அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆட்சியிலுள்ள அழுக்கை அகற்றாவிட்டால்...

வாக்காளப் பெருமக்களுக்கு அண்ணா வேண்டுகோள்!

வேலூரில் 12.2.62இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது.

வேலூர் நகரப் பெருங்குடி மக்கள் பெரும் அளவில் கூடியிருக்கும் இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகூறிக் கொள்கிறேன்.

தமிழகச் சட்டமன்றத்திற்குத் தி.மு.கழகச் சார்பில் போட்டியிடும் தோழர் மா. பார்த்தசாரதி அவர்களையும், டெல்லிப் பாராளுமன்றத்திற்குப் போட்டியிடும் பழம்பெரும் நண்பர் என். சிவராஜ் அவர்களையும் ஆதரித்து நடைபெறும் இக்கூட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

பிப்.17ஆம் தேதியன்று வேலூரில் தேர்தல் நடக்க இருக்கிறது, நாட்கள் மிகக் குறைவு, வேலைகளோ அதிகம்.

சிலர் தி.மு.கழகத்தை ஆதரிக்கிறார்கள் – அவர்களுக்கு என் இதயப் பூர்வமான நன்றி! சிலர் தி.மு.கழகத்தை ஆதரிக்க மறுக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த நேரத்தில் கவலைப்பட்டுப் பயன் இல்லை! இன்னும் சிலர் தி.மு.கழகத்தை ஆதரிக்ககலாமா என்று எண்ணுகிறார்கள் – அவர்களைப் பற்றி சிறிதுகூற ஆசைப்படுகிறேன்.

மா.பா.சாரதி, அடக்கமுள்ளவர்!

தி.மு.கழகச் சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்குப் போட்டியிடும் நண்பர் மா.பா.சாரதி அவர்கள், போலீசு நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை, அலுவலகங்களில் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை, மக்களிடத்தில் பீதியைக் கிளப்புவதில்லை, அடக்கமான சுபாவமும் எளிய தோற்றமும், யாரையும் வீணாகப் பகைத்துக் கொள்ளாத தன்மையும் நல்ல வியாபாரம் செய்ததால் ஏற்பட்ட பொறையுடைமையும் கொண்டவர்.

இவருக்கு எதிரிாக நிற்கும் காங்கிரசு அபேட்சகரின் குணத்தை வேலூர் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் நன்று தெரிந்து கொண்டிருக்கிறது. அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியத்தில் நீங்கள் இல்லை என்பதை நான் அறிவேன்.

எல்லாம் தெரியுமென்பது நாட்டுக்குக் கேடு!

“எல்லாம் எனக்கும் தெரியும், எல்லாம் எனக்கே தெரியும்“ என்பவர்கள் சட்டமன்றத்திற்குத் தேவையில்லை! அது நாட்டுக்குக் கேடு!

ஆனால் நண்பர் சாரதி நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களுக்காக அவகைளைச் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறி வாதாடுபவர்.

சென்ற ஐந்து ஆண்டுகளின் சட்டசபை நிகழ்ச்சிப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பார்த்தால், சாரதி அவர்கள் எத்தனை கேள்விகள் கேட்டார் – எத்தனை குறுக்குக் கேள்விகள் போட்டார் – என்பதை நீங்கள் கருதுவீர்கள்.

நண்பர் சாரதி அவர்கள் 30-35 ஆண்டுகளாக ஒரே கொள்கையில் பற்றுக் கொண்டிருக்கிறார். அரசியல் ஆசாபாசங்களில் ஈடு கொள்ளாமல், கொண்ட கொள்கையைக் கைவிடாமல் தொடர்ந்து அவர் பணியாற்றுவது பெருமைக்குரியது.

இன்றைய அரசியல் கூத்து

இன்றைய அரசியலில், வெள்ளிக்கிழமை ஒரு கட்சி சனிக்கிழமை இன்னொரு கட்சி – ஞாயிற்றுக்கிழமை, ‘நாம் ஏன் வேறுகட்சியில் இருப்பது?‘ என்று எண்ணி, ‘நாமே புதுக்கட்சி ஏற்படுத்துவோம்‘ என்று கருதி, திங்கட்கிழமை புதுக்கட்சி ஆரம்பித்து சர்வ சாதாராணமாகிவிட்டது.

