறினவர் இராஜகோபாலாச்சாரியார். அதை சுப்பிரமணியமே சொன்னார். நான் சொல்லவில்லை. அவருடைய பிரதம சீடர் சுப்பிரமணியமே இந்த ஊரிலே சொன்னார். ஐயோ எங்கள் இராஜாஜி எப்படிப்பட்ட இடத்திலே இருக்கவேண்டியவர் தெரியுமா? போயும் போயும் இந்த அண்ணாதுரைக்குப் பக்கத்திலே உட்காருகிறாரே அதுதான் எனக்கு சகிக்கவில்லை என்றார். அவர் சற்று யூகத்தோடுதான் பேசுகிறார். இராஜாஜி இந்த நேரத்திலே டெல்லியிலே பெரிய இடத்திலே இருந்தால் இப்பொழுது டெல்லிக்குப் போகவேண்டும் என்று ஆசைப்படுகிற சுப்பிரமணியத்தை சென்னையிலே எப்படி தயாராக்கிவிட்டாரோ அப்படி அங்கேயும் தயாராக்கிவிடுவார், இராஜாஜி அங்கேயல்லவா இருக்கவேண்டும் என்று கருதுகிறார். ஆனா இராஜாஜிக்கு ஒன்று விளங்கிவிட்டது. அது குருவுக்கு மிஞ்சின சிஷ்யனாகிவிட்டது அவருக்கு தெரிந்துவிட்ட காரணத்தினால் நீயே போய்ப் பார்த்துக்கொள் என்று விட்டிருப்பார் என்று கருதுகிறேன். ஆனால் போய்ப் பார்ப்பதற்கு பொள்ளாச்சி மக்கள் வழி செய்துவைத்திருக்கவேண்டும். அது பெட்டி உடைத்தால்தான் தெரியும்.

ஆனால் அவர்கள் எப்படி இன்றையதினம் லாபத்தைக் கருதாமல் அவர் இருந்துவந்த, இருந்துவந்த என்று சொல்வதுகூடப் பொறுத்தமா பொருத்தமற்றது, அவர் வகித்துவந்த இடத்தை விட்டுவிட்டு, அவர் உருவாக்கிய கட்சியை விட்டுவிட்டு, ஊருக்கும் உலகுக்கும் எந்தக் கட்சியை அவர்கள் வலிவுள்ளதாக்கிக் காட்டினார்களோ அந்தக் கட்சியை விட்டுவிட்டு இன்றையதினம் வந்திருக்கின்றார்கள். மிகச் சாதாரணக் காங்கிரஸ் தொண்டர்கூட என்ன பேசுகிறார் அவரைப் பற்றி? அதையெல்லாம் தாங்கிக் கொள்ள நேரிட்டது எதனாலே? அவருக்கும் பதவியிலேயோ பட்டத்த்திலேயோ ஆசையிருந்திருக்குமானால் அவர் விரும்பியிருந்தால் அமெரிக்காவிலே தனி மாளிகை அமைத்து நீங்கள்தான் ஆயுட்காலம் வரையில் அமெரிக்காவிலே இந்தியத் தூதராக இருக்கவேண்டும் என்று சொல்லமாட்டார்களா? அவர் நேருவிடத்த்திலே ஒரு கண்ஜாடைக் காட்டி இந்த ஐக்கிய நாடுகள் சபையில் நான் அமர்ந்திருந்து சில கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அவரைத் தலைவராக்கி அழகு பார்த்திருக்க முடியாதா? அது அத்தனையும் அவருக்குத் தெரியாதா? என் பக்கத்திலே வருவதாலே என்ன கிடைக்கும்? கூடா நட்பு என்று பேசுகிறார்களே அந்த ஏச்சுத்தான் கிடைக்கிறது. நான் இராஜகோபாலாச்சாரியாருக்குச் சொல்லிக்கொள்வேன், நான் ஒரு தலைவருக்கு என்னுடைய உழைப்பையெல்லாம் தந்திருக்கின்றேன். ஒரு தலைவருக்கு என்னுடைய உள்ளத்தையெல்லாம் பறிகொடுத்திருக்கிறேன். ஒரு தலைவருக்கு நான் உண்மைத் தொண்டனாக இருந்திருக்கிறேன். அவராலே பெறமுடியாத நல்வாழ்த்துக்களை அவர் எனக்கு அளிக்காத நல்லெண்ணத்தை என்னாலே எப்போதும் எதிர்க்கப்பட்டு வந்த நீங்கள் அளித்திருப்பதுதான் உலகத்தினுடைய விசித்திரம் என்று நான் கருதுகிறேன். ஆகையினால் பலன்தராத அந்தக் காரியத்திலே நீங்கள் ஈடுபட்டிருக்கின்றீர்கள். நான் கீதையைச் சொன்னால் உனக்குக் கீதைகூட தெரியுமா என்று ஆச்சர்யமாகப் பார்க்காதீர்கள். நீங்கள் செய்கின்ற இந்த நிஷ்டாமகர்மம் வீண்போகாது என்பதை மட்டும் நான் தெளிவாக திட்டவட்டமாக எடுத்துச்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஆகையால் நாளையதினம் நீங்கள் உருப்படியான காரியத்தை நடத்திக்காட்டி டாக்டர் கிருஷ்ணசாமியை பாராளுமன்றத்திலே அமரச்செய்யவேண்டும். அதிலே இந்தத் தடவை பாராளுமன்றத்தைப் பற்றிய பல்வேறு வகையான பிரச்சினைகள் உறுவெடுக்கக்கூடிய நேரம். புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற தென்னகத்திற்கு புதிய இரும்புத் தொழிற்சாலைகள் கிடைக்கவேண்டும் என்றாலும், புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற தென்னகத்திற்கு அணு உலைக்கூடம் தேவை என்றாலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற கிராமப்புரங்களுக்கு.......(பேச்சின் முடிவு பதிவில் இல்லை)