இத்தகைய நாட்களில் உறுதிப்பாடு மிக்க மா.பா. சாரதி அவர்கள், சட்டமன்றம் செல்வதால் நாட்டுக்கம் நன்மை – கொள்கைக்கும் வலிவு! சட்டமன்றம் செல்வதற்கு வேண்டிய எல்லாத் தகுதிகளும் சாரதிக்கு இருக்கின்றன. இதை அறிந்துதான், சென்றமுறை அவரைச் சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். இந்த முறையும் அனுப்புவிர்கள் என்ற திடமான நம்பிக்கை உங்களுக்கு இருப்பது போலவே எனக்கும் இருக்கிறது.

என்ன தொடர்போ சீவரத்தினத்திற்கு!

வேலூரில்போட்டியிடும் காங்கிரசு அபேட்சகருக்கம் – காங்கிரசுக்கும் என்ன தொடர்போ, எனக்குத் தெரியாது! நான் அறிந்தவரையில் இந்நகரில் அந்தக் காலத்தில் காங்கிரசில், கோடையிடி குப்புசாமி முதலியார், உபயதுல்லா சாயுபு ஆகியவர்கள் இருந்தார்கள், இடைக் காலத்தில், மாசிலாமணி செட்டியார் பெயர் அடிபட்டது. அவர்களின் பெயர்கள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன, ஆனால், காங்கிரசு அபேட்சகர் சீவரத்தினம் காங்கிரசில் சேர்ந்ததை நான் அறியவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை, காஞ்சிபுரத்திலிருந்து வந்து வேலூரில் உள்ள உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆதிதிராவிடப் பெருங்குடியில் பிறந்து, அரிய கல்லூரிக் கல்வியைப் பயின்று, அருமையான பட்டம் பெற்று, சட்டம் பயின்று சட்டக் கல்லூரியில் பணியாற்றிச் சட்டமன்றம் சென்றவர் – பாராளுமன்றத்தில் வீற்றிருப்பவர் – அம்பேத்காருக்க அடுத்தபடி, ஆதித்திராவிடப் பெருங்குடியில் பிறந்த கோமான் நண்பர் சிவராஜ் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அத்தகையவர், பாராளுமன்றத்திற்கு இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் என்ற முறையில் போட்டியிடுகிறார்.

சிவராஜை ஆதரித்து வாக்களியுங்கள்!

தி.மு.கழக அபேட்சகராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குச் சாரதி போட்டியிடுகிறார். எனவே, உதயசூரியன் சின்னத்தில் சாரதிக்கும், யானைச் சின்னத்தில் சிவராஜ் அவர்களுக்கும் முத்திரையிட்டுப் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றித் தேடித் தருமாறு உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், காங்கிரசுக் கட்சிக்கு அடுத்தபடி தி.மு.கழகம்தான் பெரியகட்சி! ‘ஆளும் கட்சியாகக் காங்கிரசுக் கட்சி இருக்கக்கூடாது‘ என்று பொதுமக்கள் கருதினால் எதிர்க்கட்சி என்ற முறையி்லே அல்ல – ஆளுங்கட்சிக்கு மாற்றுக் கட்சியாகப் பணிபுரியக் காத்துக் கொண்டிருக்கிறோம். ‘இது முடியுமா – நடக்குமா – விடுவோமா‘ என்று எண்ணும் – தூர்த்தில் நின்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்.

எதிர்கட்சியாக மாறிவிட்ட நிலை காணீர்!

சென்னை மாநகராட்சியைப் பாருங்கள். நான் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, நண்பர்கள் என் மீது கோபித்துக் கொள்ளவேண்டாம் நான் விரும்பக்கூட இல்லை – கம்யூனிஸ்டுகள் 4 பேர், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஒருவர், மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக வீற்றிருக்கிறது, காங்கிரசுக்கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது. 4 கோடி ரூபாய் செலவு செய்யும் அதிகாரம் படைத்த அமைப்பு சென்னை மாநகராட்சி, ஏறக்குறைய 20 இலட்சம் மக்கள் தொகை கொண்டது சென்னை, அந்தச் சென்னையில் தி.மு.கழகம் ஆளுங்கட்சி – காங்கிரசு எதிர்க்கட்சி! சென்னையில் மட்டுமல்ல நண்பர்களே! சென்னைக்கு அடுத்தபடியான நகரம் மதுரைக்கு அடுத்தபடி பெரிய பட்டணம் – தொழிற்சாலைகளைக் கொண்ட பெருநகரம் கோவை. அங்கேயும் ஒரு கம்யூனிஸ்டுத் தோழர்தான் நகராட்சித் தலைவர், காங்கிரசு எதிர்க்கட்சிதான்!

காற்று அடிப்பதைக் கணக்கெடுங்கள்!

இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்குக் காரணம் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதைக் கணக்கெடுங்கள் என்று கூறந்தான்! நாடு நடக்கின்ற நடை – மக்கள் போகிற போக்கு – மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி – ஆகியவற்றைக் காண்கின்ற நேரத்தில் எங்கே ஆளுங்கட்சி ஆகிவிடுவோமோ என்ற அச்சத்துடன் இருக்கிறேன். ‘ஏற்கனவே நடந்த தெல்லாம் இன்னும் நடக்குமா?‘ என்று காங்கிரசுக்காரர்கள் கேட்கலாம், நான் அப்படிச் சொல்லமாட்டேன் – நடக்கும் என்று சொல்லவில்லை, நடக்கக்கூடும் என்று சொல்லுகிறேன்.

‘கார் உள்ளளவும், கடல்நீர் உள்ளளவும், பஞ்சபீதம் உள்ளளவும்‘ காங்கிரசுதான் ஆளவேண்டுமா?

சாரதியைச் சட்டமன்றத்திற்கு அனுப்புவது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க மட்டுமல்ல – ஆளுங்கட்சியானாலும் வீற்றிருக்கத்தான்!

அச்சம் கொள்ளக் காரணம் என்ன?

தமிழ்நாட்டுக் காங்கிரசார் கூட, ‘தி.மு.கழகம் மட்டும் ஆட்சிக்கு வரக்கூடாது‘ என்று திட்டமிடுகிறார்கள்! மற்றக் கட்சிகளிடம் இல்லாத அச்சம் – தி.மு.கழகத்திடம் மட்டும் ஏற்படுவானேன்? தி.மு.க. ஒன்றுதான், ‘அடிப்படையையே மாற்றுங்கள்‘ என்ற சொல்லுகிறது!

வடநாட்டில் உள்ள மூல்தானிகள், சேட்டுகள், குசராத்திகள், மார்வாடிகள், டாட்டாக்கள், சுரண்டல்காரர்கள், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இப்படிப்பட்டவர்கள், ‘எத்தனை கோடி செலவானாலும நாங்கள் தருகிறோம், காங்கிரசுக்கு‘ என்று போட்டி போடுகிறார்கள்.

பிர்லா என்ற வடநாட்டுப் பண முதலாளிக்குப் பல கம்பெனிகள் இருக்கின்றன. அவைகளில், இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி ஒன்று, இந்தக் கம்பெனி மட்டும் காங்கிரசுக்குத் தேர்தல் கம்பெனி ஒன்று, இந்தக் கம்பெனி மட்டும் காங்கிரசுக்குத் தேர்தல் நன்கொடையாக 20 இலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறது!

‘பிர்லா என்ன, நான் இன்னும் அதிகம் தருகிறேன்‘ என்று டாட்டா முன் வருகிறார்!

வடநாட்டு வணிகர்கள், பணத்தை அள்ளி அள்ளிக் காங்கிரசுக்குக் கொடுத்துத் தி.மு.கழகத்தை ஒழிக்கச் சொல்லுகிறார்கள், தென்னாட்டுக்காக வாதாடும் ஒரே கட்சி தி.மு.கழகம்தான். அது ஆட்சிக்கு வந்தால் எங்கள் பணப்பெட்டிக்கு ஆபத்து, எனவே, அதை வரவிடாதீர்கள்‘ என்கிறார்கள்.

எந்தப் பக்கத்தை வலுவாக்கப் போகிறீர்கள்?

இப்பொழுது நடைபெறப்போகும்தேர்தல் பண நாகயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடைபெறும் போட்டி! நீங்கள் எந்தப் பக்கத்தை வலுவாக்கப் போகிறீர்கள்! ஜனநாயகத்தை வலுவாக்க விரும்பினால் சாரதியை ஆதரியுங்கள், இல்லை பணநாயத்தைத் தான் ஆதரிக்கப் போகிறோம் என்றால் தாராளமாக அதனை ஆதரியுங்கள் – எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.

இப்பொழுது நடைபெறப் போகும் தேர்தல் வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் நடைபெறும் தேர்தல்! தென்னாட்டை ஆதரித்தால் சாரதிக்கு வாக்கு அளியுங்கள், இல்லை, இல்லை, வடநாட்டை ஆதரித்துத் தென்னாட்டைக் காட்டிக்கொடுத்த கங்காணி என்ற பெயர் எடுக்கப் போகிறோம்‘ என்றால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்!

‘உனக்கு ஏன் காங்கிரசுக் கட்சி மீது இவ்வளவு கோபம்? அப்படி என்ன கோபம்? என்று நீங்கள் எண்ணக்கூடும். விவரம் தெரிந்த காங்கிரசுக்காரர்களைக் கேளுங்கள், திட்டிவிட்டுப் போகிற காங்கிரசுக்காரர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

மதமதப்பும் மண்டைக்கனமும் ஏற்படவிடலாமா?

ஒரே கட்சி ஆளுங்கட்சியாகத் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் இருந்தால், எவ்வளவு நல்லவரானாலும் எவ்வளவு வல்லவரானாலும் – நம்மவரானாலும் மதமதப்பும் – மண்டைக் கனமும் ஏற்பட்டுவிட்டால் ஜனநாயத்துக்கும் வேலை இல்லை – ஓட்டுச் சீட்டுக்கும் வேலை இல்லை! தேர்தல் கூடத் தேவையற்றதாகி விடுகிறது.

மண்டைக்கனத்தை நீ்க்குவதற்கு – மதமதப்பைப் போக்குவதற்காகிலும் ஒருமுறை, காங்கிரசைத் தோற்கடியுங்கள். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில் பக்தவத்சலம் – பொன்னேரியில் தோற்கவில்லையா? கோபால் ரெட்டியார் – பொச்சிபாளையத்தில் தோற்கவில்லையா? தொடர்ந்து விட்டுவைப்பது தனி மனிதனுக்கே தீது‘ என்று அவர்களைத் தோற்கடித்துக் காட்டிய பிறகும் காங்கிரசுக் கட்சியை மட்டும் விட்டு வைக்கலாமா?

வெள்ளை வேட்டி வாங்கி உடுத்திக் கொண்டு வீதியிலே செல்லுகிறோம், ஊரிலே உள்ள குப்பைக்கூளங்கள் பட்டு அது அழுக்கேறி விடுகிறது, ஆற்றிலே அடித்து – கற்பாறையிலே அடித்துத் துவைத்து நீரிலே அலசி அழுக்கைப் போக்கி உலர்த்திக் கட்டிக்கொள்கிறோம்!

தேர்தல் கூட்டுக் கோலால் குப்பையை அகற்றுக!

வீட்டைத்தாய்மார்கள் தினம் தினம் கூட்டுகிறார்கள், குப்பையை நாமா போட்டோம்? என்று சும்மா இருப்பதில்லை. காற்றால் வீட்டில் குப்பை சேருகிறது.

வீட்டில் தின்மும் குப்பையைக் கூட்டுவதைப்போல் அரசியலில் சேர்ந்துள்ள குப்பையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற கூட்டுக் கோலால் கூட்ட வேண்டும். ‘பழைய குப்பைதானே?‘ என்ற கூட்டாமல் விட்டுவிட்டால், வீடு, வீடாக இருக்காது காடாகத்தான் இருக்கும்!

அதைப்போல ஆட்சியிலுள்ள அழுக்கை அகற்றாவிட்டால் நாட்டாட்சி ஏற்படாது, காட்டாட்சி ஏற்படும்!

ஏறியிருக்கிற அழுக்கு வேட்டியின் விலை ரூ.6.75 ஆயிற்றே என்றால் என்ன செய்வது? ‘இன்னும் வெள்ளாவி வைத்தால் தான் அழுக்கு நீங்கும்‘ என்றால் வேட்டி மீது போகம் என்றா பொருள்? கோபம் வேட்டி மீது அல்ல ஏறியிருக்கும் அழுக்குமீது!

எனது குருநாதர் பெரியாரின் ‘அருள்‘!

வாங்கிய வெள்ளை வேட்டி வெளிப்பக்கம் அழுக்கானவுடன் சலவைக்குப் போட மனமில்லாவிட்டால் உள்பக்கம் திருப்பிக் கட்டுவார்கள். அதுவும் அழுக்காகிவிட்டால் கீழ்ப்பக்கத்தை மேல்பக்கம் கட்டுவார்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பீர்கள். அது எனக்கே பழக்கம். அது எல்லாம் என் குருநாதர் பெரியாரின் அருள்!

காங்கிரசு என்ற வேட்டியை மறுபக்கம் 5 ஆண்டுகள் உபயோகித்தீர்கள்! மேல்பக்கம் 5 ஆண்டுகள் பயன்படுத்தினீர்கள்! கீழ்ப்பக்கம் 5 ஆண்டுகள் உபயோகித்தீர்கள். அந்த வேட்டியில் ‘யானை ஜிகிண்டு‘ என்ற கள்ளமார்க்கெட்டும்,‘சாணிக்கறை‘ என்ற ஊழலும் ஏற்பட்டுவிட்டன. எனவே, வேட்டியை வெள்ளாவி வைத்து, உப்புப் போட்டு, சவுக்காரம் தேய்த்து, நீலத்தில் அலசி சுத்தப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் கட்டிக் கொள்ள முடியாது. எனவே, அழுக்குப் போக்கடிக்கப்படவேண்டும்.

அழுக்கை நீக்குவது சுலபம் அல்ல – கடினம்! அழுக்கைப் போக்கா விட்டால் அந்தக் கட்சிக்குமட்டுமல்ல – நாட்டுக்கே அவலட்சணம் – ஆபத்து!

காங்கிரசை அகற்றுங்கள்!

காங்கிரசின் இதயத்திலே கல்லும் முள்ளும் கலந்து புகுந்து விட்டன! இதைத் தி்.மு.க. மட்டும் சொல்லவில்லை – காங்கிரசுக் கட்சியை ஊட்டி ஊட்டி வளர்த்த இராஜகோபாலாச்சாரியாரே கூறுகிறார், ‘ஒருமுறை காங்கிரசை அகற்றுங்கள்‘ என்கிறார்.

நான் சொல்வதை ஆடவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தாய்மார்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும்.
நாம் பெற்ற மகளைக் கன்னம் வீங்க அடித்து, கையில் உள்ளதையும் பறித்துக் கொண்டு தாய் வீட்டுக்குக் கணவன் அனுப்பிவிட்டால், வந்த மகளைப் பார்த்து, ‘கவலைப்படாதே கண்ணு! அவன் அப்படியா செய்தான் பயல் வரட்டும், எங்கே போகப்போகிறான்?‘ என்பார்கள்.

நமது மகளைக் கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை 10 நாள் ஓட்டலில் சாப்பிட்டு, வத்தலும் தொத்தலுமாக ஊருக்குப் புறப்பட்டு்க் குதிரை வண்டியில் வீட்டுக்கு எதிரில் வந்து நின்று ‘பெண்ணை அனுப்பு‘ என்றவுடன் ‘இதோ உன் கணவன், உடனே அவனுடன் போ‘ என்று எந்தத் தாயும் துணிந்து கூறமாட்டாள், பஞ்சாயத்தைக் கூட்டி ‘இனிமேல் ஒழுங்காக வாழவேண்டும்‘ என்று மாப்பிள்ளைக்குச் சொல்ல வேண்டிய புத்திமதிகளைக் கூறித்தான் பெண்ணை அனுப்புவார்கள்.

மீண்டும் மீண்டும் அனுப்புவார்கள் – ஆனால்?

மூன்று மாதம் கழித்து மீண்டும் பெண் தாய் வீட்டுக்கு வந்து, ‘அம்மா போனதடவை கன்னம் வீங்க வைத்தார், இந்தத் தடவை கையை ஒடித்து விட்டார்‘ என்று கூறினால் பெற்ற மனம் பற்றி எரிந்து ‘வரட்டும்‘ என்பார்கள். மாப்பிள்ளை வந்து மீண்டும் பெண்ணை அனுப்பச் சொன்னால், சொல்ல வேண்டியதைப் பஞ்சாயத்தார் மூலம் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

ஆறுமாதம் கழித்து மீண்டும் பெண், தாய் வீட்டுக்கு வந்து, ‘அப்பா கன்னம் வீங்கவைத்தார், கையை ஒடித்தார், உங்களுக்காக நான் கணவனுடன் சென்றேன். இப்பொழுது குடிக்கிறார் – சீட்டாடுகிறார் இன்னொருத்தியுடன் வாழ்கிறார், அதுபற்றிக் கேட்டதற்குக் காலையும் ஒடித்துவிட்டார்‘ என்று கூறினால், தந்தைக்கு எப்படி இருக்கும்? மூன்றாம் முறைகூட – கல்யாணமான பெண் என்பதால் – பஞ்சாயத்துச் சொல்லி அனுப்புவார்கள்!

‘காங்கிரசு ஆட்சியில் முதல் ஐந்தாண்டுகள் பட்ட தொல்லைகள் போதும்‘ என்றாலும் ‘மீண்டும் அனுப்பிப் பார்க்கலாம்‘ என்று பஞ்சாயத்து செய்து ஆட்சிக்கு அனுப்பினீர்கள் – பயம் இல்லை!

இரண்டாவது முறையும் மன்னித்து – மறந்து அவர்களையே அரியாசனத்தில் அமர்த்தினீர்கள் – சுகம் இல்லை!

மூன்றாவது முறையும் ஓட்டு கேட்க வருகிறார்கள், இம்முறை பஞ்சாயத்துத் தேவையில்லை, உங்களுக்கு இந்த முறை ஆட்சி பீடம் தேவையில்லை என்று தீர்ப்புச் சொல்லி அனுப்புங்கள், அப்பொழுதுதான் அவர்கள் திருந்துவார்கள்!

விவசாயிகள் கதறுகிறார்கள்!

விவசாயிகளைப் பார்த்து, நீங்கள் காங்கிரசு ஆட்சியில் நன்றாக வாழ்கிறீர்களா? என்று கேட்டால், ‘இல்லை‘ என்கிறார்கள், 4 ரூபாய்க்கு விற்ற உரம் இப்பொழுது 44 ரூபாயாகிவிட்டது, 10 ரூபாய்க்கு விற்ற காளை 100 ரூபாயாக ஆகிவிட்டது, விவசாயக் கருவிகளின் விலை விஷம் போல் ஏறிவிட்டது, எங்கே எங்களுக்கு உரம் கிடைக்கிறது? என்று கதறுகிறார்கள்.

தொழிலாளிகளைப் பார்த்து, ‘நீங்கள் இந்த ஆட்சியில் நன்றாக வாழ்கிறீர்களா? என்று கேட்டால், ‘இல்லை இல்லை, தினமும் சாகிறோம்‘ என்கிறார்கள், கூலி 6 அணா உயர்ந்தால் விலைவாசி 12 அணாவாக ஏறுகிறது‘ என்கிறார்கள்!

நடுத்தரக் குடும்பத்தார்களைப் பார்த்து, ‘இந்த ஆட்சியால் உங்கள் வியாபாரம் பெருகியதா?‘ என்று கேட்டால், ‘நாளுக்கு ஒரு சட்டம் – வேளைக்கு ஒரு திருத்தம், விற்பனை வரி அதிகாரிகளின் கொடுமை ஆட்சியாளர்களின் கெடுபிடி, அப்பப்பா‘ என்கிறார்கள்!

பதினைந்து ஆண்டு வனவாசம்

இந்த ஆட்சியில் நீதியில்லை – நிம்மதியில்லை! பட்ட துன்பங்கள் – அடைந்த தொல்லைகள் போதும்!

வரிகள் அதிகரித்தன – விலைவாசிகள் விஷம்போல் ஏறின! வெளிநாட்டுக்குத் தாய்த்திருநாட்டிலிருந்து ஏராளமானாவர்கள் கூலிகளாகச் சென்றனர்! சீதைக்குக்கூட 14 வருடவனவாசம் – இந்த நாட்டுத் தாய்மார்களுக்கோ 15 வருட வனவாசம்!

“இனி சுகவாசம் கிடைக்க வேண்டுமானால் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டுத் தி.மு.கழகம் வெற்றிப்பெறச் செய்யுங்கள்“.

(நம்நாடு - 17.2.62)